குழந்தைகளோடு ஒரு புகைப்படம்
ஒரு குழந்தை ஒரு திசையை நோக்கியிருக்கும்.
அதைச் சரி செய்வதற்குள் இன்னொரு குழந்தை இன்னொரு திசையை நோக்கிய படி இருக்கும்.
ஒரு குழந்தை அழும்.
அதனைச் சமாதானப்படுத்துவதற்குள் இன்னொரு குழந்தை அழும்.
ஒரு குழந்தை கோணல் மாணலாய் நிற்கும்.
அதை நிமிர்த்துவதற்குள், அடுத்து ஒரு குழந்தை வரிசையை விட்டு ஓடிப் போகும்.
ஒரு குழந்தை விழிகளை மூடிக் கொண்டிருக்கும்.
எங்கே தூங்கி விடுமோ என்று அதை எழுப்ப வேண்டியிருக்கும்.
ஒரு குழந்தை மறைந்திருக்கும் ஒரு குழந்தையின் பின்.
மற்றொன்று மறைத்திருக்கும் இன்னொன்றை.
குழந்தைகளை வரிசையில் நிறுத்தி புகைப்படம் எடுப்பதற்குள் போதும் போதுமென்றாகி விடும்.
ஒரு வகையாய் குழந்தைகளோடு சேர்ந்தெடுத்த புகைப்படத்தைப் பார்த்த போது குழந்தைகள் குழந்தைகளாய்த் தெரியும்.
யாரும் வரிசையில் முன் நிறுத்தியது போல் நிற்பது போல் இல்லை.
நல்ல வேளை!
(நினைத்திருந்தாலும் நினைத்திருக்கலாம் நான்)
புகைப்படம் எடுக்கும் சமயத்திற்குள் குழந்தைகள் பெரியவர்களாய் வளர்ந்து விடவில்லை!
– கு.அழகர்சாமி