பிளவுப் பள்ளத்தாக்கு

serengeti_graze

இந்தக் கானுலா பற்றி மேலும் எழுதுவதன் பிண்ணனியில்,  Rift Valley என்னும் பிளவுப்பள்ளத்தாக்கு பற்றிக் கொஞ்சம்சொல்ல வேண்டும். இந்தப் பிளவுப்பள்ளத்தாக்கு, ஒரு வளைந்த கோடு போல் ஆசியாவின் லெபனானிலிருந்து, ஆஃப்பிரிக்காவின் மொஸாம்பிக் வரை இருக்கிறது. இடையில் கடல் முதலியன பிரிப்பதால், இதை நான்கு பிரிவுகளாக அழைக்கிறார்கள். 1. மரணக் கடல் பிளவு, 2. ஜோர்டான் பிளவு 3. செங்கடல் பிளவு 4. கிழக்கு ஆஃப்பிரிக்கப் பிளவு.
ஆப்பிரிக்கப் பிளவுப் பள்ளத்தாக்கும் இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. எத்தியோப்பியாவிலிருந்து மொஸாம்பிக் வரை செல்லும் கிழக்குப் பிரிவும், காங்கோ, ரவாண்டா, உகாண்டா நாடுகள் வழியே வந்து கென்யாவைத் தொடும் மேற்குப் பிரிவும்.
இந்தப் பிளவுப்பள்ளத்தாக்கு, நிலப்பரப்பை இரண்டாகப் பிரிக்கிறது. நிலமே இரண்டு தளங்களில் இருக்கிறது.
முதலில், ஆருஷாவில் இருந்து மன்யாரா ஏரியை நாம் அடைகிறோம். அது ஒரு மலைத் தொடரின் அடிவாரத்தில் இருக்கிறது. மன்யாராவை விட்டு, ந்ஙொரொங்கோரோ மற்றும் ஸெரங்கெட்டி செல்ல மலை  ஏற வேண்டும். ஆனால், மலை ஏறியவுடன், அடுத்த நிலப்பரப்பு உயரத்தில் துவங்கி விடுகிறது. இரு வேறு தளங்களில் நிலம்.
இந்தப் பிளவுப் பள்ளத்தாக்கு, லெபனான் முதல் மொஸாம்பிக் வரை கிட்டத்தட்ட 6000 கிலோமீட்டர் தூரத்துக்கு இருக்கிறது. ஆஃப்பிரிக்க பிளவுப் பள்ளத்தாக்கு கிட்டத்தட்ட 4000 கிலோ மீட்டர் இருக்கலாம். ஆஃப்பிரிக்க நிலப்பரப்பை இரண்டு தளங்களாகப் பிரிக்கிறது இது.
இதன் கீழ் தளச் சமவெளியில், பெரும் ஏரிகள் உள்ளன. தாங்கினிக்கா ஏரி (தான்ஸானியாவின் பெயர் இதிலிருந்துதான் வந்தது) இதன் தென் பகுதியில் உள்ள முக்கியமான ஏரி. சைபீரியாவில் உள்ள பைக்கல் என்னும் ஏரிக்கு அடுத்த படியாக, மிக ஆழமும், கொள்ளளவும் கொண்ட நன்னீர் ஏரி. 32000 சதுர கிலோ மீட்டர்கள் பரப்பளவில் உள்ள இந்த ஏரி சராசரியாக 570 மீட்டர் ஆழமும் (அதிகபட்சம் 1.470 கிலோமீட்டர் ஆழம்), உலகின் நன்னீரில் 16% வைத்துக் கொண்டிருக்கிறது.  இதன் கரை 1800 கிலோமீட்டர் நீளம்.
அடுத்து விக்டோரியா ஏரி.  உலகின் இரண்டாவது பெரும் பரப்பளவு கொண்ட நன்னீர் ஏரி. 68000 சதுர கிலோமீட்டர் பரப்பு (தமிழ்நாட்டில் பாதி). இந்த ஏரியின் கரை 4800 கிலோமீட்டர் நீளம் (இந்தியாவின் கடற்கரையின் நீளம் 8600 கிலோமீட்டர்)
இது போக, மலாவி ஏரி (பல்வேறு நீர்த் தளங்கள் ஒன்றோடு ஒன்று கலவாத மேருமிட்டிக் (merumictic) ஏரி), கென்யாவின் நகுரு ஏரி எனப் பல பெரும் ஏரிகள் இந்தப் பிளவுப் பள்ளத்தாக்கின் இரு தளங்களிலும் உள்ளன. பல வனவிலங்குப் பூங்காக்களும் உள்ளன.
எங்களது யாத்திரை திட்டத்தின் முதற்படி  பிளவுப்பள்ளத்தாக்கின் கீழ் சமவெளியில் உள்ள மன்யாராவைக் கண்டுவிட்டு, பின் மலையேற வேண்டும் என்பது. அங்கே முதலில் வருவது ங்கொரொங்கோரொ.  இது எரிமலை வாய்ப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இதைத் தாண்டி ஸெரங்கெட்டி என்னும் மாபெரும் புல்வெளி அமைந்துள்ளது. ஸெரெங்கெட்டியில் பார்க்க வேண்டிய விஷயங்கள் அதிகம் என்பதால்,  முதலில் ஸெரெங்கெட்டி சென்று இரண்டு நாட்கள் தங்கி விட்டு, திரும்ப வரும் வழியில் ங்கொரொங்கோரொவைப் பார்த்து விட்டு, பின் வந்த வழியே கிளிமஞ்சாரோவை அடைவதுதான் முழுமையான திட்டம்.

zebras_africa_tanzania_safari_serengeti-national-park

ஸெரங்கெட்டி

எங்கள் கானுலாவின் முக்கிய அம்சமே ஸெரெங்கெட்டி வனவிலங்குச் சரணாலயம் செல்வதுதான். வைல்டபீஸ்ட் எனப்படும் மாடு முக மான்கள் நிறைந்த சரணாலயம். கிட்டத்தட்ட 15 -17 லட்சம் மான்கள் உணவைத் தேடி 800-900 கிலோமீட்டர்கள் சுற்றி வருவது, உலகின் பெரும் இயற்கை நிகழ்வுகளில் ஒன்று. 15000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்தச் சரணாலயம் உலகின் மிக முக்கிய சரணாலயங்களில் ஒன்று.
காலை 8 மணிக்குக் கிளம்பினால், சரியாக மதிய உணவு நேரத்துக்கு, ஸெரெங்கெட்டியின் வாயிலை அடைந்து விடலாம் என்றார் ஜெர்ரி.  5:30 மணிக்கு எழுந்து, குளித்துக் கிளம்பி, 7:15க்கு, மன்யாரா ஸெரினாவின் உணவகத்தை அடைந்தோம். காலை உணவாக ரொட்டியும், குச்சிக் (கப்பக்)கிழங்கும், சக்கரவள்ளிக் கிழங்கும், பலவகை காய்கறிகளும், பழங்களும் காஃபியும் நிறைந்த, முழு உணவு.  ஒரு கட்டு கட்டினோம். அவர்களே மதிய உணவை ஒரு அலுமினிய நெகிழ் கலனில் அடைத்துக் கொடுத்து விட்டார்கள் (கட்டுசோறு).  இரண்டு சிக்கன், இரண்டு பீஃப், ஒரு சைவம் என. (ஓட்டுனர் ஜெர்ரிக்கும் சேர்த்து). சரியாக 8 மணிக்குக் கிளம்பினோம்.
வழியில், இங்கத்திய கலைப் பொருட்கள் ஏதும் வாங்க வேண்டுமா என்றார் ஜெர்ரி. வாங்கலாமே என்றோம்.  10-15 கிலோ மீட்டர் சென்றதும், சாலையின் வலதுபுறத்தில் அமைந்திருந்த ஒரு கலைப் பொருள் அங்காடிக்கு வண்டியைத் திருப்பினார். அங்காடியின் உரிமையாளர் ஒரு முயிண்டி (இந்திய வம்சாவளி – குஜராத்தி).  கலைப் பொருட்கள் எல்லாம் அமெரிக்க விலையில். ஜெர்ரி மனம் வருந்த வேண்டாம் என 10 டாலருக்கு வாங்கிவிட்டுக் கிளம்பினோம்.  கலைப் பொருட்கள் யாவும், மிக முதிர்ந்த கலை நயம் படைத்தவை அல்ல.  அங்கு, தான்ஸானியாவில் மட்டும் கிடைக்கும் டான்ஸனைட் என்னும் ஒருவகை ரத்தினம் இருந்தது. விலையைப் பார்த்து விட்டு, உடனே புறப்பட்டோம்.

ngorongoro_crater_aerial_tanzania_national_parks_serengeti_lake_views

மெல்ல மெல்ல வாகனம் மேடேறியது. வெறும் செம்மண் பூமி மெல்ல அடர்ந்த வனமாகத் துவங்கியது. ஒரு 9:30 மணி வாக்கில் ங்கொரொங்கோரோ க்ரேட்டர் வாயில் தென்பட்டது. அங்கே வாகனத்தை நிறுத்தி,  மேலே செல்ல அனுமதிச் சீட்டு வாங்கி வந்தார் ஜெர்ரி. இறங்கி, அந்த அலுவலகத்தைப் பார்வையிட்டோம். மலையேற்றம் துவங்கியது. இடது புறத்தில் ஆழமான பள்ளத் தாக்கு, அதை மூடிய பெரும் மரங்கள் என காட்சி அற்புதம் நம் மேற்குத் தொடர்ச்சி மலைகளை நினைவுபடுத்தியது. பனிமனிதனில், ஜெயமோகன் உருவாக்கிய, பனிமனிதர்கள் வசிக்கும் காடு போல என நினைத்துக் கொண்டேன். குளிர் வாகனத்துக்குள் ஊடுருவியது.  வெறும் டீ ஷர்ட் அணிந்திருந்த அருண் அம்மையிடம் மண்டகப்படி வாங்கினான்.  “கவலைப் பட வேண்டாம் – இன்னும் கொஞ்சம் தூரம் தான்” என்றார் ஜெர்ரி.
வண்டியை மலைமுகட்டில், பார்வையாளர்களுக்கென்றே கட்டப்பட்ட ஒரு இடத்தில் நிறுத்தினார் ஜெர்ரி. அங்கிருந்து மொத்த ங்கொரொங்கொரோ எரிமலையின் வாய்ப்பகுதி முழுவதையும் ஒரு பறவைப்பார்வையில் பார்க்க முடிந்தது. எரிமலையின் வாய் 20 கிலோமீட்டர் விட்டமும், 600 சதுர கிலோமீட்டர் பரப்பளவும் கொண்டது. மலைமுகட்டில் இருந்து 550 மீட்டர் கீழே இருந்தது. இன்று மொத்த வாய்ப்பகுதியும் தூர்ந்து போய் ஒரு சமதளமாக, புல் வெளியும் காடுமாகி விட்டது.  “திரும்ப வரும்போது, கீழே சென்று பார்ப்போம். இப்போது ஸெரெங்கெட்டி செல்லலாம்” என வாகனத்தைக் கிளப்பினார் ஜெர்ரி..
உச்சியில் இருந்து மீண்டும், சமதளம் நோக்கி வண்டி இறங்கத் துவங்கியது. மெல்ல மெல்ல, மலையில் மண் படர்ந்த சாலை விலகத் தொடங்கியது. மலையின் ஸெரெங்கெட்டி நோக்கிய பகுதி வேறு மாதிரியான மர / தாவர வகைகளைக் கொண்டிருந்தது. முள் மரங்களும், புதர்களும், புல் வெளியும் அடர்ந்த காடு.  சாலையில் வெறும் சரளைக்கற்கள்.  மலை முழுதும் ஒருவகை மஞ்சள் நிறம் தென்பட்டது. அது என்ன? எனக்கேட்டேன் – அது ஒரு வகைச் செடி என்றார். மேல்மலைப்பகுதியில் இருந்த உயர் மலை சார்ந்த குளிரும், காலைப்பனியும், சிறு தூரல்களும் விலகி, வெயில் கொளுத்தத் துவங்கியது. ஜன்னல் கண்ணாடியை இறக்கியதும் முகத்தில் மென் காற்று அடித்தது.  வெயில் இருந்தது. ஆனால் வெம்மை இல்லை.
சரளைக்கல் சாலையில் வாகனம் தடதடத்து முன்னேறியது. அவ்வப்போது எதிரே அதே போல் தடதடத்து, புழுதி கிளப்பியபடி இன்னொரு சஃபாரி வாகனம் வரும். அப்போது ஜன்னலை மூடிக் கொள்வோம். புழுதி அடங்கிய பின்பு மீண்டும் ஜன்னல் திறந்து விடுவோம். 1 மணி நேரத்துக்குப் பின் கார் ஒரு மலையேறி, பள்ளத்தாக்கு ஒன்றுக்குள் இறங்கியது. சாலையின் வலது புறம் மலைச் சரிவு; இடதுபுறம் பள்ளத்தாக்கில், மஸாய் மக்களின் குடியிருப்பு. நாங்கள் பார்த்துக் கொண்டிருந்த போது ஒரு ஐரோப்பிய சுற்றுலாப்பயணிகளுக்கு மஸாய் குடியினர்  நடனமாடிக் காட்டிக் கோண்டிருந்தனர்.  மஸாய் மக்களின்  கலாச்ச்சாரத்தை அருகில் சென்று பார்க்க ஒரு கட்டணம் உண்டு. இது மஸாய் மக்களுக்கு ஒரு உபரி வரும்படி. சற்று தூரத்தில், மஸாய்களின் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. பலவகைக் கலவை மாடுகள்.  பெரும்பாலும் செம்மறி நிறம் கொண்ட மாடுகள். ஒன்றிரண்டு, நம்மூர் காங்கேயம் காளைகள் போல் திமில்கள் கொண்டிருந்தன. அத்துடன், மஸாய்களின் கழுதைகளும் மேய்ந்துக் கொண்டிருந்தன. அதற்கும் பின்னால், வரிக்கழுதைகள் மேய்ந்து கொண்டிருந்தன. வித்தியாசமான காட்சியாக இருந்தது. மஸாய்கள் ஏன் வரிக்கழுதைகளை வளர்ப்பு மிருகங்களாக்கவில்லை எனக் கேட்டேன். அவருக்குச் சரியான பதில் தெரியவில்லை. ஆனால், மஸாய் வீரர்கள் காட்டு விலங்கு எதையும் உண்பதில்லை என்னும் தகவலைத் தெரிவித்தார். மான்கள் உள்பட. பள்ளத்தாக்கின் முடிவில் சாலை மீண்டும் மலையேறியது.  வாகனம் முனகியபடியே மேலே சென்றது.
மலையேறி இறங்கியதும் வெறும் கள்ளிகளும், வெள்ளை வேலா மரங்களும், புதர்களும் நிரம்பிய காடு. இப்போது வாகனத்தின் தட தட பழகிவிட்டது. நான் பணிபுரியும் நிறுவனத்தில் எங்கள் பொருட்களை விநியோகிக்கக் கிட்டத்தட்ட 150 பெரும் லாரிகள் உண்டு. தான்சானியாவின் சாலைகள் கிராமப்புறங்களில் மோசம். எனவே, லாரி டயர்கள் 40-50ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு மேல் தேய்ந்து விடும். இந்த தட தட சாலையில், டயர்கள் எவ்வளவு கிலோ மீட்டர் ஓடும் எனக் கேட்டேன். 20 ஆயிரம் கிலோமீட்டர் ஓடினால் பெரிய விஷயம் என்றார்.
வழியில், மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. ஒன்றிரண்டு குளுவான் மஸாய் சிறுவர்கள் கையில் ஈட்டி, கம்போடு பின் சென்று கொண்டிருந்தார்கள்.  “இவர்கள் மாடுகளை உண்ண வரும் ஊன் உண்ணிகளிடமிருந்து எப்படிப் பாதுகாப்பார்கள்” எனக் கேட்டேன். பொதுவாக, மஸாய் ஆண்கள் கொஞ்சம் பெரியவர்களானதும், சிறுவர்கள் தலையில் வேலைகளைக் கட்டிவிட்டு, எங்காவது கூட்டமாக அமர்ந்து அரட்டையடித்துக் கொண்டிருப்பார்கள்.  ஆபத்து எனில், இச்சிறுவர்கள் சப்தமெழுப்பினால் வந்து விடுவார்கள். மட்டுமல்லாமல், மஸாய் மக்கள் சிங்கம்,  சிறுத்தை போன்றவற்றை எதிர்த்து நின்று கொல்லும் ஆற்றல் உள்ளவர்கள். எனவே, மஸாய்கள் வசிக்குமிடங்களில் இவை வந்து வேட்டையாடுவது குறைவு” என்றார். சில காணொளிகள் கண்டிருக்கிறேன் – வெறும் கைகள், கம்புகளுடன், மஸாய் வீரர்கள் சிறுத்தைகளை விரட்டி விடுவதை.  பார்ப்பதற்கு ஒல்லியாக இருந்தாலும் மாடுகள் அவர்களின் சொத்து என்பதால் ஊன் உண்ணிகளை எதிர்க்கும் தேவையும், திறனும் அவர்களுக்கு இயற்கையாகவே இருக்கிறது.
சாலையோரத்தில் இரு மஸாய் சிறுவர் கைகாட்டினார்கள். ஜெர்ரி காரை நிறுத்தினார். அவர்கள் முகத்தில் வெண்புள்ளிகளும் கோடுகளும் பட்டையாகத் தீட்டப்பட்டிருந்தன.  சிறுவர்கள் வயது வந்ததும் இவ்வாறு புள்ளிகள் குத்தப்பட்டு, ஊரில் இருந்து தொலைவில், ஒரு குடிலில் சில காலம் தங்க வைக்கப்படுகிறார்கள். அவ்விரத காலம் முடிந்ததும் அவர்கள் பெரியவர்களாக, வீரர்கள் என்னும் தகுதியை அடைகிறார்கள். அவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டோம். இவ்விரத கால முடிவில் அவர்களுக்கு சுன்னத் செய்யப்படுகிறது என்னும் தகவலை அவர்களின் இணைய தளத்தில் படித்தேன். பெண்களுக்கும்,  பிறப்புறுப்புச் சிதைக்கும் சடங்கு உண்டு. ஆனால், அது இப்போது குறைந்து வருகிறது. (இக்கொடூர வழக்கம், இந்தியாவில், இன்றும் போரா இஸ்லாமிய சமூகத்தில் இருக்கிறது).

tanzania_party_elections_chadema_dar_es_salaam

அடுத்த சிலமணி நேரங்கள் தடதடவெனப் புழுதியெழுப்பிக் கொண்டு சரளைக்கல் சாலையில் போய்க் கொண்டேயிருந்தோம். தொலைவில், ஒரு மஸாய்க் குடியிருப்பில்  தான்சானியாவின் எதிர்க்கட்சியான சடேமா (Chadema) வின் கொடி பறந்து கொண்டிருந்தது. கடந்த தேர்தலில் சடேமாவின் சார்பில் அதிபர் தேர்தலில் நின்றவர் லவாஸா என்னும் மஸாய் இனத்தவர். அதனால் கூட இருக்கலாம்.
கண்ணுக்கெட்டிய வரை புல்வெளி. ஸெரெங்கெட்டி என்னும் பெயரின் அர்த்தமும் அதுதான் ”எல்லையில்லாப் புல்வெளி”. கிட்டத்தட்ட 12:30 மணி அளவில், ஸெரெங்கெட்டியின் எல்லையை அடைந்தோம். ஒரு வரவேற்பு வளைவு எங்களுக்கு முகமன் சொன்னது.  இன்னும் 20 நிமிடம் சென்றால்தான் அனுமதி அனுமதி வழங்கும் அலுவலகம் வரும் என்றார். நிறுத்தி, புகைப்படம் எடுத்தோம். வலதுபுரத்தில் சில நெருப்புக்கோழிகள் மேய்ந்து கொண்டிருந்தன. அவை மாடு முக மான்களின் உயரம் இருந்தன.  பக்க வாட்டில், சில குறுமான்களும், வரிக்கழுதைகளும்.
லேசாகப் பசியின் முதல் குரல் எழுந்தது. தூக்கமும்.. கார் நிறுத்தும் ஒலிகேட்டுக் கண் விழித்தேன். ஸெரெங்கெட்டியின் அனுமதி வழங்கும் அலுவலகம் வந்துவிட்டிருந்தது. இறங்கி, ஆசுவாசப்படுத்திக் கொண்டு மதிய உணவை உண்ணுங்கள் – அதற்குள் அனுமதி வாங்கி வருகிறேன் எனச் சென்றார் ஜெர்ரி.   சின்னக் கூடாரங்களின் கீழ் மேசைகள் இருந்தன. ஒன்றில் அமர்ந்தோம். உணவுப் பொட்டலங்களைத் திறந்தது கண்டோம். காலிப்பெட்டிகளைக் குப்பைத் தொட்டியில் போட்டது கேட்டோம் – பசி.
மதிய உணவு முடிந்ததும் வண்டியின் அருகில் சென்றதும் ஜெர்ரியின் முகம் வாடியிருந்தது. வலது பின்புறச் சக்கரம் உயிரை விட்டிருந்தது.  ஆஹா.. நாம சக்கரத்தின் ஆயுளைப் பற்றி நெம்ப நல்ல நேரத்திலதான் பேசியிருக்கோம்னு தோணுச்சு. மிக ஆச்சர்யமாக வண்டியின் ஜாக் வேலை செய்யவில்லை. டயர் மாற்றும் திறனில் ஜெர்ரி மிகத் திறம் பெற்றவரில்லை என்பதும் புரியவந்தது. வருத்தம். 1.30 மணி நேரம் போராடி, டயரை மாற்றி வண்டியைக் கிளப்பினார். இந்த 1.30 மணி நேரம் விலங்குகளைப் பார்க்கும் நேரம் குறைகிறது என வருத்தம் என்றாலும், குறைந்த பட்சம் ரிஸ்க் இல்லாமல் பின் என்ன ரோமத்துக்கு ஸஃபாரி என தேற்றிக்  கொண்டு கிளம்பினோம்
1972 ஆம் ஆண்டு, உலக  சூழியல் பற்றிய ஒரு முக்கியமான மாநாடு, ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் நடந்தது. அதில் வனவிலங்குப் பூங்காக்களைப் பாதுகாப்பது பற்றிய மிக முக்கியமான செயல்திட்டங்கள் வரையப்பட்டன. இதன் பின் தான், இந்திரா காந்தி இந்தியாவில் தேசியப்பூங்க்காக்களை ஏற்படுத்தினார். அம்மாநாட்டில்  சொல்லப்பட்ட வனவிலங்குப் பூங்காக்களில் முதலில் இடம் பெற்றது ஸெரங்கெட்டி (Serengeti) தேசியப் பூங்கா. கிட்டத்தட்ட 14000 சதுர கிலோமீட்டர் பரப்பில் அமைந்துள்ளது. இதன் இன்னொரு பகுதி கென்யாவில் அமைந்துள்ளது. அது மஸாய் மாறா என அழைக்கப்படுகிறது. அது 1500 கிலோ மீட்டர் பரப்பளவு.  (இந்தியாவின் மிகப்பெரும் தேசியப்பூங்கா – ராஜஸ்தானின் பாலைவனப் பூங்கா – இது 3400 சதுர கிலோமீட்டர் பரப்பளவு. ஜிம் கார்பெட் போன்ற நம் பல முக்கிய இந்தியப் பூங்காக்கள் எல்லாம் மிகச் சிறியவை). தான்ஸானியாவின் மிகப் பெரும் தேசியப்பூங்கா  செலஸ் (selous) தேசியப்பூங்கா. இது 54000 சதுர கிலோமீட்டர் பரப்பில் அமைந்துள்ளது. ஆனால்,  ஸெரெங்கெட்டி உலகின் மிக முக்கிய தேசியப் பூங்கா. ஏன்?
தன் வாழ்நாள் முழுதும் செரெங்கெட்டி பற்றி ஆரய்ந்த  ஆண்டணி சின்க்ளேர் (Anthony Sinclair) அதற்கான மிக முக்கிய காரணமாக, பாலூட்டிகளின் பயணத்தைச் (great mammalian migration) சொல்கிறார். முதலில், ஸெரெங்கெட்டி  கரும் பிடறிச் சிங்கங்களுக்காகத்தான் (black maned Lions) அறியப்பட்டிருந்தது. 1950 களின் இறுதியில், ஜெர்மனியைச் சார்ந்த பெர்னார்ட் மற்றும் மைக்கேல் என்னும் இருவர், தங்களின் ஆராய்ச்சிக்காக, ஸெரெங்கெட்டியின் மீது விமானத்தில் பறந்து கண்காணித்த போது தான், இந்த பாலூட்டிகளின் பயணத்தை பற்றி உலகம் அறிந்து கொண்டது. 16-17 ஆம் நூற்றாண்டுகளில், வேளாண்மை ஒரு பெரும் மனித முயற்சியாக, உலகில் துவங்கி, இயற்கைச் சூழலை பாதிக்கத் துவங்கியது. ஆனால், ஸெரெங்கெட்டியில், அதன் பாதிப்புக்கள் அதிகம் இன்றி, வேட்டைச் சமூகக் காலகட்டத்தின் சூழல் அப்படியே பாதுகாக்கப் பட்டிருக்கிறது.  உலகின் மிக அதிகமான பாலூட்டிகளைக் கொண்டிருக்கும் இயற்கைச் சூழல்.  நாகரீக உலகின் பாதிப்புகள் அதிகம் இல்லாமல் இருந்தாலும், இச்சூழல், பருவ மாற்றங்களாலும், பல்வேறு காரணிகளாலும் மாறிக் கொண்டேயிருக்கிறது என்கிறார் ஆண்டனி. இவர் 1965 ஆம் ஆண்டிலிருந்து ஸெரெங்கெட்டியில் வாழ்ந்தும், ஆராய்ச்சி செய்தும் வருபவர்.
இந்தப் பாலூட்டிகளின் பயணத்தில் ஈடுபடும் விலங்குகள் நான்கு. முதலில், இப்பயணத்தைத் துவங்கி வைப்பவை தாம்ஸன்ஸ் கஜல் என்னும் குறுமான்கள் (Thomson’s Gazelle).  நவம்பர் / டிசம்பர் மாதத்தில் முதல் மழை பெய்ததும் புல் வெளியில் முளைக்கத் துவங்கும் முதல் புல்லை உண்ண புல்வெளியை நோக்கி வருபவை இவையே.  மேலும் மழை பெய்யப் பெய்ய, இவை கிழக்கு திசையில் தாண்சானியாவின் எல்லைக்குள் பயணம் செய்கின்றன. இதன் பின்னாலேயே, வரிக்குதிரைகள் (zebra) (கழுதைகள்)  வருகின்றன. அவற்றின் பின்னால், வைல்டெபீஸ்ட் (wildebeest) என்னும் மாடுமுக மான்கள் வருகின்றன. இவற்றுடன் எலாண்ட் (eland) என்னும் இருவகை மான்களும் பயணிக்கின்றன. மேற்கில் இருந்து கிழக்காக, புல்லைத் தேடிப் புல்வெளிக்குள் செல்லும் பயணம் மழை குறைந்தவுடன் மே மாத வாக்கில் திரும்பவும் கிழக்கில் இருந்து மேற்காக, அடர் கானகம் நோக்கித் திரும்புகிறது. ஜூன் மாதத்தில் பயணம் மேற்கில் இருந்து வடக்காகத் திரும்புகிறது.  இந்த ஜூன் மாதப் பயணத்தின் சமயம், புல் மிக உயரமாக  வளர்ந்துவிடுவதால், பயணத்தின் வேகம் குறைவு. அடர் புல்வெளியை மேய்ந்து முடிப்பதற்கு ஆகும் சமயமும், புல்லில் மறைந்திருக்கும் எதிரிகளும் காரணம்.  திரும்பச் செல்லும் இப்பயணத்தில் முதலில் வரிக்குதிரையும், அதன் பின்னால் மாடுமுக மான்களும், இறுதியில் குறு மான்களும் செல்கின்றன.  இப்பயண நிரலில், எலாண்ட் வகை மான்கள் கலந்துகொள்வதில்லை. அவைகள் வழி, தனி வழி!
இப்பயணம் முடியும் காலம், மழையில்லாக் காலம் (செப்டெம்பர்/அக்டோபர்) – அப்போது விலங்குகள் சிறுகுழுக்களாகப் பிரிந்து உணவைத் தேடிச் செல்கின்றன. முதல் மழை நவம்பரில் – கோடை மழையில், பயணம் மீண்டும் தெற்கு நோக்கி.. மேலும் மழைக்காலம் நீடிக்கும் போது, சிதறிய விலங்குகள் ஒன்று சேர்ந்து,  கிழக்கே புல்வெளியை நோக்கிய மாபெரும் பயணம்.
இப்பயண வழியின் நீளம் 900 கிலோமீட்டர். இதில் கிட்டத்தட்ட பதினைந்து லட்சம் மாடுமுக மான்களும், இரண்டு லட்சம் வரிக்குதிரைகளும், ஐந்து லட்சம் தாம்ஸன் கஜல் என்னும் குறு மான்களும் கலந்து கொள்கின்றன.  பெரும் பெரும் குழுக்களாகப் பயணிக்கும் இவற்றின் நீளம் சில சமயம் 40-50 கிலோமீட்டர் வரை இருக்கும்.  ஸெரெங்கெட்டியில் இக்காலத்தில், கண் பார்க்கும் வெளிமுழுதும் மான்களாக இருக்கும்.
இப்பயணத்தில் பங்கு பெறாத பாலூட்டிகளும் உள்ளன. மாடுமுக மான்களின் நெருங்கிய உறவினர்களான டொப்பி (Topi), கொங்கொணி (kongoni) மான்கள், மாடுமுக மான்கள் போல் பெரும்பயணம் மேற்கொள்வதில்லை. புல் கிடைக்கும் இடங்களில் உயிர்த்து மரிக்கின்றன. இம்பாலா (Impala) என்னும் ஒரு வகை அழகிய கொம்பு கொண்ட மான்களும் அவ்வாறே. பயணம் செய்யாத உள்ளூர் வாசிகள்
வான் மழையும், கதிரும் இணைந்து, முடிவிலாப் புல் வெளியாகி, புல் மானாகி, சில மான்கள் ஊணுன்னிகளின் உணவாகி, பல கிழடாகி மடிந்து, மீண்டும் புல்லாகும் ஒரு முடிவிலா விளையாட்டின் பெருவெளிதான் ஸெரெங்கெட்டி.
இந்தத் தேசியப்பூங்காவின் முக்கியத்தை அறிந்தவர், தான்ஸானியாவின் தந்தை ஜூலியஸ் நைரேரே. அவர் துவங்கி இன்று வரை, அரசியல் தலைவர்கள் அனைவரும், இதைப் பாதுகாப்பதை ஒரு முக்கியக் கடமையாகச் செய்கிறார்கள். மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

(பயணிப்போம்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.