“வேர்க்குது.”
தலையில் முக்காடாகப் போட்டிருந்த சேலைத்தலைப்பை உதறி, இழுத்து, இடுப்பில் இறுக்கி சொருகிக்கொண்டாள் ஆயிஷா.
வழக்கமாகப் பழுப்பு நிறத்திலோ இல்லை ப்ரௌன் நிறத்திலோதான் சேலை. தீக்காய வடுவை மறைக்க அந்த நிறங்கள்தான் வசதி. வலது காதின் கீழே ஆரம்பித்து, பின்கழுத்து முதுகின் ஆரம்பம் வரை தேமல் போலப் பரவி தெரியும் தீக்காய வடு. சற்று கவனித்துப் பார்த்தால் வெளியே தெரியும். சேலையும் அதே நிறத்தில் இருப்பின் தனியாகத் தெரியாது. இன்று வெளிர் மரத்து நிறத்தில் பருத்திச் சேலை. கடற்கரைக் காற்றில் படபடத்தது.
அம்மாவாசை ஓதமெடுத்து உள்ளே வந்த கடல், கரை நெடுகச் சதுப்பு குட்டைகளை விட்டுப் போயிருந்தது. அவற்றில் கால் வைத்துவிடாமல் கவனமாக ஒதுங்கி நடந்தோம்.
சதுப்புக் குட்டைகளில் நண்டுகள் குடித்தனம் இருக்க, அவற்றைத் தின்ன கொக்குகளின் கிரீச்சலான சண்டைகள்.
“இந்த கொக்குகள் கடலுக்கு நன்றி சொல்லுமா?”
“புரியல.”
“சதுப்புக் குட்டைகளை இந்தக் கடல் உருவாக்கிருக்கு. அப்படி உருவான அதில நண்டுக உருவாகி, இந்த கொக்குகளுக்கு சாப்பாடாக மாறுது. இந்த சதுப்பு குட்டைகளால்தானே கொக்குகளுக்கு சாப்பாடு கெடைக்குது.”
புன்னகைத்தேன். அவள் எங்கே போகிறாள் என்பது புரிந்தது.
“உண்மைதான் ஆயிஷா. இந்த குட்டைகளை கடல் உருவாக்கலைன்னா கொக்குகளுக்கு சாப்பாடாக நண்டு கிடைக்காது. ஆனால், அதுங்க உலகமும் வழக்கமும் தனி.
சதுப்புக் குட்டையில் இருக்கும் புழுவைத் தின்னு நண்டுகள் உயிர்வாழும். நண்டைத் திங்கிற கொக்கு செத்தால், கடல் கரையோ கடலோ அதைச் சாப்பிடும். அதுங்களுக்கெல்லாம் சாப்பிட்ட நன்றியுணர்வு இன்னொரு உயிருக்கு சாப்பாடாக ஆறதுதான். ”
“ஆனால், இந்தத் தொடர்பு இதுங்களுக்குத் தெரியுமா? சாப்பாடாக ஆறதுக்கும் ஆக்குறதுக்கும் இதுங்க நன்றி சொல்லுமா ?”
பெருமூச்சுடன் தலையாட்டினேன். வேலைக்குப் போகிறவர்கள் அதிகாலை வாக்கிங், ரன்னிங் முடித்துப் போய்விட, அவர்களை வேலைக்கு அனுப்பிவிட்டு அவர்கள் குடும்பத்தினர் வாக்கிங் போகும் நேரம். சாம்பல் பூச்செடி டிசைன் போட்ட நைட்டியானது கடல்க்காற்றில் பிதுக்கங்கள் காட்ட ஒரு ஆண்டி அசைய அசையக் கடந்தாள் செல்ஃபோன் அலறலோடு.
“டண்டணக்கா டண்டணக்கா ச்சிங் ச்சிங் ச்சிங் ச்சிங், ச்சிங் ச்சிங் ச்சிங் ச்சிங்”.
“செல்ஃபோனா இல்ல லவுட் ஸ்பீக்கரா?”. குத்துப் பாட்டுகள் ஆயிஷாவுக்குப் பிடிக்காது. அமைதியை விரும்புகிறவள். அமைதியையும் தனிமையையும் விரும்புகிற பெரும்பாலானோர் அசடுகள். அப்பாவிகள். ஏமாளிகள். இவளும் ஏமாளிதான்.
அமைதியானவன் போலத் தெரிந்தததால்தான், நல்லவன் என நம்பி வெட்கமும் குதூகலமுமாக முன்பின் தெரியாத ஹைதரபாத்காரனை காதல் என்று நினைத்து நிக்காஹ் செய்துகொண்டாள். அவளது குடும்பம் ஏற்கவில்லை. குடும்ப கௌரவத்தை கெடுத்த கோபத்தில் அவளின் அரபிந்திய மேல்ஜாதிக் குடும்பம் ஒதுங்கிக்கொண்டது.
நாலே மாதங்களில் வரதட்சணை கேட்டு அவள் கணவன் இரும்புக் கம்பியை வைத்து அடிக்கவர அப்பார்ட்மெண்ட்டின் ஜெனெரேட்டர் ரூமுக்குள் ஓடிப்போய் கதவைத் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டாள். வெளியே தாழ்ப்பாள் போட்டுவிட்டு ஜெனெரேட்டரை ஆன் செய்துவிட்டுப் போய்விட்டான் அந்த அன்புக் கணவன்.
ஜெனெரேட்டர் புகை வெப்பத்தில் ஆக்ஸிஜன் குறைந்துபோய் மூச்சுத் திணறி, தலை சுற்ற, உயிருக்காகப் போராட்டம். உள்ளே கிடந்த கல்லால் பெரிய ஜன்னல் கண்ணாடியை உடைத்து வெளியே தப்ப முயற்சித்திருக்கிறாள். ஜன்னலின் உடைந்த கண்ணாடி காதின் கீழிருந்து முதுகு முழுவதும் பரவலாய் ஆழமாய்க் கிழித்தது. கிழிந்து ரத்தம் கொட்டிய காயத்தில் ஜெனரேட்டரின் கரியமிலப் புகை பொசுக்கி வெட்டுக் காயம் வெந்தது. ஜன்னலில் பாதி உடம்பு வெளியே தொங்க மயங்கிக் கிடந்தவளை அடுத்த நாள் காலையில் மீட்டார்கள். அப்பார்ட்மெண்டை காலி செய்துகொண்டு வேறு வீட்டுக்குப் போய்விட்டான் அவன்.
“நீங்களே உங்களுக்குள்ள பேசி முடிச்சிருங்க. அதான் வளக்கம். அதான் நல்லது” சொல்லி விட்டார் போலீஸ் கமிஷனர். பேசி முடிக்கப் போனதில், தலாக் கிடைத்தது. தண்டனை கொடுக்கப்படவில்லை. ஜீவனாம்ஸ கேஸூம் கோர்ட்டில் இழுத்தடிக்கிறது.
கேஸை வாபஸ் வாங்காவிட்டால் கடத்திக் கொண்டு போய், முட்டாஹ் கல்யாணத்துக்கு விற்றுவிடுவோம் என்று அடிக்கடி ஃபோனில் வேறு வேறு ஆட்கள் மிரட்டினார்கள். இருந்த ஸெல் ஃபோனை தூக்கி எறிந்துவிட்டு, எப்படியும் ஜீவனாம்ஸம் கிடைக்கும் என்று, சட்டத்தை நம்பி போராடிக்கொண்டு இருக்கிறாள். வெட்டி வேலை.
உருதுவில் இருந்து மொழிபெயர்க்கும் வேலைக்கு நான் ஆள் தேடியதில், ஆயிஷா கிடைத்தாள். நன்கு பழகியதில், வாழ்க்கை வேதனைகளை மனம் விட்டுப் புலம்ப அவளுக்கு என் மனைவியும் நானும் கிடைத்தோம். அவளுக்கு இண்டெர்நெட் புத்தகங்களும், வாரம்தோறும் கடற்கரை நடையும், ஜீவனாம்சம் கோரி கோர்ட்டுக்கு அலைவதும், மற்ற நேரங்களில் மொழிபெயர்ப்புமாக வாழ்க்கை தன்னைத்தானே ஓட்டியது. மூன்று வருடங்களாக ஒரே மாதிரி தினப்படி வாழ்க்கை நகர்த்தலில் அவளது மனது திசைமாறி துக்கம் மரத்தது.
பொட்டலத்தில் இருந்த வேர்க்கடலைகளை உள்ளங்கையில் கொட்டி, கொக்குகளை நோக்கி, அவை சாப்பிடுவதற்காக எறிந்தாள். சடாரென்று மணலில் விழுந்த கடலை விதைகளின் சத்தம் கேட்டு, இரண்டு கொக்குகள் இறக்கைகளை தூக்கிக்கொண்டு புட்டங்கள் ஆட்டி வேகமாக விலகி எதிரெதிர் திசைகளில் ஓடின.
“பயங்கொள்ளிகளா!”
மிஞ்சி இருந்த கடலைகளை வாயில் போட்டுக்கொண்டு, பொட்டலத்துப் பேப்பரைப் படித்துக்கொண்டே வந்தாள். என் மனதில் நாளை சங்கத்தில் பேச வேண்டியதே ஓடிக் கொண்டிருந்தது.
“இதப் பாருங்க ஸார்.”
பொட்டலத்துப் பேப்பரை நீட்டினாள். டைப்ரைட்டிங் செய்யப்பட்ட பழைய காகிதம். ஏதோ ஒரு ரிசர்ச் பேப்பரின் கிழிந்த பக்கம்.
“என்ன பாக்கணும் இதில?”
“இதப் பாருங்க”
MP Demands Law Against Dowries*
*http://news.bbc.co.uk/2/hi/uk_news/8093948.stm
By Poonam Taneja
BBC Asian Network
The dowry system in the UK should be banned, urges a Labour MP who says it leaves women vulnerable to domestic violence and is open to abuse.
Paying and accepting dowry – a centuries-old South Asian tradition where the bride’s parents present gifts of cash, clothes and jewellery to the groom’s family at a wedding – has been illegal in India since 1961.
Now Virendra Sharma, the MP for Ealing Southall in London, wants a similar law introduced in the UK.
மேலும் படிக்க ஆர்வம் இல்லாமல், அவளிடம் திருப்பித் தந்தேன்.
“இவங்கெல்லாம் எப்படி ஜர்னலிஸ்டானாங்க ஸார்?”
“ஏம்மா?”
“இவனுங்களுக்கு வரதட்சணை சவுத் ஏஷியன் மரபாயிருச்சு.”
ஒரு சதுப்புக் குட்டையில் கால் வைக்க இருந்தவன் தடுமாறி இன்னொரு சகதியில் கால் வைத்தேன்.
கால் சகதியை உதறிக்கொண்டே “இங்கதான அந்தப் பிரச்சினை இருக்கு.”
“இருக்கு. ஆனால், அது எப்படி வந்துச்சுங்கிறத அப்படியே மறச்சு எளுதுதுங்க. கூசாமப் பொய் சொல்றாங்க.”
“நம்மூர்லதான இந்தமாதிரி கொடுமை பண்றோம்.”
சொன்ன பின் நாக்கை கடித்துக்கொண்டேன். அவளுடைய பிரச்சினையும் அதுதானே.
அவள் முகத்தில் சடாரென்று அலுப்புக் களை படர்ந்தது. சில நொடிகள் முன்பு கொக்குகளின் ஓட்டம் கண்ட மலர்ச்சியை முகவாட்டம் மூட, கண்முன் குதூகலம் கரைவது தெரிந்தது.
“பொதுமக்களுக்கு விஷயம் தெரியாததாலதான் இவனுங்களுக்கு பொளப்பு ஓடுது.”
உலக விவகாரங்கள் பற்றி நம்பிக்கையின்மை. விரக்தி. பாவம் அவள். அவள் வேதனைகள் அனுபவிக்காத நமக்கே சமூகம் பற்றி கோபம் இருக்கிறது. கலிகாலம்தான் எனும் விரக்தி வருகிறது. துயர் பட்ட அவளுக்குப் பிறர் பற்றி சந்தேகம் எழுவதில் ஆச்சரியம் என்ன. துயர அழுக்கு வெளியேற வடிகால், பேச்சுதான். பேசத் தூண்டுவதுதான் வேதனை வெளியேற ஒரே வழி.
“ரொம்ப படிக்கிற போலிருக்கு. யாருக்கும் தெரியாததெல்லாம் உனக்கு தெரிஞ்சிருக்கு போல.”
“தலைக்கனம் பிடிச்சவங்கிறீங்க. அப்டியே வச்சுக்கங்க. ஒங்க பாம்பே எப்படி உருவாச்சு?.”
“மும்பை. மும்பை.”
புன்னகையுடன், “சரி. மும்பை. அது எப்படி உருவாச்சு? சொல்லுங்க.”
“பிரிட்டிஷ்காரன் உருவாக்கினான். அதுக்கு என்ன இப்போ.”
“அது போர்ச்சுக்கீசுக்காரன்ட்டத்தானே இருந்துச்சு. பிரிட்டிஷ்காரன் கையில அது எப்படி போச்சு?”
நான் பதில் சொல்ல வேண்டியதில்லை. அவள் மனதிலிருந்து துக்கத்தை வெளியேற்றி இழுக்க நானும், இந்த மும்பைப் பிரச்சினையும் சாக்குப் பையாகக் காத்திருக்கும் காதுகள். சாக்குகள்.
அவளை மனசார பேசவிடுவது அவளுக்கு ஆறுதலைத் தரலாம். அவளது கோர்ட் பிரச்சினை பற்றி நேரடியாகக் கேட்டால் சுத்தமாகப் பேசமாட்டாள். வேறு விஷயம் பேசி மனதை திசைதிருப்பத்தானே இந்த பீச்சில் இந்தக் காலை வேளை நடைபயிலல். மையமாகப் புன்னகைத்தேன்.
“போர்ச்சுக்கல்லுல ப்ரகான்ட்ஸான்னு ஒரு பிரபுவம்சம். அதைச் சேர்ந்த கேதரைன் இங்கிலாந்து ராஜாவான ரெண்டாம் சார்ல்ஸை கலியாணம் பண்ணிக்கிட்டா. அப்போ போர்ச்சுக்கல் ராஜாவாக இருந்தது அவ அப்பா. அவர் போர்ச்சுக்கல் காலனிக்குள்ள அப்ப இருந்த ஏழு மும்பை தீவுகளையும், ப்ரேஸிலின் சில பார்ட்ஸ்களையும், முன்னூறாயிரம் பவுண்ட் பணத்தையும், மேலும் சில அரசியல் உரிமைகளையும் டௌரியாகக் கொடுத்தார். டௌரியாக. அப்படி டௌரியாக வந்ததுதான் ஒங்க மும்ப்ப்பை.”
ஒவ்வொருமுறையும் டௌரி என்பதை அழுத்தி, அழுத்தி.
“இதெல்லாம் இங்கே இந்தியாவில் இருந்த பழக்கங்கள். வெள்ளைக்காரவுங்க அத நம்மகிட்ட இருந்து எடுத்துக்கிட்டு இருக்கலாம். இல்லையா?”
சிரித்துவிட்டாள்.
“முந்தைய சகாப்தம் 18 நூற்றாண்டில (1750 BCE) உருவானது ஹமுராபியின் சட்டங்கள். இப்போ இருக்கிற ஈரான். கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் கேள்விப்பட்டிருப்பீங்களே. அதில் டௌரி குடுக்கணும்னு இருக்குது. ஆனாக்க, இந்தியாவின் எந்த ஸ்ம்ருதியிலும் எந்தப் புராணத்திலும் எந்த இதிகாசத்திலும் டௌரி கொடுக்கணும்னு இல்ல.”
“மனு நீதில இருக்குன்னு படிச்சிருக்கேன். சும்மா கத விடாதம்மா. நானும் கொஞ்சம் படிக்கிற பயதான். சும்மாவா என்னைய நாளைக்கு சங்கத்து மீட்டிங்ல பேச கூப்ட்ருக்காங்க. உனக்கு தெரியுமோ தெரியாதோ சங்கம் வந்து இந்த தேசத்துக்காக தேசப் பற்றை முன்வைக்கிற அமைப்பு. அவங்களே இந்த நாட்டை சீர்திருத்துறதப் பத்தி பேசச் சொல்லிருக்காங்க.”
“ஆரம்பிச்சிட்டீங்களா. அந்தக் காலத்து இந்தியர்கள் நிறைய ஸ்ம்ரிதிய ரெஃபர் பண்ணாங்க. ஒரே ஒரு சட்டப் புக்னோ எல்லா இந்தியர்களுக்கும் பொதுவான ஒரே ஒரு கான்ஸ்டிட்யூஷன்னோ அவங்களுக்கு எதுவும் இல்ல.”
“நா சொன்னத நீ இல்லைன்னு வெளிப்படையா மறுக்கல. அப்ப மனு நீதி அப்படிச் சொல்லிருக்குன்னுதான் அர்த்தம்.”
“தப்பா எடுத்துக்காதீங்க சார். அந்தப் புக்க நேரடியா படிச்சவங்களவிட, அதப் பத்தி எதுவும் தெரியாம, அங்கங்க இருக்கிறத உருவி, எல்லாம் படிச்சமாதிரி தெரிஞ்சமாறி பீத்துறவங்கதான் அதிகம். தெரிஞ்சே தப்புதப்பா சொல்றவுங்களும் உண்டு. இவங்க சொல்றதுக்கும் அந்த புக்ல சொல்றதுக்கும் சம்பந்தமே இல்லைங்கறது அந்த புக்க பாத்தப்பத்தான் தெரிஞ்சது. மனு ஸ்ம்ருதியில டௌரி பற்றி எதுவுமே இல்ல.”
“அதான் நம்ம பயலுவ அத எதுக்குறானுங்க போலிருக்கு.”
புன்னகையுடன் சொன்னாள். “அந்த ஸ்ம்ருதி மட்டுமில்ல சார். எந்த ஸ்ம்ருதியிலும் அப்படி டௌரிய யாரும் ஆதரிக்கல.”
“அப்படியே வச்சுக்குவோம். ஆனாக்க, அந்தக் காலத்துல ஒரே ஒரு சட்டப் புத்தகத்த யாரும் அப்படியே ஃபாலோ பண்றதில்லைன்னு நீயே சொல்ற. அப்ப நம்மாளுங்க ரெக்கார்ட்ல இல்லாம டௌரி வாங்கிருக்கலாம்ல. எந்த புராணத்திலையும், எந்த .. அதென்னா…ஸ்ரெதியா?
“ஸ்ம்ருதி.”
“அதான். ஆமாம், மனு ஸ்ம்ருதின்னு இருக்கில்ல. மறந்துட்டேன். அது எதுலயும் ரெக்கார்ட் பண்ணாம ப்ளாக்ல டீலிங் வச்சிட்டிருந்திருக்கலாம். அது ஒரு ரெகார்ட் ஆகாத சமூக வளக்கமா இருந்திருக்கலாம். அதைப் பாத்த வெளிநாட்டுக்காரனும் இங்கே இருந்து காப்பி அடிச்சிருக்கலாம்.”
“ஆனாக்க, வெள்ளைக்காரனுக்கு முன்னாடியே இங்க வந்த வெளிநாட்டுக்காரங்க இங்கேயே தங்கி நேரடியாக பாத்து, பாத்தத எளுதி வச்ச ரெக்கார்டுங்க சொல்றது வேறு மாதிரில்லா இருக்கு.”
“வேறமாதிரி இருக்க வாய்ப்பில்ல. அவங்க சொன்னத வச்சுத்தான் ஸ்கூல்ல வரலாறு சொல்லித்தராங்க. நீ சொல்ற மாதிரி எந்த ஸிலபஸிலும் இல்ல.”
“ஸிலபஸ் பத்தி தெரியாது ஸார். ஏரியன்னு ஒரு க்ரேக்க வரலாறு எழுதுறவர். 2வது நூற்றாண்டைச் சேர்ந்தவர் (175 CE). இண்டிகான்னு ஒரு புக் எழுதி இருக்கார். அதுல நம்மூர்ல டௌரிங்கிற விஷயமே இல்லைங்கிறதப் பத்தி ஆச்சரியமா எழுதிருக்காரு.
ஏன்னா அவுங்க க்ரேக்க நாட்டில அது இல்லாம கல்யாணமே கிடையாது. அது இங்க இல்லவே இல்லைங்கிறதப் பாத்து அவருக்கு அதிர்ச்சி.
அந்தக் காலத்துல கல்யாண வயசு வந்த இந்தியப் பெண்கள் எல்லாம் மல்யுத்த போட்டி இல்லேன்னா அந்த மாதிரி ஏதேனும் போட்டி நடக்கிற க்ரவுண்டுக்கு வருவாங்களாம். மல்யுத்தத்தில ஜெயிக்கிறவன், கலந்துக்கறவன் எல்லாம் அவனுக்குப் பிடிச்ச பெண்ணுக்குப் ப்ரொப்போஸ் பண்ணுவான். அவளுக்கும் ஓக்கேன்னா உடனே நிக்காஹ். தட் ஸிம்பிள்.”
“அதெல்லாம் ரெண்டாயிரம் வருசத்துக்கு முன்னாலம்மா. அதுக்கப்புறாமா இந்த ஆரியன்ஸ், அதான் இந்த பிராமின்ஸ்லாம் ஆடு மேச்சுக்கிட்டு இந்தியாவுக்கு வந்து டௌரிய அறிமுகப்படுத்தினாங்க”.
“இதுக்கும் ஆதாரம் எதுவும் இல்ல ஸார். ஏரியன் மட்டும் இல்ல சார். அவருக்குப் பல நூறு வருசம் பின்னாடி 11ம் நூற்றாண்டுல இந்தியாவுக்கு வந்த, ஹிந்துக்களைப் பத்தி மட்டமா நெனச்ச, அல் பெருனியும் இதையேதான் சொல்றார்.”
“என்னாத்த சொன்னாரு ?”
“ஹிந்துக்களிடையே கல்யாணாத்துக்காக மாப்பிளையோ பொண்ணோ ஒருத்தருக்கு இன்னொருத்தர் காசு கொடுக்கிறதும் இல்ல. வாங்குறதும் இல்ல அப்டிங்க்றாரு”.
“நோ டௌரி?”
“நாட் அட் ஆல்.”
“பரவாயில்லையே. பொண்ணு வீட்டுக்காரங்க எதுவும் தரவேண்டாம். புரியுது. ஆனா, இப்படி மல்யுத்த போட்டில இன்னொரு தீவட்டித் தடியனை நான் தோக்கடிச்சிட்டேன், என்னையக் கல்யாணம் கட்டுன்னா கட்டிருவாளா ஒருத்தி ? அந்த குண்டனுக்கு லவ்வுன்னா என்னான்னு தெரியுமா ? லவ்வ எப்படி காட்ட முடியும்? கொறைஞ்சது ஒரு கவிதை, ஒரு லெட்டர், ரோஜாப்பூ, காதலோடு ஒரு பார்வை, உரிமையெடுத்து ஒரு உரசல், இல்லேண்ணா கண்ணே செல்லம்னு கொஞ்சல். அன்பைக் காட்ட இதுமாதிரி ஏதாவது தரணும். கிஃப்ட் இல்லாம முடியாதும்மா.”
“நாங்களும் அவ்ளவு ஈசியா விட்ருவமா. ப்ரொப்போஸ் பண்ணவன் ஏதாவது கிஃப்ட் தந்தாத்தான் மரியாத. அப்படிப் ப்ரொப்போஸ் பண்ணவனைப் பிடிக்கலைன்னாக்க அவனோடு கிஃப்ட திருப்பிக் கொடுத்துருவாங்களாம் பொண்ணுங்க. உன்ன கல்யாணம் பண்ணிக்க விரும்பலங்கிறத நாசூக்கா சொல்ற டீசண்டான மெத்தெட். அல்-பெருனி எழுதிருக்கார். ஃபார்ஸியில இருக்கிறத படிச்சேன்.”
பேசாமல் நடையைத் தொடர்ந்தேன். ஏதோ தினுசு தினுசாக சொல்கிறாள்.
“அது மட்டுமில்ல சார். கல்யாணம் செய்துகிட்ட பொண்ணு கர்ப்பமா இருக்கான்னா…”
“என்னமா சொல்ற…”
“முழுசா கேளுங்க. நிக்காஹ் முடிஞ்சிருச்சு. ஆனா அந்தப் பெண் வேறு யார் மூலமோ கர்ப்பமாயிருக்கான்னு தெரிஞ்சு போச்சு. அப்ப அந்தக் குழந்தையையும் தானமாக வந்த பெண்ணோடு சேர்ந்து வந்த தானமாக நெனச்சு சந்தோசமா சேர்த்துக்கணுமாம். அத இந்தியாவுல ஃபாலோ பண்ணி இருக்காங்க.”
“முருகா. என்னமா சொல்ற. கேக்கவே அசிங்கமா இருக்கு. நம்ம நாட்டைப் பத்தி, நம்ம பெண் சமுதாயத்தப் பத்தி, அல்-பெரூனி சும்மா பொய் சொல்லிருக்காப்ல. நம்மளப் பத்தி தப்பாச் சொல்லி நம்ம கலாச்சாரத்த, ஒழுக்கத்த, பாரம்பரியத்த, நம் இனத்த, …. கம்மனாட்டி.”
“இதைச் சொன்னது அல்-பெரூனி இல்லை சார். நீங்க அடிக்கடி கேள்விப்பட்ற ஆள்தான்.”
“அல்-பெரூனி இல்லையா. அப்ப யாரு? ராம் ஜெத்மலானியா?”
சிரிப்புடன் சொன்னாள். “மனு ஸ்ம்ருதி.”
என் முகத்தில் இருந்த புன்னகை அகன்றது. நின்றுவிட்டேன்.
“என்ன சார்?”
“உக்காந்து பேசுவோம்மா. ஏதோ விளையாட்டா சொல்றன்னு நெனைச்சேன். எல்லாமே நான் படிச்சதுக்கும் கேட்டதுக்கும் கம்ப்ளீட் ஆப்போஸிட்டா இருக்கு.”
அவள் தனது பெரிய ஜோல்னாப்பையால் பெஞ்சைத் தட்டி தூசியை விரட்டினாள். உட்கார்ந்தோம்.
“நீ சொல்ற மாதிரி ஏதோ ஒண்ணு ரெண்டு நல்லது இருந்துச்சுன்னே வச்சுக்குவோம். இருந்தாலும், நம்ம ஊர்ல பெண்களை வீட்ல பூட்டி வைக்ற வளக்கம் இருக்ரதப் பத்தி பாரதியாரே பாடிருக்கார்மா. நம்ம நாட்ட விட மத்த நாடுகள்ள இதை விட நெறைய சுதந்திரம் பெண்களுக்கு இருந்துச்சும்மா. சமத்துவத்தையே கொள்கையா போதிச்சவங்க இருக்காங்க.”
“இந்த அளவு இல்ல சார். இதே மாதிரி கல்யாணப் பொண்ணு வேற யார் மூலமோ கர்ப்பமானவள்னு தெரிஞ்சா, அந்தப் பெண்ணை மனைவியாக ஏத்துக்க. ஆனா, அவளுக்கு பிறக்கிற கொளந்தை உனக்கு வாரிசு கிடையாது. அந்தக் கொளந்தை உனக்கு அடிமைதான். கொளந்த பொறந்த பின்னாடி அந்தப் பொண்ண சவுக்கால அடி அப்டிங்குது ஒரு அரேபிய சட்டம்.”
“பிள்ள பெத்தவள சவுக்கால அடிக்கிறதா ?”
ஆயிஷா கண்ணை மூடிக்கொண்டு பெஞ்சில் சாய்ந்தாள். இடதுபக்கம் திரும்பி பராக்கு பார்க்க துவங்கினாள்.
நடந்ததால் துளிர்த்த வியர்வைத் துளிகளின்மேல் கடல்காற்று வருடியது. வெக்கை அறையில் ஏசி போட்டது போல, திடீரென்று தொட்டு வருடும் தென்றல் சுகம். வியர்வை தடவி நெற்றியில் இருந்து தோள் வழியாக நெஞ்சுக்குப் பரவியது. பின்னங்காலில் இருந்து ஜிலீரென்று ஆரம்பித்து, இளக்கம் சர சரவென்று தோள்வரை பரவியது. வாய் பெருமூச்சு விட உடம்பு ஒரு நொடி சிலிர்த்தது.
“ஜன்னத்தில் இருந்து வருது காத்து. அம்மாடி !”
சிறிது நேரம் வெறுமே தூரத்துக் கடல் அலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தோம். கருநீல ராட்சஸனாய் இரண்டு கைகளையும் பரப்பி, இருபக்கத்து கடலையும் இழுத்துக்கொண்டு, முன்னே இருக்கும் நீரை சரசரவென்று குடித்து, படம் எடுத்த பாம்பாக அலைகளை உமிழ்ந்துகொண்டே ஓடி வந்து, அசைவற்ற பூமிக்கு அருகில் வரவர, இளைத்து, சளைத்து கரையோரம் நிற்பவர்களின் காலடி உயரம்கூட இல்லாமல் பின்வாங்கியது.
வலது பக்கம் பார்த்த போது இரண்டு போலீஸ்க்காரர்கள் எங்கள் இருவரையே பார்த்துக்கொண்டு, பின்னால் தூரத்தில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது.
வாக்கிங் ஆரம்பித்தபோதும் இவர்கள் கண்ணில் பட்டார்கள். எங்களுக்குப் பின்னாலேயே வந்து கொண்டிருந்திருக்கிறார்கள். எதற்காக ? அவர்களது வழக்கமான ரோந்தாகத்தான் இருக்கும். அதில் ஒருவர் வயர்லெஸ்ஸில் பேசுவது தெரிந்தது. கேட்கவில்லை. எங்களையே பார்ப்பது போலத் தோன்றியது. நான் பார்ப்பது தெரிந்ததாலோ என்னவோ, அந்த போலிஸ்காரர் தலையை குனிந்துகொண்டார்.
சட்டைக்குள் புகுந்த வியர்வையை காற்று உணக்கவைப்பது தெரிந்தது. சிந்தனை திசை மாறி சங்கத்தில் நாளை பேசவேண்டிய விஷயங்கள் யோசித்து, நெடுநேரம் பேசாமல் இருக்கிறோம் என்பது திடீரென நினைவுக்கு வந்தது. இவளிடம் என்ன கேட்பது என்பதும் பிடிபடாமல், கேட்பதில் சங்கடத்துடன். நினைக்கும்போதே வாய் கேட்டு விட்டது.
“ஹ்ம்ம். தானம்னு சொன்னியே. அதுகூட டௌரியா இருந்திருக்கலாம்ல.”
“இல்ல சார். தானம் வேற. டௌரி வேற. பூமிக்கு மேகம் மழையத் தர்ரது மாதிரி கொடுக்கிறதுதான் தானம். அந்தமாதிரி ஒரு இயற்கையான ஒரு உறவ உண்டாக்க, ஒரு பிள்ளைய கல்யாணம் கட்டிக் கொடுக்கறதுக்குப் பேர் கன்னியாதானமாம்.”
“அப்போ நிறைய நகைபோட்டுக் கட்டிக் கொடுக்கணும்னு சம்பிரதாயம் இருக்கே. அது எங்கிருந்து வந்துச்சு?”
“நகை மட்டும் இல்லை சார். வீடு, நிலம், பசு எல்லாம் சேர்த்துக் கொடுப்பாங்க. மாப்பிள்ளைக்கு இல்லை. பொண்ணுக்கு.”
“அது டௌரிதான ?”
“இல்ல சார். இதக் கொடு அதக் கொடுன்னு மாப்பிள வீட்டுக்காரங்க பொண்ணு வீட்ட கேட்டாத்தான் டௌரி. அசுர விவாகம். இது வேற. கல்யாணம்கிறது அப்பா தன்னோட பொண்ணுக்கு சொத்தை பிரிச்சு கொடுக்கிற டைம். கல்யாணம் ஆனபின்னாடி அந்தப் பொண்ணு வேற குடும்பத்துக்கு சொந்தமாயிர்ரா. அதனால, அவளுக்குத் தரவேண்டிய சொத்தை எல்லாம் சேர்த்து கல்யாணத்தும்போதே கொடுத்திருக்காங்க. ஆனால், அதுவும் கூட வேற ஒரு கணக்கில்தான்.”
“ஸ்விஸ் கணக்கா?”
“போங்க சார். தானமா கொடுக்கும்போது ஒத்தப்படையா ஒரே ஒரு பொருளை மட்டும் தரக்கூடாதாம். ஒரு விஷயத்தை தானம் செய்யும்போது சேர்த்து வேறு சில தானங்களும் பண்ணனுமாம். அதனால கன்னியாதானம் பண்ணும்போது, கல்யாணப் பெண் என்கிற ஒரே ஒரு விஷயத்தை ஒத்தப்படையா தராம மாடு, பசு மாதிரி பொண்ணுக்கு தேவையான பிடிச்ச விஷயங்களையும் சேத்திக் கொடுப்பாங்க. 18, 19ம் நூற்றாண்டுகள்ள சமூக கவுரவமாக இது ஆயிருச்சு.
இப்படி கல்யாணாம் ஆகி அடுத்த வீட்டுக்குப் போற பொண்ணுக்கு அந்தப் பொண்ணோட அப்பா, கூடப் பொறந்தவங்க, அம்மா, மாமன், மத்த உறவுக்காரங்க பரிசா தானமா தர்ரது வளக்கம். ஸ்த்ரீ தனம் அப்டிங்கிற பேர்ல தருவாங்க. அந்த ஸ்த்ரீ தனம்கிறதுதான் இப்ப சீதனம்னு ஆயிருச்சு. ஆனாக்க, ஸ்ம்ருதிகளின்படி பொண்ணுக்கு அவளோட குடும்பத்துக்காரங்க தந்த இந்த பரிசுகளில் வேறு யாருக்கும் உரிமை கிடையாது.”
“அட்றா சக்கை. உரிம இல்லன்னா ? இந்தக் காலத்தில நாங்க கார், ஸ்கூட்டர்னு எதிர்பார்க்கிற மாதிரி அந்தக் காலத்தில பசு, காளை, குதிரை. இப்படி ஒரு சடங்க காரணமா வச்சு லாபம் கெடைக்கும்னாக்க மனுசங்க சும்மா விடுவாங்களா. அதக் கொடு, இதக் கொடுன்னு பொண்ணு வீட்டக் கேட்டு நச்சரிச்சு, இந்தக் காலத்துல கேஸ் ஸ்டவ் வெடிச்சு சாவுன்னா, அந்தக் காலத்தில விளக்குத் தீ பிடிச்சுக்கிச்சுன்னு பிட்ட போட்ருப்பானுங்க.”
உஷ்ணமாகக் கேட்டாள் “எப்படி சார் எந்தத் தகவலும் இல்லாம இப்படி ஒங்களுக்கு யோசிக்க முடியுது? அந்தக் காலத்திலயும் இந்தக் காலத்து மனுசங்க மாதிரித்தான் இருந்திருப்பாங்கன்னு நெனக்கிறீங்க.”
“மனுசங்க மனுசங்கதாம்மா. பணத்தாசை இல்லாதவங்கன்னு யாருமே கிடையாது. எப்போதுமே கிடையாது. அந்த காலத்துல இருந்தவுங்கல்லாம் நல்லவுங்க, இப்ப இருக்கிறாவனுங்கல்லாம் முடிச்சவிக்கங்க – அப்டிங்கிறது சும்மா அல்டாப்பு.
மனுசங்கள கட்டுப்படுத்தனும்னு சட்டம் போட்டா அதை செயல்படுத்தணும். பல ஆயிரம் வருசத்துக்கு முன்னாடி இருந்த ரூல்ஸ். அதையெல்லாம் செய்ய வைக்காம ஃபாலோ பண்ணாம கொஞ்சம் கொஞ்சமா இந்தக் கொடுமையெல்லாம் வந்திருக்கலாம். செயல்படாத சட்டத்தால ஒரு புண்ணாக்கு பிரயோசனமும் இல்ல.”
“அப்படி பிரயோசனம் இல்லாமல் போயிருக்கக்கூடாதுன்னுதான், அடிக்கடி புது புது சட்டங்களைப் போட்டிருக்காங்க. பளய சட்டங்கள ஓவர்ரூல் பண்ணிருக்காங்க.”
“எந்த ராஜா போட்டிருக்காப்புல?”
“இந்தியாவில மன்னர்கள் இந்த மாதிரி விஷயங்கள்ல தலையிடமாட்டாங்க ஸார். அவங்களோட ஜூரிஸ்ட்ரிக்ஷன் சுத்தமா வேற. மனு, யாக்ஞவல்கியர், விதுரர் மாதிரி அரச வம்சத்தவங்க பொதுவான சட்டவழிகாட்டிகளை எழுதறதோடு நிறுத்திக்குவாங்க.”
“அதாவது ஸ்ம்ருதி.”
“ஆமா. ஆனால், அதை வைச்சுக்கிட்டு காலத்துக்கும், தனிப்பட்ட சமூகத்துக்கும் ஏத்தமாதிரி அந்தந்த ஜாதிக்காரங்களும், கிராமத் தலைவர்களும், குலத்துத் தலைவர்களும் சட்டங்கள் போடுவாங்க. திருத்துவாங்க. அதுல எந்த ராஜாவும், அரசாங்கமும் தலையிடாது. தலையிடக்கூடாது. அந்தத் தீர்ப்பை நிறைவேத்துறதுதான் ராஜாவோட, ராஜாங்கத்தோட வேலை.”
“சும்மா கதம்மா. இதெல்லாம் சனாதனிங்க விட்ற ரீலு. சட்டம் போட்றதுங்கறது ஒரு மிகப் பெரிய அதிகார பலம். எந்த அரசாங்கமும், போலீஸும் அதிகாரத்த விட்டுக்கொடுக்காது. அதுவும் பண நஷ்டமாகிற இந்த மாதிரி சட்டத்தை ஜாதிக்காரங்க பஞ்சாயத்துல போட்ருக்க மாட்டாங்க.
அதுவுமில்லாம, இந்த நாடு ஆணாதிக்க தந்தைவழி சமூகம். ஜாதிப் பஞ்சாயத்து வச்சு பெண்களுக்கு எதிராகக் கொடூரமான தீர்ப்புதான் தந்திருப்பாங்க. உத்தர பிரதேசத்தில கப் பஞ்சாயத்து பத்தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவுல நியூஸ் வந்துக்கிட்டே இருக்கு. நீதான் படிக்கிறதில்ல.”
“ஆச்சரியமா இருக்கு சார் நீங்க சொல்றது.”
“என்ன ஆச்சரியம் ? இதுதாம்மா உண்மை. உனக்கு சின்ன வயசு. இதெல்லாம் உனக்குத் தெரியாதும்மா. உத்தரப்பிரதேசம் போயிருக்கியா ? டைம்ஸ் ஆஃப் இந்தியாதான் பாக்குறதில்ல. ஹிந்து பேப்பராவது படிக்கிறயா?”
“வரலாற்று ஆதாரங்கள் வேறு மாதிரி சொல்லுதே.”
“என்ன ஆதாரம்?”
தனது பெரிய ஜோல்னாப்பையை திறந்து உள்ளே பார்த்துக்கொண்டே கேட்டாள் “உத்தரப்பிரதேசம் போயிருக்கீங்க. வேலூர் போயிருக்கிங்கள்ல?”
“குத்தகை பிஸினஸ் விஸயமா போயிருக்கேன். ஏன்?”
“ஒரு நிமிஸம்.”
ஜோல்னாப் பைக்குள் இருந்து சில பேப்பர் கத்தைகளை வெளியே எடுத்தாள். அவற்றை ஒவ்வொன்றாக விலக்கி தேட ஆரம்பித்தாள்.
“கல்லெ கல்லே” மணியோசையோடு கடந்து போனான் கடலை விற்கும் விடலை. “முன்னாடி போம்மா, முன்னாடி போம்மா” என்று சிறுவயது மகனை முன்னே போகச் சொல்லிவிட்டு, புருசன் தோளில் மார்புகள் அழுத்திச் சரிந்து தொங்கி, வாயை கை மறைக்க, கலகலவெனச் சிரித்து, நடந்தாள் ஜீன்ஸ். கடந்து போய்விட்ட வண்டியில் இருந்து கடலை வாசனையை இழுத்து வந்தது எதிர்க்காற்று. இன்னும் இரண்டு கடலை பாக்கெட்டுகள் வாங்கி இருக்கலாம்.
வலது புறம் அந்த இரண்டு போலீஸ்க்காரர்களும் நடந்து வருவது தெரிந்தது. பெஞ்சில் உட்கார்ந்திருந்த எங்களை நோக்கி வருவது போலத் தோன்றியது. பிரமையாகத்தான் இருக்கும்.
“கெடைச்சுருச்சு. பாருங்க.”
ஒரு கல்வெட்டின் புகைப்படம். அடுத்த பேப்பர் அந்தக் கல்வெட்டில் இருந்ததை அச்சாகப் போட்டிருந்த ஒரு புத்தகத்தின் காப்பி. அவள் ஜீவனாம்ஸ கேஸ் விஷயமாக தகவல் சேகரிக்கிறாள் என்பது தெரியும். இப்படித் தேவையில்லாத குப்பை எல்லாம் சேர்க்கிறாள் என்பது லேசான கலவரத்தைத் தந்தது.
கோர்ட்டுக்கும் இந்த குப்பைகளுக்கும் சம்பந்தம் இல்லை. எந்த கோர்ட்டும் இவற்றை மதிக்கப் போவதில்லை. கண்கள் கட்டப்பட்ட நீதிதேவதையின் மனப்பாடப் பார்வைக்கு ஐபிஸியும் ஆர்டிகிள்களும்தான் தெரியும் உலகம்.
அவள் கொடுத்தாள். வாசித்தேன்.
“சுபமஸ்து. ஸ்வஸ்தி ஸ்ரீ . ஸ்ரீமன் மகா ராஜாதிராஜ பரமேசுவரரான ஸ்ரீ வீரபிரதாப தேவராய மகாராஜர் ப்ரித்விராஜ்யம் பண்ணி அருளானின்ற சகாப்தம் 1347ழின் மேல் செல்லானின்ற விஸ்வாசு வருஷம் பங்குனி மாதம் 3க்கு சஷ்டியும் புதன்கிழமையும்பெற்ற ஆநுசத்து நாள், படைவீட்டு இராஜ்யத்து அஸேஷவித்யமஹாஜநங்களும் அகர்கபுஷ்கரணி கோபிநாத ஸன்னதியிலே தர்ம ஸ்தாபந மையபத்ரம் பண்ணி குடுத்தபடி இற்றைய நாள்முதலாக இந்த படைவீட்டு ராஜ் யத்து பிராமணரில் கன்ன(டி)கர் தமிழர் தெலுங்கர் இலாளர் முதலான ஆஸேஷ கோத்திரத்து அஸேஷசூத்தரத்தில் அஸேஷகையிலவர்களும் விவாஹம் பண்ணுமிடத்து, கன்னியாதானமாக விவாஹம் பண்ணக் கடவராகவும் கன்னியாதானம் பண்ணாமல் பொன் வாங்கி பெண் கொடுத்தால், பொன் கொடுத்து விவாஹம் பண்ணினால், ராஜ தண்டத்துக்கும் உட்பட்டு பிராமண்யத்துக்கும் புறம்பாகக் கடவரென்று பண்ணின தர்ம ஸ்தாபன மைய பத்ரம்; இப்படிக்கு அஸேஷ வித்ய மகாஜனங்கள் எழுத்து.” [7]
“என்னதிது? ஒரு எளவும் புரியல. தமிள்ல இருந்தாலாவது புரியும்.”
“இதுவும் தமிழ்தான். சொதந்திரமா யாருக்கும் அடிமையாக ஆகாத ஒங்க தாத்தா பாட்டிங்க பேசின, படிச்ச தமிழ்.”
“நீயே வெளக்கம் சொல்லு.” அவளிடம் திருப்பிக் கொடுத்தேன்.
“14ம் நூற்றாண்டில தமிழ்நாட்ட விஜயநகர அரசர்கள் ஆண்டுட்டிருந்தாங்க. அப்ப படைவீடுங்கிற பெரிய ஊரைச் சேர்ந்த ஆஸேஷ குலத்து பிராமிண்ஸ்லாம் ஒண்ணு சேர்ந்து, ஸ்ம்ருதிகளையெல்லாம் ரெஃபர் பண்ணி, ஒரு தீர்மானம் போட்டாங்க.”
“அதென்ன ஆஸேஷ குலம்?”
“இந்தியாவில ரிஷி ஒருத்தர வச்சு கோத்திரம் சொல்லுவாங்க. ஒரு கோத்திரத்தைச் சேந்த பல ஜாதிக்காரங்க ஒரே நிலப்பகுதிய சேர்ந்தவங்களா இருந்தாலோ, ஒரு சாமியக் கும்பிட்டோ, ஒரே தொழில்ல இருந்தாலோ, இல்லாட்டினா சில சடங்குகளை பொதுவா செய்றவங்கன்னா, அவங்கள்ளாம் ஒரே குலம்.
அந்த ஜாதிகள்லாம் வேறு வர்ணத்தைச் சேர்ந்தவையாகவும் இருக்கலாம். உதாரணமா, ஷத்திரிய, சூத்திர, பிராமண, வைசிய வர்ணங்களை சேர்ந்த வேறு வேறு ஜாதிகளாக இருக்கலாம். இல்லாட்டி, ஒரே வர்ணத்தை சேர்ந்த வேறு வேறு ஜாதிகளாக இருக்கலாம். அந்த வகையில, இவங்கள்லாம் ஆஸேஷ கோத்திரத்தைச் சேர்ந்த வேற வேற பிராமிண்ஸ் ஜாதிகள்.”
“என்ன தீர்மானம் போட்டிருக்காங்க?”
“கல்யாணம்னு செஞ்சா, கூட வேறு எந்தத் தானமும் இல்லாத கன்யாதான முறையில் மட்டுமே செய்யணும். ஏன்னாக்க, அர்ஷ முறை, தைவ முறை, ப்ரக்யாபதி முறை, காந்தர்வ முறை மாதிரி கல்யாண முறைகள் அந்த 14ம் நூற்றாண்டிலேயே இல்லாம ஆயிருச்சு. அப்ப இருந்த கல்யாண முறைகள்ல பணம் கொடுக்கணும்கிற மாதிரி பிற தானங்களும் சேர்ந்துருச்சு. எனவே, அந்த சீர்கேட்டை சரி செய்றதுக்காக புது சட்டம் கொண்டு வந்திருக்காங்க.
அடுத்ததா, கல்யாணத்துக்காக மாப்பிள்ளை வீட்டுக்காரங்களோ, இல்லை பொண்ணு வீட்டுக்காரங்களோ வரதட்சணை வாங்கினாங்கன்னா…”
“பொண்ணு வீட்டுக்காரங்களுமா …”
“ஆமாம். அது 14ம் நூற்றாண்டு. அப்போ வந்தேறினவங்க கிட்ட இருந்த மஹர் வாங்குகிற பழக்கம் தென்னிந்தியாவிலயும் பரவி இருக்கலாம். இல்லாட்டினா சீர், எதிர் சீர்னு நெறைய பண்ணி பிரச்சினைகள் வந்திருக்கலாம்.
உடனடியாக அந்தந்த சமூகத்தைச் சேர்ந்தவங்க சேர்ந்து ஆலோசிச்சு அவங்கவங்களுக்கான விதிகளை நிர்ணயிச்சிருக்கலாம். அப்படிப் போட்ட தீர்மானத்தில ஒண்ணுதான் இந்தக் கல்வெட்டாக இருக்கும்.”
“எங்கிருக்குது இந்தக் கல்வெட்டு?”
“இருங்க. பாத்துச் சொல்றேன்.”
தன் பெரிய ஜிப்பா பையை துழாவினாள். கிடைக்கவில்லை.
“அந்த பேப்பர் கட்ட கொடுங்க.”
அவளிடம் வாங்கிய அந்த காகிதக் கற்றைகளைத் தந்தேன். அவற்றை புரட்டினாள்.
“இதோருக்கு. வேலூர்ல மார்கபந்தீஸ்வரர் கோவில்னு ஒரு கோவில் இருக்காமே.”
“ஆமா. பெரிய கோயிலாக இருக்கும். கொஞ்சம் பளசு. கூட்டம் அவ்வளவா இருக்காது. அதனால வரும்படி கம்மியாத்தான் இருக்கும். அம்மன் கோயில்னு நெனைக்கிறேன்.”
“அந்தக் கோவிலோட ராஜகோபுரத்திக்குள்ளே இருக்கிற பல கல்வெட்டுக்கள்ல இது இரண்டாவது. ஆஸேஷ கோத்திர படைவீடு ராஜ்யத்தைச் சேர்ந்த வேற வேற ஜாதி பிராமிண்ஸ் எல்லாம் இந்த விதியைப் பின்பத்தணும்னு பிராமிண்ஸே ஜட்ஜ்மெண்ட் போட்டிருக்காங்க.”
“வேறு வேறு ஜாதின்னா?”
“படைவீட்டு ராஜ்யத்தில் இருக்கிற கன்னட, தெலுங்கு, குஜராத்தி, தமிழ் பிரிவுகளைச் சேர்ந்த பிராமிண்ஸ் எல்லாம் இந்த விதியை ஃபாலோ செய்யணும். அப்படி யாராவது பின்பத்தலைன்னா அவுங்க பிராமண குலத்த விட்டு ஒதுக்கப்படுவாங்க. தண்டிக்கப்படுவாங்க. அந்தத் தண்டனையை நிறைவேத்த வேண்டியது அப்போதைய ராஜாவான வீரப்ரதாப தேவராயரின் கடமை. அப்டின்னு கல்வெட்டுல செதுக்கி ஊரெல்லாம் பாக்கும்படி வச்சிருக்காங்க.”
“அதாவது குடிஜனங்க ஒரு க்ரூப்பா சேந்து போடுகிற தீர்ப்பை நிறைவேத்துறதுதான் அரசாங்கத்தோட வேலை. குடிஜனங்க அவங்களுக்கான சட்டங்கள அவங்களே உருவாக்கிருக்காங்க.”
“அப்படித்தான் இருந்திருக்காங்க.”
எனக்கு ஒன்றும் புரியவில்லை. கண்ணைக் கட்டி, யாரோ பிடித்துச் சுற்றிவிட்டபின் கிறுகிறுக்கும் நிலைதடுமாறிய குழப்ப உணர்வு. எரியாத விளக்கிற்கு இருட்டு அறையில் தீப்பெட்டி தேடுவது போல இருந்தது இவளோடு இந்தப் பேச்சு.
“மாப்பிளை வீட்டுக்காரங்க மறுசீர் கொடுக்கிற பழக்கம் இன்னும் இருக்கா என்ன?”
“ஆமா. உதாரணமாக, குஜராத்திகள்ட்ட, ராஜ்புத்திரர்கள்ட்ட இன்னமும் அந்த வளக்கம் இருக்கு. அந்த வளக்கத்துக்குப் பேருதான் ரொம்ப ஜோரா பொருத்தமா இருக்கும்.
பொண்ணு வீட்டில தர்றதுக்குப் பேரு வர விக்ரயா, மாப்பிள வீட்டில தர்றதுக்குப் பேரு கன்யா விக்ரயா !”
“விக்ரயா, விக்ரயான்னு பொண்ணையும் மாப்பிளையையும் விக்கிறானுங்க !”
ஆயிஷா சிரித்துவிட்டாள். “ரெண்டு பக்கமும் தந்திருக்காங்க. டௌரி மாதிரி பொண்ணு வீட்டுக்காரங்க மட்டும் மாப்பிள்ளை வீட்டுக்கு தர்ற மாதிரி இல்ல.”
“இதெல்லாம் இந்த பிராமின்ஸ்ங்க கொண்டு வந்ததும்மா.”
“அப்படிச் சொல்ரவங்கலும் இருக்காங்க. இதெல்லாம் இடைக்காலத்தில் வந்த வழக்கம் அப்டிங்கிறாரு ஸ்டான்லி தம்பையா. வேதகாலத்துல இல்லாத இதையெல்லாம் பிராமிண்ஸ் உண்டாக்கிட்டாங்க. அது மட்டுமில்லாமல், இந்த டௌரி வாங்கிற வளக்கத்த ஆஃபிரிக்காவுக்கும் ஏத்துமதி பண்ணி ஆஃபிரிக்க மக்களையும் கெடுத்துட்டாங்க இந்த பிராமிண்ஸ் அப்டிங்கிறாரு.
ஆனால், இந்த வர விக்ரயாவோ, கன்யா விக்ரயாவோ பெண்ணையோ, ஆணையோ விக்றது இல்லை. காசு கொடுத்து ஒரு பெண்ணை விலைக்கு வாங்குகிறா மாதிரி வாங்குவதை தன்னுடைய ஸ்மிருதியில் தடை செய்கிறார் மனு. தனக்கோ தனக்குத் தெரிஞ்சவுங்களுக்கோ ஏதோ ஒருவகையில் கிஃப்ட் கொடுத்து ஒருத்தன் ஒரு பிள்ளைய கல்யாணம் பண்ணிக்கிட்டா அது அசுர விவாகம்குது மனு ஸ்ம்ருதி. அதை எப்பவும் பண்ணக்கூடாதுங்குது. தடை விதிக்குது. ஆதரிக்கல.
அதனாலதான் ஸார் சொல்றேன். இந்த டௌரியெல்லாம் காலனியக் காலத்திலதான் வந்தது.”
“என்னமா, மறுபடியும் ஆரம்பிக்கிற. நம்மகிட்ட இருக்கிற தப்பையெல்லாம் நம்மள ஆண்டவம்மேல போடக்கூடாது.”
“கொக்கு மாதிரி இருக்கீங்க ஸார்.”
“புரியல. கொக்குக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு. சம்பந்தமில்லாமப் பேசுற.”
“கடலாலதான் இந்த சதுப்புக் குட்டை உருவாச்சுன்னு கொக்குக்குத் தெரியாது. அதுக்குத் தெரிஞ்சதெல்லாம் குட்டையில கெடைக்கிற நண்டுதான். அது மாதிரி, முன்னூறு ஐநூறு வருசமா முடிவெட்றதில இருந்து, ஜாக்கெட் சட்ட பேண்ட் வரை எல்லாத்தையும் மாத்தி எல்லாத்துக்கும் ரூல்ஸ் போட்டு நம்மளையெல்லாம் சீர்திருத்துறது கடமைச் சுமைன்னு இருந்துருக்கான் வெள்ளைக்காரன்.
அவனுக்கும் நீங்க உங்க பண்பாடுன்னு சொல்றதுக்கும் இருக்கிற சம்பந்தம் உங்களுக்குத் தெரியல. இப்போ நாம இந்த பீச்ல நடந்ததுக்கே மண்ணுல கால்த்தடம் பதிஞ்சிருச்சு. முன்னூறு வருசமா நம்மள கீள வச்சு அளுத்தி, அங்கங்க இருக்கிற வளக்கத்த மாத்தி, புது புது சட்டங்கள போட்டு, மிதிச்சு மிதிச்சு திணிச்ச கலாச்சாரம், மிதிபட்டவன் முதுகிலயும் மூளையிலயும் பதியாம காத்தோட மேலாக்கா பறந்திருக்குமா ?”
குழந்தை போல் பேசுவதைக் கேட்டு எரிச்சல் வந்தது.
“ஆதாரமில்லாமல் பழி போடக்கூடாதும்மா. வெள்ளைக்காரன் மட்டும் இல்லன்னா நமக்கு ட்ரெய்ன் கிடைச்சிருக்காது. ரோடு கிடைச்சிருக்காது. பஸ், லாரி தெரிஞ்சிருக்காது. கட்டவண்டியத்தான் டர்ரு டர்ருன்னு ஓட்டிட்ருப்போம். மங்கள்யான் விட்டிருக்கமாட்டோம். ஆவி வச்சு இட்லி சுட்றதுதான் ஸயன்ஸ்னு சொல்லிட்டிருப்போம். ஏன், இந்தியான்னு ஒரு நாடே இருந்திருக்காது.”
“கக்கூஸ் அள்ற சாதிகளும் இருந்திருக்காது. சேரிகளும் இருந்திருக்காது. டௌரியும் இருந்திருக்காது.”
“அதுக்காக ஒரேயடியா இந்தியாவ மட்டமாப் பேசாதம்மா. நாம பின் தங்கி இருந்தோம். ஆனாலும், நம்ம இனத்துக்கிட்ட இருந்தது உசந்த கலாச்சாரம்மா. அட் லீஸ்ட் தமிழ்நாட்ல இதெல்லாம் கெடையாது.”
“இந்தியாவில இல்ல சார். ஐரோப்பாவில நடந்த விஷயங்கள் இதெல்லாம். ஒரு நிமிசம் ஒங்க ஃபோனக் குடுங்க.”
இப்போது எதற்கு ஃபோனை கேட்கிறாள் ?
கொடுத்தேன்.
“ஹலோ, அட்வகேட் சார் இருக்காரா? அவர்ட்ட கொடுங்க.”
மறுபக்கம் யார் என்று கேட்டார்கள் போல் இருக்கிறது.
“ நாந்தான் ஆயிஷா. ஜீவனாம்ஸ கேஸ். ஸார் இருக்காரா?”
“தெரியுங்க. அதான் கூப்ட்டேன். இன்னைக்கு ஜட்ஜ்மெண்ட் தருவாங்களா, இல்லைன்னா தள்ளிப்போடுவாங்களான்னு தெரியல. அதான், ஸாரே நான் வரவேண்டாம்னு சொல்லிட்டாரு. அவரே முடிவ சொல்றேன்னு சொன்னாரு. எங்கிட்ட ஃபோன் இல்லைங்கிறதால, நானே ஃபோன் பண்றேன்.”
மறுபக்கம் ஏதோ சொல்கிறார்கள்.
“அவரு கோர்ட்ல இருக்கும்போது கூப்பிட்டு டிஸ்டர்ப் பண்ண வேணாம்னுட்டுத்தான் உங்கள கூப்பிட்டேன். சரி, அவர்ட்ட நான் கூப்பிட்டதை சொல்லுங்க. தேங்க்ஸ். பை.”
“இந்தாங்க சார்”. செல்ஃபோனை வாங்கிக்கொண்டேன்.
“இப்படி உங்க ஃபோனை நான் ஓஸியிலயே யூஸ் பண்ணிட்ருக்கேன். தேவையில்லாமல், உங்களுக்குத்தான் செலவு.”
“இதெல்லாம் ஒரு செலவாம்மா. அட்வகேட் ஆபீஸ்ல என்ன சொன்னாங்க?”.
“அவங்களுக்கு வெவரம் தெரியல. அவரே உங்க ஃபோனுக்குக் கூப்பிடுவார்னு நெனைக்கிறேன்.”
“அப்ப ஜீவனாம்ஸம் வந்தவுடனே, என் ஸெல்ஃபோன நீங்க ரெண்டு பேரும் யூஸ் பன்றதுக்கு வட்டியும் முதலுமா சேத்து வாங்கிக்கறேன்.”
ஆயிஷா மையமாகப் புன்னகைத்தாள்.
“எவ்வளவு கேப்பிங்க?”
“நீதாம்ம ரேட்டு சொல்லணும். எத்தினி ரூவா ?”
சடாரென்று பின்னால் யாரோ ஓடி வருவது போல் வருவது. அந்த போலிஸ்காரர்களில் ஒருவர் பெஞ்சுக்குப் பின்பக்கம் இருந்து, லத்தியை தூக்கிக் கொண்டு ஓடிவந்தார்.
“தாயாளி. ரேட்டாடா கேக்குற ரேட்டு. யார்றா நீ?”
கத்திக்கொண்டே அவர் வீசிய லத்தி, ஃப்ஸ்ஸ்ஸ்க் என்கிற சத்தத்துடன் என்னை நோக்கிக் கீழிறங்கியது.
~oOo~
1. http://news.bbc.co.uk/2/hi/uk_news/8093948.stm
2. 14ம் நூற்றாண்டு தொல்லியல் ஆதாரத்தின்படி, மும்பையானது ‘பிம்பிஸ்தான்’ என்று அழைக்கப்பட்டு இருக்கிறது. (பார்க்க: http://timesofindia.indiatimes.com/city/mumbai/Mumbai-is-Bimbasthan-in-12th-century-tablet/articleshow/53216787.cms) உப்பு தயாரிக்கும் ஜாதியான ‘அக்ரி’ மற்றும் மீனவர்களான ‘கோலி’களின் குலதெய்வம் ‘மும்பா தேவி’. அவளது அருளால் 1348வரை ஹிந்து அரசர்களின் கையில் இருந்தது மும்பை. ஆக்கிரமிக்க முயன்ற டில்லி சுல்த்தான்களுடனான போரில் அரசர் நாகரதேவ் 1348ல் மரணாமடைந்தார். அவரது மனைவியும் போரில் இறாங்கி வீர சுவர்க்கம் எய்தினார். (மும்பை கெஸட்: https://www.maharashtra.gov.in/english/gazetteer/greater_bombay/volume1.html). ஹிந்து அரசரிடம் இருந்த மும்பை தில்லி சுல்தானின் கைவசம் போனது. தில்லி சுல்தான்களிடம் இருந்து குஜராத் சுல்த்தான்களின் வசம் சென்றது. 1526–1537களில் குஜராத் சுல்த்தானாக இருந்தவர் பஹதூர் ஷா. மாஹிமில் இருந்த அவரது கோட்டையை பிடித்த போர்ச்சுக்கீசியர்களை பஹதூர் ஷா எதிர்க்கவில்லை. அப்போதைய முகமலாய அரசரான ஹுமாயூனுடன் போரில் இருந்த அவர் இன்னொரு போரை விரும்பவில்லை. 1534ல் போர்ச்சுக்கீசியர்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு மும்பை தீவுகளை குத்தகைக்கு விட்டார். 1535ல் போர்ச்சுக்கீசியர்கள் மும்பை தீவுகளை தங்களுடையதாக அறிவித்து விட்டனர். மும்பையைப் பெற்ற போர்ச்சுக்கீசிய அரசு கப்பல் வணிகத்தின் மூலம் பெரும் பொருளாதார வளர்ச்சியைப் பெற்றது. போர்ச்சுகலின் அரசியான கேதரின் (https://en.wikipedia.org/wiki/Catherine_of_Braganza), இத்தகைய வளமை தரும் மும்பையை வரதட்சணாயாகத் தந்து இங்கிலாந்தின் இரண்டாம் சார்ல்ஸை திருமணம் செய்துகொண்டார்.
3. “In Babylonia the bride price almost always became part of the dowry. Depending on social status, the bride price could represent a significant transfer of wealth—perhaps a house and several acres of land— but at the bottom of the economic ladder it might have been little more than an item of furniture or some kitchen utensils. Whatever it was it was, it became part of the new household’s assets and as such was administered by the husband, but legally it had to be kept separate for it was designed for the support of the wife and her children. – Women in Babylonia Under the Hammurabi Law (pg. 151-152) (http://www.womenintheancientworld.com/hammurabilawcode.htm)
4. ”They (these ancient Indian people) make their marriages accordance with this principle, for in selecting a bride they care nothing whether she has a dowry and a handsome fortune, but look only to her beauty and other advantages of the outward person.”
“They [Indian women] marry, neither giving or receiving any dowry, but the fathers bring forward the girls who are of marriageable age and station them in a public place for the man who wins the prize for wrestling, boxing or running, or who has been adjudged winner in any manly contest, to make his choice.” ~ Ancient India as described by Arrian (http://www.shsu.edu/~his_ncp/Indica.html)
5. “The implements of the wedding rejoicings are brought forward. No gift (dower or dowry) is settled between them. The man gives only a present to the wife, as he thinks fit, and a marriage gift in advance, which he has no right to claim back, but the (proposed) wife may give it back to him of her own will (if she does not want to marry).” ~ Al-Biruni, Chapter on Matrimony in India, about 1035 AD
6. “If one marries, either knowingly or unknowingly, a pregnant (bride), the child in her womb belongs to him who weds her, and is called (a son) received with the bride (Sahodha).” ~ Manu Smriti 9.173
7. ஒரு பெண் என்பதால் ஆயிஷா நாசுக்காக இந்த அரேபிய சட்டத்தைப் பற்றிச் சொல்லி இருக்கிறாள். அந்த சட்டம் பற்றிய விவரம் கீழே:
Abu Dawud 11:2126
Narrated Basrah:
A man from the Ansar called Basrah said: I married a virgin woman in her veil. When I entered upon her, I found her pregnant. (I mentioned this to the Prophet). The Prophet (peace_be_upon_him) said: She will get the dower, for you made her vagina lawful for you. The child will be your slave. When she has begotten (a child), flog her (according to the version of al-Hasan). The version of Ibn AbusSari has: You people, flog her, or said: inflict hard punishment on him.
8. விரிஞ்சிபுரம் கல்வெட்டு. (http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume_1/virinchipuram.html)
9. திருவண்ணாமலை மாவட்டம், போலூர் தாலுகாவைச் சேர்ந்த ஊர் படைவீடு.
10. “Bridewealth and Dowry” by Jack Goody and Stanley Jeyaraja Tambiah. ஸ்டான்லி தம்பையாவின் இந்தக் கருத்து தவறானது என்று ஆதாரபூர்வமாகப் பலர் நிரூபித்து விட்டார்கள். பார்க்க: An Alternative Term for “Bride-Price.” By E.E. Evans-Pritchard, மற்றும் Women’s Worth: A Western Misconception By Caroline Jones (http://digitalcommons.unl.edu/cgi/viewcontent.cgi?article=1161&context=nebanthro), மற்றும் Marriage Payments: a fundamental reconsideration (http://escholarship.org/uc/item/6mv253zb).
11. Manu smriti: “When (the bridegroom) receives a maiden, after having given as much wealth as he can afford, to the kinsmen and to the bride herself, according to his own will, that is called the Asura rite.” (3.31) “But in these (Institutes of the sacred law) three of the five (last) are declared to be lawful and two unlawful; the Paisaka and the Asura (rites) must never be used.” (3.25) (http://www.sacred-texts.com/hin/manu/manu03.htm)
கவர்ச்சிகரமாக எழுதப்பட்ட இந்தப் படைப்பு பல புதிய தகவல்களைத் தருகிறது. இத்தனை நாட்களாக நாம் அவமானத்துடன் வெட்கித் தலைகுனிந்து இருந்த வரதட்சணை நம் தவறு இல்லை, வெறும் பொய் என்பதை அறிந்த போது இன்ப அதிர்ச்சியை உண்டாகியது. வரதட்சணைக் கொடுமையை அழிக்க இந்தக் கதை உதவிகரமாக இருக்கும்.
பலமற்ற போலி குற்றச்சாட்டு நூற்கண்டுகள் நம்மை எதோ சங்கிலி போல் பிணைத்திருக்கின்றன. அதை அறுத்தெறிந்துவிட்டது இந்தக் கதை.