தீப்பொறியின் கனவு

This entry is part 40 of 48 in the series நூறு நூல்கள்

கிராமத்துச் சிறுவனின் அண்டவெளிப் பயணம்

CodeName_God

புத்தக அறிமுகம்:   மணி பெளமிக் எழுதிய ‘கடவுளின் கையெழுத்து’
’சமயம் தவிர்த்த விஞ்ஞானம் முடமானது, விஞ்ஞானம் தவிர்த்த சமயம் பார்வையற்றது’ என்ற ஐன்ஸ்டீனின் பொன்மொழியுடன் தொடங்குகிறது மணி பெளமிக் எழுதியிருக்கும் இந்தப் புத்தகம். தன்வரலாற்றுத் தகவல்களும் அறிவியல் தகவல்களும் ஆன்மிகம் சார்ந்த தகவல்களும் நூல்முழுக்க மாறிமாறி இடம்பெற்று வாசிப்பை சுவாரசியமாக்குகின்றன. மணி பெளமிக்கின் மொழி மிகவும் நேரடியானதாகவும் எளிமையானதாகவும் உள்ளது. புரிந்துகொள்வதற்கு மிகவும் கடினமான இயற்பியல் கொள்கைகளையும் தத்துவத் தகவல்களையும் பொருத்தமான எடுத்துக்காட்டுகளோடு அழகாக முன்வைக்கிறார் அவர்.
ஐம்பதாண்டுகளுக்கும் மேற்பட்ட அறிவியல் துறைத் தொடர்பும் ஞானமும் உள்ளவர் என்னும் நிலையில் அவர் ஒவ்வொரு தகவலையும் சிறப்பான வாக்கியங்கள் மூலம் வாசகர்களின் மனத்தில் பதியவைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார். பெளமிக் கையாண்டிருக்கும் மொழியின் அழகையும் எளிமையையும் கே.எஸ்.சுப்பிரமணியம் அவர்களின் தமிழாக்கத்திலும் காணமுடிகிறது. பல அறிவியல் கலைச்சொற்களை மிகவும் கச்சிதமாகவும் நேர்த்தியாகவும் எந்தக் குழப்பத்துக்கும் இடமில்லாத வகையிலும் மொழிபெயர்த்திருக்கிறார்.
வெளிப்படு புலம், வெளிப்படா புலம், மகரக்கதிர்கள், மின்னியக்க ஒளியியல் முறை, முன்னுச்சி முனை ஓடு, கோர்வைக்கண்ணி, துகள்முடுக்கி, ஒளியியல் ஏற்றம், ஆழ் இருட்குழி என நூற்றுக்கும் குறையாத கலைச்சொற்களை கே.எஸ்.சுப்பிரமணியன் இந்நூலில் உருவாக்கியிருக்கிறார். இச்சொற்கள் தமிழுக்கு இவருடைய கொடை.
அண்டவியல் என்பது மணி பெளமிக் ஆர்வமுடன் ஈடுபட்டு உழைத்த துறை. கலிலியோ, கெப்ளர் தொடங்கி நியூட்டன், ஐன்ஸ்டீன், ஃபாரடே, ஜேம்ஸ் ஜார்ஜ், ஃப்ராங்க் வில்ஸெக், ரிச்சர்ட் ஃபேய்மன், ஸ்டேவன் லாமொரெஷ், ஜேம்ஸ் க்ளார்க், ரோஜர் பென்ரோஸ், ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் என எண்ணற்ற அறிவியலாளர்களின் கண்டுபிடிப்புகளையும் கருத்தாக்கங்களையும் கற்றுத் தேர்ச்சியடைந்த பின்னணியில் அண்டவியலைப்பற்றி தனித்ததொரு பார்வையை வந்தடைந்திருக்கிறார் மணி பெளமிக். அதே சமயத்தில் இந்த அண்டத்தைப்பற்றி சமயங்கள் எப்படிப்பட்ட கருத்தை வைத்திருக்கின்றன என்னும் அம்சத்தையும் அவர் தெரிந்துவைத்திருக்கிறார். அதனால் அண்டவியலை சமயம் எவ்வாறு அணுகுகிறது, அறிவியல் எவ்வாறு அணுகுகிறது என்பதை ஒரு தேர்ந்த கதைசொல்லியைப்போல ஒவ்வொரு அத்தியாயமாக அழகுற விளக்கிச் சொல்கிறார்.
இருள் குழியிலிருந்து, லேஸர் கதிர் மொட்டவிழ்ப்பு, க்வாண்டம் பாய்ச்சல்களில், செயலிழந்தது ரங்கராட்டினம். ஆதியான மூலத்தை நோக்கி, கடவுள் என்னும் குறியீடு, வானகத்தறி, இயற்பியலின் பெரும்புதிர், மொட்டு விரியும் பேரண்டம், அண்டமும் நாமும், விஞ்ஞானம் – சமயம் சந்திப்பு என  பத்துக்கும் மேற்பட்ட அத்தியாயங்கள் முழுதும் இப்படிப்பட்ட விளக்கங்களால் நிறைந்துள்ளன. ’வானகத்தறி’ என்னும் அழகான சொல் ஒரு கவிதையிலிருந்து தப்பி விழுந்த சொல்போல மனத்தில் அலைந்தபடியே இருக்கிறது.
மணி பெளமிக் முன்வைத்திருக்கும் விவாதப்பொருளை இப்படி சுருக்கமாகத் தொகுத்துக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது. மின்சக்திக்கும் காந்த சக்திக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. இவ்விரண்டும் இணையும்போது மின்காந்த சக்தியாக மாற்றம் பெறுகிறது. இச்சக்தி அலைகளாக தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது. இந்த அலைகள் ஓர் ஊடகம் வழியாகத்தான் பயணிக்கமுடியும் என்னும் நம்பிக்கை முதலில் இருந்தது. இந்த ஊடகம் ‘ஈதர்’ அல்லது நுண்புலம் என்று கருதப்பட்டது. ஆனால் ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்பு இந்த ஊடகம் ஒரு வெற்றுவெளி என்னும் உண்மையை நிறுவியது. வெளி, காலம், புலம் எதுவுமே தனித்து இருப்பவை அல்ல. அவை எப்போதும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவையாக உள்ளன.
புலம் என்பது வெளியின் பெளதிக நிலை. ஒரு புலம் இல்லாமல் வெளி இல்லை. ஒரு கம்பிச்சுருளில் மின்னோட்டத்தை ஏற்படுத்துவது புலத்தாக்கத்துக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. அதுபோலவே புவியின் காந்தப்புலம் திசைகாட்டியின் முள்ளை வடக்கு-தெற்கு அச்சுடன் இணையச் செய்கிறது. இந்தப் புவிக்கோளத்தில் நாம் எங்கு இருந்தாலும் இத்தகைய நிகழ்வுகள் புலங்களின் அடிப்படை வரையறையுடன் ஒத்துப் போகின்றன.  அதாவது புலம் வெளியின் ஒரு பரப்பில் ஊடுருவி நிற்கிறது. எந்தப் புள்ளியிலும் அதன் இருப்பை உணரலாம். இது தெளிவாக இயங்கும் புலம். இதுபோலவே தெளிவற்ற புலங்களும் வெளியில் நிறைந்திருக்கின்றன. இவை க்வாண்டம் புலங்கள். அண்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சம அளவில் இந்தப் புலங்கள் நிறைந்திருக்கின்றன. இந்தப் புலங்கள் துகள்களால் நிறைந்திருக்கின்றன. இத்துகள்கள் ஒருவகையில் சக்தித்திரள்கள். க்வாண்டம் புலம் வெளியிலிருந்து இடையறாது சக்தியைக் கடன் வாங்கிக்கொண்டே இருக்கிறது. அதே சமயத்தில் எண்ணற நிழல்துகள்களை ஜோடிஜோடியாக உற்பத்தி செய்தபடியே இருக்கிறது.
உண்மையின் முதன்மைக் கூறுகளே பல்வகைப் புலங்கள். இவை வெளி- காலப்பரப்பில் நீக்கமற நிறைந்துள்ளன. அனைத்துப் புலங்களும் ஒரு முதன்மைப் புலத்திலிருந்தே உருவாகின என்பதை நிலைநிறுத்தும் நுழைவாயிலில் இயற்பியலாளர்கள் இன்று இயங்கி வருகிறார்கள். அண்டத்தை ஈன்றெடுத்த இந்த முதன்மைப்புலம் அண்டத்தின் நெசவிலேயே ஓர் உறுப்பாக விளங்குகிறது என்று கருத இடமிருக்கிறது. எனவே, இந்தப் புலம் பெளதிக இருப்புள்ள அனைத்தின் ஆதார அம்சங்களை இயக்குகிறது என்று கருதலாம். இக்கருத்தின் நீட்சி, சமயங்களால் முன்வைக்கப்படும் ‘ஒற்றை மூலம்’ என்னும் கருத்துக்கு நெருக்கமாக இருப்பதை உணர முடியும்.
எல்லா மெய்யியல் வாதங்களையும் சமயக்கூறுகளையும் தாண்டி ஒன்றை நம்மால் காணமுடிகிறது. மனிதகுலம் படைப்புச்சக்தி என்னும் கடவுள் தத்துவத்தை ஏற்றுக்கொண்டே உள்ளது. பிரபஞ்சத்தைப் படைத்த பிறகு இந்தக் கடவுள் அதன் ஊடாகவே நிறைந்து நிற்கிறார் என்பதையும் ஏற்றுக்கொண்டுள்ளது. காட்சியளவில் இது நிரூபிக்கப்பட முடியாத ஒன்றாக இருக்கலாம். ஆயினும் இக்கடவுளை நம் வணக்கத்துக்குரியவராக நெடுங்காலமாக நாம் கருதி வந்திருக்கிறோம். மானுட வரலாற்றில் முதன்முறையாக சமயத்தின் ‘ஒற்றை மூலம்’ என்னும் அணுகுமுறை விஞ்ஞானத்தின் ‘ஒற்றை மூலம்’ அணுகுமுறையோடு நெருங்கி வந்து நிற்கிறது.
இது ஒரு தொடக்கம் மட்டுமே. இப்படிப்பட்ட எண்ணற்ற வரையறைகளால் அண்டம் சார்ந்த பல கருதுகோள்களை, இயற்பியலில் ஓரளவு பயிற்சியும் வாசிப்பனுபவமும் உள்ள வாசகர்கள்  உள்வாங்கிக்கொள்ளும் அளவுக்கு நேர்த்தியாக விவரித்திருக்கிறார் பெளமிக். பிறகு மைய சக்தி என்னும் கருத்தாக்கத்துக்கும் பிரும்மம் என்னும் கருத்தாக்கத்துக்கும் உள்ள நெருக்கத்தை சமயக்கருத்துகள் வழியாக வரையறுக்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுகிறார். எந்த இடத்திலும் ’இதுதான் அது, அதுதான் இது’ என்று சுட்டிக்காட்டும் எண்ணம் அவரிடம் வெளிப்படவில்லை. ஒன்றை இன்னொன்றால் புரிந்துகொள்ளும் முயற்சி மட்டுமே அவர் நோக்கத்தில் இருக்கிறது.
அறிவியலுக்கும் சமயத்துக்கும் சரிபாதி இடம் கொடுத்தபடி நகரும் நூலில் இன்னொரு முக்கியமான பகுதியும் இடம்பெற்றிருக்கிறது. தன் சொந்த வாழ்க்கையிலிருந்து அவர் பகிர்ந்துகொள்ளும் உண்மைகளால் அப்பகுதி நிறைந்திருக்கிறது. இப்படி மூன்று பகுதிகளால் ஆன கலவையாக இப்புத்தகம் மலர்ந்திருப்பதே இதன் வெற்றி என்று சொல்லத் தோன்றுகிறது.
பெளமிக்கின் தன்வரலாற்றுத் தகவல்கள், இந்தியாவில் வங்காளக் கிராமமொன்றில் பிறந்து ஏழ்மையிலும் சாதி வேறுபாடுகளுக்கிடையிலும் வளர்ந்த ஒரு சிறுவன் தன் தீராத கல்வித்தாகத்தாலும் தேடலாலும் கலிபோர்னியா வரைக்கும் சென்று, இந்த உலகத்துக்கே பயன்படும் வண்ணம் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய பயணத்தை விவரிக்கின்றன. அவருடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் பல தற்செயல்களால் நிறைந்திருக்கின்றன. ஏற்கனவே திட்டமிட்டு விண்ணைநோக்கி செலுத்தப்படும் விண்கலத்தைப் போல இயற்கையின் தற்செயல்கள் அவரை அறிவியல் ஆய்வுக்களத்தை நோக்கிச் செலுத்துவதைப் படிக்கும்போது மனம் விம்முவதை கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தந்தைக்கு மகனாகப் பிறந்து, தீராத இன்னல்களுக்கிடையே கல்வித்தாகத்தோடு கற்றுத் தேர்ச்சியடைந்து, சுதந்திர இந்தியாவின் முதல் தலைமுறைப்பட்டதாரியாக உயர்ந்தவர் மணி பெளமிக். இந்தியாவின் புகழ்பெற்ற கரக்பூர் ஐ.ஐ.டி. தொழில்நுட்ப மேற்கல்வி நிறுவனத்தில் இயற்பியல் முனைவர் பட்டம் பெற்றவர். இந்தத் துறையில் பட்டம் பெற்ற முதல் பட்டதாரி இவரே. ஒரு நற்பணி நிறுவனம் வழங்கிய உதவித்தொகையுடன் அமெரிக்காவில் முதுமுனைவர் ஆய்வை மேற்கொண்டு லேஸர் தொழில்நுட்பத்தில் அரியதொரு கண்டுபிடிப்பை நிகழ்த்தியதற்காக உலகப்புகழ் பெற்றவர்.
இந்தத் தொழில்நுட்பமே உலகெங்கும் கண் அறுவை சிகிச்சைக்கு அடித்தளமானது. இயற்பியல் துறையில் அவருடைய பங்களிப்புக்காக அமெரிக்க இயற்பியல் கழகத்திலும் மின்னியல் / மின்னணுவியல் பொறியிலாளர்கள் கழகத்திலும் உறுப்பினராக கெளரவிக்கப்பட்டார். தான் பிறந்து வளர்ந்த வங்காளத்து மண்ணை மறக்காமல் தன் பெயரிலேயே அங்கொரு அறக்கட்டளையை நிறுவி ஆண்டுதோறும் எண்ணற்ற இளைஞர்களுக்கு அறிவியல் / மருத்துவக் கல்வி பயில முழுமையான அளவில் நிதியுதவி அளித்து வருகிறார். ‘மணி என்ற ரத்தினம்’ என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள அவருடைய வாழ்க்கை வரலாறு வங்காளத்தில் தொடர்ச்சியாக விற்பனையின் உச்சத்தில் விளங்கும் நூலாகும்.

Dr_Mani_Bhaumik

மணி பெளமிக்கின் சொந்த ஊர், வங்காளத்தில் பண்டைய புத்தத்தலமான தாம்லுக் என்னும் கிராமமாகும்.  தாயார் லோலிதா. தந்தையார் குணாதர் பெளமிக்.  அவர்  ஒரு பள்ளியாசிரியராகப் பணியாற்றினார். விடுதலைக்காக இந்தியா முழுதும் காந்தியின் தலைமையின் ஓர் எழுச்சி உருவாகிக்கொண்டிருந்த காலகட்டம் அது. அவருடைய அகிம்சைக்கொள்கையால் அவர் ஈர்க்கப்பட்டார். இதனால் அடிக்கடி தலைமறைவு வாழ்க்கையை அவர் மேற்கொள்ள வேண்டியதாயிற்று. அந்த நேரத்தில் அவரைத் தேடிவரும் காவல் துறையைச் சேர்ந்த ஆட்களால் வீட்டில் இருந்த அவருடைய அம்மாவும் பாட்டியும் தீராத துன்பத்துக்கு உள்ளானார்கள்.
ஒருமுறை குணாதரைத் தேடிவந்த காவலர்கள் வீட்டில் கைக்குக் கிடைத்த பொருட்களையெல்லாம் எடுத்துச் சென்றுவிட்டார்கள். ’சமைக்கவோ, சாப்பிடவோ ஒரு பொருளும் கிடையாது. குணாதர் ஒருமுறை ரகசியமாக வீட்டுக்கு வந்திருந்தபோது, தன்னுடன் மற்றொரு விடுதலைப் போராளியான மாதங்கினி என்னும் பெண்மணியையும் அழைத்து வந்தார். அவர் ஒரு கைம்பெண். வரதட்சணை கொடுக்க வழியில்லாமல் தன் பன்னிரண்டாவது வயதில் அறுபது வயது பெரியவர் ஒருவரை மணந்து, ஆறேழு ஆண்டுகளில் அவர் இறந்ததும் விதவையானவர். அதைத் தொடர்ந்து மூத்த தாரத்தின் பிள்ளைகளால் விரட்டியடிக்கப்பட்டவர். பிறகு காந்திய இயக்கத்தில் ஈடுபட்டு, தேச சேவைக்குப் பாடுபடத் தொடங்கினார். குணாதரின் குடும்பத்தில் ஒருவராகவே அவர் வாழ்ந்தார். மன உறுதியின் மேன்மையை தனக்கு போதித்தவர் மாதங்கினி என்று நெகிழ்ச்சியுடன் பல இடங்களில் குறிப்பிடுகிறார் மணி பெளமிக். ‘ஒருபோதும் தளர்ச்சியுறாதே, இலக்கைக் கைவிடாதே’ என்றும் ‘விடாமுயற்சியின்றி எதையும் அடைய முடியாது’ என்றும் அவர் சொன்ன சொற்களை ஆப்தவாக்கியங்களாகவே தன் மனம் உள்வாங்கிப் பதித்துவைத்துக்கொண்டதாகக் குறிப்பிடுகிறார்.
ஒருமுறை சுதந்திரக் கொடியை கையில் ஏந்தியவாறு ஒரு பேரணியில் முன்னணியில் நடந்துகொண்டிருந்தார் மந்தாகினி. இடையில் புகுந்த காவலர்கள் ஊர்வலத்தைத் தொடர்ந்து செல்லவிடாமல் தடுத்தார்கள். தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்றபோது, காவலர்கள் தடியடி நடத்தத் தொடங்கினார்கள். மந்தாகினி தடியடிக்கு ஆளானார். ஆறு மாத சிறைவாசத்துக்குப் பிறகு அவர் விடுதலையானார். உடல்நலிவுற்ற நிலையிலும் அவர் தன் சேவையுணர்வை கைவிடவில்லை. தம்லுக்கில் மீண்டும் ஒரு போராட்டம். நீண்டதொரு பேரணியின் முன்னணியில் நின்றார் மந்தாகினி.  சுதந்திரக்கொடியைக் கையில் ஏந்தியபடியும் ’வந்தே மாதரம்’ என்று முழங்கியபடியும் நடைபோட்டபடி இருந்தார்.
அமைதியாகச் சென்றுகொண்டிருந்த ஊர்வலத்தின் மீது காவலர்கள் கட்டுப்பாடின்றி சுடத் தொடங்கினார்கள். முதல் துப்பாக்கிக்குண்டு மந்தாகினியின் இடது கையைத் துளைத்தது. இரண்டாவது குண்டு அவர் காலைத் தாக்கியது. மூன்றாவது குண்டு அவருடைய நெற்றியைத் துளைத்து அவருடைய மண்டையோட்டின் பின்புறமாக வெளியேறிச் சிதறியது. தமிழ்நாட்டில் கொடி காத்த திருப்பூர்க் குமரனைப்போல வங்காளத்தில் கொடி காத்த மந்தாகினியின் தியாகம் மகத்தானது. இரண்டு வார இடைவெளியில் தம்லுக் கிராமத்தை சூறாவளியும் வெள்ளமும் தாக்கின. ஊரே வெள்ளத்தில் மூழ்கியது. தொடர்ந்து பஞ்சம். பாட்டியின் ஆதரவில் பிழைத்திருந்த சிறுவன் பெளமிக், பாட்டியின் மரணத்தைத் தொடர்ந்து ஊரைவிட்டு வெளியேறினான். வழியில் ஒரு திறந்தவெளிப் பள்ளியைக் கண்டுபிடித்து, அங்கே தஞ்சமடைந்தான். அவனுடைய அறிவாற்றலை எல்லோரும் மெச்சினார்கள். ஆயினும் அவனுடைய சாதி அடையாளத்தால் பல இன்னல்களை அவன் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. முன்னேற வேண்டும் என்னும் வேகத்தில் எல்லா அவமானங்களையும் அவன் சகித்துக்கொண்டான்.
தம்லுக் கிராமத்துக்கு அருகில் ஒரு முகாமை நிறுவி , அங்கே காந்தி தம் தொண்டர்களுடன் சில நாட்கள் தங்கியிருந்தார்.  அப்போது மணி பெளமிக்குக்கு வயது பதினான்கு. தன் தந்தையாருடன் அந்த முகாமில்  கலந்துகொள்ளும் வாய்ப்பு அவனுக்குக் கிடைத்தது. அந்த அனுபவத்தை முன்னிறுத்தி தனியாக ஓர் அத்தியாயத்தையே எழுதியிருக்கிறார் பெளமிக். இப்பகுதியில் காந்தி – கஸ்தூரிபா பற்றிய சித்திரங்கள் மிகவும் செறிவாக உள்ளன.
’பஞ்சமும் தொற்றுநோயும் – சமாளிப்பதற்கு அரிய இரட்டையர்’ என்னும் தலைப்பில் பெளமிக் எழுதிய கட்டுரையை வாசித்த ஒரு பள்ளித் தலைமையாசிரியர், பெளமிக்கை வரவழைத்துப் பாராட்டி தம் பள்ளியிலேயே சேர்த்துக்கொண்டார். உணவுக்கும் அவரே ஏற்பாடு செய்தார். தந்தை வழி நண்பர் ஒருவருடைய வீட்டில் தங்கி, தன் கல்வியைத் தொடர்ந்தார் பெளமிக். உயர்நிலைப்பள்ளிப் படிப்பை முடிக்கும் வரையில் இந்த ஏற்பாடு தொடர்ந்தது.
சிறப்பான மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றதால் கல்கத்தாவில் உள்ள ஸ்காடிஷ் சர்ச் கல்லூரியில் சேர்ந்து கல்வியைத் தொடர தேவையான உதவித்தொகை கிடைத்தது. இளங்கலைப் படிப்பை முடித்துக்கொண்டு முதுகலைப் படிப்பை கல்கத்தா பல்கலைக்கழக்த்தில் தொடர்ந்தார் அவர். அங்கு டிராக் என்னும் அறிவியலாளர் ’க்வாண்டம் புலக்கோட்பாடு’ பற்றி நிகழ்த்திய  உரையால் கவரப்பட்டார் பெளமிக். க்வாண்டம் கொள்கை மீது அவருக்கு அன்றுமுதல் ஆர்வம் பெருகியது. ஐ.ஐ.டி.யில் ஆய்வு மாணவனாகச் சேர்ந்து 1958 ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்றார். அதுவே அந்தத் துறை அளித்த முதல் முனைவர் பட்டம்.
கலிஃபோர்னியாவில் முதுகலைப்படிப்பைத் தொடர ஸ்லோன் என்னும் நிறுவனம் அவருக்கு உதவித்தொகையை அளித்தது. ஆனால் விமானச் செலவை அவரே ஏற்கவேண்டும் என்னும் விதி அவரைத் துவளச் செய்தது. அவருக்கு ஏற்கனவே அறிமுகமான கல்கத்தா செல்வந்தர்கள் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை. அவருடைய தம்லுக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் தம்மால் இயன்ற அளவுக்கு உதவி செய்து, பயணச்சீட்டுக்குத் தேவையான பணத்தைத் திரட்டிக் கொடுத்தார்கள். இத்தருணத்தைச் சித்தரிக்கும் பெளமிக் அதை ஓர் அறிவியில் உவமையின் வழியாகக் குறிப்பிடுகிறார்.
உடைந்த நட்சத்திரங்கள் நிரம்பிய இருள் ஆழ்குழிகளின் ஈர்ப்புச்சக்தியின் ஆற்றல் காரணமாக ஒளி உட்பட எதுவுமே தப்பிக்க முடியாது. ஆனால்  ஹாக்கிங்ஸ் கதிர்வீச்சு எனப்படும் ஒருவகையான துகள்கள் இந்த அண்டப்படுகுழியிலிருந்து தப்பித்து வெளியேற முடியும். அந்தத் துகள்களைப்போல ஏழ்மை என்னும் பாழ்குழியிலிருந்து வெளியேறிச் செல்லும் வாய்ப்பு தனக்குக் கிடைத்தது என்று குறிப்பிடுகிறார் பெளமிக்.
கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் லேஸர் குறித்து அவர் ஆய்வு நிகழ்த்தி முனைவர் பட்டம் பெற்றார். பாரிஸ் நகரில் நடந்த மூன்றாவது பன்னாட்டு க்வாண்டம் மாநாட்டில் தம் ஆய்வேட்டைச் சமர்ப்பித்தார். இன்னொரு நண்பருடன் இணைந்து சில்லேட் லேஸரை கண்டுபிடித்தார். 1973 ஆம் ஆண்டில் டென்வர் நகரில் அமெரிக்க ஒளியியல் சங்கக்கூட்டத்தில் சீனான் வாயுவை செயலூக்க ஊடகமாகப் பயன்படுத்திய உலகத்தின் முதல் எக்ஸிமர் லேஸரை மெய்ப்பித்துக் காட்டினார். எக்ஸிமர் லேஸரின் முத்திரை பதித்த பயன்பாடு விழி வெண்படலச் சீரமைப்புக்கு பயன்பட்டது. கார்னியா என்பது  விழியின் முன்பகுதியை மூடியுள்ள ஒளி ஊடுருவும் வெண்மையான ஜவ்வு. இந்தத் திசுவின் மயிரிழையளவு மெல்லிய படலத்தை மிகவும் கவனமாகவும் துல்லியமாகவும் செப்பனிட்டு கிட்டப்பார்வை / தூரப்பார்வை குறைபாடுகளைச் சரிசெய்ய முடியும். எக்ஸிமர் லேஸர் செலுத்தப்பட்டதும் திசுவின் உயிரணுக்கள் எரிக்கப்படாமல் வாயுநிலையை அடைகின்றன.
இந்த அபூர்வமான கண்டுபிடிப்பைத் தொடர்ந்து அவருடைய வாழ்க்கையின் திசையே மாறிவிடுகிறது. லேஸர் காப்புரிமைத் தொகையாக கோடிகோடியாக பணம் அவரிடம் வந்து குவிந்தபடி உள்ளது. அப்படி பத்துக்கும் மேற்பட்ட காப்புரிமைகளுக்கு அவர் இன்று சொந்தக்காரராக இருக்கிறார். ஒரு சில ஆண்டுகளுக்குள்ளேயே அழகிய குன்று மேல் ஒளிரும் ஆறு ஆடம்பர மாளிகைகளுக்கு அவர் சொந்தக்காரராகி விட்டார். செல்வம் அவரை எங்கெங்கோ செலுத்துகிறது. ஆடம்பர வாழ்க்கையை நோக்கி நகர்த்துகிறது. ஆயினும் அவர் ஆழ்மனம் எல்லாத் தருணங்களிலும் தன் ஆதார ஆர்வமான அண்டவியலைப்பற்றிய எண்ணங்களிலேயே மூழ்கியுள்ளது.
இளமையில் தன் வெளிநாட்டுப் பயணத்துக்கு உதவி செய்த மக்களை அவர் எந்தக் கட்டத்திலும் மறக்கவில்லை. தான் அடைந்த செல்வத்தின் ஒரு பகுதியிலிருந்து கல்கத்தாவில் ஓர் அறக்கட்டளையை உருவாக்கினார். வறுமைப் பின்னணியிலிருந்து வரும் பிள்ளைகள் உயர்கல்வியைப் பெறவும் அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் உயர்தொழில்நுட்பக் கல்வியை நாடும் துடிப்பான மாணவமாணவிகளுக்கும் தேவையான உதவித்தொகையை அளித்து, எண்ணற்ற ஆளுமைகள் உருவாக துணையாக இருந்து வருகிறார்.
அண்டவியலின் இயக்கத்தைப்பற்றி விளக்கும் போக்கில் மணி பெளமிக் எடுத்துரைக்கும் விளக்கமொன்று கவித்துவமாக இருக்கிறது. ’அண்டத்தின் விதையை தன்னைச்சுற்றி ஒன்றுமே இல்லாத ஏதோ ஒன்றாக மனக்கண்முன் உருவகப்படுத்துவோம். அனைத்து அண்டத்தையும் உள்ளகத்தே கொண்ட ஆற்றலுடைய அந்த ஏதோ ஒன்றான இதனை, துளிர்விடத் துடித்துக்கொண்டிருக்கும் ஒரு விதையாகக் கற்பனை செய்யலாம்’ என விவரிக்கும் போக்கில் ’ஒரு தீப்பொறி ஒரு பெருந்தீயாக வளர ஏங்கிக்கொண்டிருக்கிறது’ என்று எழுதிச் செல்கிறார்.  எவ்வளவு அழகான சொல்லாட்சி. அச்சொல்லாட்சி ஒருவகையில் அவருடைய வாழ்க்கையின் உருவகமாகவே இருப்பதை உணரமுடிகிறது. அவரும் ஒருவகையில் பெருந்தீயாக வளர ஏங்கிய தீப்பொறி அல்லவா?
***
குறிப்பு:
புத்தகம்:  கடவுளின் கையெழுத்து.
ஆங்கிலத்தில்: மணி பெளமிக். தமிழில் : கே.எஸ்.சுப்பிரமணியன்.
விலை.ரூ.200
கவிதா பதிப்பகம்,
8, மாசிலாமணி தெரு, பாண்டி பஜார், தி.நகர். சென்னை – 17.
————————————-
(கட்டுரையில் ஒரு பத்தி சேர்க்கப்பட்டிருக்கிறது. 17 ஆகஸ்ட் 2016)

Series Navigation<< ஆழி, அக்னி, அரவிந்தன் நீலகண்டன்புத்தக அறிமுகம்: முருகவேளின் ‘முகிலினி’ >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.