முப்பாலுக்கு அப்பால்

roman_holiday_ver5_xlg

“நான் அந்த ஸ்வாமிகளைப் போய்ப் பாத்துட்டு வரலாம்னு இருக்கேம்மா.”

காபி கலக்க ஆயத்தமாய் ஸ்டவ் அருகில் தரையில் அமர்ந்திருந்த அம்மா திரும்பிப் பார்க்காமலே கேட்டாள், “என்ன சமாசாரம்?”.

பெரிய பித்தளை பில்டரில் சர்ரென்று வென்னீர் ஊற்றுகிற சத்தம்.

“இல்ல! நான் பி எஸ்சி அக்ரி சேரலாமா இல்ல , பி எஸ்சியோ, பிஏவோ பண்ணிட்டு எதாவது ஆடிட்டர் கிட்ட சேந்து ஆர்டிகிள்ஷிப் பண்ணலாமான்னு கேட்கலாம்னுட்டு” என்றான் அவன்.

“சரி போய்ட்டு இருட்டறதுக்குள்ள வந்துடு”
பெரிய அடுக்கில் பாலை அடுப்பில் ஏற்றியாயிற்று, பக்கத்தில் குமுட்டி அடுப்பில் இரண்டு , மூன்று டம்ளர் காபி திட்டத்துக்கு பால் காய்ந்து கொண்டிருந்தது.

“அவர் நல்ல தேஜஸ்வி இல்லம்மா ?”

“இல்லையா பின்ன? தபோ பலம், ஆத்ம பலம் இதெல்லாம்தான் அப்பிடி தேஜஸா ஜொலிக்கிறது.”

“எப்பிடிம்மா அவாளுக்கெல்லாம் அந்த ஆத்ம பலம் கிடைக்கிறது?”

“இப்போ ‘தன்னை அறி’ங்கிற வாக்யத்தைப் படிச்சா , உனக்கும் ,எனக்கும் என்ன தோணும்? ஒருத்தன் தன்னைத் தானே நன்னா புரிஞ்சுக்கணும், அறிஞ்சுக்கணும் அவ்வளவுதான். ஆனா அவாள்ளாம்,அப்பிடியே நூல் புடிச்சா மாதிரி தனக்குள்ளயே ஆழமா போய்ப் போய் , அதோட அர்த்தத்திலையும், உணர்வு பூர்வமாய் புரிஞ்சுக்கறதுலையும், தோய்ஞ்சு, தோய்ஞ்சு, தானும் அந்த அர்த்தமும் வேற வேற இல்ல, ஒண்ணேதாங்கிற லெவலுக்கு போயிடுவா.”

“அந்த மாதிரி ஆறதுக்கு நாம என்ன பண்ணனும்?”

“ஏண்டா!அது தெரிஞ்சா நான் ஏண்டா இப்பிடி காபி கலந்துண்டு உக்காந்துண்டு இருக்கேன்? நானும் ஒரு காஷாயத்தைக் கட்டிண்டு, கமண்டலத்தை எடுத்துண்டு, காட்டுக்குப் போயிருக்க மாட்டேனோ?” அம்மா சிரித்துக் கொண்டே சொன்னாள்.

“இந்தா, காபியைக் குடிச்சுட்டு கிளம்பு!போறச்ச கூடத்தில இருக்கறவாளை எல்லாம் காபி குடிக்க வரச் சொல்லிட்டுப் போ.”

கூச்சலும் ,குதூகலமுமாக இருந்த கூடத்துக்கு நடுவில் நின்று கொண்டு “அம்மா காபி குடிக்க கூப்பிடறா” என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிட்டு, ரேழியில் கிடந்த செருப்பைப் போட்டுக் கொண்டு வெளியே போனான்.

“இவன் எங்க இந்த வெய்யில்ல வெளியில கிளம்பிட்டான்” என்று யாரோ யாரையோ கேட்கும் குரல் பின்னாலிருந்து தேய்ந்து கரைந்தது.

சிந்தாமணியை ஒட்டி இருந்த கரூர் சாலையில் இறங்கி நடக்கத் தொடங்கினான். இடது பக்கம் பச்சைப் பசேலென்று வயல்வெளி சாயங்கால வெய்யிலில் மின்னிக் கொண்டு, காற்றில் சிற்றலை அடித்துக் கொண்டிருந்தது. வலது பக்கம் மரங்களும், செடிகளும் அடர்ந்த குறுங்காட்டில் இறங்கினான். இந்த வெய்யில் வேளையிலும், குறுங்காடு, சில்லென்று ,நிழலும், மெல்லிருட்டுமாய்க் கிடந்தது. நடுவில் இருந்த பண்ணை பங்களாவை சுற்றிக் கொண்டு போனால் காடு சற்று தூரத்தில் முடிவடைந்து விடும் என்று நினைத்துக் கொண்டே நடையை விரைவாக்கினான்.

“எனக்கேன் இந்த காவேரி படித்துறை சாமிகளை இவ்வளவு பிடிக்கிறது ? காலேஜ்ல அழகா, இளமையா, உற்சாகமா இருக்கற, நன்னா பாடம் நடத்தற வாத்தியார்களுக்கெல்லாம் ஒரு கதாநாயக அந்தஸ்து இருக்குமே, அந்த மாதிரி ஆசிரியர்களை பசங்க சுத்தி,சுத்தி வருவாங்களே, அவங்களை மாதிரியே பேசறது, நடக்கறது, டிரஸ் பண்ணிக்கறதுன்னு இருப்பாங்களே, அந்த மாதிரியான ஒரு வழிபாட்டு உணர்வோடு கூடிய அன்பா இது?

இந்த ஸ்வாமிகள் நிஜமாகவே பார்க்க ரொம்ப ‘ஜம்’னு இருப்பார். நல்ல ஆஜானுபாகு, தந்த நிறம், கரிய, பெரிய கண்கள், சிரிக்கும்போது ஒளி விடுகிற வரிசைப் பற்கள். தவிர ஒரு பெரிய பாரம்பர்யம் மிக்க, பண்பாடான, மகா பெரிய பணக்கார குடும்பத்தில் பிறந்தவர். ரொம்ப பெரிய , பெரிய படிப்பெல்லாம் படித்திருக்கிறார் என்று கேள்வி. இதனாலெல்லாமா எனக்கு அவரைப் பிடிக்கிறது?

இல்லயே, நம்மாத்துக்கு அடிக்கடி வருகிற குடும்ப சாமியாரைக் கூட எனக்குப் பிடிக்குமே! அவருக்கு எங்கோ ஆந்திரா பக்கம் பூர்வீகம். நீளமான, அடர்த்தியான தாடி, மீசைக்கு நடுப்பற முகம் கொஞ்சமாத்தான் தெரியும், அதோட ஜடா மகுடதாரி வேறு! அவரையும் இவனுக்கு ரொம்ப பிடிக்கும். அவருமே கூட எட்டு குழந்தைகளிருக்கிற இவனது வீட்டில் இவனைக் குறிப்பிட்டுக் கூப்பிட்டு, எப்போதும் தன் அருகில் உட்கார்த்தி வைத்துப் பேசிக் கொண்டிருப்பாரே! பொதுவாக எனக்கு என்னவோ சாமியார்களைப் பிடிக்கிறது. சாமியார்களுக்கும் என்னைப் பிடிக்கிறது.”

அன்னிக்கு அம்மாவோட திருவானைக் கோவில் ஜோசியரிடம் போனது ஞாபகம் வந்தது.

அவனோட மூணாவது அக்கா ஜாதகத்தையும், பிள்ளை வீட்டார் அனுப்பியிருந்த ஜாதகத்தையும் பொருத்தம் பார்க்க கொண்டு போயிருந்தார்கள். ஒரு நோட்டுப் புத்தகத்தில் எல்லாருடைய ஜாதகமும் எழுதியிருந்தது. முதல் மூன்று நான்கு குழந்தைகள் ஜாதகங்கள் வரை அதில் எழுதியிருந்தன.

நேரமின்மையோ, அலுப்போ மற்ற குழந்தைகளின் ஜாதகங்கள் எழுதப்படாமல் துண்டு, துண்டு கடுதாசுகளாக உள்ளே சொருகி வைக்கப்பட்டிருந்தன. அம்மா அக்கா ஜாதக பக்கத்தைத் தேடும் பொழுது, இவன் ஜாதகம் ஜோசியர் அருகில் கீழே விழுந்தது. அவர் எடுத்து சும்மா பார்த்துக் கொண்டிருந்தார்.

அம்மா சொன்னாள், “அது இல்ல மாமா ஜாதகம், இதோ எடுக்கறேன்.”

“நீங்க மெதுவா எடுங்கோ, நான் சும்மா இதை பாத்துண்டு இருக்கேன்! இது யாரோடது?”

“என்னோடது மாமா”என்றான் எட்டிப் பார்த்துக் கொண்டே.

“நன்னா படிக்கறயா?” ஜாதகத்தைப் பார்த்துக் கொண்டே கேட்டார்.

இவனுக்கு பதில் சொல்வதில் கொஞ்சம் குழப்பம் இருந்தது. அவன் சில பாடங்களில் ரொம்ப நல்ல மார்க் வாங்குகிறான், சில பாடங்கள் கொஞ்சம் வாச்சான், போச்சான் விவகாரம்தான். அதனால் மையமாக தலையை ஆட்டி வைத்தான்.

ஆள்காட்டிவிரலால் ஜாதகத்தைத் தட்டிக் கொண்டே யோசனையாய் சொன்னார் “ஒரு நிமிஷம் தப்பிப்பிறந்துட்டே! இல்லாட்டா சாமியாரா போக வேண்டிய ஜாதகம் இது” கொஞ்ச நேரம் கழித்து சொன்னார் “நன்னா முன்னுக்கு வருவே!”

இவனுக்கு சந்தோஷமாக இருந்தது. அம்மா எதையும் கவனித்த மாதிரி தெரியவில்லை.

“இந்தாங்கோ மாமா ஜாதகம்! பொருத்தம் பார்த்து சொல்லுங்கோ” என்றாள்.

இவனுக்கு ஏமாற்றமாக இருந்தது.

என்னென்னவோ யோசித்துக்கொண்டே வந்ததில் குறுங்காடு முடிகிற இடத்துக்கு வந்து சேர்ந்ததை உணர்ந்தான்.

“குடமுருட்டி பாலம் வந்துடுத்தா அதுக்குள்ளே?”

பாலம் முடிகிற இடத்தில் வலது பக்கம் பாதை தடாலென்று பள்ளமாய் இறங்குகிற மண்சாலையில் இறங்கி நடந்தால் பத்து நிமிஷ நடைதான்.

நடையின் முடிவில் மேட்டுப் பாங்கான இடத்தில் உயரமாக, கம்பீரமாக, அந்த ஆசிரம வீடு நின்றிருந்தது. கட்டிடத்தைச் சுற்றி வளைத்திருந்த சுற்றுச் சுவரில் இரும்புக் கதவு ஒருக்களித்தாற் போலிருந்தது.

கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனான். இரண்டு பக்கமும் நிறைய செடி, கொடிகளோடு தோட்டம் பூத்துக் குலுங்கியது. வழக்கமாக சாமிக்கண்ணு அங்கு உட்கார்ந்து எதையாவது கொத்திக் கொண்டிருப்பான். இன்றைக்கு என்னவோ ஆளைக் காணோம்.

நடுவில் ஓடுகிற சிமெண்ட் பாதையின் முடிவில் பெரிய அரை வட்ட வளைவில் ஆறு உயரமான படிகள், வீட்டைச் சுற்றி ஓடுகிற அகலமான வராந்தாவில் போய் முடிந்தன.

வேலைப்பாடமைந்த மரக்கதவு பாதி திறந்திருந்தது. உள்ளே நுழைந்தான். எதிரில் தெரிந்த பெரிய திறந்த வெளி முற்றத்தைச் சுற்றி இடது புறம் ஆரம்பித்து மூன்று புறமும் தாழ்வாரம், வலது புறம் பெரிய சுவர். இடது புற தாழ்வாரத்தை ஒட்டிய கூடத்தில் உட்கார்ந்து கொண்டு சாமிக்கண்ணு நாலைந்து லாந்தர் விளக்குகளை சாம்பல் போட்டு தேய்த்து விட்டு துணியால் அழுந்த துடைத்துக் கொண்டிருந்தான்.

காலடிச் சத்தம் கேட்டு நிமிர்ந்தவன்,
“யாரது? மலைக்கோட்டை அய்யர் வீட்டுப் பையனா? வா, வா! சௌக்யமா?” என்றான்.

“ஆங்! நல்லா இருக்கேன்! நீங்க எப்பிடி இருக்கீங்க?”

“நல்லா இருக்கேம்பா! சாமியாரை பாக்க வந்தியா?அவரு கொல்லைக் கிணத்தடியில இருக்காரு! போய்ப் பாரு!”

“அப்பிடியா! போய்ப் பாக்கறேன்” என்று சொல்லிக் கொண்டே தாழ்வாரத்திலிருந்து முற்றத்தில் இறங்கி பின் கட்டை நோக்கி நடந்தான்.

முற்றத்தில் பெரிய சுவரை ஒட்டி விரித்திருந்த மான் தோலில் ஸ்வாமிகள் உபயோகிக்கிற கணக்குப்பிள்ளை மேஜை இருந்தது. இடதுபக்கம் சுவடிகள் அடுக்கப்பட்டு கட்டப் பட்டிருந்தன. வலது பக்கம் சுவடிகள் பிரிக்கப்பட்டு பாதி படிக்கப் பட்டவை போல கிடந்தன. கணக்குப் பிள்ளை மேஜை மேல் தடித்த நோட்டுப் புத்தகம். பார்த்துக் கொண்டே போனான்.

கொல்லை கிணற்றடியில் ஸ்வாமிகள் நின்று கொண்டிருந்தார். ஆசிரம பின் சுவரை ஒட்டி ‘ஹோ’வென்று காவேரி ஓடுகிற சத்தம். செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார் போலிருந்தது.
இவனைப் பார்த்ததும் சிரித்துக் கொண்டே “வா! வா! “என்றார்.

”அப்பாவும் வந்திருக்கிறாரா?”

“இல்லை!ஸ்வாமிகளே! நான் மட்டும்தான் வந்தேன்” கீழே நமஸ்காரம் பண்ண குனிந்தான்.

“இருக்கட்டும்! இருக்கட்டும்! கீழ எல்லாம் ஒரே ஈரம்! உள்ளே வா” என்றபடி உள்ளே திரும்பினார்.

இவனும் தனக்குப் பின்னால் இருந்த பின் பக்க கதவை இழுத்துத் தாழ் போட்டு விட்டு பின்னோடு நடந்தான். உள்ளே முதல் கட்டு முற்றத்துக்கு வந்ததும் மான் தோலில் அமர்ந்தபடி,
“வெளிச்சம் போறதுக்குள்ளே இந்த பாக்கி சுவடிகளை பிரதி எடுத்துக்கறேன். நீ உள்ளே போய் நடேசன் கிட்ட ராத்திரி சாப்பாடு இங்கதான் பண்ணப் போறேன்னு சொல்லு! நீ வந்திருக்கிறது அவருக்கு தெரியாதில்லையா போய்ச் சொல்லு! அப்புறம் நாம சாவகாசமா உக்காந்து பேசலாம்.”

உள்ளே பெரிய சமையல் கூடத்தில் இரட்டை அடுப்பில் விறகுகள் படபடத்து எரிந்து கொண்டிருந்தன. ஒன்றில் வெங்கலப் பானையும், மற்றொன்றில் கல் சட்டியும் காய்ந்து கொண்டிருந்தன. நடேசன் மாமா கை அலம்புகிற முற்றத்திற்கு அருகில் கையில் தாம்பாளத்தில் எதையோ வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“என்ன மாமா சௌக்யமா?”

“யாரது?”சமையலறை கொஞ்சம் இருட்டாக இருந்தது.

அருகில் வந்ததும் “ஓ ! மலைக்கோட்டை ஈஸ்வர அய்யராத்துப் பையனா? வாடா அம்பி! சௌக்யமா?”என்றார்.

“சௌக்யம்தான் மாமா!”

நான் இங்கதான் சாப்பிடப் போறேங்கிறதை எப்படி சொல்லுவது, கொஞ்சம் சங்கோஜமாக இருந்தது.

“அப்பாவும் வந்திருக்காரா?”

“இல்ல மாமா! நான் மட்டும்தான் வந்தேன்! நீங்க சௌக்யமா? உங்காத்தில எல்லாரும் சௌக்யமா?”

“ஆத்துக்காரி, குழந்தைகள் எல்லாரும் சௌக்யம், அம்மாக்குத்தான் உடம்பு ரொம்ப தள்ளாமையா இருக்கு! ஒரு நடை வந்து பாத்துட்டுப் போயேன்னு கடுதாசு மேல கடுதாசு போட்டுண்டுருக்கா! போகணும்.”

மாமாவுக்கு ஸ்வாமி மலை பக்கத்தில் திருவலஞ்சுழிதான் சொந்த ஊர். ‘நளபாகம் நடேசன்’னு ரொம்ப பிரசித்தம். கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி பக்கத்தில எந்த பெரிய மனுஷர்கள் வீட்டுக்கல்யாணம் என்றாலும் நளபாகம் நடேசன் தான் சமையல். அவர் சமையல் இல்லாத கல்யாணம் என்றால் ஒரு மாற்று கம்மிதான். சில சமயங்களில் அதனால பெரிய சம்பந்தி சண்டையே கூட நடந்திருக்குன்னு சொல்லக் கேள்வி.

“ராத்திரி அரிசி உப்புமாவும் ,கொத்சுவும் பண்ணப் போறேன்.மத்யானம் பண்ணின துகையலும் இருக்கு! பிடிக்குமோல்லியோ? சாப்பிட்டுட்டு , சாவகாசமா பேசிண்டிருந்துட்டுப் போயேன்!” என்று அவன் சாப்பாட்டு பிரச்னைக்கு அவரே ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.

“பிடிக்கும் மாமா! அதுவும் நீங்க பண்ணினா கேட்கணுமா?”என்றான்.

“ஆமா போயேன்!பெரிய பஞ்ச பக்ஷ பரமான்னம்!”

“ஏன் மாமா! பெரிய பெரிய கல்யாணங்களில் எல்லாம் ஐநூறு, ஆயிரம் பேர்களுக்கு சமைச்சுட்டு, இப்படி இரண்டு பேருக்கும், மூணு பேருக்கும் பண்றது எப்பிடி மாமா இருக்கு?”

கருவேப்பிலையும்,பெருங்காயமும்,மிளகாய் வற்றலும், தேங்காயும் சேர்ந்து கொதிக்கிற வாசனை அந்த உப்புமாவின் ருசிக்கு கட்டியம் கூறியது.

“தவிர, உங்களுக்கு அப்பல்லாம் நிறைய வருமானம் வேற இருந்திருக்கும் இல்லயா மாமா?” இளைமைக்கே உரிய அசட்டு தைரியத்திலும், அனுபவமின்மையிலும் கேட்டான்.

“அம்பி! இப்பவும் எனக்கோ, எங்காத்தில யாருக்குமோ எந்த சௌக்யத்துக்கும் குறைச்சல் இல்ல! எல்லாரும் ரொம்ப நன்னா இருக்கோம், ஸ்வாமிகள் ஆசீர்வாதத்துல. நாம்ப பொதுவா நினைச்சுக்கறோம், சந்தோஷங்கிறது பணம், காசுலதான் இருக்குன்னு! ஆனா எல்லாருக்கும் வாழ்க்கையில ஒரு கட்டம் வரும், நின்னு, நிதானமா திரும்பி பார்த்து யோசிக்க. இது வரைக்கும் நான் என்ன பண்ணிண்டு இருந்தேன்,இனிமே நான் பண்ண வேண்டியது என்னன்னு. அப்ப பொறி தட்டினாப்ல தோணும். அப்ப அந்த தீர்மானத்தை தைரியமா,தெளிவா எடுத்துடணும். எனக்கு அப்படி ஒரு தருணம் நேர்ந்தது. ஸ்வாமிகளைப் பார்த்த வினாடி தெளிவாயிடுத்து என்ன பண்ணணும்னு.”

பேசிக் கொண்டே மாமா மள மளவென்று தண்ணீர் கொதித்துக் கொண்டிருந்த வெங்கலப் பானையில் அரிசி ரவையைப் போட்டார், கல்சட்டியில் புளியைக் கரைத்து ஊற்றினார். அதற்குள் இருட்டு சரசரவென்று கவிந்து கொண்டு வந்தது.

“சரி, நீ ஸ்வாமிகளைப் பார்த்து எதோ பேசணும்னு வந்துருக்க! நான் பாட்டுக்கு என் கதையை சொல்லிண்டிருக்கேன்! போய் வேணா பாரேன், அவர் வேலையை முடிச்சுட்டாரான்னு.”

அவன் வெளியே வந்தான். ஸ்வாமிகள்பிரதி எடுத்து முடித்துவிட்டாரோ, இல்லை இருட்டி விட்டது என்று நிறுத்தி விட்டாரோ தெரியவில்லை.

கண்ணை மூடிக் கொண்டு நிஷ்டையில் இருந்தார். சாமிக்கண்ணு லாந்தர் விளக்குகளை எல்லாம் ஏற்றி விட்டு கூடம், தாழ்வாரம், முற்றம், சமையல் கட்டு, இரண்டாம் கட்டு என்று வரிசையாக சென்று மாட்டிவிட்டு கையில் ஒரு லாந்தரை எடுத்துக் கொண்டு வாசல் பக்கம் போனான்.

கவிந்து கொண்டிருந்த இருட்டும், லாந்தல் விளக்கு வெளிச்சமும், திறந்த வெளி முற்றத்தில் பொழிந்து கொண்டிருந்த காற்றும் சொல்லொண்ணா அமைதியை அவனுக்குள் இறக்கியது போலிருந்தது. அவனும் ஸ்வாமிகளுக்கு முன்னால் சற்று தூரத்தில் கண்களை மூடிக் கொண்டு அமர்ந்தான்.

பின்னால் கொல்லையில் காவேரி ஒடுகிற சல சல சத்தம், தோட்டத்து மரங்களில், கிளைகளும் இலைகளும் உரசுகிற சத்தம், சிள் வண்டுகளின் ரீங்கார சத்தம், எங்கோ தெருவில் போகிற வண்டி மாடுகளின் கழுத்து மணிகளின் சத்தம், கூடை அடைய தாமதமான ஒற்றைப் பறவையின் சத்தம், தூரத்து மெயின் ரோடில் லாரி போகிற சத்தம், ஆசிரம இரும்பு கேட்டில் கட்டியிருக்கிற தகரம் காற்றில் ஆடும் சத்தம், சமையலறையில் பாத்திரங்களின் ஜலதரங்க சத்தம் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டிருக்கையில் இப்பிடியே இருந்து விட்டால் என்ன என்று தோன்றியது. அந்த நிமிடம், தான் ஸ்வாமிகளிடம் கேட்க வந்த கேள்வி ரொம்ப அசட்டுத்தனமாகவும், அவசியமில்லாததாகவும் தோன்றியது.

“இங்கேயே இருந்துடலாம்னு தோணறதா?” ஸ்வாமிகள் குரல் கேட்டு கண் திறந்தான். ஆமாம் என்பது போல தலையை அசைத்தான்.

சின்ன சிரிப்போடு அவனை ஆதரவாக பார்த்தார்.
“எதிலெருந்தாவது தப்பிச்சுக்கறதுக்காக இந்த வழியை தேர்ந்தெடுக்கக் கூடாது. இதுதான், இது மட்டும்தான் தனக்கு வேணுங்கறது தீர்மானமா தெரியணும். அப்பிடி தெரிஞ்சப்பறம் கூட, இந்த வழியிலே போகறத்துக்கு உண்டான பக்குவம் தன் கிட்ட இருக்காங்கறதும் தெரியணும்…இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில் 100% தெரிஞ்சாலொழிய இந்த முடிவுக்கு வரக் கூடாது. அதுக்கு உனக்கு நிறைய நாள் இருக்கு, மெதுவா வரலாம்! இப்பொ, உனக்கு என்ன வேணும், என்ன கேட்க வந்தே , அதைச் சொல்லு” என்றார்.

சொன்னான்.

“ம்.. பேஷா பண்ணலாமே! உனக்கு இரண்டு பிரிவிலேயும் நல்ல இன்ட்ரெஸ்ட் இருக்கு! நன்னா பண்ணலாம்.முடிவெடுத்துட்டு சொல்லு! பிஎஸ்சியோ, பிஏவோ இங்கேயே சேரலாம்! முடிச்சப்பறம் நல்ல ஆடிட்டர்கள்கிட்ட சேர்றது ஒண்ணும் கஷ்டம் இல்ல , மெதுவா பாத்துக்கலாம். அக்ரி பண்ணனும்னா கோயம்பத்தூர் போணும்!ரெண்டுத்துலே எதுல சேர்றதா இருந்தாலும் நான் சேர்க்க ஏற்பாடு பண்றேன். ஆனா கோயம்பத்தூர்னா ஹாஸ்டல்ல சேரணும்!அப்பா கிட்ட முடியுமான்னு கேட்டுக்கோ!”

“எனக்கு அக்ரி தான் சேரணும்.”

“சேத்துட்டா போச்சு! கவலைப் படாதே! போய் சாப்பிடு!இருட்டிடுத்து, ஆத்தில கவலைப் படுவா இல்லையா? சாப்டப்புறம் நான் சாமிக்கண்ணுவை கூட துணைக்கு அனுப்பறேன். ஆத்து வரைக்கும் கொண்டு விடுவான்.”

நமஸ்காரம் பண்ணிவிட்டு சமையல் கட்டுக்குள் நுழைந்தான். சாப்பிட்டுவிட்டு கையை அலம்பும் சமயத்தில் வாசல் தகரக் கதவு ஓசைப்படும் சத்தம் கேட்டது.

“ரொம்ப நேரமா காத்துல தகரம் அடிக்கறதுன்னு தோணித்து! இப்போ யாரோ தட்டற மாதிரி தெரியறதே!” என்றார் ஸ்வாமிகள்.

இவன் வேகமாக வாசலை நோக்கி நடந்தான்.

“இரு!இரு! அவசரப் படாதே!இருட்டு வேளை! இங்க எலக்ட்ரிக் லைட்டும் கிடையாது!யாரோ எவரோ தெரியாது.நானும் வரேன்!” என்று லாந்தர் விளக்கை கையில் எடுத்துக் கொண்டு இவனோடு நடந்தார் ஸ்வாமிகள்.

“சாமிக்கண்ணு எங்கே போய்ட்டான்? மாட்டு கொட்டகைப் பக்கம் போயிருக்கானோ என்னவோ?” என்று சொல்லிக் கொண்டே கதவைத் திறந்தார்.

அப்பா!

ஸ்வாமிகளைப் பார்த்ததும் “ஸ்வாமிகளை தொந்தரவு படுத்தறதுக்கு மன்னிக்கணும்! இவன் போய் ரொம்ப நாழி ஆயிடுத்தேன்னு இவன் அம்மா கவலைப் பட்டா. அதான் நான் வந்தேன்” என்றார் அப்பா.

இவனைப் பார்த்து “ஏண்டா!இருட்டறதுக்கு முன்னால கிளம்பியிருக்க மாட்டியோ?” என்றார்.

ஸ்வாமிகள் “ பாவம், இந்த இருட்டில இத்தனை தூரம் வந்திருக்கேளே. உள்ளே வாங்கோ” என்றார்.

அப்பா உள்ளே வந்து பையிலிருந்து தட்டை எடுத்து பழங்களை வைத்து ஸ்வாமிகள் அருகில் வைத்துவிட்டு நமஸ்காரம் செய்தார்.

“கொஞ்சம் சிரம பரிகாரம் பண்ணிண்டு போலாமே!”என்றார் ஸ்வாமிகள்.

அப்பா “இன்னொரு நாள் சாவகாசமா வந்து உங்க கிட்ட நிறைய விஷயங்கள் கேட்டுக்கணும். இப்போ உத்தரவு கொடுக்கணும். சிரமத்துக்கு மன்னிக்கணும்” என்றார்.

“இருக்கட்டும்! பரவாயில்ல. ஜாக்ரதையா பாத்துப் போங்கோ! இருட்டு வேளை. டார்ச் இருக்கா?” என்று கேட்டார் ஸ்வாமிகள்.

“இதோ கொண்டு வந்திருக்கேனே” என்று சொல்லி விட்டு, “உத்தரவு வாங்கிக்கறேன்” என்றார் அப்பா.

அப்பாவும், அவனும் வெளியே வந்தார்கள். அவனுக்கு அப்பாவை அலைக்கழித்து விட்டோமே என்ற குற்ற உணர்வு எழுந்தது. பாவம் பகல் முழுக்க வயலில் ஆள்காரர்களோடு வெய்யிலில் நின்று விட்டு, எட்டு கிலோ மீட்டர் சைக்கிளை மிதித்துக் கொண்டு வந்திருப்பார். உடனே கொஞ்ச நேரத்திற்கெல்லாம் எனக்காக சாப்பிடாமல் கூட கிளம்பி வந்திருப்பார் என்று நினைத்துக் கொண்டான்.

எட்டு குழந்தைகளிருக்கிற தன் வீட்டில் தன்னுடைய இருப்போ, இன்மையோ யாருக்கும் ஒரு பொருட்டே இல்லை என்று எத்தனை தடவையோ நினைத்திருக்கிறான். அப்படி நினைத்ததை இப்போது நினைத்தால் ரொம்ப துக்கமாக இருந்தது.

அப்பாவின் கைகளை தன்னிச்சையாகத் தொட்டான். டார்ச் லைட் வெளிச்சத்தில் பாதையை காட்டிக் கொண்டு போன அப்பா “பயமா இருக்கா. பயப்படாதே, என் கையை பிடிச்சுண்டு வா” என்று இவனைப் பார்த்து ஆறுதலாகச் சிரித்தபடி கையை இறுக்கப் பற்றினார்.

~oOo~

ம்பாயின் காபிடல் சினிமாவின் வாசலில் நின்று கொண்டு எதிர் சாரியை எதேச்சையாக பார்த்துக் கொண்டு இருக்கையில், காவி வேஷ்டியுடன், ஆஜானுபாகுவாக, கம்பீரமாக நடந்து போய்க் கொண்டிருந்த சாமியாரைப் பார்த்ததும், காவேரிக் கரை ஸ்வாமிகளைப் பற்றிய நினைவுகள், நேற்று நடந்தது போன்ற துல்லியத்துடன் சரம் சரமாக அவனுள் அவிழ்ந்தது அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது.

முந்தைய நிமிடம் வரை அவனுக்குள் அந்த நினைவுகள் இருந்ததைப் பற்றிய பிரக்ஞையே இல்லை. சில வாசனைகள், சில தோற்றங்கள், சில சப்தங்கள், என்றோ, எப்போதோ நடந்து, ஏறக்குறைய மறந்தே போன விஷயங்களை எப்படி நினைவுறுத்துகின்றன என்பது எப்போதுமே ஒரு மர்ம முடிச்சுதான்.

அமீர் இஸ்மாயில் டிக்கெட் வாங்க உள்ளே போயிருந்தான்.கொஞ்சம் கூட்டம் அதிகம்தான்.
“நான் கவுண்டரில் டிக்கெட் வாங்க முயற்சி செய்கிறேன், நீ வெளியில் கறுப்பில் கிடைக்கிறதா பார்” என்று சொல்லிவிட்டு போயிருந்தான். ரோமன் ஹாலிடே பட போஸ்டரில் ஆட்ரி ஹெப்பர்ன் அழகாக சிரித்துக் கொண்டிருந்தாள். இன்று இவளைப் பார்க்காமல் போனால் தூக்கமே வராது, பார்த்தாலும்தான் என்று நினைத்துக் கொண்டான்.

கறுப்பு டிக்கெட் விற்பது மாதிரி யாருமே கண்ணில் படவில்லையே என்று நினைத்துக் கொண்டே பக்கத்தில் நின்ற கிழவரைப் பார்த்தான். நல்ல வெள்ளை வெளேரென்று, கூர்மையான நாசியோடு, கம்பீரமாக இருந்தார். உரக்கப் பேசாத, அதே சமயம் அற்புதமான உடைகள் அணிந்திருந்தார். சீருடை அணிந்த காரோட்டி அவரிடம் வந்து மரியாதையாக, மென்மையாக ஏதோ சொன்னான். தலையை அசைத்து கேட்டுக் கொண்டு அவனை அனுப்பியவர், அவனைத் தற்செயலாகப் பார்த்தார். சினேகமாகப் புன்னகைத்தார்.

“ஹலோ யங் மேன்! என்னிடம் ஒரு டிக்கெட் அதிகமாக இருக்கிறது, உனக்கு வேண்டுமா? நான், என் மனைவி, என் சகோதரி மூவரும் சினிமா பார்ப்பதாக இருந்தது. நீதான் பார்த்தாயே இப்போது, டிரைவர் வந்து என் சகோதரி வர முடியவில்லை என்று சொல்லிவிட்டுப் போனான். உனக்கு வேண்டுமா?”

“ரொம்ப தாங்க்ஸ் சார்! என்னுடைய நண்பன் வரிசையில் நிற்கிறான், அவனிடம் சொல்லிவிட்டு உங்களிடம் வாங்கிக் கொள்கிறேன்”என்றான் .

“ஓ! அப்பிடியென்றால் உனக்கு இரண்டு டிக்கெட் வேண்டுமே!இது பயன்படாது இல்லையா?” என்றார்.

“இல்லை சார்! கூட்டம் அதிகம் இருப்பதால், டிக்கெட் கிடைப்பது கஷ்டம். கவுண்டரில் ஒரு டிக்கெட் வாங்க சொல்கிறேன். உங்களிடத்தில் ஒன்று வாங்கிக் கொள்கிறேன். ப்ளீஸ்! கொஞ்சம் காத்திருக்க முடியுமா?”

“ஓ! யெஸ்!”

கிட்டத்தட்ட கவுண்டர் அருகில் இஸ்மாயில் நின்றிருந்தான், இங்கேயிருந்து கத்திச் சொன்னான்.

“அமீர்! ஒரு டிக்கெட் போதும்.”

அவன் தலையை ஆட்டி சரி என்றான்.
அவர் அருகில் வந்து” எவ்வளவு சார் ?”என்றான்.
அவனிடத்தில் டிக்கட்டைக் கொடுத்துக் கொண்டே “நாலு ரூபாய்” என்றார்.

ஐந்து ரூபாயைக் கொடுத்தான். பாக்கி ஒரு ரூபாய்க்காக பர்சைத் திறந்து பார்த்தார். உதட்டைப் பிதுக்கி கொண்டு, பாண்ட் பாக்கெட்டில் கை விட்டு தேடினார்.

“பரவாயில்லை” என்று சொல்லி விட்டு ஐய்யோ தப்பாகப்படுமே என்று தோன்றி நாக்கைக் கடித்துக் கொண்டான்.

அவர் சிரித்துக் கொண்டே “அப்பிடி எல்லாம் ஒரு ரூபாயை அலட்சியம் செய்யக் கூடாது, ஒவ்வொரு ரூபாயும், ஏன் ஒவ்வொரு பைசாவும் யாரோ ஒருவருடைய உழைப்பில் வந்ததுதான் இல்லையா” என்று சொல்லிக் கொண்டே ஒரு ரூபாயை தந்தார்.

“தாங்க்ஸ் சார்!”

“ஓகே யங் மேன்! எஞ்ஜாய் த மூவி!” போய் விட்டார்.

தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டே வந்த இஸ்மாயில் “அடப் பாவி! யாரோட பேசிட்டு இருந்தே தெரியுமா?” என்று ஏறக் குறைய கத்திக் கொண்டே வந்து முதுகில் அறைந்தான்.

“யாரோ பார்த்த பிரபலமான முகமாக இருக்கு! ஆனா யாருன்னு சரியா தெரியலை”
சொன்னான்.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு எண்பது வருடங்களுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டு, சுதந்திர இந்தியாவின், தொழில் வளர்ச்சிக்கும் , கட்டுமானத்திற்கும், புனர் அமைப்பிற்கும் மிகப் பெருமளவில் பங்காற்றிய இரு மிகப் பெரிய பழம்பெரும் தொழில் நிறுவன குழுமங்களில், ஒன்றின் உரிமையாளர். அவர்கள் கால் பதிக்காத தொழில் துறையே இல்லையெனலாம்.
சொல்லப் போனால் அந்த குழுமத்தைச் சார்ந்த தொழில் நிறுவனம் ஒன்றில்தான் இவர்கள் இருவரும் பணி புரிகிறார்கள்.

“அடடா! எப்படி நான் மிஸ் பண்ணினேன். வாட் எ ரிமார்கபிள் மேன்! என்ன எளிமை! என்ன பண்பு!”

அமீர் கேட்டான் “என்னடா பேசினே?”

சொன்னான்.

“அடப் பாவி! அவர்கிட்ட ஒரு ரூபா தராட்டா பரவாயில்லன்னயா? எத்தனை ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரர் கிட்ட!” கடகடவென சிரித்தான்.

“ஒரு விஷயம் கவனிச்சயா? அந்த நாலு ரூபா டிக்கெட் போனா போகட்டும்னு அவர் விடல பாத்தியா? அந்த டிக்கெட்டை யாரு கிட்டயும் குடுக்கலைன்னா, அது நியாயமா சினிமா பாக்க வேண்டிய ஒத்தனோட வாய்ப்பை அனாவசியமா கெடுக்கறா மாதிரி இருக்கும்னு நினைச்ச அவரோட நியாய உணர்ச்சி, அப்புறம் அந்த ஒரு ரூபாயை தேடிக் கொடுத்து, அந்த பணத்துக்கு பின்னால இருக்கற எத்தனையோ பேரோட உழைப்பை மதிச்ச விதம், ரிமார்க்கபிள்!”

“தவிர, ரவி! இன்னொண்ணு பாத்தியா? அவர் நீ நாலு ரூபா கொடுக்க வேண்டாம்னு கூட சொல்லியிருக்கலாம். ஆனா அப்பிடி சொல்றது உன்னை ஒரு விதத்தில், மெலிதாக அவமானப் படுத்தற மாதிரி இருக்கும்னு நினைச்சு அதைத் தவிர்த்த சென்சிடிவிடி, உணர்திறன்!!”

“நான் உன் கிட்ட சொல்லிட்டு வரேன்னு சொன்னப்பறம் காத்துக் கொண்டிருந்தாரே, அது அவர் கான்ட்ராக்டை மதிக்கும் பண்பு! இந்த அஞ்சு நிமிஷத்துக்குள்ளே எத்தனை பாடம் கத்துக் கொடுத்திருக்கார்.”

“ரவி! உனக்கு ஞான மார்க்கத்தோட ஒரு கைகுலுக்கல் பத்து வருஷத்துக்கு முன்னால், இப்பொ அர்த்த சாஸ்த்ரத்தோட ஒரு அறிமுகம்,அடுத்தது என்ன?” என்றான் அமீர் இஸ்மாயில், அவனின் வழக்கமான குறும்பு சிரிப்புடன்.

“படவா! உனக்கு இவ்வளவு தெரிகிறதா” என்று சிரித்துக் கொண்டே ரவி அவன் முதுகில் தட்டிவிட்டுச் சொன்னான்.

“அடுத்தது என்ன, ரோமன் ஹாலிடே தான்.”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.