சமூகவியல்

exercise-pregnancy-lamaze_kid_child_birth

சுமை தூக்கும் குதிரை ஒன்று, தான் பல தடவைகள் முன்னதாக நின்றிருக்கிற குறுக்குத் தெருவில் பழக்கத்தால் நிற்பது போல, எல்லென் தன் வீட்டு வெளி முகப்பில், பின்னால் பார்க்காமல் நின்றாள். படிகளில் அலெக் மேலேறி வந்தான்: தன் பையில் இருக்கும் சில்லறைக் காசுகளிலிருந்து கதவுச் சாவியை அவன் கைகள் பிரித்தபோது எழுந்த கலகல சத்தத்தை அவள் கேட்டாள். அப்போது ஒரு கீழ்ஸ்தாயியில், சொற்களை இழுத்துப் பேசும் குரலைக் கேட்டாள்.
“ஜனங்களா, நீங்க நிக்கிற இடத்தில அப்படியே இருந்தீங்கன்னா, இந்த துப்பாக்கி வெடிக்காமல் இருக்கும். கதவைப் பாத்துகிட்டே நில்லுங்க.”
இப்படி நடக்கும் வேளை கடைசியில் வந்து விட்டது என்று அவள் நினைத்தாள். அவர்களுடைய வீடு பலர் இரண்டுங்கெட்டான் என்று அழைக்கக் கூடிய இடத்தில் இருந்தது: அங்கு ஒரு வீட்டை வாங்குவது கட்டுப்படியாகாத அளவு ஆகி விட்டிருந்தது, ஆனால் இன்னமும் அங்கே யாரும் வசிக்கும் நிலை வரவில்லை. ஆனாலும் அங்கே வாழ்வது எல்லெனுக்கு எப்படியும் பிடித்திருந்தது. தங்கள் சூழ்நிலைக்கும், இருட்டிய பிறகு தன் வீட்டு வாயிற்படியில் அமர்ந்து வானைப் பார்த்து நியுஃபௌண்ட்லாந்தின் மீனவப் பாடல்களைப் பாடும் அண்டை வீட்டுக்காரரின் சூழ்நிலைக்கும் இடையே உள்ள பெரும் வித்தியாசம், ஒரு இருண்ட விதத்தில், அவளை வசீகரித்தது. நம் கையருகே உள்ள மனிதர்களே கூட நம்மளவு அதிர்ஷ்டமில்லாதவர்களாக இருப்பார்கள், அதனால் நம்மைக் கொல்லக் கூட விரும்புவார்கள் என்பது உலகைப் பற்றிய அவள் பார்வை, அதோடு இந்தச் சூழ்நிலை பொருந்தி வந்தது.
துப்பாக்கியை வைத்திருந்த மனிதன் படிகளின் மேலேறி வந்தான். அலெக்கின் பர்ஸை அவன் தேடிப் பிடித்தான், எடுத்துக் கொண்டான். எல்லெனுடைய பர்ஸை எடுத்துக் கொண்டான். அலெக்கின் கைக்கடிகாரத்தைக் கேட்டான். அது தங்கத்தாலான கைக்கடிகாரம், அதன் மணிக்கட்டுப் பட்டியும் தங்கத்தாலானது; அது அவனுடைய அப்பாவுடையது, குபெக்கில் தொழிற்சாலையில் 40 வருடங்கள் அவர் வேலை செய்ததற்காகக் கொடுக்கப்பட்டது. ஓய்வு பெற்றபின் இரண்டே மாதங்களில் அவர் இறந்ததால், அந்த கைக்கடிகாரத்தை அவர் ஒருபோதும் அணியவில்லை. அலெக் சிகரெட் குடிக்காமல் 21 வயதை அடைந்ததும், அவனுடைய அம்மா அதற்கு தங்கத்தில் செய்த பட்டியைச் சேர்த்து தன் ஒரே மகனான அலெக்குக்கு அதைக் கொடுத்தார். ஒரு வார்த்தையும் பேசாமல் அலெக் தன் கையிலிருந்து அதைப் பளிச்சென்று கழற்றி, கொடுத்தான். எல்லேன் முனகினாள். பின் அந்த துப்பாக்கிக்காரனுக்குப் பேராசை வந்தது.
“உன் நகையை எல்லாம் எடு,” என்றான். எல்லெனின் தலை முடியில் ஒரு கொத்தைப் பற்றிப் பின்னே இழுத்து, அவள் காது வளையம் ஏதும் போட்டிருக்கிறாளா என்று பார்த்தான். அவள் அணிந்திருக்கவில்லை. அவள் இரண்டு மோதிரங்கள்தான் போட்டிருந்தாள், ஒன்று அவளுடைய திருமண மோதிரம், இன்னொன்று அவளுடைய 16 ஆவது பிறந்த நாளுக்கு அவளுக்குக் கிடைத்த முத்து பதித்த மோதிரம். அந்த மாதத்தில் சில நாட்கள் முன்பு அது கைவிரலில் இறுகி விட்டதாகத் தோன்றி அதைக் கழற்றித் தன் சுண்டு விரலில் போட்டுக் கொண்டிருந்தாள். அதை உருவிக் கொடுத்தாள். திருமண மோதிரத்தை ஏதும் செய்ய முடியவில்லை.
“இதை என்னால் கழற்ற முடியவில்லை,” அந்த வழிப்பறிக்காரனிடம் சொன்னாள். “நான் கர்ப்பமாக இருப்பதால் என் விரல்கள் வீங்கி இருக்கின்றன.”
கர்ப்பம் என்று சொல்லும்போது அவன் கண்ணுக்குள் பார்த்தபடி சொன்னாள். இத்தனை ஆபத்தில் இதற்கு முன் இருந்ததில்லை என்று அவள் உணர்ந்திருந்தாள்; அது மிகப் பெரிய ஆபத்து என்பதைச் சுட்ட அதை அவள் அட்சரம் அட்சரமாகச் சொல்ல வேண்டி இருந்தது. கடைசி சில மாதங்களில் அவளுடைய அதீதக் கற்பனைகளில் ஒன்று, கர்ப்பமான பெண்களை வயிற்றில் சுட்டு, கத்தியால் அவர்களின் வயிற்றைக் கிழிக்கும் மனம் பிறழ்ந்த கொலைகாரன் ஒருவனிடம் தான் அகப்பட்டுக் கொள்ளப் போகிறோம் என்பதாக இருந்தது.
ஆனால் அந்தக் கொள்ளையன் அவளைத் திரும்பப் பார்த்த விதத்தில் அக்கறையில்லாத வெறிதான் இருந்தது. ஒரு வேளை அவளுடைய விரலைச் சுட்டு அகற்றி விட்டு, அந்த மோதிரத்தை அவன் எடுத்துக் கொள்வானோ. ஆனால் அது இன்னும் முன்மாலைப் பொழுதாகத்தான் இருந்தது, பதினைந்தடி தூரத்தில் ஒரு மனிதன் நடந்து வந்து கொண்டிருந்தான், அதனால் கொள்ளையன் சீறி விட்டு ஓடிவிட்டான்.
எல்லெனும் அலெக்கும் காபேஜ்டௌனில் இருந்த சிறுவர்களுக்கான ஜிம்னேசியத்தில் நடத்தப்பட்ட, மகப்பேறு பற்றிய வகுப்புகள் ஒன்றில் கலந்து கொண்டிருந்தனர். இதர கர்ப்பிணிப் பெண்கள் ஒன்பது பேர்களின் அண்மையில் எல்லென் ஜிம்மின் தரையில் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த ஒரு விரிப்பில் படுத்துக் கொண்டிருந்தாள். வலியெடுத்துப் பிரசவிக்கும் நேரத்தில் தான் செய்ய வேண்டிய மூச்சு விடும் முறைகளைப் பயிற்சி செய்து கொண்டிருந்தாள். அவர்களின் படுக்கை அறையிலிருந்து கொண்டு வந்திருந்த இளஞ்சிகப்பும், நீலமுமான பூக்களின் உருவைத் தாங்கிய தலையணை உறையின் மீது அவள் தலை படிந்திருக்க, அவள் தன் இடுப்பைத் தூக்கினாள், மறுபடி கீழிறக்கினாள்; தண்ணீர் நிரம்பிய பலூன் போல ஆகி இருந்த அவளுடைய வயிறும் மேலே ஏறிக் கீழே இறங்கியது. பின் அவள் முழங்காலில் முட்டி போட்டும், முன்புறம் தரையில் ஊன்றிய கைகளுமாக இருந்து, அலெக் அவளுடைய முதுகில் டென்னிஸ் பந்துகளை உருட்டிக் கொண்டிருக்கையில் அவை மேலும் கீழுமாக எழும்பி விழும்படி முதுகை உயர்த்தித் தாழ்த்தித் தட்டினாள், பார்க்க, வாந்தி எடுக்க முயலும் நாய் போல இருந்தது அது. குழந்தை பிறப்பை இயற்கையாக ஆக்க வேண்டும் என்பது இவற்றின் நோக்கம்.
தொடர்ந்த ஆறு வியாழக்கிழமைகள் இதை எல்லாம் அவர்கள் செய்தார்கள். எல்லெனுக்கு இந்த வகுப்புகள், மொத்தமாகப் பார்த்தால், ஏமாற்றமாகவே இருந்தன. அதற்கு, வகுப்பின் பாடங்களை விட அதில் கலந்து கொண்டவர்கள்தான் காரணம். எல்லாருக்கும் பொதுவான இக்கட்டான நிலை இருந்ததால், உடனடியாக நட்பு உருவாகும் என்று எதிர்பார்த்தாள், அது நடக்கவில்லை. இத்தனைக்கும் போதனையாளர் ரீவாவின் முயற்சியில் ஏதும் குறைவில்லை, அவர் அடிக்கடி ‘பகிர்தல்’ என்ற சொல்லைப் பயன்படுத்திக் கொண்டுதான் இருந்தார். இறுதியில் அவர்கள் குறைவான அளவில்தான் நெருக்கத்தை வளர்த்திருப்பார்கள், தண்டவாளத்தை விட்டு எகிறிப் போகும் ரயிலில் சிக்கிக் கொண்டவர்களிடையே வரும் நட்பைப் போல இருக்கும் அது. ஆனால் எங்கே இருந்து ஒவ்வொருவரும் வந்தனர், பிறகு எங்கே போகவிருக்கிறார்கள், இதெல்லாம் பேசப்படவில்லை.
கொஞ்சம் தகவலையாவது பிடித்து வைக்கலாம் என்று எல்லென் முயற்சி செய்தாள். க்ளோரியாவும், டெட்டும், மீண்டு உயிர்த்தெழுந்த கிருஸ்து சர்ச்சைச் சேர்ந்தவர்கள். மிரியம் குறைந்தது 40 வயதுக்காரி என்றும், அவள் யாரோடு வந்தாளோ அந்த நபருடன் அவளுக்குத் திருமணமாகவில்லை என்று அவள் ஊகித்தாள். இவற்றை அலெக்குக்கு அவள் விளக்கினாள், அவனோ அவளுடைய இந்த வம்பு நோக்கத்தைச் சகிக்கவில்லை. அவளால் சற்றும் விளக்க முடியாதவர்கள் ராபர்ட்டும், ஜூனும்தான்.
ஜூன் உயரமான மஞ்சள் நிறக் கூந்தல் கொண்டவள், தயக்கத்தோடு ஆனால் நளினமாக நடந்து நகர்ந்தாள். அவள் கண்கள் மூட்டமான நீலம். சில சமயங்களில் ஏதோ அச்சத்தால் உந்தப்பட்டது போல விழி ஆரங்கள் குவிந்தும் விரிந்தும் ஆடின, ஆனால் அவள் எதையோ பார்த்ததாகவோ, ஒளியையும் நிழலையும் மட்டுமாவது பார்த்ததாகவோ எல்லென் நம்பவில்லை. தன் தலையை அவள் சாய்த்துக் கொண்டிருந்த விதம்தான் அவளுடைய சிறப்பான அம்சம். நின்ற விதம் ஒரு பெரிய, எழில் வாய்ந்த பறவை போல அவளைக் காட்டியது, தலை உன்னிப்பாகவும், முழுதுமே அசைவற்றும் இருக்க, ஏதோ அபாய எச்சரிக்கையை அவள் கேட்டுக் கொண்டிருந்தாள் என்பது போல இருக்கும். பார்வை அற்றோருக்கு வழி காட்டியாக இருக்கும் அவளுடைய நாய், காலடியில் படுத்திருக்கும், அத்தனை விசுவாசம் காட்டிய அது, அவளுடைய கணவனை உபரியாக ஆக்கி இருந்தது. ராபர்ட் தடிமனாக, பருக்கள் நிறைந்த, கடுகடுப்பான மனிதர், அவர் ஜூனை எந்நேரமும் கவனித்தபடியே இருந்தார்.
மற்றவர்கள் எதை எல்லாம் ஒளித்தனரோ, அவற்றை ஜூன் கொடுத்தாள்; அவள் வாய் விட்டுச் சிரித்தாள், தன் பயங்களைப் பற்றிப் பேசினாள். எல்லெனுக்கு நினைவிருந்த நாட்களில் சிறப்பானது ஒன்று, அன்று ஜூன் அடுக்கத் தக்கனவாக உருவமைக்கப்பட்ட உலோக நாற்காலி ஒன்றில் அருள் வாக்கு கூறும் பெண் ஒருத்தியைப் போல உட்கார்ந்திருந்தாள், அவளுடைய ஒளி ஊடுருவும் கண்ணிமைகளின் பின்னே பார்வை இல்லாத கண்பாவைகள் தாவி அலைந்தன. ‘என்னால் நம்பவே முடியவில்லை, நான் கர்ப்பமாகி இருக்கிறேன் என்பதை,’ என்றாள் அவள். ‘என்னை நான் பார்த்ததே இல்லை என்பதால் இப்படி இருக்கும் போலிருக்கிறது.’
எல்லாருக்கும் அது அப்படித்தானே இருக்கிறது, இல்லையா, எல்லென் நினைத்தாள்.
வகுப்புடைய கடைசி இரவன்று இயற்கையான குழந்தை பிறப்பைப் பற்றிய திரைப்படம் ஒன்றை அவர்கள் பார்த்தனர். யாரோ சோளப் பொரி (பாப்கார்ன்) கொண்டு வந்திருந்தனர், எல்லாரும் திரையை வெறித்துப் பார்த்தனர், பொரி இருந்த வாளியைக் கைமாற்றிக் கொடுத்தபடி. இருட்டில் எல்லெனுக்கு ராபர்ட் ஜூனிடம் திரையில் என்ன காட்டப்படுகிறது என்பதை மெல்லிய குரலில் சொல்லிக் கொண்டிருந்தது கேட்டது. ‘அம்மாவின் உடலிலிருந்து குழந்தை வெளியே வருகிறது,’ அவன் சொன்னான். எல்லெனும், அலெக்கும் கண்ணீர் பெருக்கினார்கள். வகுப்பில் இருந்த மற்ற எல்லாரும் அப்படி அழுதனர் என்று எல்லென் நினைத்தாள். அவளுக்கு இது பற்றி நிச்சயம் இல்லை, ஏனெனில் விளக்குகள் மறுபடி ஒளிர்ந்த போது, அவளுக்கு மற்றவர் முகங்களை உற்று நோக்க விருப்பமில்லை.
ரீவா ப்ரொஜெக்டரை முடிக் கட்டினாள், மற்ற பெண்களும், துணைக்கு வந்தவர்களும் கிளம்பத் தயாரானார்கள். வீங்கிய கால்கள் உப்பிய காலணிகளுக்குள் நுழைக்கப்பட்டன, அசையாமல் இருந்த உடல்கள் எழும்பி நிற்க, கால்கள் திணறியபோது, முட்டிக் கால்கள் கடிகாரத்தில் பத்தாம் எண்ணிலும், இரண்டாம் எண்ணிலும் குத்தின. வயிறுகள் முன் செல்ல, அவர்கள் நடந்தனர்; கடினமான, கனமான முட்டை வடிவங்கள், வயிற்றுத் தோலை நடுவிலிருந்து மார்பு வரை, கைகள் வரை அகட்டித் தள்ளி இருக்க, கன்னங்களை உப்பி ஊதியபடி (சென்றனர்). கஷ்டத்தால் கண்கள் சிவந்திருக்க, பத்து பேரும் ஒருவரை ஒருவர் முன்பை விட விகாரமாகத் தோன்றும்படி ஆக்கிக் கொண்டு, அந்தப் பெண்கள் துன்பம் எதிரே நிற்கும் எதிர்காலத்தை நோக்கித் தனியாகச் செல்லத் தயாராகினர்.
 
மருத்துவ மனையில், எல்லென் இயற்கையான குழந்தை பெறுவது பற்றிய எல்லாப் பயிற்சிகளையும் மறந்து, வலியைக் கொல்ல மயக்க மருந்து கேட்டுக் கதறத் தொடங்கினாள். குழந்தை இரண்டு வாரங்கள் தாமதமாகி இருந்தது, பிரசவத்தின் துவக்கத்தை ஒரு மருந்து கொடுத்து ஊக்கி இருந்தார்கள். “இந்தக் குழந்தைக்கு உங்களை மிகவும் பிடித்திருக்க வேண்டும்,” என்றார் அந்த டாக்டர், மருந்தின் அளவை அதிகரித்த வண்ணம். “அவன் பிறக்க விரும்பவில்லை.” அவன் வெளியே வந்த போது அவன் மூச்சு விட்டுக் கொண்டிருக்கவில்லை, எனவே செவிலி அவனைப் பறித்துக் கொண்டு வராந்தாவில் ஓடினாள். ‘கழுத்தைச் சுற்றி தொப்புள் கொடி இருந்தால், அந்தக் குழந்தைகள் அதிர்ஷ்டக்காரக் குழந்தைகள் என்று என் அம்மா எப்போதும் சொல்வாள்,’ என்றான் அலெக். பச்சைத் துணிகளால் மூடப்பட்டுப் படுத்திருந்தாள் எல்லென், டாக்டர்கள் அவளுக்குத் தையல் போட்டுக் கொண்டிருந்தனர். கொள்ளையடிக்கப்பட்டது போலவும், வன்புணர்வு செய்யப்பட்டது போலவும், வலியுடனும், காலியாகி விட்ட உணர்வுடனும் இருப்பதாக உணர்ந்தாள். தெருவில் வழிப்பறி செய்யப்பட்டது போல இருப்பதாக அவள் அலெக்கிடம் சொன்னாள், இருவரும் சிரிக்கத் துவங்கினர்.
“அதை ரீவாவிடம் சொல்லு,” என்றான் அவன்.
“ஆனால் நான் மோசமாக உணரவில்லை. சுத்தமானது போல- உணர்கிறேன்.”
“வழிப்பறிக்கு ஆளான பிறகு சுத்தமானதாக உணரும் எவருக்கும் ஏதோ மோசமான பிரச்சினை இருக்கிறது,” என்றான் அலெக்.
இரண்டு மணி நேரத்தில் அலெய்னைத் திரும்பக் கொண்டு வந்தார்கள், சுத்தம் செய்து, வெள்ளை நிற முசுமுசுப்பான துணியில் சுற்றி, தலையிலும் உஷ்ணத்தைத் தக்க வைக்க ஒரு துணித் தொப்பி போட்டு இருந்தார்கள். வகுப்பில் இருந்த மற்றவர்களைப் பற்றியும், அவர்களுக்கு என்ன ஆகி இருக்கும் என்றும் எல்லென் நினைக்க ஆரம்பித்தாள். பத்து பேர்களில் நல்ல முடிவுகள் கிட்டும் வாய்ப்புகள் என்ன என்று, தன் மகனைக் கையில் ஏந்திய வண்ணம் யோசித்தாள்.
விருந்து அவர்கள் வீட்டில் நடந்தது. அழைப்புக் கடிதத்தில் கலந்து கொள்ள வருவது குறித்துத் தகவல் தெரிவிக்கக் கேட்டு அனுப்பி இருந்தாலும், முதல் நாள் மாலை வரை எல்லெனுக்கு பத்தில் ஏழு பேர்தான் பதில் சொல்லி இருந்தனர். அது கூட்டு முயற்சி விருந்து என்பதால் அவர்கள் தம் பங்குக்கு சில பண்டங்களை எடுத்து வருவதாக இருந்தது. அவள் எத்தனை (அட்டைத்) தட்டுகள் தேவைப்படும் என்று தெரிந்து கொள்வதற்காகக் கேட்டிருந்தாள். அந்த வகுப்பில் இருந்தவர்களின் பட்டியலில் தொலைபேசி எண்களைக் கண்டு பிடித்தாள்.
அவள் கண்டு பிடித்த முதல் விஷயம், மிரியமின் தொலைபேசித் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டிருந்தது. எல்லென் இது பற்றி காரணமற்ற அவநம்பிக்கை கொள்ளத் துவங்கினாள். அந்தக் குழுவினரில் ஒருவர் எங்கே இருக்கிறார் என்பதே தெரியாமல் போவதும், அலெய்னின் சமவயதினக் குழந்தை ஒருவர் பற்றி ஏதும் தெரியாமல் போவதும், அவளுக்கு அதிர்வூட்டின. தகவல் கொடுக்கும் எண்ணைக் கூப்பிட்டு மிரியமின் புது எண்ணை வாங்கினாள். அந்த எண்ணைக் கூப்பிட்டுப் பேசியபோது, மிரியமுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருப்பதும், எல்லாம் நலமாக உள்ளதும் தெரிய வந்தன.
எல்லெனின் மனதைரியம் திரும்பியது. தனக்குப் பதில் தெரிவிக்காத இதர நபர்களையும் கூப்பிட்டுப் பார்க்க முடிவு செய்தாள். உருகுவாயன் பெண்ணுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருந்தது, ஆனால் மொழிப் பிரச்சினையால் எல்லெனுக்கு விவரங்கள் புரிபடவில்லை. தொடர்பை முடித்துக் கொண்டு, ஜூனுடைய எண்ணைக் கூப்பிட்டாள். ஏழு தடவை மணி அடித்தாலும், யாரும் பதில் சொல்லவில்லை.
அது விசித்திரமாக இருந்தது; புதிதாகக் குழந்தை பிறந்த வீட்டில் எந்நேரமும் யாராவது இருப்பார்கள். இரவு உணவு முடியும் வரை காத்திருந்து விட்டு, மறுபடி கூப்பிட்டாள். இந்த முறை ராபர்ட் பதில் பேசினார். அவருடைய குரலைக் கேட்டு எல்லெனுக்குச் சலிப்பு வந்தது; அப்போதுதான் தான் எந்த அளவுக்கு ஜூனுடைய குரலைக் கேட்க விரும்பினாள் என்பது எல்லெனுக்குப் புரிந்தது. ஆனால் அவள் ராபர்ட்டிடம் தான் யார் என்பதைத் தெரிவித்தாள், அவர்கள் அந்த விருந்துக்கு வருவார்களா என்று கேட்டாள்.
ராபர்ட் தன் குரலில் இருந்த கரகரப்பை நீக்க முயற்சி செய்தார். பிறகு சிறிது காற்றை உறிஞ்சினார். ‘நான் நேராகச் சொல்லி விடுவது நல்லது,’ அவர் சொன்னார், ‘நாங்கள் அந்தக் குழந்தையை இழந்து விட்டோம்.’
‘ஓ, கடவுளே!’ என்றாள் எல்லென். ‘இப்போது தொல்லை செய்வது பற்றி நான் மிக வருந்துகிறேன்.’
‘எங்களுக்கு அழைப்பு வந்தது,’ அவள் ஏதும் சொல்லாதது போலத் தொடர்ந்தபடி அவர் மேலும் பேசினார், ‘மேலும் வரலாம் என்றுதான் நாங்கள் நினைத்தோம். ஜூன் போகலாமென்றாள், ஆனால் எனக்கு இஷ்டமில்லை.’
எல்லென் மௌனமாக இருந்தாள். ‘ஆனால் எப்படி இருந்தாலென்ன,’ அவர் சொன்னார், ‘நீங்கள் கூப்பிட்டது அன்பான செய்கை.’
‘ஓ, இல்லவே இல்லை. நான் அப்படிக் கூப்பிட்டிருக்கக் கூடாது. எனக்கு விவரம் தெரிந்திருக்கவில்லை.’
‘எல்லார் கிட்டேயும் சொல்ல ஜூனுக்கு இஷ்டமில்லை. அவங்க தானாத் தெரிஞ்சுப்பாங்க,’ அவர் சொன்னார், ‘கொஞ்ச நாள்லன்னு நினைச்சாள்.’ ஓ, நாளாவட்டத்திலதான் தெரிஞ்சுப்பாங்க என்று எல்லென் நினைத்தாள், ஆனால் அதற்கு அவர்களுக்கு என்ன நஷ்டம் ஏற்படும்? தனக்கு ஏற்பட்டிருக்கிற தர்மசங்கடத்தால் அவள் அழத் தயாராக இருந்தாள். என்ன ஆயிற்றென்று விவரம் தெரிந்து கொள்ள வேண்டுமென்றுதான் இருந்தது அவளுக்கு, ஆனால் அவளால் வாய்விட்டுக் கேட்க முடியவில்லை. “இப்படி நான் இடைஞ்சல் பண்ணினது எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு,” என்று மறுபடி அழுத்திச் சொன்னாள். “அது ரொம்ப மோசமான விஷயம்.”
“ஆமாம்,’ என்றார் ராபர்ட்.
அப்போது யாரும் எதுவும் சொல்லவில்லை. ராபர்ட்டே உரையாடலை இன்னும் கூடுதலான சக்தியோடு துவங்கினார். ‘ஆனால், அது நான் உங்களோட குழந்தை எப்படி இருக்குன்னு கேக்கறதைத் தடுக்கல்லெ.’
‘எங்களுக்குப் பொறந்தது ஒரு சின்னப் பையன்,’ எல்லென் சொன்னாள், ‘அவன் நல்லாவும் இருக்கான்.’ அலெய்ன் பிறந்த போது மூச்சு விடாததால் அவர்களுக்கு ஏற்பட்ட பீதியைப் பற்றி அவள் ராபர்ட்டிடம் சொல்லவில்லை. நம் மகன் உயிரோடு இருக்கையில் அப்படி குறைகளைச் சொல்வது சரியென்று அவளுக்குப் படவில்லை.
‘வாழ்த்துகள்,’ என்றார் ராபர்ட். ‘உங்களுடைய குழந்தை உங்களுக்கு வாழ்நாள் முழுதும் மகிழ்ச்சியைக் கொணர்வான்.’ அவருடைய தொனி கடுமையாக, அடக்கமானதாக, ஆனால் தண்டிப்பதாக ஒலித்தது. வாழ்நாட்கள் என்பன அவர் கற்பனை செய்வது போல அப்படி ஒன்றும் பிரத்தியேகமானவை அல்ல, அதுவும் இந்த மாதிரி சமயத்தில், என்று அவரிடம் சொல்ல நினைத்தாள், ஆனால் சொல்லவில்லை.
அலெக்கிடம் இதைப் பற்றிச் சொல்லும்போதுதான் எல்லெனுக்கு ஆத்திரம் வந்தது. ‘ரீவாக்கு அது தெரியும்; அவள் இப்படி நான் அவங்களை கூப்பிடாம என்னைத் தடுத்திருக்க முடியும்; அவள் ஏன் எங்கிட்டெ சொல்லல்லை?’
‘உன்னை இதுலெருந்து காப்பாத்தறது அவளுக்கு அவசியம் இல்லியோ என்னவோ?’ அலெக் சொன்னார். எல்லாரும் மறுபடி சந்திப்பதில் அவருக்கு இஷ்டமிருந்திருக்கவில்லை. அதிகம் தெரியாதவர்களோடு நெருங்குவது தொல்லைகளைத் தேடிப் போவதுதான் என்னும் அவரது நம்பிக்கையை இந்தச் சம்பவம் உறுதிதான் செய்தது. ஆனால் அவர் பரிவோடுதான் இருந்தார். அலெய்னைத் தன் நெஞ்சோடு இறுக அணைத்துக் கொண்டு, சமையலறையில் நின்ற அவர், மனைவியைத் தேற்றினார்.
அடுத்த நாள் நண்பகலில், புதுப் பெற்றோர்கள் அந்தக் குறுகிய நடைபாதையில் ஏறி வரத் துவங்கினார்கள். ஒன்பது குழந்தைகளையும் சேர்த்துப் பார்த்தால் ஒரு கும்பல் போலத் தோன்றியது சிரிப்பூட்டியது. இரண்டு குழந்தைகளுக்கு நிறைய சுருளான கருப்பு முடி இருந்தது, ஆனால் பெரும்பாலும் அலெய்னைப் போல மொட்டைத் தலையாகத்தான் இருந்தனர்.  கிருஸ்து மீண்டும் உயிர்த்தெழுந்தாரென்பதை நம்பும் அந்தத் தம்பதியருக்கு அறுவை சிகிச்சையால் பிறந்த குழந்தைக்கு, முகம் தேவதை போல, அமைதியாக இருந்தது, ஆனால் பெரும்பான்மையின் முகங்கள் கவலையோடும், சுளிப்போடும், வெளி உலக வாழ்க்கைக்குப் பழக்கமில்லாததாகவும் தெரிந்தன. வீடு முழுதும் குழந்தைகள் தோள்களில் துள்ளின, மடிகளில் தூங்கின, குழந்தைகளுக்கான இருக்கைகளில் சாய்த்து வைக்கப்பட்டு உட்கார்ந்திருந்தன. எல்லாம் இப்போது முடிந்து விட்டதால், பெற்றோர்கள் உரையாட முடிந்தவராக இருந்தனர். மகப்பேறுக் கதைகளைச் சொன்னார்கள், அம்மாவான பெண்களின் தைரியத்தைப் பற்றி, மருத்துவர்களின் அலட்சியத்தைப் பற்றிப் பேசினர். இரவு பூராவும் தூங்கும் குழந்தைகளின் பெற்றோர்கள், அப்படித் தூங்காத குழந்தைகளின் பெற்றோரிடம் பெருமிதம் காட்டினர். ஒரு நபர் அலெக் மாதிரி வழக்கறிஞர், அவருடைய அலுவலகமும் அலெக்கின் அலுவலகத்தின் தெருப் பகுதியிலேயே இருந்தது என்று தெரிய வந்தது. ஒரு தம்பதியருக்கு வீட்டொடு இருந்து குழந்தையைப் பராமரிக்கும் தாதி ஒருத்தி ஏற்கனவே வந்திருந்தாள், வந்திருந்த பெண்களில் பாதிப்பேர் மறுபடி வேலைக்குத் திரும்புவதாக இருந்தனர்.
இத்தனை நாளாக அவள் விரும்பி இருந்த சமூகவியல் தகவல்கள் எல்லெனுக்குக் கிட்டினதால் அவள் சந்தோஷப்பட்டாள். ஜுன் பற்றி எல்லாருக்கும் தகவல் போயிருந்தது, அவள் விருந்துக்கு வராதது நல்லது என்று எல்லாரும் கருதினார்கள், ஏனெனில் அவள் வருவது விருந்தின் உற்சாகத்தைக் குறைத்திருக்கும். அவள் இரண்டு வாரம் தள்ளிப் போனதால் மருத்துவச் சோதனைகளுக்குப் போக வேண்டியதாயிற்று என்று தகவல் பேசப்பட்டது. அவளுடைய இரண்டாவது சோதனையின் போது அவளுடைய குழந்தை இறந்து விட்டது என்று மருத்துவர் சொன்னாராம். மிகவுமே மோசமான விஷயம் என்னவென்றால் அவள் இறந்து போயிருந்த அந்தக் குழந்தையை இன்னொரு வாரம் சுமக்க வேண்டி இருந்ததுதான். கடைசியில் ஜூனுடைய மகப்பேறு மிகவும் கடினமானதாக ஆகி விட்டிருந்தது. குழந்தையிடம் ஏதும் குறை இருந்ததாக யாரும் கண்டு பிடிக்க முடியவில்லையாம்.
அவர்கள் அந்தக் கதையைச் சொன்ன போது பெண்களின் கண்கள் சந்தித்தன, அவர்களுடைய உதடுகள் கீழ் நோக்கி அழுத்தப்பட்டிருந்தன. ஒரு ரயில் மோதிக் கொண்டது போலவும், அடுத்த இருக்கையில் இருந்த நபர் நசுக்கப்பட்டது போலவும் இது இருந்தது. தாம் அந்த விபத்திலிருந்து தப்பித்தது குறித்து ஒரு நிம்மதியான உணர்வைப் பெறுவதை அவர்களால் தவிர்க்க முடியவில்லை. அந்த அதிர்ஷ்டத்தோடு பயமும் எழுந்தது, இந்த அதிர்ஷ்டம் நிறைய நாட்கள் நீடிக்காது என்பது போல, அவளின் குழந்தை பிறப்பதற்கு வேகப்பட்டு வலியெடுத்த நேரத்திலிருந்தே எல்லெனிடம் அந்த இறுகின, முட்டை வடிவான பயமும் வேகப்பட்டு இருந்தது.
குழந்தைகளெல்லாம் சேர்ந்து இருக்கும் படம் ஒன்றை எடுக்க எல்லென் ஆசைப்பட்டாள். சோஃபாவின் ஒரு மூலையில் அவனுடைய போர்வையில் முட்டுக் கொடுத்து உயர்த்தி, அலெய்னை முதலில் வெளியே வைத்தார்கள். மற்றவர்கள் பின் தொடர்ந்தனர், லீலா, ஆண்ட்ரூ, எவெலின், ஆடம், ஆஷ்லி, ஒரின், ஜாக்ஸன், மற்றும் வில்யம், ஒரே வரிசையில் எல்லாமாக ஒன்பது பரிசுகள். அவர்களின் தலைகள் மேலும் கீழும் ஆடின, அல்லது ஒரு பக்கமாகச் சரிந்தன; அவர்களின் வாய்கள் ஆச்சரியத்தில் வட்டமாக 0க்களாக இருந்தன. அண்டையிலிருந்த குழந்தையின் மீது சாய்ந்தபடி அவர்கள் தூங்கிப் போனார்கள், அல்லது கோணலும் மாணலுமாகச் சாய்ந்த கைகளால் அருகிலிருப்பவரைத் தொட நீட்டி, விவரம் தெரியாமல் அவன் முகத்தில் அடித்தார்கள்.
பெற்றோர்கள் தம் காமெராக்களைத் தயாராக வைத்திருந்தனர். முழு நேரமும் வாய் விட்டுச் சிரித்தபடி, படங்களை எடுக்கத் துவங்கினர். எத்தனையோ நாட்களில் அவர்கள் பார்த்ததிலேயே வரிசையாக அமர்ந்திருந்த இந்தக் குழந்தைகள்தான் ஹாஸ்யமாகத் தெரிந்தனர். இந்த வரிசை இத்தனை சிரிப்பூட்டுவதாக இருக்குமென்று யாரும் கற்பனை செய்திருக்கவில்லை. குழந்தைகள் சற்று அதிர்வுற்றனர. அவர்கள் தங்களில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை, ஆனால் அறை பூராவும் இருந்த அதி உற்சாகமாக இருந்த வளர்ந்தவர்களையே பார்த்தனர். ஒரு குழந்தை குப்புறச் சரிந்தது, அடுத்திருந்த குழந்தை அவன் மீது சரிந்தது. பின் மொத்த வரிசையுமே சரிந்து விழத் துவங்கியது. முட்டைக் கோஸ் மாதிரி முகம் கொண்ட விசித்திரப் பிறவிகளாகவும், உரு மாறுகின்ற சித்திரக் குள்ளர்களாகவும், போர்வைகளில் இறுக்கிச் சுற்றப்பட்டு, அல்லது கழுத்தும் வயிறுமாகக் குழைந்த குட்டைகளாகவும் தெரிந்த அவர்கள், ஓர் அன்னிய நட்சத்திரத்திலிருந்து வந்தவர்களாகக் கூட இருந்திருக்கக் கூடும். தம் குழந்தைகள் இப்படி ஆபத்தில்லாமல் கீழிறங்கியதில் கவலை நீங்கிய உணர்வோடும், இவர்கள் என்னவாகப் போகிறார்கள் என்று வியப்போடும் பெற்றோர்கள் சிரித்தனர். கவிழ்ந்து விழுந்தபடி இறுதியில் ஒரே குவியலாக ஆகத் துவங்கிய அந்த கேலிச் சித்திரங்களான ஒன்பது உடல்களைச் சுற்றிலும், அவர்களில் ஒரு குழந்தை, எவெலின், எவெலின் தான் என்று எல்லென் நினைக்கிறாள், அழத் துவங்கும் வரை, ஃப்ளாஷ் பல்புகள் மின்னியவண்ணம் இருந்தன.

~oOo~

govier-katherineஇங்கிலிஷ் மூலம்: காதரீன் கோவீயெ : முதலில் பிரசுரமானது ‘ஃபேபில்ஸ் ஆஃப் ப்ரன்ஸ்விக் அவென்யு’ என்ற பெங்குவின் பிரசுரப் புத்தகத்தில். இந்தக் கதை த நியு ஆக்ஸ்ஃபோர்ட் புக் ஆஃப் கனெடியன் ஷார்ட் ஸ்டோரீஸ் என்கிற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.
காதரீன் கோவீயெவின் வாழ்வுக் குறிப்பு இங்கே கிட்டும்: https://www.bookbrowse.com/biographies/index.cfm/author_number/2103/katherine-govier
தமிழாக்கம் செய்தவர்: பஞ்சநதம்/ ஆகஸ்ட் 2016.
இந்த ஆக்ஸ்ஃபோர்ட் தொகுப்பின் பதிப்பாசிரியர்கள் மார்கரெட் அட்வுட் டும், ராபர்ட் வீவரும்.  1995 ஆம் வருடம் வெளியான புத்தகம்.
Katherine Govier- Fables of Brunswick Avenue (Penguin)
Margaret Atwood and Robert Weaver/ New Oxford Book of Canadian Short Stories/ 1995

___________________________

[வாசகரின் சுட்டலுக்குப் பிறகு விடுபட்டிருந்த ஒரு பத்தி சேர்க்கப்பட்டிருக்கிறது. 24/செப்டம்பர்/2016]

2 Replies to “சமூகவியல்”

  1. கதை தொடர்ச்சியற்றதாக அல்லது முடியாமல் இருப்பது போலத் தோன்றுகிறது. மொழிபெயர்ப்பில் ஏதும் விடப்பட்டுள்ளதா? வழிப்பறிக்காரனிடம் அகப்படும் எல்லென் என்ன ஆகிறாள்?

    1. பத்தி விடுபட்டிருந்தது. அந்தக் கொள்ளையன் தெருவில் வரும் பாதசாரியைக் கவனித்து, ஓடி விடுகிறான் என்ற வரிகள் விடுபட்டிருந்தன.
      பிரதியை ஒட்டும்போது நேர்ந்த பிழை. சுட்டியதற்கு நன்றி. இப்போது அந்தப் பத்தி சேர்க்கப்பட்டிருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.