சம்பாஷணை

disintegrationofpersistence

அந்த டாக்டர் பார்வைக்கு திறமையானவராகவும், மதிக்கக் கூடியவராகவும் தெரிந்தார். அவரது தோற்றத்தால், திருமதி ஆர்னால்ட் இன்னது என்று சொல்ல முடியாதபடி ஆறுதலாக உணர்ந்தாள், அதனால் அவளுக்குப் பதட்டம் கொஞ்சம் குறைந்தது. தன் சிகரெட்டைப் பற்ற வைக்க அவர் வந்தபோது, அவரை நோக்கிக் குனியும்போது, தன் கை நடுங்கியதை டாக்டர் கவனித்தார் என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது, அவள் மன்னிப்பு கேட்பது போலச் சிரித்தாள், ஆனால் பதிலுக்கு அவர் அவளைக் கருத்தோடு பார்த்தார்.
“நீங்க பதட்டமாக இருப்பது போலத் தெரிகிறதே,” என்று இறுக்கமாகச் சொன்னார்.
“நான் ரொம்பப் பதட்டமாத்தான் இருக்கிறேன்,” திருமதி ஆர்னால்ட் சொன்னாள். அவள் நிதானமாகவும், தெளிவாகவும் பேச முயன்றாள். “அதனாலத்தான், எங்களோட வழக்கமான டாக்டர்- டாக்டர் மர்ஃபி கிட்டபோகாம உங்க கிட்ட வந்திருக்கிறேன்.”
டாக்டர் இலேசாக முகத்தைச் சுளித்தார். “என்னோட வீட்டுக்காரருக்கு,” திருமதி ஆர்னால்ட் பேசிக்கொண்டு போனாள், “நான் கவலைப்படறது தெரியறதுல எனக்கு விருப்பமில்லே, ஆனா அனேகமா டாக்டர் மர்ஃபி என் கணவர் கிட்டே சொல்றது அவசியம்னுதான் நெனப்பார்.” டாக்டர் அதை ஏற்பதாகக் காட்டாமல், தலையைச் சும்மா அசைத்தார் என்பதைத் திருமதி ஆர்னால்ட் கவனித்தாள்.
“இப்போது அப்படி என்ன பிரச்சினை?”
திருமதி ஆர்னால்ட் நீண்ட மூச்சு ஒன்றை இழுத்துக் கொண்டாள். “டாக்டர்,” அவள் சொன்னாள், “அவங்களுக்குக் கிறுக்குப் பிடிக்க ஆரம்பித்திருக்குங்கிறதை ஜனங்க எப்படித் தெரிஞ்சுக்குவாங்க?”
டாக்டர் பார்வையை உயர்த்தினார்.
“சிரிப்பா இருக்கு இல்லியா,” திருமதி ஆர்னால்ட் சொன்னாள். “அதை அப்படிச் சொல்லணும்னு நான் முன்னாடி யோசிக்கல்லை. விளக்கிச் சொல்றதும் அப்படிச் சுலபமா இல்ல, ரொம்ப நாடகம் போடற மாதிரி இருக்கும்.”
“புத்தி பேதலிப்பது என்பது நீங்க நினைக்கிறதை விட ரொம்பச் சிக்கலானது,” டாக்டர் சொன்னார்.
“அது சிக்கலா இருக்கும்னு எனக்குத் தெரியும்,” திருமதி ஆர்னால்ட் சொன்னார். “அது ஒண்ணைப் பத்திதான் எனக்கு நெஜமாவே தெளிவு இருக்கு. அதாவது, தெளிவாயிருக்கிற பலதுல, புத்தி பேதலிப்புங்கிறது ஒண்ணுன்னு சொல்றேன்.”
“என்னது, புரியல்லியே?”
“அங்கதான் குழப்பம் இருக்கு, டாக்டர்.” திருமதி ஆர்னால்ட் பின்னே தள்ளி உட்கார்ந்தாள், தன் கைப்பையின் அடியிலிருந்து கையுறைகளை வெளியில் எடுத்து, கவனமாக பையின் மேல் வைத்தாள். பிறகு அவற்றை எடுத்து, மறுபடியும் கைப்பையின் அடியில் வைத்தாள்.
“எல்லாவற்றையும் விளக்கிச் சொல்லிப் பாருங்களேன்,” டாக்டர் சொன்னார்.
திருமதி ஆர்னால்ட் பெருமூச்சு விட்டாள். “மத்தவங்க எல்லாருக்கும் புரியற மாதிரித்தான் தெரியறது,” அவள் சொன்னாள், “எனக்குப் புரியறதில்லெ. கொஞ்சம் பாருங்க.” முன்னால் சாய்ந்தவள், பேசும்போது ஒரு கையை அசைத்தபடி பேசினாள். “ஜனங்க எப்படி வாழறாங்கன்னு எனக்குப் புரிபடலெ. முன்னே எல்லாமே சுலபமாத்தான் இருந்தது. நான் சின்னப்பொண்ணா இருக்கையில நான் வாழ்ந்த உலகத்துலெயும் நிறைய ஜனங்க இருக்கத்தான் செஞ்சாங்க, அவங்கள்லாம் சேர்ந்துதான் வாழ்ந்தாங்க, எல்லாம் ஒரு குழப்பமும் இல்லாமத்தான் நடந்தது.” அவள் டாக்டரைப் பார்த்தாள். அவர் மறுபடியும் முகத்தைச் சுளித்துக் கொண்டிருந்தார், திருமதி ஆர்னால்ட் தொடர்ந்தாள், குரலைச் சிறிது உயர்த்தியபடி. “பாருங்க. நேத்திக்கி காலைல என் வீட்டுக்காரர் ஆஃபிஸ் போகிற வழீலெ ஒரு நியூஸ்பேப்பர் வாங்கறத்துக்கு தாமசிச்சார். அவர் எப்போதுமே டைம்ஸ்தான் வாங்குவார், அதையும் ஒரே கடைலதான் வாங்குவார், என்னன்னா நேத்திக்கி அந்தக் கடைக்காரர்கிட்டெ என் வீட்டுக்காரருக்குக் கொடுக்க டைம்ஸ் ஒரு பேப்பர் கூட இல்லை, மாலைல வீட்டுக்குத் திரும்பினப்புறம் ராத்திரிச் சாப்பாட்டுல மீன் தீய்ஞ்சு போயிருக்கு, இனிப்பு வகையறால இனிப்பு அதிகமுன்னார், அப்புறமா அங்கெயும் இங்கெயும் உக்காந்துகிட்டு சாயந்தரம் பூராவும் தனக்குத் தானே பேசிக்கிட்டிருந்தார்.”
“அவர் இன்னொரு கடையில அதை வாங்கி இருக்கலாமே,” அந்த டாக்டர் சொன்னார். “நிறைய நாட்களில் ஊருக்கு நடுவில இருக்கிற கடைகளுக்கு, புறநகர்ப் பகுதிகளுக்கு அப்புறமாத்தான் பேப்பர் வந்து சேரும்.”
“இல்லை,” நிதானமாகவும், தெளிவாகவும் திருமதி ஆர்னால்ட் சொன்னாள், “நான் மறுபடி முதல்லேருந்து ஆரம்பிக்கணும்னு நெனைக்கிறேன். நான் சின்னப் பொண்ணா இருக்கையில- ,” அவள் துவங்கினாள். பிறகு அவள் நிறுத்தினாள். “பாருங்க,” அவள் சொன்னாள், “முன்னெ ஸைகொஸோமாடிக் சிகிச்சைன்னெல்லாம் வார்த்தைங்க இருந்ததா? இல்லே பன்னாட்டு கார்ட்டெல்கள்? இல்லே அதிகார அடுக்கமைப்பை மையப்படுத்தல் -ங்கறது?”
“அது,” அந்த டாக்டர் ஆரம்பித்தார்.
“அதுக்கெல்லாம் என்ன அர்த்தம்?” திருமதி ஆர்னால்ட் வற்புறுத்திக் கேட்டாள்.
“பன்னாட்டுப் பிரச்சினைகள் நிரம்பிய காலகட்டத்தில்,” அந்த டாக்டர் மென்மையாகச் சொன்னார், “உதாரணமாக பண்பாட்டு வடிவமைப்புகள் துரிதமாக நசியத் துவங்குகையில், நீங்கள் என்ன காணத் துவங்குவீர்கள் என்றால்…”
“பன்னாட்டுப் பிரச்சினை,” திருமதி ஆர்னால்ட் சொன்னாள், “வடிவமைப்புகள்.” அவள் மௌனமாக அழத் தொடங்கினாள். “அவர் என்ன சொன்னார்னா, தனக்கு டைம்ஸின் ஒரு பேப்பரைக் கூட எடுத்து வைக்காமல் இருக்க அந்த ஆளுக்கு ஒரு உரிமையும் கிடையாது,” என்று அவள் மிரட்சியோடு பேசினாள், தன் கைப்பையில் ஒரு கைக்குட்டைக்குத் துழாவியபடி, “ உள்ளூரில் திட்டமிட்ட வரி அமைப்பு பற்றியும், உபவரியில் எஞ்சும் வருமானம், உலக அரசியல் கோட்பாடுகள், மேலும் பணச் சுருக்கப் பணவீக்கம் என்றெல்லாம் பேச ஆரம்பித்தார்.” திருமதி ஆர்னால்டின் குரல் இப்போது உயர்ந்து ஓலமாகியது. “அவர் பணச்சுருக்கப் பணவீக்கம் என்று நிஜமாகவே சொன்னார்.”
“திருமதி. ஆர்னால்ட்,” அந்த டாக்டர் அழைத்தார், எழுந்து மேஜையைச் சுற்றி வந்தார், “இந்த வழியில் போனால் நாம் விடை ஏதும் காண முடியாது.”
“எதுதான் உதவப் போகிறது?” திருமதி ஆர்னால்ட் கேட்டாள். “என்னைத் தவிர எல்லாருக்கும் பைத்தியம் பிடித்திருக்கிறதா?”
“திருமதி ஆர்னால்ட்,” என்று கண்டிக்கும் தொனியில் அந்த டாக்டர் அழைத்தார். “நீங்கள் உங்களையே கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இலக்கிழந்து அலைப்புறும் இன்றைய நம் உலகில், எதார்த்தத்திலிருந்து அன்னியமாதல் அடிக்கடி-”
“இலக்கிழந்து அலைப்புறும்,” திருமதி ஆர்னால்ட் சொன்னாள். அவள் எழுந்து நின்றாள். “அன்னியமாதல்,” என்று மறுபடி சொன்னாள். அந்த டாக்டர் அவளைத் தடுக்குமுன், கதவை நோக்கி நடந்து, அதைத் திறந்தாள். “எதார்த்தம்,” என்றாள், பிறகு வெளியே போனாள்.

~oOo~

[shirley_jackson_author ஷெர்லி ஜாக்ஸன் ஓர் அமெரிக்க எழுத்தாளர். பல பத்தாண்டுகளாகக் கதைகள் எழுதி வந்தவர். 5 ஆகஸ்ட் 1944 ஆம் தேதியில் வெளியான நியுயார்க்கர் பத்திரிகையில் முதலில் வெளியான கதை. பின்னர் 1949 இல் த லாட்டரி என்ற சிறுகதைத் தொகுப்புப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டிருந்தது. இந்த மொழிபெயர்ப்புக்கான பிரதி, த லைப்ரரி ஆஃப் அமெரிக்கா பிரசுரத்தின் ’ஷெர்லி ஜாக்ஸன், நாவல்களும், கதைகளும்’ (2010) புத்தகத்திலிருந்து பெறப்பட்டது. ஷெ
ர்லி ஜாக்ஸன் எழுதிய புகழ் பெற்ற ‘த லாட்டரி’ என்கிற கதை சொல்வனத்தில் முன்னர் பிரசுரமாகி இருக்கிறது. அதை இங்கே படிக்கலாம்.  1965 இல் இவர் இறந்தாரென்றாலும் இவரது கதைகள் இன்னமும் கூட மீள் பிரசுரமாவதை அமெரிக்கச் சஞ்சிகைகளில் காணலாம். இவரது மறைவுக்கு நியுயார்க் டைம்ஸ் பிரசுரித்த குறிப்பு ஒன்றைப் படிக்க இங்கே செல்லவும்.  கதை எழுதுவது எப்படி இருக்க வேண்டும் என்று துவக்கநிலை எழுத்தாளர்களுக்கு அவர் கொடுத்த சில யோசனைகளை நியுயார்க்கர் பத்திரிகை 2014 இல் பிரசுரித்தது. அந்தக் கட்டுரைகளில் ஒன்றை இங்கே காணலாம்.]
தமிழாக்கம்: மைத்ரேயன்/ செப்டம்பர், 2016

One Reply to “சம்பாஷணை”

  1. இடதுசாரி சிற்றிதழ் பிதற்றல்களைப் பகடி செய்யும் தொனியில் எழுதப்பட்ட நல்ல கதை. தலைப்பை உரையாடல் என்று தமிழ்ப்படுத்தாமல், சம்பாஷணை என்ற சற்றொப்ப மறக்கடிக்கப்பட்டுவிட்ட வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளது பாராட்டத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.