தாமஸ் பின்ச்சனின் ‘கிராவிட்டி’ஸ் ரெயின்போ’ (Gravity’s Rainbow) நாவலின் மத்திய புள்ளிக்கு அருகே ஓரிடத்தில் (பக்கம் 441), நல்லூழ் அமையப் பெறாத அதன் நாயகன் ஸ்லோத்ரோப், பெய்யும் மழைநீர் ஒழுகி ஊறும் தரையில், தன் சித்தம் பேதலிப்பதை உணர்கிறான்- “பரவுணர்வுப் பிறழ்ச்சி நிலையில் (Paranoia) ஆறுதல் அளிக்கக்கூடியது ஏதேனும் உண்டென்றால்- அது பக்தியுணர்வுக்கு இட்டுச் செல்கிறது என்பதைக் கொள்ளலாம்-, அப்போதும் பரவுணர்வெதிர்நிலைப் பிறழ்ச்சி (Anti-Paranoia) என்ற ஒன்று இருக்கிறது, அங்கு எதற்கும் எதனோடும் தொடர்பில்லை, நம்மில் பலர் வெகு நேரம் சகித்துக்கொள்ளக்கூடிய நிலையல்ல அது”.
நாவல் நெடுக ஸ்லோத்ரோப் புலனனுபவத்தின் இவ்விரு இரட்டை நிலைகளில் மாறி மாறி பிரவேசிக்கிறான்: கண்ணுக்குப் புலப்படாத கம்பிகளால் பின்னப்பட்ட இவ்வுலகும் அதை ஆட்டுவிக்கும் கரங்களின் அக அச்சுறுத்தலும்; ஊடறுக்கப்பட்ட, பின்னங்களாய் துண்டுபட்ட வஸ்துக்களும் அகத் தனிமையும். ஒன்று, யதார்த்தம் என்பது முன்தீர்மானிக்கப்படாத, ஒழுங்கமைவற்ற விளைவுகளின் தொகையாக இருக்க வேண்டும்; அக்காரணத்தாலேயே அது பொருளற்றதாகவும் இருக்கலாம்- அல்லது, அது ‘கண்ணிகளின்’ வலைப்பின்னலாக இருக்கக்கூடும்; அதன் ‘ஒழுங்கமையின்’ பொருள்கோள் சட்டகங்கள் எந்த மர்ம சக்திகளால் நிர்வகிக்கப்படுகின்றனவோ, அந்தச் சக்திகளின் உண்மையான அடையாளம் ஸ்லோத்ரோப் போன்றவர்களிடமிருந்து எப்போதும் மறைக்கப்பட்டே இருக்கக்கூடும்.
உண்மையில் பின்ச்சன் எழுதிய பெருநாவல்களின் கலைத்தன்மை அவற்றின் மையப்பாத்திரங்கள் மெய்யாகவும் கற்பிதமாகவும் உள்ள சதித்திட்டங்களின் நோக்குக்குறிக்கு வெளியே, முன்தீர்மானிக்கப்படாத ஒரு தொலைவில் இருத்தப்படுவதில்தான் இருக்கிறது என்று சொல்லலாம் – பாத்திரங்களாகிய அவர்களும் (வாசகர்களாகிய நாமும்) தமக்குக் கிட்டும் தகவல்களை அவற்றின் பின்னணிக்குரிய இரைச்சலின் ஊடே சலித்து, தங்கள் வாழ்விலும் (நம் நாவல்களிலும்) ‘என்ன நடந்து கொண்டிருக்கிறது’ என்பதைப் புரிந்து கொள்ளும் முயற்சியில் தரிசன சாத்தியங்களின் சுட்டல்களைக் கண்டடைவதில்தான் இக்கலைத்தன்மை இருக்கிறது என்றும் வாதிடலாம். இத்தகைய ஒரு கதைசொல்லல் உத்தி, குறிப்பிட்ட ஓரளவேனும் மெய்யுலகின் குழப்பங்களையும் ஒழுங்கையும் அதன் நிகர்பாவனைகளாய் நிகழ்த்திக் காட்டுதலைக் கைக்கொள்கிறது என்பதால் தன்னியல்பிலேயே தனக்குரிய புனைவுக் கருக்களில் ‘வரலாற்றுத் தரவாடலை” தன்னூடே கோர்த்துக் கொள்ள வேண்டியதாகிறது. எனவேதான் பின்ச்சன் நாவல்களில் நாம் பல்பொருள் தொகுதிகளுக்குரிய பெரும்பார்வையைக் காண்கிறோம்: இலக்கியம், கலாசாரம், அறிவியல், பிரபலங்கள் குறித்த சில்லறைத் தகவல்கள் என்று விரியும் தகவல் பேழைகளின் கிறுகிறுக்கும் அடுக்குவரிசைகளை எதிர்கொள்கிறோம். எனவேதான், கல்வித்துறையில் பின்ச்சன் ஆய்வாளர்களின் பெருக்கம் – எத்தனை பேசி முடித்தாலும் கடைசியில் ‘புனைவு’ என்று மட்டுமே சொல்லத்தக்க பின்ச்சனின் எழுத்தில் உள்ள ஏதோவொன்றை எடுத்துக்கொண்டு அதில் அவர் அறிந்தும் அறியாமலும் பொதித்து வைத்த உள்ளர்த்தங்களை முதலில் விரித்துரைப்பதிலும், பின்னர் விரித்துரை குறித்த மிகைவிவரணைகளிலும் அலுப்பூட்டுமளவு மீண்டும் மீண்டும் ஆய்வுகள் நிகழ்த்துவதைப் பார்க்க முடிகிறது.
மிக எளிமைப்படுத்தப்பட்ட வடிவில், பின்ச்சனிய உலகு முழுமையும் ஒற்றை மையம் கொண்ட வட்டங்களின் தொகை என்று நாம் புரிந்து கொள்ளலாம்: அவற்றின் மையத்தில் உள்ள வட்டம் உணர்வற்ற மெய்த்தகவல்களால் ஆனது: நிதர்சன உலகம் என்று நாம் குத்துமதிப்பாய் அழைக்கும் வரலாறு, கலாசாரம், தொழில்நுட்பம், இத்தியாதிகளின் குறுந்தரவுகள். இவற்றுக்கு அடுத்து புனைவின் வட்டம்- விதியால் உந்தப்பட்டு, தம் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளும் முயற்சியில் தோல்வியுற்று, திகைத்து நிற்கும், பரவுணர்வுப் பிறழ்ச்சியால் பீடிக்கப்பட்ட பாத்திரங்களும் அவற்றை அடுத்துள்ள ‘தரவுகளின்’ உள்வட்டத்துக்குரிய கதிரியக்க ‘வெளியின்’ தாக்கத்துக்கு உட்படும் குறுக்குச் சந்திகளும். இந்த இரு வட்டங்களுக்கு வெளியே, தனக்கேயுரிய திகைத்த விழிகளுடன், பரவுணர்வுப் பிறழ்ச்சியால் தீண்டப்பட்ட வாசகர் வட்டம், தகவல்கள், சதித்திட்டங்கள் மற்றும் புனையப்பட்ட வாழ்வுகள் என்று விரியும் குளறுபடியைப் புரிந்துகொள்ளும் முயற்சியில், தங்கள் உள்வட்டங்களின் உள்ளடக்கமாய் விளங்கும் புனைவையும் மெய்ம்மையையும், அவற்றுள் அகஸ்மாத்தாய் அமைந்த கூறுகளையும் இணைத்து, இணைத்தபின் அவற்றை மிகைப்பிணைத்து அமர்ந்திருக்கிறது (“என்ன நடக்கிறது இங்கே’, ‘யார் செய்த வேலை இது?”). இவை அனைத்துக்கும் அப்பால் ஒரு மகாவட்டம்- இதில் இருப்பது எழுத்தாளர் பின்ச்சன்: தரவுகள், பாத்திரங்கள் என்ற மூலக்கூறுகளாலான தன் உள்வட்டத்தில் உள்ள பல்வகை உட்கூறுகளைக் குழப்பியும், விதிர்க்கச் செய்தும் கதைப்போன்.
இது போன்ற ஒருநடுவ வட்டங்களாலான வரைபடத்தை வெகுதூரம் நாம் கொண்டு செல்ல முடியாது, ஏனெனில் இந்த வட்டங்கள் தொடர்ந்து ஒன்றையொன்று வெட்டிக் கொள்கின்றன, இவற்றுக்கு இடையில் உள்ள கோடுகள் தொடர்ந்து எழுதி அழிக்கப்படுகின்றன, எது உள்ளே எது வெளியே, எது மையம் எது ஆரம் என்று சொல்லப்பட முடியாத வகையில் வட்டங்களுக்கிடையே இருதிசையும் ஊடுருவும் பரவுணர்வுப் பிறழ்ச்சி, தொடர்ந்து இந்த வட்டங்களின் கொள்ளல் கொடுத்தல்களுக்குக் காரணமாகிறது. உண்மையைச் சொல்வதனால், மேற்சொன்ன அத்தனை வட்டங்களையும் தன்னுள் கொண்ட பெருவட்டமொன்றை பின்ச்சனிய பரவுணர்வுப் பிறழ்ச்சி சுட்டுகிறது: செய்வோன், செயப்படு பொருள் என்ற அடிப்படையில் அமைந்த இவ்வட்டத்தில் ஒன்று, ஆக்கியோன் புலவெளிக்கு அப்பாலும் அவனால் ஆட்டுவிக்கப்படும் ஆக்கம் புலவெளிப்பாடாகவும் இருக்க வேண்டும், அல்லது, ஆக்கியோனும் ஆட்டுவிப்பும் இல்லாமல், குருட்டு இயல்பாற்றல் (Entropy) விதிக்குட்பட்டு இயங்கும் தனிகள் கொண்டதாக இருக்க வேண்டும். பின்ச்சனிய உலகை அணையும் இப்பெரு வட்டம், சதிகாரச் சக்தி கொண்ட அமைப்புகளின் வட்டம், அல்லது, எங்கும் தன் வெளிவிளிம்பைக் கொண்ட, எதிலும் மையம் கொண்டிராத, அர்த்தமற்ற ‘இயல்பாற்றல்’ (Entropy) வட்டம். பிற்காலத்திய தொழில்நுட்பம் மற்றும் வரலாற்றின் படிகத்தால் ஒளிமுறிவுக்கு உட்படுத்தப்பட்ட தாந்தேவின் நரக வட்டம்தான் இது- ஆனால் இங்கோ, இருமை நிறைந்த இந்த இறையியலில், ‘மீட்சியளிக்கும் கருணையின்’ சாத்தியம் சிறிதும் இல்லை.
இந்த இருண்ட பாழ்நிலத்தில் வரலாறு மாபெரும் காஃப்காவிய கோட்டையாக உருமாறி, நீதி குறித்த அத்தனை கோரிக்கைகளையும் ஆர்ப்பாட்டங்களையும் அர்த்தமிழக்கச் செய்வதிலிருந்து தப்பும் வழியாக ‘கடப்பியல்’ (Preterition) என்ற கோட்பாட்டை பின்ச்சன் முன்வைக்கிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரை மீட்சிக்குத் ‘தேர்வு’ செய்து, பாபிகள் பலரை நரகத்துக்கு அனுப்பும் கால்வினிய விதி சார்ந்த இறையியலின் நவீன வடிவம் இது. ‘தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்’, ‘சபிக்கப்பட்டவர்கள்’ என்ற இருவர் போக, இறைவனால் ‘மறக்கப்பட்ட’ மூன்றாம் வகுப்பினரை கால்வினியர்கள் அனுமானித்தனர். இவர்கள், விதியால் உந்தப்படாமல் தாமாகவே, தம் தேர்வுகளாலேயே நரகம் புகும் வகையில் தம்மைச் சபித்துக் கொள்வார்கள், என்று நம்பினர்- கடவுளின் அருள் இவர்களைத் தொடுவதில்லை என்பதால் இவர்களின் கதிநிலை எப்படியும் நரகமாகவே இருக்கப் போகிறது என்று அவர்கள் அர்த்தப்படுத்திக் கொண்டார்கள் (இவர்களுக்கு மாறாய், பாபிகள் கடவுளின் ஆக்ஞைப்படியே நரகம் புகுகின்றனர்). தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மற்றும் பாபிகளின் விதி தீர்மானிக்கப்பட்ட ஒன்று என்பதற்கு மாறாய், மறக்கப்பட்டவர்களின் வரையறை செய்யப்படாத எதிர்காலமே பின்ச்சனுக்கு முக்கியமாக இருந்தது- சதிகார ஒருநடுவ வட்டங்களைத் தப்புவதற்குத் தேவையான சுதந்திரத்தில் ஒரு துளியாவது இவர்களுக்கு இருக்கிறது. இவர்களே பின்ச்சனின் புனைவில் விலக்கி வைக்கப்பட்டவர்களாகவும், சமுதாயத்தில் பொருந்தாதவர்களாகவும், வித்தியாசமாய் நடந்து கொள்பவர்களாகவும் தோன்றுகிறார்கள் – ஏதோவொரு கருணையால் இவர்கள் ‘கடந்து செல்லப்படுகிறார்கள்’ (கிராவிட்டி’ஸ் ரெயின்போ நாவலில் ஸ்லோத்ரோப் ‘ம்பா-கெயரே’ (“mba-kayere”) என்ற மந்திரத்தின் தீட்சை பெறுவான், ‘நான் கடந்து செல்லப்படுகிறேன்’ என்று அது பொருள்படுகிறது).
அதிகார அமைப்பால் கண்டுகொள்ளப்படாத இவர்கள் அதன் சதிகளுக்கு அப்பாற்பட்டவர்கள், தம் புலப்படாமை மற்றும் தம்மைச் சூழ்ந்துள்ள சதிவட்டங்களைக் குறித்த அறியாமையின் ஆனந்த நித்திரையில் இருப்பவர்கள், பொருள் காணும் விழைவை அளிக்கும் பரவுணர்வுப் பொறியில் இவர்கள் சிக்கிக் கொள்வதில்லை. இவர்கள் தம் அனாமதேய நிலையை, பார்வைக்கு அப்பாற்பட்ட விளிம்பில் கொண்டாட்டம் கேளிக்கை என்று அனுபவித்து மகிழ்கின்றனர், “அவ்வப்போது அகம் என்ற அண்டரண்டப்பறவையின் இறகை உதிர்த்துப் போடுகின்றனர்”.
ஆனால் இது மிக எளிய புரிதல், உண்மையில் ‘கடந்து செல்லப்படுதலில்’ ‘தன்னடையாளம்’ இழக்கப்படுவதன் ஆபத்தும் இருக்கிறது. அக அடர்த்தி, “கால அலைக்கற்றையுடன் நேர்விகித உறவு கொண்டது” (“Personal Density is directly proportional to temporal bandwith), என்று வரையறை செய்கிறது கிராவிட்டி’ஸ் ரெயின்போ (பக்கம் 517ல் இது குறித்த கர்ட் மொண்டாகன் விதி மேற்கோள் காட்டப்படுகிறது). “நீ எவ்வளவுக்கு எவ்வளவு கடந்த காலத்திலும் எதிர்காலத்திலும் வாழ்கிறாயோ, அந்த அளவுக்கு உன் அலைக்கற்றை அடர்த்தியாக இருக்கிறது, உன் அகம் திண்மையுடன் இருக்கிறது”. வரலாறுகள் அனைத்திலிருந்தும் துண்டித்துக் கொள்வது சதித்திட்டங்கள் தீண்டாத வகையில் காலாதீத விடுதலை அளித்தாலும் அது ஆளுமையின் அழிவுக்கும் காரணமாகிறது.
அப்படியானால் நம் கதிதான் என்ன? பாழ்மண்டலத்தில் எங்கோ ஓரிடத்தில், ‘தேர்வு, கடப்பாடு மற்றும் தேசீயமுமின்றி முன்னேறும் வகையில், ஆயத்தொலைகளின் ஒற்றை இணையொன்று இருக்கக்கூடும்” என்ற மலட்டுப் பகற்கனவு மட்டுமே நமக்கு எஞ்சுகிறது (இங்கு ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். பின்ச்சன் நாவலின் மண்டலம் (Zone), இடம் மட்டுமல்ல, உவமையுமாகும். அது ஒரு விளிம்புப் பகுதி, அல்லது, எல்லைக்கோடுகளற்ற இடம்- நேசப்படைகள் ஜெர்மனியைத் தோற்கடித்தபின் அனைத்து தேசங்களைச் சேர்ந்த அகதிகளும் இங்கு வந்து சேர்கிறார்கள் . இந்த மண்டலத்துக்கு எதிரானது, அதன் சதிகார ஒலிப்புகள் கொண்ட ‘அமைப்பு’ (System). கிராவிட்டி‘ஸ் ரெயின்போ, கடந்து செல்லப்பட்டவர்களின் ‘மண்டலம்’, மற்றும் நிர்வாகத்துக்கு உட்பட்டவர்களின் ‘அமைப்பு’, இவ்விரண்டுக்கும் இடையிலுள்ள வேறுபாடுகளை தொடர்ந்து விவரித்துக் கொண்டே இருக்கிறது).
கிராவிட்டி‘ஸ் ரெயின்போ பற்றி இவ்வளவு போதுமென்று நினைக்கிறேன், அது நீண்ட ஒரு நூல் (பெங்குவின் பதிப்பில் 776 பக்கங்கள்)- வரலாற்று, கலாசார எச்சங்களையும் மேற்கத்தியராய் அல்லாத வாசகருக்கு மர்மமாய் ஒலிக்ககூடிய வேறொரு யுகத்துக்குரிய உதிரித்தகவல்களையும் சுட்டும் அதன் பல்பொருள் தொகுதித்தன்மை சில சமயம் சலிப்பூட்டக்கூடியது. ஆனால் உங்களில் துணிச்சல்காரர்களுக்கு இது ஒரு தடையாய் இருக்க வாய்ப்பில்லை- ஸ்டீவன் வைசன்பர்கரின் கிராவிட்டி’ஸ் ரெயின்போ துணைநூலுடன் இதன் வாசிப்பில் துணிந்து இறங்குங்கள், உங்களுக்கு உதவ பின்ச்சன் விக்கியில் அருமையான தரவுகளும் காத்திருக்கின்றன.
அப்படிப்பட்ட துணிந்த ஆன்மாக்களுக்கே உரியதென தற்போதைக்கு கிராவிட்டி’ஸ் ரெயின்போவின் ‘அரிய இன்பங்களை’ கையளிப்போம், நமக்கு வசப்படும் வெளிகளில் இன்னும் எளிய இன்பங்களைத் தேடிச் செல்வோம். ஆம், க்ரையிங் ஆஃப் லாட் 49 பற்றி கொஞ்சம் பேசலாம். வேகமாய் திருப்பக்கூடிய 178 பக்கங்கள் மட்டுமே கொண்ட இந்த நூல் நம்மால் சமாளிக்கப்படக்கூடிய ஒன்று.
ஒரு வி-2 ராக்கெட், “வானத்தின் குறுக்கே அலறிக்கொண்டு” சென்றது என்று இவ்விரண்டு நாவல்களில் மாபெரும் நோக்கங்களைக் கொண்ட நாவல் துவங்கினால், முந்தைய நாவல் (‘க்ரையிங்’ பின்ச்சனின் இரண்டாவது நாவல்) சற்றே அடக்கமாக, ஒரு கடிதமும் நினைவுக்கு வந்த தொலைபேசி அழைப்பும் ‘அப்பாலிருந்து’ வரும் குரல்கள் என்று துவங்குகிறது. ஈடிபா மாஸின் முன்னாள் காதலன் பியர்ஸ் இன்வெராரிட்டி (Pierce Inverarity) முந்தைய வேனிற்பருவத்தில் இறந்திருக்கிறான், அவன் இறப்பதற்கு முன் எழுதிய சாசனத்தில் பியர்ஸ் கேட்டுக்கொண்டபடி அவன் சொத்துக்களை அவள்தான் நிர்வாகித்தாக வேண்டும். இந்தப் பெயர்களே நகைப்புக்குரிய தூண்டில்களாக இருக்கின்றன, நாவலின் சதிகார நிலவியலில் வாசகனையும் சிக்க வைக்கின்றன. ஈடிபா என்ற பெயர் சொபோக்லிய (Sophoclean) துயர்நாடகங்களைச் சுட்டினால், மாஸ் என்ற பெயர் அறிவியல் புலத்தில் தன் பாதத்தை வலுவாய் ஊன்றி நிற்கிறது.
சரித்திரகால பியர்ஸ் நிஜ வாழ்வில், “தலைகீழ் அபூர்வங்கள்” (Inverse rarities) என்று தொழில் வட்டங்களில் அழைக்கப்படும் அபூர்வமான, குறைபட்ட ஸ்டாம்புகளில் நிபுணத்துவம் கொண்டவன் என்பதை நாவல் தெளிவுபடுத்துகிறது. பியர்ஸ் விட்டுச் சென்ற, ஏறத்தாழ அமெரிக்கா முழுமையும் தனக்குரியதாய்க் கொண்டது போலிருக்கும், சொத்துச் சிக்கல்களை அவிழ்க்க முற்படும் ஈடிபாவின் முயற்சிகளை இந்த நாவல் விவரிக்கிறது (“சான் நார்கிசோ எல்லைகளற்றது. அவற்றை எப்படி வரைவது என்பது யாருக்கும் தெரியாது. பல வாரங்களுக்கு முன், இன்வெராரிட்டி விட்டுச் சென்றதைப் புரிந்து கொள்ள தன்னை அர்ப்பணிப்பது என்று அவள் தீர்மானித்திருந்தாள்- அவனது சாசனம் அமெரிக்கா என்பதை அவள் எப்போதும் புரிந்து கொண்டிருக்கவேயில்லை”). அவளது புகுபயணங்கள் முதல் பார்வையில் ‘பொருளற்றதாய்’ தெரியும் சில சந்தர்ப்பங்களுக்கு அவளைக் கொண்டு சென்று நிறுத்துகின்றன. குழப்பம் நிறைந்த இச்சந்தர்ப்பங்களைப் ‘பொருள்படுத்த’ அவள் மேற்கொள்ளும் ‘தேடலின்’ பதிவுதான் இந்த நாவல். அவள் அடைய முயலும் பொருள், ‘எப்போதும் அவளது புரிதலின் வாயிலுக்கு வெளியே நடுங்கிக் கொண்டிருக்கிறது’.
ஈடிபாவின் பெயரினுள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் நகைப்புக்குரிய தூண்டில் என்று அறிவியலைச் சுட்டியிருந்தேன்- ஆனால் ‘க்ரையிங்’ என்பதையும் ஒரு அர்த்தத்தில் ‘அறிவியல் பொருட்களுக்கிடையில் உணர்வைக் கடத்திச் செல்லும்’ முயற்சிகள் மற்றும் விளைவுகளை விவாதிக்கும் நாவலாகப் பார்க்கலாம். இச்சொற்றொடரின் துவக்கங்கள் வர்ட்ஸ்வொர்த் தனது ‘லிரிகல் பலாட்ஸ்’ தொகுப்புக்கு எழுதிய முன்னுரையில் இருக்கின்றன- அதில் அவர் அறிவியலுக்குரிய ஒரு காலத்தைக் கற்பனை செய்திருந்தார், அக்காலத்தில் அறிவியல், “மனிதர்களுக்கு பழக்கப்பட்ட ஒன்றாக இருக்கும், ஒரு வகையில் சொல்வதானால் அது ரத்தமும் சதையுமான வடிவம் கொண்டிருக்கும்,” அங்கு கவிஞன் தன் “தெய்வீக ஆன்மாவை அதன் உருமாற்றத்துக்கு உதவும் வகையில் இரவல் கொடுப்பான்”. ஆனால் இருபதாம் நூற்றாண்டிலோ வாழ்வைவிடப் பெரிதாய் அறிவியல் உயர்ந்து நிற்கிறது, நாவலாசிரியர் பின்ச்சன் இதற்கு எதிர்த்திசையில் சென்று, ‘ரத்தமும் சதையுமான’ உயிரிகளை அறிவியலும் தொழில்நுட்பமும் ஊடுருவி நிறைக்கும் சாத்தியங்களை விவாதிக்கிறார்.
கிறுகிறுக்க வைக்கும் தன் கதையை நகர்த்திச் செல்ல அறிவியலுக்குரிய சில அடையாளச் சின்னங்களை ‘க்ரையிங்’ களிப்புடன் எடுத்தாள்கிறது: இவற்றுள் மிக முக்கியமாய் குறிப்பிடத்தக்கன என்றால் மாக்ஸ்வெல்லின் பூதம், இயல்பாற்றல், தகவல் பரிமாற்றக் கோட்பாடு முதலானவற்றைச் சொல்லலாம். தன் நீண்ட, திசைமாறித் திரியும் பயணங்களூடே ஈடிபா “யோயோடைன்’ என்ற அரசு ஒப்பந்தத் துறையில் பணிபுரியும் ஸ்டான்லி கொடக்ஸ்சைச் சந்திக்கிறாள்- அவனே அவளுக்கு மாக்ஸ்வெல்லின் பூதத்தை அறிமுகப்படுத்துகிறான்.
1871ஆம் ஆண்டு “வெப்பக் கோட்பாடு” என்ற நூலில், மாக்ஸ்வெல் பூதத்தை நிர்மாணிப்பது குறித்து பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ்பெற்ற இயற்பியலாளர் மாக்ஸ்வெல் எழுதியுள்ளார். இந்தச் சிந்தனைச் சோதனையில் ஒரு கொள்கலம், நடுவில் துளையிடப்பட்ட ஒரு தகடால் ‘ஏ’, ’பி’ என்ற இரு பிரிவுகளாய் பிரிக்கப்படுகிறது. இந்தத் துளை திறக்கவும் மூடப்படவும் கூடிய ஒன்று. கொள்கலனில் உள்ள ஒவ்வொரு மூலக்கூறின் பாதையையும் அனுமானிக்கக்கூடிய ஆற்றல் படைத்த பூதம் ஒன்று துளையின் அருகில் இருப்பதாக மாக்ஸ்வெல் எடுத்துக் கொள்கிறார். ‘ஏ’ பிரிவில் வேகமாக நகரும் மூலக்கூறுகள் ‘பி’ பிரிவுக்குச் செல்வதையும், ‘பி’ பிரிவில் உள்ள நிதானமான மூலக்கூறுகள் ‘ஏ’ பிரிவுக்குள் வருவதையும் அனுமதிக்கும் வகையில் இந்த பூதம் துளையின் அடைப்பைத் திறந்து மூடுகிறது. இதைச் செய்யும்போது, வெப்ப இயக்கவியல் விதிகளுக்கு முரணாக எந்த ஆற்றலும் செலவழிக்காமல் ‘ஏ’ பிரிவில் உள்ள வெப்பம் குறையும், ‘பி’ பிரிவில் வெப்பம் கூடும். ‘ஆற்றல் இழப்பின்றி சீதோஷ்ண நிலையோ அல்லது அழுத்த நிலையோ சமநிலை அடைய இயலாது’ என்று வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதி கூறுகிறது. ஒரு புனைவில் இந்த அறிவியல் சூத்திரங்களுக்கு என்ன வேலை என்று நீங்கள் நினைக்கலாம். இதைப் பின்னர் பேசுவோம், இப்போதைக்கு, விரையும் மூலக்கூறுகளும் நிதானிக்கும் மூலக்கூறுகளும் தனித்தனியாக பிரித்தெடுக்கப்படும்போது, வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதிக்கு மாறாய், பாத்திரத்தில் உள்ள ‘ஒழுங்கு’ அதிகரிக்கிறது என்பதை மட்டும் கவனிப்போம். அதாவது, பாத்திரத்தின் இயல்பாற்றல் குறைகிறது, இயல்பாற்றல் என்பது ஒரு அமைப்பில் உள்ள ஒழுங்கின்மையின் அளவை.
“எல்லாவற்றையும் சீரமைக்க வேண்டும்,” என்ற பணி ஈடிபாவுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்றும், அவள் “அவளுக்கு அளிக்கப்பட்ட தினங்களின் தடிமனான கற்றையை கலைத்து அடுக்கிக் கொண்டிருந்தாள்”, என்றும் நாம் வாசிக்கும்போது மாக்ஸ்வெல் பூதத்தின் புனைவுலக உருவம் அவள் என்பது நாவலின் துவக்கத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்டு விடுகிறது. இதையடுத்துத் தொடரும் நாவல் புலப்படுத்தும் குறிப்புகள், பொய்த் துவக்கங்கள் மற்றும் குறிகளின் பெருமழையில் அவளை மூழ்கடிக்கிறது, அவளும் தொடர்ந்து அவற்றைக் கலைத்து அடுக்கி, சீரமைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறாள். மாக்ஸ்வெல் பூதத்தை கொடக்ஸ் அவளுக்கு அறிமுகப்படுத்தும்போது, தன்னிறைவு கொண்ட ஒரு அமைப்பின் குழப்ப நிகழ்வுகளில் ஒழுங்கையும் தொடர்புகளையும் அறிமுகப்படுத்தக்கூடிய, ‘தொடர்புறுத்தும் கூறாக’ அதை அவள் உள்வாங்கிக் கொள்கிறாள். ” தனக்களிக்கப்பட்ட சாசனம் நட்சத்திரங்களைப் போல் சுடரும் வகையில், அதற்குரிய பொருளை அளிக்கும் வகையில், கோளகத்தின் மையத்தில் உள்ள இருண்ட இயந்திரமாக,” தான் மாறியாக வேண்டும் என்ற தீரமான முடிவை அவள் மேற்கொள்கிறாள்.
இந்த ஈடிபா இயந்திரம், குழப்பம் மிகுந்த நுண்விவரங்களின் அடர்ந்த தொகைக்கூட்டில் தீவிரமாக, தடுமாறி முன்னேறி, ‘ட்ரிஸ்டேரோ’ (Tristero) என்ற மர்ம அமைப்பை எதிர்கொள்கிறது. அது, ‘வேஸ்ட்’ (W.A.S.T.E) என்றழைக்கப்படும் ரகசிய தபால் சேவையொன்றை அளிக்கும் அமைப்பு. சீரமைப்பே மாக்ஸ்வெல் பூதத்துடன் ஈடிபாவை இணைக்கும் கூறு எனில், அர்த்தப்படுத்தலுக்கான அவளது தொடர்ந்த தேடலும், பரவுணர்வுப் பிறழ்ச்சி உற்பத்தியும் மேலும் மேலும் தொடர்ந்து முடிவற்ற துப்புக்களை அளித்துக் கொண்டே இருக்கின்றன- வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதியை மீறி மாக்ஸ்வெல் பூதம் செய்திருக்கக்கூடியது போன்ற ஒரு நித்திய அர்த்த உற்பத்திச் சாதனமாய் இந்த இயந்திரம் ஆகிறது.
ஆனால் இங்கு ஒரு நுண்ணிய பிழைபுரிதல் உள்ளது, கவனமாய் வாசிக்கும் வாசகர் இதை உணர முடியும், தன் தேடலின் இக்கட்டத்தில் ஈடிபா அது பற்றிய அறிதலற்று இருக்கிறாள். வேகம் கூடியும் குறைந்தும் இங்கும் அங்கும் சிதறித் திரியும் மூலக்கூறுகளின் குழப்பமும் ஒழுங்கின்மையும் ஈடிபாவால் தனக்கேயுரிய யதார்த்தத்தின் உவமையாக புரிந்து கொள்ளப்படுகின்றன. எனவேதான் எவ்வகையிலும் தீர்மானிக்க முடியாத ஒரு யதார்த்தத்தை சீரமைத்து ஒழுங்குபடுத்தும் உத்வேகம் அவளது இயல்பாகிறது. ஆனால் பூதத்தால் உருவாக்கப்படும் ஒழுங்கும் பேதங்களற்ற ஒன்றாகப் பார்க்கப்படும் வாய்ப்பு இருக்கிறது, தனித்தன்மை அற்ற ஒரு நிலை, தேக்கத்துக்கும் அணிவகுப்பின் ஒத்திசைவுக்கும் கொண்டு செல்வது.
எனினும் ட்ரிஸ்டேரோவுக்கான அயராத துப்பறிதல் “இது அல்லது அது” என்று சங்கிலித் தொடராய் நீளும் இரட்டைத் தேர்வுகளுக்கு அவளை இட்டுச் செல்கிறது: ஒன்று சரித்திரத்தில் பதியப்பட்ட, காலங்காலமாய் தபால் வழி மோசடி செய்து கொண்டிருக்கும் மெய்யுலக வரலாற்று பிரசித்தி ட்ரிஸ்டேரோவுக்கு இருந்தாக வேண்டும், அல்லது அது ஒரு கற்பனைக் கட்டமைப்பு மட்டுமே, “சதித் திட்டம், விரிவாக வடிவமைக்கப்பட்ட வசியத் திட்டம்’; அது ஒரு சதிகார அமைப்பாக இருக்கலாம், அல்லது இறந்தபின்னும் அவளை பியர்ஸ் ஆட்கொள்ள உதவும் மாபெரும் புரட்டாக இருக்கலாம்.
ஜெகோபிய காலத்து வஞ்சம் தீர்க்கும் கதையைச் சொல்லும் நாடகம், தி கூரியர்ஸ் ட்ராஜடியைப் (The Courier’s Tragedy) பார்த்துக் கொண்டிருக்கும் ஈடிபா, அதில் ட்ரிஸ்டேரோ குறித்து பேசப்படுவதைக் கண்டு மற்றுமொரு பொய்மான் வேட்டையில் இறங்குகிறாள் – அந்த நாடகத்தின் பல்வேறு வடிவங்களை, அதன் மாறு கதைகளைத் தேடுகிறாள். இது தணித்த கொம்பு (Muted Horn) (வேஸ்ட்டின் சின்னம்) வெவ்வேறு இடங்களில் வெளிப்படக் காரணமாகிறது, ஆனால் இதில் எதுவும் ஒன்றுகூடி மையத்தில் உள்ள ‘நட்சத்திர உண்மையை” வெளிப்படுத்துவதில்லை.
லெவோ சிலார்ட், லியோன் ப்ரிலுவன் (Leo Szilard, Leon Brillouin) போன்ற இயற்பியலாளர்கள் மாக்ஸ்வெல்லின் முடிவிலிக்கு வெற்றிகரமான பதில் கண்டுள்ளனர். சைலார்ட் அனுமானத்தில் ஒழுங்கின்மை, அல்லது, இயல்பாற்றல் குறைபடும் எச்செயலும் அதற்கு முன் தகவல் சேகரிப்பில் துவங்கியிருக்க வேண்டும், அது இயல்பாற்றலைச் சம அளவில் அல்லது மிகுதியாக பெருக்குவதாக இருக்கும் என்றார். இதுபோலவே ப்ரிலுவனும், சமநிலை பேணும் நிகழ்வாய் இல்லாத காரணத்தால் புலனனுபவமும் இயல்பாற்றலைக் கூட்டுவதாக இருக்கும் என்றார். ட்ரிஸ்டேரோ, வேஸ்ட், ஊமைக் கொம்பு முதலானவற்றைத் தேடும் ஈடிபா இறுதியில் மிகப்பெரும் எண்ணிக்கையில் தகவல் சேகரித்து, அதன் துவக்கமும் முடிவும் காண இயலாத குழப்பத்தில் சிக்கிக் கொள்கிறாள். தன்னால் தொகுக்கவியலாத அளவு தகவல் சேகரித்த பொருள் காணும் இயந்திரம் அதன் இயல்பாற்றல் சுமை தாளாமல் உடைந்து போகிறது. இறுதியில், வெப்ப இயங்கியல் விடுக்கும் கடும் எச்சரிக்கைக்கு ஏற்ப, இயல்பாற்றலே வெற்றி பெறுகிறது,
தகவல் பரிமாற்றக் கோட்பாட்டின் நிழல்களையும் ‘க்ரையிங்’ நாவலில் விமரிசகர்கள் காண்கின்றனர்- குறிப்பாக, பரிமாற்றத்தின்போது தகவல் இழக்கப்படவும் திரிபடையவும் வாய்ப்புள்ளது என்ற முடிபு. தி கூரியர்‘ஸ் ட்ராஜடி நாடகத்தின் பல்வேறு வடிவங்களை ஈடிபா தேடுவதைக் குறிப்பிட்டிருந்தேன். தேடலைத் துவக்கும் வரிகள் இவை: “No hallowed skein of stars can ward, I trow, / Who once been set his tryst with Trystero.” இதில் ஏதோ ஒரு மறைபொருள் புதைந்திருக்கிறது என்ற எண்ணம் ஈடிபாவின் மனதில் வேரூன்றுகிறது, இவற்றின் மாற்று வடிவங்கள் அதற்கான தடயம் எதுவும் கொண்டுள்ளனவா என்று தேடுகிறாள். பல்வேறு பதிப்புகளில் இந்த வரிகளை அவள் எதிர்கொள்கிறாள், ஆனால் அவை ஒவ்வொன்றும் சற்றே திரிபட்ட வடிவில் இருக்கின்றன என்பது அவளுக்கு ஏமாற்றம் அளிக்கிறது (“Who once has crossed the lusts of Angelo”, “This Tryst or odious awry, O’Niccolo”). இந்த மாறுபாடுகள் ஒவ்வொன்றும் தத்தம் திரிதல்களுக்கு இடம் அளிக்கின்றன, நகைப்புக்குரிய இந்தத் தேடல் இறுதியில் ஈடிபா காணும் குழந்தைகள் விளையாட்டின் அபத்த பாடலில் வந்து முடிகிறது. “Tristoe, Tristoe, one, two, three …. / Turning Taxi from across the sea…” என்று அக்குழந்தைகள் பாடுகின்றன தன் தேடல் குறித்து பரவுணர்வுப் பிறழ்ச்சி கூடிய மனநிலையில் உள்ள ஈடிப்பா, “Thurn and Taxis, you mean?”, என்று குழந்தைகளிடம் கேட்கிறாள் (ஐரோப்பாவில் தபால் சேவையில் ஈடுபட்டிருந்த நிஜமான, பதினாறாம் நூற்றாண்டு ஜெர்மன் குடும்பம் அது). தகவல் கூட்டும் பரிமாற்றல் துரதிருஷ்டவசமாக பொருளற்றதாகவும் ஆகிறது. இந்நேரத்தில் வாசகரும் ‘தி கூரியர்‘ஸ் ட்ராஜடி‘ நாடகத்தின் இயக்குனர் ட்ரிப்லெட்டின் முடிவை வந்தடைந்து விடுகிறார், “அவள் தன் வாழ்நாள் முழுவதையும் இப்படி வீணாக்கினாலும் உண்மையை எப்போதும் தொடக்கூட முடியாது”.
நாவலின் இறுதியில் இன்வெராரிட்டியின் ஸ்டாம்ப் சேகரிப்பில் ட்ரிஸ்டேரோ செய்த போலிகள் லாட் 49ல் ஏலம் விடப்படப் போவதாக ஈடிபா அறிகிறாள். அதை வாங்குவதில் ஒரு மர்ம நபருக்கு ஆர்வம் இருக்கிறது (தலைப்பில் உள்ள க்ரையிங் என்பது, ஏலம் விடும்போது உரக்கக் கூவுவதைக் குறிக்கிறது). நாவலின் கடைசி வாக்கியத்தில் ஈடிபா, “லாட் 49 ஏலம் விடப்படுவதற்காக” சாய்ந்து அமர்கிறாள் என்று முடிகிறது.
க்ரையிங், அதன் சிக்கலான சுட்டல்கள், சிலேடைகள், பிழைபொருள் உணர்த்தல்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் சிந்தனைகள் மற்றும் சமிக்ஞைகள் வழியே பொருள்படுதலின் சிடுக்கான வலை ஒன்றைப் பின்னி, மைய உண்மை என்று ஒன்றில் இணையாமல் முடிவுக்கு வருகிறது. ‘ட்ரிஸ்டேரோ’வின் பொருள் எப்போதும் தள்ளி வைக்கப்படுகிறது, அது எப்போதும் வளர்ந்து கொண்டே இருப்பது. பொருள்வரை செய்யப்பட முடியாத ஒரு பிரதியின் முன்னும், அப்பிரதியில் உத்பவித்து பல்கிப் பெருகி, உட்பொருளை முழுமையாய் விவரிக்க இயலாது தோன்றி மறையும் விளக்கவுரைகளின் முன்னும், ஈடிபாவைப் போல் வாசகர்களாகிய நாமும் நிற்கிறோம். ஆனால் நாம் ஈடிபாவிடமிருந்து நம்பிக்கை பெறலாம்- அவள் இறுதி போராட்டத்தில் துணிச்சலாய் இறங்குகிறாள், லாட் 49 ஏலம் விடப்படக் காத்திருக்கிறாள். பியர்ஸ் அவளுக்கு அளிக்கும் அறிவுரை நமக்கும் பொருந்தும்: “துள்ளிக்கொண்டே இருக்கட்டும்” (“Keep it Bouncing)”.
———————————-
Sources / Further Reading :
Gravity’s Rainbow, Thomas Pynchon, Penguin Great Books of 20th Century
The Crying of Lot 49, Thomas Pynchon, Harper Perennial
Mindful Pleasures, edited by George Levine & David Leverenz