ஜன்னல்கள்

ஸூஸன் பால்விக்

PrisonWindow_4

பஸ்ஸில் ப்ளாஸ்டிக்கின் நெடியும், சிறுநீரின் நெடியும் வீசுகிறது. வாஞ்ஜீக்கு அடுத்து உட்கார்ந்திருக்கும் அந்தப் பையன் பாட்டை ரொம்பவே உரக்க வைத்துக் கொண்டிருக்கிறான். அவனுடைய காதுக் குமிழிலிருந்து அது வெளியே வழிந்து அவளுக்குத் தலைவலியைக் கொடுக்கிறது. அவன் பெரிய உருவுள்ள பையன், அவனுடைய இருக்கை பூராவும் அகன்று, வெளியில் சரிந்து, அவளுடைய இருக்கையையும் ஆக்கிரமிக்கிறான், ஏதோ அவள் அதில் இல்லாதது போல. அவள் ஜன்னல் மீது ஒட்டி ஒடுங்கிக் கொள்கிறாள், தலையை அந்தக் குளிர்ச்சியான கண்ணாடி மீது சாய்த்துக் கொண்டு, கண்ணுக்குப் பின்னால் இருக்கும் துடிப்பைச் சற்று அமர்த்திக் கொள்ள முயல்கிறாள். ஒருக்கால் இன்னும் 40 நிமிடங்களில் வரப்போகும் அடுத்த நிறுத்தத்தில் இந்தப் பையன் இறங்கி விடலாம். ஒருவேளை இவனுடைய இருக்கையை எடுத்துக் கொள்ள அங்கு யாரும் ஏற மாட்டார்கள். பஸ் முழுதும் நிரம்பி இருக்கிறது, இந்தப் பாட்டுடைய அதிரும் கீழ்ஸ்தாயிச் சத்தம் இல்லாமலே, அலையலையாக எழும் பேச்சொலிகளும், நெடிகளும் எப்படியுமே வாஞ்ஜிக்கு வாந்தி வருவது போல ஆக்கி இருக்கும்.
க்ரஹாமைப் பார்க்க இது 10 மணி நேரப் பயணம்; இந்தத் தடவையாவது உள்ளே நுழைவதற்குச் சரியான நேரத்துக்குள் போய் விடலாமென்று வாஞ்சி எதிர்பார்க்கிறாள். எல்லாமே ரொம்பச் சீராக அமைந்து விட்டது, எங்காவது ஏதாவது தப்பாக நடக்காமல் இருக்காது என்று அவளுடைய குடலைக் கலக்கும் பயத்தை அவளால் அடக்க முடியவில்லை. ஒரு தடவை இல்லை, பல தடவைகள் அவள் அங்கே போக, நேரத்தையும், பணத்தையும் செலவு செய்து கொண்டு போய்- நேரம் கூட பரவாயில்லை, ஆனால் பணமொன்றும் எளிதில்லை, அவளுக்கு மாதத்திற்குக் கிட்டும் உதவித் தொகை அத்தனை சிறிசு- சிறைச்சாலையில் எல்லாவற்றையும் அவசரமாக முழுதும் அடைத்திருக்கிறார்கள், யாரும் உள்ளேயோ வெளியேயோ போக முடியாது என்று கண்டிருக்கிறாள், கடவுளுக்குத்தான் தெரியும் உள்ளே என்ன நடந்திருக்கிறதென்று. ஒருத்தருக்குக் கிடைக்கும் அறிக்கைகள் எல்லாமே நம்பத் தக்கனவாக இருப்பதில்லை, நகரத்தின் அலங்கோலமான நூலகத்தில் உட்கார்ந்து கொண்டு, இரண்டு வினாடிக்கொரு தடவை கூகிளில் செய்திகளைப் படிப்பதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியாத நிலையில் இருப்போம், பிறகு, இன்னொரு ராத்திரிக்கு விடுதி ஒன்றில் தங்க நம்மிடம் வசதி இல்லை என்பதால், வீட்டுக்குத் திரும்பப் பஸ்ஸைப் பிடிக்கும் நேரம் வந்து விடும். சில சமயங்களில் க்ரஹாம் வீட்டை (தொலைபேசியில்) அழைக்க முடிகிற நிலை வருவதற்குள், அவன் குரலை வாஞ்சீ மறுபடி கேட்க முடிவதற்குள், பல நாட்கள் ஆகி விடும். அவள் எப்போதும் அந்த அழைப்புக்கான கட்டணத்தைக் கொடுக்க ஒத்துக் கொள்கிறாள், ஆனால் அவர்கள் ரொம்ப நேரம் பேசுவதில்லை. அந்த அழைப்புகளுக்கு நிறையக் கட்டணம் ஆகும்.
ஒரு ராத்திரித் தங்கலுக்கான சிறு பை வாஞ்ஜீயின் காலடியில் இருக்கிறது. அவளுடைய பணப்பையை உடலின் குறுக்கே வருமாறு தோளில் மாட்டி இருக்கிறாள், கைகள் அதன் மேல் காவலுக்கு இருக்கின்றன, அந்தப் பையன் பணப்பையைத் திடீரென்று பறித்துக் கொண்டு பஸ்ஸின் முன்பக்கம் நோக்கி ஓடிக் குதித்து விடுவான் என்று அச்சப்படுவதைப் போல. தான் வழிப்பறி செய்யத் தக்கவள் போலத் தெரிந்தாலும், அந்தப் பையில் இருப்பது அவளையும், ஒரு வேளை க்ரஹாமையும் தவிர வேறு யாருக்காவது சிறிதாவது மதிப்புள்ள பொருளாகத் தெரிந்தாலும் கூட, இது நடக்க வாய்ப்பில்லை என்று அவளுக்குத் தெரியும். அந்தப் பையன் அதை அவளளவு மதிக்க மாட்டான். அவன் அதை எப்படி மதிப்பான் என்று அவளுக்குத் தெரியவில்லை. அதைப் பற்றி அவள் எண்ணும் ஒவ்வொரு தடவையும், அவளுக்குத் தன் நெஞ்சில் பெரிய பாரம் ஒன்று இருப்பதாக உணர்கிறாள், சோகமும், குற்ற உணர்வும், மேலும் பாசமும் கலந்த ஒரு ரத்தக் கட்டி இருப்பது போல; சில நேரம் ஒரு சிறு அளவு பெருமிதமும் அதில் ஒண்டிக் கொள்கிறது என்று தோன்றுகிறது- அவளுடைய ஒரு குழந்தை தப்பித்துப் போய் விட்டாள், எங்கோ போய் விட்டாள், அது ரொம்பவே தூரம் என்றாலும் கூட- ஆனால் அவள் அந்தப் பெருமிதத்தை எப்போதும் நசுக்கி விடுகிறாள். வேறு யாரும் அவள் அது பற்றிப் பெருமிதம் கொள்ள வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். தான் அது பற்றிப் பெருமிதம் கொள்ளத் தகுதி உள்ளவள் என்று அவளே   நினைப்பதில்லை. பெருமிதம் ஆபத்தானது. அதிர்ஷ்டமும் அப்படித்தான், ஏனெனில் அது எப்போதுமே எதிராகத் திரும்பி விடும், தவிர இந்தப் பயணத்தில் ஏற்கனவே நிறைய அதிர்ஷ்டம் சேர்ந்து விட்டிருக்கிறது.
அவளுக்கு அடுத்திருந்த பையன் கொட்டாவி விட்டு, அசைந்து கொடுக்கிறான், அவளுக்கு ஓர் அங்குலமோ இரண்டோ, இடம் கொடுக்கிறான், அவள் அதை நன்றியுணர்வோடு பிடித்துக் கொள்கிறாள். இருட்டிக் கொண்டு வருகிறது, மேகங்களாலும், அழுக்கான ஜன்னலாலும் மறைக்கப்பட்ட சூரியன், கன்றிப் போன காயம் போல மேற்கில் மங்கலாகத் தெரிகிறது.  ஆனால் குறைந்தது அவளால் வெளியே பார்க்க முடிகிறது, சாம்பல் நிற நெடுஞ்சாலை கடுகிக் கடப்பதைக் கவனிக்க முடிகிறது. மூன்று வருடங்கள் முன்பு, இந்தப் பயணம் மேற்கொள்வதை அவள் துவங்கியபோது, அவள் தனக்குத் தானே உறுதி பூண்டிருந்தாள், மொத்தப் பயணத்திலும் அவள் வெளியே பார்த்துக் கொண்டு போவாள், அப்போதுதான் அவளால் அதைப் பற்றி க்ரஹாமிடம் சொல்ல முடியும் என்பதற்காக. ஆனால் இங்கோ சாலைக்கருகில் எதுவுமே இல்லை, தட்டையான வெளிகளும், சோளமும், குதிரை மசால் தழைகளும்தான் இருக்கின்றன. சில நேரம் ஒரு கம்பைன் எந்திரம் உண்டு, ஆனால் அதில் எந்த மனிதரையும் அவளால் பார்க்க முடிவதில்லை. முதல் சில தடவைகளில் அவள் பசுமாடுகளையும், குதிரைகளையும் எதிர்பார்த்தாள். அதிர்ஷ்டம் இல்லை. அவள் அவனிடம் இந்த சூரிய அஸ்தமனத்தைப் பற்றியாவது சொல்வாள், அது நிஜமாக இருந்ததை விட அழகாக இருந்ததாகச் சொல்வாள்.
முழுவதும் இருட்டான பின்பு ஜன்னல் வழியே கூர்ந்து பார்த்து, நட்சத்திரங்களைக் காண முயல்கிறாள். சில நேரம் அவளால் பார்க்க முடிகிறது. இன்று இரவு நிலவு இருக்குமா என்பது அவளுக்கு நினைவில்லை, ஆனால் அதையும் பார்க்க முயல்கிறாள். வாஞ்ஜீ தான் பார்க்க வேண்டும் என்று நினைப்பதே, க்ரஹாமுக்கு அப்படிப் பார்க்க முடியாது. இப்போதெல்லாம் அவனால் இரவில் ஆகாயத்தைப் பார்க்க முடிவதில்லை என்பதால்தான்.
ஜெல்லுக்கோ வேறெதையும் பார்க்க முடிவதில்லை. அந்த லாட்டரியில், குருட்டு லாட்டரி அது, இதர சிலர் பெயர்களோடு அவள் பெயரும் பொறுக்கப்பட்டு வெளியே வந்த போது, அந்த லாட்டரியில் தான் வென்றதைப் பெரிய அதிர்ஷ்டமாகக் கருதினாள் அவள். அவர்கள் எல்லாரையும் விட்டுப் போகவும், அனைத்தையும் என்றென்றைக்குமாக விட்டு நீங்கவும் ஜெல் எத்தனை ஆர்வமாக இருந்தாள் என்பதை நினைத்தாலே வாஞ்ஜீ தன் இதயம் கிழிக்கப்படுவது போல உணர்கிறாள். “நான்  நட்சத்திரங்களை நோக்கிப் போகிறேன்!” என்றாள் ஜெல், ஆனால் அவள் செய்வதென்னவோ ஒரு தகரப் பெட்டியில் தன் வாழ்க்கையைக் கழிப்பதுதான், அதிலேயே வாழ்ந்து அதில் இறக்கவும் போகிறாள், அவளுக்குப் பின்னே அடுத்த சுற்றாக வாழ அவளுடைய கருமுட்டைகளில் இருந்து அவர்கள் குழந்தைகளை உருவாக்குவார்கள், அந்தக் குழந்தைகளுடைய முட்டைகளிலிருந்து இன்னொரு சுற்று குழந்தைகள் பிறந்து வாழும், இறுதியில் ஒரு கிரகத்தை அவர்கள் சென்றடைவார்கள். அந்த கிரகமோ, அறிவியலாளர்களின் கருத்துப்படி, பூமியைப் போலவே இருக்கும், மேலும்… சரி அதைப் பற்றி மேலும் சொல்ல என்னவிருக்கிறது? ஜெல் என்னவோ அதையும் பார்க்கப் போவதில்லை. அவள் செத்துப் போய நிறைய காலம் ஆகி இருக்கும். அங்கே போய்ச் சேர்கையில் அவளுடைய குழந்தைகளின் குழந்தைகளுமே செத்துப் போயிருப்பார்கள். அவள் இன்னொரு தடவை சூரியாஸ்தமனத்தையோ, குதிரை மசால் செடிகளையோ ஒருபோதும் பார்க்கப் போவதில்லை.
வாஞ்ஜீயைப் பொறுத்தவரை, அவளுடைய இரண்டு குழந்தைகளும் ஆயுள் பூராவும் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களில் ஒருத்தரையாவது தான் சென்று பார்க்க இன்னமும் முடிகிறதில் அவளுக்குக் கொஞ்சமாவது மகிழ்ச்சி.
பஸ் நிற்கும்போது அவள் அனேகமாக உறங்கிப் போயிருந்தாள். அவளுக்கு அடுத்து அமர்ந்த பையன் இறங்குகிறான். வேறு யாரும் பஸ்ஸில் ஏறவில்லை. தம் இருக்கையில் இருந்து வேறு யாரும் எழுந்து இந்த இருக்கைக்கு வரவில்லை. வாஞ்ஜீயின் முதுகுத் தண்டில் ஒரு நடுக்கம் பரவுகிறது, இன்னொரு இருக்கைக்கு தன் கைப்பையை அவள் மாற்றும்போதே, அந்தப் பையன் விஸ்தாரமாக அமர்ந்த மாதிரியே தானும் சரிந்து அமரும்போதே, அவள் தன் முதலிரு விரல்களை நெடுக்கில் பின்னிக் கொள்கிறாள். அசதிப் பெருமூச்சு விடுகிறாள், அவளுடைய தசைகள் முடிச்சவிழ்ந்து தளர்கின்றன, மீதம் இருக்கும் கடைசி சில மணி நேரங்கள் அவள் இனி உறங்கக் கூட முடியலாம். அதிர்ஷ்டம் இன்னும் கூடுகிறது, இவ்வளவு அதிர்ஷ்டம் ரொம்ப அதிகமானது, ஜெல்லுக்கு அந்த சீட்டு கிட்டிய போது அடித்த அளவு பைத்தியக்கார அதிர்ஷ்டம். பல தலைமுறைகளுக்கான அந்த விண்வெளிக்கலத்தில் இடத்திற்கான லாட்டரியில் அவள் வென்றது, எந்தத் தனி நபரும் தன் பயன்படுத்தலுக்கான அளவுதான் அது என்று சொல்லி விட முடியாத அளவு கொகெய்னைத் தன் காரில் க்ரஹாம் எடுத்துப் போனதற்காகப்  பிடிக்கப்பட்டதற்குச் சற்று முன்னர்தான் நடந்தது, முட்டாள்தனமான துரதிர்ஷ்டம் அது, அவன் தன் காரின் பின்புற விளக்குகளில் ஒன்று எரியவில்லை என்பதைக் கவனிக்கத் தவறி இருந்தான், அதற்காக, காவல் துறையினர் அவனை ஓரம் கட்டிப் பிடித்தார்கள், ஆனால் மூன்றாம் முறை குற்றத்திற்காகப் பிடிக்கப்பட்டால் அதோகதிதான். ஏனோ வாஞ்ஜீக்கும் அவளுடைய குழந்தைகளுக்கும் இம்மி அளவுதான் அதிர்ஷ்டம் கிட்டும் போலிருக்கிறது, பெரிய குவியலாக ஜெல்லுக்கு அதிர்ஷ்டம் பரிமாறப்பட்டதால்- அதை அதிர்ஷ்டம் என்று நாம் சொல்லலாம் என்றால்- க்ரஹாமுக்கு அதிர்ஷ்டம் குறைந்து போகவேண்டும் போலிருக்கிறது. தன்னிடம் எல்லா அதிர்ஷ்டமும் இப்போது குவியக் கூடாதே என்று வாஞ்ஜீ வேண்டுகிறாள். அவளின் குழந்தைகளுக்குத்தான் அவளை விட அதிகம் அதிர்ஷ்டம் தேவையாக இருக்கிறது.
க்ரஹாமுக்கு எந்த அதிர்ஷ்டத்துக்கும் தகுதி இல்லை, அவனுக்கு நேர்ந்ததெல்லாம் அவனே தேர்ந்தெடுத்த வினை, அதில் அதிர்ஷ்டத்துக்கு ஒரு பங்கும் இல்லை, போதை மருந்தை விற்கும் முயற்சியில் ஈடுபட்ட சாக்கடைப்பயல் அவன் என்று சொல்வோர் இருப்பார்கள், அவளுக்குத் தெரியும். வாஞ்ஜீ கடவுளிடம் முறையிடாமலில்லை, க்ரஹாம் கோகெய்ன் விற்பனையில் இறங்காமல் இருந்திருக்கக் கூடாதா என்று, அதே நேரம் அவள் ஜெல்லுக்கு அந்த லாட்டரி சீட்டில் வெற்றி கிட்டாமல் இருந்திருக்கக் கூடாதா என்றும் வேண்டுகிறாள். உலகம் என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும். க்ரஹாம் அவளுடைய பிள்ளை. அவளுக்கு இருக்கும் குடும்பமெல்லாம் அவன் ஒருத்தன் தான், நாளைக்கு அவனுடைய பிறந்த நாள். அவளுடைய பையிலோ, அருமையிலும் அருமையானதாய், அவனுடைய சகோதரியிடமிருந்து அவனுக்கு ஒரு செய்தி இருக்கிறது. இப்போது இருக்கும் நம்பமுடியாத அளவு அதிர்ஷ்டம் தொடர்ந்து நீடித்தால், அவனுடைய பிறந்த நாள் அன்று வாஞ்ஜீயால் அதை அவனிடம் நிஜமாகவே சேர்த்து விட முடியப் போகிறது.
அது நடந்து முடிய என்னென்னவெல்லாம் இதுவரை நேராக நடந்திருக்க வேண்டுமென்று நினைத்தால் அவளுக்குத் தலை சுற்றுகிறது. ஜெல்லுடைய பக்கமே அத்தனை சிக்கலானது. குடியேறிகள்- குடியேறிகளாம் குடியேறிகள்! ஜெல் அவளுடைய மொத்த வாழ்நாளில் குடியேறப் போகிறது எல்லாம் அந்தத் தகர டப்பாவில்தான்- செய்திகளை அனுப்ப அவ்வளவு வாய்ப்புகள் கிட்டுவதில்லை, அவர்களோ அத்தனை பேர் இருந்தார்கள், எல்லாரும் மிகவும் வேலைப் பளுவில் வேறு சிக்கி இருந்தார்கள், பீன்ஸ் வளர்ப்பதிலிருந்து, ஒருத்தரொருத்தருடைய முட்டைகளையும், விந்தணுக்களையும் சேகரிப்பது, காப்பது போன்ற வேலைகளிலிருந்து, வேறென்ன விதத்திலெல்லாம் நேரத்தை அங்கே செலவழித்தார்களோ. குழந்தைகளைப் பற்றி வாஞ்ஜீ யோசிக்காமல் இருக்க முயல்கிறாள். ஜெல்லுக்கு என்ன குழந்தைகள் பிறந்தாலும், வாஞ்ஜீ அவர்கள் யாரையும் தூக்கி எடுக்கப் போவதில்லை.
எப்படியும் அவர்களுக்கு செய்திகள் அனுப்ப வாய்ப்புகள் அடிக்கடி கிட்டுவதில்லை.  அதற்குக் கால அட்டவணை இருக்கிறது, சிறைக் கைதிகள் எப்போது வெளியுலகோடு அழைப்பு மூலம் தொடர்பு கொள்ளலாம், எத்தனை நேரம் என்பதை எல்லாம் கட்டுப்படுத்தும் முறைகளைப் போலவே அதுவும் கறாரானது. அந்தத் தகர டப்பாவிலிருந்து வரும் செய்திகளோ எத்தனையோ கூடுதலான தூரம் கடந்து வர வேண்டும். செய்தி அனுப்புகிற நபரிடம் அந்தச் செய்தி பூமிக்குப் போய்ச் சேர எத்தனை நேரமாகும் என்று சொல்ல ஒரு கணினி வேறு இருக்கிறதாம். இப்போது அது வந்து சேர சில நாட்களாகின்றன, நிறைய செய்திகள் வந்து சேர்வதே இல்லை, ஏனெனில் அவை ரொம்பத் தொலைவு பயணிக்க வேண்டி இருக்கிறது, கிரகங்கள் மீதும், விண்கோள்கள் மீதும், விண்கலங்கள் மீதும், இன்னும் என்னென்னவெல்லாம் இருக்கிறதோ கடவுளுக்குத்தான் தெரியும், அவை மோதித் திரும்பி வர வேண்டுமாம். நிறைய செய்திகள் தொலைந்து போய் விடுகின்றன.
சென்ற வாரம் எப்படியோ ஜெல்லின் முறை வந்திருக்கிறது, அல்லது அதற்கு முந்தைய வாரமோ என்னவோ, க்ரஹாமின் பிறந்த நாளுக்குச் சரியான நேரத்தில் கிட்டத் தக்கதாய் ஒரு காணொளியை அனுப்பி இருக்கிறாள், அது வாஞ்ஜீயின் இலவச மின்னஞ்சல் கணக்குக்கு க்ரஹாமின் பிறந்த நாளுக்கு ஒரு வாரம் முன்பு வந்து சேர்ந்து விட்டது, அந்த நாள் இந்த மாதத்தின் ஆரம்பத்தில் இருக்கிறதால், வாஞ்ஜீயின் காசோலை அப்போதே வந்து சேர்ந்ததா, வாஞ்ஜீயிடம் ஒரு கட்டைவிரல் சைஸுக்கு ட்ரைவ் ஒன்றை வாங்கப் பணம் இருந்தது, அதில் அந்தக் காணொளியின் கோப்பைப் பதிவு செய்ய முடிந்தது, பஸ் டிக்கெட்டுக்கும், சிறைச்சாலை அருகே ஒரு விடுதியில் ராத் தங்கும் அறைக் கட்டணத்திற்கும் அவளிடம் பணம் இருந்தது, க்ரஹாமின் பிறந்த நாள் வார இறுதியில் வரும் பார்வையாளர் அனுமதிக்கப்படும் நாட்களில் வந்தது, அதுதான் எவ்வளவு தடவை அப்படி வந்து இருக்க முடியும்? அந்தச் செய்தி வந்து சேர்ந்தது என்பதே அபாரமான நிகழ்வு. இந்தப் பயணத்தால் வாஞ்ஜீக்கு மாதாந்தர சாப்பாட்டுப் பொருட்களுக்குச் செலவழிக்கப் பணம் போதாமல் இருக்கும், அவள் நன்கொடையாக உணவுப் பொருள் கொடுக்கும் இடங்களிலோ, இலவச சாப்பாடு கொடுக்கும் இடங்களிலோ போய் வரிசையில் நிற்பாள். எப்படியோ திண்டாடிச் சமாளித்து விடுவாள்.
அவள் க்ரஹாமிடம் அந்த ஃபைலை காட்ட அனுமதிப்பார்களா என்று முன்கூட்டியே சிறையதிகாரிகளைக் கூப்பிட்டு அவள் கேட்டுக் கொண்டிருந்தாள், வேறென்ன செய்ய? அவளே அதை இன்னும் பார்க்கவில்லை; அவனோடு சேர்ந்து அதைப் பார்க்க அவள் விரும்பினாள். அது ‘ஹாப்பி பர்த்டே க்ரஹாம்,’ என்று பெயரிடப்பட்டிருந்தது, அதனால் அது எதைப் பற்றியது என்று அவளுக்குத் தெரியும். சிறைச்சாலைக் கணினி ஒன்றில் அவளும், க்ரஹாமும் சேர்ந்து அதைப் பார்க்க வேண்டி இருக்கும். தான் அதற்குக் கட்டணம் ஏதும் கொடுக்க வேண்டி இராது என்று உறுதிப்படுத்திக் கொள்ளவும் அவள் அழைத்துக் கேட்க வேண்டி இருந்தது: காணொளி வருகைகளுக்கு ஒரு மணிக்கு நூறு டாலர்கள் கட்டணம் இருந்தது, அது இன்னொரு தகிடு தத்தம், மறுபக்கம் அழைப்புக்குக் கட்டணம் செலுத்த வேண்டி இருப்பதைப் போல. சிறைச்சாலைகளுக்கு நிதி ஒதுக்கல் மிகக் குறைவு என்பதாலேயே அவை அத்தனை நெரிசலாக இருக்கின்றன என்று அவர்கள் எப்போதும் சொன்னார்கள், ஆனால் வாஞ்ஜீக்கு அவர்கள் பணமாக அள்ளுகிறார்கள் என்றுதான் தோன்றியது.
இன்னும் கொஞ்சம் அதிர்ஷ்டம்: ஒரு கைதி தனிமைச் சிறையில் இறந்ததால் பெரிய பரபரப்பு ஏற்பட்டிருந்தது, பொது மக்களின் அபிப்பிராயம் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள் போலிருக்கிறது, அதனால், சிறைச்சாலை நிர்வாகிக்கு அவளுடைய அழைப்பு போய்ச் சேர அனுமதிக்கப்பட்டது, அவர் சிறையின் கணினியைக் கட்டணம் ஏதும் இல்லாமல் பயன்படுத்தலாம் என்று உறுதி செய்திருந்தார். கைதிகள் தம் குடும்பங்களோடு தொடர்பு கொள்ள அவர்களுக்குள்ள உரிமை என்று ஏதோ, அதுவும் ஒருத்தரின் குடும்ப உறுப்பினர் தலைமுறைக் கலத்தில் இருந்தால், அவருடன் தொடர்பு கொள்ள காணொளி ஒன்றுதான் வழி என்றிருந்தால், அந்தக் காணொளி அந்த நபரின் அம்மாவின் மின்னஞ்சல் கணக்குக்கு வந்து சேரச் சில வாரங்கள் ஆகிறது என்றால், விட மாட்டோமா?
வாஞ்ஜீ இதையெல்லாம் நம்புகிறாளா என்றால், இந்த பஸ்ஸைத் தூக்கி அவளால் எறிய முடியும் என்பதை நம்பும் தூரம்தான் அதையெல்லாம் நம்புகிறாள். அந்த ஆரவாரமெல்லாம் இப்போது அடங்கி விட்டது. இருபதுக்கு ஒன்று பந்தயம், அங்கே கணினி ஏதும் இராது. அந்த சிறைச்சாலை கண்காணிப்பாளர் தன்னுடைய அழைப்பைப் பெற்றதாகவே ஒத்துக் கொள்வாரா என்பது பற்றி வாஞ்ஜீக்கு ஐயம்தான், அது அவருக்கு நினைவிருக்குமா என்பது பற்றியும் அப்படித்தான்.
எங்கோ போகும் உணர்வும், அவளுக்குப் பிடித்தமான, அவசரமாக விரையும் உணர்வில் கிட்டும் ஓர் அமைதியுணர்வும் சேர்ந்து பஸ் அவளைத் தாலாட்டியது. அவள் ஜன்னல் வழியே கூர்ந்து நோக்கினாள், ஆனால் வெளியே இப்போது மேகங்கள் இருந்தன, அவற்றுக்கும், ஜன்னலில் இருந்த அழுக்குக்கும் இடையே அவளால் நட்சத்திரங்களைக் காண முடியவில்லை. தன் இரண்டு இருக்கைகளையும் அவள் பின்னுக்குத் தள்ளுகிறாள், அவற்றில் எவ்வளவு தூரம் நீட்டிப் படுக்க முடியுமோ அவ்வளவு நீட்டிக் கொண்டு, தூங்குகிறாள்.
பஸ்ஸில் அவள் தூங்கியது நல்லதாயிற்று, ஏனெனில் ஹோட்டெல் அறையில் அவளால் சிறிதும் தூங்க முடியவில்லை: ஒரு பக்கம் தொலைக்காட்சிப் பெட்டி அலறியது, இன்னொரு பக்கம் கேட்கத் துன்பம் தரும் பாலுறவுச் சத்தமும், அலறல்களோடு சண்டையும், ஒரு மேடும் பள்ளமுமான மெத்தையுமாக, எப்படித் தூங்க. அவளுடைய தொலைக்காட்சிப் பெட்டி பழுதாகி இருந்தது, அதனால் அவள் இருட்டில் படுத்துக் கிடக்கிறாள், அறையின் கூரையைப் பார்த்தபடி, ஜெல்லும், க்ரஹாமும் இதை விட மோசமான நிலைகளில் இருக்கிறார்கள் என்று தனக்குத் தானே நினைவு படுத்தியபடி. சிறைச்சாலை இதை விட நாராசமான சத்தங்கள் உள்ள இடம், இதை விட நெரிசலான இடம், தலைமுறைக் கலத்திலிருந்தோ விடுபட வழியே கிடையாது.
கடைசியில், மூன்று மணி வாக்கில், அவள் கிறக்கத்தில் ஆழ்கிறாள், ஆனால் ஐந்து மணிக்குச் சொல்லி வைத்தாற்போல திடுமென்று விழிப்பு வந்து விடுகிறது, வளர்ந்த பின் அவளுடைய மொத்த வாழ்விலும் அப்படித்தான் விழித்திருக்கிறாள். இதனால் அவளுக்கு சுடுநீர் முதலாவது ஆளாகக் கிட்டுகிறது, ஆனாலும் அது சீக்கிரமே தீர்ந்து போய் விடுகிறது. ஆனால் ஒரு ஷவர் குளியல் என்பது நல்ல குளியல்தானே. எதிர் சாரியில் இருக்கும் காப்பிக் கடையில் கிட்டும் காஃபி அவளுக்கு மேலும் புத்துணர்வைக் கொடுக்கிறது, அங்கே கொத்தி வதக்கிய முட்டையும் அவள் தனக்குச் செய்து கொள்வதைப் போலவே காற்றூதியதாக, இலேசாக இருக்கிறது.
சிறைச்சாலையில் வரிசையில் அவள் முதலில் இருக்கிறாள். “இவாஞ்சலீன் மோரிஸ்,” வாயிற் காவலாளரிடம் சொல்கிறாள், அவரும் இன்னும் முழுக்க விழிக்காதவர் போலத்தான் இருக்கிறார். “உங்க லாப்டாப் ஒண்ணெ நான் பயன்படுத்தலாம்னு ஏற்பாடு ஆகியிருக்கு. வார்டன் சொன்னார்.”
“அது சரிதான் மேம். என் கிட்டெயும் அப்படி ஒரு குறிப்பு இருக்கு. நீங்க உள்ளெ போனப்பறம் அதைக் கொண்டுட்டு வருவாங்க.”
அதிசயித்தபடி, ஆனால் இன்னும் சந்தேகத்துடன் – அந்த பொதுஜன உறவில் ஏற்பட்ட விரிசல் வழக்கத்தை விடக் கூடுதலான நாட்களாக இன்னும் நீடிக்கிறதோ- வாஞ்ஜீ தன் பர்ஸை இன்னொரு காவலரிடம் அவர் அதைச் சோதிப்பதற்குக் கொடுக்கிறாள், உலோகத்துக்காகச் சோதிக்கும் கருவிகளூடே நடந்து கடக்கிறாள், தன் பையை மறுபடி பெறுகிறாள். அவளுக்குப் பின்னே ஒரு நீண்ட வரிசையில் இதர பார்வையாளர்கள் காத்து நிற்கிறார்கள், அவர்களுடைய கனம் அவளுடைய முதுகில் அழுத்துவதை அவள் உணர்கிறாள், அந்த கனம் அவளை பார்வையாளர்களுக்கான அறையின் வாசல் கதவுகளூடே தள்ளிப் போகிறது.
பார்வையாளருக்கான அறை ஒரு மங்கலான மஞ்சள் நிறக் கன சதுரம், ஆங்காங்கே மேஜைகளும் நாற்காலிகளுமாகக் கிடக்கின்றன. மூலையில் இருக்கும் இரு தின்பண்ட விற்பனை எந்திரங்கள் எப்போதுமே பழுதாக இருப்பவை, இரைச்சல் சுவர்களில் எதிரொலிக்கிறது. அந்தரங்கத்துக்கு இங்கு கொஞ்சமும் இடமில்லை, ஆனால் உங்கள் ஆட்கள் யாரும் இங்கே சிக்கியிருந்தால், என்ன கிடைக்கிறதோ அதை நீங்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
அங்கே க்ரஹாம் அவளுக்காகக் காத்திருக்கிறான், வேறொருவரும் அவனோடு அங்கே நிற்கிறார், ஆனால் வாஞ்ஜீ அதைப் பற்றி இப்போது கவலைப்படப் போவதில்லை: அவளுக்கு அனுமதிக்கப்பட்ட அணைப்புக்கு அவள் அவனை நெருங்குகிறாள். அந்த வருகையின் துவக்கத்தில் ஒன்று, முடிவில் ஒன்று அனுமதிக்கப்பட்டவை. க்ரஹாமை எத்தனை முடியுமோ அத்தனை இறுக அணைக்கிறாள், ஏதோ தன் பாசம் முழுவதையும் அவனுடைய தோலூடாகச் செலுத்தி விட முடியும் என்பது போல, இங்கேயிருக்கும் வாழ்வுக்கு எதிராக அது அவனுக்குக் கவசமாய் இருக்கும் என்பது போல. “சந்தோஷமான பிறந்த நாள், குழந்தே!”
“அம்மா.” அவன் குரல் கனமாக இருக்கிறது. அவள் பின்னே விலகி அவனை உற்றுப் பார்க்கிறாள்: போன தடவை பார்த்ததை விட இளைத்து இருக்கிறான் அவன், கன்னங்களில் கண்ணீர் ஓடுகிறது. “அம்மா, நான் பிரார்த்தனைக்காரரை என்னோடு அழைச்சுகிட்டு வந்திருக்கேன்.”
“என்னது?” அவள் இதயம் படபடக்கிறது. “என்ன மோசமா நடந்திடுச்சு?” க்ரஹாம் சென்ற தடவையை விட ஒல்லியாக இருக்கிறான். “நீ …”
“அம்மா, அந்தக் கப்பல்…நீ கேட்கலியா நேத்திக்கு ராத்திரிச் சேதியை?”
“என்னது? என்ன சேதி” அவள் நேற்று இரவு பஸ்ஸில் இருந்தாள், ஹோட்டலறையில் தொலைக் காட்சியோ பழுதானது. இல்லை, அவள் ஒரு செய்தியையும் கேட்டிருக்கவில்லை.
“தலைமுறைக் கப்பல் இருக்கே. அதில தீப் பிடிச்சிருக்காம். ஏதோ வெடிச்சிருக்கு. அதோட தொடர்பு அறுந்திருக்கு. யாருக்கும் எதுவும் தெரியல்லை. எல்லாரும் பயத்தில இருக்காங்க.”
வாஞ்ஜீ கண்களை மூடித் திறக்கிறாள். பிரார்த்தனைக்காரர் அவளை நிதானப்படுத்தக் கை நீட்டுகிறார், தான் ஆடுகிறோம் என்பதை அவள் உணர்கிறாள். க்ரஹாம் அவளை ஒரு நாற்காலியை நோக்கி நகர்த்துகிறான். அத்தனை அதிர்ஷ்டமும்: ஏதோ பயங்கரமாக நடக்கப் போகிறதென்று அவளுக்குத் தெரியும். அவள் எச்சிலை விழுங்குகிறாள்.
“நான் எதையுமே கேட்கலையே.” யாரும் அந்த காஃபிக் கடையில் கூட இதைப் பற்றிப் பேசவில்லை. அவள் ஒரு காற்றுக் குமிழிக்குள் இருந்திருக்கிறாள், எந்த சிறைக்கைதியையும் போல, தலைமுறைக் கலத்திலிருந்த மனிதர்களைப் போல தனிமைப்படுத்தப்பட்டு. உயிரோடோ, இறந்தோ அப்படித் தனிமைப்பட்டே இருக்கப் போகிறார்கள் அவர்கள். “நான் –  அவங்களுக்கு இன்னும் தெரியலயா?”
இப்போது க்ரஹாமும் உட்கார்ந்து விட்டான், அவளுக்கு எதிர்ப் புறம் ஒரு சிறிய மேஜைக்கு அந்தப்பக்கம். “யாருக்கும் எதுவும் இன்னும் தெரியாது. நெலமை மோசமாக இருக்கும்னு அச்சப்படுறாங்க.”
அவள் வாய்க்குள் காஃபி விட்டுச் சென்ற கசப்பு இன்னும் கடுத்தது, ரத்தத்தைப் போல உலோகச் சுவை. பிரார்த்தனைக்காரர் தொண்டையைச் சரி செய்து கொண்டார். “மேம், நான் மிகவும் வருந்துகிறேன். உங்களோட சேர்ந்து ஏதும் பிரார்த்தனை செய்ய வேண்டுமானால் செய்யத் தயாராக இருக்கிறேன், அல்லது பேச வேண்டுமானா —”
அவரை அனுப்பி விட விரும்புகிறாள். இன்னும் யாருக்கும் எதுவும் தெரியாது என்றால், எல்லாம் சரியாகி விடும். தலைமுறைக் கலத்தில் பாதுகாப்புக்குப் பல அமைப்புகள் உண்டு. விண்வெளியில் எத்தனை தடவைகள் தீ விபத்து நேரிட்டிருக்கிறது, இல்லையா? எல்லாரும் தப்பித்துதான் இருக்கிறார்கள், இல்லை? இந்த செய்திக்காரர்கள் எப்பவும்போல பீதியைக் கிளப்பி விடுகிறார்கள். அதுதான் அவர்களுடைய போதை மருந்து, எல்லாரையும் எப்போதும் பீதியில் ஆழ்த்துவது, ஏதோ வாழ்க்கை ஏற்கனவே பீதீயூட்டுவதாக இல்லாதது போல. செய்திகள் கிளப்பும் பீதி நிஜம் இல்லை.
இந்த பிரார்த்தனைக்காரர் என்னவோ நிஜம்தான், ரொம்பவே நிஜம்; அவர் இவளுக்கு கலக்கமூட்டுகிறார், அவர் போய் விட வேண்டுமென்று அவள் விரும்புகிறாள். ஆனால் க்ரஹாம் அவரை இங்கு அழைத்திருக்கிறான். க்ரஹாம் அவளுக்கு ஏதோ உதவ வேண்டுமென்று நினைக்கிறான். க்ரஹாம், ஒருவேளை இனிமேல் அவளுடைய ஒரே குழந்தையோ என்னவோ, நல்லவனாகவும், பாசமுள்ள மகனாகவும் இருக்க முயல்கிறான். அவனுக்கு அவளைப் போஷிக்க நிறைய வழிகள் கிடையாது. அவனை இதைச் செய்ய அவள் விட வேண்டும்.
அதனால் அவளும், க்ரஹாமும் தலையைக் குனிந்து கொள்கிறார்கள், பிரார்த்தனைக்காரர் பாதுகாப்பும், நல்ல விளைவும், சௌகரியமும் பூமியில் இருக்கும் எல்லாக் குடும்பங்களுக்கும் கிட்டுவதற்காக ஒரு துரிதமான, சுவையில்லாத பிரார்த்தனையை நடத்துகிறார். அவளுடைய தோளைச் சற்றுப் பிடித்து விடுகிறார், ஏதும் அவரோடு பேச வேண்டுமா அவளுக்கு என்று கேட்கிறார்.
“ரெவரெண்ட், நன்றி, ஆனால் எனக்கு என் மகனோட பேசணும். அவனோட எனக்கு இன்னும் அதிக நேரம் கெடைக்காது. உங்களுக்குத்தான் தெரியுமே. இன்னக்கி அவனுக்குப் பிறந்த நாள்.”
“சந்தோஷமான பிறந்த நாளாகட்டும்,” மென்மையாகச் சொல்கிறார் அவர், கிளம்பிப் போகிறார்.
க்ரஹாம் கண்களைத் துடைத்துக் கொள்கிறான். அந்தப் பிரார்த்தனை அவளை விட அவனை நிறைய பாதித்திருக்கிறது போல இருக்கிறது. “அம்மா, நமக்கு எப்படித் தெரியப் போறது அவள்…-”
“அவ நல்லாத்தான் இருப்பா.” வாஞ்ஜீ சொல்கிறாள். தன் குரலை அவளே கேட்கிறாள், ரொம்ப உச்ச ஸ்தாயியில் இருக்கிறது, ரொம்ப சத்தமாக. அந்தக் குரலை அவள் அறிவாள்: க்ரஹாம் கைதானபோது அப்படித்தான் அவள் பேசினாள், அவனுக்கு தீர்ப்பு கிட்டுவதற்குச் சில வாரங்கள் முன்பாக, அவளுக்கு எல்லாம் நல்லபடியாக முடியும், அவனுக்கு விடுதலை கிட்டி விடும் என்று அவள் நம்ப வேண்டி இருந்த நாட்களில். ஒரு வேளை நாம் உரக்கச் சொன்னால், அதை நம்பவும் செய்தால், எல்லாம் நல்லபடியாக முடியலாம். “நமக்கு எதுவும் தெரியாது. ஏதாவது நமக்குத் தெரியற வரை, அவள் நல்லபடியா இருக்கிறா. அவ உனக்கு ஒண்ணு அனுப்பி இருக்கா பாரு, க்ரஹாம்.” அவள் ஒரு காவலரைக் கூப்பிட்டு, மடிக்கணினி ஒன்றைக் கேட்கிறாள்.
அவர் அதைக் கொணர்கிறார். இது இப்போது அவளுக்கு ஒரு வியப்பையும் தரவில்லை. அந்த நம்பமுடியாத அதிர்ஷ்ட அலையைப் பற்றி அவளுக்கு இருந்த அச்ச உணர்வு இப்போது வடிந்து விட்டது, வேறெந்த அச்சத்தையும் அதற்குப் பதிலாக எழுவதற்கு அவள் அனுமதிக்க மாட்டாள்.
காவலர், தொண்டையைச் செருமுகிறார். “நீங்க இத உபயோகப்படுத்தறப்ப நான் இங்க இருக்கணும், தெரியுமில்லெ!”
“ஆமா, எங்களுக்குத் தெரியும்.”
அவர் எந்திரத்தை முடுக்கித் துவக்குகிறார். வாஞ்ஜீ, கைகள் சிறிதே நடுங்கி இருக்க, அந்த கட்டைவிரல் அளவு ட்ரைவை அதில் இணைக்கிறாள், ஒரு கோப்பைத் திறக்கிறாள். யாரோ மடிக்கணினியின் ஒலியை மிக உச்சத்தில் வைத்திருக்கிறார்கள்: ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி போல, தலைமுறைக் கலத்தின் அடையாள இசை திடீரென்று இரைச்சலாகத் துவங்குகிறது, அதன் பிறகு உடனே “ஹாப்பி பர்த்டே க்ரஹாம்!” என்பது திரையை பூப்பூவான எழுத்துகளால் நிரப்புகிறது, பிறகு ஜெல்லின் முகம் திரையில் வருகிறது. வாஞ்ஜீ அதைப் பல மாதங்களாகப் பார்த்திருக்கவில்லை, ஒளிப்படங்களில் பார்த்ததைத் தவிர. அவள் ஆரோக்கியமாக இருப்பதாகத் தெரிகிறாள். தலை முடி குட்டையாக இருக்கிறது, அவள் ஒரு வெள்ளை டி ஷர்ட்டில் இருக்கிறாள்; அவளுக்குப் பின்னால் வாஞ்ஜீ உலோகச் சுவர்களையும், வெண்மையான நடை ஒன்றையும், அதில் மனிதர்கள் நடப்பதையும் பார்க்கிறாள்.
ஜெல்லின் குரல் சாதாரணமாக ஒலிக்க வேண்டும் என்பதற்காக, வாஞ்ஜீ ஒலியைச் சற்றுக் குறைக்கிறாள். “ஹேய் க்ரஹாம்! உன் பிறந்தநாளெக்கு நேரத்தில அம்மாவுக்கு இந்தச் சேதி வந்து சேர்ந்திருக்குன்னு நம்பறேன். அப்படி இல்லேன்னா, தாமதமா வாழ்த்துகள். எனக்கு ஒரு நிமிஷம்தான் இருக்கு, ஆனால் உங்களுக்குத் தெரியணும்னு நெனச்சேன். நீங்க ரெண்டு பேரும் பக்கத்தில இல்லாதது ரொம்பத் தெரியறது, எப்பவும் உங்களப் பத்தின நெனப்பாவே இருக்கு. இந்தக் கப்பல்லெ கொஞ்சம் சலிப்பாத்தான் இருக்கு, ஆனா ரொம்ப மோசமால்லாம் இல்லெ. நான் இன்னமும் செடிங்களெத்தான் பார்த்துக்கறென். எனக்கு அது பிடிச்சிருக்கு.” ஜெல் ஒரு சின்னஞ்சிறு மஞ்சள் மேலங்கியை உயர்த்திக் காட்டுகிறாள். “நான் இதை க்ரோஷேல பின்னினேன். என் முட்டைங்கள்ல ஒண்ணு பிடிச்சுகிட்டு இருக்கு: நான் ஒரு அம்மாவா ஆகப் போறேன்!” அவளுடைய சிரிப்பு மிகப் பெரிதாக இருக்கிறது இப்போது, பொது நீச்சல் குளத்துக்குக் கோடைக்காலங்களில் போகும்போது இப்படித்தான் அவள் சிரிப்பாள் என்பதும், பக்கத்து வீட்டுக்காரரின் நாயோடு விளையாடும்போதும் எல்லாம், தலைமுறைக் கலத்தில் தனக்கு இடம் கிடைத்து விட்டது என்று அம்மாவிடம் சொல்ல ஓடி வந்த போதும், அப்படிச் சிரித்தாள் என்பதும் வாஞ்ஜீக்கு நினைவு வருகிறது. “அம்மா பாருங்க, நீங்க ஒரு பாட்டி ஆகப் போறீங்க, க்ரஹாம், நீ ஒரு மாமாவாகப் போகிறே. அது என்ன குழந்தைன்னாலும், உங்க ரெண்டு பேர்ல ஒர்த்தர் பேரை அதுக்கு வைக்கப் போகிறேன். இங்க பொறக்கிற குழந்தைங்கள்ல, முதல்ல பிறக்கிற சில குழந்தைகள்ல அது ஒண்ணா இருக்கும். எனக்குத் தனியா நல்ல சாப்பாடு எல்லாம் கொடுக்கிறாங்க, நெறய்ய வைடமின் எல்லாம் சேர்த்து. இது பெரிய விஷயம். ஓகே, அவ்வளவுதான் எனக்கு இருக்கற நேரம். உங்க ரெண்டு பேருக்கும் என் அன்பு. வரேன்!”
செய்தி முடிந்து விட்டது. அறை இதுவரை வாஞ்ஜீ கேட்டிராதபடி மிக அமைதியாக இருக்கிறது. தன் முதுகுக்குப் பின்னே ஒரு அழுத்தத்தை வாஞ்ஜீ உணர்ந்து திரும்பிப் பார்க்கிறாள். பின்னால் மேஜைக்கு அப்பால் ஒரு கூட்டம் நிற்கிறது: இதர கைதிகளும், அவர்களுக்கான பார்வையாளர்களும், இதர காவலர்களும். பிரார்த்தனைக்காரரும். சிலர் சற்று அழுததைப் போல மூக்கை உறிஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். எல்லாரும் அறையப்பட்டது போல நிற்கிறார்கள். என்ன அணிந்திருந்தாலும், சீருடைகளோ, கைதிகளின் உடுப்புகளோ, தெருவுக்கான ஆடைகளோ எதானாலும் எல்லாரும் ஒரே போலத் தெரிகிறார்கள்.
அவர்கள் அந்த இசையைக் கேட்டிருக்கிறார்கள். கப்பலில் இருந்து கிட்டிய செய்தியைப் பார்க்க வந்திருக்கிறார்கள்.
“நமக்கு இன்னும் ஒண்ணுமே தெரியாது,” வாஞ்ஜீ சொல்கிறாள். அவளுடைய குரல் இப்போது வழக்கமான குரல் போல ஒலிக்கிறது. “எதுவும் நிச்சயமா இல்லை. அங்கே என்ன நடக்கிறதுன்னாலும், நாம இப்ப எதயும் செய்யப் போறதில்லெ. இன்னக்கி என் மகன் க்ரஹாமுக்குப் பொறந்த நாள். அவனுக்கு வாழ்த்துப் பாட எனக்கு உதவி செய்யுங்க.”
அவர்களும் அதைச் செய்கிறார்கள். அந்த அதிர்ச்சியாலும், சோகத்தாலும் பாதிக்கப்பட்டதால் அது ஒரு அரைகுறை முயற்சியாக, சுருதி தப்பி ஒலிக்கிறது. முழுவதும் நீடிக்கவும் இல்லை, ஆனால் இப்போதைக்கு அது அங்கே ஒலிக்கிறது. வாஞ்ஜீக்குத் தெரியும் இதுவும் ஒரு அதிர்ஷ்டம்தான்.
***
தமிழாக்கம்: மைத்ரேயன்/ ஆகஸ்ட் 2016
[மொழி பெயர்ப்பைப் படித்துத் தேவையான திருத்தங்கள் குறித்து ஆலோசனைகள் கொடுத்து இதை மேம்படுத்த உதவிய நட.பாஸ்கர், நம்பி கிருஷ்ணன், சிவா கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு மொழி பெயர்ப்பாளர் நன்றி தெரிவிக்கிறார்.]
[மூலக் கதை: முதலில் பிரசுரமான பத்திரிகை- ஆஸிமாவ்ஸ் ஸைன்ஸ் ஃபிக்‌ஷன், செப்டெம்பர் 2014
மொழிபெயர்ப்புக்குப் பயன்படுத்திய பிரதி கிட்டியது இந்தப் புத்தகத்தில்:
2015 பெஸ்ட் அமெரிக்கன் ஸைன்ஸ் ஃபிக்‌ஷன் அண்ட் ஃபாண்டஸி– பதிப்பாசிரியர்: ஜோ ஹில்
பிரசுர நிறுவனம்: ஹௌடன் மிஃப்லின் ஹார்கோர்ட்]
 

One Reply to “ஜன்னல்கள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.