உலகம் சுற்றிவந்தபோது: சோமாலியா

சோமாலியா

somalia_map`பெரிய கொம்புன்னு தன்னப்பத்தி நெனச்சிக்கிட்டிருக்கானா அவன்!` என்று கோபத்தில் சிலர் சீறுவதுண்டு. அந்தக் கொம்பு இல்லை இது . ஆப்பிரிக்காவின் கொம்பு! ஆங்கிலத்தில் ’Horn of  Africa’ என்றழைக்கப்படும், ஆப்பிரிக்காவின் வடகிழக்கில் இருக்கும் சோமாலியா. 19-ஆம் நூற்றாண்டில் சோமாலியாவின் தென்பகுதியை இத்தாலியும் வடபகுதியை இங்கிலாந்தும் ஆண்டன. 1960-ல் இரண்டும் அரசியல்ரீதியில் ஒன்றாகி, சோமாலி குடியரசு உருவானது. எண்பதுகளின் மத்தியில் நான் அங்கு வேலை நிமித்தம் போய் மூன்று வருடங்கள் தங்கியிருந்தேன். என்ன ஒரு நாடு அது!

எழுபதுகளின் இறுதி. சோவியத் யூனியன், அமெரிக்க நாடுகளிடையே `பனிப்போர்` (Cold War) உச்சத்திலிருந்த காலம். பனிப்போர் கணக்காடல்களில், மத்தியதரைக்கடல் நாடுகளில் போர் மூண்டால், அந்தப் பகுதியை குறைந்த தூரத்திலிருந்து விமானமூலம் தாக்க அருகிலிருக்கும் ஆப்பிரிக்காவில் விமான தளம்(airforce base) தேவைப்பட்டது அமெரிக்காவுக்கு. அதன் தந்திரக் கணக்கில் அல்வா போல் வந்து விழுந்தது சோமாலியா. ஆப்பிரிக்காவின் வடமேற்கில் மத்தியதரைக்கடல் நாடுகளுக்கு (Gulf/Middle East) வெகு அருகில் ஏடன் வளைகுடாக் கடல் ஓரத்தில் அமைந்த சோமாலியாவுடன் நட்பு கொண்டது அமெரிக்கா. அமெரிக்க சிபாரிசினால் .நா., உலக வங்கி, அமெரிக்க உதவி நிறுவனம் (UN/World Bank/US Aid)போன்றவற்றின் வெளிநாட்டு வளர்ச்சித் திட்டங்கள் சோமாலியாவுக்குக் கிடைத்தன. பணம் புழங்கியது. பெரும்பணம் அதிபர் முகமது சியாத் பர்ரேயின் (Mohamed Siad Barre) வெளிநாட்டு அக்கவுண்ட்டுகளுக்கும் போய்ச்சேர்ந்தது. வெளிநாட்டு வளர்ச்சித்திட்ட நிபுணர்கள், உதவியாளர்கள் அந்நிய வளர்ச்சித் திட்டங்களின் கீழ்(overseas developmental projects) சோமாலியாவிற்கு வந்து சேர்ந்தார்கள். இதற்கு பதிலாக, சோமாலியாவின் வடபகுதியில் இருந்த பெர்பெரா (Berbera) எனும் துறைமுக நகரம் (சிறிய விமானநிலையம் உள்ளது) அமெரிக்கர்களின் போர் ஆயத்த ஏற்பாடுகளுக்காக ஜனாதிபதி பர்ரேவினால் வழங்கப்பட்டது. 1972-லிருந்து இது சோவியத் யூனியனின் உபயோகத்துக்கு சோமாலியாவினால் கொடுக்கப்பட்டிருந்தது). 1977-ல் அமெரிக்காவுடனான இந்த உடன்பாட்டினால் பொங்கியது பனிப்போர் எதிரியான சோவியத் யூனியன். ஆனால், அமெரிக்க ஆசீர்வாதத்துடன் சோமாலியா, இரண்டு வாரக் கெடுவில் இதுகாறும் அங்கு தங்கி பணியாற்றிவந்த அனைத்து சோவியத் நிபுணர்கள், பொறியாளர்கள், பணியாளர்களையும் நாட்டிலிருந்து அதிரடியாக வெளியே
ற்றியது
. அமெரிக்காவிடம் நல்லபேர் வாங்கிக்கொண்டது! இப்படி பர்ரேயின் 20 வருட ஆட்சியில் சோவியத் யூனியன், அமெரிக்கா என மாற்றி யோசித்தது; விளையாடிப் பார்த்தது சோமாலியா!

சர்வதேச அரசியல் கிடக்கட்டும். சோமாலியாவில் வாழ்க்கைபற்றிய பிற விஷயங்களுக்கு வருவோம். 1986-ல் அலுவலக நிமித்தம் சோமாலியாவுக்கு மாற்றலானபோது டெல்லிபாம்பேநைரோபிமொகதிஷு எனப் பயணித்துப் போய்ச்சேர்ந்தேன். தலைநகரான மொகதிஷுவின் (Mogadishu or Mogadiscio-Italian version) விமானநிலையத்தில் இறங்கவிருக்கையில் ஜன்னல்வழி கீழே பார்த்தேன். திடுக்கிட்டேன். எங்கே ஏர்ப்போர்ட்? சிலநொடிகளில் வெட்டவெளிக்கிடையில் நமது கிராமத்துப்பள்ளிக்கூடம்போல ஒரு சிறு கட்டிடமும் அருகில் இன்னொன்றும் தென்பட்டன. ! இதுதானா என ஒருவழியாக இறங்கி விமானநிலையத்தைவிட்டு வெளியே வந்தால் எதிரே காடுபோலிருந்த வெளியில் ஒரு ஓரத்தில் மஞ்சள்சிவப்பு வண்ணத்தில் சில டேக்சிகள் நின்றன. அவற்றில் ஒன்றில் ஏறி நகருக்குள்இல்லை ஊர் என்றாலே போதுமாசென்றேன்

மொகதிஷு என்கிற சிறுநகரும் சுற்றியுள்ள பகுதிகளும் முன்னாள் இத்தாலிய காலனியின் ஒரு பகுதி. எண்பதுகளிலும் மொகதிஷு வாழ்க்கையில் இத்தாலியத் தாக்கம் தெரிந்தது. டெபார்ட்மெண்ட்டல் ஸ்டோர்கள் சில இத்தாலியர் வசமும், சில நம் குஜராத்திகள் வசமும் இருந்தன. (குஜராத்திகள் நுழையாத இடமா இந்த உலகில்!). அல்அரூபா என்று அழைக்கப்பட்ட ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் அத்தகைய நாட்டில் இருந்தது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். அதன் சுற்றுப்பகுதி கொஞ்சம் சுத்தமாக, சாலைகள் விசாலமாக இருக்கும்; அவ்வளவுதான். நகரின் ஒருபகுதியில் வில்லா சோமாலியா எனப்படும் புகழ்பெற்ற மாளிகை இருந்தது. ஜனாதிபதி முகமத் சியாத் பர்ரேயின் பங்களா. இன்னொரு பகுதியில் செண்ட்ரல் பேங்க் ஆஃப் சோமாலியா. சோமாலிய அரசு வங்கிஒரு சிறிய கட்டடத்தில் இயங்கிவந்தது. சோமாலியாவில் அது மட்டும்தான் வங்கி. அமெரிக்க டாலரிலிருந்து அந்த நாட்டு கரன்சியான சோமாலி ஷில்லிங்கிற்கு மாற்றவும், மற்ற அனைத்து உள்நாட்டுவெளிநாட்டுக்கான வங்கிப் பண மாற்றங்களும் அங்குமட்டும்தான், அதன்மூலமாகத்தான் சட்ட ரீதியாக நடைபெறவேண்டும். மற்றபடி ஒரு சிறிய சிட்டி செண்டர்ஷபேலீ (Shabeele) என்று அழைக்கப்பட்ட இடம். அங்கு பிரதானமாக முன்னாள் இத்தாலியக் காலனி ஆதிக்கத்தின் நினைவாக, ஒரு உயரத்தூண் மொகதிஷுவின் லேண்ட்மார்க்காக நின்றிருந்தது. பின்பக்கத்தில் சோமாலியாவின் பார்லிமெண்ட் கட்டிடம். அகன்ற சாலையின் ஒருபுறம் வரிசையாக சில வீடியோ கடைகள். பர்ஃப்யூம்கள், கேமராக்கள், ரெடிமேட் துணிகள் என சில அபூர்வமான வெளிநாட்டுப்பொருட்கள் விற்கப்படும் கடை ஒன்றும் அடுத்தடுத்து சில சிறிய ரெஸ்ட்டாரண்ட்டுகளும் இருந்தன.

கடைகள் வரிசையின் பின்புறம் மரங்களின் நிழலில் ஒரு குட்டி பஸ் டெர்மினல். பஸ் என்றால் சாதாரணமாக மனதில் வரும் பஸ் அல்ல! அப்போது அங்கு பயணிகளுக்காக அரசினால் ஓட்டப்பட்ட டொயோட்டா ஹையாஸ் (Toyota Hiace) வேன்கள்பஸ்கள் என மக்களால் அழைக்கப்பட்டன. 14 பேர் உட்காரலாம். ஆனால் 20-22 பேரை நெருக்கித்தள்ளி உட்காரவைத்து ஓட்டினார்கள். ஷபேலீயிலிருந்து புறப்பட்டு நகரின் இன்னொருமூலையில் இருந்த ஈக்வத்தோரே (Ekwatoore) எனும் வணிகப்பகுதியில் சென்று முடியும் அந்த பஸ் ரூட். 10 சோமாலி ஷில்லிங் ஒரு டிக்கட்டின் விலை. (கிட்டத்தட்ட ஒரு ரூபாய்க்கு சமம்).இதுதவிர ஷபேலீயிலிருந்து காரான் (Kaaraan) என அழைக்கப்பட்ட குடியிருப்புப்பகுதி ஒன்றிற்கு ஒரு சிவப்பு கலர் மினி பஸ் ஒன்றும் அவ்வப்போது செல்லும். ஐம்பதுகளில் தயாரிக்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ்! `காரான்..காரான் ` எனக் கத்திக்கொண்டே பதின்ம வயதுப்பையன்கள்அவர்கள்தான் கண்டக்டர்கள்சோமாலிப்பயணிகளை அள்ளிப்போட்டுக்கொண்டு செல்வார்கள். புகையைக் கக்கிக்கொண்டு புழுதியைப் பரப்பியவாறு செல்லும் அந்த பஸ். குறிப்பிட்ட தொலைவுவரை தார்ச்சாலையைக் கடந்தபின் ஒரே மண் சாலைதான்! ஒரே புழுதிமணம்.

சோமாலியர்களிடம் கலந்து உரையாட ஆரம்பித்தபின்  ஒரு விஷயம் ஆச்சரியம் தந்தது. அவர்கள் தங்களை ஆப்பிரிக்கர்கள் என்று குறிப்பிடப்படுவதை விரும்புவதில்லை. நாங்கள் அரேபியர்கள் என்று சொல்லிக்கொண்டார்கள், குறிப்பாக இளைஞர்கள். குமரிகள். காரணம் தேடிக் கண்டடைந்தபோது சுவாரஸ்யம் கூடியது. இத்தாலிய, ஆங்கிலேயக் கைப்பற்றல்களுக்குமுன், வளைகுடா நாட்டு சுல்தான்கள், ஷேக்குகள் சோமாலியாவின்மீது படையெடுத்திருந்தார்கள். அஜுரான், கெலெடி சுல்தான்கள் (Azuran, Geledi Sultans) சோமாலியாவின் பெரும்பகுதியைத் தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். பொதுவாகவே, மற்ற ஆப்பிரிக்கர்களைப்போல் அல்லாமல், சோமாலியப் பெண்கள் பார்க்க ஒடிசலாக, ஒய்யாரமாக இருப்பார்கள். அரேபியர்களுக்கு வேறென்ன வேண்டும். கல்யாணம் என்கிற பெயரில் கலந்துமகிழ்ந்தார்கள். அவர்களின் வம்சாவழியினர் சோமாலியா முழுதும் காணக்கிடைக்கின்றனர். பிற்காலத்தில் தென்பகுதியை ஆண்ட இத்தாலியர்களும் மது, மாது கேளிக்கைகளுக்குப் பேர்போனவர்களாயிற்றே. அவர்களும் சோமாலிய சமூகத்திற்குத் தங்களின் பங்களிப்பைத் தந்தார்கள்! விளைவு ? கருமை நிறம், சுருண்ட மயிர்ச்சுருள், தடித்த பருமனான உதடு, பெரிய சரீரம் என்கிற ஆப்பிரிக்கத் தன்மைகள் சோமாலியர்களின் உடல்கூற்றிலிருந்து விடுபட்டுப்போயின. மாறாக, பழுப்பு அல்லது பழுப்பான மஞ்சள் நிறம், உயரம், மெலிந்த தேகம், அலை அலையாகக் கேசம், அழகான கண்கள், வசீகர மூக்கு என்கிற முகநுட்பங்கள் வம்சாவளியினரிடம், பெரும்பாலும் பெண்களிடையே காலப்போக்கில் தோன்றி, அவர்களுக்கு மேலும் அழகு சேர்த்தன.

சோமாலியர்கள் பழகுவதற்கு இனிமையானவர்கள். அவர்களின் சிரிப்பு, சினேகபாவம் உடனே நம்மிடம் ஒட்டிக்கொள்ளும். சோமாலிய மொழி என அவர்கள் புழங்கியது பேச்சுமொழிதான் (dialect). கொஞ்சம் அரேபிய மொழி, ஹிந்தி, ஆங்கிலம், இத்தாலியன் என ஒரு மொழிக்கதம்பம். ஒன்றிரண்டு வெளிநாட்டுப் பள்ளிகளைத் தவிர, முறையான சோமாலியக் கல்விக்கூடங்கள் நாட்டில் இல்லை எனலாம்.  படித்தவர்கள் என்பதாக ஒருவகை இல்லாத அதிசய சமூகம் அது. ஜனங்கள் மிகவும் ஏழைகளாதலால் வெளிநாட்டவர்களிடம் சிறு சிறு வேலைகளுக்காக ஏங்கினர். சம்பளம்தர லாயக்கானவர்கள் அங்கு வசித்த சிறுபான்மை வெளிநாட்டவர்களே என்கிற பொருளாதார நிதர்சனமே காரணம். `மாமாக்கள்`( தமிழ் மாமா அல்ல!) என அழைக்கப்பட்ட மத்திம வயதுப்பெண்கள் சாலை ஓரத்தில் காய்கறி, பழங்கள் விற்றல், சிகரெட், சூயிங் கம், லாலிபாப் போன்ற மிட்டாய்வகைகள், குழந்தைகளுக்கான விளையாட்டுப்பொருட்கள் என வியாபாரம் நடத்தினார்கள். ஆண்கள்? ஆண்களில் சிலர் வெளிநாட்டவரின் தூதரகங்கள், .நா. மற்றும் வெளிநாட்டு உதவிக்குழுக்களின் அலுவலகங்கள், பெருங்கடைகள், பங்களாக்களில் ஓட்டுனர்களாக, காவலாளிகளாக வேலைபார்த்தனர்.  ஏனைய இளைஞர்கள், மத்திம வயது ஆண்கள், வயசாளிகள் வேலை எதுவும் பார்க்கவில்லை. வீடுகளின் வாசல்களில், வேப்பமரத்தடியில்  கயிற்றுக்கட்டில்களில் உட்கார்ந்து நாள் முழுதும் அரட்டை அடித்தல், நாளுக்கு பத்து, இருபது கிளாஸ் டீ குடித்தல், சிகரெட் சிகரெட்டாக ஊதித்தள்ளுதல், சீட்டு, தாயம் விளையாடுதல் எனப் பொழுதுபோக்கினர்.  வருமானம் ? மனைவிமார்கள் எதனையாவது விற்று, வேலைக்காரிகளாக ஓடியாடிப்
பணி
செய்து சம்பாதிப்பார்களே அது போதாதா என்கிற மந்தப்போக்கு இவர்களின் வாடிக்கை. ஒரு துரும்பு தூக்கிப்போடமாட்டார்கள். உட்கார்ந்து தின்னும் ஜாதி. குடும்பம் என்றும், குழந்தைகள் என்றும் அதுமாட்டுக்கு உண்டு.  பணம் சம்பாதிப்பது, குடும்பத்தை  நடத்திச் செல்வது எல்லாம் பெண்மீது விடப்பட்ட பொறுப்பு. இத்தனை வறுமையிலும், சோதனைகளின் ஊடேயும் சோமாலிப்பெண்கள் சிரித்த முகத்துடன், மென்மையாகப் பேசுவார்கள். மிகவும் மதிக்கத்தக்க பெண்கள். சோமாலிய சமூகவாழ்வின் உயிர்நாடியே அவர்கள்தான்.

kids-in-somalia-7177

மொகதிஷு நகர் மேடு, பள்ளங்கள் நிறைந்தது. நகரின் நடுவே கொஞ்சம் நடந்துசென்றால், அதில் ஒரு இருநூறு அடிதூரம் ஒரே மேடாக இருக்கும். ஏறிக்கடந்தால் இன்னுமொரு இருநூறு முன்னூறு அடிதூரம் நிலம் சரிந்து செல்லும். ஏறுதலும் இறங்குதலுமாய் தினப்படி வாழ்க்கை அங்கே.வாகனங்கள் குறைவு. ஜனங்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நடந்துகொண்டே இருப்பார்கள். பஸ் வந்தாலும் கொடுப்பதற்கு காசிருப்பதில்லை. சோமாலியாவின் மற்ற முக்கியமான ஊர்களான கிஸ்மாயோ, ஹர்கீசா, பெர்பெரா போன்றவை இன்னும் மோசம். வறுமையே வாழ்க்கையின் ஒரே தோற்றம்.

சோமாலியாவில் நிறைய வேப்பமரங்களைக் கண்டதில் மனதிற்கு நிம்மதியாக இருந்தது. எங்கள் கிராமத்து வீட்டின் வாசலில் நான்கு வேப்பமரங்கள் நின்றது நினைவிலாடும். வேப்பங்காற்று உடம்புக்கு நல்லது என்பார்கள். சோமாலி ஆண்களின் கையில் எப்போதும் ஒரு வேப்பங்குச்சி இருக்கும். டீ குடிக்காத, சிகரெட் புகைக்காத நேரங்களில் வேப்பங்குச்சி வாயிலிருக்கும்! எப்போதும் அதைக் கடிப்பதும், பல்தேய்ப்பதும் அவர்கள் வழக்கம். இதனால்தான் சிரிக்கையில் அவர்களின் பற்கள் முத்தென ஒளிரும். அப்படி ஒரு வெண்மை. தூய்மை. இதுதான் என்னை அவர்கள் முகத்தில் முதலில் கவர்ந்தது.

இளம்பெண்கள் வீட்டுவேலை செய்வதற்காக வெளிநாட்டவர்களின் வீடுகளுக்கு வருவார்கள். சோமாலிய வேலைக்காரிகளின் ஸ்டைலே அலாதி. வீட்டுவேலையை விடுவிடு என்று செய்துமுடிப்பார்கள். வீட்டுக்காரரின் பாத்ரூம் சென்று குளிப்பார்கள். வீட்டுக்காரரின் சோப், பர்ஃபியூம்களை எடுத்து ஆனந்தமாகப் போட்டுக்கொள்வார்கள். ஒரு மாடலைப்போல அலங்கரித்துக்கொண்டு `பை` சொல்லிப் போய்விடுவார்கள்! இன்னொரு விஷயம்: வீட்டுக்காரரின் சமையல் அறையல் நல்லெண்ணெய் தென்பட்டால்போதும். குஷியாகிவிடுவார்கள் இந்த இளம்பெண்கள். அரை பாட்டிலோ, முக்கால் பாட்டிலோஏதோ சர்பத் அருந்துவதுபோல் அருந்திவிட்டு, வீட்டுக்காரர் மேல் இரக்கப்பட்டு  கொஞ்சம் மிச்சம் வைத்துவிட்டுச் சென்றுவிடுவார்கள். அவர்களைப் பொறுத்தவரை நல்லெண்ணெய் வயிற்றுக்கு இதமான ஒரு டானிக். ஒரு சத்துணவு. வேப்ப இலை, வேப்பங்குச்சி, நல்லெண்ணெய், வாழைப்பழம், பொம்ப்பேல்மோ பழம், கீரை வகைகள் போன்றவைபற்றி இந்த உலகம்குறிப்பாக நவீன உலகின் ந்யூட்ரிஷனிஸ்ட்டுகள் இருக்கிறார்களே அவர்கள்சோமாலியர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும்.

`காத்` (khath) என அழைக்கப்படும் ஒரு தாவர வகை சோமாலியாவில் ரகசியமாக அப்போது பயிரிடப்பட்டுவந்தது. கஞ்சா போன்ற போதை தரும் அதன் இளந்தளிர் இலைகள். சோமாலிய ஆண்களுக்கு இந்த காத் கிடைத்துவிட்டால்..ஆஹா, வாழ்க்கையே சொர்க்கம்தான்! அரசாங்கம் இதைத் தடை செய்திருந்தும் காத் இலைகளை எப்படியோ கிராமங்களிலிருந்து வரவழைத்து வாயில் அடக்கி வைத்திருப்பார்கள் ; அல்லது மெதுவாக மென்றுகொண்டிருப்பார்கள் அவர்கள். குறிப்பாக இரவு நேரங்களில் மின்சாரம் இல்லாத இருண்ட பகுதிகளில் அமர்ந்துகொண்டு.

சோமாலியத் தலைநகருக்கு வெளியே 30 கி.மீ.க்கு மேல் வெளிநாட்டவர் செல்லவேண்டுமானால், சோமாலி அரசின் முன் அனுமதி வேண்டும். அப்படி ஒருமுறை அரசிடம் அனுமதி பெற்று அமெரிக்க உதவி நிறுவனத்தில் பணிபுரியும் நண்பர் டேவிட் ராஜ் மற்றும் நண்பர்களுடன் பயணம் செய்கையில் இருபக்கமும் ஒரே காடு. ஒரு இடத்தில் நிறுத்தினார்கள். லேண்ட் க்ரூய்ஸரிலிருந்து இறங்கி மரங்களின் நிழலில் நின்று பீர் குடித்து, சிகரெட் ஊதினோம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை குடிசையோ, மனித நடமாட்டமோ இல்லை. புதர்ப்பகுதியில் நடந்து பார்த்தபோது....அது என்ன செடி! கிட்ட நெருங்கியபின் தெரிந்தது. பெரிய மிளகாய்ச்செடிகள் ஒன்றிரண்டு தெரிந்தன. காயும் பழமுமாகக் கேட்பாரற்றுக் குலுங்கின அவை. நண்பர் ஒருவரிடம் காண்பித்து `என்ன இது! இப்படிக் காச்சுத் தொங்குதே. அக்கம்பக்கத்துக் கிராமத்துக்காரங்க  யாரும் பறிப்பதில்லையா?` என்றேன். `அட விடுங்க சார்! போகிற வழியெல்லாம் இந்த மாதிரி மிளகாய், எலுமிச்சை செடிங்கல்லாம்கூட முளைச்சுக்கெடக்கும்..நிறையப் பாக்கலாம். சோமாலிகளுக்கு இதுலல்லாம் நாட்டமில்ல. இவ்வளவு தூரம் நடந்துவந்து பறிக்கப்போறதில்ல! ஏற்கனவே பெரும் சோம்பேறிங்க!` என்றார் .

ஒருமுறை மொகதிஷுவிலிருந்து 40 கி.மீ தூரத்தில் அஃப்கோய் (Afgoi) என்றழைக்கப்படும் ஒரு பகுதிக்கு சென்றிருந்தோம். கண்ணுக்குக் குளுமையாக எங்கும் ஒரே பச்சை. வாழை மரங்கள். முறையாகப் பயிரிடப்பட்டு பராமரிக்கப்படும் அபூர்வமான வாழைத்தோப்புகள்! சோமாலியாவின் வாழைப்பழங்கள் சிறிதும் பெரிதுமாக இனிப்பானவை. சோமாலிக் காவல்காரர்/தோட்டக்காரரிடம் ஷில்லிங் கொடுத்து சில தார்கள் வாங்கி வண்டியில் போட்டுக்கொண்டோம்.

அதேபோல அந்த நாட்டில் கிடைக்கும் பப்பாளியும் வெகுஇனிப்பானது. இந்தியாவில் இருக்கையில் பப்பாளியை சாப்பிடத்தகுந்த பழம் என நான் கருதியதில்லை. அதன் அசட்டு டேஸ்ட் அரவேபிடிப்பதில்லை. மொகதிஷுவின் காய்கறிமார்க்கெட்டில் கைக்கடக்கமான, மஞ்சளும் இளஞ்சிவப்புமான சிறிய பப்பாளி பழங்களை வினோதமாகப் பார்த்தேன். நான் தயங்குவதைப் பார்த்து நண்பர், ‘என்ன சார் யோசிக்கிறீங்க! ரொம்ப மலிவு சார். வாங்குங்கஎன்றார். ‘எனக்கு பப்பாளி பிடிக்காதுஎன்றேன். ‘இது நம்ப நாட்டு பப்பாளி இல்லே! ரொம்ப இனிப்பா இருக்கும். வாங்கிச் சாப்பிட்டுப் பாருங்க!’ என்று உசுப்பிவிட்டார். எங்கள் சம்பாஷணையைப் புரிந்துகொண்டதுபோல் காய்கறி விற்கும் `மாமா` (அதாவது சோமாலிய மாமி!) ஒரு பழத்தை எடுத்து சரக்கென நறுக்கி ஒரு துண்டு கொடுத்தாள். வாயில் போட்டவுடனே தெரிந்தது. அடடா! பப்பாளியில் இப்படி ஒரு சுவையா என்று ஆச்சரியப்படவைத்த சோமாலிப்பழம்! நமது நாட்டில் ஊறுகாய்க்குப் பயன்படுத்துவோமே கிடாரங்காய்அந்த சைஸில் அங்கே சாத்துக்குடி போன்ற பொம்ப்பேல்மோ (Pompelmo-Somali) பழங்கள் கிடைக்கும். ஒருவகை citrus fruit. ஒரு பழத்திலிருந்து அரை டம்ளருக்குமேல் ஜூஸ் கிடைக்கும். இனிப்போடு புளிப்பு கொஞ்சம் தூக்கலான சுவை. வைட்டமின் `சி`சத்து நிறைந்த பழம். அங்குள்ள ஜூஸ் ஸ்டால்களில் பொம்ப்பேல்மோ ஜூஸ் சர்க்கரைபோட்டுத் தருவார்கள். மலிவான சங்கதி. உன்னதமானது உடம்புக்கு.

ஈக்குவத்தோரேயில் இறங்கி அருகிலுள்ள தெருவில் நடந்தால்  இத்தாலிய, அரபுக் கடைகள் சிலவற்றைப் பார்க்கலாம். நிடோ (Nestle’s Nido) இன்ஸ்டண்ட் பால்பவுடர் வாங்கவும், எண்ணெய், பருப்பு, மசாலா, இத்தியாதி வீட்டு சாமான்கள் வாங்கவும் அங்கு இந்தியர்களும் மற்ற வெளிநாட்டவர்களும் செல்வார்கள். இந்த வாரம் ஒரு விலை. அதற்கடுத்தவாரம் இன்னொரு விலை என விஷம் போல் ஏறும். வாயை மூடிக்கொண்டு வாங்கிச் செல்வதைத் தவிர வெளிநாட்டவருக்கு வேறு வாய்ப்பில்லை. பாம்பேயிலிருந்தும் துபாயிலிருந்தும் சரக்குக்கப்பல்கள் 3-4 மாதங்களுக்கு ஒருமுறைதான் மொகதிஷு துறைமுகத்துக்கு வரும். அப்போதுதான் வீட்டுச் சாமான்கள் கொஞ்சம் மலிவாகக் கிடைக்கும். ஒரு மாதத்துக்குள் சாமான்கள் தீர்ந்துவிட்டது என்பார்கள். பிறகு பதுக்கிவைக்கப்பட்ட சாமான்கள் கடுமையான விலைக்கு அப்பாவி வெளிநாட்டவரிடம் விற்கப்படும். உதாரணமாக 1500 சோமாலி ஷில்லிங் ஒரு டப்பா நிடோ. இரண்டு வாரங்கழித்து வாங்கச்சென்றபோது 5000 ஷில்லிங். இன்னும் இரண்டுநாள் தள்ளிப்போய் விஜாரித்தால் 7000, 8000 எனக் கூசாமல் சொல்வார்கள். போனவாரந்தானே 1500-ல் இதே கடையில் வாங்கினோம் என்றால் இப்போது இதுதான் விலை என்று கறார் பதில் வரும்.

சோமாலி கரென்சிக்கு அப்போதும் அதிக மதிப்பிருந்ததில்லை. ஒரு அமெரிக்க டாலர் வாங்க சுமார் 180-200 ஷில்லிங்குள் தேவை. கடைவீதியில் கட்டுக்கட்டாக சோமாலி ஷில்லிங் நோட்டுகள் பரிமாற்றம் நிகழ்வதைப் பார்த்து ஆரம்பத்தில் மிரண்டிருக்கிறேன். ஒருமுறை அரபுக்கடையில் நிடோ டின் வாங்கிய நண்பர் கோவிந்த் குமார் 20 ஷில்லிங் கட்டுகளில் மூன்றைத் தூக்கி வீசுவதைக்கண்டு பதறினேன். `என்னது! நோட்டை எண்ணாம அப்படியேக் கட்டாத் தர்றீங்களே! ` என்றேன். அதற்கு அவர் சொன்ன பதில்:  `இங்கே கெடைக்கிற நோட்டு இருக்கே! நோட்டா இது! ஒரே அழுக்கு, புழுதி. எண்ண ஆரம்பிச்சா தும்மல் வரும்! நான் எண்றதில்ல. கட்டைத் தூக்கிக் கொடுத்திடுவேன். வேணும்னா அவன் எண்ணிக்கட்டும்! அதே மாதிரி கட்டா மீதி கொடுத்தா, எண்ணாம அப்படியே வாங்கிப் பையிலே வச்சிக்குவேன். அடுத்த கடையில தூக்கிக் கொடுக்கவேண்டியதுதானே!` என்றார். நல்ல நாடு இது! எனக்குன்னு செல்க்ட் பண்ணி அனுப்பியிருக்கு இந்திய கவர்மெண்ட்டு! – என்று நினைத்துக்கொண்டேன்

மொகதிஷுவில் ஒரு ஒப்பன் ஏர் தியேட்டர் ஒன்று இருந்தது. அட, நம்ப ஊரில் அந்தக்காலத்தில் இருந்ததே டூரிங் டாக்கீஸ்அதுமாதிரி என்று வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் நாற்காலிகள் போடப்பட்டிருக்கும். இத்தாலிய, ஹிந்தி படங்கள் போடப்படும். சில இத்தாலியப் படங்கள் படுசெக்ஸியாக இருக்கும். சென்சார் போர்டு போன்ற தலைவலிகள் அந்நாட்டில் இல்லை. புண்ணிய க்ஷேத்திரம்! 20 ஷில்லிங் கொடுத்து டிக்கட் வாங்கி எப்போது வேண்டுமானாலும் உள்ளே போய் உட்கார்ந்து கொள்ளலாம். அந்தப்படம் முடிந்தால் உடனே எழுந்துவரவேண்டிய கட்டாயம் ஏதுமில்லை. அடுத்த படம் ஆரம்பிக்கும் ; தொடர்ந்து பார்க்கலாம். ஒருபயல் ஒண்ணும் கேட்கமாட்டான் !

இத்தகைய அசத்தல் தியேட்டருக்குள் ஒரு மேட்னி ஷோவில் நண்பர் ஒருவருடன் நுழைந்தேன். ரிஷி கபூரின் `லைலா மஜ்னு` ஹிந்தி திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. ரிஷி கபூருக்கு ரஞ்சிதா ஜோடி.(நித்யானந்தாவுடன் சர்ச்சைக்குள்ளான நம்ம ரஞ்சிதா அல்ல!). டேனி டென்ஸோங்பா (Danny Denzongpa) முரட்டு வில்லன்! நான் நுழைந்தபோது படம் ஒரே சோகமயமாக மாறிவிட்டிருந்தது. மஜ்னுவான ரிஷிகபூர் லைலாவை இழந்துவிட்டு கலைந்த தலையும், கிழிந்த சட்டையுமாக அலைந்து புலம்பிப் பாடிக்கொண்டிருந்தார். எனதருகே ஒரு சோமாலி இளைஞன் உட்கார்ந்து உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டிருந்தான். மஜ்னுவின் புலம்பலைத் தாங்கமுடியவில்லை அவனால். என்னைப்பார்த்து ஓரளவு ஆங்கிலத்தில் அந்த சோமாலி இளைஞன் ஆரம்பித்தான். `நீங்கள் இந்தியன் தானே!` `ஆம்` என்றேன். `உங்கள் நாட்டில் ஆண்கள் ஏன் அழுதுகொண்டே இருக்கிறார்கள்?` என்று கேட்டு என்னை அதிரவைத்தான். அடக்கடவுளே! இவனுக்குள் கதை இப்படி நுழைந்துவிட்டதா?  இந்திய ஆண்களை ஒரே ஷாட்டில் அவமதித்துவிட்டானே! கதையை புரியவைக்க நினைத்துஅப்படி இல்லை. இங்கே இந்த மஜ்னு இருக்கிறானே, அவன் தன் காதலியை இன்னொருவனிடம் இழந்துவிட்டான். அவனால் அவளுடைய பிரிவைத் தாங்கமுடியவில்லை. அதனால் அழுகிறான்! “ என்றேன் பெரிதாக விளக்கிவிட்டதாக நினைத்துக்கொண்டு. அவன் என்னை விடுகிறாற்போல் இல்லை. மேற்கொண்டு கேட்டான்: “Whats the problem? அவள் போனாலென்ன! இன்னொருத்தியைக் காதலிக்க வேண்டியதுதானே? இந்தியாவில் வேறு ஒரு பெண் கிடைக்கமாட்டாளா? ஏன் இந்த ஓயாத அழுகை!“ என்றான் குழப்பத்துடன். Cultural shock! தினம் ஒரு காதலியென காலட்சேபம் பண்ணிக்கொண்டிருப்பவனிடம் நான் மேற்கொண்டு என்னதான் சொல்வது!

ஒரு நாள் மாலை ஷபேலீ ஏரியாவில் நடந்துகொண்டிருந்தேன். எதிரே சில சோமாலிய இளைஞர்கள் ஒருமாதிரியாகத் தெரிந்தார்கள். நெருங்குவதுபோலிருந்ததால் துணுக்குற்றேன். கையில் ஒரு டைட்டன் வாட்ச், பாக்கெட்டில் கொஞ்சம் சோமாலி ஷில்லிங்குகளும் இருந்தன. கூடவே பென்சன்&ஹெட்ஜஸ் சிகரெட் பாக்கெட்டும், லைட்டரும். மற்ற ஆப்பிரிக்க நாடுகளில் நடப்பதுபோல், திடீரென தாக்கப்பட்டால் என்னாகும் என்கிற சிந்தனை. துணக்கு அழைக்க சாலையில் வேறு இந்தியர்களோ, வெளிநாட்டவரோ இல்லை. தொளதொள பேண்ட்டும், வெள்ளை சட்டையுமாகத் திரியும் ஒல்லிக்குச்சிப் போலீஸ்காரரையும் காணோம். சரி, வருவது வரட்டும் என நினைத்துப் பதற்றத்தைத் தணிக்க ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்தேன். ஸ்டைலாக ஊதுவதாக எண்ணிப் புகைவிட்டு மெல்ல நடந்தேன். ஒருவன் நெருங்கி `ஜோச்! ஜோச், வாரியா!`( சோமாலி மொழியில்: Stop! Stop, brother ! ) என்றான். வந்தது ஆபத்து. வேறு வழியில்லை. சூப்பர் ஃபில்டரான பென்சன்&ஹெட்ஜஸை ஒருமுறை இழுத்து விட்டேன். ரசிக்கமுடியாத தருணம். அவனை சஞ்சலத்துடன் திரும்பிப் பார்த்தேன். 18 வயதிருக்கும். அவனது தோழர்களும் அவ்வளவு வயதினரே. கையை நீட்டினான். பீர் குடிக்கக் காசு கேட்கிறானோ? உடனே பாக்கெட்டில் கைவிட்டு நூறு சோமாலி ஷில்லிங் நோட்டுகளில் இரண்டை எடுத்துக் கொடுத்தேன். வாங்கிக்கொண்டு சிரித்தான். என் வலதுகையைக் காட்டினான். ! ஃபாரின் சிகரெட் வேணுமா! தங்கநிற பாக்கெட்டைப் பெருமையாகத் திறந்து ஆளுக்கொன்றாக கிங்சைஸ் ஃபில்டர்களை நீட்டினேன். குஷியாக அவர்கள் வாங்கிக்கொண்டனர். மனம் லைட் ஆனது! லைட்டரை எடுத்து அவர்களுக்குப் பற்றவைத்தேன். சலாம் போட்
ுவிட்டு
ஆடிக்கொண்டு போய்விட்டனர். அவ்வளவுதான் சோமாலியர்கள். கேட்டால் இல்லை என்று சொல்லாது ஏதாவது கொஞ்சம் கொடுத்துவிடவேண்டும். வம்புசெய்யாது விலகிவிடுவார்கள். மற்ற ஆப்பிரிக்க நாடுகளிலும் இப்படி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இன்னும் இரண்டு மோசமான நாடுகளுக்குப் பிற்காலத்தில் செல்வேன் என அப்போது எனக்குத் தெரிந்திருக்க ஞாயமில்லை!

பர்ரேயின் ஆட்சியில் ஒரு விஷயம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. ஆப்பிரிக்க நாடாகினும் சோமாலியாவில் திருட்டு பயம் அப்போது இல்லை. சோமாலி அரசின் அதிகபட்ச சாதனை என இதனைச் சொல்வேன்.  இந்தியர்கள் ஒருவருக்கொருவர் டின்னர் அழைப்பில் மற்றவர் வீடுகளுக்கு செல்வோம். சிலசமயங்களில் நல்லிரவுக்குப் பின்னர்கூட சாலையில் கொஞ்சதூரம் நடந்து தத்தம்  வீடுகளுக்குத் திரும்பியதுண்டு. கூடவந்த குடும்பப்பெண்கள் வழக்கம்போல் நிறைய தங்க நகைகள் அணிந்து வருவார்கள். ஆண்களில் சிலரும் விரல்களில் மோதிரம், கழுத்தில் மைனர் செயின் என்று போட்டு மினுக்கியதுண்டு. ஒருநாளும் எந்த சோமாலியனும் எங்களை வழிமறித்ததில்லை. வீடுகளில் திருடுபோனதில்லை. இப்போது நினைத்தாலும் ஆச்சரியம் போகவில்லை.

.நா., உலகவங்கி , அமெரிக்க உதவி நிறுவனங்களில் மொகதிஷுவில் அந்தக்காலகட்டத்தில் பணிபுரிந்த தமிழர்களும், இன்னும் சில இந்தியர்களும் (பீஹார், பஞ்சாப், கேரளா போன்ற மாநிலத்தவர்)  எளிதாகப் பழக்கமாயிருந்தனர். வீடியோ கேசட் ரெகார்டர்கள் ஓடிய காலம். துபாயிலிருந்து VHS வீடியோ கேசட்டுகளை வரவழைப்பார்கள். ஹிந்தி, இங்கிலீஷ், தமிழ்ப் படங்கள். அதனை யார் வீட்டிலாவது விடுமுறை நாட்களில் உட்கார்ந்து பார்ப்போம். லேண்ட் ரோவர், லேண்ட் க்ரூய்சர் என .நா. வண்டிகளில் ஆனந்தமாக ஊர் வலம் வருவார்கள் நமது இந்தியர்கள்.(அவற்றை விடுமுறைத் தினங்களில் பயன்படுத்த அனுமதி இருந்தது). தமிழ் வருஷப்பிறப்பு தினத்தன்று உலகவங்கியில் பணிபுரிந்த தமிழரான கேசவன் என்கிற நண்பரின் வீட்டில் மாலை இசை நிகழ்ச்சி, டின்னர் என பிரமாதமான ஏற்பாடுகளை அவருடன் சேர்ந்து நண்பர்கள் செய்திருப்பர். இந்திய இசை நிகழ்ச்சியில் ஹிந்தி, தமிழ் சினிமா பாடல்களை சிலர் பாடுவார்கள். நிகழ்ச்சியில் சோமாலி இளைஞர்கள் இருவர் தங்கள் ட்ரம்களுடன் வந்து பங்கேற்பர். அவர்களில் அப்தி முகமது (Abdi Mohammad) என்பவன் முகமது ரஃபியின் ஹிந்தி திரைப்படப்பாடல்களை உருக்கமாகப் பாடுவான். இசை நிகழ்ச்சி அவனுடைய பாடலோடுதான் ஆரம்பமாகும். கோவிந்த் குமார் ஒரு நிகழ்ச்சியில் ராஜ்கபூரின் `சோரி..சோரி(Chori..Chori)` படத்தில் மன்னா டே (Manna Dey) பாடிய ` ராத் பீகீ, பீகீ (Ae raat bheegi…bheegi – என்ன ஒரு ஈரமான இரவு இது..! ) என ஆரம்பிக்கும் பாடலை அருமையாகப் பாடியது பசுமையாக இருக்கிறது நினைவில்.

மிகவும் உதவும் மனப்பான்மை உடைய ஷயர் முஹமது என்பவர் எங்கள் அலுவலகத்தில் மெசெஞ்சராக வேலை செய்திருக்கிறார். அலுக்காமல் வேலை செய்யும் அபூர்வ சோமாலியன்.  மிகவும் மரியாதையாகப் பேசும் முஹமது யூசுஃப் என்பவர் அலுவலகத்தில் ரிசப்ஷனிஸ்ட்டாகப் பணியாற்றியவர். பழைய ஹால்டா டைப்ரைட்டரில் லொடக், லொடக்கென எதையாவது தட்டிக்கொண்டிருப்பார். லேசான போதை. வாயிலிருந்து இடைவிடாத புகை அவருடைய குணநலன்கள்! அஹமது அலுவலகத்தில் சிறுசிறு வேலைகள் செய்யும் சிறுவன். எங்களுக்கு டீ போட்டுத் தந்து உற்சாகமூட்டுபவனும் அவனே. டீ என்றால் பாலோடு எந்த சகவாசமும் வைத்திராத  கருப்பு டீ. அந்த டீயில் ஏகப்பட்ட சர்க்கரையைப்போட்டுக் கலக்கோ கலக்கு என்று கலக்குவான் அஹமது. அது கரையாது நிற்கும்வரை சர்க்கரையை கண்ணாடித் தம்ளரில் போடுவது சோமாலியர்களின் வழக்கம்!

அதீதத் தித்திப்பில்தான் அவர்கள் டீ குடிப்பார்கள். நமக்கும் தருவார்கள். வேப்பிலைக்குச்சியினால் பல்துலக்கும், நாளைக்கு 10-15 கிளாஸ் டீ குடிக்கும், வேப்பிலைக்கொழுந்தை அடிக்கடி சாப்பிடும், நல்லெண்ணையை, பம்ப்பேல்மோ ஜூஸை விரும்பிக் குடிக்கும் சோமாலியர்களிடம் எந்த வியாதியும் எளிதில் நெருங்கியதில்லை. இவ்வளவு இனிப்பு தின்றும் அவர்களிடையே டயபெட்டீஸ் போன்ற வியாதிகள் காணப்பட்டதில்லை. எளிமையான இயற்கை வைத்தியம் அறிந்தவர்கள். பொதுவாக நல்ல ஆரோக்கியத்தில் இருந்ததாகவே தெரிந்தது. வயதான காலத்திலும் வெண்மையான, ஆரோக்யமான பற்கள் உடையவர்கள் சோமாலியர்கள்.

சோமாலியர்களின் அதிகாரப்பூர்வ மதமாக இஸ்லாம் இருந்தபோதிலும் ஆப்பிரிக்க ஆதிவாசி இனத்தவரின் குணாதிசயங்களே அவர்களிடம் காணப்பட்டது. இளகிய சுபாவம் உடையவர்கள். பொதுவாக நேர்மையானவர்கள். சாதாரண சோமாலியர்களிடையே மத அடிப்படைவாதம் காணப்பட்டதில்லை. ஆனால் எளிய மத நம்பிக்கை அவர்களிடம் உண்டு. ஒரு சோமாலிய இளைஞனிடம் 500, 1000 ஷில்லிங்குகளைக் கொடுத்தால் அன்றே அதனைத் தின்று, குடித்து, விலையுயர்ந்த சிகரெட்டாக ஊதிக் காலி செய்துவிடுவான். பார்த்திருக்கிறேன். `நாளைக்கு கொஞ்சம் வைத்துக்கொள்ள வேண்டாமா? இப்படி ஒரேயடியாகவா எல்லாவற்றையும் செலவு செய்வது?` என்று ஒருவனிடம் அக்கறையோடு கேட்டேன். அவன் சொன்னான்: “இன்ஷா அல்லாஹ்!`  `என்னது, இப்படிச்சொன்னால் என்ன அர்த்தம்?` சிரித்துக்கொண்டே சொன்னான் அவன்:  `நாளைக்கு வேண்டியதை நாளைக்குத் தருவார் அல்லாஹ்! ` இதுதான் சோமாலியர்களின் எளிமையான வாழ்வியல் தத்துவம்.

**

3 Replies to “உலகம் சுற்றிவந்தபோது: சோமாலியா”

 1. சோமாலியா என்றால் குச்சி குச்சியாக கையும் காலுமாக கண்களில் உயிரை வைத்துக்கொண்டு பசித்த வயிற்றுடன் இருக்கும் குழந்தைகள் தான் நினைவிற்கு வருகிறார்கள். எங்கள் வீட்டில் இருக்கும் ஒல்லியான குழந்தைகளை சோமாலியா குழந்தைகள் என்று கேலி செய்வோம்.
  சோமாலியாவைப்பற்றிய வேறுவிதமான எண்ணங்களை/தகவல்களை உங்கள் எழுத்துக்களின் மூலம் தெரிய வைத்துள்ளீர்கள். பாவம் அந்தப் பெண்கள். உலகத்தின் எல்லா மூலைகளிலும் பெண்கள் படும்பாடு மனதை தொடுகிறது.
  ஆப்பரிக்க நாடுகள் என்றால் காடுகள், சிங்கம், புலி இவைகளும் நினைவிற்கு வருகின்றன. இங்குள்ள காடுகளில் நீங்கள் சஃபாரி போகவில்லையா?
  நாளைப்பாடு நாராயணன் என்றுதான் அவர்களுமிருக்கிறார்கள்!
  சுவாரஸ்யமான கட்டுரை. பாராட்டுக்கள்!

 2. வருகைக்கு நன்றி.
  சர்வதேசத் தொண்டு நிறுவனங்கள் என உலகெங்கும் அலையும் நிறுவனங்கள் பணபலம் பொருந்தியவை. ஆப்பிரிக்கா போன்ற ஏழ்மையும் பிரச்சினைகளும் நிறைந்த பிரதேசங்களில், சேவை என்கிற பெயரில் அவர்கள் ஏதேதொ செய்துவருகிறார்கள். அவர்களுக்கு ஏழைகளை ஏழைகளாகக் காண்பித்தால் போதாது. அவர்களை விழிபிதுங்கியவர்களாக, வயிறு ஒட்டியவர்களாக, வியாதிக்காரார்களாக, கையில் எப்போதும் திருவோடு தாங்கியவர்களாகவே காட்டவேண்டும். அதில் தான் அவர்களுக்கு பரமதிருப்தி. அப்போதுதான் பெருநாடுகளிலிருந்து அவர்களுக்கு, அவர்கள் செய்யும் அரியசேவைக்கெனப் பணம் கொட்டும். இப்படி எல்லாவற்றிலும் பூடகமாக அரசியல் இருக்கிறது. அத்தகைய அரசியல் சில அதீத பிம்பங்களைத் தோற்றுவித்தல் அவசியமும் ஆகிறது.
  நான் பார்த்த சோமாலியாவும் ஏழை நாடுதான். ஆனால் ஐ.நா. காண்பிக்கிற மாதிரியான அரதக்கந்தல் இல்லை. அந்த நாட்டு மனிதரோடு சேர்ந்து சில காலம் வாழநேர்ந்ததால், அவர்களது எளிமையான குணங்களை, கஷ்டங்களுக்குள்ளும் ஒளிரும் நேர்மையை, நட்பினை அனுபவித்திருக்கிறேன். கடுமையான சூழலிலும், பெண்களின் தளரா உழைப்பைக் கண்டு நெகிழ்ந்துள்ளேன். நான் கண்ட எளிய வாழ்க்கைச்சித்திரத்தின் சிறு, சிறு பகுதிகளையே பகிர்ந்துள்ளேன்.
  கென்யா, டான்ஸனியா, தென்னாப்பிரிக்கா போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் இருப்பதைப்போன்ற சுற்றுலா அமைச்சகமோ, தனியார் சுற்றுலா நிறுவனங்களோ, டேக்ஸி/பஸ் சர்வீஸ்களோ அங்கில்லை. There were no organized safaris in Somalia. காடுகளுக்குள் செல்ல சாலைகளுமில்லை! பர்ரேயின் ராணுவ அரசாங்கம் வெளிநாட்டினர்மீது ஒரு சந்தேகக்கண்ணை எப்போதும் வைத்திருந்தது! (வண்டி கையில இருக்குன்னு எங்கேடா சுத்திட்டு வர்றீங்க!)

 3. எனக்கு ஆப்பிரிக்க,தென் அமெரிக்க நாடுகளை பற்றி தெரிந்து கொள்ள எப்போதும் ஆர்வம் உண்டு. தங்களது அனுபவங்களை பகிர்ந்தமைக்கு நன்றி..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.