எனக்கும் ஒரு கனவிருந்தது- வெர்கீஸ் குரியனின் சுயவரலாற்றுப் புத்தகம் பற்றி

kurien

 

கோழிக்கோட்டில் சிரியன் கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்த வெர்கீஸ் குரியன் (1921-2012) ‘இந்தியாவின் பால் நாயகன்’ என்றும், ‘வெண்மைப்புரட்சியின் தந்தை’ என்றும் அழைக்கப்படுபவர். பதினான்கு வயதில் லயோலா கல்லூரியில் அறிவியல் படிக்கச் சேர்ந்தவர் குரியன். பிறகு கிண்டி பொறியியல் கல்லூரி. படிப்பில் தேட்டையாக இருந்தவர் டென்னிஸ், கிரிக்கெட், பேட்மிண்டன், குத்துச்சண்டை என்று எதையும் விட்டு வைக்காமல் அதிலும் கல்லூரி சார்பாக கலந்து கொள்பவராக இருந்துள்ளார். 1946ல் பிரிட்டிஷ் அரசு ஐநூறு இந்தியர்களைத் தேர்ந்தெடுத்து மேற்படிப்புக்காக இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸி, நியூஸி, கனடா நாடுகளுக்கு அனுப்பிய போது அதில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் போனது அமெரிக்காவின் மிச்சிகன் ஸ்டேட் பல்கலைக்கு. இவர் படிக்க விரும்பியது உலோகவியலும் அணு இயற்பியலும். இரண்டாம் உலகப்போர் அணுகுண்டு வெடித்து முடித்து வைக்கப்பட்டிருந்த சூழ்நிலையில் அபாரமாகப் படித்தவர்கள் அத்தனைபேரும் அணு இயற்பியல் பக்கம் சாய்ந்த காலம். ஆனால் Dairy engineering-ல் மட்டுமே இடமிருப்பதால் இவரை அதைப்படிக்க அனுப்பியிருக்கிறார்கள். இவர் அங்கு மூன்றையுமே படித்திருக்கிறார்.

படித்துத் திரும்பியதும் எங்கோ பம்பாய்க்குப் பக்கத்தில் இருக்கும் ஆனந்த் என்ற கிராமத்துக்கு வேலைக்குச் செல்ல ஆணை கிடைத்ததும் இவர் மறுத்திருக்கிறார். மறுத்தால் அரசு முப்பதாயிரம் ரூபாய் கேட்டு வழக்குத் தொடரும் என்று பயமுறுத்தி இவரை பலவந்தமாக அனுப்பியிருக்கிறார்கள். இந்தக் கிராமமே தன் வாழ்வாகப் போகிறது என்றறியாமல் வேண்டாவெறுப்பாக அங்கு சென்றவர்தான் குரியன். அப்போதுதான் (1948) இந்தியா சுதந்திரம் பெற்றிருந்தது. பாலுக்காக வெளிநாடுகளிடம் கையேந்திக் கொண்டிருந்தது. இன்று அந்த நிலை தலைகீழாக மாறி உலகப் பால் உற்பத்தியில் முதலிடம் வகிப்பதோடல்லாமல் பால்பொடி ஏற்றுமதி செய்து அதிலும் கணிசமான வருமானம் ஈட்டுகிறது. இன்று அமுல் என்ற பெயரை இந்தியாவில் அறியாதார் இல்லை. குஜராத்தின் சிறிய கிராமத்தில் தொடங்கிய இந்த பயணம் இன்று நாடுமுழுதும் 36லட்சம் பால் உற்பத்தியாளர்கள் இணைந்த கூட்டுறவாக, வருடத்திற்கு சுமார் 340கோடி வருமானமுள்ள அமைப்பாக வளர்ந்ததை வியக்காமல் இருக்கவியலவில்லை. இம்மாற்றத்தைக் கொண்டுவர வித்துக்களை விதைத்தவர்கள் இருவர்; வல்லபாய் படேல் மற்றும் திரிபுவன்தாஸ். படேல் திரிபுவன்தாஸ் மீதும் திரிபுவன்தாஸ் குரியன்மீதும் முழு நம்பிக்கை வைத்தது இந்த மாற்றத்திற்கு ஆதாரமானது. பின்னாளில் பத்மஶ்ரீ, பூஷன், விபூஷன், ரமோன் மகஸேஸே, உலக உணவுப் பரிசு என்று குரியன்மேல் பொழியப்பட்ட விருதுகள் ஏராளம்.

‘எனக்கும் ஒரு கனவிருந்தது’ என்ற புத்தகம் அவரது தன்வரலாறு. நல்லமுறையில் எழுதப்பட்ட ஒரு தன்வரலாற்று நூலைப்போல பதிந்துபோகும் படிப்பினைகளும், செயல்பட உத்வேகமும் தருவது வேறொன்றில்லை. நிச்சயமாக இப்புத்தகம் அவ்வரிசையில் வைக்கத்தகுந்தது. 236பக்க நூலில் அதிகபட்சமாக ஒரு பத்துபக்கம் தன் குடும்பத்தை, சொந்தவாழ்வைக்குறித்து எழுதியிருக்கிறார். மற்றதெல்லாம் நலிந்து போய்க்கிடந்த பாலின் கதை, கிராமங்களை முன்னேற்றுவதையே குறிக்கஓலாகக் கொண்டு இந்தியாவில் வாழ்ந்து மறைந்த  தீர்க்கதரிசிகளின் கதை, தான் லட்சக்கணக்கான விவசாயிகளின் திறமையான கூலிக்காரன் என்ற பெருமையுடன் அவர் கூட்டுறவு சமூகங்கள் அமைத்து வெற்றி கண்ட ஐம்பது வருட முயற்சியின் கதை, அரசிடமும் அதிகாரிகளுடனும் நியாயம் தன் பக்கம் என்ற ஒரே தெம்பில் துணிந்து மல்லுக்கு நின்ற கதை.

i_too_had_a_dream

 
எதையும் அதிரடியாகப் பேசிவிடுவது குரியனின் பண்பு. கோடைக்காலத்தைக் காட்டிலும் மழைக்காலத்தில் மாடுகள் இருமடங்கு பால் கறப்பதால் தான் அதன் காம்புகளை அடைக்கவியலாது எனவே நீங்கள் பாலை அதிகமாக வாங்கிக் கொள்ளத் தான் வேண்டும் என்று அதிகாரிகளிடம் குரியன் முறையிட, மழைக்காலத்தில் மக்கள் இருமடங்கு பால் அருந்துவதில்லை என்பதால் வாங்கமுடியாது என்று அதிகாரிகள் எகிர, இதை எதிர்பார்த்துத் தயாராகச்சென்ற குரியன் ‘ஆனால் நியூஸிலாந்திலிருந்து இறக்குமதி செய்யும் பால்பவுடரை நீங்கள் குறைக்கலாமே?’ என்று கேட்டு ‘நீங்கள் நம் நாட்டுக்கு வேலை செய்கிறீர்களா நியூஸிலாந்துக்கா?’ என்று கொதிப்பதில் தொடங்குகிறது இவருக்கும் அதிகாரிகளுக்குமான சிக்கல்.
நம்மாட்கள் என்றில்லை, வெளிநாட்டவர்களையும் பாரபட்சம் பார்க்காமல் வாங்குவாங்கென்று வாங்கித்தான் அனுப்புகிறார். இந்தியா பால்தூள் ஏற்றுமதியை ஆரம்பித்ததும் நியூஸிலாந்து உயராணையர் இவரது அறைக்கு வந்து ‘எங்கள் மார்க்கெட்டில் கை வைக்கும் வேலை வேண்டாம்’ என்று எச்சரிக்க, குரியன் கடுப்பாகி ஆனால் பெண் என்பதால் சற்று மென்மையாக ‘இவ்வுலக மார்க்கெட் உங்கள் தனிப்பட்ட சொத்து என்பதை நானறியவில்லை. நன்றி போய்வாருங்கள்’ என்று கதவை காட்டியிருக்கிறார். அவரோ மீண்டும்மீண்டும் அதையே பேசி மேலும் எரிச்சலூட்ட, குரியன் ‘இந்தியர்கள் ஒன்று சேர்ந்து காறியுமிழ்ந்தால் நியூஸிலாந்து மூழ்கிவிடும் ஜாக்கிரதை’ என்று பொரிந்துள்ளார். பயந்துபோய் இடத்தைக் காலி செய்த அப்பெண்மணி பின் வெகுகாலம் டெல்லி வட்டாரங்களில் ‘குரியன் ஒரு பைத்தியம், என்மேல் எச்சில் துப்புவதாக பயமுறுத்தினார்’ என்று சொல்லிவந்தாராம்!
குரியனின் அபார மூளையும் சமயோஜித புத்தியும் பல இடங்களில் வெளிப்படுகின்றன. இரண்டு உதாரணங்கள் தருகிறேன். முதலாவது, கூட்டுறவு அமைப்பின் பாலில் ஈக்கள் கிடப்பதாக ஆரம்பத்தில் புகார்கள் வந்த வண்ணம் இருந்திருக்கின்றன. இது ஏதோ சதிவேலை என்று சந்தேகித்த குரியன் ‘அடுத்தமுறை ஈ கிடந்தால் அதைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்புங்கள்; அதன் நுரையீரலில் பால் இருந்தால் அது பாலில் விழுந்து இறந்தது, இல்லையேல் அடித்து உள்ளே போடப்பட்டது’ என்று அறிக்கை அனுப்ப அதன்பிறகு ஈ விழவேயில்லையாம். இரண்டாவது, ஐநா அமைப்பிடம் வளர்ந்த நாடுகளில் அப்போது தேவைக்கதிகமாக இருந்த பாலை மலிவு விலையில் இந்தியாவுக்கு அளிக்க வலியுறுத்திய குரியன் அதே நேரம் இதை இந்தியா தன்னிறைவு அடையும்வரை ஒரு ஊன்றுகோலாகப் பயன்படுத்துமே அன்றி என்றென்றும் மற்ற நாடுகளைச் சார்ந்திருக்காது என்று சொல்லி தன் திட்டத்தை விளக்கிப் பேசியிருக்கிறார். அப்போது அந்த அவைக்குத் தலைமையேற்றிருந்த பாகிஸ்தான்காரர் ‘உங்கள் திட்டம் foolproof என்று சொல்லமுடியுமா?’ என்று கேட்டிருக்கிறார். குரியன் உடனடியாக ‘அப்படித்தான் நினைத்தேன் ஆனால் அதில் இப்போது தோற்றுவிட்டேன்’ என்று கலாய்த்திருக்கிறார்.
நேரு முதல் வாஜ்பேயி வரை அத்தனை பிரதமர்களுடனும் தனிப்பட்ட செல்வாக்கு குரியனுக்கு இருந்திருக்கிறது. நாட்டையும் நாட்டின் விவசாயிகளையும் நேசித்ததும் அவர்களை முன்னுக்குக் கொண்டு வரவேண்டும் என்று உழைத்ததுமே தனக்கு அந்த செல்வாக்கை அளித்ததாக எழுதுகிறார். மற்றபடி தான் அதிகபட்சமாக வாங்கிய சம்பளம் ஐயாயிரம் ரூபாய்தான் (1981ல்) என்கிறார். தன் திறமையைவிடக் குறைவாக சம்பளம் பெறுபவர்களை சக ஊழியர்களும் மற்றவர்களும் உயர்வாக மதிப்பார்கள் என்பது குரியனின் நம்பிக்கை.
பசுவின் பாதுகாப்புக்காக 1967ல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சர்க்கார் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு அதில் குரியன், பூரி சங்கராச்சாரியார், குருஜி கோல்வால்கர், மேலும் சிலரும் சேர்க்கப்பட்டுள்ளனர். 12 வருடங்கள் தொடர்ந்து பேசிய இக்குழு ஒருநாள் எந்த அறிக்கையும்கூடக் கேட்கப்படாமல்  கலைக்கப்பட்டதாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டங்களில் குரியனின் வாதம் தேவையில்லாத பசுக்கள் கொல்லப்படத்தான் வேண்டும் என்பது. இது பூரி சங்கராச்சாரியாருக்கு உவப்பில்லாததால் பலமுறை இருவருக்கும் சூடான விவாதங்கள் நடந்துள்ளன. ஒருமுறை சங்கராச்சாரியார் மான்தோலுடன் வந்து இருக்கையில் அமர அப்போது தொடர்ந்து புகைப்பவராக இருந்த குரியன் அவர் பக்கம் புகையைவிட…பார்த்துக்கொண்டிருந்த நீதிபதி சர்க்கார் தனக்கும் ஒரு சிகரெட் கிடைக்குமா என்று குரியனிடம் கேட்டிருக்கிறார். குரியன் தெய்வ நம்பிக்கை இல்லாதவர். சர்க்கார் எப்படியோ தெரியவில்லை.
கோல்வால்கரும் குரியனும் பசுப்பாதுகாப்பைப் பொறுத்தவரை எதிரெதிர் துருவங்கள்தான் ஆனால் ஆத்ம நண்பர்கள். நேரில் காணும்போதெல்லாம் எழுந்துவந்து ஆரத்தழுவி குரியனை வரவேற்பது கோல்வால்கரின் வழக்கம். அவர்களை இணைத்தது தேசபக்தி. குள்ளமான சிறிய மனிதர்தான் ஆனால் கோபப்பட்டால் கண்கள் கனல் கக்கும் என்று கோல்வால்கரை வர்ணிக்கிறார் குரியன். இவரின் அதீத தேசபக்தியைக் காணும்போது இவர் காந்தியைக் கொல்லத் திட்டமிட்டதாகக் குற்றஞ்சாட்டப்படுவதைத் தன்னால் நம்பமுடியவில்லை என்கிறார். தன்னைபொறுத்தவரை அவர் ஓர் இந்துமத வெறியராகவும்கூட இருக்கவில்லை என்றும் அப்படி இருந்திருந்தால் நிச்சயம் அவர் தன் நண்பராக இருந்திருக்கவியலாது என்று எழுதுகிறார்.
தனிப்பட்டமுறையில் பசு பாதுகாப்பு பிரச்சனையை வைத்து இந்தியாவை இன்னும் வலிமையாகவும் தனித்த அடையாளத்துடனும் இணைக்க முடியும் என்று தான் நம்புவதாக குரியனிடம் சொல்லிய கோல்வால்கர் பின்னாளில் மரணிக்கும்முன் தன் ஆசீர்வாதங்களைக் குரியனுக்குச் சொல்லியனுப்பியிருக்கிறார். குஜராத்தில் குருஜி ஆசீர்வாதம் சொல்லிய ஒரே மனிதர் குரியன். ஆனால் அவர் பிறப்பால் கிறிஸ்துவர் போதாததற்கு கடவுள் நம்பிக்கையே இல்லாதவர் என்று குழம்பியிருக்கிறார்கள் அவரது சீடர்கள். இந்தியாவின் ஆன்மா இந்த அடையாளங்களைத் தாண்டியது அல்லவா?
 
வெள்ளையர்களிடமிருந்து ஆட்சியதிகாரத்தைப்பெற்ற நம் அதிகாரிகள், சேவை என்ற நிலைக்கு வராமல் ஆளுதல் என்ற ஆங்கிலேய நிலைப்பாட்டிலேயே இன்றும் நிற்பதாகக் குற்றம்சாட்டுகிறார் குரியன். பெரும்பாலான அதிகாரிகள் தம் துறை அதிலிருக்கும் ஊழியர்களுக்காக இருக்கிறதே அன்றி மக்கள் சேவைக்கு அல்ல என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் என்கிறார். இவர் பால் கூட்டுறவுச் சமூகங்களை வெற்றிகரமாக அமைத்ததைப் பார்த்து தன்னுடைய சொந்த பால் உற்பத்தித் தொழிலை அமைத்துத்தர அழைத்த அமைச்சரின் அதிகார துஷ்பிரயோகத்தை அம்பலப்படுத்துகிறார். நெஸ்லே முதன்மை செயல் அலுவலரிடம் குரியனுக்கு என்ன விலை என்று யோசிக்க வேண்டாம் என்று கர்ஜிக்கிறார்.

kurien-2

பாலுற்பத்தி செய்யும் அனைத்து விவசாயிகளிடமும் தலைக்கு இரண்டு ரூபாய் வசூலித்து ஷ்யாம் பெனகலிடம் சொல்லி மந்தன் (Manthan) என்ற ஹிந்திப்படத்தைத் தயாரித்து பால் கிராம மக்களின் வாழ்க்கையை உயர்த்திய கதையை வெற்றிப்படமாக (1976) வெளியிடுகிறார். கறவைமாடு எப்போதும் விவசாயக்குடும்பத்தில் பெண்ணின் பொறுப்பில் இருப்பதால் அவள் வருமானம் உயர்ந்து குடும்பத்திலும் சமுதாயத்திலும் மதிப்பு பெற்றதை விளக்குகிறார். பால் ஊற்ற சொசைட்டிக்கு வரும் அப்பாமர மக்கள் சாதி என்னவானபோதிலும் வரிசையில் நின்ற மாற்றத்தை எழுதுகிறார். மனிதனுக்கான உணவை மாடு பறித்துகொள்ளக்கூடாது என்று கவனமாகத் திட்டங்களை வகுக்கிறார். விமர்சனங்களைப் பரிசீலித்து தேவையானதை ஏற்கிறார் அதேசமயம் குற்றம்காண்பதை மட்டுமே குறியாகக் கொண்டவர்களை கடுமையாக எதிர்கொள்கிறார்.

அன்றைய (1979) சோவியத் ரஷ்யாவிலிருந்து வந்த பிரீமியர் அலெக்ஸெய் கோசிஜின் குரியனிடம் ‘எல்லாம் நன்றாகத்தான் செய்திருக்கிறீர்கள் ஆனால் மிகவும் மெதுவாகப் போகிறீர்கள். நாலா பக்கத்திலிருந்தும் மாற்றங்களை ஒரே நேரத்தில் கொண்டுவந்து புரட்சி செய்திருந்தால் இந்த வேலையை விரைவில் முடித்திருக்கலாம். அங்கு வந்து பாருங்கள்’ என்று அழைப்பு விடுத்துச் சென்றிருக்கிறார். ரஷ்யாவில் போய் அந்த மாடுகளின் மோசமான நிலையையும், யாரும் பொறுப்பேற்காமல் மோசமான நிலையில் நடந்துகொண்டிருந்த பால் உற்பத்தியையும் பார்த்துவிட்டு பெரிய மாற்றங்கள் மெல்ல மெல்லத்தான் வரவேண்டும் என்ற தன் நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்திக் கொண்டு குரியன் திரும்பியிருக்கிறார். அதோடு அங்கு சென்றிறங்கிய நிமிடத்திலிருந்து கேஜிபியால் கண்காணிக்கப்பட்டதையும், நாள் முழுதும் அட்டவணை போடப்பட்டு அதன்படியே துளிமாறுபாடின்றி நடந்துகொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டதையும் வெறுத்த குரியன் ஒருமுறை இரவுணவுக்கு வரமுடியாது என்று மறுத்ததோடு தனக்கு ஒரு போத்தல் விஸ்கி வேண்டும் என்றும் வேண்டுமென்றே வம்பும் வளர்த்திருக்கிறார்.

பால் உற்பத்தியைப் பெருக்கவேண்டுமா அப்படியானால் கலப்பினக்கன்றுகளை ஈனச்செய்வது எப்படி என்றே யோசித்துக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் மாற்றி யோசித்தவர் குரியன். உற்பத்தியாகும் அளவில் பிரச்சனை இல்லை ஆனால் அந்த பாலை எப்படி சிந்தாமற்சிதறாமல் ஒருங்கிணைத்து, பதப்படுத்தி, மார்க்கெட்டிங் செய்து அந்த வருமானத்தை அதேபோல் மீண்டும் பாலை உற்பத்திசெய்த கிராம மக்களுக்கே சிதறாமல் கொடுப்பதை சரியாகச் செய்தால் போதும் என்பது அவரது நம்பிக்கை. அது பொய்க்கவில்லை. மொத்தமாக ஓரிடத்தில் உற்பத்தி என்பது கார்ப்பொரேட் வழி. தேவைக்கேற்றபடி ஆங்காங்கே மக்களின் கூட்டுறவு உற்பத்தி என்பது காந்திவழி. முன்னதற்கு உதாரணங்கள் தனியாகக் கொடுக்கவேண்டாம். பின்னதற்கு ஒரு மின்னும் உதாரணம் குரியன் கனவுகண்ட இந்தியாவின் வெற்றிகரமான பால் தன்னிறைவு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.