டமன்யாரா, ஸெரெங்கெட்டி, ங்கொரொங்கோரோ

மன்யாரா

கிளிமஞ்சாரோ வானூர்தி நிலையம் விட்டு வெளியே வந்தோம்..
”காலை வணக்கம் திரு.பாலா.. நான் ஜெர்ரி காயா” காறைப்பற்கள் முப்பத்தியிரண்டும்,  ஈறுகளும் தெரிய, சிரித்து வரவேற்றார்.
நானும் காலை வணக்கம் சொல்லி, குடும்பத்தை அறிமுகப்படுத்தி வைத்தேன்.  ஜெர்ரி அடுத்த ஐந்து நாட்களுக்கு எங்களின் சாரதியும், வழிகாட்டியுமாவார். நாங்கள் ஐந்து நாட்கள் தான்ஸானியாவின் மூன்று தேசியப் பூங்காக்களில் ஸஃபாரி செல்லவிருக்கிறோம். ஸஃபாரி என்னும் வார்த்தை பொதுவாக பயணத்தைக் குறித்தாலும், இம்முறை வனவிலங்குப் பூங்காக்களில் பயணம்.
நாங்கள் செல்ல வேண்டிய பெரிய பச்சை நிற ஸஃபாரி வாகனம்  நின்றிருந்தது. முன் இருக்கையில் நீ அமர்கிறாயா இல்லை நான் அமரட்டுமா என மகனைக் கேட்டேன். முன் இருக்கையில் என் அருகே யார் அமர்ந்தாலும், அவர்கள் அடுத்த ஐந்து நாட்களுக்கு டாம் என அழைக்கப்படுவார் என வழிகாட்டி தெரிவித்தார்..
“ஏன்?”  என விழித்தேன்.
“ஏன்னா அவர் ஜெர்ரி” என்று அறிவுறுத்தினார் மனைவி விஜி. காலை இளங்குளிரில் ட்யூப்லைட் விரைவாக வேலை செய்யவில்லை.. “ஐயாம் ஷாரி” என நம்பியார் போல மனதில் பேசிக் கொண்டேன்.
பச்சை நிற ஸஃபாரி வண்டியை நோக்கினேன். முரட்டுத்தனமாக உடல் கொண்டு, பின்னே இரண்டு கூடுதல் சக்கரங்களைத் தாங்கியிருந்தது.  வேண்டும் பொழுது விலங்குகளை அண்மையில் காண அதன் மேற்புறம் திறந்து கொள்ளும் வசதி இருந்தது.. சக்கரங்களில் புழுதி அப்பியிருந்தது. இதுவே ஒரு வனவிலங்கு போலிருக்கிறதே எனத் தோன்றியது.
நாங்கள் முதலில் செல்ல வேண்டிய வனவிலங்குப்பூங்கா – மன்யாரா. மன்யாரா என்றால், மஸாய் பாஷையில், கள்ளி என அர்த்தம். Euphorbia tirucalli என்னும் வேலியாகப் பயன்படும் கள்ளிச் செடிகள் நிறைந்த நிலம். போகும் வழியில் ஆருஷா என்னும் அழகிய ஊரைத் தாண்டிச் செல்ல வேண்டும் ஆருஷா – கிளிமஞ்சாரோப் பகுதியின் தலைநகர் எனச் சொல்லலாம்.  ஆஃப்பிரிக்க ஏழை மக்களைக் கடைத்தேற்றும் உலகச் சேவை நிறுவனங்கள் பலவும் இங்கேதான் அலுவலகம் கொண்டிருக்கின்றன. இங்கே எப்போதும் நிலவும் இளங்குளிர் அதன் காரணம். அங்கே எனது விற்பனை அலுவலகமும் இருக்கிற படியால்,  மன்யாரா செல்லும் முன் ஒரு ஐந்து நிமிடம் என் அலுவலகம் சென்று, எனது விற்பனை மேலாளர் ஜாய்ஸுக்கு ஒரு முகமன் சொல்லிவிட்டுச் செல்லலாம் என மேலிடத்தில் அனுமதி கேட்டேன். கிடைத்தது.
ஆருஷா நகரைத் தாண்டியதும் வண்டி வேகம் கொண்டது.  இன்று என்ன நிகழ்ச்சி நிரல் எனக் கேட்டேன். இங்கிருந்து நீங்கள் மன்யாராவில் தங்கும் விடுதியை கிட்டத்தட்ட 12 மணிக்கு அடைவோம். உங்கள் அறையிற் சென்று, தயாராகி, மதிய உணவுண்டு, 2 மணிக்கு மன்யாரா தேசியப் பூங்காவுக்குச் செல்வோம். மாலை வரை ஸஃபாரி – பின் மீண்டும் விடுதி என்றார் ஜெர்ரி.
120 ல் சென்று கொண்டிருந்த வாகனம், திடுமென வேகம் குறைந்தது. நெடுஞ்சாலை எனினும், ஊர்கள் குறுக்கிடும் போது, உச்ச வேகம் மணிக்கு ஐம்பது கிலோ மீட்டர் மட்டுமே.  தாண்டினால், வேகத்தை அளக்கும் கருவிகள் கொண்டு காத்திருக்கும் போக்குவரத்துப் போலீஸாரிடம் மாட்டினால், முப்பதினாயிரம் ஷில்லிங் (ஆயிரம் ரூபாய்) அபராதம்.
ஆருஷா தாண்டியதும் சாலையோரத்தில் காஃபித் தோட்டங்கள் பயணத்தினூடே வந்தன. ஆஃப்பிரிக்க காஃபி நல்ல தரமான காஃபி. (எத்தியோப்பியக் காஃபிதான் உலகின் சிறந்த காஃபி எனச் சொல்லுகிறார்கள்.. கொலம்பியர்கள் மறுப்பார்கள்). இன்னும் சற்றுத் தாண்டியதும், சாலையோரம் மாடு மேய்க்கும் மஸாய் மாறா என்னும் மக்கள் தென்பட்டார்கள்.  திராவிட முன்னேற்றக் கழகத்தின் கறுப்பு சிவப்பு நிறக்கட்டங்களில் பெரும் போர்வைகள் போன்ற ஆடைகள் அணிந்திருந்தார்கள்.  கையில் கூர்மையான ஆயுதங்கள், அல்லது குறைந்த பட்சம் கோல்கள்.  இவர்கள் மாடு மேய்க்கும் யாதவர்கள்.. ஆனால், நம்மூர் பிஹாரி யாதவர்களுக்கும், தமிழ் நாட்டுக் கோனார்களுக்கும் இவர்களுக்கும் ஒரு பெரும் வித்தியாசம் உண்டு. இம்மாடுகள் பால், மற்றும் இறைச்சிக்கும் உபயோகப்படுத்தப் படுவதுதான். இவர்களின் உணவுப் பழக்கங்கள் நம்மூர் இந்துத்துவர்களுக்குக் கொஞ்சம் இடிக்கும். மாட்டின் கழுத்து நரம்பைக் கொஞ்சம் ஓட்டையிட்டு, அவ்வப்போது ரத்தம் கறந்து கொள்கிறார்கள். அத்தோடு பாலைக் கலக்கி, தயிர் மாதிரியாக்கி, அதை உண்கிறார்கள் என்றார் ஜெர்ரி. நான் மாமிச பட்சிணியெனினும், கொன்றால் பாவம் தின்றால் போச்சு கட்சி.  பதப்படுத்திய மாமிசத்தை, சிறு கத்தியால் காய்கறிகள் போல் நறுக்கி, மசாலா சேர்த்து சமைத்து உண்ணும் சொகுசுப் பேர்வழி. ஜெர்ரி சொன்ன பக்குவம் வயிற்றைக் குழப்பியதால் மேலும் அது பற்றிய தத்துவ விசாரணை மேற்கொள்ள வில்லை. இந்தியாவின் தலையாய பிரச்ச்சினையான பீஃப் மறுப்பைப் பற்றிப் பேசினால், நம்மையே கசாப்புப் போடும் வாய்ப்புகள் இருப்பது போலத் தோன்றியதால், துடித்த புஜத்தை அடக்கி வைத்தேன்.
நெடுஞ்சாலையில் இருந்து ஓரிடத்தில் வலது புறம் திரும்பினார் ஜெர்ரி.. மன்யாரா தேசியப் பூங்கா உங்களை அன்புடன் வரவேற்கிறது என்றது பலகை.. பயணத்தைத் தொடர்ந்தோம்.  ஒரு 20-30 கிலோமீட்டர் தாண்டியிருப்போம்.. வலதுபுறம் வாகனங்கள் வரிசையாக நின்றன.. ஜெர்ரியும் அந்த வரிசையில் சென்று வாகனத்தை நிறுத்தினார். வெளியே பார்த்தால், 4- 5 ஒட்டகச் சிவிங்கிகள் அமைதியாக  மேய்ந்து கொண்டிருந்தன. இங்கே பாருங்கள் என ஜெர்ரி காட்டிய திசையில் பார்த்தால், ஒரு பெரும் கூட்டம்..  சில கருமமே கண்ணாக மேய்ந்து கொண்டிருந்தன. சில, மேய்வதை நிறுத்தி எங்களைப்பார்த்தன.  இவை மிகவும் சென்ஸிட்டிவ். நீங்கள் அருகே சென்றால் ஓடி விடும்..  ஆனால், தன் கால் வலியால், சிங்கத்தையே கொன்று வீழ்த்தும் திறன் கொண்டவை அவை என்றார் ஜெர்ரி.
இன்னும் சற்று தொலைவில், வலது புறத்தில், ஒரு குக்கிராமத்தைக் காண்பித்தார் ஜெர்ரி. அங்கே ஒரே குடும்பம்தான். குடும்பத் தலைவருக்கு 19 மனைவிகள். அனைவருக்கும் ஒவ்வொரு வீடு கட்டி, இப்போது அது பெரும் கிராமம் ஆகிவிட்டது. அவர் குழந்தைகளுக்கெனவே ஒரு துவக்கப்பள்ளி இருக்கிறது என்றார் ஜெர்ரி. இது போன்ற பல கதைகளைக் கேட்டிருக்கிறேன் தான்ஸானியாவில். இது  ஒரு கலாச்சார வித்தியாசம் அவ்வளவே. தான்ஸானியாவில் பணிபுரிய வந்த துவக்கக் காலத்தில், ரத்த தானம் செய்யச் சென்றிருந்தேன்.  என்னைப் பற்றிய விவரங்கள் கேட்டுக் கொண்ட பணியாளர், திருமணமாகிவிட்டதா என்றார். ஆமென்றேன். அவர் அடுத்துக் கேட்ட கேள்வி என்னை அடுத்த சிலநாட்கள் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தது – “எத்தனை மனைவிகள்?” (யப்பா.. ஊர்ல ஒன்னுக்கே டப்பா டான்ஸ் ஆடுது என்னும் உலக உண்மையை எப்படிச் சொல்ல முடியும்!)

migunga-forest-camp-House_Cottage_Cabin_Lake_Africa_Kenya_National_Park

மன்யாரா ஏரி, ஒரு மலைப்ரதேசத்தின் காலடியில் இருக்கிறது.  எங்கள் விடுதி, மன்யாராப் பூங்காவைத் தாண்டி, மலை முகட்டில் இருக்கிறது, மலைப் பாதை துவங்கும் முன், இடது புறம், மன்யாரா பூங்காவின் வாயிலைக் காட்டினார் ஜெர்ரி. மதிய உணவுக்குப் பின் இங்கே தான் வருவோம் என்றார். மரமேறும் சிங்கங்கள் கொண்ட மன்யாரா தேசியப் பூங்கா என்றது விளம்பரப் பலகை. சிங்கம் மரமேறுமா?  என யோசித்தேன். யூ ட்யூபில் பார்த்த நினைவு வந்தது. ஸஃபாரி வாகனம் மலைச் சாலைகளில் உறுமி மேலேறியது.. நெடுஞ்சாலை விலகி, குண்டும் குழியுமான மண்சாலையில் நுழைந்தோம்.. ஸெரினா மன்யாரா உங்களை அன்புடன் வரவேற்கிறது என்றது பலகை. இந்த ஸெரினா விடுதிகள் ஆகா கான் என்னும் இஸ்லாமிய வகுப்புத் தலைமையின் நிறுவனம்..  மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், விடுதிகள் எனப் பல வகையான நிறுவனங்களை நடத்தும் ஆகா கான் ஒரு பெரும் முனைவு சாம்ராஜ்யம். இந்தியாவின் குஜராத்தில் துவங்கி ஆஃப்பிரிக்கா மற்றும் உலகின் பல நாடுகளில் இயங்கும் பெரும் நிறுவனம்.
விடுதியின் முன் கார் நின்றது. விடுதியைச் சுற்றி வரும் அகழி போன்ற நீர்ப்பாதை.. ரத்தச் சிவப்பு நிற மலர்கள் வரவேற்றன.. கொரட் கொரட்டென்று நுணல்கள் சத்தமெழுப்பின. அகழியின் மீதான மரப்பலகையில் நடந்து வரவேற்பறையை அடைந்தோம். “கரிபூ (நல்வரவு)!” என்றாள் வரவேற்பறையழகி.  “அஸாண்டே (நன்றி)” சொல்லி எங்கள் குடில்களை அடைந்தோம். உள்ளூர் குடில்கள் போலக் கட்டப்படிருந்தாலும், உள்ளே எல்லா வசதிகளையும் கொண்ட அறை.
மதிய உணவுக்கு, மலை உச்சியில் இருந்து மன்யாரா ஏரியும், மலைச்சரிவும் தெரியும் படி அமைக்கப்பட்டிருந்த உணவு மேசையில் அமர்ந்தோம். நல்ல அசைவ உணவு. மாடும், பன்றியும் கோழியும் இருந்தன.  மற்றவை பழக்கமின்மையால், நான் கோழி பிடித்தேன். அருணும் மதுராவும் மாட்டை ஒரு பிடிபிடித்தார்கள். விஜி சைவ உணவு உண்டார்.

Mwanza_Kilimanjaro_Africa_Safari_Tours_Manyara_map_tanzania_park

மன்யாரா பூங்காவின் வாசலைக் கடந்து, அலுவலகத்தின் முன்நிறுத்தி, அனுமதிச் சீட்டு வாங்கச் சென்றார் ஜெர்ரி.  பூங்காவின், காவலர் வந்து பூங்காவைப் பற்றி ஒரு அறிமுகம் செய்வதாக அழைத்தார். தயங்கி, பின் சென்றோம். மன்யாராவின் அடிப்படைத் தகவல்கள் சொன்னார் – 330 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பூங்கா. அமைக்கப்படும் முன் 4 குலத்தவர் இங்கே வசித்தனர்.  அவர்கள் பற்றிய ஒரு தகவல் பலகையைக் காண்பித்தார். அதில், ஆண், வயதுக்கு வந்து, திருமணம் செய்து கொள்ளும் முன்பு செய்ய வேண்டிய சாங்கியங்களைச் சொன்னார். ஒவ்வொரு குலத்திலும் ஆண், ஒரு வன விலங்கை வேட்டையாடி, அதன் தலையைக் கொண்டு வந்தால்தான் (ஒரு குலத்துக்குச் சிங்கம்!) மணமகள் மாலையிடுவாள்.. (நம்மூரிலும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வழக்கமும், வனவிலங்குகளும் இருந்ததுதானே. இப்போது, பொறியியலும், மென்பொருள் பன்னாட்டு நிறுவனமும் என மாறியிருக்கிறது.. அஷ்டே). இன்று அரசு வனவிலங்கு வேட்டையைத் தடை செய்துவிட்டது.. தேசியப் பூங்காவை அமைக்கும் போது, அரசு, இதனுள்ளே குடியிருந்த மக்களை வெளியேற்றிவிட்டது. காட்டின் முக்கியமான மரம் – காட்டு மாமரம். நமது மாமரம் போல இலைகளும், சிறு கனிகளும் காய்க்கும் இம்மரத்தின் கனி விஷம் வாய்ந்தது என்றார் காவலர்.  அதே போல், அக்கேசியா என அழைக்கப்படும் வெள்ளை வேல மரங்கள் இந்தப் பூங்காவின் மிக முக்கியமான அடையாளம் என்றார்.  இதன் பட்டைகள் மலேரியாவுக்கான மஸாய் மக்களின் மருந்து தயாரிக்க உதவுகிறது என்றார் காவலர்.  கொங்கு மண்டலத்தில், வெள்ளை வேல மரத்தின் பட்டையில் இருந்து காய்ச்சப் படும் சாராயமே பட்டைச் சாராயம் என்றழைக்கப்படுகிறது என்னும் அறிவியற் செய்தியைஅவரிடம் சொல்ல விரும்பினேன். சொல்ல வில்லை. முன்பு, மிக அதிக அளவில் சிங்கங்கள் இருந்தன, அவை பெரும்பாலும் மரத்தின் மேல் அமர்ந்திருக்கும்.. இன்று அவை குறைந்து விட்டன. மரத்தின் மேல் அமர்ந்திருக்கும் வாய்ப்புகளும் குறைவு என எங்கள் ஆர்வக் குமிழியை உடைத்தார்.
அனுமதி பெற்றுக் கிளம்பும் முன், ஜெர்ரி, வாகனத்தின் மேற்கூரையை உயர்த்தினார்.. நானும் அருணும் எழுந்து நின்று, வன விலங்குகளைக் காணத் தயாராகினோம். கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் வரை வெறும் மரங்களும், ஓடைகளும் தான். திடீரென வாகனத்தை நிறுத்தி, பின் செலுத்தினார்.. ஆர்வத்தோடு வலது புறம் நோக்கினோம்.. பாறைகளில் வசிக்கும் ஒரு சிறு மானைக் காட்டினார்..  சென்னை ஐஐடியில் தினமும் மான் பார்க்கும் எங்களுக்கு இது பெரிதும் சுவாரஸ்யமாக இருக்கவில்லை.. பின் சற்றுத் தொலைவில், பெரும் பபூன் என்னும் குரங்குக் குடும்பத்தை காண்பித்தார். நீண்ட மூக்கு கொண்ட சாம்பல் நிறக் குரங்குகள் இவை. தீயினாற் சுட்ட  சதை நிறப் பின்புறங்கள் கொண்டவை.. ஏன் பழுப்பு நிறப் பின்புறம்? அது ஒரு குஷன் போல என்கின்றன இணையதளங்கள். சிறு மரக் கிளைகளிலும் வலிக்காமல் அமர உதவும் என்கிறார்கள்.
முதல் நாள் பெய்த மழையில், சாலைகளில் ஆங்காங்கே நீர் தேங்கி நின்றது. வாகனம் செம்பழுப்பாய்ச் சேற்றை வாரியிறைத்து மேலேறியது. திடீரென, புதர்கள் அடைந்த ஒரு குறுகிய சாலையில், வாகனத்தை நிறுத்தினார் ஜெர்ரி. வலது புறம் நோக்கினார்.. பெரும் மூச்சரவம் கேட்டது. புதரின் பின்னால் பெரும் மத்தகம்.  பின்னால் உள்ள செடியின் உச்சியில் இருந்த இளம்பச்சைக் கிளைகளை உடைத்து உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தது. சற்று வாகனத்தை முன் செலுத்தினார்.. யானையின் கால்களுக்கிடையில் சிறு குட்டியானை.. புல்லைக் கௌவிக்கொண்டிருந்தது.. பின்னே மேலும் இரண்டு யானைகள். வாவ்..வாகனத்தின் முன்னே இப்போது நான்கு பெரும் குன்றுகள்..  ஒன்று எங்கள் வாகனத்தின் முன்னுள்ள செடியை மேய்ந்து கொண்டே அருகில் வந்தது. ஜெர்ரி, கொஞ்சமும் பதட்டப்படாமல் வண்டியைச் சற்றுப் பின் செலுத்தினார்,, யானை மேலும் முன்னேறியது. லேசாகப் பதற்றமாக இருந்தது. வாகனத்தின் கூரையில் இருந்து 4 அடியில் யானை. காது நுனிகள் பிய்ந்து, சீப்பின் பற்கள் போலிருந்தன.  பதற்றமாகப் பல மணித்துளிகள் கடந்தன. திடீரென, அது மேய்வதை முடித்துப் பின் திரும்ப, அனைவரும் திரும்பினர். சாலை காலி. ஜெர்ரி வண்டியைக் கிளப்பினார்.  “நான் பயந்துட்டேன் ஜெர்ரி” என்றேன். “நீங்கள் வண்டியில் இருந்து இறங்காத வரை வனவிலங்குகள் ஒன்றுமே செய்யாது” என்றவாறு வாகனத்தைக் கிளப்பினார்.

Hippo_Warthog_lake_manyara_park

வலதுபுறம், warthog என்றழைக்கபடும் ஒருவகைப் பன்றிகள் இரண்டு மேய்ந்து கொண்டிருந்தன. Lion King படத்தில் இவ்விலங்கு “பும்பா” என்னும் பெயரில், ஒரு தமாஷ் பேர்வழியாக வரும்.. முகத்தில் ஒரு மேடு, கொம்பு எனப் பார்க்கவே தமாஷாகத்தோன்றும் இவ்விலங்கை, மிகச் சரியாகத்தான் ஒரு நகைச்சுவைப் பாத்திரமாக வார்த்திருக்கிறான் ஒரு பெரும் கலைஞன்.
வாகனம் பல குறுக்குவழிகளில் சென்றது. ஒன்றும் தென்படவில்லை. தூரத்தில்,  எண்ணெய்ப்பனை மரங்கள் போல ஒரு கூட்டம் தென்பட்டது. அவை பனைதான்; ஆனால், எண்ணெய்ப் பனை அல்ல என்றார் ஜெர்ரி. ஜெர்ரி, கடந்த 15ஆண்டுகளாக இத்தொழிலில் இருக்கிறார். விவரங்களை நன்கறிந்தவர். ஏமாற்றத்தில், சரி, ஏரிக்குச் செல்வோம் என வண்டியை, மன்யாரா ஏரியை நோக்கிச் செலுத்தினார். இடதுபுறத்தில், இம்பாலா என்றழைக்கப் படும் அழகிய கொம்புகள் கொண்ட ஒரு பெரும் மான் கூட்டம் மேய்ந்து கொண்டிருந்தது. வாகனத்தை நிறுத்தி சற்றே அவதானித்தோம்.  எனக்கு போரடித்தது. போலாம் என்றேன். சற்றே முன்னகர்த்தியதும், ஏரியின் பரப்பளவு முழுதும் தெரிந்தது. ஆழமில்லாத ஏரி; உப்பு நீர் என்றார். பெரும்பாலான பகுதியை நடந்தே கடந்துவிடலாம் என்றார். பிளமிங்கோ என்று அழைக்கபடும் வெளிர் செம்மை நிற நாரைகள் ஏரியின் பெரும்பரப்பை ஆக்கிரமித்திருந்தன.  நாராய் நாராய் செங்கால் நாராய் என்றார் புலவர் விஜி.
சாலையின் இடது புறமிருந்து, ஒரு பெரும் பபூன் குரங்குக் கூட்டம் சாலையைக் கடந்து, மரங்களடர்ந்த பகுதியை நோக்கிப் புறப்பட்டன. படையெழுச்சி என்றுதான் சொல்லவேண்டும். நடந்து கொண்டே ஒரு பபூன், ஒரு பெண் குரங்கைப் புணர்ந்தது. இது போன்ற அசர்ந்தப்பமான சமயங்களில்செய்வது போல், முகத்தைத் திருப்பிக் கொண்டு, இடது நோக்கினேன்.. தொலைவில் சிறு வரிக்குதிரைக் கூட்டம்.  நாம் இவற்றைக் குதிரை என அழைக்கிறோம் – இந்த ஊரில், இவற்றை வரிக்கழுதை என அழைக்கிறார்கள். உண்மைக்கு இப்பெயர் மிக அருகில் இருக்கிறது. “கடவுளின் ஃபேஷன் பரேட்” என்றார் விஜி. உண்மை. அதன் வரிகள், அவை நிற்கும் சூழலையே அழகுபடுத்திவிடுகின்றன.  வாகனத்தை அணைத்தார் ஜெர்ரி.   வலதுபுறத்தில் தொலைவில், வில்டபீஸ்ட் (wildebeest) என்றழைக்கப்படும், இப்பகுதியில் மிக அதிகமாகத் தென்படும் மான் கூட்டம் மேய்ந்து கொண்டிருந்தது. கிட்டத்தட்ட மாடுகள் போல் முகமும் கொம்பும் கொண்டிருக்கும் இம்மான் தான் (மாடாக முயன்ற மான் எனச் சொல்லலாம்), ஊண் உண்ணிகளின் முதல் தேர்வு. காரணம், மிக அதிகமாகக் கிடைக்கும்; ஒன்றை அடித்தால், ஒரு குடும்பத்துக்குச் (4-5 விலங்குகள்)  சரியாக இருக்கும் என்பதால்.
பின்பு, வாகனத்தை, ஏரியை நோக்கிச் செலுத்தினார் ஜெர்ரி. தூரத்தில் நீரில், ஒரு சாம்பல் நிறத்தில் ஒரு விலங்கு எழுந்தும் அமிழ்ந்தும் நகர்ந்தது. நீர்யானையா? என்றேன். உற்றுநோக்கிப் பார்த்தோம் – இல்லை – அது காட்டெருமை. சகதியில் தோய்ந்திருந்தது.  வாகனத்தை, ஏரியுள் இருந்த ஒரு பாதையில் செலுத்தினார். கொஞ்சம் தொலைவில் இன்னொரு காட்டெருமை.. அதன் பின்னணியில் செங்கால் நாராய்களின் பெரும்படை.  இது போன்ற காட்சிகளை, தொலைக்காட்சிக் காணொளிகளில் கண்டிருக்கிறோம். எனினும், இதை நேரில் காணும் போது, நாம் எதிர்கொள்ளும் பிரமாண்டமும், கானகத்தின் அமைதியும்,  நம்மை வேறொரு தளத்துக்கு அழைத்துச் சென்றுவிடுகின்றன. வாகனத்தினுள், பிரார்த்தனை போல அமைதி நிரம்பியிருந்தது.  சற்று நேரம் கழித்து, ஜெர்ரி, அவ்வமைதியைக் குலைத்து, வாகனத்தை பின்செலுத்தி, ஏரியில் இருந்து வெளியே வந்தார்.
ஏரியின் பரப்பில் இருந்து, மலையை நோக்கி வாகனம் சென்றது. தொலைவில், வெள்ளை வேல மரங்கள் நின்று கொண்டிருந்தன. ஒரு மரத்தின் பின்னே, ஒரே ஒரு ஒற்றை ஒட்டகச் சிவிங்கி நின்று மேய்ந்து கொண்டிருந்தது.
கானகத்தின் துவக்கத்தில், ஒரு உணவு உண்ணும் இடம் இருந்தது. அங்கே வண்டியை நிறுத்தி, “கழிவறையை உபயோகிக்க வேண்டுமெனில் செய்யலாம்” என்றார். சுத்தமாக இருக்குமா என விசாரித்தோம். ஆமென்றார். சென்று உபயோகித்து வந்த விஜி சொன்னார் – மிக சுத்தம் என.  கான் சுற்றுலா, தான்ஸானியாவின் பொருளாதாரத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. மிக அதிகமான அளவில்,  அமெரிக்க / ஐரோப்பியச் சுற்றுலாப் பயணிகள் வருவதால், இங்கே கழிவறைகளும், உணவு விடுதிகளும் மிகச் சுத்தமாகப் பராமரிக்கப் படுகின்றன. பொதுவாகவே, கிழக்கு ஆஃப்பிரிக்க தேசங்களின் பொது இடங்கள் இந்தியாவை விடப் பன்மடங்கு சுத்தமானவை.
வாயிலை நோக்கிப் புறப்பட்டோம். நானும் அருணும்,  அதிசாகச கமாண்டோக்களைக் போல கூர்ந்து நோக்கிக் கொண்டே வந்தோம்.. சிங்கம் இல்லவே இல்லை.  மாலை மங்கிய நேரத்தில் ஸெரினா விடுதியை வந்தடைந்தோம்.  காப்பி குடிக்கலாம் என விஜி விரும்ப, விடுதியின், மலை ஓரத்தில் அமைந்திருந்த ஒரு சிறு (குறு) நீச்சல் குளத்தின் அருகே இருந்த மேசையில் அமர்ந்தோம். உள்ளூர்  ஜிம்னாஸ்ட்ஸ் சிலர் வந்து பல்டி, தாவுதல் என்று சாகசங்களை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள்.. எங்களின் முதல் நாள் கழிந்தது. இரவு உணவுக்குப் பின் அடுத்த நாள் நெடுந்தொலைவுப் பயணம் – ஸெரெங்கெட்டி வரை.. காலையில் விரைவில் செல்ல வேண்டும் என உறங்கச் சென்றோம். இரவில், நுணல்களின் கொரட் சப்தம் மிக உச்சத்தில் இருந்தது. உலகின் மிக உற்சாகமான தற்கொலை முயற்சி!

(பயணிப்போம்)

One Reply to “டமன்யாரா, ஸெரெங்கெட்டி, ங்கொரொங்கோரோ”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.