பொறியியல் போதனையாளருடன் ஒரு உரையாடல்

சொல்வனத்தின் கலைச்சொற்களைப் பற்றி


[stextbox id=”warning” caption=”டெக்னாலஜி டெர்ம்ஸ்”]

ஐயா,
சொல்வனம், என்னத்த சொல்லுறது. உண்மையிலேயே வனம். எல்லா பகுதிகளும் வனத்தையும் தாண்டி பெரும் வனாந்திரமாகி பூதாகாரமாக நிற்கிறது. ஆனால் சிற்சில முட்களும் அப்பொழுது தைத்து வலியும் எரிச்சலையும் அதனால் தொடர்ந்து படிப்பதற்கான மனநிலையில் தொய்வும்…

அதில் முதலாக சொல்ல வேண்டும் என்று மனதை நெருடிய விஷயம் (நெடு நாட்களாக) அறிவியல் பகுதியில் கலைச் சொற்கள் மிகவும் அருவருக்க நிலையில் இருக்கிறது. பல இடங்களில் சே என்றே தூரச் செல்லத் தான் முடிகிறது. ஏதோ நானும் கலைச்சொற்களை கண்டே பிடித்து வாசகனை துயரத்தில் ஆழ்த்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டது போலிருக்கிறது. சுலபமாக தொடர்ந்து வாசிக்க வைக்க அந்த அந்த டெக்னாலஜி டெர்ம்ஸ்களை ட்ரென்ஸ்லிட்டரேஷன் செய்வதே வாசிப்பவருக்கு எளிதில் நிஜ உலகத்தோடு (வாசிக்கும் பொருளோடு) தொடர்பு கொள்ள முடியும் படி செய்யும். இப்பொழுதோ ஒரு வித அனுமானத்தோடு வாசிக்க வேண்டி உள்ளது. இதை மனதில் கொண்டு வரும் காலங்களில் படைப்புகள் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.

நன்றி,

குமரேசன், மு. (M. Tech.)
கணிப்பொறியியல் (கம்ப்யூட்டர்
சயின்ஸ் & இன்ஜினியரிங்)
பேராசிரியர்.

[/stextbox]


[stextbox id=”info” caption=”வாசகர் கடிதங்கள் வரவேற்கப்படுகின்றன”]

அன்புள்ள குமரேசன் அவர்களுக்கு,

உங்கள் கடிதம் கிட்டியது. மறுவினைகள் எங்களுக்கு உதவுவன என்பது எங்கள் கருத்து. உங்களுடைய அணுகலையும் சொல்வனத்தில் அவ்வப்போது முயன்று கொண்டு இருக்கிறோம் என்பதைப் பல இடங்களில் பார்த்திருக்கலாம்.
பொதுவாகச் சொல்வனம் கலைச் சொற்களையும், தொழில் நுட்பம்/ பொறியியல், அறிவியல் ஆகிய துறைகளின் பயன்பாட்டுச் சொற்களையும் தமிழாக்கிக் கொடுத்து வார்த்தைக் களஞ்சியத்தின் உள்ளீட்டை அதிகரிப்பது என்பதை ஒரு கடமையாகக் கொண்டிருக்கிற பத்திரிகை. வனம் என்பது ஒழுங்குபடுத்தப்பட்ட பூங்கா அல்லதானே. இப்படிக் கொஞ்சம் முள்ளும், விஷப் பூச்சிகளும் கொண்டதாக அமைவதைத் தவிர்க்க முடியாது. நமக்கு விஷமாக இருப்பது நல்ல உயிரியலாளருக்கு விந்தையாகவோ, அல்லது மருத்துவ குணம் கொண்ட ஔஷதம் தயாரிக்க மூலப் பொருளாகவோ இருக்க வாய்ப்பு உண்டு. அதே போல குப்பை என்று நாம் இயல்பாகக் கருதக் கூடிய பல தாவரங்களை வைத்து இயற்கை மருத்துவர்கள் என்னென்னவோ அற்புத சஞ்சீவனங்களைத் தயாரித்துக் காட்டுகிறார்கள்.
நீங்கள் போதிப்பவர், துறையில் மாணவர்களைத் தினம் சந்திப்பவர். துறையில் உடனடியாகவும், இயல்பாகவும் பொருந்திக் கொண்டு செயலூக்கம் பெற வேண்டியவர்களாக மாணவர்களை ஆக்க உங்களுக்கு அவசியமும், உந்துதலும் இருக்கும் என்று ஊகிக்கிறேன்.
இது ஒருவிதத்தில் நல்ல அணுகல். நீண்ட நாள் பண்பாட்டு மேம்படுதலுக்கு இது உதவாது என்பது எங்கள் அணுகல். காலனியத்தால் தீவிரமாக காயப்பட்ட பண்பாடு இந்தியப் பண்பாடு. இதில் தமிழ்ப் பண்பாடும் அடக்கம். இந்திய அரசியலோ, அரசியலியலோ, சமூகமோ, சமூகவியலோ, வரலாறோ, வரலாற்றியலோ எல்லாமே இப்படிக் காலனியக் கருத்துகளாலும், கருத்தியல்களாலும் ஆழமாகக் காயப்படுத்தப்பட்டு, வக்கிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. வேரில் வெந்நீரை ஊற்றும் செயல் காலனியத்தின் செயல். பிறகும் உயிரோடு இருக்கும் இந்தியமும், தமிழ்ப் பண்பாடும்/ சமூகமும் தன்னியல்பான ஊக்கத்தோடும், வேகத்தோடும் கிளைத்தெழும் தாவரங்களாக இல்லாமல் தொடர்ந்து கடன் வாங்கியே பிழைக்க வேண்டிய நிலையில் இருப்பதை நீங்களும் அறிவீர்கள். இது அன்றாட வாழ்வில் துவங்கி முழு அறிவுத் தளங்கள் வரை நிலவும் ஒரு பிரச்சினை.
சமீப காலத்தில்தான் இந்தியர்கள் தம் நாடு, தம் பண்பாடு ஆகியனவற்றைக் குறித்து மறு வாசிப்புகள், மறு பார்வைகள், மறு அணுகல்களை மேற்கொள்ளத் தலைப்பட்டிருக்கின்றனர். மேலைத் தாக்கம் என்பது ஒதுக்கப்பட்டு, அதன் நற்சாரத்தை மட்டும் வாங்கிக் கொண்டு உருவச் சாய்வுகளை விடுத்து ஏதும் நம்முடைய நெடுநாள் மரபுகளிலிருந்து தொடர முடியுமா என்று பார்க்கத் தலைப்பட்டிருக்கின்றனர். இது, ஊனமடைந்தவர்கள் சிகிச்சையால் ஓரளவு ஆரோக்கிய நிலைக்கு வந்தபிறகு, தொடர்ந்த பயிற்சியாலும், மறு உருவாக்கம் மூலமும் தன்னியல்பான நிலைக்கு வரச் செய்யும் முயற்சியை ஒத்த நிலை.
இதில் சில நேரம் தடுக்குதலும் வீழ்தலும், பிழைபட்ட இயக்கமும், பிறகு சலிப்பும், தொடர்ந்து முடக் குச்சிகளையே பயன்படுத்தி விடலாமா என்ற எண்ணமும் எல்லாம் எழும். அவற்றை ஒதுக்கி விட்டு, நம் வலிமை நம் புலம் சார்ந்த, நம் இயற்கை சார்ந்த, நம் வாழ்வு ஆதாரங்களைச் சார்ந்த சிந்தனை, நடைமுறை, தேடல் ஆகியனவற்றில்தான் உள்ளது என்று செயல்படுவதே நமக்கு நீண்ட நாள் ஆரோக்கியத்தைக் கொணரும் என்று நாங்கள் கருதுகிறோம். இத்தனைக்கும் பதிப்புக் குழுவில் பலரும் பொறியியலாளரும், பல அறிவியல் துறைகளில் கல்வி பெற்றவர்களும்தான். முழு இலக்கியகர்த்தாக்களோ, மொழியே தம் முழு மூச்சு என்று எண்ணுவோரோ இந்தக் குழுவில் இல்லை.
பல நாடுகளில் வாழ்வதில் தமக்குக் கிட்டும் அனுபவங்களின் வழியேதான் இந்த வகை அணுகலுக்கு வந்து சேர்ந்திருக்கிறோம். இதிலும் அவ்வப்போது நீங்கள் சொல்கிற அணுகலை முன்மொழியும் கட்டங்களும் வரத்தான் செய்கின்றன. எனவே, இப்போதைக்கு எழுதுபவரின் அணுகலில் தலையிடாமல் அவற்றை முன்வைக்கிறோம். பதிப்புக் குழுவின் கருத்தியல் சார்பை எழுதுவோரின் இயக்கத்தில் நுழைத்து இடையீடு செய்வதில்லை. அந்த சுதந்திரத்தால் சில நேரம் ஒரே வகையான படைப்புகளைச் சொல்வனத்தில் கொடுக்க முடியாத நிலை எழுகிறது.
சில ஆண்டுகள்தான் ஆகியிருக்கின்றன. இப்போதுதான் தொடர்ந்து படைப்புகளை அனுப்புவோர் எங்களுக்குக் கிட்டி இருக்கின்றனர். இவர்கள் எல்லாமே தன்னார்வலர்கள். யாருக்கும் ஒரு சிறு அளவு கூட சன்மானமாக இந்தப் பத்திரிகை கொடுப்பதில்லை. ஏனெனில் சொல்வனம் ஒரு காசு கூட வருமானம் கொண்டிராத பத்திரிகை. இத்தனை பேர், இவ்வளவு ஆண்டுகள் (எட்டாவது ஆண்டு துவங்கி இருக்கிறது.), சில ஆயிரம் படைப்புகள், 155 இதழ்களை முழுதும் தன்னார்வத்தை நம்பிச் செய்து வந்திருப்பது எங்களுக்கு மேலும் நம்பிக்கை கொடுக்கிறது. படிப்படியாக மேம்படுதல் நடக்கும் என்று நினைக்கிறோம்.
இந்தப் பத்திரிகை உங்களைப் போன்றவர்களும் எழுதத் துவங்கினால் மேலும் வலுப்படும். அதாவது போதனையாளராகச் செயல்படுவோருக்கு மாணவர்களும், இதர துறையாளர்களும் என்ன வகையில் கொடுத்தால் செழுமைப்பட்ட நிலைக்கு நகர்வார்கள் என்பது தெரியும். அதை அறிந்தவர்கள் எழுதத் துவங்கினால் அதற்கு மேலான விளைவு இருக்கும் என்று சொல்கிறேன். இப்போது எழுதுபவர்கள் எல்லாம் அந்தந்தத் துறையில் செயல்படும் தொழில் வல்லுநர்கள். ஒரு சிலரே கல்லூரிகளில்/ பல்கலைகளில் போதிப்பவர்கள்.
உங்கள் கருத்தை எழுதித் தெரிவித்ததற்கு நன்றி. இதை அடுத்த இதழில் வாசகர் கடிதப் பகுதியில் பிரசுரிக்கிறோம்.

அன்புடன்,
மைத்ரேயன்

[/stextbox]

Words_MIT_Sculpture_Clouds_Feelings_Sentences_Characters_Brain_Paper


[stextbox id=”info” caption=”யோசனைகள்”]

அன்புள்ள குமரேசன் அவர்களுக்கு,

உங்களுக்கு ஒரு பதில் போட்டேன். சற்று நேரம் கழித்து வேறு சில யோசனைகளும் எழுந்தன. அவற்றையும் இங்கு பகிர்கிறேன்.
மேலும் சில யோசனைகள்:
1) சார்ந்திருப்பதிலிருந்து விடுதலை பெற்று, சுயமாகச் செயல்பட முனையும்போது துவக்கத்தில் பல குறைபாடுகள் எழும். ஜப்பானியரின் உதாரணம் ஒன்றையோ, தாய்வானியரின் அனுபவங்களையோ, ஏன் சீனர்களின் அனுபவங்களையோ கூட நாம் எடுத்து நோக்கலாம். அந்த நாட்டு உற்பத்தித் துறைகளின் விளை பொருட்கள் முதல் பத்து ஆண்டுகள், ஏன் பதினைந்தாண்டுகள் வரையிலும் கூட மேலைப் பொருட்களோடு ஒப்பிட்டால் கீழ்த்தரமானவையாகவும், மலினமான தொழில் திறன் உள்ளனவாகவும் தெரிய வந்திருந்தன. மேற்கு நாடுகளுக்குத் தொடர்ந்து பொருட்களைக் கொடுக்கத் துவங்கிய போது, அவர்கள் மேற்கின் அளவைகளுக்குத் தம் பொருட்கள் ஈடுகொடுத்து நிற்க வேண்டும் என்ற அவதிக்கு உட்பட்ட போது தர மேம்படுதல் அவசியமாயிற்று. ஜப்பானியர் மேற்கின் உற்பத்தித் தொழில் நுட்பங்களைத் தம் சமூகக் குழுவினரின் பழக்க வழக்கங்களோடும், பண்பாட்டுத் தேர்வுகளோடும் பொருத்தி, தொழிற்சாலைகளில் உள்ள மேலாட்சி முறைகளை மாற்றி அமைத்து தமக்கான உற்பத்தி முறைகளைத் தேர்ந்தெடுத்த போது உடனடியாகத் தர மேம்பாடு கிட்டி, அவர்கள் படிப்படியாக யூரோப்பியரின் உற்பத்தித் திறனை எட்டி, அதையும் தாண்டி விட்ட நிலை ஏற்பட்டது. இதுவே இப்போது கொரியருக்கும், தாய்வானியருக்கும் ஏற்பட்டு வருகிற நிலை. சீனர் ஜப்பானியர் அளவுக்கு உற்பத்தித் திறனில் மேன்மை பெறவில்லை என்றாலும், பல துறைகளில் மேற்கின் அறிவியலாளரோடு போட்டி போடக் கூடிய அளவுக்கு மேம்பட்டு வருகிறார்கள்.
2) இந்த நாடுகளில் நீங்கள் சொல்கிற முறை- ட்ரான்ஸ்லிடரேஷன் முறையில் சொல்லாக்கம் செய்வதும் உள்ளது, முடிகிற இடங்களில் மொழி பெயர்ப்பும் நடக்கிறது. சீனாவுக்குப் பயணம் செய்யும் சீன மொழி அறிந்த மேலைத் தொழில் நுட்பத் துறையினர் சில நேரம் இந்த இரண்டுங்கெட்டான் நிலைச் சொல்லாக்கங்களின் விபரீத அர்த்தங்களைக் கண்டு சிரிக்கவும் செய்கின்றனர், சில நேரம் வியக்கவும் செய்கின்றனர். விபரீத அர்த்தங்களைத் தாண்டி, சொற்களின் பொருளைப் புரிந்து கொண்டு சீன மாணவர்களும், பொறியியலாளர்களும், அறிவியலாளர்களும் தொழில் துறைகளில், அறிவியலில் சரியான இயக்கத்தை மேற்கொள்வதையும் அவர்களால் பார்க்க முடிகிறது.
3) ஆக, தமிழில் தொழில் துறை சார் சொற்களைக் கொணர்வது என்பது இன்றளவில் கடினமாகவே இருக்கலாம். ஆனால் பத்துப் பதினைந்தாண்டுகள் முன்பு இருந்த துன்பங்களை விட இன்று துன்பம் குறைவாக இருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது. இதற்கு ஒரு காரணம் தமிழிலேயே கல்லூரிகளில் போதிக்கப்பட்டு வெளிவந்திருக்கும் பல்லாயிரக்கணக்கானோர் என்பது ஒரு அளவுக்குச் சரியாக இருக்கும். இன்னொரு கோணத்தில் பற்பல கல்லூரியாளர்களும் பாட நூல்களையும், துறை இலக்கியத்தையும் தமிழில் எழுதுவதையும், போதிப்பதயும் மேற்கொள்ளத் துவங்கி இருப்பதும் என்பதாக இருக்கலாம்.
சொல்வனத்தில் தற்போது எழுதுவோர் அனேகரும் இந்த வகையில் அனுபவம் அதிகம் உள்ளவர்கள் இல்லை என்று நான் ஊகிக்கிறேன். தமிழில் தொழில் துறைப் படிப்போ, அறிவியல் படிப்போ பெற்றவர்கள் எங்களுக்கு எழுத முன்வரவில்லை. இங்கிலிஷில் படித்து ஆனால் இவற்றைத் தமிழில் கற்றிருந்தால் ஒரு வேளை முன்னதாகவே, இளம் வயதிலேயே தமக்கு அத்துறையில் ஓரளவு சுய சிந்தனை கிட்டி இருக்குமோ என்று நினைப்பவர்கள் இவர்களில் பலர் என்றும் நான் ஊகிக்கிறேன்.
4) நீங்கள் சொல்கிற உறுத்தல் குறைவாக ஆவதற்கு ஒரு வழி, தமிழில் இயல்பாகவே தம் துறைகளைப் பற்றிய சிந்தனையை மேற்கொள்ளுவோர் எழுத முன்வருவதுதான். அது படிப்படியாக நேரும், சொல்வனத்தின் வாசக வட்டம் ஓரளவு விரிவடைந்து விட்டால், இப்படித் தமிழ் நாட்டிலேயே பல ஊர்களில் உள்ள அறிவாளர்கள் எழுத முன்வருவார்கள், அப்போது இந்தப் பத்திரிகையில் வெளிப்படும் மொழியின் தன்மையும் மாறி விடும் என்றும் எதிர்பார்க்கிறேன்.
இவை எல்லாம் நடக்க இந்தப் பத்திரிகை தொடர்ந்து வெளி வர வேண்டும். இப்போதைக்கு அதுதான் எங்கள் முனைப்பாக இருக்கிறது. இதோடு சேர்ந்துதான் நீங்கள் கேட்கிற தர மேம்படுத்தலும், ஆழப்படுதலும், மொழி லாகவமும், பிறகு இதர செயல் நேர்த்திகளும் நடக்க வேண்டும். உங்கள் விமர்சனம் எங்களுக்கு எழுதுவோருக்குச் சேர்வதில் சில நன்மைகளும் விளையலாம். அதில் ஒன்றாக, பல துறைகளில் ஏற்கனவே கல்லூரிகளிலும், பல்கலைகளிலும் போதனைக்குப் பயன்படுகிற புத்தகங்களை வாங்கிப் படித்து அவற்றில் புழக்கத்தில் உள்ள கலைச் சொற்களைத் தாமும் பயன்படுத்த இந்த எழுத்தாளர்கள் முன்வருவது என்பது நடந்தால் நல்ல மேம்படுத்தல் நிகழ வாய்ப்பு இருக்கிறது.
இறுதியாக, ஒன்று. புதுச் சொற்களைப் பயன்படுத்துகையில், அவற்றின் இங்கிலிஷ் மூலச் சொற்களை அதே இடத்தில் அடைப்புக்குறிகளுக்குள் கொடுப்பதோ, அல்லது கட்டுரை இறுதியில் ஒரு அட்டவணையாகக் கொடுப்பதோ உதவும் என்று தோன்றுகிறது. இதை ஏற்கனவே நண்பர்களிடமும், எழுதுவோர் சிலரிடமும் பேசி இருக்கிறோம். அதில் ஒருவர், சமீபத்தில் ஒளி ஒரு குறுஞ்சரித்திரம் என்ற கட்டுரையை மொழி பெயர்த்துக் கொடுத்தவர் ஏற்கனவே ஒரு அட்டவணையைத் தயார் செய்து வருகிறார். அதைச் சீக்கிரமே ஒரு இதழில் பகிர்வதாக உத்தேசித்திருக்கிறோம். அதற்கு இடையில் பிரசுரிக்கும் கட்டுரைகளில் இப்படிப் பின் குறிப்பாக அந்தச் சொற்களையும், மூலச் சொற்களையும் கொடுக்க முயல்வோம். உங்கள் கருத்து அந்த வகையில் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி.

அன்புடன்,
மைத்ரேயன்

[/stextbox]


[stextbox id=”warning” caption=”சொல்வனத்தின் கலைச்சொற்களைப் பற்றி”]

அன்புள்ள மைத்ரேயன் அவர்களுக்கு,
உங்களுடைய துரித, நீண்ட, மிக கரிசனத்துடனும், தோழமையுடனும் எழுத பெற்ற பதில் கடிதங்கள் கிடைக்கப் பெற்றேன். முன்பு ஏதோ ஒரு காலத்தில் நண்பனுக்குக் கடிதம் (not today ‘s email ) எழுதி உடனே அதன் பதிலையும் கையில் பெற்ற ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது.
மிக்க நன்றி திரு. மைத்ரேயன்.
முதலில், சொல்வனத்தைப் பற்றி நாள் எழுதியது என்னுடைய பிரமிப்பை வெளிப்படுத்தியதே.
என்னுடைய கருத்தும், இலக்கிய எழுத்தாளர்களின் கருத்தும் மேலும் பல மொழியியலாளர்களின் கருத்தும் பலதளங்களில் ஓத்திருப்பதாகவே உணர்கிறேன். ஒரு மொழியின் வளர்ச்சி என்பது ஒரு விதத்தில் அது கருத்து பரிமாற்றத்திற்கு எந்த அளவிற்கு உதவிகரமாக இருக்கிறது என்பதோடு மட்டும் அல்லாமல், தன்னைத் தானே எவ்வாறு வளமைப்படுத்திக்கொள்கிறது என்பதும் அதன் இரு கண்களை ஒத்ததாகக் கொள்ளலாம் என்றே நினைக்கிறேன். இந்த இரண்டையும் தவிர மூன்றாவது மிக முக்கியமானது அம்மொழி எத்தனை மக்களால் உபயோகப்படுத்தப்பட்டு, அம்மக்கள் தங்களை அம்மொழியின் மூலம் விரும்பி அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதே.
ஆங்கிலம் தன்னை தானே வளப்படுத்திக்கொள்கிறது. ஒவ்வொரு வருடமும் தனது அகராதிகளில் பல வார்த்தைகளையும், பல சொற்றொடர்களையும் வேறு பல மொழிகளிலிருந்து எந்தவித அறுவறுப்போ, காழ்ப்போ இல்லாமல் பெருந்தன்மையோடு தனதாக்கிக்கொள்கிறது. அதன் எல்லைகளும் விஸ்தரிப்பை காண்கிறது. இன்னும் குறுகலாக சிந்திக்கும் நிலையில் தமிழ் மொழியிலும் இது நடந்தேறிக்கொண்டுள்ளது. தமிழ் மொழி வட்டார வழக்குகளையும் உள்வாங்கி நிற்பதால் பெரும்பாலான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது (கி. ரா வின் கதைகளும், கட்டுரைகளும் சான்று). இல்லையேல் இந்த தமிழ் சமூகமே இன்னும் துண்டாடாப் பட்டுப் போயிருக்கும். அதனால் அச்சம் கொள்ள வேண்டிய அவசியமில்லையென கருதுகிறேன்.
நான் போதிக்கும் பொழுதும், அப்பாற்பட்டும் வாசகனாகவே உணர்வதால் தான் இந்த மறுவினையே. நம்முடைய நாடு பல்வேறு மொழிகளைக் கொண்டுள்ளதாலும், ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் இருந்ததாலும் ஆங்கிலம் பல்வேறு பாடத்திட்டங்களிலும் பயிற்றுவிக்கும் மொழியாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. அதுவே நடைமுறையிலும் உள்ளது. (நாம் ஆங்கிலேயர்களால் ஒரு வகையில் வஞ்சிக்கப்பட்டோம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கலாகாது). மொழி இலக்கியங்களைத்தவிர, மற்றனைத்தும் ஆங்கில மூலமாக கற்பிக்கப்படுகிறது. இந்த வகுப்பறைச் சூழலில், ஆங்கில மொழி அல்லாத மற்றுமொழியில் பயின்ற மாணாக்கர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகிறார்கள். ‘சார், நான் தமிழ் மீடியம் சார் ’ என்ற இயலாமைக்கு தள்ளப்படுகிறார்கள். இதையும் பொருட்படுத்தாமல் மேற்படிப்பிலும் பிராந்திய மொழியை முன்னிறுத்துவோம் என்ற பிடிவாதம், கற்பவர்களை பின்தள்ளி, தான் எதுக்கும் உபயோகமற்றவன் என்ற மன நிலைக்கே தள்ளப்படுவதைக் கண்டு வேதனையுறுபவன். (நானும் தமிழ் மீடியம் சார். But I had different opportunity and burning desire in me. – அது வேறு கதை.)

“சமீப காலத்தில்தான் இந்தியர்கள் தம் நாடு, தம் பண்பாடு ஆகியனவற்றைக் குறித்து மறு வாசிப்புகள், மறு பார்வைகள், மறு அணுகல்களை மேற்கொள்ளத் தலைப்பட்டிருக்கின்றனர். மேலைத் தாக்கம் என்பது ஒதுக்கப்பட்டு, அதன் நற்சாரத்தை மட்டும் வாங்கிக் கொண்டு உருவச் சாய்வுகளை விடுத்து ஏதும் நம்முடைய நெடுநாள் மரபுகளிலிருந்து தொடர முடியுமா என்று பார்க்கத் தலைப்பட்டிருக்கின்றனர். இது ஊனமடைந்தவர்கள் சிகிச்சையால் ஓரளவு ஆரோக்கிய நிலைக்கு வந்தபிறகு தொடர்ந்த பயிற்சியாலும், மறு உருவாக்கம் மூலமும் தன்னியல்பான நிலைக்கு வரச் செய்யும் முயற்சியை ஒத்த நிலை.”

— மிக்க மகிழ்ச்சியான மாற்றம். இது நம்மைவிட புலம்பெயர்ந்து பல ஆண்டுக்காலம் வெளி நாடுகளில் வாழ்ந்து, அடையாளங்களை இழந்து மீளுவோர்களுக்கு நன்றாக அனுபவப்பட்ட விஷயம். இதையே நீங்களும் அடுத்த பத்தியில் பதிவிட்டிருக்கிறீர்கள். மகிழ்ச்சி.

பல நாடுகளில் வாழ்வதில் தமக்குக் கிட்டும் அனுபவங்களின் வழியேதான் இந்த வகை அணுகலுக்கு வந்து சேர்ந்திருக்கிறோம். இதிலும் அவ்வப்போது நீங்கள் சொல்கிற அணுகலை முன்மொழியும் கட்டங்களும் வரத்தான் செய்கின்றன. எனவே இப்போதைக்கு எழுதுபவரின் அணுகலில் தலையிடாமல் அவற்றை முன்வைக்கிறோம். பதிப்புக் குழுவின் கருத்தியல் சார்பை எழுதுவோரின் இயக்கத்தில் நுழைத்து இடையீடு செய்வதில்லை. அந்த சுதந்திரத்தால் சில நேரம் ஒரே வகையான படைப்புகளைச் சொல்வனத்தில் கொடுக்க முடியாத நிலை எழுகிறது.
சில ஆண்டுகள்தான் ஆகியிருக்கின்றன. இப்போதுதான் தொடர்ந்து படைப்புகளை அனுப்புவோர் எங்களுக்குக் கிட்டி இருக்கின்றனர். இவர்கள் எல்லாமே தன்னார்வலர்கள். யாருக்கும் ஒரு சிறு அளவு கூட சன்மானமாக இந்தப் பத்திரிகை கொடுப்பதில்லை. ஏனெனில் சொல்வனம் ஒரு காசு கூட வருமானம் கொண்டிராத பத்திரிகை. இத்தனை பேர், இவ்வளவு ஆண்டுகள் (எட்டாவது ஆண்டு துவங்கி இருக்கிறது.), சில ஆயிரம் படைப்புகள், 155 இதழ்களை முழுதும் தன்னார்வத்தை நம்பிச் செய்து வந்திருப்பது எங்களுக்கு மேலும் நம்பிக்கை கொடுக்கிறது. படிப்படியாக மேம்படுதல் நடக்கும் என்று நினைக்கிறோம்.”

— பதிப்பாளர் என்ற முறையில், எழுத்தாளருக்கு முழுச் சுதந்திரம் கொடுத்துள்ளீர்கள் என்பது வரவேற்கத்தக்க ஒன்று. வாழ்த்துக்கள். வெகுஜன பத்திரிக்கைகளுக்கு நடுவில் தரமான எழுத்து சுதந்திரமுள்ள பத்திரிகை, எந்த வடிவத்திலும் நடத்துவது என்பதே கடினம் என்று நன்றாக உணர்வேன். இங்கு மனதார பாராட்டுக்களை பதிவிடுகிறேன். (அவசியமும் கூட). எனது நண்பர்களுக்கும் (வாசிப்பு உள்ளவர்கள்) பலருக்கும் பரிந்துரைத்துள்ளேன் (வெகு நாட்களாக) என்பதில் ஒரு திருப்தி.

“இந்தப் பத்திரிகை உங்களைப் போன்றவர்களும் எழுதத் துவங்கினால் மேலும் வலுப்படும். அதாவது போதனையாளராகச் செயல்படுவோருக்கு மாணவர்களும், இதர துறையாளர்களும் என்ன வகையில் கொடுத்தால் செழுமைப்பட்ட நிலைக்கு நகர்வார்கள் என்பதை அறிந்தவர்கள் எழுதத் துவங்கினால் அதற்கு மேலான விளைவு இருக்கும் என்று சொல்கிறேன். இப்போது எழுதுபவர்கள் எல்லாம் அந்தந்தத் துறையில் செயல்படும் தொழில் வல்லுநர்கள். ஒரு சிலரே கல்லூரிகளில்/ பல்கலைகளில் போதிப்பவர்கள்.”

– நன்றி. இது நாள் வரை வாசகனாகவே இருந்துள்ளேன். சிறிது பயிற்சி மற்றும் உங்களை போன்றவர்களின் ஊக்குவிப்பும் அவசியம். முயல்கிறேன்.
உங்களது இரண்டாவது கடிதத்தில்
பத்தி (1) ஐ பற்றி தனி பதிவீட்டில் (email) சிந்திக்கும் அளவு விஷயங்கள் (தனிப்பட்டக் கருத்துக்கள்) உள்ளன.
பத்தி (2) ல் கூறப்பட்டுள்ளது முற்றிலும் சரியே. சீனர்களும், ஜப்பானியர்களும், மற்றும் அவர்களை போன்ற நாட்டினரும் (தாய்வான், கொரியா) துறை சார்ந்த அறிவை அவர்களது சொந்த மொழியிலே படித்து, துறை சார்ந்த வார்த்தைகளை அவரவர் மொழியில் ட்ரான்ஸ்லிடரேஷன் மூலம் தெரிந்து தேர்ந்து தெளிந்ததினால் உலகளாவிய நாடுகளிலும், பெரும்பான்மையான மேற்கத்திய நாடுகளிலும் பெரும் எண்ணிக்கையில் ஆசிரியர்களாகவோ, ஆராய்ச்சியாளர்களாகவோ தொடர முடிகிறது. அவர்களது, மொழி அபேதம், பல்வேறு மொழிகளில் ஒருங்கே ஒரு விஷயத்தைப் பற்றி சிந்திக்க ஏதுவாக்குகிறது.
பத்தி (3) — துறை சார்ந்த சொற்களை உருவாக்குவது அவசியமேற்பட்டால் மட்டுமே மேற்கொள்ளப் படவேண்டியது என்றே கருதுகிறேன். இல்லையேல், அது திணிப்பாகி திகட்டாமல் இருக்குமேயானால் இருந்துவிட்டு போகட்டும். இதனால் உருவாகும் சங்கடங்களைப் பற்றி மேலே குறிப்பிட்டிருந்தேன். கருத்து வேறுபாடு இருக்கலாம். நான் வெறும் வாசகனாகவும், பயிற்றுவிப்பவனாகவுமே இதை அணுகியுள்ளேன்.
இறுதியாக நீங்கள் குறிப்பிட்டுள்ளவைகளை மறுக்கலாகாது. நீங்கள் குறிப்பிட்டுள்ளதைப்போல கூடவே ஆங்கிலத்தில் பதிதலும், அட்டவணையோ, களஞ்சியமோ உருவாக்கும் முயற்சியும் சிறப்பு.

நன்றி,
அன்புடன்,
குமரேசன், மு.

[/stextbox]

[மேலே காணும் உரையாடலை, சொல்வனத்தில் பல வருடங்களாக பொறியியல்/ தொழில் நுட்பம்/ அறிவியல் ஆகிய கருதுபொருட்களில் கட்டுரைகள் எழுதி வந்திருக்கும் ரவி நடராஜன் அவர்களோடு பகிர்ந்து கொண்டோம். சொல்வனத்தில்  தொடர்களாகப் பிரசுரமான, ரவி நடராஜனின் பல கட்டுரைகள் தொகுக்கப்பட்டு மின்புத்தகங்களாக இப்போது வெளி வந்திருக்கின்றன. இவை இலவசமாகக் கிட்டுவன. இவை நிறைய  எண்ணிக்கையில் தரவிறக்கப்பட்டிருப்பது தனக்கு உற்சாகம் தருகிறது என்று ரவி நடராஜன் முன்பொரு தடவை சொல்லி இருக்கிறார். எனவே மேலே கண்ட உரையாடல் ரவி நடராஜனின் தொடர்ந்த இயக்கத்துக்கு மிக அருகாமையில் உள்ள ஒரு விஷயத்தைத் தொடுகிறது என்பது தெளிவு. அவர் உடனே ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தைக் கீழே இணைக்கிறோம்.

– பதிப்புக் குழுவினர்]


[stextbox id=”info” caption=”மொழிவளம்”]

தமிழில் ஆங்கிலச் சொற்களை அப்படியே எழுதினால், தொழில்நுட்பம் அல்லது விஞ்ஞானம் எளிதில் புரிய உதவும் என்பது இங்கே வாதம். ஓரளவிற்குதான் ஆங்கிலச் சொற்களை அப்படியே பயன்படுத்துவதால் பயனிருக்கும் என்பது என்னுடைய பணிவான கருத்து.
உதாரணத்திற்கு,

  • கார்
  • பஸ்
  • டென்னிஸ்
  • கிரிக்கெட்
  • கிடார்

இதுபோன்ற சொற்களை நாம் அப்படியே பயன்படுத்திப் பழகி விட்டோம். பேருந்து, என்ற சொல் அரசாங்கம் எவ்வளவு முயன்றும், மக்களிடையே வெற்றி பெறவில்லை. இந்தச் சொற்களைக் கூர்ந்து கவனியுங்கள். 1900 –க்கு முன் இந்தச் சொற்கள் சொல்லும் விஷயங்கள் எதுவுமே தமிழர்கள் அறியாதவை. இதில் விந்தை என்னவென்றால், இச்சொற்களுக்குப் பின் உருவான ‘விமானம்’ என்ற சொல், தமிழர்களால் உடனே ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது.
எந்தச் சொல் பழக்கத்தில் ஏற்றுக் கொள்ளப் படும் என்று எவராலும் சொல்ல இயலாது, அது சமூகத்தின் போக்கைச் சார்ந்தது. இன்று ‘அவன் வாட்ஸப்பினான்’ என்று சர்வ சாதாரணமாய்ச் சொல்லும் சமூகம், ‘வசந்த் காதில் கிரிக்கெட் அணிந்திருந்தான்’ என்று சுஜாதா எழுதிய பொழுது முகம் சுளித்ததும் உண்மை.
ஒன்று மட்டும் நிச்சயம். தமிழில் சினிமா மற்றும் அரசியல் துறைகள் மட்டுமே அதிகமாக எழுதப்படுகின்றன. இந்த இரு துறைகளையும் விட்டால், தமிழ் அச்சுத் தொழிலே கல்யாணப் பத்திரிக்கை அளவில் நின்றுவிடும். சினிமாவிலும், தமிழை எப்படிப் பயன்படுத்துகிறோம்?

  • காமிரா
  • லென்ஸ்
  • டிஜிட்டல்
  • அனிமேஷன்
  • சி.ஜி,
  • ரீரிகார்டிங்
  • எடிடிங்
  • ரீல்
  • பிரிண்ட் பாஸிடிவ்
  • டேக்
  • லைடிங்

இப்படிச் சொல்லியே பழகிவிட்டது. எங்காவது, தமிழர்கள் சிலாகிக்கும் சினிமாத் தொழிலில் தமிழ் உள்ளதா?
இதை நாம் நியாயப்படுத்துவது சரியில்லை என்பதே என் வாதம். 120 வருடமாகிய கார் தொழில், 100 வருடத்திற்கு மேலாகிய சினிமா தொழில் இவற்றில் எல்லாம் தமிழ் இல்லையே என்றால், அதற்குத், தொழில்நுட்ப வசதிகள் தமிழர்களிடம் இல்லை என்பது ஒரு காரணம். இன்று தகவல் தொழில்நுட்பம் வளர்ந்த நிலையில், அதே நிலையைத் தொடர்வது எந்த விதத்தில் நியாயம்? புதிய கலைச் சொற்கள் முன் வைக்கப்பட்டுள்ள துறைகள் பெரும்பாலும் கடந்த 50 ஆண்டுகளில் உருவானவை. இதில் குறை ஒன்றும் இல்லையே. பெரும்பாலும், இன்று எழுதப்படும் தொழில்நுட்ப/விஞ்ஞான கட்டுரைகள்:

  • கணினி தொழில்நுட்பம்
  • கணினி மென்பொருள்
  • நுண் மின்னணுவியல்
  • இணையத் தொழில்நுட்பங்கள்
  • உயிரினத் தொழில் நுட்பம்
  • நவீன பெளதிகம்
  • விண்வெளி ஆராய்ச்சி
  • அணு பெளதிகம்

போன்ற துறைகள் சார்ந்த கட்டுரைகள். விட்டுப் போன சினிமா, ஆட்டோமொபைலை இன்றாவது பிடிக்கும் முயற்சிகள் இவை.
எந்தச் சொல் ஏற்றுக் கொள்ளப் படும் என்பது முன் கூட்டிச் சொல்லப்பட முடியாத விஷயம். ஆனால், முயற்சியே செய்யாத ஒரு சமூகம் தமிழ்ச் சமூகம் என்று மட்டும் இருக்கக் கூடாது. இன்று யூரோப்பில், விஞ்ஞானம் ஜெர்மன், ஃப்ரெஞ்ச் மொழிகளில் சொல்லிக் கொடுக்கப் படுகிறது.
பத்திரிகைகள் தமிழில் புதிய கலைச் சொற்களைப் பயன்படுத்தும் பொழுது அதன் ஆங்கிலச் சொல்லையும் பிரசுரித்தல் படிப்போருக்குப் பயன்படும். படிக்கப் படிக்கப் பழகி விடுவார்கள். தமிழும் வளரும். உதாரணத்திற்கு ஒரு 200 முறைகளாவது ‘கருவிகளின் இணையம்’ என்ற இரு சொற்களை கடந்த ஒரு வருடமாக என் எழுத்துக்களில் பயன்படுத்தி வந்துள்ளேன். என்னைக் கிண்டலிப்பவர்கள் கூட , ‘அது என்ன, கருவிகளின் இணை ஏதோ ஒன்று எழுதுகிறாயே’ என்பார்கள். இவர்கள் ‘கருவி’ என்ற சொல்லையே இக்கட்டுரை பற்றித் தெரியாவிட்டால், பயன்படுத்த மாட்டார்கள். சினிமாக்காரர் தமிழ்தான் இவர்களுடைய தமிழும்! அப்படியே ஆங்கிலச் சொற்களை எழுதுவதால், தமிழ் வளராமல், 1900 –க்கு பின்னே தள்ளப்படும்.

ரவி நடராஜன்
ஆகஸ்ட் 31, 2016

[/stextbox]


[stextbox id=”warning” caption=”ரெண்டு”]

[இன்னொரு நண்பர், பாஸ்கர் நடராஜன், ஒரு சுட்டியை அனுப்பினார். அது இது:
https://en.wikipedia.org/wiki/Diglossia ]

[/stextbox]


[stextbox id=”info” caption=”மேற்படி இரு நண்பர்களுக்கு மைத்ரேயன் எழுதிய சுருக்கப் பதில் இது”]

‘பாஸ்கர் கொடுத்த சுட்டி சுவாரசியமாக இருந்தாலும், அதில் பெரும்பகுதி இங்கு நடப்பதற்குப் பொருந்தாத தகவல்கள் கொண்டது என்று தோன்றுகிறது. அதில் சோஷியோ லிங்க்விஸ்டிக்ஸ் என்று குறிக்கப்படும் பகுதி சம்பந்தப்பட்டதாக இருக்கும். அதை நாம் எடுத்து இங்கு எப்படி அது உறவுள்ளது, அதில் என்ன நமக்குப் பயன்படும் என்று பிரித்துக் கொடுத்தால்தான் அந்தச் சுட்டிக்குப் பொருள் கிட்டும்.
நான் பார்க்கும் வகையில்- அன்றாட வாழ்க்கையில் பயன்பாடு எத்தனை பரவலாக இருக்கிறது என்பதே ஒரு சொல்லின் பயன் குறித்த உரைகல் ஆகாது. காட்டாக, இங்கிலிஷிலேயே வெலாஸிடி என்பதை பாமரர் பயன்படுத்துவதற்கும் ஒரு இயற்பியலாளர் பயன்படுத்துவதற்கும் இடையே நிறைய இடைவெளி இருக்கிறது. மாஸ் என்பதற்கு இறை வணக்கத்தோடு கூட பாமர வழக்கில் தொடர்பு இருக்கிறது. ஆனால் பொருண்மை என்ற பொருளில் அதற்கு இயற்பியலில் இருக்கும் தாக்கம் வேறு வகைப்பட்டது.
அந்த வகையில் தொழில் துறை/ கல்வித் துறைகள்/ வல்லுநர் உரையாடல் ஆகியவற்றுக்குப் பயன்படும் சொற்கள் எல்லாம் பரந்த திரள் பயன்பாட்டில் அப்படியே பரவ வேண்டும் என்று எதிர்பார்ப்பது அத்தனை பயனளிக்காது என்று நான் நினைக்கிறேன். த ஸ்டேட் என்பதை ஒரு அரசியலியலாளர் பயன்படுத்துவதற்கும், ஒரு அரசியல் கருத்தியலாளர் பயன்படுத்துவதற்குமே கூட இடைவெளிகள் உண்டு.
இவற்றை எல்லாம் பற்றியும் நாம் யோசிப்பது பலன் தரும்.

மைத்ரேயன்
செப்டம்பர் 1, 2016

[/stextbox]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.