கென்யாவில் பன்னாட்டு மலர் வர்த்தகக் கண்காட்சி- 2016

kenyaflower2

இயல் நான்காம் வகுப்பின் முதல் மூன்று மாதங்கள் படித்த ஆஸ்வால் பள்ளியின் மிகப்பெரிய குளிரூட்டப்பட்ட வளாகத்தின் முகப்பில் நுழைந்தபோது, கடந்த ஐந்து வருடங்களாய் வருடம் தவறாமல் சந்திக்கும் ஹாலந்து ஜெஸ்பர் புன்னகையுடன் கைகொடுத்தார். பன்னாட்டு மலர்வர்த்தக கண்காட்சி ஜூனில் எட்டு தொடங்கி மூன்று நாட்கள் நைரோபியில் ஆஸ்வால் வளாகத்தில் நடைபெற்றது. இது வருடாந்திர நிகழ்வுதான். ஜெஸ்பர் கண்காட்சியை பல்வேறு நாடுகளில் ஒருங்கிணைக்கும் HPP குழுமத்தில் வேலை செய்கிறார். ஆஸ்வால் வளாகம் உயரமான மேற்கூரை கொண்ட ஆறு பெரும் அறைகளோடு, ஒரு நீண்ட நிலத்தடி அறையும் கொண்டது.
கண்காட்சி வளாகத்தின் அருகில் பட்டமளிப்பு விழா அரங்கில் திறப்புவிழா நடந்தது. அரசு வேளாண் அமைச்சக செயலர் ஒருவர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். நிலத்தடி தளத்தில்தான் நுழைவு அனுமதி பதிவுகள் நடந்தது. முதல் நாளானதால் நல்ல கூட்டம். உள்ளே அரங்குகளில் பாதுகாப்பு சோதனை நடப்பதால் பத்து நிமிடங்கள் காத்திருக்குமாறு அறிவித்தனர்.
கென்யாவின் மற்ற மலர்ப் பண்ணைகளில் வேலை செய்யும் நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்தேன். உகாண்டா, டான்சானியா, எத்தியோப்பாவிலிருந்தும் நண்பர்கள் வந்திருந்தனர். பதினைந்து வருடங்களாக பார்க்காத இந்திய நண்பர்கள் சிலரை பார்த்தது சந்தோஷமாயிருந்தது. கண்காட்சிக்காக பயணித்து வந்ததாய் சொன்னார்கள். பேச்சினூடே கென்யாவின் கருத்தூரி பற்றியும் விவாதம் வந்தது.

~oOo~

karuturi-logo

2007 செப்டம்பரில், பெங்களூரு கருத்தூரி குழுமம், கென்யாவில் ஹாலந்தின் கொய்மலர் பண்ணையான “ஷெர்”-ஐ கெர்ரிட் மற்றும் பீட்டர் பார்ன்ஹூனிடமிருந்து எழுபத்தியோரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து வாங்கியது, அப்போது இந்திய மலர் தொழில்துறையில் பெரும் பரபரப்புச்செய்தி. “ஷெர்” பின்னர் “ஷெர் கருத்தூரி” ஆனது. தோட்டக்கலை படித்து ஓசூர் கொய்மலர் பண்ணைகளில் மேலாளர்களாயிருந்த சீனியர்கள் சிலர் உடன் வேலைவாய்ப்பு பெற்று கென்யா வந்து ஷெர் கருத்தூரியில் இணைந்தனர்.
ஷெர் கருத்தூரி மிகப்பெரிய பண்ணை. 188 ஹெக்டர்கள் பசுங்குடில்களில் கொய்மலர் ரோஜா வளர்ப்பு; ஹாலந்து உட்பட ஏழெட்டு நாடுகளுக்கு ஏற்றுமதி. பண்ணை அமைந்திருந்தது நைவாஸாவின் மிகப்பெரிய ஏரியின் தெற்குக்கரையில். தினசரி பணியாட்கள் கிட்டத்தட்ட ஏழாயிரம் பேர். பண்ணையில் வேலை செய்யும் பணியாட்களுக்காகவே நிறுவனத்தால் தொகுப்பு வீடுகளோடு “கசரனி” என்னும் சிறிய குடியிருப்பு பகுதியே தெற்கு ஏரி சாலையோரம் உருவாக்கப்பட்டது. தோராயமாக 2000/2500 குடும்பங்கள் அங்கு தங்கியிருந்தன.
பணியாட்களின் மருத்துவ வசதிக்காக, நிறுவனத்தின் உள்ளேயே 40 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை – எக்ஸ்ரே, ஸ்கேன் மற்றும் அறுவை சிகிச்சை வசதிகளுடனும்.
குழந்தைகள் படிப்பதற்கு நிறுவன எல்லைக்குள் ஒரு மேல்நிலைப் பள்ளி. இங்கு கென்ய பாடதிட்டத்தில், கல்வி அமைப்பை “8-4-4” முறை என்கிறார்கள். ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டு வரை ஆரம்பநிலை (Primary); அடுத்து “ஃபார்ம்” ஒன்றிலிருந்து நான்கு வரை செகண்டரி; அடுத்த நான்கு வருடங்கள் பல்கலையில்.
சின்னக் குழந்தைகளை கவனித்துக் கொள்ள பொறுப்பான பணியாட்களோடு உள்ளேயே “பேபி கேர்” அறைகள். நிறுவனத்திற்கென்று தனியாக கால்பந்து அணி இருந்தது; நைரோபி அல்லது நைவாஸாவில் நடக்கும் வருடாந்திர கால்பந்து போட்டிகளில் கலந்துகொள்ளும்.
2012-ல் நண்பர்களை பார்க்க ஷெர் கருத்தூரி சென்றிருந்தபோது பண்ணையை சுற்றிப்பார்க்க வியப்பாக இருந்தது (இதைவிட பெரிய கனவுப் பண்ணையை 2013-ல் பார்க்க முடிந்தது; ஷெர் கருத்தூரியிலிருந்து ஏரியின் தெற்குச்சாலையிலேயே 20 கிமீ தொலைவில் அமைந்த “ஒசேரியன்” எனும் 250 ஹெக்டர்கள் டச்சு நிர்வாக பண்ணை பற்றி தனியே ஒரு பதிவு எழுதவேண்டும்).
மிகச்சிறப்பாக இயங்கிக்கொண்டிருந்த ஷெர் கருத்தூரி 2013-லிருந்து சரிய ஆரம்பித்தது. தலைமை நிர்வாக குளறுபடிகள்; கருத்தூரி குழும தலைவர் அகலக்கால் வைத்தது. கென்யாவில் ஷெர்-ஐ வாங்கியபின், எத்தியோப்பாவில் அரசின் ஐம்பது விழுக்காடு மானியத்தோடு அங்கும் பத்தாயிரம் ஹெக்டர்கள் கருத்தூரி தலைமை வாங்கியது. மலையும் மலைசார்ந்த இடமும்; அந்த நிலப்பரப்பை கொய்மலர் பசுங்குடில் அமைத்து சீரமைக்கவே இயந்திரங்கள், நிர்வாகிகள், அரசுசார் செலவினங்கள் என பணத்தை கொட்டவேண்டியிருந்தது; அந்த பணம் கென்ய ஷெர் கருத்தூரியிலிருந்து கொண்டு போகப்பட்டது.
இங்கு கென்யாவில் ஷெர் கருத்தூரி திறமையில்லாத நிர்வாகிகளாலும், தீவிர கண்காணிப்பும், மேற்பார்வையும் இல்லாததாலும், பர்சேஸ் மற்றும் மனிதவளப் பிரிவுகளில் ஊழல்களாலும் சீரழிந்து 2015-ன் இறுதியில் தரைதொட்டது. கொள்முதல் பிரிவில், தீவிர கண்கணிப்பு இல்லையென்றால் ஊழல் வானமெட்டும்; 180 ஹெக்டர்கள் கொய்மலர் வளர்ப்புப் பண்ணையின் மாதாந்திர உரம் மற்றும் மருந்துகள் பர்சேஸ் மதிப்பே 450000 அமெரிக்க டாலர்கள் வரும்; பெரிய உரம் மற்றும் மருந்து நிறுவனங்கள், வளர்ப்பு பண்ணைகளின் பர்சேஸ் மேலாளரை மாத கமிஷன் அடிப்படையில் பேரம் பேசி கைக்குள் வைத்துக்கொள்வார்கள்.
ஷெர் கருத்தூரியின் விஷயங்கள் இங்கு கென்ய மலர் கூட்டமைப்பில் கடும் விவாதத்திற்குள்ளானது. (ஒரு கட்டத்தில், குஜராத்திகளை தலைமையாக கொண்ட பண்ணைகள் நன்றாக நடைபெறும்போது, ஏன் இந்த தென்னிந்திய தலைமை தோல்வியடைந்தது என்றும் பேச்சு வந்தது). வங்கிகளுக்கு கட்டவேண்டிய தவணைகள் பாக்கி; அரசுக்கு செலுத்தவேண்டிய வரி பாக்கிகளை செலுத்தாமல் கருத்தூரியின் இயக்குநர்கள் நாட்டைவிட்டு பறந்துவிட்டதாக கென்ய வருவாய் ஆணையம் குற்றம் சாட்டியிருக்கிறது. 2015-ல் ஒரு வங்கி நிறுவனத்தை கையில் எடுத்துக்கொண்டு, வேறொரு நிர்வாகத்தை வைத்து சில மாதங்கள் பண்ணையை நடத்தியது; கருத்தூரி தலைமை அந்த வங்கிக்கெதிராய் கென்ய கோர்ட்டில் கேஸ் போட்டது. என்ன நடந்தது/என்ன நடக்கிறது என்று தெளிவாய் ஒன்றும் தெரியவில்லை.

~oOo~

B ஹாலின் நுழைவாயிலில் கண்காட்சி வரைபடம் பங்கேற்பாளர்களின் பெயர்களோடு வைக்கப்பட்டிருந்தது. எங்கள் நிறுவன அரங்கு ஹால் D-ல் இருந்தது. கிட்டத்தட்ட 170-க்கும் மேலான அரங்குகள்.
வான், தரை, கடல் வழி போக்குவரத்து நிறுவனங்கள், விமான நிலைய அழுகக்கூடிய சரக்கு கையாளும் நிறுவனங்கள், உர, மருந்து விற்பனையாளர்கள், மலர் சஞ்சிகைகள், மலரினப்பெருக்க நிறுவனங்கள், விருத்தி வர்த்தகர்கள், மலர் உற்பத்தி பண்ணைகள், இடைநிலை புரோக்கர்கள், பசுங்குடில் வடிவமைப்பாளர்கள், நீர்ப்பாசனத்துறை நிறுவனங்கள், பன்னாட்டு மலர் ஏல நிறுவனங்கள் இன்னபிற என நிறைந்திருந்தது.
ஸ்பெயினின் பசுங்குடில் நிறுவனமான “ஆஸ்தர்”-ன் அரங்கு F-ல் இருந்தது; ஆஸ்தரில் செந்தில் அண்ணா பணிபுரிகிறார். கென்யா, டான்சானியா, எத்தியோப்பியா, ஸ்பெயின், தாய்லாந்து, ஜப்பான், சிங்கப்பூர் என்று அலுவல் நிமித்தமாய் பன்னாடுகள் பயணித்துக் கொண்டே இருப்பவர். அவர் அப்பா தமிழ்நாடு வேளாண் பல்கலையில் தலைமை பேராசிரியராய் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

~oOo~

“நீங்க டச்சு கத்துக்கணும் வெங்கி. இத்தனை வருஷமா இந்த பூ துறையில இருந்துகிட்டு, டச்சு இன்னும் கத்துக்கலைனா கொஞ்சம் வெட்கப்படணும்; தெரியாம இருக்கிறது தப்பில்ல; கத்துக்கிட்டா இந்த துறையிலிருக்கும் உங்களுக்கு நல்லது; உங்க உலகம் பெரிசாயிடும். நட்பு வட்டம், வாய்ப்புகள், துறைசார் அறிவு அதிகமாகும்” – ஒரு வருடம் முன்பு தொலைபேசியில் பேசுகையில் செந்தில் அண்ணா சொன்னதும் உறைத்தது. ஆமாம், இத்துறையில் இருபது வருடங்கள் அனுபவங்கள் ஆகியும் ஏன் எனக்கு இது தோணவேயில்லை என்று யோசித்தேன்.
மலர் சஞ்சிகைகளின் ஆங்கில இந்திய பதிப்பு வெளியீடுகள் மேலோட்டமானவை என்றும், பன்னாட்டு ஆங்கில மாத மலர் இதழ்களும் எல்லைகள் கொண்டவை என்றும் சொன்னார். உண்மையில் மலர் தொழில்துறை பற்றிய அறிவை வளப்படுத்திக்கொள்ள வேண்டுமென்றால் டச்சு மொழியில் வெளியாகும் மாத இதழ்கள்தான் உகந்தவை என்றார். அடுத்தமுறை அவர் நெதர்லாந்து கண்காட்சிக்கு சென்றபோது “ஆங்கில-டச்சு” அகராதி வாங்கிவர சொன்னேன்; வாங்கி வந்து பரிசளித்தார். “கோர்டஸ்” எனும் மலரினப்பெருக்க நிறுவனத்தின் ஆப்ரிக்க தலைவரை தொடர்புகொண்டு “புளோமிஸ்ட்ரை” எனும் டச்சு மலர் மாத இதழின் பழைய இரண்டு வருட வெளியீடுகளை அள்ளி வந்தேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அகராதி துணைவைத்து எழுத்து கூட்டிப் படித்து கொண்டிருக்கிறேன். உண்மைதான், கொய்மலர் தொழில் துறையின் பிரமாண்டமும், அதன் பரந்த உலகும் எனக்கு புரிந்தது.
இஃப்ரைம் எனும் இஸ்ரேல் ஆலோசகரிடமிருந்து, ஹீப்ரு கற்றுக்கொள்ளும் நூலும், ஜூவான் எனும் ஸ்பெயின் நண்பரிடமிருந்து ஆங்கில வழி ஸ்பானிஷ் அகராதியும், ஃப்ரான்ஸின் லூசியிடமிருந்து ஃப்ரென்ச் ஆரம்பநிலை பாடங்களும் வாங்கி வைத்து அவ்வப்போது புரட்டி கொண்டிருக்கிறேன். பேசும் அளவுக்காவது இந்த மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டுமென ஆசையிருக்கிறது. அலுவலக இணைய கடித தொடர்புகளில் காலை மாலை வணக்கங்கள், இனிய நாளுக்கான வாழ்த்துக்கள் போன்ற சின்ன சின்ன சொற்றொடர்களை அந்தந்த நாட்டை சேர்ந்தவர்களுக்கு அவர்கள் மொழியில் எழுதி அனுப்பும் போது அவர்கள் கொள்ளும் உற்சாகம், அவர்களின் பதில் கடிதங்களில் தெரிகிறது.

~oOo~

kenyaflower3

கண்காட்சியில் மலர்த்துறையின் பன்னாட்டு ஆலோசகர்கள் பேசக்கிடைத்தார்கள்.
அலுவலக சந்திப்புகளில் எங்கள் இயக்குநர் அடிக்கடி சொல்லும் வாசகம் “இங்கு கென்யாவில் நாம் பசுங்குடில் கொய்மலர் வளர்ப்பில் முக்கியமாய் கவனித்து தொடர வேண்டியது, இஸ்ரேலிகளை போல் செடி மேலாண்மை செய்யவேண்டும்; டச்சுக்காரர்களை போல் நீர் தரவேண்டும்”. எனக்கு முதலில் ஆச்சர்யமாயிருந்தது. இஸ்ரேலிகள்தானே நீர் மேலாண்மையில் அசகாயர்கள்?; ஏன் இயக்குநர் கென்யாவிற்கு அது ஒத்துவராது என்கிறார் என்பது போகப் போக புரிந்தது.
எங்கள் நிறுவனத்திற்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இரண்டு ஆலோசகர்கள் வருகிறார்கள். ஒருவர் இஸ்ரேலி – பசுங்குடில் வளர்ப்பின் செடிகள் மேலாண்மைக்கு ஆலோசனைகள் தருபவர். இன்னொருவர் ஃரெஞ்சுக்காரர் – பூக்கள் அறுவடைக்கு பின்னான தரம் பிரித்தல், கொத்துகள் உருவாக்குதல் மற்றும் மதிப்புயர்த்தும் செயல் சங்கிலிக்கு ஆலோசனைகள் தருபவர்.
இஸ்ரேலிகளின் நீர்ச் சிக்கனம் நாளடைவில் பூக்களின் சிறிய தரக்குறைவிற்கு காரணமாவதை கண்டுபிடித்தோம். அவர்களை சொல்லி தவறில்லை; நீர் சிக்கனம் அவர்கள் இரத்தத்தில் ஊறிய ஒன்று!. அதிலிருந்து அந்த இஸ்ரேல் ஆலோசகர் ஒரு சதுர மீட்டருக்கு மூன்று லிட்டர் தண்ணீர் தரச்சொன்னால் நாங்கள் மூன்றரை அல்லது நான்கு லிட்டர் தருவதை வாடிக்கையாகக் கொண்டோம்.
கென்யாவின் மலர் தொழில்துறையின் சிறப்பு எல்லா நாட்டினரும் இங்கிருக்கிறார்கள் என்பதுதான். ரோஜா வகைகளை வெளியிடும் ஸ்பெயின், ஜெர்மனி, ஈக்வடார், ஆஸ்ட்ரேலியா, ஃப்ரான்ஸ், நெதர்லாந்து மற்றும் பல ஐரோப்பிய நாடுகளின் நிறுவனங்கள் தங்கள் கிளைகளை கென்யாவில் வைத்துள்ளன. தங்கள் சோதனை குடில்களில் அவர்களின் வகைகளை பயிரிட்டு வளர்ப்பு நிறுவனங்களை அழைத்து அறிமுகம் செய்கிறார்கள்.
பெரிய வளர்ப்பு பண்ணைகள் அதிகம் வைத்திருப்பது குஜராத்திகள். ஃப்ரான்ஸ், நெதர்லாந்து, டச்சுப் பண்ணைகளும் உண்டு. தமிழ்நாட்டின் திருவையாறுக்காரர் கென்யாவில் ஆறு கொய்மலர் வளர்ப்பு பண்ணைகளும், இரண்டு இடைநிலை மலர் வர்த்தக நிறுவனங்களும் நடத்துகிறார்; பார்ப்பதற்கும், பழகுவதற்கும் எளிமையானவர்; முப்பது வருடங்களுக்கு முன்பு துபாயில் தொழில் தொடங்கியவர்; மாதம் ஒருமுறை வந்து போவார். நான் கென்யா வந்த புதிதில் வேலை செய்தது அவரின் ஒரு மலர்வளர்ப்பு பண்ணையில்தான்.

~oOo~

கண்காட்சியின் பெரும்பாலான அரங்குகள் சுற்றி முடித்து, அனைவரையும் சந்தித்து வெளியில் வரும்போது மாலை மணி ஐந்து. பெரும்பாலான சந்திப்புகளின் மொழி ஆங்கிலமாயிருந்தாலும் ஏனோ காதுகளில் டச்சு மொழி வார்த்தைகள் வீடு வரும்வரை ஒலித்துக் கொண்டேயிருந்தன.

~oOo~

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.