கல்லூரிகளில் வேலை வாய்ப்பு எனும் மாயக் கோமாளித்தனம்

unemployment

 
பெருநகரங்களில் பெருவாழ்வு வாழ்ந்துவிடலாம் என்கிற கனவுகளோடு மக்கள் பெருவாரியாக கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்து நகரங்களில் குடியேறும் படலம் இந்நூற்ராண்டின் ஆரம்பத்திலேயே தொடங்கி, தொடர்ந்துகொண்டுத் தான் இருக்கிறது. ஆரம்ப காலத்தில் மழைப் பொய்த்தும், விவசாயம் பொய்த்தும் கிராமவாசிகளை தங்களின் நிலபுலன்களை விற்று பிழைப்பிற்காக பெருநகரங்களை நோக்கி பயணப்படுத்தியது. இப்பொழுதோ, சிறு விவசாயமே முடியாது, நீராதாரங்கள் ஒழிந்தது, வேலையாட்கள் கிடைப்பதில்லை, இயந்திரமயமாக்கல் என்று இன்னும் பல காரணிகள் சேர்ந்துள்ளது. ஆனாலும் மீதமுள்ளதை வைத்துக்கொண்டு வைராக்கியத்துடன் இருக்கும் கிராமத்தானை(ளை)யும் தற்போதய வியாபாரமயமாக்கல், தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் போன்ற அரசுகளின் பொருளாதார கொள்கைகள் அசைத்துதான் பார்க்கிறது என்பதில் சற்றும் ஐயம் இல்லை. தற்போது எஞ்சியிருக்கும் விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாறி பறைச்சாற்றப்படுவதே இதற்கு சாட்சி. தான் பெற்ற துன்பத்தை தனது பிள்ளைகள் பெறவேண்டாம் என்றெண்ணிய விவசாயியோ, கிராமத்தானோ(ளோ) தன் பிள்ளைகளை படிக்க வைத்துவிட்டால் பெரும் சீரும் சிறப்புமாக வாழ்ந்து விடலாம் என்கிற கனவு தலைத்தூக்க, இருக்கும் சொச்ச சொத்துக்களை விற்றோ, அடமானம் வைத்தோ கல்வி கற்க அனுப்பிவைத்துவிட்டு வயிற்றில் ஈரத்துணியை கட்டிக்கொண்டேனும் தனது நம்பிக்கையை உறுதியாக பற்றிக்கொண்டு ஜீவிக்கிறான்(ள்). பள்ளிப் படிப்பு பல கேள்விக்குறிகளுடன் நடந்தேறிக் கொண்டிருந்தாலும், நடக்கத்தான் நடக்கிறது. நகரங்களிலும் பெருத்த ஏமாற்றமே விஞ்சி நிற்கிறது. நகரத்தில் உள்ள பெரும்பாலான பெற்றோர்களின் நிலைமை பெரிதும் வேறுபாடு இல்லாததாகத்தான் படுகிறது. பிள்ளைகள் நல்வாழ்வு வாழவேண்டும் என்ற கனவோடும், சென்ற தலைமுறையில் தான் நிறுவ இயலாமல் போனதை தனது பிள்ளைகளின் தலையில் எப்படியாவது சுமத்தி அவர்களின் மூலமாக தன் சுற்றங்களுக்கு மத்தியிலும், சமூகத்திலும் தன்னை நிலைநாட்டவும் பெரும் பிரயத்தனத்தில் இறங்குகிறார்கள். இவைகளின் காரணமாக, கல்லூரியை தேர்ந்தெடுப்பது முற்றிலும் placement record எனும் கல்லூரிகள் தங்களுக்கு தாங்களே பற்பல ஊடகங்களில் வாயிலாக பறைச்சாற்றிக்கொள்ளும் தகவல்களும், கல்லூரிகளின் பேச்சுத் திறனுமேயாகும். இவையனைத்தும் பெற்றோரின் உளவியல் சார்ந்த அம்சங்கள்.
மாணவர்களை பொறுத்த மட்டில், குறைந்த சதவீதத்தவரே ஒரு முழுமையான கல்விக்கு மனதளவில் தயாராக இருக்கின்றனர். இப்பொழுதுள்ள பள்ளிக்கல்வியின் சீர்கேடும், பொதுவான கலாச்சாரச் சீர்கேடும் ஒன்றுக்கொன்று துணை நிற்கின்றன. தகுதி அடிப்படையில் மட்டும் கல்வியா அல்லது அரசியல் சார்ந்த இட ஒதுக்கீடு அடிப்படையில் கல்வியா என்ற குழப்பம் பொதுவெளியில் உள்ள கேள்வி. தற்போதைக்கு இதுதான் சரி என்று அனைவராலும் ஒப்புக்கொள்ளக்கூடிய அமைவு சாத்தியமாவது என்பது கேள்விக்குறியே. பெரும்பாலான கல்லூரிகளில் குறைதபட்ச இடங்கள் நிரப்பியுள்ளதுக் கூட முதல் தலைமுறை பட்டதாரிகளால் தான். இச்சலுகை இல்லையெனும் பட்சத்தில் மேலும் பல கல்லூரிகள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படும். மாணவர்களுக்கு இப்பொழுது இருக்கும் சிக்கல் பெரும்பாலும் உளவியல் சார்ந்த குழப்பமான சூழ்நிலைகளே. ஏற்கனவே தனக்கே உள்ள குறைபாடுகள், சுற்றி இருக்கும் திறமை வாய்ந்த மாணவர்களுடன் போட்டியிடவேண்டிய கட்டாயம், தன்னை இழந்து ஒரே அச்சில் வார்த்துக்கொள்ள இயலாமை, குடும்பம் மற்றும் சுற்றங்களின் பேச்சுக்கள், இவையனைத்தையும் தாண்டி பூதாகரமாக நிற்கும் எதிர்காலவாழ்க்கையெனும் கேள்விக்குறி… இவை அனைத்தும் முன்பே கூறியது போல் பெற்றோராலும், தொழிற்கூடங்களாலும், கல்லூரிகளாலும் சுமத்தப்பட்டவை. தினம் தினம் எத்தனை எத்தனை சிறு சிறு மரணங்கள்.
தற்போதய உயர்கல்விச் சூழலின் அடிப்படை தவறு வேலை வாய்ப்பு எனும் மாயக் கோமாளித்தனத்தை குறிக்கோளாக கொண்டு செயல்படுவதேயாகும். இந்த நோக்கு கல்வி நிலையங்களின் மீதும் குறிப்பாக மாணவர்களின் மீதும் தகாத ஒரு சுமையை பெற்றோர்களினாலும், தொழிற்கூடங்களினாலும், கல்லூரிகளாலுமே ஏற்றி வைக்கப் பட்டதொன்றாகும். காலப்போக்கில் இதுவே கல்லூரிகளின் வியாபார யுக்தியாக உருவாக்கம் பெற்றது தான் நாம் நம்மையே ஏமாற்றிக் கொள்ளுவதற்கான அடிப்படையாக மாறிய சோகம். இந்த வியாபார யுக்தி ஆன் கேம்பஸ் ஆஃப் கேம்பஸ் மற்றும் வேலை வாய்ப்பு முகாம்கள் என்று பற்பல அவதாரங்களை எடுத்து பூதாகரமாக நிற்கிறது. கல்லூரிகள் நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டு துறை அதிகாரிகளை வரவழைப்பதிலும், அவர்களை மனங்கோணாமல் வைப்பதிலும் கண்ணும்கருத்துமாக இருக்கிறன. இதற்காக பல லட்சங்கள் செலவிடப்படுகிறது. இந்த செலவு அனைத்தும் பெற்றோர்களின் தலையில் விடியும்போதும், மேற்சொன்ன அதே கனவு மெய்ப்படும் என்ற நம்பிக்கை இதையும் சகித்துக்கொள்ள செய்கிறது. இதை நடத்தும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு முன்னுரிமை இதில். இங்கும் மாணவர்கள் எல்லோரையும் ஒரே அச்சில் வார்க்க முற்படுதல் நடந்தேறுகிறது. பல்கலைக் கழகங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்த நாடகத்தில் ஆசிரியர்களின் நிலை மத்தளம் போன்றது. பெரும் பித்தலாட்டங்களும் அரங்கேறுவதும் உண்டு. பல கல்லூரி-தொழிற்கூடக் கைக்கோர்த்தல் ஏமாற்று வேலையைப்பற்றி மாணவர்களிடத்திலிருந்து தெரிய வருகையில் மனதில் பெரும் வேதனையே குடிகொள்கிறது. பெரும்பாலான நேரங்களில் தேர்வு பெற்ற மாணவர்களுக்கு குறிப்பிட்ட தேதியில் பணியில் சேர வேண்டுமென்பதே கிடையாது. பின்னர் அறிவிக்கப்படும் அல்லது உங்கள் இ-மெயிலுக்கு இதுகுறித்து தகவல் அனுப்பப்படும் என்பதே சிறித்து மழுப்பப்படும் பதில்.
இச்சூழலில் தகாத மற்றும் அருவருக்கத்தக்க விஷயம், தொழிற்கூடங்களின் அவசரமும் தேவையான அவகாசம் கொடுக்க இயலாத கையாலாகாத்தனமுமேயாகும். பணியில் சேர்ந்த முதல் மணித்துளியிலிருந்து முழு உற்பத்தி திறனுடன் இருக்க வேண்டும் என்பதொரு எதிர்பார்ப்பு சிறுபிள்ளைத்தனமான மேற்கத்திய சிந்தனை. இயந்திரங்களினாலும் கூட சாத்தியப்படாத ஒன்று. இதில் அருவருக்கத்தக்கது என்பது பயிற்சியை மனிதவள மேம்பாட்டுக்கான முதலீடாகக் கருதாமல் அதை ஒரு செலவாகக் கருதி பயிற்சிகளை கல்லூரிகளின் மீதும் மாணவர்களின் மீதும் தினிப்பதேயாகும். மேலும் வெறும் ஐந்து சதவீத பட்டதாரிகளே வேலை பெரும் தகுதி உடையவர்கள் என்ற கருத்து பொதுப்படையாக முரட்டுத்தனமாக நிறுவப்படுகிறது.
Internship எனும் யுக்தியை இதனினும் கேடுகெட்ட ஒரு ஏமாற்று வேலையாகவேக் கருதுகிறேன். இதில் பங்கேற்கும் மாணவர்களுக்கு அவர்கள் சேரும் பெரும்பாலான தொழிற்கூடங்களில் பயிற்சியளிப்பதற்கான கட்டமைப்பு இல்லாததனால் எந்த ஒரு தொழில் சார்ந்த அறிவுருத்தலும் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவே. மாறாக, அவர்களின் அன்றாட பணிகளில் ஏதேனும் ஒரு சிறு முக்கியமற்ற பகுதியை மாணவர்களிடம் கொடுத்துவிட்டு தத்தமது காரியங்களில் இயங்குவதே மாணவர்களின் மூலம் அறியப்படுகிறது. இதனினும் கொடுமை, இதிலும் பணம் பறிக்கப் படுகிறது. பல நிறுவனங்கள் ஆங்காங்கே (பல நகரங்களிலும், நகரின் பல பகுதிகளிலும்) குளிர்சாதன வசதியோடும், ஆடம்பரமான உட்புற வடிவமைப்போடும், சில-பல கணினிகளோடும், மிகவும் சாமார்த்தியமாக கவர்த்திழுக்கக்கூடிய பேச்சுத் திறம் வாய்ந்த முகவர்களோடும் பயிற்சி மையங்கள் என்னும் பெயரில் செயல்படுகின்றன. இவைகள் தொற்கூடங்களுக்கும் கல்லூரிகளுக்குமிடையே இடைத்தரகர்களாகவும், தனிப்பட்ட முறையிலும் வேலை வாய்ப்பை பெற்றுத்தருவிக்க செயல்படுகின்றன. இதிலும் பணமே பிரதானம். இவர்களுக்கு செலுத்தும் பண(கட்டண)த்தைவிட பணியில் சேர்ந்து பெரும் சம்பளம் மிகவும் குறைவே. இந்த மாய வலை விரிப்போர்களிடத்தில் சிக்குவபவர்களில் கிராமப்புற மாணவர்களும், ஆங்கில மற்றும் பேச்சுத்திறன் குறைபாடு உள்ளவர்களும் மேலும் குறைந்த மதிப்பெண்கள் பெற்று கல்லூரி மூலம் வேலைவாய்ப்பு பெருவதிலிருந்து பல காரணங்களால் புறந்தள்ளப் பட்டவர்களுமே அதிகம். அரசு இவைகளை நெறிப்படுத்தும் வழிவகைகள் செய்துள்ளதா என்ற கேள்வி எழாமல் இல்லை.
இத்தகைய மாற்றங்களை தொழில் சூழலில் கொண்டுவந்த பெருமை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களையே சாரும். இது இரண்டு விதங்களில் இரு வேறு காலக்கட்டத்தில் நிகழ்ந்தது. முதலாவது தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் அதீத வளர்ச்சியின் போது: துறை வித்தியாசம் பாராமல் அனைத்து பொறியியல் பட்டதாரிகளையும் பேராசையுடன் கபளீகரம் செய்து தனது பசியை ஆற்றிக்கொண்ட காலக்கட்டம். இரண்டாவது தலைகுப்புறக் கவிழ்ந்து வீழ்ந்த பின்பு அனைவரையும் தெருவிற்குக் கொண்டுவந்த பிறகு – துறை சார்ந்த பயிற்சி ஒரு செலவீனமாகக் கருதிய காலக்கட்டம். (முதற்காலக்கட்டத்தில் பகட்டான வாழ்வு வாழ்ந்த பலர் இரண்டாம் காலக்கட்டத்தில் தற்கொலை செய்து கொண்டது அனைவரும் அறிந்ததே – அது ஒரு தனிக் கட்டுரையாகவே எழுதத் தகுந்த விஷயம்).

workers_employees_engineering-jobs-india

பொறியியல் பட்டப்படிப்புத்துறையில் ஒன்றரை தசாப்தத்தாமாக பணியில் இருந்த எனது மனதின் பின்புலத்தில் தொற்றிக்கொண்டிருந்த ஒரு விஷயம் தான் இவை. மேற்கூறிய அனைத்தும் தமிழக நிலை என்றாலும், தேசிய அளவில் பெரும் மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை என்றே கூறலாம்.
பல்கலைக்கழகங்கள் ஒரு குறைந்தபட்ச பாட திட்டத்தை முன் வைத்தே பட்ட மற்றும் இதர படிப்பிற்கு வழிவைக்கின்றன. ஆனால், தொழிற்கூடங்களின் தேவைகள் சில நேரங்களில் மிகக் குறுகியதாகவும், வேறு சில நேரங்களில் நுண்ணிய கருத்தாழத்தையும் அவர்களின் அவ்வப்போதைய தேவைகளால் முன்னிறுத்தப் படுபவைகளாக உள்ளன. இந்நிலையில் அரசு இயந்திரங்களான பல்கலைக்கழகங்களும், அகில இந்திய தொழில்நுட்பக் கழகமும், பல்கலைக்கழக மானியக் குழுவும் இவ்விஷயத்தை சரியான முறையில் அணுகி மாணவர்களின் மீதுள்ள இத்தகைய தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். பெரும் தோழிற்கூடங்களும் இந்த நிலையை சீராக்க அரசுடன் மேலும் கைகோர்த்து மாற்றங்களை பல்வேறு தளங்களில் கொண்டுவரவேண்டும். கல்வி முறையில் தற்போதுள்ள பல்கலைக்கழக மானியக்குழுவின் திறன் அடிப்படையை (skill based) மையமாக்கி இன்னும் புதிய குறுகியகால – தொழில் சார்ந்தப் பாடத்திட்டங்கள் கொண்டுவரப்படவேண்டும். மாணவர்கள் தங்களின் திறமைகளை தாங்களே அறிந்து கொள்ள ஏதுவான நாடு தழுவிய ஒரு பரிந்துரைக்கும் தளத்தை (suggestive platform) ஏற்படுத்தித் தரவேண்டும். தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இத்தளத்தை நிறுவுவதற்கு துணை நிற்க வேண்டும். கல்வியாளர்கள் இந்த முயற்சிக்கு அடிப்படை ஞானத்தை வழங்க வேண்டும். மாணவர்கள் எந்தவித குற்றவுணர்ச்சியும் இல்லாமல் தங்களைத் தாங்களே சுய பரிசோதனை செய்யுமாறு இருத்தல் மிக அவசியம்.

One Reply to “கல்லூரிகளில் வேலை வாய்ப்பு எனும் மாயக் கோமாளித்தனம்”

  1. இன்றையப் பொறியியல் படிப்பின் தராதரத்தைத் தோலுரித்துக் காட்டுக்கூடிய காத்திரமான ஒரு கட்டுரை. இந்தப் பிரச்சனைக்கானத் தீர்வு உடனடியாக ஏற்படப் போவதில்லை. ஆனால் தீர்வை நோக்கியப் பயணம் ஆரம்பமாகவேண்டும். இல்லையேல் திறமையற்ற பொறியியலாளர்களை வெளிஉலகுக்கு அளிக்கக்கூடியத் தொழிற்ச்சாலைகளாக இன்றையக் கல்வி நிறுவனங்கள் மாறிவிடும் (இப்போதே அப்படித்தான் இருக்கிறது… இது தொடர்ந்தால் நிலைமை இன்னும் மோசமாகி விடும்)
    *கட்டுரையில் சொற்ப்பிழைகள் உள்ளன. இங்கு தரவேற்றம் செய்வதற்கு முன்பு அதை சரிசெய்து வெளியிட்டிருக்கலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.