நான் சமீப காலமாக காடுகளில்தான் அதிக நேரம் செலவழிக்கிறேன். அல்லது காடுகளைப் பற்றித்தான் எந்த நேரமும் சிந்தனை. நகரங்களில் மனிதர்களைத் தேடுவதை விட காடுகளில் விலங்குகளைத் தேடுவது எளிதாக உள்ளது (ச்சே….எப்படி முரளி ??? தெரியலீங்க. ஒரு ஃப்ளோவில அதுவா வந்துருச்சு )
நாம் யாரையாவது திட்டும்போது ” என்னடா மிருகம் மாதி நடக்கிறாய் ” என்று சொல்கிறோம் – ஆக்சுவலாக அது ஒரு பாராட்டு வார்த்தை என்பது புரியாமலேயே . காரணம்:
மிருகங்கள் பசித்தாலேயொழிய மற்ற விலங்குகளைத் துன்புறுத்துவதில்லை. தனக்கோ தனது குட்டிகளுக்கோ ஏதேனும் ஆபத்து என்று தெரிந்தாலேயொழிய அது ஆக்ரோஷமாவதில்லை. நெஞ்சில் வஞ்சம் வைத்து பழி வாங்குவது கிடையாது. எப்படா மற்ற விலங்குகளைக் காலை வாரி விடுவோம் என்று காத்திருப்பதில்லை. தேவைக்கு அதிகமாக சொத்து (உணவு ) சேர்த்து வைப்பதில்லை. துரத்தி துரத்தி ரேப் பண்ணுவது கிடையாது. சொல்லிக் கொண்டே போகலாம்.
கடந்த 20 வருடங்களில் நான் கென்யா காடுகளில் சந்தித்த அனுவங்கள் ஏராளம். அதில் சில மெய் சிலிர்க்க வைக்கக்கூடியவை. சில நம்ப முடியாதவை. சில அனுபவங்கள் என்னை நடுங்க வைக்கின்றன. அதையெல்லாம் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட ஆசை. அதன் ஒரு முன்னோட்டமே இந்த டைரி.
நான் இங்கு வந்த புதிதில் ஒரு முறை நைரோபி நேஷனல் பார்க் சென்றிருந்தேன். அங்கிருந்த ஒரு சிறு பாறையில் ஒரு சிறிய பறவை ஒன்றைப் பார்த்தேன். மீன் கொத்திப் பறவை என்று ஞாபகம். அதை காரில் உட்கார்ந்து கொண்டே ஃபோகஸ் செய்ய முயற்சித்தேன். அது அசைந்து கொண்டே இருந்ததால் ஃபோகஸ் பண்ண முடியவில்லை. வருவது வரட்டும் என்று காரை விட்டு இறங்கி மிகவும் மெதுவாக என்னுடைய ட்ரைபாடை செட் பண்ணினேன். என்னுடைய நேரம், அது என்னுடைய கார் இருந்த இடத்தில் இருந்து முன்னே சென்று கொண்டே இருந்தது. ஒரு இடத்தில் அது கொஞ்ச நேரம் உட்கார்ந்தது போல் இருந்தது. மறுபடியும் ஃபோகஸ் செய்ய ஆரம்பித்தேன். அப்போது லேசாக உஸ் உஸ் என்று ஒரு சப்தம் கேட்டது. முதலில் நான் அதைக் கண்டு கொள்ளவில்லை. நான் தொழிலே கண்ணாயிரம் என்றிருக்க மறுபடியும் உஸ் உஸ் என்று கொஞ்சம் சத்தமாகவே கேட்டது . பாம்பு ஏதேனும் அருகில் வந்து விட்டதோ என்று ஒரு நிமிடம் பயந்து போய் திரும்பினேன்.
பார்த்தால், பார்க்கைச் சேர்ந்த செக்யூரிட்டி காவலர்கள் ஒரு நாலு பேர் ஒரு காரில் பதட்டத்தோடு நின்று என்னைப் பார்த்து சைகையில் காரில் ஏறும்படி சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஏதோ பிரச்சினை என்று புரிந்து கொண்டு உடனே காரில் ஏறி விட்டேன். காரில் ஏறிய பின்புதான் கவனித்தேன், காருக்கு அந்தப் புறம் இரண்டு சிங்கங்கள் உட்கார்ந்து ஒரு மானை அடித்து சாப்பிட்டுக் கொண்டே என்னை ஒரு லுக் விட்டுக் கொண்டிருந்தன. ஆடிப் போய் விட்டேன். எனக்கும் அவற்றிற்கும் ஒரு பத்தடி தூரம் மட்டுமேயிருந்தன. நான் காரில் ஏறியதுதான் தாமதம். அந்த செக்யூரிட்டி மக்கள் என்னை கன்னா பின்னாவென்று திட்ட ஆரம்பித்து விட்டார்கள். நான் ஊருக்குப் புதிது என்றதும், இனிமேல் காரை விட்டு வெளியே வரக் கூடாது என்று ஒரு வார்னிங் மட்டும் கொடுத்து விட்டுப் போய் விட்டார்கள். மரணத்தை மிகவும் அருகில் போய் எட்டிப் பார்த்து விட்டு வந்தது போல் இருந்தது. மறக்க முடியாத அனுபவம்.
2008 – இல் மசை மாரா சென்றிருந்தோம். காலை 6.30 மணிக்கு அதிகாலை சஃபாரி கிளம்பினோம் . எங்கள் ஹோட்டலில் இருந்து ஒரு 2 (அ) 3 கி.மீ. தான் போயிருப்போம். ஒரு பெண் சிறுத்தையைப் பார்த்தோம். ஒரே டென்ஷனுடன் அங்கும் இங்கும் அலைந்து கொண்டேயிருந்தது. அதன் தவிப்பு மிகவும் வித்தியாசமாக இருந்தது. ஏதோ ஒரு பெரிய ஆக்க்ஷன் காத்திருக்கிறது என்று தோன்றியதலால், காரை நிறுத்தி விட்டு அங்கும் இங்கும் பார்வையை மிதக்க விட்டோம். நினைத்தது போலவே, ஒரு சிங்கக் கூட்டம் அருகில் உள்ள புதர் ஒன்றில் ரிலாக்ஸ்டாக உட்கார்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தோம்.
அதில் ஒரு ஆண் சிங்கம், அவ்வப்போது அந்த சிறுத்தையை ஒரு துரத்து துரத்தும். சிங்கம், சிறுத்தையின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாதலால், கொஞ்சம் தூரம் துரத்தி விட்டு திரும்பி விடும். சிறுத்தையும் திரும்ப அதே இடத்திற்கு சுத்தி சுத்தி வரும். இந்த விளையாட்டு கொஞ்ச நேரத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறது.
எங்களுக்கு கொஞ்ச நேரத்திலேயே புரிந்து விட்டது – சிறுத்தையின் குட்டிகள் அந்த சிங்கக் கூட்டத்திடம் மாட்டிக் கொண்டு விட்டன என்று. வருவது வரட்டும் என்று காரை அந்தப் புதரின் அருகில் கொண்டு சென்றோம். அந்தக் கொடூரமான காட்சியை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. அங்கு 4 சிங்கங்கள், பிறந்து சில மாதங்களே ஆகியிருக்கும் அந்த சிறுத்தையின் 3 குட்டிகளை கொன்று சின்னா பின்னம்மாக்கி வைத்திருந்தன. அந்தக் குட்டிகள் அனைத்தும் ரொம்ப சிறியவை என்பதால், அவற்றில் தின்பதற்கு எதுவும் இல்லை. எனவே அவற்றை கொன்று வெறுமனே கிழித்து மட்டும் வைத்திருந்தன. பார்க்கக் கண்றாவியாக இருந்தது. அதை அந்தச் சிறுத்தையிடம் எப்படிப் புரிய வைப்பது என்பது புரியாமல், கனத்த இதயத்துடன் அந்த இடத்தை விட்டு அகன்றோம்.
அன்று மாலை எங்கள் சஃபாரி எல்லாம் முடித்து விட்டு ஹோட்டலுக்குத் திரும்பும் வழியில் அந்தச் சிறுத்தையை மறுபடியும் அதே இடத்தில் பார்த்தோம். அந்த சிங்கக் குடும்பமும் நகராமல் வீம்புக்காக அதே இடத்தில் இருந்தன. தன் குட்டிகளுக்கு ஏதோ ஆகி விட்டது என்று அந்தச் சிறுத்தை பதை பதைப்புடன் அந்த இடத்தைச் சுற்றி சுற்றி வந்தது எங்கள் அனைவரையும் கண் கலங்கச் செய்து விட்டது.
காடுகளிலும் கண்ணீர்க் கதைகள் ஏராளம் உண்டு என்று என்னை உணர வைத்த அந்த நாள்….வாழ்க்கையில் மறக்க முடியாது.
சில வருடங்களுக்கு முன்னால் அம்போசலி நேஷனல் பார்க் சென்றிருந்தோம் ( இது நான் அடிக்கடி செல்லும் பார்க் ) . உள்ளே மெதுவாக காரைச் செலுத்திக் கொண்டிருந்தேன் – ஏதாவது மாட்டாதா என்று ( ஹலோ ..ஹலோ …..நான் சிங்கத்தைச் சொன்னேன் . தப்பா நெனச்சுக்காதீங்க ). ஆசைப்பட்டது போலவே கொஞ்ச தூரத்திலேயே ரோட்டின் வலது பக்கத்தில் ஒரு பெண் சிங்கம் பதுங்கிப் பதுங்கி ரோட்டின் அந்தப் புறத்தில் இருந்த ஏதோ ஒன்றை குறி வைத்து நகர்ந்து கொண்டிருந்தது . ஆகா , நமக்கு ஒரு துரத்தல் அல்லது சாவடி ஷாட் கிடைக்கப் போகுது என்று உற்சாகமாய் கேமராவை எடுத்துத் தயார் செய்தேன்.
பார்த்தால் ரோட்டின் அந்தப் புறத்தில் இருந்தது ஒரு சிறிய மான் குட்டி. எங்களுக்கோ ஹார்ட் பீட் உச்சத்துக்குப் போய் விட்டது. “பெருமாளே இந்த மான் குட்டியை எப்படியாவது காப்பாற்றி விடு ” என்று என் மனைவி வாய் விட்டே பிரார்த்தனை பண்ண ஆரம்பித்து விட்டாள். எனக்கு “எப்படியாவது இந்த கில்லிங் ஷாட் கிடைத்து விட வேண்டுமென” பிரார்த்தனை செய்வோமா என்று குரூரமாக ஒரு எண்ணம் தோன்றி மறைந்தது ( ” மழை வர வேண்டுமென விவசாயி பிரார்த்திக்கிறான். மழை வரக் கூடாதென்று கூத்தாடி பிரார்த்திக்கிறான். எது நடந்தாலும் சரி , இறைவனுக்கு இரண்டு தேங்காய்கள் – கண்ணதாசன் ).
அந்தப் பொல்லாத பெண் சிங்கம் ஊர்ந்து ஊர்ந்து ரோட்டைக் கடந்து அந்தப் புறம் சென்றது. அந்தச் சிங்கத்தைப் பார்த்தவுடன் அந்த மான் குட்டி சிட்டாகப் பறந்து விடப் போகிறது என்று எதிர்பார்த்த எங்களுக்கு பெரிய ஏமாற்றம். தன்னுடன் அந்த சிங்கம் விளையாடத்தான் வருகிறது என்று நினைத்து “க்விக்…க்விக் ” என்று வினோதமான ஒரு சவுண்டைக் கொடுத்துக் கொண்டே அந்த சிங்கத்தை நோக்கி வருவதும், சுற்றி சுற்றி ஓடுவதுமாக விளையாட ஆரம்பித்து விட்டது. எங்களுக்கோ ஒரே டென்ஷன். என் மனைவி டென்ஷனின் உச்சத்திற்கு சென்று, வாய் விட்டே ” அட சனியனே….. ஓடிப் போய்த்தொலை …அது உன்னைக் கொல்லப் போகுது” என்றாள் பதட்டத்துடன். நான் “சும்மா இருடி , இதுதான் காட்டில் வாழ்க்கை. அதில் நாம் தலையிடக் கூடாது ” என்றேன்.
இவர்கள் யாரைப் பற்றியோ பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று அந்த மான் குட்டி எங்களை கொஞ்சமும் சட்டை செய்யாமல் அந்த சிங்கத்தைச் சுற்றி வந்து விளையாடிக் கொண்டிருந்தது.
அதன் சிறிய உருவத்தைப் பார்த்ததாலோ, இல்லை, கொஞ்சமும் எதிர்பாராமல் அதுவே தன்னிடம் வரும் என்று எதிர்பார்க்காதலாலோ அந்த சிங்கம் கொஞ்சம் தடுமாறி (???)
“இதற்குத்தான் ஆசைப்பட்டாயா பாலகுமாரா ?” என்று சோர்ந்து போய் உட்கார்ந்து விட்டது.
உட்கார்ந்தது மட்டுமல்லாமல், ஒரு ஐந்து நிமிடம் அந்த மான் குட்டியின் விளையாட்டை ரசிக்க ஆரம்பித்து விட்டது. என் மனைவிக்கு அப்போதுதான் போன உயிர் திரும்ப வந்து. ஒரு பெரிய நிம்மதியுடன் இந்த நாடகம் முழுவதையும் வீடியோ எடுக்க ஆரம்பித்து விட்டாள். அந்த சிங்கம், என்ன நினைத்ததோ.. கொஞ்ச நேரத்தில் “ச்சே வட போச்சே ” என்று வந்த வழியில் திரும்பி நடக்க ஆரம்பித்து விட்டத்து . நானும் அதே ” வட போச்சே ” ஃபீலிங்க்கில், அது சோகத்துடன் நடந்து போவதை சோகத்துடன் படம் எடுக்க ஆரம்பித்தேன்….
” மனித வாழ்வில், கருணை என்பது வெறும் கிழங்கின் பெயராகவே மிஞ்சி இருகின்றது ” என்று புதுமைப் பித்தன் எழுதியது ஏனோ ஞாபகத்திற்கு வந்தது.
ஒரு முறை சால்ட் லிக் (Salt Lick) என்னும் ஒரு நேஷனல் பார்க் சென்றிருந்தோம். அது ஒரு சிறிய வனவிலங்கு பூங்கா (கன்ஸர்வன்சி). மிகவும் அழகாயிருந்தது. அதன் அழகில் மயங்கி காரை மெதுவாக ஓட்டிக் கொண்டிருந்தேன். என் மனைவி, தூரத்தில் ஒரு ஒத்தை ஆண் யானையைப் பார்த்து விட்டு என்னை காரை நிறுத்தச் சொன்னாள். ஒத்தை யானை என்றவுடன், நான் நிறுத்த மனசில்லாமல், பிரேக்கை மட்டும் அழுத்திக் கொண்டு என்ஜினை ஆஃப் பண்ணாமல் வண்டியை நிப்பாட்டினேன். என் மனைவி அந்த யானையை வீடியோ எடுக்க ஆரம்பித்தாள். நான், விரைவாக எடு. ஒத்தை ஆண் யானை ரொம்ப டேஞ்சரஸ் என்றேன். நான் அதை சொல்லி முடிப்பதற்குள் அந்த யானை எங்களைத் துரத்த ஆரம்பித்து விட்டது.
நான் ஓரளவிற்கு அதை எதிர்பார்த்திருந்ததால், வண்டியை உடனே கிளப்பி ஆக்சிலேட்டரை மிதியோ மிதியென்று மிதிக்க ஆரம்பித்தேன். அது வாழ்விற்கும் சாவிற்கும் இடையேயான ஒரு போராட்டமாக இருந்தது. அந்த யானையும் எங்களை கிட்டத்தட்ட ஒரு 3 கிலோ மீட்டருக்கு துரத்தி வந்து. நான் விடாமல் ஆக்சிலேட்டரை மிதித்ததில் , அந்த யானை கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கியது. எங்கள் மூவருக்கும் அப்போதுதான் மூச்சு சீராக வர ஆரம்பித்தது.
அது மறையத் தொடங்கி கொஞ்சம் தூரத்தில், சொன்னால் நம்ப மாட்டீர்கள்…எங்கள் கார் பிரேக் டவுனாகி நின்று விட்டது…..வாழ்க்கையில் நான் என் வசமிழந்து டென்ஷனான தருணமது.
கிட்டத்தட்ட அதே அனுபவம் சென்ற வருடம் ஒலேடன் ஏரிக்குள் கிடைத்தது. புகைப்படம் எடுப்பதற்காக ஏரிக்குள் படகில் சென்று கொண்டிருந்தேன். ஒரு நீர்யானைக் கும்பலைப் பார்த்தும், படகை நிறுத்தச் சொல்லி புகைப்படம் எடுக்க ஆரம்பித்தேன். படகின் எஞ்சின் ஆன் ஆகியிருந்ததால் , ஆடிக் கொண்டேயிருந்தது. என்னால், நிதானமாக ஃபோகஸ் பண்ண முடியவில்லை. உடனே படகோட்டியை என்ஜினை ஆஃப் பண்ணச் சொன்னேன் ( நேரம் …).
அவனும் ஆஃப் பண்ணி விட்டான். ஒரு நாலைந்து புகைப்படங்கள்தான் எடுத்திருப்பேன். அதில் இருந்த ஒரு ஆண் ஹிப்போ , தட தடவென்று எங்களை நோக்கி ஓடி வர ஆரம்பித்து விட்டது.
நான் உடனே என்னுடைய படகோட்டியிடம் கிளம்புடா கிளம்புடா என்றேன். அவன் ரொம்பவும் நிதானமாக ” Do you Want to attack us … Do you Want to attack us ? ” என்று அந்த ஹிப்போவிடம் வசனம் பேச ஆரம்பித்து விட்டான். எனக்கோ செம கோபம். பேசாமல் இவனைத் தள்ளி விட்டு விட்டு நாம் மட்டும் கிளம்பி விடுவோமா என்று கூட யோசித்தேன்…
கடைசியில் அந்தா இந்தா என்று அந்தா ஹிப்போவிடம் இருந்து தப்பிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.
இன்னொரு கொடூர அனுபவம் அம்போஸலியில் கிடைத்தது. அந்த முறை எங்கள் சஃபாரி அனைத்தையும் முடித்து விட்டு பார்க்கை விட்டு கிளம்பினோம். முகப்பு நுழைவாயிலை விட்டு ஒரு அரை கிலோ மீட்டர் வந்திருப்போம். நடு ரோட்டில் ஒரு குள்ள நரி , ஒரு சிறிய வெள்ளாடு ஒன்றைக் கொன்று வயிற்றில் கடித்துக் கொண்டிருந்தது. நான் உடனே காரை விட்டு இறங்கி என்னுடைய கேமராவில் 150 -500 mm லென்ஸை மாட்டி நிதானமாக அந்தக் காட்சியை புகைப்படம் எடுக்க ஆரம்பித்தேன். வெவ்வேறு செட்டிங்கில் ஒரு 20 படங்கள் எடுத்திருப்பேன். அதற்குள், அந்த நரி , அந்த வெள்ளாட்டின் குடலை மொத்தமாக வெளியே உருவ ஆரம்பித்து விட்டது. அதையும் படம் பிடித்தேன். ஒரு கட்டத்தில் அந்தக் குடல் முழுவதுமாக வெளியே வர சற்றே திணறியதலால், நரி வெடுக் வெடுக்கென்று அந்தக் குடலை இழுத்தது. அதையும் படம் பிடித்தேன். அந்த சமயத்தில்தான் நான் கொஞ்சமும் எதிர்பார்க்காமல், அந்த ஆட்டுக்குட்டி தன் தலையைத் தூக்கி என்னை ஒரு பார்வை பார்த்து விட்டு மறுபடியும் தலையைச் சாய்த்தது. அப்போதுதான் அந்த ஆடு இன்னும் உயிரோடு இருப்பதே எனக்குத் தெரிய வந்தது . ஒரு நிமிடம் ஆடிப் போய் விட்டேன். அதிலும் அது என்னைப் பார்த்த பார்வை …” அடே கிராதகா ….உன்னுடைய பாழாய்ப் போன கேமராவை விட்டு விட்டு இந்த நரியை விரட்டி விட்டிருந்தாயானால் நான் உயிர் பிழைத்திருப்பேனேடா , படு பாவி ” என்று சொல்வது போலவே இருந்தது.
நான் கொஞ்சமும் தாமதிக்காமல் , கேமராவை அங்கேயே விட்டு விட்டு, கையில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு அந்த நரியை விரட்டி விட்டு , அந்த ஆட்டுக் குட்டியின் தலையைத் தூக்கி கொஞ்சம் தண்ணீர் புகட்டினேன். அது ஒரு இரண்டு மூன்று மிடறு குடித்து விட்டு தன் உயிரை விட்டது. என்னுடைய வாழ்க்கையில் கொடூரமான நாட்களில் அதுவும் ஒன்று. நான், என் மனைவி , என் மகள் மூவரும் அடுத்த ஒரு வாரத்திற்கு அதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தோம். யாருக்கும் தூக்கமே வரவில்லை.
இது போன்ற சம்பவங்கள் ஒரு புகைப்படக் கலைஞனுக்கு எப்போதுமே ஒரு சவால். காட்டின் சுழற்சியைத் தடுக்காமல் விட்டு விடுவதா, இல்லை ஒரு உயிரைக் காப்பாற்றுவதா இல்லை இது போன்ற காட்சிகளைப் படம் பிடிப்பதா ?????? எனக்குத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள் நண்பர்களே .
சரி விஷயத்திற்கு வருகிறேன் ( அப்படின்னா இன்னும் மெயின் மேட்டருக்கே வரவில்லையா ???? வெளங்குச்சு…..)
எழுத்தாளர் ஜெயமோகன் தன்னுடைய “யானை டாக்டர்” கதையில், தான் சென்ற வனங்களில் உள்ள சுற்றுலா தலங்களில், மக்கள் ஏன் தேவையில்லாத கோபங்களோடு, சத்தமாக சில கெட்ட வார்த்தைகளை உச்சரித்துக் கொண்டே பியர் பாட்டில்களையும், பிராந்தி பாட்டில்களையும் அருகில் உள்ள பாறைகளில் உடைத்து எறிகிறார்கள் என்று தனக்குப் புரிந்ததேயில்லை என்கிறார். நானும் பார்த்திருக்கிறேன். அவர்கள் யாவருக்கும் அதன் பின் விளைவுகள் புரிவதேயில்லை. நிறைய காட்டு விலங்குகள் அவற்றை மிதித்து சாகின்றன. நிறைய கேஸ்கள் வன விலங்கு அதிகாரிகளுக்குத் தெரிய வருவதேயில்லை. அநியாயம்.
இந்தியாவோடு ஒப்பிடுகையில் கென்யா எவ்வளவோ தேவலை. இங்குள்ள காடுகள் அவ்வளவு மோசமில்லை. இங்குள்ள குளிர் பான பாட்டில்களும், சிப்ஸ் பாக்கெட்டுகளும் நம் இந்தியர்கள் விட்டுப் போகும் அடையாளங்கள். வெளி நாட்டவர்கள் யாரும் நொறுக்குத் தீனி எடுத்துக் கொண்டு காட்டுக்குள் செல்வதில்லை – எனக்குத் தெரிந்தவரை…
எது எப்படியோ…
என்னுடைய புகைப்பட நண்பர்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள். நாம் நம்முடைய சிறந்த படைப்புகளை ஃபேஸ்புக்கில் போட்டு திருப்தி அடைவதுடன் மட்டுமே நின்று விடாமல், எவ்வெப்போது முடிகிறதோ அப்போதெல்லாம் நம்முடைய வனங்களில் உள்ள சுற்றுலா தலங்களுக்குச் சென்று வனங்களைப் பற்றிய, வன விலங்குகளைப் பற்றிய விழிப்புணர்வு முகாம்கள் நடத்துவோமா – ப்ளீஸ் ?
நீங்கள் சரியென்று சொன்னால் , என்னால் எப்போதெல்லாம் முடிகிறதோ அப்போதெல்லாம் இந்தியா வருகிறேன்.
Dear Prabhu,
Its nice “payana katturai”,good flow and collection of information’s. Plz do make your adventures as book. As You have good narration style..And u not only seems just a photographer but also read a lot in Tamil . Your ‘ examples’ of different writers are real good one’s..Keep writing..
Excellent travelogue. Please continue. Helps me relive my visit to Tanzania, Serengiti, etc.
Reminded of reading Kenneth Anderson’s The black panther of Seevanapalli!