[stextbox id=”info” caption=”ஜி20 – அச்சுறுத்தும் சைனா”]
சமீப காலங்களில் சீனா தனது வெளியுறவு கொள்கையில் மிக ஆக்ரோஷமான நிலைப்பாடுகளை பின்பற்றி வருகிறது. தென் சீன கடலின் முக்கிய வர்த்தக பாதைகளை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளுடன் செயல்படுகிறது என்றே சொல்லலாம். சமீபத்திய இந்த வெளிப்படையான மாற்றத்திற்கு காரணங்கள் என பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. தகவல் தொடர்பை சீன அரசாங்கம் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதால் அங்கு நடப்பதை முழுவதும் வகுத்து யாராலும் கூறிவிட இயலாது. அதே நேரம் பல பார்வைகளை தொடர்ந்து கவனிக்கையில் ஒரு சித்திரம் கிடைக்கிறது.
அப்படிப்பட்ட ஒரு பார்வையை கீழே உள்ள கட்டுரை அளிக்கிறது. சீனாவின் ராணுவத்தின் நடைபெறும் வரலாறு காணா மாற்றங்களினால் உண்டாகியுள்ள உட்பூசலின் விளைவாகவே இந்த ஒருமுகமற்ற வெளியுறவு கொள்கையை சீனா கடைபிடிக்கிறது என வாதிடுகிறது இந்த கட்டுரை. அரியணை ஏறியதிலிருந்தே சீனாவின் புதிய ஜனாதிபதி தனது அரசியல் எதிராளிகளின் ராணுவ ஆதரவு தளங்களை அழிக்க ஆரம்பித்திருந்தார். அதன் விளைவாக ராணுவத்தின் பாரம்பரியமான அதிகார உச்சங்களில் பதட்டம் அதிகரித்தது. யாரிடம் அதிகாரம் உள்ளது என்று தெளிவாக சொல்லப்படாத நிலையில் மூர்க்கமான நிலைப்பாட்டை எடுக்கும் சக்திகள் அதன் முடிவுகளில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து விட்டன என இந்தக் கட்டுரை ஒரு பார்வையை வைக்கிறது. இதுவும் நிரூபணப்படுத்தப்படாத கருத்து மட்டுமே. சீனாவைக் குறித்த ஒரு முழுபிம்பத்தை உருவாக்க இதையும் ஓரத்தில் சேர்த்துக் கொள்ளலாம்.
[stextbox id=”info” caption=”கையுறை அணிந்த இனவாதம்”]
நௌரூ – மத்திய பசிஃபிக் சமுத்திரத்தின் மிகச் சிறிய தீவு. பத்தாயிரத்திற்கு சிறிது கூடுதலான மக்கள் தொகையை கொண்ட நௌரூ மற்றொரு நாட்டின் காலனியாகவே பெரும்பாலும் இருந்து வந்துள்ளது. அறுபதுகளிலும், எழுபதுகளிலும் பாஸ்ஃபேட் வளம் மிக்க நிலமாக இருந்த காலங்களில் அத்தீவின் மக்கள் வளமான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்கள். அது காலியான பின் நௌரூ தன் வருமானத்திற்காக வரி ஏய்ப்பதற்கும், ஹவாலா பணம் மோசடி செய்வதற்கும் ஒரு இடமாக தன்னை மாற்றிக் கொண்டது.
இப்போது ஆஸ்திரேலியா, அவர்களுக்கு கொடுக்கப்படும் உதவித் தொகைக்காக தன்னுடைய அகதி சிறைச்சாலையை நௌரூவில் கட்டமைத்து அவர்களைக் கொண்டே நடத்துகிறது. ஆஸ்த்ரேலியாவில் தஞ்சம் புகுவதற்காக படகுகளில் வரும் அகதிகளையும், விசா காலாவதியான பின்னும் ஆஸ்த்ரேலியாவில் இன்னும் தங்கிக் கொண்டிருப்பவர்களையும், விசா இருந்தும் குற்றங்களுக்காக நாட்டில் இருந்து வெளியேற்றப்பட காத்திருப்பவர்களையும் தன் நாட்டு சிறைகளில், தன் சட்டத்தின் மேற்பார்வையில் வைக்காமல் அவர்களை இந்த நௌரூவின் சிறைக்குள் அனுப்பி விடுகிறது. அந்த சிறை மதில்களுக்குள் நடக்கும் கொடுமை, வன்முறை, சுரண்டல், அவலம் என எதுவும் ஆஸ்த்ரேலியாவும் அதன் மக்களும் எதிர் கொள்ள வேண்டியதில்லை என்ற காரணத்தால் இந்த ஏற்பாட்டிற்குப் பெரும் ஆதரவு உள்ளது.
தன் நாட்டின் சீரழிவிற்கு காரணம் படகுகளில் நிராதரவாக வரும் மாற்று நிறமுடைய இனத்தவர்கள்தான் எனச் சொல்லி வாக்கு சேர்ப்பதிலும், வாக்களிப்பதிலும் ஆஸ்த்ரேலிய மக்களுக்கு பிரச்சனை இல்லை என்று சமீபத்திய பல தேர்தல்கள் உறுதி செய்துள்ளன. யாரும் அறிந்திட முடியாத கருப்பு பெட்டியான நௌரூவின் அகதிச் சிறையிலிருந்து வெளிவந்த சில ஆவணங்கள் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை வெளிச்சமிட்டு காட்டுகின்றன. சிறையாளர்களால் வன்கொடுமைக்கு உட்பட்ட குழந்தைகள் நாளடைவில் மனம் சிதிலமடைந்து தங்களைத் தாமே குரூரமாகச் சித்திரவதை செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள் என்பது சகிக்க முடியாத காட்சியாக உள்ளது. அங்கு நடப்பதை அறிந்திருந்தும் மற்ற நாடுகளுக்கு மனித உரிமையைக் குறித்து பாடம் எடுக்கும் வாய்ப்பை ஆஸ்த்ரேலியா தவற விடுவதில்லை, தன் நடத்தையைத் திருத்திக் கொள்ளவும் எந்த நடவடிக்கையையும் இத்தனை காலமாக எடுக்கவும் இல்லை.
வெளிவந்த ஆவணங்கள் குறித்த செய்தி கீழே: