ஜகன்நாத் ஜோஷி என்றால் அவர் இருக்கும் அபார்ட்மெண்ட்டில் கூட தெரியவில்லை. விடுதலைப் போராட்ட வீரரின் மகன் என்றாலும் தெரியவில்லை. “ ஜோஷி? ஏக் ஸோ சார் யா தீன் ஸோ ஆட்? (வீட்டு எண் 104ஆ அல்லது 308ஆ?)” என்ற செக்யூரிட்டியிடம் விளக்க நேரமில்லை. செல்போனில் அழைத்தபோது மூன்றாம் மாடி என்றார் ஜகன்நாத்.
அவர் தந்தையின் பெயர் கோபால் ஜோஷி*. விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்ட அவரது பெயர் தியாகிகளின் பட்டியலில் இல்லை என்றார் ஜகன்நாத்.. ஆனால் சிறை சென்றிருக்கிறார். ஆகஸ்டுப் புரட்சியில் அடி வாங்கியிருக்கிறார். செவிலியராகத் தேர்ச்சி பெற்றிருந்ததால், அடிபட்டவர்களுக்கு மருந்து இட்டு சேவை செய்திருக்கிறார். வீட்டில் இருந்த பணமெல்லாம் கொடுத்து உதவியிருக்கிறார். ஆனால் எல்லாம் மிக அடிமட்ட அளவில் நடந்த செய்கைகள். பொங்கி ஆர்ப்பரிக்கும் கடல் அலைகள் போலவன்றி, ஆழத்தில் மீன்களின் செதில்கள் துளவுவதால் வந்த சலனம் போன்ற அமைதியான நிகழ்வுகள்.
”1977ல அப்பா இறந்து போனார் “ என்றார் ஜகன்நாத். ” துணிக்கடை வைச்சிருந்தோம். ஏதோ வருமானம் வந்தது. அண்ணன் டிப்ளமோ முடிச்சுட்டு வேலைக்குப் போனப்புறம்தான் குடும்பம் ஓரளவுக்கு தலை நிமிர்ந்தது. அப்புறம் நான் படிச்சு, என் தம்பி படிச்சு..”
நாட்டுக்காக உழைத்த தலைவர்களின் பெயர் மட்டுமே தெரிவதில் ஒரு அபாயம் இருக்கிறது. இத்தனை பெரிய சுதந்திரப் போராட்டம் ஒரு தனிமனிதரால், அல்லது அவருடனிருந்த சிலரால் மட்டும் நடத்தப்பட்டு விடவில்லை. எண்ணற்ற கோபால் ஜோஷிகளின் எதிர்காலம், அவர்களது குடும்பங்கள் சின்னாபின்னமானது. பொருளாதார ரீதியில் அவர்கள் வாங்கிய அடி மிகப் பலமானது.
”இதன் காரணம் அன்றிருந்த வறுமை, தேக்க நிலை மட்டுமல்ல” என்றார் ஜகன்நாத். ”விடுதலை வீரர்களின் எதிர்பார்ப்புகளும், அன்றிருந்த குழப்பமான அரசியல், சமூக சூழலும் அவர்களைத் தம்மிலேயே வேறுபடுத்தின. எஸ். ஆர். டாங்கே போன்றவர்களின் சோஷலிசக் கொள்கையைப் பின்பற்றிய சிலர், அம்பேத்கரின் கொள்கையில் ஈர்க்கப்பட்ட பலர் என்று பிரிந்த வேளையில், அதற்கு முன்பு வரை அவர்களைச் சேர்த்து வைத்திருந்த சுதந்திர வேட்கை சட்டென இல்லாமல் போனது. காஷ்மீர், ஹைதராபாத் எனப் போர்கள், அவர்கள் அறியாத புது வடிவம். அதன்பின் வளர்ச்சிக்கு வேண்டிய கட்டமைப்பு வளரவேண்டிய காலகட்டம். படேலின் திடீர் மறைவு, நேருவின் கொள்கைகளில் உள்கட்டமைப்பு திட்டங்கள் புரியாத நிலையில் , அவர்கள் வீட்டில் வறுமையையும், வெளியே குழப்பத்தையும் சந்தித்தனர். ஒரு வெறுமையே அவர்கள் மனதில் சூழ்ந்திருந்தது”
உளவியல் ரீதியாக “ அடுத்தது என்ன?” என்பதான தெளிவின்மையும், வறுமையும் தேசத்திற்காகப் போராடியவர்களின் மனதில் திகைப்பாக உருவெடுத்த சூழல் 1948-60 என்கிறார்கள். 1951ல் இந்தியாவில் படிப்பறிவில்லாதவர்களின் தொகை 85%, பெண்களில் இது 92%. விவசாயம், வியாபாரம், உடலுழைப்பு என்பதைத் தவிர வேறு ஊதியமூட்டும் வேலை வாய்ப்புகள் கிட்டாத , அதற்குப் பெரும்பான்மையர் தகுதி பெறாத காலம். பெரும் தொழிற்சாலைகள் நிறுவப்பட முதல் இரு ஐந்தாண்டு திட்டங்கள் வழி வகுத்தாலும், அந்த 10 வருடங்கள் , தேசத் தியாகத்தில் அனைத்தையும் பறிகொடுத்தவர்களின் வாழ்வு மிக மோசமடைந்திருந்தது.
குழப்பமடைந்திருந்த நிலையில், போராட்டத்தில் இணைந்து 1947 வரை சகோதரர்களாக இருந்தவர்கள் பல கட்சி கொள்கைகளாலும், தான் சார்ந்த சமூகத்தின் மீதான பற்றாலும் பிரிந்தார்கள். தலித்துகள், கம்யூனிஸக் கொள்கை கொண்டவர்கள், காங்கிரஸ் எனப் பிரிந்தவர்களில் , தன் மதம் சார்ந்த , மொழி சார்ந்த கொள்கைகளால் வெளியே பிரியாமல், உள்ளே கனன்று கொண்டிருந்தவர்கள் பலர்.
ஜோஷியின் குடும்பத்தில் , சொத்து பிரிக்கப்பட்டு, அத்தொகையில் தாதர் அருகே துணிக்கடை போட்டார். கல்வியின் அவசியத்தை உணர்ந்த அவர், மூத்த மகனை மிகுந்த சிரமங்களுக்கிடையே படிக்க வைத்தார். தியாகிகளுக்கு மரியாதை குறைந்து வரும் சமூகத்தில் தான் ஒரு தேசத் தியாகி என்று அடையாளம் காட்ட அவர் நினைக்கவில்லை. அடித்தளத் தொண்டராக இருந்ததால், தலைவர்கள், தொழில் அதிபர்களின் தொடர்பு இல்லாத் போயிற்று. அதனால் தனக்கு வேண்டிய பொருளாதாரத்தை அவரால் தேடவோ, தக்க வைத்துக்கொள்ளவோ முடியவில்லை.
ஆந்திரா 1952ல் அதன்பின் மஹாராஷ்டிரம், குஜராத் என மாநிலங்கள் மொழிவாரியாகப் பிரிந்தபோது, தன் மொழி, தன் இனம் என அடையாளங்களின் அவசியத்தை உணர்ந்தார் அவர். 1960களின்பின், வேலை இல்லா திண்டாட்டத்தில், தன் இனம் வோட்டு வங்கி அரசியலால் அழிக்கப்படுமோ? என்ற அச்சம் அவருக்கு உருவானது. இளைய மகனையும் எப்பாடுபட்டாவது அரசு ஊழியத்தில் சேர்க்க முனைந்தார். “1950- 1975” வரையான காலகட்டம் எங்கள் குடும்பத்தில் வறுமையும் வலியும் நிறைந்தது” என்றார் ஜகன்நாத்.
”இந்தியா உடையும்” என்பதே அயல்நாடுகளின் சிந்தனையாக இருந்திருந்தது. ”டைம்ஸ்” இதழின் ஆசிரியராக இருந்த நெவில் மாக்ஸ்வெல் என்பவர் 1967ல் “ இப்போது வரப்போகும் பொதுத்தேர்தல் இந்தியாவின் இறுதியான தேர்தலாக இருக்கும்” என்றார்.
“இந்த நாடு உருப்படாது” என்ற எண்ணம் இந்தியரில் பலருக்கு 1960களில் சோர்ந்த சிந்தனையாகத் தோன்றியது. அதில் ஜோஷியும், அவருடன் முன்பு சேர்ந்து போரிட்ட சில தலித் மக்களும் அடங்குவர். ஜோஷி குடும்பம் பொருளாதார சிக்கலை சிந்தித்தது என்றால், அவரது தலித் நண்பர்களின் குடும்பங்கள் சமூக, பொருளாதாரச் சிக்கலைச் சந்தித்தன. பொருளாதார ரீதியாக அவர்களுக்குக் கிடைத்த சில சலுகைகள் , மேல்மட்ட குடிகளாயிருந்த ஜோஷி போன்றோருக்கு கசப்பைத் தோற்றுவித்தன . ஜகன்நாத்தின் பெரிய தமையனார். அரசு சார்ந்த நிறுவனம் ஒன்றிலிருந்து ஓய்வு பெற்றவர் “ நான் படிக்கும்போது, வேலைங்கறது மிகப் பெரிய விசயம். அதுல சிலருக்கு ஜாதி அடிப்படையில வேலை கிடைச்சது என்ற செய்தி உள்ளூற மனக்கசப்பை வளர்த்தது உண்மை” என்றார். தலித்துகளின் சிந்தனையில்’ இன்றூம் சமூகத்தில் சமநிலை, ஒற்றுமை என்பது வராத வரை, பொருளாதார ரீதியான மாற்றங்கள் மட்டும் போதாது’ என்பது பொதுவான கருத்தாக இருந்தது. இது இன்றுமான உண்மை நிலை. அவர்களுக்கு இடையே ஒரு திரை விழுந்தது அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஆனால் விழுந்ததாக எவரும் காட்டிக்கொள்ளவில்லை. சில உண்மைகளை அவர்கள் எவரும் வெளியே தைரியமாகச் சொல்ல, சந்திக்கத் தயாராக இல்லை.
கோபால் ஜோஷி, தன் குடும்பம் வறுமையில் வாடுவதற்கு காரணம் தொழிற்சாலைகள் அமைக்கப்பட ஆன கால தாமதம், திடீரென்று வந்த சமூக சீர்திருத்தங்கள் என்றே கருதியிருக்கவேண்டும். அவர் அடிக்கடி சொன்ன வரிகள் “ வெள்ளைக்காரன் போனான். இப்ப நம்ம நிறத்துல இருக்கறவன் சுரண்டறான்.” எளிமையான அதிகம் சிந்திக்க முயற்சிக்காத மக்கள், தங்கள் உடைமைகளையும், உடலுழைப்பையும் எதிர்காலத்தைப் பற்றிய சில கனவுகளுடன் விடுதலைப் போரில் ஈடுபட்டு, கசப்புடன் இறந்துபோனது காலத்தின் கோலம். ஆனால் இந்த தடுமாற்றங்கள் தவிர்க்க இயலாதவை.
”அவர் தன்னை ஒரு தேசத்தியாகி என்று அடையாளம் காட்டிக்கொள்ளத் தயங்கினார் ” என்றார் ஜகன்நாத். மெல்ல மெல்ல, தான் ஒரு மராட்டிய பிராமணர் என்பது மட்டுமே அவருள் வேரூன்றியது. தேசிய அளவிலிருந்த சிந்தை தன் இனம் சார்ந்ததாக மாறியது அக்கால யதார்த்தம். இதில் அவரைக் குற்றம் சொல்ல முடியாது. இனக்குழுக்களாகப் பிரியவேண்டிய ஒரு நிர்ப்பந்தம் அவர்களுக்குள் உள்மறை உணர்வாய் தோற்றுவித்ததில் பெரும்பங்கு அன்றைய பொருளாதார ,சமூக சூழல். “இந்த நாட்டுக்கு உழைச்சு என்னத்தைக் கண்டீங்க? வறுமைதான் மிச்சம்” என்பதான பேச்சுகளை நாற்பது வயதில் கேட்பது , இயலாமையை மேலும் கூட்டுவதாகவே இருந்திருக்கும்.
இறக்கும்வரை காதி அணிவதையும், மராட்டிய வழக்கமாக தலையில் தொப்பி அணிவதையும், தன்னாலான உடலுழைப்பில், கடையில் வேலை பார்த்து பொருளீட்டினார் , சுய மரியாதையை விட்டுக்கொடுக்காது கடின உழைப்பில் முன்னேற தன் மக்களை ஊக்குவித்தார் என்றார்கள் அவரது மகன்கள் மூவரும். அவர்களது குழந்தைகள் “எங்க தாத்தா தேசத்தியாகி” என்று பெருமையாகச் சொல்கிறார்கள். மும்பையில் பலரைப்போலவே வீட்டில், கார் டாஷ்போர்டில், சட்டையில் மூவர்ணக்கொடி எனப் பெருமிதமாக அடையாளம் காட்டுகிறார்கள். “அரசு சார்ந்த வேலைகளை விட, தனியார் கம்பெனிகளைவிட, சுயமாக ஒரு கம்பெனி தொடங்கி முன்னேறணும்” என்ற எண்ணம் அவர்களுக்கு இருக்கிறது. இதனை படித்த இளைஞர்கள் பலரின் சிந்தனையாக இன்று காணமுடிகிறது.
இந்தியாவின் முன்னேற்றத்தின் பின்னே, வலி , ஏமாற்றம் நிறைந்த பல ஜோஷிகளின் குடும்பங்கள் இருக்கின்றன. இவர்கள் கொண்டிருந்த, தன் மரபு மீதான நம்பிக்கையும், ஜனநாயகத்தின் மீதும், நாட்டின் மீதுமான பற்றும், பண்பாட்டின் வழிவந்த விடாமுயற்சி, உழைப்பு, ஈகை, தியாகம்,எளிய வாழ்வு என்ற பண்புகளின் செறிவுமே 1947ன் பின்னான குழப்பம் நிறைந்த காலகட்டத்தில் நம்மை முன் செலுத்தின. ஆனால், சுதந்திர வரலாற்றைப் போலவே, அதன் பின்னான காலத்திலும் இவர்களது தியாகங்கள், வலிகள் அறியப்படுவதில்லை, மதிக்கப்படுவதில்லை. அலைகள் அலைகளாகவே ஆர்ப்பரிக்க, உள்ளே மீன்களின் அசைவின் பெரும் சலனம் நாம் அறியாமலேயே அமைதியாகக் கடலைக் கலக்குகிறது.
* இடங்கள், பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.
உசாத்துணைகள் :
http://ecell.in/blog/the-freedom-fighters-we-need-and-deserve/
https://www.amazon.in/India-After-Independence-Bipan-Chandra-ebook/dp/B00D8ZSTFM#reader_B00D8ZSTFM