உச்சைசிரவஸும் குரங்கும்

chaos-monkeys_book_obscene-fortune-and-random-failure-in-silicon-valley“வணக்கம்!” என்று வரவேற்பதை கலிஃபோர்னியாவிற்கு குடிவரும் ஒவ்வொரு புதியவரும் எப்படி புரிந்து கொள்ள வேண்டும்? பல்லாண்டு காலமாக சிலிகான் வேலியில் குப்பை கொட்டியவர்கள், அதை “நீ எக்கேடு கெட்டு போனா எனக்கென்னடீ!” என்பதன் சுருக்கம் என அறிவார்கள். அவர்களின் திருமணத்திற்கு அழைப்பு வைத்தும் நீங்கள் போகாவிட்டால் அவர்கள் புரிந்து கொள்வார்கள். தங்களின் புத்தியை உஷார்நிலையில் வைத்திருக்கும் யோகா வகுப்பிற்கு செல்லும் நடைபாதையின் குறுக்கே இருக்கும் வீடற்றவரை கவனிக்காமல் சுலபமாகத் தாண்டிச் செல்வார்கள். இவர்களுக்கு குடும்பம், குட்டி பொருட்டில்லை. மதமோ கடவுளோ நம்பிக்கை இடையூறு செய்வதில்லை. ஆண்களோ, பெண்களோ, பால் பேதமின்றி தங்களைச் சுற்றி தீவு போன்ற குமிழிகளைக் கட்டியிருக்கிறார்கள். வருமான ஏற்றத்தாழ்வு போன்ற சமூகச் சிக்கல்களோ, அண்டை அயலில் நடக்கும் சிரியா நாட்டின் உள்நாட்டு சண்டைகளோ இவர்களை அசைப்பதில்லை. ”எல்லாத்தையும் லைட்டா எடுத்துக்கப்பு!” என்னும் வாழ்வியல் கோட்பாட்டை சிரமேற்கொண்டு நிறைவேற்றுவார்கள். சான் ஃபிரான்சிஸ்கோவில் ஆரம்பித்து சான் ஓஸேவில் முடிவதாக சொன்னாலும் இப்போதைய அமெரிக்க புதுயுக கண்டுபிடிப்பு நிறுவனங்களின் கலாச்சாரம் என்பது இதுதான்: சுயநலத்தில் ஊறிய தருமம்; பொது நீதி எல்லாம் கண்டுகொள்ளாத்தன்மை; அதன் அடிப்படையில் உலகநன்மைக்காகவும் லோகஷேமத்திற்காகவும் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் பாவ்லாத்தனம்; தொழில்நுட்பத்தை முன்னேற்றுவதாகச் சொல்லிக்கொண்டு அடுத்த மாதம் ஐந்து மில்லியன் கிடைக்குமா என்று கணக்கு போடும் புத்தி. எப்போது பங்குச் சந்தையில் பில்லியன்கள் அள்ளூவோம், எப்படி கூகுளுக்கும் மைக்ரோசாஃப்டிற்கும் தங்கள் நிறுவனத்தை விற்போம் என்னும் திட்டங்களில் இலயித்து கிடக்கும் சுயமோகம்.
Chaos Monkeys: Obscene Fortune and Random Failure in Silicon Valley By Antonio García Martínez நூலில் இருந்து ஒரு நறுக்

மேற்படி நூலைப் புரட்டிக் கொண்டிருக்கும்போது ‘தி லாப்ஸ்டர்’ திரைப்படத்தை பார்த்துத் தொலைத்தேன். புத்தகத்திற்கும் படத்திற்கும் ஸ்னான ப்ராப்தி இல்லைதான். இருந்தாலும், அவை இரண்டிற்கும் நடுவே உள்ள தொடர்புகளைக் கோர்த்துப் பார்ப்போமா?
’தி லாப்ஸ்டர்’ படத்தின் துவக்கத்தில் ஒருத்தி ஆள் அரவமற்ற சாலையில் காரோட்டிச் செல்கிறாள். சாலையோரத்தில் சில கழுதைகள் மேய்ந்து கொண்டிருப்பதை பார்க்கிறாள். காரை நிறுத்தி, சுற்றுமுற்றும் எவரும் இல்லை என்பதை உறுதி செய்து கொள்கிறாள். அதன் பின், காரில் இருந்து இறங்கி, தன் துப்பாக்கியை எடுத்து, ஒரு கழுதையைக் கொல்கிறாள். அதன் பின், மீண்டும் காரில் ஏறி சென்றுவிடுகிறாள்.
அடுத்த காட்சியில் டேவிட் அறிமுகமாகிறான். அவன் மனைவி அவனை காதலிக்கவில்லை. அதனால், அவனை நகரத்தில் இருந்து தள்ளி, ஒதுக்குப்புறமாக இருக்கும் ஒரு விடுதிக்கு அழைத்துப் போகிறார்கள். சற்றே தொப்பை இருக்கிறது. கண்ணாடி அணிந்திருக்கிறான். அந்த விடுதியில் நாற்பத்தைந்து நாள்கள் அவன் இருக்க வேண்டும். அந்த விடுதியில் இருப்போர் எல்லோருமே தனியர்கள். சிலருக்கு கணவன் இறந்துவிட்டார்கள். சிலருக்கு மணமுறிவாகிவிட்டது. எப்படியோ இணையின்றி இருப்பவர்கள். கொடுக்கப்பட்ட ஒரு மண்டலத்திற்குள் தங்களின் துணையைத் தேடிக் கொள்ளவேண்டும். 45 நாள்களுக்குள் காதலில் விழுந்து கல்யாணத்தில் விழாவிட்டால், மிருகமாக்கப்படுவார்கள். ”விலங்காக மாறியாவது உங்களின் துணையைத் தேடிக் கொள்ள இன்னொரு வாய்ப்பு வழங்கப்படுவதை நினைத்து நீங்கள் சந்தோஷப் படவேண்டும்!” என்கிறார் அந்த விடுதியின் நிர்வாகி.

lobster_movie_animal_Films_Second_Chance_Loners

இந்தப் படத்தைப் பார்க்கும்போது சற்றே அசௌகரியம் வந்து உட்கார்ந்து கொள்கிறது. படம் பார்க்கும்போது என் குடும்பத்தாரும் இல்லாத சமயம். அதுவும் கொஞ்சம் தொண்டையில் மாட்டிக் கொண்ட தேங்காய் நாராக படத்தின் முகாந்திரத்தோடு ஒன்றச் செய்தது. அலுவலில் இப்போது எல்லாம் எல்லோரும் சேர்ந்து ஒரே இடத்தில் வேலை செய்வதில்லை. என்னோடு பணி புரியும் இருவர் இந்தியாவில் இருந்து கொண்டு, அமெரிக்க பகல் நேரத்தில் வேலை பார்ப்பவர்கள். கிட்டத்தட்ட அவர்களை ஆந்தைகளைப் போல்தான் உணர்வேன். இன்னொருவர் ஒரு வாரம் பாஸ்டனில் இருப்பார். அடுத்த வாரம் சிகாகோவில் இருப்பார். பறந்துகொண்டேயிருக்கும் பருந்து. மற்றொருவரை ஏன் பணியில் வைத்திருக்கிறோம் என்றே எவருக்கும் தெரியாது. எல்லோரையும் மதிய உணவிற்கு செல்லவேண்டும் என்பதை நினைவுறுத்துவார். எங்களுடன் மயில் மாதிரி சிரித்துப் பேசுவார். அவரின் தோகை போன்ற ஆடைகளும் அணிகலன்களும் மினுமினுக்கும். அலுவலகமே மிருகக்காட்சி சாலை. ஒரே இடத்தில் 9 முதல் 5 வரை உழல்வதால், காதல் மலர்ந்தவர்களும் உண்டு.
எனவே, இந்தப் படத்தின் விசித்திரமான கதைப் போக்கும் ‘தாறுமாறான குரங்குகள்: மிகப்பருத்த குருட்டுயோகமும் சிலிகான் வேலியின் சீரற்ற தோல்விகளும்’ புத்தகத்தின் உள்ளடக்கமும் ஒருங்கே மின்னி மின்னி மறைந்தன.
சிலிகான் வேலியில் வெல்வதற்கான எல்லா சாமுத்ரிகா லட்சணங்களும் அண்டோனியோ கார்சியா மார்குவேஸ் (Antonio García Martínez) என்பவரிடம் இருந்தன. அவரின் நிறுவனம் யொய்-காம்பினேட்டர் (Y Combinator) எனப் புகழ்பெற்ற முதலீட்டாளரின் கடைக்கண் பார்வையை அல்ல… தீர்க்கமான நேரடியான அருளாசியைப் பெற்றிருந்தது. அதை ட்விட்டரிடம் விற்கும் வாய்ப்பு கிடைத்தது. ட்விட்டருக்கு தன்னுடைய நிறுவனத்தை விற்ற பிறகு ஃபேஸ்புக்கில் பெரிய முக்கியமான வேலை கிடைத்தது. இந்த மாதிரி ராஜபாட்டை எல்லோருக்கு வாய்ப்பதில்லை. கிடைத்தவர்களும் அதையெல்லாம் பகிர்வதில்லை. சிலிகான் வேலி என்பது மூடுமந்திரம். சாந்திமுகூர்த்தத்தில் என்ன நடக்கிறது என்பது தமிழ் சினிமாவில் காணக்கிடைக்காத மாதிரி கணினி நிறுவனங்களும் எதையும் போட்டு உடைப்பதில்லை. குழந்தை பிறந்தால் மகிழ்வது போல் பொதுப்பங்கு வெளியீடு (ஐ.பி.ஓ.) காண்பது மட்டுமே கண்ணுக்குத் தெரியும்.
இந்த மாதிரியே யோசித்ததில்…

தி லாப்ஸ்டர் படம் சிலிகான் வேலி புத்தகம் மானிட மையக்கொள்கை (Anthropocentrism) மனிதப்பண்பேற்றல் (Anthropomorphism)
திரைப்படத்தில் உள்ள சமூகச் சித்தரிப்பின் படி, தனியாக வாழ்வது குற்றமாகக் கருதப்படுகிறது. தனியாக வாழ நினைப்பவர்கள் மிருகமாக மாற்றப்படுவார்கள் நூலில் உள்ளபடி பார்த்தால், கணினி நிறுவனங்களில் கோடிகள் சம்பாதிக்காவிட்டால், நீங்கள் சாமர்த்தியசாலி அல்ல. பலிகடா எனக் கருதப்படுகிறீர்கள். குரங்கு சேட்டை – என்பதில் இருந்து Chaos Monkeys பிரயோகம் வந்தது. உங்கள் வீட்டில் தினசரி சமைப்பது இல்லத்தரசிதான் என வைத்துக் கொள்வோம். சடாரென்று ஒரு நாள், இல்லத்தரசி எதுவுமே சமைக்காமல் இருந்தால், சாப்பாட்டு நேரத்தில்தான் அதை உணர்ந்தால், என்ன செய்வோம்? குழம்பித் தத்தளிப்போமா அல்லது எந்த சிக்கலும் இல்லாமல் பிரச்சினையை எதிர்க்கொள்வோமா? தங்களின் காரியங்களை நிறைவேற்ற மனிதர்கள் மட்டும்தான் ஒற்றுமையாகச் செயல்படுகிறார்கள் என்று சொல்லமுடியாது. சிம்பேன்சி குரங்குகளும் அவ்வாறே தன்னலத்தோடு ஒற்றுமையாகவும் கூட்டுறவாகவும் நடந்துகொள்வதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
படம் நெடுக நிறைய பிராணிகள் வருகின்றன. கதாநாயகனின் சகோதரன் நாயாக மாறி இருக்கிறான். வாத்துகள், குதிரைகள் எல்லாம் எப்போதும் பின்னணியில் உண்டு நூலில் உள்ளபடி பார்த்தால், கணினி யுகத்தின் தொழிலாளிகள் எல்லோருமே தங்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு வேலை செய்கிறார்கள். அவர்கள் எல்லோரும் இராணித் தேனீக்கு உழைக்கும் பணித் தேனீகள். வளர்ப்பு பிராணிகள் மட்டுமே சிறிதளவு தன்னலமற்றவை. மற்ற மிருகங்கள் அனைத்துமே சுயநலம் மிக்கவை. நாய் போல் நன்றி; புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என தமிழில் எக்கச்சக்கத்திற்கு அனைத்து மிருகங்களுக்கும் மனிதவுருஅல்லது பண்பு சார்த்துதல் தொடர்கிறது.
தனியாக இருக்க பிரியப்படுபவர்களை வேட்டையாடும் காட்சிகள் படத்தில் உண்டு. தனிமை விரும்பிகளாக விரும்பி சமூகத்தில் இருந்து தப்பித்து ஓடுபவர்களை, – கண்டுபிடித்து, கட்டி இழுத்துக் கொண்டு வந்தால் சில்லறை பரிசுகள் உண்டு. நிறுவனத்திற்காக பரிபூரணமாக உழைப்பவர்களுக்கு எப்போதுமே குட்டி பதவி உயர்வுகள் உண்டு. ஏய்ப்பவர்களைக் காட்டிக் கொடுக்கும் எட்டப்பன்களுக்கு அதிகாரத்தின் சாவிகள் தரப்படும். சிங்கத்தின் முகத்தை ஈக்கள் மொய்க்கும். வேட்டையாடி விட்டு களைத்து உறங்கும் சிங்கத்தின் முகத்தில் ஈயாடும். அந்த ஈக்களை எலிகளும் தவளைகளும் உண்டு பசியாறி — பெரிய மிருகமான சிங்கத்தின் நித்திரைக்கு உதவுகின்றன. ஈசாப் நீதிக்கதைகளில் ஆரம்பித்து இன்றைய டிஸ்னி படங்கள் வரை சிங்கமும் எலியும் மனிதரைப் போல் பேசி, உரையாடிக் கொண்டேயிருக்கின்றன.
தனிமைவிரும்பிகளும் சுதந்திரவாதிகள் அல்ல. தனிமையில் வாழ்பவர்களிடமும் சட்டதிட்டங்கள் இருக்கின்றன. தொட்டால் தண்டனை; முத்தம் கொடுத்தால் வாயைத் தைத்து விடுவார்கள். உங்கள் அரசாங்கம் உங்களை எப்போதும் கண்காணிக்கிறது; சமூக ஊடகங்களில் நீங்கள் பகிரும் விஷயங்களைக் கொண்டு உங்களை சந்தைப் பொருள் ஆக்குகிறார்கள்; உங்கள் அந்தரங்கத்தை விற்கிறார்கள் மிருகங்களிடத்திலும் எழுதப்படாத விதிகள் உண்டு; வயதைப் பொருத்து அல்லது திறமையைப் பொருத்து சமூக அடுக்கு காணக் கிடைக்கிறது. சிலிக்கான் வேலியில் துவக்க நிலையில் இருக்கும் குட்டி நிறுவனங்களை கூகுள், ஃபேஸ்புக் போன்ற பெரிய வளர்ந்த நிறுவனங்கள் அடிமையாக்கி கீழ்ப்பணிய வைக்கின்றனர்.
இந்தப் படம் டிண்டர் (Tinder) சமுதாயத்தைக் குறிவைக்கிறது. அவர்களின் காதல்வயப்படலை கிண்டலடிக்காமல், ஆவணப்படம் போல் பதிவு செய்கிறது. இந்தியர்கள் போல் நிச்சயிக்கப்பட்டு அதன் பின் காதலில் விழும் சமூகத்தைக் குறிக்கிறது. உங்களின் நிரலி செம்மையாக எழுதப் பட்டிருக்கிறதா என்பதை யாரும் பொருட்படுத்துவதில்லை. நீங்கள் எவ்வளவு வாக்கு சாதுர்யம் கொண்டவர் என்பது மட்டுமே முக்கியம். ஏற்கனவே, எவ்வளவு நிறுவனங்களைத் தொடங்கியவர் என்பது முக்கியம். அந்த நிறுவனங்கள் வெற்றி அடைந்ததா, பயனற்றதா என்பதை யாரும் கவனத்தில் கொள்வதில்லை. பெரும்பாலான ஜந்துக்களுக்கு ஒருவனுக்கு ஒருத்தி என்பதில் நம்பிக்கை கிடையாது. அழகான எதிர்ப்பாலார் அல்லது ஒத்த சிந்தனையுள்ள துணை அல்லது ஒரே குறைபாடுகள் கொண்ட தம்பதியினர் என்பது விலங்குகளுக்குக் கிடையாது. நோவா பேழையை எடுத்துக் கொள்வோம். அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட மிருகங்கள் இருந்தன. பல பறவைகள் வாழ்நாள் முழுக்க ஒரேயொரு துணையுடன் காலங்கழிக்கின்றன.

The_Lobster_Couples_Love_Forest_Blind_Similar_Interests_Animal

Chaos Monkeys – குழப்பவாத குரங்குகள் என்பது கணினி நிரலாளர்களுக்கு பழக்கமான பிரயோகம். கணினிகள் எப்போதும் வேலை செய்யும் என்பதை நம்ப முடியாது. கணினியின் நிரலிகள் ஒவ்வொரு நொடியும் சரியாக இயங்கும் என்பதை நம்ப முடியாது. எந்த நிமிஷம் வேண்டுமானாலும் நம் நிரலிகள் செயலிழக்கலாம். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கணினிகள் ஸ்தம்பித்து நிற்கலாம். அப்போதும், உங்களின் வர்த்தக இயக்கம் ஓடவேண்டும். எந்த இடையூறு வந்தாலும், பிறருக்குத் தெரியாதபடி நிறுவனத்தின் எந்திரம் இயங்க வேண்டும்.
கார்சியாவின் நூலில் கணினிகளுக்கு மட்டுமே புகழ்பெற்ற இந்த ”குழப்பவாத குரங்குகள்” தத்துவத்தை நிறுவனங்களுக்குக் கொண்டு செல்கிறார். தொலைபேசி நிறுவனம் இருந்தது. அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு பேச வேண்டுமென்றால் நிமிடத்திற்கு இரண்டு டாலர் வசூலித்தது. தடாலென்று ஸ்கைப் முளைத்தது. அமெரிக்காவில் இருந்து ஆப்பிரிக்கா வரை எங்கே வேண்டுமானாலும் இலவசமாகப் பேச முடிகிறது. இது குழப்பவாத குரங்குகளின் செய்கை.
அதே போல் சென்னையின் ஆட்டோ ஒட்டுனர்கள் இருந்தார்கள். ’இந்த இடத்திற்கு வர முடியாது’ என்பார்கள். ‘இங்கே போக வேண்டுமென்றால் டபுள் ரேட்’ என மிரட்டுவார்கள். அவர்களில் சில சந்தேகாஸ்தபமான, சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களும் இருக்கிறார்கள். ஓலா முளைத்தது. செல்பேசியில் அவர்களை பார்க்கலாம். எப்படிப்பட்டவர்கள் என்பதை அறியலாம். ஓலா ஓட்டுனர்களுக்கு, நீங்கள் சாவுகிராக்கியா, நல்ல கிராக்கியா என்பதை அறிய முடியும். இது குழப்பவாத குரங்குகளின் செய்கை.
’தி லாப்ஸ்டர்’ படமும் குழப்பவாத குரங்குகளின் செய்கையை குறிக்கிறது. உங்கள் இல்லறத்தில் மாரத்தான் ஓட்டம் போல் பொறுமையாக ஓடப் பார்க்கிறீர்கள். நடுவில் சுனாமியோ, நிலநடுக்கமோ ஏற்பட்டால் எப்படி எதிர்கொள்வீர்கள்? மீண்டு எழுவீர்களா? விலங்கு குணங்களைக் கொள்வீர்களா? மனிதர் என்பவருக்கு என்ன பண்பு இருந்தால் மானிடர் ஆகுவீர்கள்?
ஒரே ஒரு கபர்தார்: இந்தப் படத்தை உங்களின் காதலரோடு பார்ப்பதற்கு முன் அவரை திருமணம் செய்துகொள்வது சாலச்சிறந்தது.
இன்னும் ஒரு கபர்தார்: இந்தப் புத்தகத்தை படித்து நீங்களும் வருடத்திற்கு 550 ஆயிரம் டாலர் சம்பாதிக்கலாம் என்று சிலிக்கான் வேலிக்குக் குடி புகாதீர்கள்.

One Reply to “உச்சைசிரவஸும் குரங்கும்”

  1. அன்பார்ந்த பாலா,
    நல்ல கட்டுரை. வீட்டில் யாருமில்லையென்றால், ரெண்டு பீர் பாட்டிலுடன், ஒரு நல்ல திரைப்படத்தை டி.வி.டியில் பார்த்தபின் அதனைக்க்குறித்து சிந்தனை செய்யும்போது குழப்பவாதக் குரங்குகள் மனதுள் குதித்து ஆர்ப்பரிக்கும் பாருங்கள்.. அப்போதும் இது போன்ற உணர்வுகள் சாத்தியம்.. குதர்க்கமாகவோ, கிண்டலாகவோ சொல்லவில்லை. சாத்திய இழைகளை சிந்திக்கிறேன்.
    ஏனெனில், நீங்கள் எடுத்திருக்கும் பாயிண்ட்டுகள் ( தமிழில் சட்டென பதம் கிட்டவில்லை) அப்படிப்பட்டவை. மனித மையக் கொள்கையும், மனித மாற்றுருக்கொள்கையையும் கலந்து கட்டி அடிக்கிறீர்கள். வியக்க வைத்திருக்கிறீர்கள். இதுவும் ஒரு மனித மையச் சிந்தனைதான். சிலிக்கான் பள்ளத்தாக்கின் மீது சிலருக்கு ஒரு காட்டம் இருக்கும். எப்படி, மும்பையிலிருந்து அமெரிக்கா செல்ல விசா கிட்டாதவர்,
    ஊராய்யா அது? என்று பேசுவது போல, அமெரிக்க கம்பெனியில் சில சலுகைகள் கிட்டாத நிலையில் ( டெண்ட்டல் கவர் உட்பட), சிலர் பேசும் பேச்சுகளில் சிலிக்கான் வேலியின் சில செல்வந்தர்கள் மீதான காழ்ப்பு தெரிகிறது.
    வர்த்தக முறை மாற்றத்தின், செல்வம் சேர்க்கும் முறையின் வரலாறு இதில் சிந்திக்கத்தக்கது. 1400-1900 வரையான காலனியாதிக்கத்தில் கம்பெனி, மனிதக் குழுக்கள், நாடுகள் என வர்த்தகத்தில் , சுரண்டலில் பங்குபெற்று அதில் விதிகளை வரையறுத்தன. விதிகள் அனைவருக்கும் தெளிவாகத் தெரிந்தன – எத்தனை அடக்குமுறை, அடிமைப்படுத்தல், சுரண்டலின் வெளிப்பாடாக அவை இருந்தபோதிலும். அன்று இதில் செல்வந்தரானவர்கள் பலர்.
    இன்று சிலிக்கான் வேலியின் செல்வந்தராகும் வழிமுறைகள் நீங்கள் சொன்ன மாதிரி கர்ப்ப ரகஸ்யமாக இருந்து , தனிமனிதத் தீவுகளை உண்டாக்கி விடுகின்றன. இதன் ரகசியம் பலரை திகைக்க வைக்கிறது. புரியாத காரணத்தால், எதை எதிர்த்து போராடுவது? என்பது தெரியாத போராளி மனப்பான்மை, ”குரங்குகளை துணைக்கோடல்”என மாறுகிறது. நல்ல புத்தகமாக இருக்கும்போலத் தோன்றுகிறது. அறிமுகப்படுத்தியதற்கும், இத்தனை தீர்க்கமாக இது குறித்து எழுதியதற்கு நன்றி.
    பி.கு கட்டுரையின் கடைசி வரி வேலி பற்றிச் சொல்வதில் “ வேலியாற் கதுவிடாத் திருநகரெலாம் நடுங்க” கோலியாத் எருசலேம் வந்ததாக வாசித்த வரிகள் நினைவுக்கு வந்தன. வேலியால்தான் இப்போது பல தனிமனிதத் திருநகரங்கள் அமெரிக்காவிலும், உலகளவிலும் காக்கப்படுகின்றன. அவற்றை உண்டாக்கி , அழிக்கும் கோலியாத்தாக குழப்பவாதக் குரங்குகளை முன்னிறுத்துகிறீர்கள். ஒரே வித்தியாசம்.. கோலியாத் , எருசலேமை உண்டாக்கவில்லை.
    மற்றொரு சிந்தனைக்கு தளம் அமைப்பதற்கு நன்றிகள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.