அம்பையின் சிறுகதை-"அம்மா ஒரு கொலை செய்தாள்"

banksy-paints-mural-at-primary-school-over-holidays-136406648289103901-160606184005
வானம் – பிரகாசமாக இருந்தது. துல்லிய நீலம். “கனவா இது?” வினவினார் கிரிதரன்.
சற்றே சிரித்துவைத்தார், தன்ராஜ்.
“குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறைக்காலம் தான், அதற்காக, இலக்கியத்திற்கும் விடுமுறை வேண்டுமா என்ன? நண்பர்கள் ஒருவரையும் காணோமே?” தன் புலம்பலை ஆரம்பித்தார் கிரிதரன்.
இதற்கும் தன்ராஜின் “சற்றே சிரித்து வைத்தல்.”
“சரி,  நான் ஆரம்பிக்கிறேன்.”
பெண்மையின் பல வேடங்களைக் காட்டும் கதை. பெண்மை எனும் இயல்பு பிடிபடவியலா ஒரு பிம்பம் என்பதைக் காட்டும் நவீனப் பெண்ணிய படைப்பு எனச் சொல்லலாம். சொற் சிக்கனமும், படக்காட்சி போல சூழலின் மீது ஏற்றப்பட்ட அர்த்தங்களும் இக்கதையை ஒரு நவீனத்துவப் படைப்பாக்குகிறது.
பருவத்தை அடைவது என்பது பெண்ணுக்கு இயற்கையான ஒரு செயல்பாடாக இருந்தாலும் உளவியல் ரீதியில் அது பெண்களின் மீது பெரும் சுமையாக மாறுகிறது. எத்தனை நெருக்கமான குடும்ப அமைப்பாக இருந்தாலும் பெண் குழந்தைக்கும் தாய்க்கும் இருக்கும் உணர்வு ரீதியான நெருக்கம் உயிரியலையும் தாண்டிய ஒரு அம்சம். பருவத்தை அடையும் பெண்ணுக்கு தனது உடம்பில் நிகழும் மாற்றங்கள் அதிர்ச்சியைத் தருபவை என்பதையும் தாண்டி அது உளவியலில் உண்டாக்கும் தாக்கம் அபரிதமானது. சமூக அமைப்பில் எவ்விதமான உறவும் இச்சூழலுக்கு பெண்ணைத் தயார் செய்வதில்லை – அம்மாவைத் தவிர, எனும் நுட்பமான உளவியலைத் தொட முயன்ற படைப்பு இது.
அதே சமயம் பருவம் எய்துதல் என்பது ஒரு பெரிய பாரமும் கூட. பருவமடையும் பெண் தனது உடல் ரீதியான மாற்றங்களுக்குத் தயாராவதற்கு முன்னர் உணர்வு ரீதியாக புது உலகை சந்திக்கத் தயாராகிறாள். இவற்றுக்கு தக்கவாறு பெண்ணைத் தயார் செய்வதும் அம்மாவின் கடமையாகிறது. பல குடும்பங்களில் வயதுக்கு வந்த பெண்களே தங்களது தமக்கைகளுக்கு அம்மாவாக மாறுவது போல இந்த கதையிலும் பெண் மீதான எதிர்பார்ப்பும், அவளது பொறுப்புகளும் அதீத அழுத்தத்தை உண்டாக்குகின்றன.
பெண் தெய்வம் போல, ஆதுரமும் சீற்றமும் ஒருங்கே கொண்டவள் அம்மா. அவை அவள் எடுக்கும் பல பாவனைகளில் சில என்பதை உணர்வதற்கு பிள்ளைகளுக்கு ஒரு முதிர்ச்சி தேவைப்படுகிறது. சொல்லப்போனால் இத்தனை முகங்களை ஏற்றுக்கொண்டும் சமூகத்தின் தேவைக்காக அவற்றையும் நிராகரிப்பதும், அதீத அன்பினால் வெறுப்பு பாவனை கொள்வதும் தீவிரமாக இருப்பதாலேயே பெண்ணிய உளவியல் ஆழமானது என்கிறார்களோ?
பருவம் என்றால் என்ன எனப் பெண் கேட்கும்போது “நீ இப்படியே இருடீயம்மா பாவடைய அலைய விட்டுண்டு ஓடி ஆடிண்டு” எனச் சொல்பவள் தனது பெண் வயதுக்கு வந்ததும், “உனக்கு இந்த இழவுக்கு என்னடீ அவசரம்? இதுவேற இனிமே ஒரு பாரம்” எனவும் சொல்ல முடிகிறது. சொல்லப்போனால், ஓடி ஆடுவதும் பாவாடையை அலைய விட்டுத் திரிவதும் இயல்பான விஷயங்கள், அவற்றை செய்யக்கூடாது எனத் தடைவிதிக்கும் சமூக விதிகள் தான் அவளுக்கு உண்மையான பாரம்.
நவீன வாழ்வு முறை வந்தடைந்த வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாதபடி சமூக எதிர்பார்ப்புகள் அமைந்திருக்கின்றன. வயது வந்த பெண் விளையாடக்கூடாது என்றோ, மரத்தில் ஏறக்கூடாது எனவோ தடை போடுவது நடக்கிறது. போலவே பெண்ணுக்கு கறுப்பு நிறம் சத்ரு எனும் சமூக நிலைபாடும். இவையனைத்தும் காலனியவாத சிந்தனையும் நவீன வாழ்வில் முறையும் நமக்களித்தவை. முற்காலத்தில் வேறுவகையான தடை (கற்பு, ஒழுக்கம், காமம் ) சார்ந்தவை இருந்திருக்கும். எக்காலத்திலும் ஏதோ ஒரு எதிர்பார்ப்பை பெண் மீது நாம் திணித்துக்கொண்டே இருக்கிறோம். ஒரு பலிகடா போல. ஒருவிதமாக அழுத்தும் விதமாகவே பெண்மையை நாம் கைகொள்கிறோம். மீறி எழுந்தால் காளியின் ரெளத்திர உருவாக மாறிவிடுவாள் என்பதாலோ? பெண்மையின், பெண் உறுப்புகள் துறப்பும் என்றுமே ஒரு உக்கிரமான எழுச்சிக்கு குறியீடாக எக்காலமும் அமைந்திருக்கிறது.
பல சமயங்களில் இதை உணரும் பெண்கள் சமூகத்தை எதிர்க்க முடியாமல் அதீத அன்பையும் வலுக்கட்டாயமாக வெறுப்பாக மாற்றிக்கொள்கிறார்கள். இக்கதையில் நாம் அறிந்த அம்மா, அப்பெண் எதிர்பார்ப்பது போல ராணி போல அவளது பருவமடைந்த செய்தியை எதிர்கொள்வாள் என்றோ பெண்ணுக்கு ஒரே ஆதரவாக இருப்பாள் என்றோ நாம் நினைப்பதுக்கு மாற்றாக அவள் என்னடீ அவசரம் எனத் திட்டுகிறாள். பருவம் அடைந்த பெண் அம்மாவைப் பற்றி அறியாத இன்னொரு பக்கம் இது. சமூகம் கூட்டாக ஹதம் செய்யும் மெல்லுணர்வுகளைத் தாங்கி இருக்க வேண்டிய அம்மா கூட அதை நெருப்பில் அவிசாகப் போடும் நேரமும் உண்டு. அவள் செய்யும் கொலை போல.இதற்கும் ஒரு சமூகத்திணிப்பு தான் காரணம்.
இதன் தீவிரத்தை உணர்ந்தாலும் நாமும் இப்படிப்பட்ட கொலையில் பங்கு கொள்பவர்களே”
தன்ராஜ் அசந்துவிட்டார்.  சற்று நேரத்திற்குப் பின்,
“சரி,  என்னுடைய பார்வையில் சொல்கிறேன்:
குழந்தைகளின் நுண்ணுணர்வுகளை புண்படுத்துதல் என்பது இந்திய சூழலில் அன்றாடம் நடந்து கொண்டிருக்கும் சங்கதி. இந்த ரத்தமற்ற கொலைகளை குழந்தைக்கு நெருக்கமானவர்களே அதிகமும் செய்கின்றனர். தாங்கள் செய்வதை அவர்கள் உணர்வது கூட இல்லை என்பதே ஒரு பெரும் சோகம்.
அப்படி ஒரு கொலையை ஒரு பாசமிகு அன்னை சில வார்த்தைகளில் செய்து முடித்து விடுவதை அக்குழந்தையின் (சிறுமியின்) பார்வையில் விவரிப்பதே இந்த கதை.
இந்தியாவில் நான் வளர்ந்த காலகட்டத்தின் குழந்தைகள், தங்கள் ஆளுமையில், ஈரம் குறையாமல் இப்படிப்பட்ட நுண்ணுர்வு பலிகளின் குருதி தடங்களை வளர்ந்த பின்னும் ஏந்தி கொண்டிருப்பதை இப்போதும் காண்கிறேன்.
எனக்கே இப்படிப்பட்ட ஒரு அனுபவம் உண்டு. இரண்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன் அப்போது. ஏதோ விழாவிற்கு நடனமாட வகுப்பாசிரியர் பெயர் சேர்த்து கொண்டிருந்தார். உற்சாகமாக துள்ளி குதித்து முன்னால் ஓடி “me too.. me too” என்று கை தூக்கி கத்திக் கொண்டிருந்தேன்.
டீச்சரம்மா எளக்காரமாய் என்னை ஒரு பார்வை பார்த்து விட்டு , “உனக்கெல்லாம் எதுக்கு டான்ஸ், போய் உக்காரு” என்று சொல்லிவிட்டு, கையே தூக்காத நாலைந்து சேட்டு பசங்களின் பெயரை எழுதி பணியாளரிடம் கொடுத்தனுப்பினார். அன்று உள்ளே ஏதோ ஒன்று உடைந்தது, அம்பையின் மொழியில் கதறக் கதற ஒரு கொலை. ஒரு பின் குறிப்பு, நான் முதுகலை படித்து முடிக்கும் வரை எந்த பள்ளி, கல்லூரி கலை நிகழ்ச்சியிலும் கழுத்தில் கத்தியே வைத்து கூப்பிட்டாலும் கலந்து கொண்டதில்லை, பார்வையாளனாகக் கூட. அதிகாரத்தில் இருப்பவர்களின் அற நிலைபாடுகளில் அசைக்கவே முடியாத அவ நம்பிக்கை எனக்கு உண்டு, ஒரு மூட நம்பிக்கை அளவுக்கு. இதுவும் கூட இந்த அனுபவத்தின் பாதிப்பால் என் ஆளுமைக்குள் வந்த ஒரு அம்சம் என்பது என் அனுமானம்.
பொருக்கு தட்டிவிட்ட ரணத்தை கீறிவிட்டது போல் என்னை இக்கதை மிகவும் படுத்திவிட்டது. இதிலிருந்து வெளிவர எனக்கு வடிவேலுவும், மாண்ட்டி பைத்தானும் பல இரவுகள் தேவை பட்டனர், அவர்களுக்கு என் நன்றி!
இலக்கியம் சில சமயங்களில் சிரங்கை சொறிந்து கொள்வது போன்ற அனுபவமாகி விடுவதுண்டு.
எனக்கு இக்கதை அப்படிப்பட்ட அனுபவம், படிக்கும் போது சுகம், படித்த பின் பெரும் ரணம்.”
கிரிதரன், தன்ராஜ் இருவரும் தத்தம் உலகங்களுக்குள் உலாத்திக்கொண்டிருந்தனர்…
 

One Reply to “அம்பையின் சிறுகதை-"அம்மா ஒரு கொலை செய்தாள்"”

  1. என் வாசிப்பில் அம்பையின் சிறந்த கதை இதுதான். தான் தன் வாழ்விலும் பட்ட கனங்களை தன் மகளுக்கும் அப்படியே தொடரும் அவலத்தின் வலிதான் அவளுடைய வார்த்தைகள். அவள் செய்யும் அந்த கொலையில் தானும் கொஞ்சமாக சாகிறாள்தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.