வ. உ. சிதம்பரனாரின் சமூக விழிப்புணர்வு

va_vu_C_1

[பதிப்புக் குறிப்பு: சுதந்திரப் போராட்டத்தின் தூங்கா விளக்குகளில் ஒருவர் வ. உ.சிதம்பரனார். அவரைப் பற்றிய தகவலறிவு பொதுமக்களிடையே அவரது தகுதிக்கேற்ற அளவில் இல்லை என்பது பொது கவனிப்பு. இது பெருமளவும் சமகால வரலாற்றையே நம் பள்ளிகளும், ஊடகங்களும் இன்றைய அரசியலுக்கேற்றபடி திரிப்பதால் வந்த மனப் பிறழ்வு எனலாம். வரலாறு புனிதமாகக் கருதப்பட்டு ஓரத்தில் வைத்துப் பாதுகாக்கப்பட முடியாதது. காலத்துக்கேற்ற கருத்து வேறுபாடுகளும், மாற்று வாசிப்புகளும் இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை. எனினும், ஆவணப் பாதுகாப்பில் அத்தனை கவனமோ, அதற்கென நாணயமும் நம்பகத்தன்மையும் உள்ள நிறுவன வசதிகளோ மிக அரிதாகவே உள்ள இந்தியாவில் தொடர்ந்து மாற்று வாசிப்பு என்ற பெயரில் முனைப்புள்ள திரிப்புகளே பரவலாக உள்ளன. இவற்றுக்கான சரியான தகவல்களை மறுபடி புதுப்பித்துக் கொடுப்பது.  புதுப்பித்தல் என்றால் நன்கு உறுதி செய்யப்பட்ட தகவல்களை, அவற்றின் சமூகப் பின்னணியோடு இணைத்து புரியும்படி செய்து கொடுப்பது என்றாகும். திரிப்புகள் பெரும்பாலும் இந்தப் பின்னணியைக் கொடுக்காமல் தகவலை இன்றைய சமூகநிலைகளோடு பொருத்திச் செய்யப்படும் அரசியல் கோணல்களாக இருப்பவை.  
இங்கு வ. உ.சிதம்பரனாரின் குடும்பத்தைச் சார்ந்த மரகத மீனாட்சி ராஜா அவர்கள், வ.உ.சிதம்பரனார் பற்றி, தெரிந்த சில தகவல்கள் மீது நம் கவனத்தை மறுபடி குவிக்கிறார். ]
 

வ.உ.சிதம்பரனார் சாதி பேதம் பார்க்காத தலைவர் ஆவார்.
தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவருக்காக நடத்திய வழக்கு
வ.உ.சி. தனது சுயசரிதையில் தான் நடத்திய வழக்குகளில் இரண்டை மட்டும் குறிப்பிடுகிறார். அதில் முதலாவதாகக் குறிப்பிடுவது ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவருக்காக நடத்திய வழக்காகும்.
“வேத நாயகம் எனும் மேம்பாடு பள்ளனை
ஏதமில்லாமலே எண்ணிலா வழக்கில்
அமிழ்த்தினர் போலீஸார்; அனைத்திலும் திருப்பினேன்”
பொருள்: “வேத நாயகம் என்னும் மேன்மையான பள்ளனை குற்றமில்லாமலே எண்ணற்ற வழக்குகளில் சிக்கவைத்தனர் போலீஸார்; அனைத்து வழக்குகளில் இருந்தும் மீட்டேன்”
வ.உ.சி. “வேத நாயகம் என்னும் பள்ளனை” என்று குறிப்பிடவில்லை. மாறாக “மேன்மையான பள்ளனை” என்று வ.உ.சி. குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது. மேலும் குறிப்பிடும் இரண்டே இரண்டு வழக்குகளில் இது ஒன்றாக இருப்பதுடன் முதலாவதாகவும் உள்ளது.
குலம் என்பது கற்பனையே
வ.உ.சி. தனது முதல் மனைவி வள்ளியம்மையுடன் வாழ்ந்த காலம் 1895-ல் இருந்து ஆறு ஆண்டுகள் ஆகும். அதாவது சென்ற நூற்றாண்டுக்கும் முந்திய நூற்றாண்டின் கடைசி ஆண்டுகள். இப்பொழுதும் சாதிப் பிரச்சினை உள்ளது என்றால் அப்பொழுது சமூகம் என்ன மாதிரியான சிந்தனையுடன் இருந்திருக்கும் என்று நம்மால் புரிந்து கொள்ள இயலும். வ.உ.சி. தனது முதல் மனைவியைப் பற்றிக் குறிப்பிடும்போது தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ராமையா தேசிகர் பற்றிக் குறிப்பிடுகிறார்.
“சிவப்பொருள் உணர்ந்த தேசிகன் ஒருவனென்
தவப்பயனால் இலம் தங்கப் பெற்றேன்”
விருது நகரைச் சேர்ந்த ராமையா தேசிகர் வ.உ.சி. வீட்டில் தங்கி இருக்கிறார். தேசிகர் வ.உ.சி.இல்லத்தில் தங்கி இருப்பது தனது தவப்பயன்என்று வ.உ.சி.குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.
அடுத்து, ஊரில் உள்ளவர்கள் ராமையா தேசிகர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்று குற்றம் சொல்கிறார்கள். வ.உ.சி.க்கு அவரை வீட்டைவிட்டு அனுப்ப மனம் இல்லாததால் மனைவியிடம் ஆலோசனை கேட்கச் செல்கிறார். வ.உ.சி. பிரச்சினை என்னவென்று கூறுவதற்கு முன்பே அவரது மனைவி அவர் முன்பு கூறியதையே பதிலாகக் கூறுகிறர்,” எல்லா உயிர்களிடத்தும் கடவுள் இருக்கிறார்.உருவம் முதலியவற்றில் எந்த சாதி வேறுபாடும் தெரியவதில்லை.எனவே குலம் என்பது கற்பனையே. குலத்தை வைத்து வேறுபாடு காண்பது பிழை என்று சொல்லிய தூயவரே! துறவிகளுக்கு குலம் கிடையாது. ஊரார் சொற்களை நாம் ஏற்க வேண்டாம். ”
எல்லா உயிர்களிடத்தும் கடவுள் இருப்பதாலும் உருவம் முதலியவற்றில் எந்த வேறுபாடும் தெரிவதில்லையாதலாலும் குலம் என்பது கற்பனையே என்று வ.உ.சி. குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.       தன்னுடைய குணம் பற்றி சுயசரிதையில் கூறும்போது “மதகுல வேற்றுமை மனத்தினும் கொள்ளேன்” என்று குறிப்பிடுகிறார்.
சிதம்பரம் என் சற்குரு
வ.உ.சி. ஒரு முறை சென்னையில் அச்சுக்கூடம் ஒன்றில் சுவாமி சகஜானந்தர் என்ற துறவியைச் சந்திக்கிறார். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த அவர் தன்னை “நந்தனார் சமூகத்தினர்” என்று வ.உ.சி.யிடம் அறிமுகம் செய்துகொண்டார். வ.உ.சி. உடனே அவரைத் தன்னுடன் அழைத்துச் சென்றார். அவர் செல்லும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அழைத்துச் செல்வார். சகஜானந்தருக்குத் தமிழ்ப் பயிற்சி ஊட்டினார். அவருக்குத் தமிழ் இலக்கியங்கள் மற்றும் திருக்குறள், தொல்காப்பியம் ஆகியவற்றைப் போதித்தார். பிற்காலத்தில் சகஜானந்தர் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக சிதம்பரத்தில் நந்தனார்க் கழகம், நந்தனார்ப் பாடசாலை ஆகியவற்றை ஏற்படுத்தினார். அதற்காக நிதி உதவி செய்யும்படி தனது நெருங்கிய நண்பர்களுக்குக் கடிதம் கொடுத்து உதவினார். சகஜானந்தர் வ.உ.சி. க்கு எழுதிய கடிதத்தில் “சிதம்பரம் என் சற்குருவே” என்று குறிப்பிடுகிறார். மேலும் வ.உ.சி.யைப் பற்றிக் குறிப்பிடும் போது “என்னைத் தன் பிள்ளை போல் வளர்த்தவர்” என்று கூறுகிறார்.(வீர சிதம்பரனார், எம்.எஸ்.சுப்ரமண்ய ஐயர், பக்-76)
புனித உணவு
வ.உ.சி. கோயம்பத்தூர் சிறையில் இருக்கும் போது நடைபெற்ற  நிகழ்ச்சி.
“ஜாதிபேதங்கள் பாரேன் எனினும்
தனியே சமைத்த புனித உணவைக்
கொள்ளயான் விரும்பிக் கொண்டு வந் தவன்பால்
‘விள்ளடா உன்னூர்; விளம்படா உன்குலம்’ என்றேன்”                                          

சிறைச்சாலையில் சைவ சமையலறை, அசைவ சமையலறை என்று இரண்டு உள்ளது. வ.உ.சி.யோ திருக்குறள் அன்பன். வள்ளுவர் வழி நடப்பவர். வள்ளுவரின் திருக்குறளில் 26-ஆவது அதிகாரம் “புலால் மறுத்தல்” . அதில் புலால் உண்ணுதல் அறம் அல்ல. நரகம் கிடைக்கும். புலால் உயிரினங்களின் புண் என்று வள்ளுவர் பலவாறாக புலால் உண்ணாமையை வேண்டுகிறார். திருக்குறளின் வழி நூலான மெய்யறம் என்ற நூலில் 12-ஆவது அதிகாரம் “புலால் விலக்கல்” . அதில் வ.உ.சி. வள்ளுவரை வழி மொழிகிறார்.
வ.உ.சி. கண்ணனூர் சிறையில் இருக்கும் போதும் சைவ சமையலறையில் சமைத்த உணவைக் கேட்டுப் பெறுகிறார்.
“அது முதல் சைவர் ஆக்குப் புரையில்
தனியா எனக்குச் சமைத்துணவு வந்தது
ஆனால் அங்குள அந்தணர் சைவர்க்
கேனோ அவ்வுண வீயப்படவில்லை;
மாப்பிள்ளை மார்கள் மாம்ஸக் கிச்சனில்
ஆக்கிய உணவே அளிக்கப்பட்டது.
அந்தோ! பாவம்! அவர் என் செய்வர்!”
அசைவ உணவு உண்ணுபவர்கள் புனித உணவுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். அவர்கள் அசைவ சமையலறையில் சமைத்த உணவைக் கொடுத்து விடலாம். அதனால் தான் ஜாதி பேதம் பாராத வ.உ.சி. புனித உணவு உண்ண விரும்பி சைவ சமையல்காரரைக் கேட்டுப் பெறுகிறார்.
உண்மைச் சைவ சிகாமணி 
தேவகோட்டை மாணவர் சங்க ஆண்டு விழாவில் வ.உ.சி. சொற்பொழிவாற்றுகிறார். அதில் பின்வருமாறு கூறுகிறார்.
சைவ சமயம் உயர்ந்ததென்பது உண்மைதான். ஆனால் சமயத்தில் உள்ள தெய்வத்தின் பேரால் பலி நிகழ்த்துதல் கொடுமையாகும். அதனை நிறுத்த இச்சங்கத்தாரும் ஏனையோரும் முயற்சித்தல் இன்றியமையாததாகும். எங்கள் ஊரில் வட உலகம்மன் என்று ஓர் அம்மன் இருக்கிறது.அதற்கு ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியிடுவதைக் கண்டு அதனை நானும் எனது நண்பர்களும் நிறுத்த முயற்சித்த பொழுது பல இடையூறுகள் வந்தன. ஆயினும் இப்பொழுது நின்றுவிட்டது.எனவே அன்பர்கள் பலியிடும் வழக்கத்தை ஒழித்து உண்மைச் சைவ சிகாமணிகளாக இருக்குமாறு வேண்டுகிறேன். .(குமரன் பத்திரிக்கை- ஜனவரி 26, 1928)
சமபந்தி போஜனம் 
சமபந்தி போஜனம் வேண்டுமென்று தேசாபிமானிகள் சொல்லுகிறார்கள்.அதற்கு மாமிச உணவு இடையூறாக இருக்கின்றது.மாமிச உணவு உண்ணுவோரோடு சைவ உணவு உட்கொள்ளுவோர் எங்ஙனம் ஒன்றாயிருந்து உட்கொள்ளவியலும்?
மாமிச உணவு உண்பவருடன் ஒன்றாயிருந்து உண்பதென்பது கஷ்டமான காரியமாகும்.என்வே நகரத்தார்கள் புலால் உணவை நீக்கிவிடும்படி கேட்டுக் கொள்கிறேன். சிதம்பரம் சுவாமி சகஜானந்தாவைஅறிவீர்கள். அன்னார் குடும்பத்தார்கள் அனைவரும் புலால் உண்பதில்லை. சுத்த சைவர்கள். அன்னார் இல்லங்களில் புசிப்பதற்கு ஆட்சேபமென்ன? நானே உணவு தரும்படி அன்னாரை வலியக் கேட்டதுண்டு. மனிதனுக்கு மனிதன் வேற்றுமையில்லை. .(குமரன் பத்திரிக்கை- ஜனவரி 26, 1928)
பிறப்பினால் உயர்வு தாழ்வு இல்லை    
தமிழ்நாட்டு நூல்களில் பிறப்பினால் உயர்வு தாழ்வு கூறப்படவில்லை. புறநானூறு போன்ற சங்க இலக்கியங்களில் பிறப்பினால் உயர்வு தாழ்வுகள் உண்டெனக் காணப்படவில்லை.(குமரன் பத்திரிக்கை- ஜனவரி 26, 1928)
பிறப்பினால் உயர்வு தாழ்வு இல்லை.ஒழுக்கத்தினால் உயர்வு தாழ்வு உண்டு. பொதுக்கோவில்களில் அனைவரும் போக உரிமை இருத்தல் வேண்டும். (குமரன் பத்திரிக்கை- மார்ச் 15, 1928)
வகுப்புவாரி பிரதிநிதித்துவம்   
1927- ஆவது ஆண்டு சேலம் ஜில்லா மூன்றாவது அரசியல் மாநாட்டுக்கு வ.உ.சி. தலைமை தாங்குகிறார்.அதில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் பற்றிப் பேசுகிறார். வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்றால் என்ன என்றும் விளக்குகிறார்.
“இராஜாங்க உத்தியோகங்களையும், சட்டசபை, ஜில்லா நிர்வாக சபை முதலிய ஸ்தல ஸ்தாபன உத்தியோகங்களையும், காங்கிரஸ் மகா சபை, அதன் கிளைச் சபை முதலிய பொது ஸ்தாபன உத்தியோகங்களையும் நம் தேசத்திலுள்ள ஒவ்வொரு ஜாதியாரும் அவரவர் ஜாதியாரின் எண்ணிக்கை விகிதப்படி பகிர்ந்து கொள்ளுதலே வகுப்புவாரி பிரதிநிதித்துவம்.
மேலும் கூறுகிறார். வகுப்புவாரி பிரதிநிதித்துவம் ஆகாதென்று தேசாபிமானத்திலும் அறிவிலும் சிறந்த சிலர் கூறுகின்றனர். அதற்கு அவர்கள் கூறும் காரணங்களாவன:
1. வகுப்புவாரி பிரதிநிதித்துவம் நமது தேசத்தில் நிலவும்படி செய்துவிட்டால், ஜாதி வேற்றுமையும் அது பற்றிய உயர்வு தாழ்வும் நமது தேசத்தில் நிலைத்துபோம். அது பற்றி நமது தேசத்தில் ஒற்றுமையின்மையும் பகைமையும் நிலைத்துபோம்.
2. உத்தியோக விஷயத்தில் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைக் கவனிப்பதாயிருந்தால் சில உத்தியோகங்களுக்குத் தகுதியில்லாதாரை நியமிக்கும்படியான நிலைமை ஏற்படும்.
3. நம் தேசத்தில் உள்ள ஜாதிகள் பல. ஒவ்வொரு ஜாதியையும் சேர்ந்தவர்கள் மிகப்பலர். உத்தியோகங்கள் மிகச் சில. அச்சிலவற்றை அம்மிகப் பலருக்கு பகிர்ந்து கொடுப்பது எப்படி?
முதல் கேள்விக்கு வ.உ.சி. யின் பதில்: . .
உயர்வு தாழ்வு இல்லாத ஒரே ஜாதியாருள்ளும் ஒரே குடும்பத்தினருள்ளும் ஒற்றுமையின்மையும் பகைமையும் கொலை முதலியனவும் நிகழக் காண்கிறோம். இதன்றியும் தம் ஜாதி உயர்வென்றும் பிற ஜாதி தாழ்வென்றும் கருதும் இரு வேறு ஜாதியார் சிலர் ஒற்றுமைப்பட்டு அத்தியந்த நண்பர்களாக வாழ்கின்றதையும் காண்கிறோம். இக்காட்சியால் நம் தேசத்தாருள் நிலவும் ஒற்றுமையின்மை, பகைமை முதலியவற்றிற்கு முக்கியமானகாரணம் ஜாதி வேற்றுமையும் அதுபற்றிய உயர்வு, தாழ்வும் அல்ல என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்கத் தக்கது.
2. இரண்டாவது கேள்விக்கு வ.உ.சி. யின் பதில்:
[இதற்கு ஓர் உதாரணத்தின் மூலம் விளக்குகிறார். ]
ஒரு குடும்பத்தில் பத்து சகோதரர்கள். அவர்களுக்கு ஆயிரம் ஏக்கர் நன்செய், புன்செய்களும் கர்ணம் உத்தியோகம் ஒன்றும் கிராம முனுசீபு உத்தியோகம் ஒன்றும் இருக்கின்றன. குடும்பத்தில் மூத்த சகோதரர் இருவரும் இரு உத்தியோகங்களைக் கொண்டும் குடும்ப நிலங்களை மற்ற சகோதரர்களைக் கொண்டு விளைவித்தும் குடும்பத்துடன் சுகமாக வாழ்கின்றனர். மற்ற எட்டு பேரும் குடும்பத்துடன் கஷ்டப்படுகின்றனர். அதனால் அந்த எட்டு பேரும் மூத்த இருவரிடம் எல்லாவற்றையும் பங்கு பிரிக்கலாம் என்கின்றனர். அதற்கு அவ்விருவரும் மற்றவர்கள் உத்தியோகம் வகிக்க தகுதியில்லாதவர்கள் என்றும் பாகப்பிரிவினை செய்தால் ஒற்றுமையின்மை ஏற்படும் என்றும் கூறுகின்றனர்.அதற்கு மற்ற எண்மரும் உத்தியோகம் வகித்துப் பார்த்தால் தானே அதற்கு தகுதியுடையவர்கள் ஆவோம் என்றும் கூறுகின்றனர். உத்தியோகங்களையும் குடும்ப நிலங்களையும் பகிர்ந்து கொள்வதே ஒற்றுமைக்கு வழி என்பது சிறுவர்களுக்கும் விளங்கும்.
3. மூன்றாவது கேள்விக்கு வ.உ.சி. யின் பதில்:
உத்தியோகங்களின் எண்ணிக்கை குறைந்தும், ஜாதிகளின் எண்ணிக்கை கூடியும் இருக்குமாயின் சற்றேறக்குறைய ஒரு தன்மையான பழக்க வழக்கங்களையும் ஒழுக்கங்களையும் உடைய இரண்டு, மூன்று ஜாதிகளை ஒன்று சேர்த்து ஒரு ஜாதியாகக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.
சம பந்திபோஜன உரிமை 
இராசாங்கத்தாரால் அல்லது ஸ்தல சொந்த ஸ்தாபனங்களால் ஏற்படுத்தப்பட்ட கலாசாலைகள், சத்திரங்கள், புகை வண்டிகள் அவற்றின் உணவு சாலைகள் முதலியவற்றில் எல்லா ஜாதியார்களுக்கும் சம இருப்பும் சம பந்திபோஜனமும் கொடுக்கப்பட வேண்டும். அங்கு அவர்கள் அதை அடைய உரிமை உடையவர்கள்.
வ.உ.சி பயன்படுத்திய பதம்
பொதுவாக தாழ்ந்த ஜாதி, உயர்ந்த ஜாதி என்ற பதங்களே எல்லோராலும் பயன்படுத்தப்பட்ட போது வ.உ.சி. தாழ்த்தப்பட்ட ஹிந்துக்கள், தாழ்த்துகின்ற ஹிந்துக்கள் என்ற பதங்களைப் பயன்படுத்தியது கவனிக்கத்தக்கது. அதாவது அவரைப் பொருத்தமட்டில் யாரும் தாழ்ந்தவர்களுமில்லை, உயர்ந்தவர்களுமில்லை. சிலர் தாழ்த்துகிறவர்கள். சிலர் அவர்களால் தாழ்த்தப்பட்டவர்கள். அவ்வளவுதான்.
***