ஃப்ரீட்ரிஷ் நீட்சா, இரும்புக்கரங்கொண்ட மாவீரன்

ஹ்யூகோ ட்ரோஷோன் எழுதியநீட்சாவின் பெரும் அரசியல்புத்தகத்திற்கான மதிப்புரை.
(இங்கிலிஷில்) எழுதியவர் : காவின் ஜேக்கப்சன்: தமிழாக்கம்: சத்திய நாராயணன்
காவின் ஜேக்கப்சன் ஒரு எழுத்தாளர், புத்தக மதிப்புரையாளர்.

friedrich_nietzsche

எலிஸபெத் ஃபார்ஸ்டர்-நீட்சா, 1893ல் தன் அம்மாவின் ஊரும், ஜெர்மனியில் உள்ளதுமான நௌவ்ம்புவர்க்கிற்குத் திரும்பினார். முன்னதாக, அவர் தன் கணவருடன் பாராகுவாய் (Paraguay) நாட்டில் வாழ்ந்திருந்தார். அவருடைய கணவர் பெர்ன்ஹார்ட் ஃபார்ஸ்டர், (ஜெர்மன்) தேசியவாதத்தையும், யூத எதிர்ப்பு அரசியலையும் ஆதரித்தவர். ‘மனிதகுலத்தின் சுத்திகரிப்புக்காகவும், மறுபிறப்புக்காகவும்’ அங்கே ஒரு ஆர்யன் காலனியை நடத்திவந்தார். எலிஸபெத்தின் சகோதரர் ஃப்ரீட்ரிஷ் நீட்சா, அவள் கணவரின் யூத எதிர்ப்பைக் கடுமையாகக் கண்டித்தார். அவள் தன் கணவருடன் இணைந்து செயல்பட தென்னமெரிக்கா செல்லும் முடிவையும் எதிர்த்தார். எப்படியுமே, அந்தக்காலனி தோல்வியடைந்தது. நோயினாலும், பயிர்களில் நல்ல மகசூல் இன்மையாலும், அடையாளக் குழுச்சண்டைகளாலும் அந்தக் காலனி இரண்டு வருடங்களில் முடிவுக்கு வந்தது. 1889ல் பெர்ன்ஹார்ட் ஃபார்ஸ்டர்தற்கொலை செய்துகொண்டார். கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் நீட்சாவுக்கும் மனநோய் முற்றி அவர் அறுதியாகச் சுயபுத்தியை இழக்கும் நிலைக்கு வந்திருந்தார். நீட்சாவையும், நீட்சாவின் (சிந்தனைப்) பாரம்பரியத்தையும் பராமரிக்க எலிஸபெத் திரும்பி வந்தார்.
நீட்சாவின் முதற் புத்தகமான த பர்த் ஆஃப் ட்ராஜெடி (The Birth of Tragedy), 1872ல் அவர் பாஸல் பல்கலையில் பேராசிரியராக இருந்தபோது வெளிவந்து, குறைவான கவனிப்பையே பெற்றது. 1890களுக்குப் பின்பே யூரோப்பில் நீட்சாவின் எழுத்துகள் பிரபலமடைந்தன. எலிஸபெத் விரைவிலேயே நீட்சாவின் எழுத்துப் பாரம்பரியத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்தார். எலிஸபெத், சிறிது சிறிதாக நீட்சாவின் எழுத்துகளைத் ‘திருத்தி’ தன்னுடைய ஃபாசிஸத் திட்டங்களுக்கு உகந்த கருவியாக நீட்சாவை உருமாற்றினார். அவருடைய நோட்டுப்புத்தகங்களை வெட்டியும் திருத்தியும், கருத்துக்களை மாற்றி எழுதியும், இல்லாத மேற்கோள்களைத் தானே உருவாக்கியும், நீட்சாவை ஜெர்மன் தேசியவாதக்கருத்து எதிர்ப்பாள நிலையிலிருந்து ஆதரவாளராகவும், தி ஆண்டிக்ரைஸ்ட் (The Antichrist) எழுதியவரை கிருஸ்தவப் புனித நூலின் நம்பிக்கையாளராகவும், யூத எதிர்ப்பரசியலைச் சாடியிருந்தவரைக் கடும் வெறுப்புள்ள யூத எதிர்ப்பாளராகவும் (தோற்றம் தருபவராக) உரு மாற்றினார். 1900ல் இறந்த நீட்சா, தன் சகோதரியிடம் ‘என் புதைகுழிக்கு அருகில், ஒரு பாதிரியோ, வேறு யாரேனுமோ, நான் எதிர்ப்பை வழங்க முடியாத அந்நிலையில், என் கருத்துகளைத் திரித்துப் பொய் சொல்லாமல் பார்த்துக்கொள்,’ என்று சொல்லி இருந்தார். தேசியவாத சோஷியலிசத்தின் துருவ நட்சத்திரமாகத் தன்னை மாற்றிவிட்ட சகோதரியின் துரோகத்தை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை.
நாஜி ஆதரவாளராகத் தோற்றுவிக்கப்பட்ட இந்தத் தொடர்பிலிருந்து நீட்சாவை மீட்டெடுக்க 1950லிருந்தே அறிஞர்கள் முயன்றுகொண்டு இருக்கின்றனர். வால்டர் காஃப்மனின் ‘நீட்சா: தத்துவஞானி, மனோதத்துவர், சாத்தான்’ என்ற நூலில் (Walter Kaufmann, Nietzsche: Philosopher, Psychologist, Antichrist 1950) முதன்முறையாக நீட்சா மனிதநேயம் உள்ளவராக, இருபதாம் நூற்றாண்டின் இருத்தலியத்தின் ஒரு மூதாதையாகக் காண்பிக்கப்படுவதைப் பார்க்கிறோம். (காஃப்மனின் பார்வையில்) நீட்சாவின் சிந்தனை ட்யூடானிக் இனத்தின் (1) பெருவெற்றியை நோக்கமாகக் கொள்ளவில்லை, மாறாக, ட்வைலைட் ஆஃப் தி ஐடல்ஸ் (Twilight of the Idols) புத்தகத்தில் நீட்சா எழுதுவது போல, அரசியலையே எதிர்க்கும் ஓர் உயரிய பண்பாட்டை மீண்டும் உயிர்ப்பிப்பதைத்தான் நோக்கமாகக் கொண்டிருந்தது.
இதில் என்ன பிரச்சினை என்றால், பல வருடங்களாக வெளியிலிருந்து சுமத்தப்பட்டு, உறைந்தும் போய் விட்ட பல வக்கரிப்புகளை நீட்சாவின் மீதிருந்து பிரித்து அகற்றும் இந்த முயற்சியில் ஈடுபட்ட காஃப்மனும், ஏனையோரும் நீட்சாவுக்கு அரசியல் மீது ஈடுபாடு இருந்ததையே மறுப்பவர்களாக ஆகி இருந்தனர்.  மாறாக, நீட்சாவிடம் அரசியல் கருத்துகளை மறுபடி இனம் காட்டி, நீட்சா முறைப்படுத்தப்பட்ட ஓர் அரசியல் கோட்பாட்டைக் கொண்டிருந்தார் என்பதைக் காட்டுவதைத் தம் பணியாக ஹ்யூகோ ட்ரோஷான் மேற்கொண்டிருக்கிறார். அதன் பலனாக ஆழமானதும், அறிவுத் தளத்தில் புதிப்பித்தலும் கொண்டு, நீட்சா பற்றிச் சமீப வருடங்களில் எழுதப்பட்ட மிக மிக முக்கியமான புத்தகமாகவும் இது அமைகிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் யூரோப்பின் பின்புலத்திலேயே -ஜனநாயகம் என்பதன் எதிர்காலம், அரசு மேலும் பன்னாட்டு உறவுகள் ஆகியவற்றின் பங்களிப்பு போன்றவற்றைக் குறித்த- நீட்சாவின் அரசியல் சிந்தனையை நாம் நன்கு புரிந்து கொள்ள முடியும் என்பதால், ட்ரோஷானின் ஆய்வும் அந்தக் களத்திலேயே நடக்கிறது.  நீட்சாவின் மன நலம் நன்றாக இருந்த காலம் அவர் காலத்தில் நடந்த முக்கியமான அரசியல் நிகழ்வுகளோடு பிணைந்திருந்தது. அவர் ஃப்ரான்ஸுக்கும் ப்ரஷ்யாவுக்கும் இடையே நடந்த போரில் மருத்துவ உதவியாளராக பணியாற்றி இருந்தார். ஜெர்மனி ஓர் இணைப்பாக உருவானதைக் கண்ணுற்றார், நவீன ஜனநாயக அமைப்பின் குணங்களை: அதாவது, கட்சிகளிடையே போட்டி, ரகசிய வாக்களிப்பு முறை, வாக்களித்தல் மீது ஊடகங்களின் தாக்கம் ஆகியவற்றை நேரிடையான அனுபவமாகப் பெற்றார்.  மத்திய ஆசியாவில் கோலோச்ச ரஷ்யாவும், பிரிட்டனும் போட்டியிட்ட ‘மாபெரும் விளையாட்டு’ (2) நிகழ்ந்த போது அவர் வாழ்ந்திருந்தார்.  (அரசராக இருந்த) இரண்டாம் வில்ஹெம்மிடம், தான் பதவியிலிருந்து விலக (அப்போது ஜெர்மன் அரசின் அதிபராக இருந்த) பிஸ்மார்க் ஒப்புக் கொண்ட வருடத்தில்தான் நீட்சாவுக்கு புத்திபேதலிப்பு நிகழ்ந்தது.
நீட்சா அளிக்கும் “நவீன சமூகம் பற்றிய தெளிவு”(3)  என்பதை இந்த நிகழ்வுகளுக்கு மறுவினையாகவே ட்ரோஷான் வரைகிறார்.  கிரேக்கர்களால் ஊக்குவிக்கப்பட்டு- குறிப்பாக பிளாட்டோவாலும், புது வகை அரசு ஒன்றைச் சட்டங்கள் மூலம் உருவாக்கவும், அதைச் சாதிக்கத் தேவையான பயிற்சியை மனிதருக்குக் கொடுக்கவும் அவர் மேற்கொண்ட சலியா முயற்சியாலும் உந்தப்பட்டு-  தத்துவத்தையும், உன்னதமான கலையையும் படைக்க வல்ல ஆரோக்கியமான பண்பாடு ஒன்றை நிறுவ நீட்சா விரும்பினார். இதற்கு அடிமை முறை அவசியமாக இருக்கும் என்பதில் நீட்சாவுக்கு உறுதியான நம்பிக்கை இருந்தது. (இப்பார்வையாலேயே பிற்பாடு ரிச்சர்ட் வாக்னருடன் நீட்சாவுக்கிருந்த நட்பு முறிந்தது.) ஏனெனில் கலைஞர்களெனும் சமூகக் குழுவினர், “எண்ணிக்கையில் மிகச் சிலரே ஆனாலும், ஒலிம்பியச் சிகரமளவு உயர்ந்த மனிதர்களாக” இருந்து, கலையைப் படைப்பதிலேயே தம் கவனத்தைக் குவிக்க வழி செய்யும் வகையில் அன்றாட வாழ்வின் சலிப்பூட்டும் உழைப்பிலிருந்து விடுவிக்கப்படுவதற்கு, “அடிமை முறை என்பது பண்பாட்டின் அடிப்படைத் தேவையாக இருக்கிறது என்பது குரூரமாகத் தொனிக்கும் ஓர் உண்மை” என்பதை அவர் ஏற்றுக் கொண்டார்.
அடிமைமுறை குறித்து, வாக்னருடன் அவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால், அரசின் தோற்றுவாய் பற்றியும், அது மக்கி மடிவதையும் நீட்சா விளக்க வேண்டியதாயிற்று. அதன் தன்மையிலேயே இயற்கை என்பதில் “எல்லாம் எல்லாவற்றுக்கும் எதிரானது” என்று ஹாப்ஸ் ((4) கருதியதைப் போலவே, நீட்சாவும் அக்கருத்தில் தெளிவாக இருந்தார்.  ஆனால், ஒப்பந்தங்களின் மூலம் அரசு என்பது உருவாகிறது என்று ஹாப்ஸ் கற்பனை செய்திருக்கையில், நீட்சாவோ, ‘திடீரென்றும், வன்முறை மூலமும், ரத்தக் களரியாலும்” ஒரு மக்கள் சமுதாயத்தின் மீது தன் கட்டுப்பாட்டைப் பெற்று, “இரும்புக் கரம் கொண்டு ஆண்டு,” ஓர் அடுக்குமுறைச் சமூக அமைப்புக்குள் அம்மக்களைத் திணிப்பதில் வெற்றி பெறுவோரிடமிருந்தே அரசு தோன்றுகிறது என்று கருதினார்.  பிறகு நீட்சா அத்தகைய சமூகத்தின் பரிணாம வளர்ச்சியை விவரிக்கிறார். அதனுள்ளே கிட்டும் வெளியில் பண்பாடு செழித்து வளர்ந்து நவீன கலாச்சார மையமான நகரம் கிளைத்தது, அங்கு கலாச்சாரம் என்பது அதனளவிலேயே பயன்பாடுள்ளதாகவும் ஆனது.  இவ்வாறு திடீரென ஓர் அரசமைப்பு உருவானாலும், அதன் நசிவு மெதுவாகவே நடந்தது. இந்த நசிவோடுதான் ‘கடவுளின் மரணம்’ என்ற நீட்சாவின் அவப்பெயர் பெற்ற சொல்லாக்கம் தொடர்பு கொண்டது: சமூகங்கள் தம்மைத் தாமே நிலை நிறுத்திக் கொள்ளப் பயன்படுத்தும் ஒழுக்கத்துக்கு கிருஸ்தவ மதத்தின் ‘கடவுள்’தான் அடிப்படை என்பது எதார்த்தமாக ஏற்கப்படாமல் போகவும், அரசமைப்பு சிதிலமாகும் நிலை எழுந்தது, என்பது நீட்சாவின் வாதம்.
சிறப்பான புலனாய்வுத் திறனோடு ட்ரோஷான், பல்வேறு மூலாதாரங்கள் வழியே நீட்சாவின் வாத நுணுக்கங்களை ஆராய்ந்தாலும், ஒருபோதும் அனைத்தையும் இணைக்கும் விவரணையைத் தொலைப்பதில்லை. (இப்படித் தொலைப்பது அரசியல் சிந்தனையின் வரலாற்றாளர்களுக்கு அடிக்கடி நேரும் விபத்து.)
ஏற்பதற்குத் தயக்கம் கொள்ள வைக்கும் நீட்சாவின் சில பார்வைகளையும் விவரிக்காமல் அவர் தாண்டிவிடவில்லை. அடிமைமுறை பற்றிய நீட்சாவின் கருத்துகள் கொடுமையானவை என்பது ஒரு புறம் இருக்கையில், இனத்தூய்மை வாதம் குறித்து அவர் கொண்டிருந்த கருத்துகளும், ஜனநாயகம் உருவாகக் காரணிகள் என உடற்கூறுகளின் அடிப்படையில் அவர் முன்வைக்கும் கருத்துகளும் (ஆள்வோராக இருக்கும் “வெற்றி பெற்ற ஆரிய இனத்தின்” விழுமியங்களை வென்ற அடிமைகளின் விழுமியங்களாக- கருநிறம் கொண்ட, அதிலும் குறிப்பாகக் கருநிற முடிகொண்ட மனிதர்களின் வெற்றியாக- ஜனநாயகத்தை அவர் பார்க்கிறார்) அருவருப்பான கருத்தாக்கங்கள். ஆனால் இவற்றையெல்லாம் ட்ரோஷோன் நியாயப்படுத்த முனையவில்லை, மாறாக பத்தொன்பதாம் நூற்றாண்டில் இனப் பகுப்புகள் குறித்த கோட்பாடுகளும், மற்றும் அவற்றின் அடிப்படையில் நடந்த ஆய்வுகளும் பரவலாக இருந்ததை நினைவுறுத்துகிறார். நீட்சா இவற்றிலிருந்து தம் கருத்துகளை உருவாக்காமல் இருந்தால் அதுதான் வினோதமாக இருந்திருக்கும்.
அவருடைய இருண்ட கருத்துகள் எப்படி இருந்தாலும், நீட்சாவின் தரிசனங்கள் நம் இன்றைய அரசியலோடு உரையாடுகின்றன. அவர் அரசு என்பதே தனியார்மயமாகும் என்பதை எதிர்பார்த்தார்.  அதில் தனியார் நிறுவனங்கள், அரசின் வேலைகளைச் செய்யும் (Privatgesellschaften) என்கிறார். இவற்றில் “எதெல்லாம் முன்பு அரசின் கடமை என்று கருதப்பட்டனவோ அவற்றை மாற்றமில்லாமல் நினைவுபடுத்தும்’ சிலவற்றைக் கூட தனியார் நிறுவனங்கள் செய்யும், அதாவது தனிநபரை தனிநபரிடமிருத்து பாதுகாப்பது என்ற முக்கியக்கடமையையும் அவை செய்யும். அதே போல் நீட்சா, எவ்வாறு ஜனநாயக அமைப்புகள் பிரபுத்துவத்தைப் பிறப்பிக்கும் என்றும் எவ்வாறு ‘மந்தை ஒழுக்கம்’, பெரும்பான்மைவாதம், அரசின் எந்த வடிவையும் எதிர்க்கும் வாதம் ஆகியவற்றின் பிணைக்கைதியாகப் பிடிக்கப்படும் என்றும் விளக்குகிறார். ஜனநாயகத்தின் வக்கிர குணமான, கோலோச்சும் எதையுமோ, அல்லது கோலோச்ச விரும்பும் எதையுமோ எதிர்க்கும் பண்பு இதற்குக் காரணம் என்றும் காண்கிறார்.
ஊதியத்துக்குப் பணி செய்வதை ஆராயும் நீட்சா, பணியாளர்களுக்கும், மேலாளர்களுக்குமிடையே குரோதம் கூடிக் கொண்டு போகும் என்றும், பொது நிறுவனங்களின் மீதுள்ள நம்பிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே போகும் என்றும் அறிவிக்கிறார்.
தேசியவாதம், இனவாதம், குறும்புல அறிவுச் சார்பு, அரசியலில் சிறு குழுமைய நோக்கு என்ற பல நோய்ப்பட்ட அணுகல்களை எப்படி ஆகிருதி கொண்ட அரசியல் தலைவர்கள் தூண்டி, கனலை விசிறி விடுவார்கள் என்பதையும் நீட்சா விவரிக்கிறார். இவையே இன்று யூரோப்பிய, மேலும் அமெரிக்க சமூகங்களைப் பீடித்திருக்கிற நோய்கள் என்பதை நாம் கவனிக்கிறோம். தான் என்ன சொல்கிறோம் என்பதை அறிந்துதான் நீட்சா சொன்னார்: பிஸ்மார்க்கால் அன்று நடத்தப்பட்ட அதிகார நாட்டமுள்ள அரசியல், இரத்தம் (போர்) மேலும் இரும்பு (தொழில்நுட்பம்) ஆகியவற்றைக் கொண்டாடிய அரசியல், மிகவும் ‘கீழ்மையான அரசியல்’, நாடுகளையும் மக்களையும் பிரித்த அரசியல். மாறாக, நீட்சாவின் ‘மேன்மையான அரசியலானது’, கலாச்சாரத்தில் ஆகிருதி இருப்பவர்களால் வழிநடத்தப்பட்ட யூரோப்பிய ஒன்றிணைவைக் கற்பனையால் முன்வைத்தது. இவர்களை ‘நல்ல யூரோப்பியர்கள்’ என அவர் குறிப்பிட்டார்.  இவர்கள் ப்ரஷ்ய ராணுவ அதிகாரிகளும், யூதப் பெருநிதிக்கிழார்களும் கலப்பதால் உருவாவார்கள் என்பது நீட்சாவின் கணிப்பு. இந்த கண்டம் தழுவிய இணைப்பு, பிரிட்டனுக்கும், ரஷ்யாவுக்கும் நல்ல மாற்றாக அமையும் என்றார். அது மட்டுமல்லாமல், ‘இந்தப் புதிய யூரோப் அளாவிய கலாச்சாரம் உலகக் கலாச்சாரத்திற்கே தலைமை வகித்து முன்னகர்த்திச் செல்ல சிறப்பான அழைப்பு பெறும்’ என்று நீட்ஷா கருதியதாக ட்ரோஷோன் குறிப்பிடுகிறார்.
பிரெக்ஸிட் என்றழைக்கப்படும், ப்ருட்டன் யூரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவதற்கான வாக்களிப்பு, மீண்டும் நம்மை கீழ்த்தர அரசியலான தேசியவாதம், உடைந்த யூரோப் போன்றவற்றுக்கும் இட்டுச்செல்லக்கூடிய இக்காலகட்டத்தில் நீட்சாவின் எழுத்துகள் முன்னெப்போதையும் விட முக்கியத்துவம் பெறுகின்றன. ஆகவே, இப்புத்தகம் மிகச்சரியானதொரு நேரத்தில் வெளிவந்திருக்கிறது.
நம்மிடையே அண்டை நில மக்களோடு மேலும் ஒருங்கிணைப்பையும், அமைதியான கூட்டுறவையும் விரும்புவோர் -வற்றி வரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே- விரக்தி எழுந்தாலும் நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொள்ள முயல்கின்றனர். இதில் நாமும், ‘குறைப் பார்வை கொண்ட, அவசரக்குடுக்கை அரசியல்வாதிகளும், தேசியவாதப் பைத்தியமும் முன்பு தூண்டி விட்ட, இன்று இன்னும் தூண்டி விட்டுக் கொண்டிருக்கும் ஆரோக்கியமற்ற மன விலகலும் மக்களிடையே நிலவினாலும் … யூரோப் ஒன்றாகவே இருக்கவே விரும்புகிறது’(5) என்று கனவு கண்ட நீட்சாவைப்போலவே உள்ளோம்.
***
கட்டுரையின் மூல வடிவை இங்கே காணலாம்:
http://www.newstatesman.com/culture/books/2016/07/friedrich-nietzsche-conqueror-iron-hand
பின் குறிப்புகள்:
1) நார்டிக் இன உட்பிரிவாக  வெள்ளையினத்தின் ஒரு பிரிவாக முன்வைக்கப்பட்ட கருத்து.
2) The Great Game’ :https://en.wikipedia.org/wiki/The_Great_Game 
3) பெர்னாட் வில்லியம்ஸ், Shame and Necessity எனும் நூலில் ஒரு தெளிவான அரசியல் பார்வைக்கு நான்கு மூலக்கூறுகள் இருக்கவேண்டும் என்று கருதுகிறார் ஒன்று: “ethical and psychological insights,” இரண்டு: நவீன சமூகம் குறித்த தெளிவான விளக்கம் (“an intelligible account of modern society”) முன்று ‘the ability to relate these insights to this account of society, நான்கு “a coherent set of opinions about the ways in which power should be exercised in modern societies, with what limitations and to what ends.” இவற்றில் நவீன சமூகப்புரிதல் குறித்து ஆழமான பார்வை நீட்சாவுக்கு இல்லை ஆகையால் அவருக்கு அரசியல் குறித்த நல்ல புரிதல் கிடையாது என்று வாதிடுகிறார். இதைப்போன்றே கீத் ஆன்சல் பியர்சனும் நீட்சாவுக்கு அரசியல் பார்வை இல்லை என்று ஏற்றுக்கொள்கிறார்.
4) மாம்ஸ்பரியின் தாமஸ் ஹாப்ஸ் புகழ் பெற்ற தத்துவாளர். அரசியல் தத்துவாளர்களில் முதன்மையானவர் என்று போற்றப்படுபவர்.
5) Beyond Good and Evil: Prelude to a Philosophy of the Future -Friedrich Nietzsche, Walter Kaufmann
தொடர்புள்ள சுட்டிகள்:
http://www.sparknotes.com/philosophy/genealogyofmorals/context.html
http://press.princeton.edu/chapters/i10756.pdf
Tamsin Shaw: Nietzsche’s Political Skepticism http://press.princeton.edu/chapters/i8577.pdf
Walter Kaufmann’s Nietzsche: Philosopher, Psychologist, Antichrist (1950)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.