ஒளி – ஒரு குறுஞ்சித்திரம்: கலைச்சொல் அகரமுதலி

ஒளி- ஒரு குறுஞ்சித்திரம் என்ற கட்டுரைக்கான கலைச் சொல் அகர முதலி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.  அந்தக் கட்டுரை இங்கு நான்கு பகுதிகளாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது.
ஒளி- ஒரு குறுஞ்சித்திரம் பகுதி 1 
ஒளி – ஒரு குறுஞ்சித்திரம் பகுதி 2 
ஒளி- அலையும் துகளும் 
ஒளி – இப்போதும் இனியும் 
 
(பதிப்பாசிரியர் குறிப்பு) இதில் கையாளப்பட்டுள்ள சில கலைச்சொற்களின் மிகச் சுருக்கமான அகரமுதலி இங்கு வழங்கப்படுகிறது. இந்தக் கலைச்சொற்கள் வலிந்து திணிக்கப்படவில்லை; இவை கையாளப்பட்டதன் நோக்கம் மொழித்தூய்மையோ மொழிக்களஞ்சியத்தைச் செறிவாக்குவதோ, ஏன், நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பேசுவதற்குரிய இருபத்தொன்றாம் நூற்றாண்டுத் தமிழை உருவாக்குவதோ அல்ல. செவ்வியல் மொழிகள் இயல்பிலேயே பின்னோக்குத் தன்மை கொண்டவை, பிறமொழிக் கலப்புகளைச் சுத்திகரித்துக் கொள்ளும் பண்பு பொருந்தியவை. அவற்றின் செழுமை பண்டைக்காலத்தின் வேர்களில் உள்ளன (கிபி முதலாம் நூற்றாண்டிலேயே கிரேக்கத்தில் இத்தகைய முயற்சிகள் நடந்ததாய் வாசிக்கிறோம்). இவற்றின் நீண்ட, வளமையான வரலாறு காரணமாக புழக்கத்தில் உள்ள மொழிக்கும் கல்வியையொட்டி வளரும் மொழிக்கும் இடையில் ஓர் இடைவெளி எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. இப்படிப்பட்ட கலைச்சொல்லாக்கங்கள் கல்விப்புல தமிழுக்குரியவை, இவற்றைப் புழக்கத்திலுள்ள தமிழுடன் ஒப்பிட்டு கடினத்தன்மை குறித்தோ புதிர்த்தன்மை குறித்தோ குறைப்பட்டுப் பயனில்லை. வேற்று மொழிகளில் கடினமான சொற்களைப் பயின்று நம் அறிவை வளர்த்துக் கொள்வது போல் இக்கலைச்சொற்களை அணுகுவதுதான் பொருத்தம். எந்நாளும், “விசிபிள் ஸ்பெக்டரத்துக்கு வெளியில் உள்ள நிறங்கள் கொண்ட ஒரு உலகை நாம் காண்கிறோம்” என்பதைவிட “நம் கண்ணுக்கெட்டும் நிறமாலைக்கு அப்பாற்பட்ட வண்ணங்கள் கொண்ட ஒரு உலகை நாம் காண்கிறோம்” என்று எழுதுவதே வாசிக்க இனிமையாக இருக்கிறது. இது நம் அழகியல் தேர்வு.
 
அதிர்வு (vibration) காலம் அல்லது வெளியில் லயம் தப்பாது தொடரும் அசைவு
அலைத்தன்மை (Wave nature) அலையின் இயல்பு கொண்டிருத்தல் (ஊடகத்தினூடே ஆற்றல் பரிமாற்றத்துடன் பயணிக்கும் அதிர்வு, அலைத்தன்மை கொண்டிருப்பதாய் கருதப்படுகிறது)
அலைநீளம் (wavelength) லயம் பொருந்திய அசைவுடன் வெளியொன்றில் நகரும் அலையின் இரு அதிர்வுகளுக்கு இடையிலான தொலைவு
அலைவரிசை (frequency) லயம் பொருந்தி நகரும் அலையொன்று கால கதியில் நொடிக்கு எத்தனை முறை அதிர்கிறது என்ற எண்ணிக்கை
இடைமுகம் (interface) நீர் மற்றும் காற்று போன்ற இருவேறு பருப்பொருள் ஊடகங்களுக்கு இடையில் அவற்றைப் பிரித்திருக்கும் புறப்பரப்பு
இயங்குவிசை (momentum) நிறையின் வேகப்பெருக்கம். நிறையற்ற துகளின் இயங்குவிசை, அதன் ஆற்றலை வேகத்தால் வகுத்து அடையும் விடை என்று கூறப்படுகிறது.
ஈத்தர் (ether) விண்வெளியில் அசையாது நிற்கும் திரவம் ஒன்று இருப்பதாய் கருதப்பட்டு அதற்கு ஈத்தர் என்று பெயரிடப்பட்டது. பின்னர் அவ்வாறு ஒன்றில்லை என்பது அறியப்பட்டது.
ஈரிணை ஒளிக்கணினிகள் (binary optical computer )
காண்க: ஒளிசார்ந்த இலக்கமுறை கணினி
உயர் அலைவரிசை (High Frequency) அதிர்வுகளின் அதிவிரைவு விகிதம்
உயிரணு (Cell) உயிரிகளின் அடிப்படை கட்டுமான அமைப்பு
ஊசலாட்டம் (oscillation) குறிப்பிடத்தக்க கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் நிகழும் வகையில் சுழற்சித்தன்மை கொண்ட அசைவு
ஊடகம் (medium) அலைகள் அல்லது ஆற்றலைக் கடத்தக்கூடிய பருப்பொருள்
ஊட்டத் துகள் (charged particle)  பூஜ்யமல்லாத மின்னூட்டு கொண்ட துகள்
எதிர் மின்னூட்டம் (negative electric charge)
காண்க: மின்னூட்டு
எதிரொளிப்பு (reflection) இடைமுகத்தில் பட்டுத் தெறிக்கும் ஒளி, தான் பயணித்த ஊடகத்தின் திசையில் மீண்டும் திரும்புதல்
ஒளி மின்னணுவியல் தொழில்நுட்பங்கள் (optoelectronic technologies)  மின்சாரம் மற்றும் ஒளி ஆகிய இரண்டையும் பயன்படுத்தி தர்க்க ஆணைகளைச் செயல்படுத்தும் தொழில்நுட்பங்கள்
ஒளி வில்லை (optical lens) ஒளிக் கீற்றை குவிக்கவும், கலைக்கவும் செய்யும் வில்லை. நாம் அணியும் கண்ணாடிகள் ஒளி வில்லைகளைப் பயன்படுத்துகின்றன.
ஒளிசார்ந்த இலக்கமுறை கணினி (optical digital computer) தர்க்கம் சார்ந்த ஆணைகளை இயக்கும் வகையில் எலக்ட்ரான்களின் இடத்தில் ஒளி செயல்படும் கணினி- டிஜிடல் என்று சொல்லும்போது ஒளியின் இரு நிலைகள்தான் பயன்படுகின்றன: ஒளிர் நிலை, ஒளிர்வற்ற நிலை
ஒளிசார்ந்த தொடர்பு வட்டங்கள் (optical communications network) ஒளியிழைகள், லேசர்கள், கணினிகள், துணைக்கோள்கள் மற்றும் பிற கருவிகளாலான வலைத்தொடர்பு, நவீன கால தகவல் தொடர்பு மற்றும் இணையம் வழி உலகளாவிய தொடர்பு வட்டம்
ஒளித்திரிபு எண் (Refractive index) வெற்றிடத்துடன் ஒப்பிடுகையில் ஒளி குறிப்பிட்ட ஒரு பருப்பொருளில் எவ்வளவு தாமதமாகப் பயணிக்கிறது என்பதைக் குறிக்கும் எண்
ஒளித்திரிபு விதி (The law of refraction of light) ஒரு ஊடகத்திலிருந்து வேறொரு ஊடகம் செல்லும் ஒளி எவ்வளவு வளையும் என்பதை விவரிக்கும் விதி, ஸ்நெல்’ஸ் விதிக்கு ஒப்பானது
ஒளித்துகள் கோட்பாடு (corpuscular theory of light) ஒளி, பந்து போன்ற வடிவம் கொண்ட உறுதியான துகல்களாலானது என்று கருதும் கோட்பாடு
ஒளியியல் (optics) ஒளியின் இயல்பு குறித்த ஆய்வுத்துறை
ஒளியிழை (optical fibre) தூய கண்ணாடியாலான இழை, முடி போல் மெலியது- தன்னுள் புகும் ஒளியை முழுமையான நெகிழ்வுத்தன்மையுடன் செலுத்தக்கூடியது
ஒளியிழைப் பாதை (optical fiber network) ஒளி சார்ந்த தொலைதொடர்பு வட்டத்துக்கு இணையானது
ஒளியுமிழ் டையோடுகள் (Light Emitting Diodes, LEDs)  மின்சாரம் செலுத்தப்படும்போது ஒளிரும் கருவிகள்
ஒளியுமிழும் மூலக்கூறுகள் (fluorescent molecules)  ஒளியை உள்வாங்கக்கூடிய மூலக்கூறுகள், பின் தாழ் அலைநீளத்தில் ஒளியை மெல்ல உமிழ்ந்து ஒளிரக்கூடியவை
க்வாண்டம் கணினி (Quantum computer) ஒளி அல்லது ஊட்டின் இரு நிலைகளுக்கும் கூடுதலான நிலைகளைப் பயன்படுத்திக்கொள்ளும் கணினி- அவற்றுக்கு இடைப்பட்ட மற்றும் கலவை எண்களை நிலைகளாகப் பயன்படுத்துகின்றன
கம்பியில்லா ரௌடர் (wireless router) அலைபேசி, கணினி போல் வீட்டில் பயன்படும் கருவிகளைக் கொண்டு மின்காந்த அலைகள் வழியே தகவல்களைப் பெற்று இணையத்துக்குச் செலுத்தும் கருவி
கலவை எண் (complex number) எதிரெண்களின் பின்ன பெருக்கங்கள். உதாரணம், -1ன் வர்க்கமூலம் N என்ற எண்ணாகக் கொண்டால், அதை N கொண்டு பெருக்கும்போது -1 என்ற விடை அளிக்கும்.  இத்தகைய எண்ணை எண் வரிசையில் குறிப்பிட முடியாது. அதற்கென்றே ஒரு தனி வரிசை தேவைப்படுகிறது.
காந்த ஊட்டு (magnetic charge) காந்த ஊட்டு என்பது பருப்பொருள் அல்ல. காந்தத்தின் வட துருவம் மற்றும் தென் துருவத்தைப் பிரித்தெடுக்கும் சாத்தியத்தைப் பேச இப்பதம் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது
காந்தத் தனிமுனை (magnetic monopole) தென் துருவம் அல்லது வட துருவம், இவற்றில் ஏதோ ஒன்று மட்டும்
காந்தப்புலம் (magnetic field) ஒரு காந்த ஊட்டைச் சுற்றியுள்ள ஆற்றல் மண்டலம், அதன் அண்மையில் நகரும் பிற ஊட்டுக்களால் உணரப்படுவது
கீழ்ச்சிவப்பு (infra-red) சிவப்புக்கு குறைந்த அலைவரிசை கொண்ட மின்காந்த அலைகள்
குறைகடத்தி (semiconductor) கெல்வின் போன்ற மிகக் குறைந்த சீதோஷ்ணத்தில் மின்சாரத்தைக் கடத்த இயலாத பருப்பொருள், வெப்பம் கூடுகையில் அது ஓரளவு மின்சாரம் கடத்தவல்லதாய் மாறுகிறது
குறைகடத்திச் சந்தி (Semiconductor junction) உபரி எலக்ட்ரான்கள் தோன்றும் வகையில் பாஸ்பரஸ், துளைகள் என்று அழைக்கப்படும் குறை எலக்ட்ரான்கள் தோன்றும் வகையில் போரான், போன்ற தனிமங்கள் சிலிகான் முதலான குறைகடத்திகளில் சேர்க்கப்படுகின்றன. இவை கூடுமிடத்தில் குறைகடத்திச் சந்திகள் தோன்றுகின்றன.
சார்பியல் சிறப்புக் கோட்பாடு (special theory of relativity) வெற்றிடத்தில் ஒரு பொருள் ஒளியின் வேகத்தை நெருங்கும்போது காலமும் வெளியும் எவ்வாறு மாறுகின்றன என்பதை விவரிக்கும் கோட்பாடு, ஐன்ஸ்டீனால் முன்வைக்கப்பட்டது.
திரிபு (refraction) ஒரு ஊடகத்திலிருந்து வேறொரு ஊடகத்துக்குச் செல்லும் ஒளி வளைதல்
துகள்தன்மை (corpuscular nature) துகள் தன்மை கொண்ட இயல்பு- ஒளி துகள்களைப் போல் பரவுகிறது என்னும் கோட்பாடு
தேசு மண்டலம் (halo) ஒரு துகளைச் சூழ்ந்துள்ள வெளியில் அதன் தாக்கம் உணரப்படும் வட்டம். தெய்வ ஓவியங்களில் தலையைச் சுற்றி வரையப்படும் ஒளிவட்டம் போன்றது.
தொடுவில்லைகள் (contact lens) மெலிதான, நெகிழ்வுத்தன்மை கொண்ட பல்பகுதிச் சேர்மத்தாலான ஒளி வில்லைகள்- இவற்றை விழிக்கோளத்தில் நேரடியாகப் பொருத்தி பார்வைக்குறைகள் சரி செய்யப்படுகின்றன
தொலைநிகழ்வு (action at a distance) நேரடி தொடுகை இல்லாமல் வேறொரு பொருள் மீது தாக்கம் செலுத்துதல்
நிறமாலை (spectrum) குறிப்பிட்ட அலைவரிசைகளின் தொகுதி
நிறை (mass) பருப்பொருட்களின் அடிப்படை இயல்பு. பருப்பொருளின் மீது எவ்வளவு வலுவான விசையை புவிஈர்ப்பு விசை செலுத்துகிறது, தோற்றுவிக்கிறது என்பதை தீர்மானிக்கும் அலகு. போட்டோன் போன்ற சில நுண்பொருட்கள் நிறையற்றவை.
நுண்ணலை (microwave) ஜிகாஹெர்ட்ஸ் அளவிலான அலைவரிசை கொண்ட மின்காந்த அலைகள்
நுண்நோக்கி (Microscope) பயன்படுத்தப்படும் ஒளியின் அலைநீளத்தின் அளவுல்ல சிறிய பொருட்களையும் படம்பிடிக்க ஒளியைப் பயன்படுத்தும் கருவி. கண்ணால் காணக்கூடிய ஒளியெனில், அதன் அலைநீளம் மைக்ரோமீட்டர்களில் இருக்கும்.
நெளியிழை ஒளிக்கம்பிகள் (flexible fiber optic cables) ஒளியிழைக் கற்றை ஒளிக்கம்பி என்று அழைக்கப்படுகிறது. நெளித்தன்மை கொண்டது என்பதன் பொருள் அதை வளைக்க முடியும் என்பதே.
நேர் மின்னூட்டம் (positive electric charge)
காண்க: மின்னூட்டு
நேரிலா படிகங்கள் (nonlinear crystals) தம்மூடு பரவும் ஒளியின் இயல்பை அசாதாரணமான வகைகளில் மாற்றக்கூடிய படிகங்கள் உதாரணத்துக்கு, இவை ஒளியின் வண்ணத்தை மாற்றுகின்றன (மேலும் துல்லியமான வரையறை செய்ய சமன்பாடுகளைக் கையாண்டாக வேண்டியிருக்கும்).
பருமை (magnitude) பருப்பொருளின் அளவு. வடமேற்கு திசையில் ஒரு பொருள் 35 கிலோமீட்டர்கள் வேகத்தில் விரைகிறது என்றால் அந்த வேகத்தின் பருமை மணிக்கு 35 கிலோமீட்டர்கள் என்று சொல்லலாம், அதன் திசை வடமேற்கு.
புவி ஈர்ப்பு விசை (gravity) நிறை கொண்ட இரு பொருட்களிடையே விளங்கும் ஈர்ப்பு விசை, இயற்கை அடிப்படை விசைகளில் ஒன்று
பொருண்ம இயல்பு (physical nature) இயற்கை நிகழ்வை விளக்கப் பயன்படும் விதிகளைப் பேச உதவும் கருதுகோள்
மிகுகடத்தி (superconductor) எலக்ட்ரான்கள் விரைவதை சிறிதும் தடை செய்யாது கடத்தும் பருப்பொருள்
மின்காந்த அலை (electromagnetic wave) குறிப்பிட்ட வகையில் ஒன்றுடனொன்று இணைந்த மின்புலம் மற்றும் காந்தப்புலங்களாலான அலை; வெற்றிடத்தின் நொடிக்கு முன்னூறு மில்லியன் மீட்டர்கள் என்ற வேகத்தில் விரைவது.
மின்காந்த விசை (electromagnetism) ஆற்றலைக் கடத்தக்கூடிய மின்புலம் மற்றும் காந்தப்புலங்களின் சிக்கலான மண்டலம், இவை நகரும், நகராதிருக்கும் ஊட்டுக்களின்மீது தம் விசையைச் செலுத்துகின்றன
மின்புலம் (electric field) நகரும்போதும் அசையாதிருக்கும்போதும் மின்னூட்டைச் சூழ்ந்திருக்கும் ஆற்றல் மண்டலம். இது நகரும், நகராத வேறொரு மின்னூட்டை ஈர்க்கக்கூடியது. இது காந்தப் புலத்தினின்று வேறுபட்டது, அங்கு நகரும் மின்னூட்டுகளுக்கு கூடுதல் ஆற்றல் மண்டலம் உண்டு.
மின்னணுச் சுற்றமைப்பு (Electronic circuit) முன்வரையறை செய்யப்பட்ட ஆணைகளைச் செயல்படுத்தும் வகையில் எலக்ட்ரான்கள், கம்பிகள் மற்றும் மின்னணுக் கருவிகள் வழி பயணிக்கும் வலைப்பின்னல்.
மின்னணுக்கருவி (electronic equipment) எலக்ட்ரான்களைக் கொண்டு இயங்கும் கருவிகள்
மின்னணுவியல் (Electronics) எலக்ட்ரான்களின் மின்னூட்டு கொண்டு தகவல்களை சேமித்து, பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள்
மின்னூட்டு (electric charge) இயற்கையில் விளங்கும் நேர், எதிர் மற்றும் சூனியத்தன்மை கொண்ட மூவகைப்பட்ட அடிப்படைப் பண்புகள். காந்தப்புலத்துக்கு மின்னூட்டு என்பது புவிஈர்ப்புக்கு நிறை போன்றது.
மின்னோடி (electric motor) மின்னோடி என்பது மின்சாரத்தைப் பயன்படுத்தி அசைவை உருவாக்குகிறது
மீபொருள் ஒளியியல் (optical metamaterials) அனைத்து பருப்பொருட்களும் அணுக்களாலானவை. மீபோருட்கள் அணுக்குவியல்களால் செய்யப்பட்டவை. அவை நானோமீட்டர்கள் முதல் மைக்ரோமீட்டர்கள் வரை அளவு கொண்டவை. ஒளி ஊடுருவிச் செல்லும்போது வேறுபட்ட வகையில் செயல்படும் இத்தகைய பருப்பொருட்களை மீபொருள் ஒளியியல் விவரிக்கிறது
முனைவாக்கம் (polarisation) ஒரு பொருளின் நேர்மின்னூட்டமும் எதிர் மின்னூட்டமும் எதிரெதிர் திசைகளில் செலுத்தப்படுவது
மூலக்கூறு (molecule) ஒன்று திரண்டு, தமக்குள் பிணைப்புகளை உருவாக்கும் அணுக்கூட்டம். உதாரணமாக, தண்ணீர் மூலக்கூறில் ஒரு ஆக்சிஜன் அணு, இரண்டு ஹைட்ரஜன் அணுக்களுடன் பிணைப்பை உருவாக்கிக் கொண்டுள்ளது.
மென் அணுக்கரு விசை (weak nuclear force) அணுக்கருவில் உள்ள அடிப்படை இயற்கை விசைகளில் ஒன்று
வடிவ ஒளியியல் (Geometrical optics) ஒளி எவ்வாறு வளைகிறது, பிரதிபலிக்கிறது, குவிகிறது என்பதில் ஆய்வுகள் நிகழ்த்தும் துறை
வலைப்பின்னல் (network) “வலை போல்’ என்பது இதன் பொருள். இங்கு, ஒளியிழைகள் உலகளாவிய தகவல் தொடர்புக்குரிய வலைபின்னலாய் விளங்குவதைக் குறிக்கிறது.
வளிமண்டலவியல் (meteorology) வளிமண்டல ஆய்வு
வன் அணுக்கரு விசை (strong nuclear force) அணுக்கருவை ஒருங்கிணைத்திருக்கும் அடிப்படை இயற்கை விசை
வானவியல் (astronomy) விண்வெளி, அங்குள்ள பொருட்கள் மற்றும் அண்டம் குறித்த ஆய்வுகள் நிகழ்த்தும் துறை
வானொலி அலைகள் (radio waves) நொடிக்கு ஒரு லட்சம் முதல் பத்து லட்சம் சுழற்சிகள் என்ற அலைவரிசை கொண்ட மின்காந்த அலை.
விசை (force) நியூட்டன் விதிகளில் வரையறுக்கப்பட்டவாறு, ஒரு பொருளின் மீது விசை செலுத்தப்படுகிறது எனில், அதன் வேகம் காலப்போக்கில் மாறுதலுக்கு உட்படுகிறது.
வில்லை (Lens) ஒளி புகவல்ல பொருள், அல்லது கண்ணாடியை இழைத்து ஒளி குவியும் வகையிலோ சிதறும் வகையிலோ வடிவமைக்கப்பட்ட கருவி
வில்லைகளின் ஒளியியல் (lens optics) ஒளி வில்லைகளினுள் செல்லும் ஒளியை வில்லைகள் எப்படிச் செலுத்துகின்றன என்பதை ஆயும் துறை
வெற்றிடம் (vacuum) பருப்பொருட்களற்ற வெற்றுவெளி
***

One Reply to “ஒளி – ஒரு குறுஞ்சித்திரம்: கலைச்சொல் அகரமுதலி”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.