வாசகர் கடிதம்

emailகம்பனும் சேல்ஸ் மீட்டிங்கும் கதையைப் பற்றி:
திரு கஸ்தூரி சுதாகரின் இந்தக் கதையைப் படித்துவிட்டு ஆச்சர்யப்பட்டுப் போனேன். இந்தக் கதை என்னுடைய மனதில் 25 வருடங்களாக நீறு பூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருந்த ஒரு கேள்விக்கு விடையைக் கொடுத்தது என்றால் நம்புவீர்களா? நம்புங்கள் இதோ அந்த நிகழ்வு:
25 வருடங்களுக்கு முன், ஒரு மாலை நேரம். குழந்தைகளுடன் எங்கள் வீட்டு ஹாலில் உட்கார்ந்திருந்தேன். கணவரின் கார் வரும் சத்தம் கேட்டு எழுந்து போய்க் கதவைத் திறந்தேன். முகமெல்லாம் வாடிப்போய் கண்களெல்லாம் கலங்கி……பார்த்தவுடனேயே ‘திக்’கென்றது. ஏதோ சரியில்லை என்று புரிந்து போனது. நேராக வந்து சோபாவில் உட்கார்ந்தவர், ‘வேலையை விட்டுட்டேன்’ என்றார். அப்படியே சோபாவில் சுருண்டு படுத்துக் கொண்டுவிட்டார். அவசரமாக படுக்கையறைக்குப் போய் ஒரு தலையணை எடுத்துவந்து அவரது தலைக்கு அண்டைக் கொடுத்துவிட்டு இன்னொரு சோபாவில் உட்கார்ந்துகொண்டேன்.
மனதில் ஏதேதோ எண்ணங்கள். மேலே சொல்வதற்குள் என் கணவரைப்பற்றி: ஒரே நிறுவனத்தில் சுமார் 34 வருடங்களாக வேலை செய்துகொண்டிருப்பவர். படிக்கும் காலத்திலேயே அப்ரெண்டிஸ் ஆக சேர்ந்து அப்படியே பணியிலும் சேர்ந்து விட்டவர். ‘நாம் சாப்பிடும் ஒவ்வொரு அரிசியிலும் இந்த நிறுவனத்தின் பெயர் பொறித்திருக்கிறது’ என்று என்னிடம் மட்டுமல்ல; குழந்தைகளிடமும் சொல்லுபவர். என்ன நடந்திருக்கும்?
இதற்கு முன்னாலும் இதுபோல ‘வேலையை விட்டுவிடப் போகிறேன் என்று சொல்லி ராஜினாமா கடிதமும் கொடுத்திருக்கிறார். அப்போது நடந்தது வேறு. இவர் கொள்முதல் துறையின் தலைவர். லஞ்சம் வாங்க நிறைய வாய்ப்பு. நம்மாளு சத்தியசந்தர். ஒருமுறை மீட்டிங்கில் ஒரு புகார் விற்பனையாளர்களிடமிருந்து. வந்தது: ‘திரு…….தனது புது வீட்டிற்கு ஒரு ஊஞ்சல் கேட்டார் எங்களிடம்’ என்று. இன்னொருவர் ஜெயப்பிரதா வேண்டும் என்றார் என்று ஒவ்வொரு பூதமாக கிளம்பி வந்துகொண்டே இருந்தது. ‘என் கீழ் இருப்பவர்களின் அடாத செயலுக்குப் பொறுப்பேற்று, தலைவர் என்ற முறையில் வேலையை விட்டு விலகுகிறேன். என் எதிர்காலத்திற்காக ஒரு வியாபாரம் ஆரம்பிக்கிறேன். ஆறுமாதம் ஆகும் அதில் காலூன்ற, அதுவரை இந்த நிறுவனத்தில் இருக்கிறேன் என்று அனுமதி பெற்று வந்தார்.
‘என்ன வியாபாரம்?’
‘ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் கடை!’
‘யார் பார்த்துக்கொள்வது?’
‘வேறு யார்? நீதான்!’
‘நானா!?’
திருமணத்திற்கு முன் எங்கள் வீட்டில் ஒரு சைக்கிள் கூடக் கிடையாது. கணவருடன் காரில் போய்விட்டு வந்தாலும் ஆட்டோமொபைல் பற்றிய அறிவு பூஜ்யம். பிள்ளைக்கு அப்போது மூன்று வயது. அவனையும் இடுப்பில் வைத்துக்கொண்டு காலையில் 9 மணிக்கு கடையைத் திறக்கவேண்டும். நட்டும், ஸ்க்ரூவும் ஆக ஏகப்பட்ட சாமான்கள். கண்ணைக்கட்டிக் காட்டில் விட்டது போல இருக்கும். அபூர்வமாக யாராவது வந்து ஏதாவது கேட்டால் தேட ஆரம்பிப்பேன். நான் தேடுவதைப் பார்த்து வாங்க வந்தவர்கள் போய்விடுவார்கள். ‘ஏன் தேடவேண்டும்? கடையில் சும்மா தானே உட்கார்ந்திருக்கிறாய்? ஒவ்வொரு சாமானாகப் பார்த்துக் கொண்டே வா. புரியும்!’ ஒருமுறை கூட கடைக்கு வந்து உதவியது கிடையாது.  வீட்டின் அருகிலேயே கடை இருந்தது மட்டுமே எனக்கு சாதகமான விஷயம். அப்படி இப்படி என்று விழுந்து எழுந்து கொஞ்சம் கொஞ்சமாக வியாபார நுணுக்கங்களை நான் கற்றுக் கொள்ள ஆரம்பித்த வேளை. நிறுவனத்தினர் இவருக்கு டபிள் பிரமோஷன் கொடுத்து, புது பியட் கார் கொடுத்து ‘வேலையை விடவேண்டாம். கடையை மூடி விடு’ என்று சொல்ல கடை மூடப்பட்டது, என்னைக் கேட்காமலேயே!
இப்போதும் ஏதோ கொஞ்சம் கொஞ்சம் சொன்னாரே தவிர முழுமையாக என்ன நடந்தது என்று எனக்குச் சொல்லவில்லை. ‘கண்ணனும் நான் சொன்னதையே தான் சொன்னான். ஆனால் நான் சொன்னதுதான் பாஸுக்குப் பிடிக்கவில்லை. என்னை பலிகடா ஆக்கிவிட்டார்’. திரு சுதாகர் கதையில் வரும் உதயகுமார் இடத்தில் என் கணவர். என்னிடம் சொல்லியிருந்தாலும் என்னால் கம்பனைக் கூப்பிட்டிருக்க முடியாது! தெரிந்திருந்தால் தானே?
தொடர்ந்த பத்து வருடங்கள் துன்பத்தின் உச்சகட்டம். எவ்வளவு உண்மையாக உழைத்தேன் என்னை கைவிட்டுவிட்டார்களே என்ற விரக்தி, கோபம், நம்பிக்கையின்மை, சுயபச்சாதாபம் எல்லாவற்றிற்கும் நான்தான் இடிதாங்கி. இவரது உண்மை உழைப்பிற்கு துளி மரியாதை கொடுத்து ஒருவருடம் நிறுவனத்தில் வைத்துக்கொண்டிருந்தார்கள். சும்மா போய் உட்கார்ந்துகொண்டு விட்டு வருவது. அதற்குள் வேறு வேலை தேடவேண்டும். ஒரே நிறுவனத்தின் கலாச்சாரத்தில் மூழ்கியவரால் இன்னொரு நிறுவனத்தில் வேலை பார்க்க முடியவில்லை. மறுபடி சொந்த வியாபாரம். நாங்கள் தட்டாத கதவுகள் இல்லை. ஏறி இறங்காத நிறுவனங்கள் இல்லை. கடைசியில் இவரது நிறுவனமே ஒரு சப்-காண்டிராக்ட் வேலையை கொடுத்தது. முதலில் பயிற்சி எடுக்கவேண்டும் யார் போவது? நான்தான்! மேலாளரின் மனைவியாக என்னைப் பார்த்தவர்களின் முன் பயிற்சி பெறுபவளாக அதே நிறுவனத்தில் சேர்ந்தேன். நான் பயிற்சி எடுத்து, பிறகு எங்கள் தொழிற்சாலை பணிப்பெண்களுக்கு சொல்லிக் கொடுத்தேன்.
நடுவில் பெண்ணுக்குத் திருமணம் ஆயிற்று. பேரன்கள் பிறந்து, பிள்ளை படித்துமுடித்து வேலைக்குப் போய்…..வாழ்க்கை நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்தக் கதை எங்கள் வாழ்க்கையை திருப்பிப்போட்ட அந்த நாட்களை நினைவு படுத்திவிட்டது. சின்னதாகத்தான் எழுத வேண்டும் என்று நினைத்தேன். நீண்டுவிட்டது.
பலநாட்களாக மனதில் சுமந்து கொண்டிருந்த பாரத்தை இந்தக் கடிதம் மூலம் கொட்டிவிட்டேன். இதைப் பிரசுரிப்பதும், பிரசுரிக்காததும் உங்கள் விருப்பம். ஏதோ எழுத வேண்டும் என்று தோன்றியது. எழுதிவிட்டேன்.
(பெயரைப் பிரசுரிக்க விரும்பாத வாசகர்)
 
 
 

One Reply to “வாசகர் கடிதம்”

  1. ஸேல்ஸ், மார்க்கெட்டிங்குடன் கம்பராமாயணத்தையும் உவமைப் படுத்தியது மிகவும் மனதைக் கவர்ந்தது. தலைவர் வேலை மாறுகிரார் என்றால் அநேகமாக உடன் வேலை செய்வர்களும் கொத்தாக வேலை மாறுவதைப் பார்த்தும் கேட்டுமிருக்கிறேன். பணியாற்றுபவர்களிடம் அர்களின் நாணயத்திற்குக் கண் கொத்திப் பாம்பாய் இருந்தால்தான் பணியாற்றமுடியும். அடுத்தபடி வாசகியின் கடிதமும் இதனால் பொறுப்புள்ளவர்களுக்கு எவ்வளவு இன்னல் என்பதையும் பறை சாற்றுகிறது. ஸேல்ஸ் மார்கெட்டிங்துறையில் டென்ஷன் அதிகம். கம்பனும் ஸேல்ஸ் மீட்டிங்கும் படிக்க, கமென்ட் படிக்க புதுமையான எழுத்தாக இருந்தது. அன்புடன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.