Auto-da-Fé (1931/35) : புனைவெழுத்தே தருமச் செயலாய்

(ஆசிரியர் குறிப்பு : இலியஸ் கனெட்டி (1905–94), பல்கேரியாவில் பிறந்த பிரிட்டிஷ் எழுத்தாளர். Auto-da-Fé (1936), Crowds and Power (1960) ஆகிய இரண்டும் இவரது குறிப்பிடத்தக்க நூல்கள். இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவர்  (1981).
(கெடுப்பான்கள் ஜாக்கிரதை!)
ஒரு சமூகத்தின் கலையிலக்கியத்தில் பிறழ்வு தோன்றுவது அச்சமூக நோய்மையின் ஆழத்தைக் குறிப்பதாகவே இருந்துள்ளது. கிருமிகள் உடலைத் தாக்கும்போது உதிக்கும் ஆன்டிபாடிக்கள் போலவே, பிறழ்விலக்கியமும் தான் போரிடும் நஞ்சின் வடிவிலேயே இருப்பதால் படிப்பதற்கு அருவெறுப்பாக இருக்கலாம், ஆனால் அந்த யத்தனத்தின் மாட்சியை வியக்காமல் இருக்க முடியாது. 1930களின் ஐரோப்பா மஹா கோரமான இரண்டு உலகப்போர்களின் சந்தியில் இருந்தது; குறிப்பாக, தோல்வியுற்ற ஜெர்மானிய தேசங்கள் பூதாகரமான மனப்பிறழ்வில் உழன்றிருந்தன. அதன் அடிவயிற்றிலிருந்து ஒரு புதிய கோரமான நவீனத்துவ கலை வெளிப்பாடு வெடித்துக்கொண்டிருந்தது; இருண்ட, மொழிபிறழ்ந்த, உச்சஸ்தாயியில் ஒலித்த பித்துக்குரலின் கலை அது. எட்வர்ட் முன்க்கின் ‘குரலற்று அலறும் மனிதன்’, ஃப்ரிட்ஜ் லாங்கின் ‘டாக்டர் காலிகாரி’, க்ரோஸ் மற்றும் ஓட்டோ டிக்ஸின் விகாரமான மனிதர்கள், ஆந்துவான் ஆர்த்தூதின் மனவெதும்பல்களாலான கவிதைகள் இவை அக்கால கலையின் உச்சகட்ட படிமங்களுள் அடங்கும். இந்தச் சூழலில்தான் இருபத்தி சொச்சமே வயதான இலியஸ் கனெட்டி தனது முதலும் கடைசியுமான நாவல் ‘Auto da Fe’ஐ எழுதினார்.
இஸ்பானிய, போர்துகீசிய சமய விசாரணையின்போது கிறித்தவமத துரோகிகளாகக் கருதப்பட்டவர்களை உயிரோடு தீக்கிரையாக்கும் செயலுக்குத் தரப்பட்ட பெயரே Auto da Fe.  “act of faith,” என்ற நேரடிப் பொருள் கொண்ட லத்தின் பதமான ‘actus de fide’ என்பதன் போர்துகீசிய வடிவம், இதைத் தமிழில், ‘தருமச் செயல்’ என மொழிபெயர்க்கலாமா? இவ்வளவு நைஹிலிஸ்டிக்கான ஒரு நாவலை எழுத்தில் வடித்ததையே ஒரு தருமச்செயலாகப் பார்க்கலாம். அடுத்து வரவிருக்கும் பல முக்கியமான இருபதாம் நூற்றாண்டு எதிர்மறை எண்ணப்போக்குகளின் விதைகளை இந்நாவலில்  அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது: ஃபூகோவின் ‘பித்தும் நாகரீகமும்‘, திரைப்படக்காரர்கள் வீகோ, த்ரூஃபோ போன்றோரின் அரசின்மைவாதம், மற்றும் தொடர்ந்து வந்த நுண்ணிய பிறழ்வின் செவ்விலக்கிய மரபு – நபோகோவின் ‘லோலிட்டா’ உட்பட.

auto-da-fe-elias-canetti-Books_Covers_Authors

வியென்னாவில் வேதியியல் மாணவராக இருந்தபோதே கனெட்டி இந்நூலை ஒரு தொடரின் பகுதியாக அமைக்க எண்ணியிருந்தார். தொடரின் ஒவ்வொரு நூலும் ஒரு ஒற்றைச்சித்தப் பித்தனைப் பற்றியதாக எழுதத் திட்டம் இருந்தது. ‘பித்தர்களின் மானுட அங்கதம்‘ என்ற தலைப்பையும் உத்தேசித்திருந்தார். ஆனால் ‘நூலாள்’ ஒருவனைப் பற்றிய இந்த ஒரு நாவலையே இறுதியில் இயற்றி முடித்தார். சமயப்பித்தன், கலை விற்பன்னர், தொழில்நுட்ப முன்னோடி போன்ற பிற பித்தர்களைப் பற்றிய நூல்கள் கைவிடப்பட்டன. இந்நூல் அந்த எல்லா எழுதப்படாத நூல்களையும் விழுங்கிவிட்டது. இருபத்தொரு வயது கனெட்டி, வியென்னாவின் உச்சநீதிமன்றத்தை ஒரு பெருந்திரள் கூட்டம் எரிக்கக் கண்டார். ‘ஜூலைக் கலகம்’ என்றறியப்படும் அச்சம்பவத்தில், இரண்டு அப்பாவிகளின் கொலைகாரர்கள் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்த மக்கட்திரள் நீதிமன்றம் வீற்றிருந்த அரண்மனையைச் சூழ்ந்து கொண்டது; அத்துமீறி நுழைந்து நாசம் செய்தது மட்டுமல்லாமல் அரண்மனையோடு சேர்த்து நீதியேடுகளுக்கும் தீ மூட்டிவிட்டது அத்திரள். தொடர்ந்த காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் தொண்ணூறு பேர் இறந்தனர். இச்சம்பவமே கனெட்டியின் மனதில் திரளின் குறியீடாகத் தீயைக் காண வைத்தது. அடுத்த ஐந்தாண்டுகள் வெறிபிடித்தவர்போல இந்நாவலை இயற்றியவர், நீண்ட புனைவெழுத்தை இத்தோடு நிறுத்திக் கொண்டுவிட்டார். நியாய-அநியாயங்கள் கலங்கிய இம்மானுட இழப்பு அவரது மீட்பற்ற உலகியலுக்கு அடித்தளமானது.
இந்நூலின் கதாநாயகனான பீட்டர் கீய்ன், அதீத தனிமை விரும்பி. வியென்னா போன்ற ஒரு நகரின் அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் மூன்று அறைகள் கொண்ட தளத்தில் தனது விசாலமான நூலகம் உண்டு தானுண்டு என்று வாழும் பிரம்மச்சாரி. உலகத்தின் அதிசிறந்த சீன-நூல் வல்லுநராகக் கருதப்படுபவர். ஒட்டடைக்குச்சிப் போன்ற உருவம். தன் படிப்பைத் தவிர எந்த சொகுசுக்கும் இடமளிக்காதவாறு தன் வாழ்க்கையை, இருப்பிடத்தை, உணவுப்பழக்கங்களை, கேளிக்கைகளை முற்றாக அத்தியாவசிய சதவிகிதத்துக்குக் குறுக்கி வைத்திருக்கிறார். எட்டு வருடங்களாக அவரது வீட்டு வேலைகளைச் செய்து வந்த பேரிளம்பெண் தெரீஸ், ஒரு முறை கூட அவரோடு நின்று உரையாடியதில்லை. சப்தமின்றி சமையலறையருகில் வாழும் அவளது முக்கியப் பணி நூலகத்தைத் தூசு தட்டிப் பராமரித்தல். ஆனால் அவள் மனதில் கீய்னின் கல்விப்பித்துக் காரணமாக துவேஷமும், அவனது பரம்பரைச் சொத்துக்கள் மீது ஒரு கண்ணும் இருந்துகொண்டே வந்தன. புத்தகங்கள் மீது அளவு மீறிய அக்கறை இருப்பது போல நடித்து, கீய்னின் நூலாசையைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு அவனை எப்படியோ மணந்துவிடுகிறாள். நாற்பது வயதான கீய்ன் பாலுணர்வே அற்றவன். ஐம்பத்தாறு வயதுக் கன்னி தெரீஸ் நிறைவேறா சிற்றின்பங்களின்பால் வெறியாய்த் துடிப்பவள்; முற்றிலும் கல்வியற்றவள். இருவருக்கும் இடையில் உருவாகும் தகவல் தொடர்புப் பிழைகள் தாளவியலா இருண்ட நகைச்சுவையாக வெடிக்கின்றன. பக்கம் பக்கமாக இருவரது நனவோடைகளும் விரிகின்றன, பரஸ்பர வெறுப்பும் சந்தேகங்களுமாய். தெரீஸ் அவனது சொத்துக்களின் சொற்பத்தை நம்ப மறுக்கிறாள்; விடாமல் அவனைத் தன் பேரில் உயிலெழுதச் சொல்லி நச்சரிக்கிறாள். கீய்ன் தனது நூல்களுக்காக அஞ்சுகிறான், அவற்றை அவளிடமிருந்து காப்பாற்ற திட்டங்கள் போடுகிறான், நூல்களின் படைத்தளபதியாகப் பொறுப்பேற்று அவற்றை போருக்குத் தயார் செய்கிறான். நூல்களின் புத்தர் மவுனம் சாதிக்கிறார், ஜெர்மானிய தத்துவவியலாளர்கள் அடிபணிய மறுக்கின்றனர், ஃபிரென்சு சிந்தனையாளர்கள் எள்ளி நகையாடுவதோடு ஆங்கிலேயர்கள் இருக்கும் புத்தக அலமாரிக்கு அனுப்புகின்றனர், ஆங்கிலேயர்கள் நல்ல யதார்த்தமான புத்திமதி சொன்னாலும் அவன் கீழை தேசத்து நீச இனத்தவரின் நூல்களை மதிப்பதை நிந்திக்கின்றனர்.
நொந்து போன கீய்னின் உதவிக்கு வரும் ஒரே வேற்று மனிதன் பெனெடிக்ட் பாஃப் – அந்தக் கட்டடத்தின் காவல்காரன் – இலக்கியப் படைப்புகளிலேயே மிகவும் நீசமான, ஜீரணிக்கமுடியாத குணங்களின் குவியல். முன்னாள் காவல்துறை அதிகாரியான பாஃப், முரட்டுக் குரூரன், நாஜி ஆள்காட்டியின் உளவு புத்தி கொண்டவன்; அதே பாணியில் பணத்திற்காக கொலையும் செய்யும் ஒருவகை அறுவெறுக்கத்தக்க விசுவாசி. அவன் தன் மனைவியையும் மகளையும் சொந்த அடிமைகளாக நடத்தியே கொன்ற பிறகு, இந்தக் கட்டிடக்காவல் வேலையைத் தன்னார்வத்தால் செய்து வருபவன். தன் கண்காணிப்பு அறையின் சுவரில் முழங்கால் உயரத்தில் ஒரு துளை போட்டு போவோர் வருவோரைத் தன் துப்பாக்கி முனையால் பின்தொடர்வது அவனது வெறி பிடித்த வேலை. பிச்சைக்காரர்களைக் காலில் சுடுவது அவனுக்கு மிகவும் விருப்பமான பொழுதுபோக்கு. அவனுடைய சந்தேகத்திற்குரிய விசுவாசத்தின் பலத்தில் கீய்ன் ஒரு நாள் தெரீஸால் குற்றுயிராக தாக்கப்பட்டு வீட்டை விட்டு தப்பித்து ஓடிவிடுகிறான். கூடவே தனது மிச்ச சொத்துக்களின் வங்கித்தாள்களையும் எடுத்துக்கொண்டு நகரின் இருண்ட அடிவயிற்றில் திரிய ஆரம்பிக்கிறான். அங்கு ஒரு கூன்மூட்டைக் குள்ளன் இவனது பணத்தையும் பித்தையும் கண்டுகொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக கீய்னை ஏமாற்றிக் களவாட முடிவெடுக்கிறான்.
குள்ளனின் பெயர் ஃபிஷெர்ல், ஏழை யூதன், பாலியல் தொழிலாளியான தன் மனைவியின் விடுதியில் பிணை வைத்து சதுரங்கம் விளையாடுவதே அவன் வாழ்க்கை. அவ்வாழ்க்கையின் குறிக்கோள் அமெரிக்கா சென்று, அங்கு வாழ்ந்த உலகச் சதுரங்க மாவீரர் காபப்ளாங்காவை சவாலுக்கழைத்து வீழ்த்துவது. எனவே கீய்னின் பணப்பையைத் தன் அமெரிக்கப் பயண-நிதியாக பாவித்து, கீய்னின் நலம்விரும்பியாக நடித்து, கொஞ்சம் கொஞ்சமாக முக்கால்வாசிப் பணத்தைக் கறந்துவிடுகிறான்.
கீய்ன் பணம், புகழ், இன்பம், சந்தோஷம் போன்ற ‘அற்ப’ விஷயங்களில் அக்கறையற்ற ‘உண்மை-விரும்பியாகத்’ தன்னைக் கட்டமைத்துக் கொள்ளும் ஐரோப்பிய அறிவிஜீவியின் மிகைச்சித்திரம்; தோமஸ் மன்னின் பேராசிரியர் ஆஷென்பாக், ஹெர்மன் ஹெஸ்ஸெ உருவாக்கிய ‘ஸ்டெப்பென்வுல்ஃப்’ போன்ற பாத்திரங்களின் பகடி வாரிசு; ஒரு புத்தகத்தின் சாவிற்காக வீதியில் புரண்டு அழும் வகைப்பட்ட மாண்புமிகு வெகுளியாக இருப்பினும் அவனது சுயநலம் அவனது கடிவாளம் கட்டிய அகங்காரத்தின் தளத்தில் இயங்கிக்கொண்டே இருப்பது ஒரு முரண்நகை. அவன் தன் நூலகத்தை ஒவ்வொரு நூலாக, வரி-வரியாக அறிந்தவன்; தன் தப்பித்தலிலும் தனது நூலகத்தைத் தலைக்குள் சுமந்து திரிபவன். ஒவ்வொரு இரவும் விடுதியறையின் தரையில் காகிதங்களை விரித்துத் தன் மூளையிலிருந்து புத்தகங்களை வெகு கவனமாக இறக்கியடுக்குவான். கூடவே திரிந்த குள்ளனும் இந்நாடகத்தை மிகையான பவ்வியத்துடன் உடன்-நடிப்பான். அதே சமயம் குள்ளனும் தெரீஸும் அவரவர் கோணங்களில் பைத்தியங்களே. இரண்டு பக்கங்கள் அவர்களது மனவோட்டத்தைப் படிக்க நேரும்போது, அகஸ்மாத்தாக அவர்களது நியாயங்கள் தியரெடிகல் கணிதத்தின் வாய்ப்பாடுகள் போல ஆச்சரியமூட்டும் துல்லியத்துடன் புலப்படும். ஆனால் அதன் அடிப்படை அலகுகள் முற்றிலும் மனப்பிராந்தியாலானவை.
தெரீஸ் தனது வயதை முப்பதாகக் கணிக்கும் எந்த ஆணுக்கும் கீய்னின் சொத்தைத் தாரை வார்த்துக் கொடுக்கத் தயாராகக் காத்திருக்கிறாள். குள்ளன் உலகச் சதுரங்க ஆட்டங்களின் நடப்புகளை ஒரு கட்டத்திற்கு மேல் புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கிறான்; சர்வதேச கிராண்ட்-மாஸ்டர்களை வெறுக்கிறான், தன் அறிவுக்கு எட்டாத தளத்தில் அவர்களது ஆட்டங்கள் சென்றுவிடுவதாலேயே. அவர்கள் இருவரின் பகற்கனவுகளும் அசாத்திய சாதனைகளைப் பற்றியது; அதற்காக அடுத்தவரை பலியிடத் தயங்காத பூதாகார இச்சைகளாலானவை. தாஸ்தயேவ்ஸ்கியை மிகவும் மதித்த கனெட்டியின் இப்படைப்பிலும் குற்றவுணர்வு ஒரு கதாபாத்திரம் போல அமர்ந்திருக்கிறது. ஆனால் மீட்போ உன்னதமயமாக்கலோ இல்லாத இருண்ட வெளியில் அது வெறும் வேடதாரியாக இருக்கிறது. கதாபாத்திரங்களின் பகற்கனவுகளே குற்றவுணர்வாக, ஆதிப் பாவமாக தலைகாட்டுகின்றன.
கதையின் ஒரே ஒளிக்கீற்றாகத் தோற்றமளிக்கும் பாத்திரம் பீட்டர் கீய்னின் சகோதரன் ஜார்ஜ் கீய்ன். ஜார்ஜ் பாரீஸ் நகரில் வசிக்கும் வெற்றிகரமான மனநோய் மருத்துவர். பீட்டருக்கு நூல்கள் எப்படியோ ஜார்ஜுக்குத் தன் நோயாளிகள் அப்படி; அவர்களைத் தன் ஆசான்களாகக் கருதும் ஜார்ஜின் கனவு, தன்னால் குணமடைந்த ஒருவரேனும் மீண்டும் வந்து “நான் எவ்வளவு உன்னதமான நிலையில் இருந்தேன், இன்று மீண்டும் அன்றாடத்துக்கு இறங்கி வந்து விட்டேனே!” என்று சொல்லக் கேட்பதுதான். பித்தர்கள் பற்றிய ஜார்ஜின் எண்ணங்கள் புத்தகத்தின் மூன்றாம் பகுதி முழுவதும் இறைந்துள்ளன:

“நாம் (பொருட்களை) ஆட்கொள்பவர்கள், ஆனால் (பித்தன்) ஆட்கொள்ளப்பட்டவன்; நாம் அனுபவங்களை இரண்டாந்தரமாகப் பெற்றுகொள்கிறோம், அவன் சுயமாக உருவாக்கிக்கொள்கிறான்… அவன் தன் வாழ்க்கைமுறையை நியாயப்படுத்திக் காப்பாற்ற நம் அனைவரைவிடவும் அதிக புத்தியைச் செலுத்துகிறான். அவன் தன் உணர்வுகளால் சமைக்கப்பட்ட படிமங்களை நம்புகிறான். நாம் நமது ஆரோக்கியமான இந்திரியங்களை அவநம்பிக்கையோடு அஞ்சுகிறோம்… நமது சமய நம்பிக்கையின் இன்றியமையாமைக்குக் காரணம் நமது சொந்த மன-வறுமையே… புரிதல், நமது புரிதலின்படிப் பார்த்தால், வெறும் புரிதல்பிழை. தூய அகத்தறிவின் வாழ்க்கை ஒன்று இருக்குமானால், அதைப் பித்தன் மட்டுமே கடைபிடிப்பவனாவான்!”

இந்தப் பித்தின் பல வடிவங்களை நாம் இன்றைய அடிப்படைவாதங்களிலும் காண்கிறோம், தன் அகத்தறிவைத் தவிர்த்த மற்றவற்றை நிராகரிக்கும் இப்பித்து எப்படி ஒரு ஒட்டுவாரொட்டி நோய் போல பரவுகிறது என்பது கண்கூடு. இந்தப் பாணியில் வீய்மார் வியென்னாவின் நாஜிச்சூழலில் வாழ்ந்த கனெட்டியின் தர்க்கங்கள் பாத்திரங்களின் பிழையான எண்ணங்களாக நூலை ஊடுறுவுகின்றன.
ஜார்ஜ் தனது சகோதரனின் மனநிலையை அறிந்ததும், அவனை மீட்க வருகிறான். ஆனால் தான் சந்திக்கத் துடிக்கும் பித்தம் முற்றிய பைத்தியக்காரன் தன் சகோதரன்தான் என்று அவனால் அடையாளம் காண முடியவில்லை. எனவே வீட்டையும் நூல்களையும் மீட்டு, பீட்டரை அதில் இருத்திவிட்டு பாரீஸ் திரும்பிவிடுகிறான். தனிமையில் பித்து கட்டுக்கடங்காமல் போகவே பீட்டர் கீய்ன், தன் நூலகத்திற்குத் தீ மூட்டி அதன் நடுவில் தானும் எரிந்து மாய்கிறான். அவனது இறுதி நினைவுகளில் வெடித்து மறையும் சில படிமங்கள்: மரணத்தின் நடனம், பொன் கன்று – ஐரோப்பிய சரித்திரத்தின் ஆழ்மனப்படிமங்கள். வாக்களிக்கப்பட்ட நிலத்துக்கு இறையருளால் இட்டுச் செல்லப்பட்டும், பயணத்தின் நடுவிலேயே மாய்ந்த இஸ்ரேலின் புத்திரர்களைப் போலவே கீய்னும் அவனது நூல்களும் மீட்பிலும் மடிகின்றனர்.
கனெட்டி யூத பின்புலத்தைச் சார்ந்த நாத்திகர். நூலெரிப்பை வாழ்நாள் முழுவதும் அஞ்சிய கீய்னின் ‘தருமச் செயல்‘ கனெட்டி அஞ்சி வெறுத்த வாழ்வனுபவத்தின் உச்சம். பழி சொல்வதையோ, சுய-பச்சாதாபத்தையோ அறவே வெறுத்த அந்த இளைஞரின் இவ்வெளிப்பாடு அரசியல் புரிதல்களைத் தாண்டிய தர்க்கவெளிக்கு நம்மை இட்டுச்செல்கிறது. வரப்போகும் அவரது பல சமூகவியல் கருத்துக்களும், சித்தாந்த நிராகரிப்புகளும் இப்புனைவின் அவசரத்தன்மையோடு கோர்க்கப்பட்டுள்ளன. மார்க்ஸிய சித்தாந்தத்திலுமே உடன்பாடற்ற அவரது அடுத்த மாபெரும் நூல், ‘மக்கட்திரளும் மறமும்‘ (Crowds and Power – 1960) என்ற தலைப்பிலான அபுனைவு, இந்நாவலைத் தொடர்ந்த முப்பதாண்டு காலமாக இயற்றப் பெற்றது. அதில் இடம்பெறப்போகும் கும்பல்களின் உளவியல் இப்புத்தகத்திலும் காணக்கிடைக்கிறது.
கும்பல்களின் கழிவிரக்கமும் வன்மமும் சீன இரகசியங்களின் விளையாட்டைப்போல அலையலையாக பரவும் கதைத்தருணம் இந்நாவலிலும் உண்டு. மேலும் ஜார்ஜின் மன-நலக் கோட்பாடுகள் முழுவதும் கூட்டு-மனத்தைப் பற்றிய எண்ணங்களே. எடுத்துக்காட்டாக, அவனது நனவோடையிலிருந்து :

“சரித்திரத்தின் மிக ஆழமான, அதி விசேஷமான ஊக்கி, மனிதர் தன்னிலும் சிறந்த விதமான மிருகமாக உயர, கும்பலாக இணைய இச்சைப்படுவது, அக்கும்பலில் தன்னை முழுமையாக தொலைத்து, ‘ஒரு‘ மனிதன் இருந்தான் என்பதையே மறப்பது.”

கல்வி இக்கூட்டு மனதைத் தகர்க்கிறது.

மானுடம் என்பது வெறும் கருத்தாக்கமாக நீர்த்துப்போவதற்குப் பல காலம் முன்னரே அது ஒரு ஒற்றைத்திரளாக இருந்திருக்கிறது. அது நம்முள் ஒரு பெரிய, கட்டுக்கடங்காத வெம்மையான இரத்தம் பாயும் மிருகமாக, நமதாழத்தில், வெகு ஆழத்தில், தாய்மையை விட ஆழத்தில் நுரைத்துகொண்டிருக்கிறது. அதன் வயதையும் மீறி அதுவே ஜந்துக்களில் மிகவும் இளமையானது, புவியின் சாராம்சமான படைப்பும் அதுவே, புவியின் இலக்கும் அதுவே, வருங்காலமும் அதுவே. நாம் அதைப் பற்றி ஒன்றும் அறியோம்; நாம் தனிமனிதரைப் போலவே பாவனை செய்து வாழ்கிறோம். சமயங்களில் இத்திரள் நம்மேல் பொழிகிறது, ஒற்றைப் பிரவாகமாக, ஒரு சமுத்திரமாக, ஒவ்வொரு துளியும் உயிருள்ளதாக, ஒவ்வொரு துளியும் ஒரே விஷயத்தை விரும்புவுதாக. ஆனால் சீக்கிரமே அது மீண்டும் சிதறிப் போகிறது, நம்மை மீண்டும் தான் ஆகவிட்டு விலகுகிறது, பாவப்பட்ட தனி ஜன்மங்களாக. நாம் ஒருபொழுது இவ்வளவு பெரியதாக, இவ்வளவு அளவுகளில், இவ்வளவு ஒன்றாக இருந்தோம் என்று நினைவிலும் கருத முடிவதில்லை. “நோய்” என்கிறான் அறிவின் பாரத்தை சுமந்திருப்பவன்: “மனிதனுள் இருக்கும் மிருகம்” என்கிறது பணிவின் ஆட்டுக்குட்டி, தன் தவறு உண்மைக்கு எவ்வளவு அருகாமையில் இருக்கிறதென்று ஊகிக்காமலேயே. அதே சமயம் நம்முள் இருக்கும் திரள் ஒரு புதிய தாக்குதலுக்காக ஆயத்தமாகிறது. இத்திரள் மீண்டும் சிதராமல் இருக்கும் ஒரு காலம் வரும், ஒருக்கால் அது முதலில் தனியாக ஒரே ஒரு தேசத்தில் உதிக்கலாம், அங்கிருந்து தன் பாதையைத் தின்றுருவாக்கியபடி வெளிச்செல்லும், ஒருவரது சந்தேகத்துக்கும் இடமளிக்காது, ஏனெனில் அன்று நானோ, நீயோ, அவனோ இருக்க மாட்டோம், ‘அது‘ மட்டுமே இருக்கும், பெருந்திரள்”.

எண்ணற்ற மக்கள் பைத்தியமாகக் காரணம் அவர்களுள் இருக்கும் திரள் குறிப்பிடும்படியான அதீத வளர்ச்சியடைந்து விடுவதால், ஆற்றாமையில் தவிப்பது,” என்பதே ஜார்ஜ் மன-நோய்க்கு அளிக்கும் விளக்கம். ஜார்ஜ் தன்னை மனநோயாளிகளின் மீட்பராகவே உருவகித்துகொள்கிறான். அவன் அவர்களின் திரளை “எகிப்திற்கு அழைத்துச் செல்லும் சேவையைச் செய்தான். அதற்காக அவன் வகுத்த வழிகள் ஆண்டவன் தன் மக்களை விடுவிக்கச் செய்த அதிசயத்தைவிட எவ்விதத்திலும் குறைந்ததல்ல.” இதில் தானே மோஸஸாகவும், யாஹ்வேவாகவும் பொறுப்பேற்கும் மற்றொரு பித்தனையே காண முடிகிறது.
மறுமுனையில் பீட்டர் கீய்னோ திரளை மனமாற வெறுத்து அஞ்சுபவன். ஆனால் அவனது பித்திற்குக் காரணம் அதீத சுய-மையம். சில முறை அவன் புறவுலகை நிராகரிக்கக் கையாண்ட சொலவடை “esse percipi” – இருத்தல் என்பது உணரப்படுதல். சிங்கத்தின் முன் கண்ணை மூடிக் கொண்டு ‘சிங்கம் மறைந்துவிட்டது’ என்று நம்பும் கழுதையின் கதை கீய்னுடையது. அசலில் இந்நாவலின் ஜெர்மன் பெயர் ‘Die Blendung’: குறுட்டடிப்பு அல்லது கூசொளி. நாவலில் கீய்ன் பலமுறை நேரடியாகவே குருடனைப்போல பாவனை செய்துப் பழகிக் கொள்வான். தெரீஸையும் அவளது சாமான்களையும் கண்டும் காணாததுபோல பாவிக்க அவன் உருவாக்கும் தர்க்கங்களைப் பார்க்கலாம்:

“எந்த மடையனாலும் இன்று மின்சாரத்தையும் சிக்கலான அணுக்கூட்டங்களையும் கையாள முடிகிறது. ஒருவர் போல மற்றவரென்று எவர் கண்ணுக்குமே தட்டுப்படாத பல வடிவங்கள் கீய்னின் அறையை, அவனது விரல்களை, புத்தகங்களை நிரப்புகின்றன. இந்த அச்சிட்ட தாள், மற்றொவ்வொரு தாளையும் போலவே தெளிவாக, சீராகத் தெரிந்தாலும், உண்மையில் ஆக்ரோஷமான எலக்ட்ரான்களின் நரகம். அவன் சதா அதன் பிரக்ஞையிலேயே இருந்துவிட்டால் எழுத்துக்கள் அவன் கண்களின் முன் நடனமாடும். அவன் விரல்கள் அவற்றின் துஷ்ட இயக்கத்தை பல ஊசிக்குத்தல்கள் போன்ற அழுத்தமாக ஸ்பரிசிக்கும். ஒரு நாளில் அவன் ஒரே ஒரு மெல்லிய வரியைப் படித்தலே சாதனையாகிவிடும். (எனவே) தன் வாழ்வின் ஒவ்வொரு தொந்தரவுக்கும் அந்தக் குருட்டுத்தனத்தை உபயோகித்தல் அவனது உரிமை, தன் புலன்களின் அத்துமீறிய ஸ்பரிசங்களிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளத்தான்.”

ஜெர்மன் மொழியில் ‘wegdenken’ என்றொரு சொல் உண்டு, தனக்கொவ்வாத விஷயத்தை நப்பாசையாலேயே விரட்ட நினைப்பது என்று அதற்குப் பொருள். ஒவ்வொரு சொல்லும் அதன் கலாச்சாரத்தின் பிரதினிதானே.
இதில் ஃப்ராய்டை கிண்டல் செய்யும் நோக்கமும் பொதிந்துள்ளது. கீய்ன் சகோதரர்கள் இருவருமே ஒருவகையில் தப்பித்தல்வாதிகள், கனெட்டி, ஃப்ராய்டையும் அப்படியே காண்கிறார். உலகத்திலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள அவர்கள் உருவாக்கும் கோட்பாடுகள் அக்கால ஃபின்-டி-சீக்கிள் வியென்னாவில் பெரும் செல்வாக்கு பெற்றிருந்த சித்தாந்தங்களின் திரிபுகள் போலத் தெரிகின்றன. காந்த்தின் கருத்துமுதல்வாதம் அக்கால அறிஞர்களால் ஒரு கலாச்சாரக் கட்டுமானக் கருவியாக மறுவுருவாக்கம் செய்யப்பட்டது; எந்த ஒரு கருத்தாக்கத்தையும் (நல்லதோ பொல்லாததோ) தூயதிலும் தூயதாக வடிகட்டி, அதையே நடைமுறைப்படுத்த நினைக்கும்போது ஒரு பித்துக்குளி அடிப்படைவாதம்தான் மிஞ்சுகிறது. ஜனநாயகம் என்னும் உன்னதக் கோட்பாட்டின் அடிப்படையில்தானே அமெரிக்காகூட தன் போர்களை நியாயப்படுத்தி வருகிறது. ‘நன்மை’ என்பதை ஒரு மேட்டிமைக்கருவியாக, அடுத்தவரை நிந்திக்கும் அளவீடாக உபயோகிக்கும் இச்சையை நீட்செ விரிவாக்கம் செய்த அதிகார இச்சையோடு கோர்க்கிறார் கனெட்டி. ஆனால் எல்லாமே உபநிஷதங்களின் ‘நேதி, நேதி’ என்ற மாதிரியான ஒரு நிராகரிப்புப் பாதையில் சொல்லப்படுகின்றன. கதையின் சம்பவங்கள் கூட நம்பகமற்ற கதாபாத்திரங்களின் கோணங்களாக விரிவதால் உண்மையில் என்ன நடந்தது என்பது பக்கம் தோரும் மாறிகொண்டே செல்கிறது. எந்த மாய-யதார்த்தமும் இல்லாமலேயே நிலையற்ற ஒரு உலகத்தின் சித்திரம் விரிகிறது!
இந்நாவலின் கதாபாத்திரங்கள் அடுத்தவரது இருத்தலின் அவசியத்திற்குக் குருடாகவே இருக்கின்றனர்; சாதாரண மனித புரிந்துணர்வை நிராகரிக்கிறார்கள், மனிதப் பன்மையை ஜீரணிக்க முடியாமல் தவிக்கிறார்கள். அதன் கோட்பாட்டுச்சம் கீய்ன் சகோதரர்களே. இருவரும் வெவ்வேறு காரணங்களுக்காக நாவல் வடிவத்தையே வெறுக்கின்றனர். பீட்டர் நாவலை ஒருவரது ஆளுமையில் அறையப்படும் கோடரியாய்ப் பார்க்கிறான். ஒருமுறை ஒரு ஆளுமை பிளந்து விட்டால், அதில் மற்ற ஆளுமைகள் நிரம்பி விட்டால், அதன் சுயம் கரைந்து நீர்த்துவிடும் என்று நம்புகிறான். “புரிந்துகொள்ளுதல் மன்னித்தலுக்கு சமம்” என்ற பாஸ்கலின் பொன்மொழி நினைவுக்கு வருகிறது. மாறாக ஜார்ஜ் நாவல்களைக் கைவிடக் காரணம் அவன் அவற்றின் கண்ணியமான வெளிப்பாட்டினால் ஏமாற்றமடைகிறான். பித்தர்களின் தீவிரத்தின் முன் நாவல்கள் அவனுக்கு சத்தில்லாமல் போகின்றன; அவற்றுள் பதமாக்கப்பட்ட வாழ்க்கையின் இதமான படிப்பனுபவம் பெண்களுக்கானவை என ஒதுக்குகிறான். அவனது ஆசை, கூட்டத்தில் கரைவது, அவன் கூட்டத்தைப் பித்தனின் மனதில் திரண்டிருப்பதாக நம்புகிறான். பித்தனோ தனது தனித்தன்மையில் நம்பிக்கை கொண்டிருக்கிறான், தனது பேராற்றலில் நம்புகிறான்.
ஒரு கட்டத்தில் கீய்ன் தான் கல்லாக மாறி விடும் கலையைப் பயிற்சி செய்தால் தெரீஸின் அடி-உதைகள் அவளையே திரும்பத் தாக்கிவிடும் என்று நம்ப ஆரம்பிக்கிறான். அது பலிக்காத போது அவன் அடையும் ஏமாற்றம் பிரம்மாண்டமானது. தெரீஸ் அவனது விலாக்களில் தன் முஷ்தியைப் பதிக்கிறாள், “அவனுக்கு எல்லாமே உரைத்தது. அவன் கல்லில்லை. அவள் துண்டங்களாக உடையாததால் அவன் கலைதான் நொறுங்கியது. எல்லாமே பொய், எதிலும் அறமில்லை. கடவுள் இல்லை.”
இந்த ஏமாற்றம் எல்லா கதாபாத்திரங்களையுமே பீடிக்கிறது. குள்ளனின் சதுரங்கமும், தெரீஸின் காதலும், ஜார்ஜின் வெற்றியுமே கீய்னின் கலை போலத்தான், வெற்று நம்பிக்கைகள்.

Elias Canetti_Books_Authors_Reviews_Writers_Susan Sontag

இந்நூலின் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் இதன் கதாபாத்திரங்கள் அலுக்காமல் வெளிப்படுத்திகொண்டே இருக்கும் பெண்-வெறுப்பு. ஓரிடத்தில் கீய்ன் பக்கம் பக்கமாக பெண்களைப் பற்றிய நிந்தனைகளைத் தன் சரித்திர நாயகர்களின் மேற்கோள்களாக மிக வேடிக்கையான விதத்தில் ஒப்பித்துக்கொண்டே போவான். புத்தரில் துவங்கி, அரிஸ்டாட்டில், கன்ஃப்யூஷியஸ், ஹோமர் என ஒருத்தர் விடாமல் செல்லும் சிந்தனையாளர்களின் வரிசை வியப்பிலாழ்த்துவது. எந்தப் பெரும் நாகரிகத்தின் சிந்தனை ஊற்றிலும் பெண்ணை அறிவுலகத்திலிருந்து விலகிய, பகுத்தறிவிற்கு எதிர்மறையான ஜீவனாகப் பார்த்து ஒதுக்குவதற்கான நியாயப்படுத்தல்கள் ஒரு நிலத்தடி குப்த-கங்கை போல விரிந்திருப்பது சட்டென்று புலப்படும் தருணம் அது. பாஃப் போன்ற ஒரு பாமரனும் முழுமையான ஒத்திசைவில் “இம்மாதிரி விஷயங்கள் புத்தகங்களில் இருப்பதுதான்” என்று தலையசைக்கும் வண்ணம் பெண்-நிந்தனையின் யதார்த்தம் சமூகங்களில் பதிந்திருப்பதை கனெட்டியின் ஆசிரியக் குரல் மிக சூக்குமமாக முன்வைக்கிறது.
அதே சமயம் கனெட்டியின் சொந்த நாட்குறிப்புகளிலும் விளக்கமற்ற பெண்-நிந்தனை வாசகங்கள் இறைந்துள்ளன. அதைக் கட்டுரையாளர் ஸூஸன் ஸோந்தாக் கூட மிகவும் வேடிக்கையாகவே கவனிக்கிறார் (‘Mind as passion’ என்ற அவரது கட்டுரை கனெட்டி பற்றிய மிக சுவாரசியமான அலசல். அவருடைய சரிதையுடன் நூல்களையும், சிந்தனைகளையும் தொடர்புபடுத்தும் அருமையான கட்டுரை). எழுத்தாளர் விளாதிமிர் நபோகோவோ, திரைப்பட இயக்குநர் ஸ்டேன்லி கூப்ரிக் போன்றோரோ திடுக்கிடும் பெண்-வெறுப்பைத் தம் கலையில் சித்தரிக்கும் அதே சமயம் அவர்களது நிஜ வாழ்வில் அதை வெளிப்படையாகவே கண்டித்தவர்கள், எனவே புரிதல்பிழைகளுக்கு அதிகம் இடமில்லை. ஆனால், கனெட்டி, வி.எஸ்.நைபால் போன்றோரது கருத்துக்கள் முற்றிலும் வேறு ரகம். அவர்களது நேர்மறை கருத்துக்கள் தத்தம் இருத்தலின், ஆளுமையின் நேர்மையான வெளிப்பாடாகப் பகிரப்படுகின்றன.
குறிப்பாக கனெட்டியைப் பொறுத்த வரையில் அவரது சிந்தனையே எதிர்மறைகளாலானது என்பதால் அவரது கருத்துக்களின் நுணுக்கம் பல சமயம் தொலைந்து விடும் அபாயத்தில் உள்ளன. இந்நாவலில் யூத வெறுப்புமே இதே பாணியில் தண்ணீரில் உப்பைப் போலத் தெளிவாகக் கலக்கப்பட்டிருக்கிறது. குள்ளனின் கனவுகளில் தலையாயது தன் யூத உடலையும் அடையாளத்தையும் எப்படியாவது இழப்பது தான், சுய-வெறுப்பால் தனக்களிக்கப்பட்ட எல்லா சுட்டிகளையும் ஏற்கும் அக்கால யூதர்களின் உருவமே அவன். அவனுடைய விகாரமான மன-அரற்றல்களில்தான் கொஞ்சமாவது மனம் இளகிவிடுகிறது, அவனது தப்பிக்கமுடியாத யூத அடையாளம் அவனது சில்லறை புத்திகூர்மையின்  எல்லைகளை முற்றாக சுருக்கிவிடுவதே அவனது பெரும் துயர்.
எப்படியேனும் கனெட்டி வெளிப்படையாகவே அரசியல் கோட்பாடுகளை வெறுப்பவர், உண்மையான அங்கதத்தின் அம்சமே அதன் சார்பின்மைதான். அதற்கும் ஒரு படி மேலாக அவரது நாட்குறிப்பு ஒன்று: “ஆகச்சிறந்த அங்கதர்களில்கூட என்னை மிகவும் உறுத்துவது அவர்களது ஏற்புடைமை (reasonableness), அவர்களது மாபெரும் எண்ணங்கள் உதிக்கும் ஆழமற்ற குட்டை.” எனவே அவரது எண்ணங்கள் பொதுநியாயத்திற்கு ஏற்புடையனவாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்க முடியாது. அதே சமயம் அவரது அரசியலற்ற தன்மையே அவரது அத்தியாவசிய அழகியலாகவும் உருமாறுகிறது.
கனெட்டியின் கலையுணர்வின்மையையே ஸூஸன் சோந்தாக் (Susan Sontag) அவரது “மாபெரும் எல்லையாகக்” கருதுகிறார். கண்டிப்பாக அக்காலத்தில் பேராண்மை பெற்றிருந்த உச்ச-நவீனத்துவ அழகியலின் எதிரியாகத்தான் கனெட்டி தன்னைக் கண்டார். ஆனால் அவரது சொல்லாட்சியின், வடிவமைப்பின் அழகியல் நவீனத்துவத்தை விட பலகாலம் முன்கூட்டியது, பலமடங்கு பரீக்‌ஷார்த்தமானது. நபோகோவின் நம்பகமற்ற பாத்திரக்குரல் கூட இரு பத்தாண்டுகள் தொலைவில் இருந்தது. சமீபத்தில் ஹர்ஷா தெஹெஜியா என்ற பேராசிரியர் நவரசங்களுக்கு மேற்படியாக ஒரு புதிய நவீன ரசத்தை சேர்த்துள்ளார்: ‘despair’ அல்லது மனத்தளர்ச்சியின் ரசம். கருணைக்கும் விபத்ஸத்திற்கும் நடுவில் சிக்கிய ரசம் அது, சாந்த ரசத்திலிருந்து வெகு தூரத்தில் நிற்கிறது. இது கொஞ்சம் காலம்-தாழ்ந்த புதுமையாகக் கூட இருக்கலாம். ஆனால் கனெட்டி அக்காலத்தில் இயங்கிய எதிர்மறை அழகியல்கள் அனைத்தையும் தன் அங்கதத்தின் சாதனங்களாகவே பயன்படுத்தினார். அவர் தனது நாவலின் முதல் பிரதியை தாமஸ் மன்னிற்கு அனுப்பியிருந்தார். மன் அந்தக் காகிதக்கட்டைத் திறந்து கூடப் பார்க்கவில்லை. ஆனால் நாவல் வெளிவந்ததும் புகழத் தவறவுமில்லை. ஆனால் மன்னின் படைப்புகளின் கேலிச்சித்திரமாகக் கூட கீய்ன் சகோதரர்களைப் பார்க்கலாம்; நவீனத்துவத்தின் கதாநாயகர்களான ‘தனி’ மனிதர்கள், தங்கள் தனிமையின் அத்துமீறல்களால் அழிந்துபோனவர்கள்.
மேலும் தூய வடிவியல் கோணத்தில் பார்த்தாலுமே கனெட்டியின் நாவலின் அழகியல்-வடிவமைப்பு பிரமிப்பை ஏற்படுத்துகிறது. க்ராஃபிக் டிஸைன் போலவே அவர் தன் கதாபாத்திரங்களைச் சின்னங்களாய்ப் பதிவு செய்துள்ளார். எடுத்துக்காட்டாக: தெரீஸ் எப்பொழுதுமே அதிகமாய்க் கஞ்சி பொழிந்து இஸ்திரி செய்யப்பட்ட முழு-நீளப் பாவாடையையே அணிவாள், எனவே அவளது சுட்டுப்பெயரும் சின்னமும் ‘கடல் சிப்பி.’ கீய்னின் ஒரு சிறு-வயது நினைவுடன் இதை இணைக்கிறார்: அவன் ஒரு சிப்பியின் வாயைத் திறந்து அதன் இரகசியத்தை அறிய விரும்புகிறான். ஆனால் கடினமான ஓடு பிடிகொடுக்காததால் ஏறி மிதித்து உடைக்கிறான். உள்ளே வெறும் மாமிசக் குழம்பு. அதே போல முரட்டு மனிதன் பாஃபின் சின்னம் – ‘முஷ்டி’, குள்ளன் ஃபிஷெர்லின் மனைவி பெயர் ‘முதலியவாதி’ (அந்த பரத்தையர் விடுதியில் அவளுக்கு மட்டும்தான் நிரந்தர நடு-வயது சந்தாதாரர் ஒருவர் இருந்ததால்). ஹாலிவுட்டின் கோமாளிகள் மார்க்ஸ் சகோதரர்களைப் போன்ற கண்ணிய-மீறல், ஜார்ஜ் க்ரோஸின் மிகைச்சித்திரங்களைப் போன்ற கதாபாத்திரங்கள், ஃப்ரிட்ஸ் லாங்க் திரைப்படங்கள் போன்ற எக்ஸ்ப்ரெஷனிச கதைவெளிகள், வால்ட் டிஸ்னி கார்ட்டூன்கள் போல தர்ம-அடி பட்டும் மீண்டும் மீண்டும் உயிர்த்தெழும் கதைமாந்தர், ஷேக்ஸ்பியரின் ‘Comedy of Errors’ இன் கரிய மாற்றுருவம், க்ரிம்ம் சகோதரர்களின் நாட்டார் கதைகளுக்கடியில் பொதிந்துள்ள பயங்கரம், யாரையும் ஒத்திராத சிந்தனைக்குழம்பு, இதுவே ‘Auto da Fe’யின் உலகம்.
இந்நாவலின் முதல் ஆங்கிலப் பதிப்பின் தலைப்பு ‘The Tower of Babel’ என்றிருந்தது மேலதிக விளக்கவுரையாக அமைந்துள்ளது. கீய்ன் அஞ்சுவதைப் போல இந்நாவல் நமது ஆளுமையைப் பிளந்து வேற்று ஆளுமைகளால் நிரப்புவதல்ல, கதைமாந்தர்கள் விரும்பத்தக்கவர்களாகவோ சாதாரணமானவர்களாகவோ இல்லாததால்; ஜார்ஜ் எண்ணுவதுபோல நாகரிகமான அழகியல் வடிவில் வழங்கப்படவில்லை, எல்லோரையும் சமரசமின்றி தாக்கித்தகர்க்கிறது, ஆயிரமாண்டுகள் பழமையான சிந்தனைத் தலைவர்களையும் நூலோடு கொளுத்திக் களிக்கிறது. ஆனால் அந்தப் புத்தகக் கொளுத்தல் கனெட்டிக்கு எந்த மனவோய்வையும் அளிக்கவில்லை, மாறாக மாபெரும் வெறுமையிலும் குற்றவுணர்விலுமே ஆழ்த்தியது. “புத்தகங்களுக்கான உரிமையை நான் இழந்து விட்டேன், ஏனென்றால் என் நாவலுக்கு அவற்றை அவியாக்கிவிட்டேன்” என்று தன் சுயசரிதையில் சொல்கிறார். தனக்கு மிகவும் பிடித்தமான நூல்களும் விலக்கத்தையே அளித்தன, பல மாதங்கள் இந்த அயர்ச்சியும் வேதனையும் தொடர்ந்தது. பிறகொரு நாள் ப்யூக்னர் (Büchner)  என்ற பத்தொன்பதாம் நூற்றாண்டு இலக்கிய ஜாம்பவான் ஒருவரின் புத்தகம் தனது மறக்கப்பட்ட நூலகத்தில் தட்டுப்படுகிறது. எழுத்தாளர் வில்லியம் காஸின் (William Gass) வார்த்தைகளில்:

“அகஸ்மாத்தாக, ஆனால் யாரறிவார், எந்தத் தன்னறியாத உந்துதலாலோ, அந்தப் புத்தகத்தின் உடல் மற்றும் மனம் பற்றிய நினைவோடு, இருபத்தாறு வயது கனெட்டி டைஃபஸ் நோயால் இருபத்திமூன்று வயதில் இறந்த எழுத்தாளரின் துணி-போர்த்திய ஏட்டினைத் தேர்வு செய்கிறார், தன் விரல்களை Woyzeck இன் ஒரு பகுதியொன்றைத் திறக்க அனுமதிக்கிறார். “மின்னலால் தாக்கப்பட்டது போலிருந்தது எனக்கு.” அவர் அந்தக் காட்சியைப் படிக்கிறார், சீக்கிரமே முழு நாடகத்தையும் படிக்கிறார், மீண்டும் மீண்டும். பிறகு, அதே அதிர்ந்த நிலையில், அவர் அதிகாலை ரயிலைப் பிடித்துத் தன் காதலியை பார்க்கச் செல்கிறார், ஒரு வகையில் தனக்கு ப்யூக்னரை இதற்கு முன் அவர் பரிந்துரை செய்யாமலிருந்ததை புகார் செய்ய. அதை ஈடுகட்ட அவர் காதலி லென்ஸ் (Lenz) என்ற பித்தனைப் பற்றிய கதையைப் பரிந்துரைக்கிறாள் – லென்ஸ் அசலில் கதேயின் (Goethe) நண்பரும் கவிஞரும்கூட. “நான் அவ்வளவு பெருமிதப்பட்டுக் கொண்ட என் நாவல் புழுதியாகவும் புகையாகவும் நொறுங்கி விழுந்தது.””

கனெட்டி தன் அயர்ச்சியிலும் தான் இடித்து வீழ்த்திய நாவல் வடிவம் மேல் கொண்டிருந்த பெருமிதம் இதில் வெளியாகிறது. அதை சிதைத்த ப்யூக்னர் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு முன்னரே பித்தர்களைப் பற்றியே எழுதி வந்தார், கனெட்டியின் அதே நிராதரவோடு, அவரது மற்ற ஆதர்ச ருஷ்ய எழுத்தாளர் கொகோலை விடவும் தீவிரமாக. கனெட்டி அதைத் தொடர்ந்து நாவல் எழுதுவதையே கைவிட்டுவிட்டார். ரௌத்திரம் பழகுவதென்பது அவ்வளவு எளிய காரியமல்ல. உண்மையாக ஒருமுறை பழகிவிட்டால் எதன் மீதும் கரிசனம் மிஞ்சுவதில்லை, தன் சுயம் உட்பட. அதே சமயம் ருத்திரனின் கோபமும் ஒரு வகை கனிவின் வெளிப்பாடு தானே. பழையன கழியாமல் புதியன உருவாக முடியாது. சார்லி ஹெப்தோ போன்ற இதழ்களின் அங்கதத்தை இன்றும் கூட தாள முடியாத ‘முற்போக்கு’ நாகரீகங்கள்தான் நாம். அன்றைய தேதியில், அதுவும் “அழுகிய கலைகள்” என்று கருதப்பட்டனவற்றை நாஜிக்கள் எரிக்கத் துவங்கிய 1933 ஆம் ஆண்டைத் தொடர்ந்த வருடங்களில் இந்நாவல் தீயைத் தப்பித்து அச்சானதே ஒரு வினோதனமான காரணத்தால் தான். ஜெர்மன் பதிப்பாளர்கள் ஒருவருமே நீண்ட தடியால் கூடத் தொட மறுத்த இந்நாவலை ஒரு பணக்கார பதிப்பாளர் மீட்டு உரிமைகளைப் பெற்றுக் கொண்டார். ஸ்ட்ராஸ்பர்க் நகரைச் சார்ந்த ஜான் ஹோஃப்னர் என்பவர் கனெட்டியின் கதைச் சுருக்கத்தைப் படித்தபின் ஒரு முடிவுக்கு வந்தார்: “நான் இதை ஒருபோதும் படிக்கப் போவதில்லை. ஆனால் இப்படிப்பட்ட ஒரு புத்தகம் புழக்கத்தில் இருக்கவேண்டும். அது நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தும். படிப்பவர்கள் ஒரு கொடுங்கனவிலிருந்து விழித்ததுபோல எழுவர், நிஜம் இந்தக் கனவைக் காட்டிலும் வேறாக இருப்பதை உணர்ந்து நன்றியுணர்வடைவர்.” இப்படியாக கனெட்டியின் வார்த்தைகளில், “ஹோஃப்னர் நாவலின் இருப்பிற்கு ஒரு தார்மீக உள்நோக்கத்தை ஏற்படுத்தினார்: ஒடுக்குதல்தான் அது.”
எப்படியோ நாவலின் ஆயுள் காப்பாற்றப்பட்டுவிட்டது. அரசியல் சரிகளின் நம் யுகத்திலும் அது வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது, யாரையும் மன்னிக்காமல், சற்றும் ஆறுதல் அளிக்காமல். தினமும் நேரடித் தொலைக்காட்சியில் மக்கள் கொல்லப்படுவதை, கட்டிடங்கள் சரிவதைப் பார்த்தும், அதற்கான பலவண்ண நியாயப்படுத்தல்களையும், நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் தீர்க்க தரிசனச் சிந்தனைகளைக் கேட்டும் பழகிய நம்மை இன்னமும் ஏதேனும் உலுக்க முடியுமா, உலுக்கத் தேவையா என்று நன்றாக ஆராய்ந்து விட்டு, நெஞ்சுரம் இருந்தால் கண்டிப்பாகப் படிக்கலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.