காற்று சுத்திகரிக்கும் கோபுரம்

air_purifier

பாரதியின் அமரத்துவம் பெற்ற பாடல்களில் ஒன்று “காற்று வெளியிடைக் கண்ணம்மா, நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்”. ஆனால் பாரதி இந்நாளில் இருந்திருந்தால் காற்று வெளியிடையில் காதலை எண்ணிக் களித்திருப்பானா என்று தெரியாது. ஆனால் நிச்சயம் கரும்புகையையும், தூசும், மாசும் அடர்ந்த காற்றைக் கண்டிருப்பான்.
வளர்கின்ற நாடுகளில் 98% நகரங்கள் உலக சுகாதார மையம் வகுத்த காற்று சம்பந்தப்பட்ட அளவீடுகளை மீறியே இருக்கின்றன. வளர்ந்த நாடுகளில் இது 58%. வளரும் நாடுகள் தொழிற்சாலை உற்பத்தியையே தங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு நம்பியிருப்பதால் காற்று மாசுபாடு என்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. வாகனப் புகையோடு பனி சேர்கையில் கொடிய நச்சுத்தன்மை கொண்ட பனிப்புகை smog உருவாகிறது. கண் எரிச்சல், மூச்சு விடுவதில் சிரமம் எனத் தொடங்கி புற்றுநோய் வரை உடலில் இது பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் இந்த காற்று மாசுபாட்டைக் குறைக்கச் சொல்லி சொன்னால் வளர்ந்த நாடுகள் தம்மீது நடத்துகிற அரசியல் தாக்குதல் என வளரும் நாடுகள் கொதிக்கின்றன.
கொஞ்சம் இந்த காற்று மாசுபடும் பொருட்கள் எவையென்று பார்த்தால் வாயு நிலையில் இருக்கும் நைட்ரஜன் மற்றும் சல்ஃபரின் ஆக்ஸைடுகள், அதன்பின் வைரஸ், பேக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள், அதன்பின் particulate matter எனப்படும் துகள்மப் பொருட்கள் ப்டோன்ங்குற்மவை . மைக்ரோமீட்டர் அளவுகளில் சொன்னால் இந்த துகள்மப் பொருட்களில் 2.5 முதல் 10 மைக்ரோமீட்டர் வரை இருப்பவை, அதற்குமேல் புழுதி இதெல்லாம். இதில் இந்த 2.5 முதல் 10 வரையிலான துகள்மங்கள் ஆபத்தானவை. அவைகளின் சிறிய அளவுகளால் வடிகட்டப்படாமல், நேரடியாக நுரையீரலும், இரத்தத்திலும் கலந்துவிடக் கூடியவை. இவற்றை PM(particulate matter) 2.5 மற்றும் PM 10 என அழைக்கிறார்கள். இவைகள்தான் பனிப்புகை உருவாக்கத்தில் முக்கியமானவை.
இந்தப் பனிப்புகை தாக்கத்தால் உலகில் மோசமாக பாதிக்கப்பட்ட நகரங்களில் முக்கியமான நகரம் பீஜிங். ஹாலந்தைச் சேர்ந்த டான் ரூஸ்ஹார்ட (Daan Roosgarde) என்பவர் பீஜிங்கிற்கு சுற்றுலா போகையில் தங்கியிருந்த விடுதியில் இருந்து நகரின் அழகை ரசிக்கலாம் என்று பார்த்தால் மொத்த பீஜிங்கையும் இந்த நச்சுப்புகை கம்பளி மாதிரி போர்த்தியிருந்திருக்கிறது. இதனால் உந்தப்பெற்ற அவர் காற்று சுத்திகரிக்கும் ஒரு கோபுரத்தை வடிவமைத்திருக்கிறார். ஏழு மீட்டர் உயரம் கொண்ட அது மணிக்கு சுமார் ஆயிரம் கன மீட்டர் காற்றில் இருந்து இந்தத் துகள்மங்களைப் பிரித்து எடுக்கிறது. இத்தனைக்கும் ஒரு தேநீர் தயாரிக்கும் இயந்திரம் பயன்படுத்தும் அதே மின்சக்தியில். ஆச்சரியம் தானே.
அந்தக் கோபுரம் ஏதோ கோயில்களில் கர்மாக்கள் தொலைகிற கதையாய் உள்ளே வரும் காற்றை மாயத்தால் புனிதப்படுத்துவதில்லை. சிறுவயதில் சீப்பை பரபரவென்று துணியில் தேய்த்து சிறு காகிதத் துகள்களை ஈர்ப்பதை வைத்து விளையாடியிருப்போம் அல்லவா. முன்பு வந்துகொண்டிருந்த பிக்சர் ட்யூப் கொண்ட தொலைக்காட்சி அணைக்கப்பட்டதும் அதனருகில் போய் கைகளைக் காட்டி கையில் இருக்கும் முடிகள் குத்திட்டு நிற்பதை அனுபவித்திருப்போம். அந்தத் திரையை கூர்ந்து கவனித்தால் அதன்மேல் ஒரு மெல்லிய தூசுப் படலம் இருக்கும். இதெல்லாம் static electricity என்னும் நிலைமின்னியலின் விளையாட்டு. நேர் மற்றும் எதிர் மின்னேற்றம் செய்கிற விளையாட்டு. அதே நிலைமின்னியல்தான் இங்கு காற்றை சுத்திகரிக்கப் பயன்படுகிறது.
காற்றில் இருக்கும் இந்தத் துகள்கள் வண்டல் போல் கீழே தங்காது, அதேநேரம் கரைந்தும் போகாமல் ஒரு கூழ்மமாக(colloid) திரிசங்குபோல் சுற்றிக் கொண்டிருக்கும். கூழ்மப் பொருட்களில் உள்ள துகள்கள் எல்லாம் மின்னேற்றம் பெற்றவை. அவைகளுடைய அளவு அவற்றை கீழே வண்டலாகத் தங்காமல் பாதுகாக்கிறது. எல்லாத் துகள்களும் ஒரே மாதிரியான மின்னேற்றம் பெற்றவை ஆதலால் ஒன்றோடொன்று மோதாமல் அப்படியே திரியும். அவற்றின் மின்னேற்றத்தை அவற்றின் இருந்து வெளியேற்றியோ அல்லது எதிர் மின்னேற்றம் பெற்ற ஒரு தகடில் மோதவிட்டோ பிரித்து எடுக்கலாம்.தொலைக்காட்சித் திரையில் தூசு படிவது எலெக்ட்ரான்கள் மோதி மோதி மின்னேற்றம் பெற்ற திரையில் தூசு தன் மின்னேற்றத்தைத் தொலைத்து படியும். மின்னேற்றம் போனால் அப்படியே கீழே தங்கிவிடும். அதைத்தான் அந்தக் கோபுரம் செய்கிறது.  தன்பால் காற்றை இழுத்து மின்னேற்றத்தை சமன் செய்து துகள்களை தனியாகப் பிரித்து விடுகிறது. பின் சுத்தமான காற்றை அழுத்தத்துடன் வெளியேற்றுகிறது. தொழிற்சாலைகளின் புகைகளில் இருந்து இந்த மாதிரி துகள்மங்களை காட்ரல் வீழ்படிவாக்கி(Cottrell’s precipitator) இதே மாதிரிதான் பிரித்து எடுக்கிறது.
தன் சொந்த ஊரில் டான், தான் வடிவமைத்த கோபுரத்தை அமைத்துப் பார்க்கையில் காற்றின் தரத்தில் குறிப்பிடத்தக்க நல்ல மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அந்தக் கோபுரத்துக்கு அடியில் முயல்கள் குடிபுகுந்திருந்திருக்கின்றன. நல்ல காற்றுக்காக வந்திருக்கும் போல. பீஜிங்கில் இந்த கோபுரத்தை வைத்தும் வெள்ளோட்டம் பார்த்திருக்கிறார்கள். மக்களிடம் ஓட்டெடுப்பு நடத்தித் தொடரலாமா வேண்டாமா என முடிவு செய்ய இருக்கிறார்கள். 2022 இல் ஒலிம்பிக் பீஜிங்கில் நடைபெற இருப்பதால் சீனா இன்னும் நிறைய கோபுரங்களைக் கேட்கும் என எதிர்பார்க்கிறார்கள். டேனுக்கு மேலும் பல நகரங்களுக்கு தன் கோபுரத்தை எடுத்துச் செல்ல ஆசையிருக்கிறது. சற்றே வெட்கப்பட வேண்டிய விஷயமாய் அவரின் பட்டியலில் டெல்லியும் இருக்கிறது. இந்திய நகரங்களில் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நகரம் அது.

air_purifier_ring

அந்த கோபுரத்தால் இன்னொரு பயன் இருக்கிறது. அந்த கோபுரம் சேர்க்கும் துகள்மங்களை அழுத்தத்தால் வடிவம் கொடுத்து கழுத்தில், காதில், விரலில் அணியும் நகைகளில் பதிக்கிறார்கள். முதல்கட்டமாக நூறு மோதிரங்கள் செய்ய அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டனவாம். மேலும் செய்யத் திட்டமிட்டிருக்கிறார் டேன். நிச்சயதார்த்த மோதிரங்களுக்கு நிறைய பேர் வாங்கிச் சென்றார்களாம். இதனால் சூழலியல் பக்கம் மக்களின் கவனத்தைத் திருப்ப முடியும் என நம்புகிறார். நம்ம ஊரில் வராமலிருக்க ஆக வேண்டியதைப் பார்க்க வேண்டும். இல்லையெனில் “காற்று வாங்கப் போனேன் கொஞ்சம் கேன்சர் வாங்கி வந்தேன்” தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.