முகப்பு » உயிரியல், கணிதவியல், மகரந்தம்

மகரந்தம்


மூன்றாம் உலகப்போர்

the-dark-net-october-2016

ஹாக்கர்கள் எனப்படும் கொந்தர்கள் யார் – அடுத்தவர்களின் கணினியை ஆக்கிரமித்து, மற்றவர்களின் கணினிக்குள் உட்புகுந்து, உங்களின் அந்தரங்கங்களை அறிந்து கொள்ள வல்லவர்கள். எந்த நிறுவனமும் கொந்தர்களின் தாக்குதலுக்கு விதிவிலக்கு அல்ல. பல ட்ரில்லியன் புரட்டும் பன்னாட்டு நிறுவனம் ஆகட்டும். தெருமுக்கில் குட்டி ஐ-பேட் கொண்டு கணக்கெழுதும் நாடார் கடை ஆகட்டும். இவர்கள் உள்ளே நுழைந்து வேடிக்கை பார்க்கிறார்கள். சட்டென்று கிடைத்ததை உருவுகிறார்கள். திருடின ஜோரோடு, அந்த சொத்தை பிட் காயினாகவோ, ஸ்விஸ் வங்கி கணக்காகவோ மாற்றிக் கொண்டு, அடுத்த கொள்ளைக்கு சென்றுவிடுகிறார்கள். ஒரு நாட்டிற்கும் இன்னொரு நாட்டிற்கும் சிண்டு முடிவது, ஒருவரின் ரகசியத்தை இன்னொருவருக்கு விற்பது, போதைப் பொருளை பரிமாற்றுவது என்று பஞ்சமகா பாதகங்களும் இப்போது வலையுலகில் நடைபெறுவதை விவரிக்கும் கட்டுரையை இங்கே வாசிக்கலாம்.

http://www.vanityfair.com/news/2016/09/welcome-to-the-dark-net


பாட்டி வைத்தியம்

herbal_ancient_medicine_antibiotics_drugs_plants_mom_grandma_nyt

இன்றைய காலகட்டத்தில் நோய்க் கிருமிகளை கட்டுப்படுத்தும் ஆன்டிபயாடிக் உட்கொண்டாலும் உங்கள் உடம்பை சாதாரணமாக்க முடிவதில்லை. நுண்ணியிரிகள் அவற்றை எளிமையாக எதிர்கொண்டு, தாக்குப்பிடிக்கக் கற்றுக் கொண்டுவிட்டன. நோய் எதிர்ப்புத் திறன் இல்லாமல் வாழும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த மாதிரி சமயத்தில்தான் மக்கள் தாவரத்தொடர்பியில் விஞ்ஞானியைக் குறித்த இந்தக் கட்டுரை வெளியாகிறது. இவர் இயற்கையை நாடுகிறார். பழங்கால வைத்திய முறைகளை அறிவியல் பூர்வமாக ஆராய்கிறார். வெறும் வேதியியல் கொண்டு, இரசாயனவியல் கலவைகளைக் கண்டுபிடிப்பதை விட தொன்றுதொட்ட பழக்கங்களை வைத்து நோய்களை குணமாக்கும் வைத்தியத்தை விளக்குகிறார்

http://www.nytimes.com/2016/09/18/magazine/could-ancient-remedies-hold-the-answer-to-the-looming-antibiotics-crisis.html


ஆறு லட்சம் பிரதிகள் விற்ற ஸ்வீடிஷ் புத்தகம்

c40280_a-man-called-ove

ஜனத்தொகையிலும் சரி, நிலப்பரப்பிலும் சரி ஸ்காண்டிநேவிய நாடுகள் எனப்படுவன சிறியவை. அளவு நம் மனதில் பதிவதற்காகக் குத்து மதிப்பாக எண்களைக் கவனிப்போம். ஸ்காண்டிநேவிய நாடுகள் 5. ஸ்வீடன், நார்வே, ஃபின்லாந்து, ஐஸ்லாந்து, டென்மார்க் ஆகியன. இதில் டென்மார்க் இன்னும் முன்னாள் காலனியான க்ரீன்லாந்தைத் தன் ஆட்சியின் கீழ் வைத்திருக்கிறது. படிப்படியாக க்ரீன்லாந்து சுதந்திரம் பெற வேண்டும் என்று திட்டம். இங்கு கணக்கில் க்ரீன்லாந்தைச் சேர்க்கவில்லை, ஏனெனில் க்ரீன்லாந்து உலக நிலப்பரப்பைப் பார்த்தால் அமெரிக்கக் கண்டத்தில் சேர்க்கப்படுவதுதான் சரியாக இருக்கும். அவர்கள் யூரோப்பிலிருந்து பிரிந்து போகத்தான் இரண்டு முறை வாக்களித்திருக்கிறார்கள். க்ரீன்லாந்து சுமார் 800 மிலியன் சதுர மைல்கள் நிலப்பரப்பு கொண்டது. அதை விடுத்தால், ஸ்காண்டிநேவிய நிலப்பரப்பு மொத்தமுமே 400 மிலியன் சதுர மைல்கள்தான். ஸ்காண்டிநேவிய மக்கள் தொகை 2013 ஆம் வருடக் கணக்கின்படி, மொத்தம் 26.61 மிலியன் மக்கள்தான்.

ஒப்பீட்டில் இந்தியாவின் நிலப்பரப்பு 2973 மிலியன் சதுர மைல்கள். மக்கள் தொகை 1200 மிலியன் மக்கள். தமிழகத்தின் மக்கள் தொகை மட்டுமே சுமார் 78 மிலியன் பேர்கள். ஆனால் தமிழ் நாட்டின் நிலப்பரப்பு அளவு 50 மிலியன் சதுர மைல்கள்தான். ஸ்காண்டிநேவிய நாடுகளில் நிலப்பரப்பை மட்டும் எடுத்துக் கொண்டால் தமிழ் நாட்டை விடச் சிறிய நாடுகளாக டென்மார்க்கும், ஐஸ்லாந்தும் இருக்கும். மக்கள் தொகையில் எல்லா ஸ்காண்டிநேவிய நாடுகளையும் சேர்த்துமே தமிழ் நாட்டின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்குதான் அங்கு இருக்கிறார்கள்.

இதைப் பேசக் காரணம், வெறும் பொருளாதார வளத்தில் வேறுபாடுகளைப் பற்றிப் பேசுவது அல்ல. ஒவ்வொரு ஸ்காண்டி நேவிய நாடுமே இந்தியா/ தமிழ் நாட்டை விடப் பன்மடங்கு அதிக வருமானமும் செல்வமும் உள்ளன என்பது நமக்குத் தெரியும். மொத்தமாக இந்தியாவின் வருமானம் ஸ்காண்டிநேவிய நாடுகளின் வருமானத்தை விட அதிகம். இந்தியா 2016 இல் 2.29 ட்ரில்லியன் டாலர்கள் மதிப்புள்ள வருமானத்தைப் பெற்றது. ஒப்பீட்டில் மொத்த ஸ்காண்டிநேவிய வருமானம் 2016 இல் 1.415 ட்ரில்லியன் டாலர்கள்தான். மக்கள் தொகை இந்திய மக்கள் தொகையில் 60இல் ஒரு பங்குதான் என்பதால் தலைக்குக் கிட்டும் வருமானம் பல்லாயிரம் டாலர்கள் அதிகம். அங்குள்ளவர்களுக்கு தலா 55000 டாலர்கள் போல தனிநபர் வருமானம் ஒருவருடத்தில். இந்தியாவில் 1500 டாலர்கள் தான். இதில் வேறு சில கணக்குகள் உண்டு. அதன்படி இந்தியர்களின் அசல் வருமானம் சுமார் 8000 டாலர்கள் என்றும் சொல்கிறார்கள்.

அதெல்லாம் இருக்கட்டும். இவை ஏன் பேசப்பட்டன என்றால், சமீபத்தில் ஒரு ஸ்வீடிய மொழி நாவலைப் பற்றி யோசிக்கத்தான். ஃப்ரீட்ரிக் பாக்மன் என்ற எழுத்தாளரின் சமீபத்திய நாவல் ‘அ மான் கால்ட் ஊவெ’ என்பது இங்கிலிஷில் மொழி பெயர்க்கப்பட்ட போது முதலில் அதை வெளியிடும் நிறுவனம் 6600 பிரதிகள்தான் அச்சிட்டது. நல்ல மதிப்புரைகள் கிட்டியபோதும் பெரும் பத்திரிகைகள் அதை அலட்சியம் செய்தனவாம். ஆனால் வாசகர்கள், தனிப் புத்தகக் கடைகள் (பெரும் புத்தகக் கடைகளைச் சாராதவை) ஆகியனவற்றில் கிட்டிய பரபரப்பால் திடீரென்று லாரி லாரியாக இந்தப் புத்தகத்தை விற்கத் தேவை ஏற்பட்டதாம். ஒரே வருடத்தில் 6 லட்சம் பிரதிகள் இங்கிலிஷ் மொழி பெயர்ப்பில் மட்டும் விற்றிருக்கின்றன.

இதர மொழிகளில் மொழி பெயர்த்தவை எத்தனை விற்றிருக்கும் என்பது தெரியவில்லை. ஆனால் இன்னமும் இந்தப் புத்தகத்திற்கு மவுசு குறையவில்லை. மூல மொழியான ஸ்வீடிய மொழியில் இத்தனை லட்சம் பிரதிகள் விற்றிருக்க வாய்ப்பில்லை என்று நாம் கருதலாம். ஆனால் ஒப்பீட்டில் தமிழில் அனேகமாக எந்தப் புத்தகமும் ஒரு வருடத்தில் ஆறு லட்சம் பிரதிகள் விற்க வாய்ப்பு என்ன என்று யோசித்தால் அனேகமாக சிறிதும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டி இருக்கும். இத்தனைக்கும் நம் ஜனத்தொகை ஸ்வீடனின் ஜனத்தொகையைப் போல மூன்று அல்லது நான்கு மடங்கு கூடுதல்.

ஸ்காண்டிநேவியப் புத்தகங்கள் அனேகமாக சோகமாகவோ, சலிப்பைப் பற்றியோ அல்லது குற்ற நாவல்களாகவோ இருப்பதாக உலகத்தாரிடம் ஒரு பிம்பம் இருக்கிறது. இந்த நாவல் அப்படி இல்லாமல் சாதாரண வாழ்வை நகைச்சுவையோடும் சிறிது உற்சாகமாகவும் வருணிக்கிறது என்பது இதன் பெரிய விற்பனைக்கான முக்கிய அம்சம்.  இதை டிசம்பர் 2015 இல் ஒரு திரைப்படமாகவும் எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள்.

மீதி விவரங்களுக்கு இந்த வலைத் தளத்தில் சென்று காண்க.


செய்தியும் கணிதமும்

a-mathematician-reads-the-newspaper

மூன்று புள்ளியியல் வல்லுநர்கள் கொக்கு சுடப் போகிறார்கள். முதலாமவர் கொக்கைக் குறிவைத்து சுடுகிறார். கொக்கின் தலைக்கு ஆறங்குலம் மேல் குண்டு பறந்து, கொக்கைத் தவறவிடுகிறது. இரண்டாமவர் அதே கொக்கை குறி பார்த்து சுடுகிறார். இப்பொழுதோ, கொக்கின் தலைக்குக் கீழே ஆறங்குலம் சென்று தோட்டா மீண்டும் தவறுகிறது. இதைப் பார்த்த மூன்றாவது புள்ளிவிவரப் புலி துள்ளிக் குதிக்கிறார்: “கொக்கை சரியாகச் சுட்டுவிட்டோம்!”. இப்படித்தான் கணிதவியலாளர்கள் இயங்குகிறார்கள் என்பது எளிமையாக்கமாக இருந்தாலும், இன்றைய செய்தித்தாள்களில் நாம் படிக்கும் தகவல்களின் பொதுமையாக்கமாக மாறிவிடக் கூடாது என்று கணிதயியலாளர் ஜான் ஆலன் சொற்பொழிவாற்றுகிறார்:


தேர்தலில் நிற்கும் கடவுள்

god_jesus_usa_fec_elections_president

கடவுள், சாத்தான், ரொனால்டு ரேகனின் ஆவி, ஸ்டார் வார்ஸ் வில்லனார் டார்த் வேடர் (Darth Vader), நெட்ஃப்ளிக்ஸில் வரும் ஜனாதிபதி கதாபத்திரமான ஃபிரான்சிஸ் அண்டர்வுட் – இவர்களுக்கெல்லாம் இடையே உள்ள ஒற்றுமை என்ன? கற்பனை மாந்தர்கள் என்றால் தவறு. இவர்கள் எல்லோருமே அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்து இருக்கிறார்கள். இவர்கள் நிஜமானவர்கள்தானா என்று அமெரிக்க தேர்தல் கமிஷன் விசாரிக்க ஆரம்பித்து இருக்கிறது. என்ன ஒற்றுமை என்றால், கடவுள் மற்றும் சாத்தான் – இருவருமே குடியரசு (டொனால்ட் டிரம்ப் கட்சி) சார்பாக போட்டியிட மனுக் கொடுத்திருக்கிறார்கள். கடவுளும் சாத்தானும் மெய்யாலுமே இருக்கிறார்களா என்பதை நிரூபிக்குமாறுக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இல்லையென்றால் அவர்களால் அமெரிக்காவில் போட்டியிட முடியாது என்று 30 நாள் கெடு விதித்திருக்கிறார்கள்:

http://www.thedailybeast.com/articles/2016/09/01/fec-to-god-prove-you-exist.html

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.