வ.உ.சி.யின் திருக்குறள் பற்று

vochidambaram-large

திருவள்ளுவரையும் திருக்குறளையும் பாராட்டாத புலவர்கள் இலர். தமிழின் தலை சிறந்த படைப்பு திருக்குறள் ஆகும். அந்த சிறப்பினால் தான் திருக்குறள் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
கப்பலோட்டிய தமிழர், செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனார் திருக்குறள் மீது மிகுந்த ஈடுபாடு உடையவர். இளமையில் இருந்து இறக்கும் வரை வ.உ.சி.யின் சிந்தனையில் திருக்குறள் நிறைந்திருந்தது. வ.உ.சி. தனது சுய சரிதையில்
“மாநிலம் கொண்டிட வள்ளியும் உவந்திட
திருவள்ளுவரின் தெய்வ மாமறையின்
பெருவளக் குறள் சில பேணிப் படித்தேன் ”
என்ற வரிகளின் மூலம் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே வ.உ.சி.யின் திருக்குறள் பற்றை அறிய முடிகிறது.
..சி. திருக்குறள் மீது கொண்டிருந்த மதிப்பு
ஆங்கிலேய ஆட்சியாளர்கள், தேசபக்த செம்மல் மீது தேச துரோக வழக்குத் தொடுத்து சிறையில் அடைத்தனர். தேசியக் கவி சி. சுப்ரமண்யபாரதியார் புதுவையில் இருந்தபோது மகான் அரவிந்தாரின் ஆங்கில இதழைத் தழுவி “கர்மயோகி” என்னும் மாத இதழை நடத்தி வந்தார். அதில் சௌமிய வருடம் பங்குனி மாதம் (மார்ச், 1910) -இல் வந்துள்ள செய்தி:
“சில தினங்களுக்கு முன்பு கோயம்பத்தூர் சென்ட்ரல் ஜெயிலில் இருக்கும் ஸ்ரீமான் சிதம்பரம் பிள்ளையை அவருடைய மனைவி, மக்களும் அவரது ஆப்தராகிய ஸ்ரீ வள்ளி நாயக சாமியாரும் வேறொரு நண்பரும் பார்வையிடச் சென்றார்கள். அந்த சந்திப்பில் நடந்த  சம்பாஷணையினிடையே ஸ்ரீ சிதம்பரம் பிள்ளையவர்களின் வாக்கிலிருந்துதித்த சில வசனங்கள்…….தமிழர்களெல்லாம்  வள்ளுவர் குறளை உரையுடன் அறிந்து பாராயணம் செய்தல் வேண்டும். 1330 குறளையும் பொருளுடன் உணர்ந்திலாத தமிழர் முற்றுந் துறந்த முனிவரேயாயினும், என்னைப் பெற்ற தந்தையேயாயினும் யான் அவரைப் பூர்த்தியாக மதிப்பதுமில்லை; நேசிப்பதுமில்லை” .. .. .. 1910-ஆம் ஆண்டு கோவைச் சிறையில் தன்னைச் சந்திக்க வந்தவர்களிடம் வ.உ.சி. கூறிய இக்கூற்று வ.உ.சி. திருக்குறள் மீது கொண்டிருந்த மதிப்பை உணர்த்துகிறது.
மணக்குடவர் உரை பதிப்பு
24.12.1912-இல் கொடுஞ்சிறைவாசத்தை முடித்து விடுதலையானார். வ.உ.சி. தனது வாழ்வில் ஏற்பட்ட பல்வேறு சிரமங்களுக்கும் மத்தியிலும் தனது சிந்தையிலிருந்து திருக்குறளை மறந்துவிடவில்லை. தொடர்ந்து திருக்குறள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தார். அதன்விளைவு திருக்குறள் மணக்குடவர் உரையினை வ.உ.சி. தாமே முதன் முதலில் அச்சில் பதிப்பித்து மகிழ்ந்தார்.
மணக்குடவர் முதல் பரிமேலழகர் வரை திருக்குறளுக்கு பழங்காலத்தில் உரை தந்தவர்கள் பத்து பேர்கள் ஆவர். திருக்குறள் உரைகளில் பரிமேலழகர் உரைக்கு அடுத்தபடியாக மக்களிடத்தில் பரவிச் செல்வாக்கு பெற்ற பெருமை மணக்குடவர் உரைக்கு உண்டு. பரிமேலழகர் உரையை மறுப்பவர்களும் அவரது கருத்தை ஏற்காதவர்களும் மணக்குடவர் உரையை நோக்குவது பல ஆண்டுகளாக இருந்து வரும் வழக்கமாகும்.
மணக்குடவர் உரை தெள்ளிய தமிழில் எளிய நடையில் அமைந்துள்ளது. பொழிப்புரையும் சில இடங்களில் விளக்கமும் உள்ளன. தமிழ்ப்பண்பாடு தழுவி எழுதப்பட்ட தெளிந்தவுரை என்று இவரது உரையைப் போற்றுவர். இவர் பிற உரையாசிரியர்களைப் போல வட நூற்கருத்தைத் தம் உரையில் புகுத்துவது இல்லை. புதிய பாடங்களைக் கொண்டு சொற்களைப் பிரிக்கும் முறையில் புதுமை கையாண்டு சிறப்பாக உரை எழுதிச் செல்வது இவரது பண்பாகும் என்பர் மு.வை. அரவிந்தன்.
வ.உ. சி. பதிப்புப் பணியை மேற்கொண்ட காலகட்டத்தில் பழைய நூல்களைப் பதிப்பிக்க முன்வந்தோர்க்குப் பொருட்பற்றாக்குறை இருந்தது. அதனை மீறித் தமிழ் நூல் ஒன்று பதிப்பிக்கப்பட்டு வெளிவரினும் ஆங்கில மொழி ஆட்சி மொழியாக அமைந்திருந்ததால் நூலினை வாங்கிப் பயில்வோர் மிகச் சிலராக இருந்தனர். பயின்ற மிகச் சிலரும் பதிப்பாசிரியர்களைக் குறைகூறி அவர்களின் ஊக்கத்தினையும் உரனையும் அழிக்கலாயினர். பழங்கால ஏடுகளைக் கண்டுபிடிப்பது மிக அரிய செயலாய் இருந்தது. கிடைத்த ஏடுகளும் செம்மையற்று இருந்தன. அவ்வேடுகளில் காணப்பட்ட எழுத்துக்களின் முறைமை குழப்பத்தைத் தந்தது. இத்தகைய இடர்ப்பாடுகள் நிறைந்த சூழ்நிலையில் திருக்குறள் மீது கொண்டிருந்த அளவற்ற ஆர்வம் காரணமாக  வ.உ. சி பதிப்புப் பணியினை ஆற்ற முன் வந்தார் என்று சங்கர வள்ளி நாயகம்  “வ.உ. சி வாழ்க்கை வரலாறும் இலக்கிய பணிகளும்” என்ற நூலில் கூறுகிறார்.
இலக்கியத் துறையில் வ.உ.சி. பதிப்பித்த நூல்கள் தொல்காப்பியமும் திருக்குறளும் ஆகும். சென்னை பெரம்பூரில் வ.உ. சி. வாழ்ந்த போது 1917-இல் திருக்குறள் அறத்துப்பால்- மணக்குடவர் பதிப்பு என்னும் தலைப்பில் வ.உ. சி திருக்குறள் மணக்குடவர் உரையினைப் பதிப்பித்து 140 பக்கங்களைக் கொண்ட நூலாக வெளியிட்டு மகிழ்ந்தார்.
மணக்குடவர் உரைபதிப்பு உருவான வரலாறு
திருக்குறளுக்கு உரை செய்திட்ட பரிமேலழகர் தவிர எஞ்சிய ஒன்பதின்மர் உரைகளைத்தேடும் முயற்சியில் ஈடுபட்டார்  வ.உ.சி. அவருக்கு மணக்குடவர் உரைப் பிரதி கிடைத்தது. தமக்குக் கிடைத்த பிரதியைச் சென்னை அரசிற்குட்பட்ட கையெழுத்துப் புத்தகசாலையில் உள்ள மணக்குடவர் உரைப் பிரதியோடு ஒப்பிட்டுப்பார்த்தார் வ.உ.சி. அரசாங்கப் புத்தகசாலையில் உள்ள மணக்குடவர் உரைப்  பிரதியில் அதிகாரப் பெயரும் முறையும் பரிமேலழகர் முறையைப் பின்பற்றியிருந்தனவென்றும், அதில் சில குறள்களின் மூலமும் உரையும் சிதைந்த நிலையிலும், குறைந்த நிலையிலும் இருந்தன” என்றும் வ.உ.சி திருக்குறள் மணக்குடவர் பதிப்புரையில் கூறியுள்ளார்.
திருக்குறள் பதிப்பு முயற்சியில் ஈடுபட்ட வ.உ.சி தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையர் அவர்களிடத்தில் இருந்த மணக்குடவர் உரைப் பிரதியைத் தருவித்துப் பார்த்தார். அந்தப் பிரதி முற்கூறிய அரசாங்கத்தின் புத்தகப்பிரதியிலிருந்து பிரதியெடுக்கப்பட்டது என்பதையும் அறிந்தார். தமக்குக் கிடைத்த மணக்குடவர் உரைப்பிரதியையும், உ.வே.சா. அவர்களிடம் பெற்ற பிரதியையும் வைத்துக்கொண்டு சாமி சகஜானந்தர் உதவியுடன் இருப்பவற்றை ஒழுங்குபடுத்தியும் பிழைபட்டனவற்றை நீக்கியும் மணக்குடவர் உரையை முழுமையாகப் பதிப்பித்துள்ளார்.
தமிழறிஞர்கள் தி. செல்வ கேசவராய முதலியார், த. கனக சுந்தரம் பிள்ளை ஆகியோரும் மணக்குடவர் உரைபிரதியைப் பலமுறைப் பார்த்துச் சீர்படுத்தித் தந்துள்ளதாக  வ.உ.சி.,தன் திருக்குறள் மணக்குடவர் பதிப்புரையில் தெரிவித்துள்ளார்.
மணக்குடவர் உரையினைப் பதிப்பித்தததற்கு முக்கியக் காரணம்
” மணக்குடவரும் பரிமேலழகரும் அதிகார முறையிற் சிறிதும் பாக்களின் முறையில் பெரிதும் வேறுபட்டிருப்பதோடு பல குறள்களில் வெவ்வேறு பாடங்கள் கொண்டும் பலப்பல குறள்களுக்கு வெவ்வேறு பொருள்கள் உரைத்துள்ளனர். இவ்வேற்றுமைகளைக் காண்பார் திருக்குறளின் பெருமையையும், அதன் மூல பாடங்கள் வேறுபட்டுள்ள தன்மையையும் நன்கு அறிவதோடு குறள்களுக்கு புதிய பொருள்கள் உரைக்கவும் முயல்வர். அவர் அவ்வாறு செய்ய வேண்டுமென்னும் விருப்பமே யான் இவ்வுரையை அச்சிடத் துணிந்ததற்கு முக்கியக் காரணம்   என்று வ.உ.சி திருக்குறள் மணக்குடவர் உரையினைப் பதிப்பித்த சூழலை விளக்குகின்றார்.
..சி யின் திருக்குறள் பதிப்பின் சிறப்புக் கூறுகள்:
வ.உ.சி யின் திருக்குறள் பதிப்பின் சிறப்புக் கூறுகளாக கீழ்வருவனவற்றை சங்கர வள்ளி நாயகம்  “வ.உ.சி வாழ்க்கை வரலாறும் இலக்கிய பணிகளும்” என்ற நூலில் கூறுகிறார். அவர் அருஞ்சொல் விளக்கம் தருதல், சொல் வருவித்து விளக்கம் தருதல், விடுபட்ட பகுதிகளுக்கு விளக்கம் தருதல், விளக்கம் இல்லா இடங்கட்கு விளக்கம் தருதல், உரை ஒப்பீடு, இலக்கணக் குறிப்பு சுட்டுதல், அதிகாரவைப்பு முறை என ஏழுவகையாகப் பிரித்து விரிவான விளக்கம் தருகிறார்.
வ.உ.சி திருக்குறள் மணக்குடவர் உரைப் பதிப்பில் குறள்களையும் உரையினையும் எளிதில் பொருள் கொள்ளும் நிலையில் சந்தி பிரித்துப் பதிப்பித்துள்ளார்.பதவுரை தந்துள்ளார். துறவற இயலினைப் பொருத்தமான முறையில் விளக்கியுள்ளார். உரையாசிரியர் உரை காட்டாத குறள்களுக்கு தமது உரையினை வழங்கியுள்ளார்.  உரையாசிரியர் விடுத்துள்ள அதிகாரங்களுக்கு வைப்பு முறையினையும் சுட்டிக்காட்டியுள்ளார். வ.உ.சி பதிப்பித்த திருக்குறள் மணக்குடவர் உரைப் பிறர் காட்டாத பல புதுமைக் கூறுகளுடன் அமைந்துள்ளது என்பார் சங்கர வள்ளி நாயகம்.
 
திருக்குறள் சொற்பொழிவுகள்:
திருக்குறளில் பெரிதும் ஈடுபாடு கொண்ட வ.உ.சி, திருக்குறள் குறித்த சொற்பொழிவுகளையும் தலைமை உரைகளையும் நிகழ்த்தி வந்தார். 1928- ஆம் ஆண்டு தென்காசியில் திருவள்ளுவர் கழகம் நடத்திய முதல் ஆண்டுவிழாவில் தலைமை ஏற்றுச் சிறப்பித்தவர் தேசபக்தர் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம்பிள்ளை ஆவார்.(பொற்குவியல், தென்காசி 1978.பக்.12)
1935 மே மாதத்தில் சாத்தூரில் நடைபெற்ற திருவள்ளுவர் திருநாள் நிகழ்ச்சிக்கு வ.உ.சி. தலைமை ஏற்றுள்ளார். (திருவள்ளுவர் நினைவு மலர், திருவள்ளுவர் திருநாட்கழகம், பவளக்காரத் தெரு, சென்னை. 1936, பக்-136)
திருக்குறள்பாயிர ஆராய்ச்சி
1929-30களில் வெளிவந்த “தமிழ்ப்பொழில்” என்னும் இதழில் துணர் 5, மலர் 6,9,10 களில் வ.உ.சி, திருவள்ளுவர் திருக்குறள் “பாயிர ஆராய்ச்சி” குறித்து விரிவான கட்டுரை எழுதியுள்ளார். 1930-32களில் வெளிவந்த “தமிழ்ப்பொழில்” இதழில் துணர் 6 -இல் பக்கம் 456 முதல் 462 வரை தனது திருக்குறள் “பாயிர ஆராய்ச்சி” குறித்து தொடர்ந்து எழுதியுள்ளார். இந்த இதழில் திருக்குறள் குறித்த ஆய்வுக்கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதியுள்ளார் என்று அறியலாம்.
பாயிரம் என்பது நூன்முகம். நூற்கு முகம் போன்று விளங்குதலால் அது நூன்முகம் எனப்பட்டது. இக்காலத்து வழங்கும் திருக்குறட்சுவடிகளிலெல்லாம் ‘கடவுள் வாழ்த்து’, ‘வான் சிறப்பு’ ‘நீத்தார் பெருமை’, ‘அறன் வலியுறுத்தல்’ என்னும் நான்கு அதிகாரங்களும் பாயிரமாகக் காணப்படுகின்றன.   ‘கடவுள் வாழ்த்து’ முதலிய மூன்று  அதிகாரங்களும் ‘உரை கோளாளன்’ முதலியோர்களால் கூறப் பெற்ற சிறப்புப்பாயிரம். ‘அறன் வலியுறுத்தல்’ என்னும் அதிகாரம் ஒன்றே வள்ளுவரால் கூறப்பெற்ற பொதுப்பாயிரம் என்று துவங்கி வ.உ.சி. அந்தக் கட்டுரையில் விரிவாக ஆதாரங்களுடன் எழுதிக் கொண்டே செல்வார்.
துறவறவியலின் கண் ‘துறவு’ என்ற ஓர் அதிகாரமும் ‘மெய்யுணர்தல்’ என்ற ஓர்  அதிகாரமும் அமைத்துக் கூறிய வள்ளுவர், பாயிரத்தின் கண் ‘நீத்தார் பெருமை’ என்னும் ஓர்  அதிகாரமும்  ‘கடவுள் வாழ்த்து’ என்னும் ஓர்  அதிகாரமும் அமைத்துக் கூறுதல் மிகையாம் என்றும் வலியுறுத்துவார் வ.உ.சி. ”வ.உ.சி. கட்டுரைத் தொகுப்பு” என்ற நூலில் “வ.உ.சி திருவள்ளுவர் திருக்குறள் பாயிர ஆராய்ச்சி” என்ற கட்டுரையில் இதனை முழுமையாகக் காணலாம்.
..சியின் திருக்குறள் அறப்பால் விருத்தியுரை:
திருக்குறளின் மீது மிக ஈடுபாடு கொண்டிருந்த வ.உ.சி, அதுவரை எழுதப்பட்ட உரைகள் கடினமாக இருந்ததை உணர்ந்து அனைவரும் படிப்பதற்கேற்ற நிலையில் எளிமையான உரையினை எழுதி 1935-இல் திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் அரங்கேற்றினார். ‘காகிதம், மை, கட்டு நூல் முதலியனவெல்லாம் சுதேசியம்’ என்ற அறிவிப்புடன் திருக்குறள் அறத்துப்பால் உரையினை வ.உ.சி. வெளியிட்டார். தூத்துக்குடி வேலாயுதம் பிரிண்டிங் பிரஸில் அச்சிடப்பட்ட வ.உ.சி. யின் அறப்பால் விருத்தியுரை 300 பக்கங்களைக் கொண்டது. நூல் அச்சிட்டு முடித்தவுடன் இ.மு.சுப்ரமணிய பிள்ளையின் பார்வைக்கு அதனை அனுப்பி வைத்தார். அவர் நூலில் பிழை திருத்தம் என இரண்டு பக்கங்கள் அளவில் குறித்து அனுப்பி அதுவும் அச்சாகியுள்ளது. ஆக 302 பக்கங்களைக் கொண்ட அந்த விருத்தியுரை ஒரு ரூபாய் விலையில் அப்போது வெளியிடப்பட்டது.
 
..சியின் திருக்குறள் அறப்பால் விருத்தியுரை நூலின் முகப்புப் பக்கம்
தெய்வப் புலமைத்
திருவள்ளுவ நாயனார்
திருக்குறளும்,
தேசாபிமானி வ.உ.சிதம்பரம் பிள்ளை
விருத்தியுரையும்.
முதற்பாகம்:
சிறப்புப்பாயிரத்துடன்
அறப்பால்.
1935.
சமர்ப்பணம்
வ.உ.சி. தூத்துக்குடிக்கு அருகில் உள்ள சிலுக்கம்பட்டி அ.செ.சு.கந்தசுவாமி ரெட்டியார், அ.செ.சு.முத்தையா ரெட்டியார் என்னும் இரண்டு வள்ளல்களுக்கு இந்த நூலை அச்சிட உதவியதற்காக மிகுந்த நன்றி தெரிவிக்கிறார். அவர்களுக்கு தனது திருக்குறள் உரையினை சமர்ப்பணம் செய்து நேரிசை ஆசிரியப்பா 24 வரிகளில் பாடியுள்ளார்.
திருக்குறள் அறப்பால் முன்னுரை
முன்னுரையில் வ.உ.சி. அறப்பால், பொருட்பால், இன்பப்பால் ஆகிய மூன்று பால்களின் உரைகளையும் மூலத்துடன் அச்சிட்டு அவற்றை ஒரே புத்தகமாக வெளியிட வேண்டுமென்று நினைத்ததாகக் குறிப்பிடுகிறார்.  (1935-இல் வ.உ.சி. வெளியிட நினைத்தது 2008-ஆம் ஆண்டு பாரி நிலையத்தாரால் வெளியிடப்பட்டது)
வ.உ.சி. “அறப்பாலில் 76 குறள்களில் என் உரை பரிமேலழகர் உரைக்கு வேறுபடுகின்றது. 12 குறள்களில் என் உரை அவர் உரையை வெளிப்படையாக மறுக்கின்றது. 5 குறள்களில் என் உரை அவர் உரையை வெளிப்படையாக ஆமோதிக்கின்றது. மீதக்குறள்களில் என் உரையும் அவர் உரையும் ஒத்திருக்கக்கூடும்.” என்று கூறுகிறார்.
அச்சுப்பிழை தவிர்க்க செய்த முயற்சிகள்
அச்சுப்பிழை தவிர்ப்பதற்காக புரூவ்கள் வ.உ.சி.யால் மூன்று முறையும், மதுர ஆசிரியர் க.ரா.இராதா கிருஷ்ணையர் , பிரசங்கரத்தினம் மு.பொன்னம்பலம் பிள்ளை ஆகியோரால் இரண்டு முறையும் படிக்கப்பட்டது. இவ்விருவரும் உரை எழுதும் போதும் உதவியதற்காக வ.உ.சி. திருக்குறள் அறப்பால் முன்னுரையில் மனமார்ந்த வந்தனத்தைத் தொரிவிக்கிறார்.
..சி. உரை எழுதியுள்ள விதம்
வ.உ.சி. தாம் உரை எழுதியுள்ள விதத்தை அவரே விளக்குகிறார்.
“பொருள் என்னும் தலைப்பில் பதவுரை எழுதியுள்ளேன். அவ்வுரையில் பொருள் புரிந்து கொள்வதற்காக வருவிக்கப்பட்ட சொற்களை () இவ்வடையாளங்களுக்குள் எழுதியுள்ளேன்.
அகலம்  என்னும் தலைப்பில் இலக்கணக்குறிப்பு, வினா விடை, மேற்கோள், பாடபேதம் முதலியவற்றை எழுதியுள்ளேன்.
கருத்து என்னும் தலைப்பில் கருத்தினை எழுதியுள்ளேன்.”
வ.உ.சி. படிக்கும் முறையையும் கூறுகிறார். முதன்முறை படிக்கும்போது பொருளையும் கருத்தையும் மட்டும் படிக்குமாறும் இரண்டாம் முறை படிக்கும் போது அகலத்தையும் சேர்த்துப் படிக்குமாறும் கூறுகிறார்.
எடுத்துக்காட்டு:
ஆள்வினையுடைமை
அ•தாவது ஆளும் வினையை உடைமை (வ.உ.சி. அதிகாரத்தின் பெயரைத் தந்து அதன் பொருளை ஓரிரண்டு தொடர்களில் விளக்குகிறார்.)
ஊழையு முப்பக்கங் காண்ப ருலைவின்றித்
தாழா துஞற்று பவர்
பதவுரை
உலைவு இன்றி தாழாது உஞற்றுபவர்-தளர்ச்சியின்றித் காலந் தாழ்த்தாது முயல்பவர், ஊழையும் உ பக்கம் காண்பர்- விதியையும் பின்பக்கம் காண்பர்
அகலம்
உப்பக்கம்- பின்பக்கம். பின்பக்கம் காண்டலாவது, முதுகு காட்டி ஓடும்படி செய்தல். அஃதாவது, தோல்வியுறச் செய்தல்.
கருத்து
விடாமுயற்சியுடையார் விதியையும் வெல்வர்.
அறப்பால் விருத்தியுரைச் சிறப்புகள்
வ.உ.சி.யின் குறள் உரைச் சிறப்பிற்கு சில சான்றுகள்:

  1. பாட பேதம் காணல்:

பெற்றாற் பெறிற் பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழு முலகு.
“பெறிற் பெறுவர்” என்பது “பேணிற் பெறுவர்” என்று பாடமாய் இருந்திருக்கலாம். ஓலைச் சுவடியில் இருந்து மாற்றி எழுதும் போது “பேணிற் பெறுவர்” என்ற வார்த்தை “பெறிற்” என்று எழுதப்பட்டிருக்கலாம் என்றும் “பேணில்” என்ற பாடத்தை வைத்துப் படித்தால் பொருள் மிக எளிதாய் விளங்கும் என்றும் உரையாசிரியர் “பெறிற் பெறுவர்”  என்ற வார்த்தையை வைத்துக் கொண்டுசுற்றி வளைத்துப் பொருள் சொல்லுகிறார்கள் என்றும் சொன்னார்கள் எனப் பிள்ளையவர்களிடம் நேரில் பாடம் கேட்ட தி.கா.அறம் வளர்த்த நாதன் தனது “வ.உ.சி.யின் திருக்குறள் பரப்பும் தொண்டு” என்ற நூலில், மிகத் துணிந்து பாட பேதம் காணும் வ.உ.சி.யின் திறத்தைப் பாராட்டுகின்றார்.
2.பழைய உரை மறுத்துப் புத்துரை தருதல்
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்
என்ற குறளை, அடைக்கும் தாழ் அன்பிற்கு உண்டோ?(அகத்தினின்றும் வெளிப்படாமல்) அடைத்து வைக்கும் (வலிய) கதவு அன்பிற்கும் உண்டோ? ஆர்வலர் புன்கண் ஈர்பூசல் தரும்- அன்பு செய்யப்பட்டாரது  துன்பம் (அக்கதவை) பிளக்கும் தாக்குதலை உண்டாக்கும் என்று பதம் பிரித்துப் பொருள் உரைப்பர்.  ‘புன்கணீர்’ என்பதைப் ‘புன்கண் ஈர்’ என்று பிரித்துப் பொருள் கண்டிருப்பது நோக்கத் தக்கது.
அகல உரையில், இதனை விளக்கும் வகையில் ஆர்வலர் “புன்கணீர் பூசல் தரும்” என்பதற்கு “தம்மால் அன்பு செய்யப்பட்டவரது  துன்பங்கண்டுழி” என்று சொற்களை வருவித்து “அன்புடையார்(கண் பொழிகின்ற) புல்லிய கண்ணீரே (உள் நின்ற அன்பினை எல்லோரும் அறியத் தூற்றும்)” என்று உரைப்பாரும் உளர். அவர் ‘ஆர்வலர்’ என்பதற்கு ‘அன்பு செய்யப்பட்டார்’ என்பதே பொருள் என்பதை அறியார். அன்றியும் ‘துன்பம்’ என்னும் பொருள் தரும் ‘புன்கண்’ என்ற சொல்லைப் புன், கண் எனப் பிரித்தும், அடைக்கும் தாழ் உண்டோ? என்ற வினாவிற்கு விடையில்லாதும் பொருள் உரைத்து இடர்ப்பட்டனர் என உரை வகுத்துச் செல்லுகையில் அறிவுப்பூர்வமாகவும், தருக்க நெறியாகவும் காண்கையில் அவர் விளக்கம் சரியாக அமைந்துள்ளது போன்ற உணர்வைப் படிப்பார்க்குத் தோற்றுவிக்கிறது.

  1. நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்பப் பொருள் கூறுதல்

‘தோன்றிற் புகழோடு தோன்றுக’ என்ற குறட்பாவிற்குப் ‘புகழ் இல்லையெனில் பிறவாமல் சாவதே மேல்’ என்று அறிவிற்குப் பொருத்தமில்லா உரைகண்ட நாளில் வ.உ.சி.’எத்தொழிலில் ஈடுபடுவோரும் அதனால் புகழ் வரும்படியாகத் திறம்படத் தொழிலாற்ற வேண்டும். இல்லையெனில் அதில் ஈடுபடாமலே இருத்தலே சிறந்தது’ என்று கருத்துத் தெரிவிப்பார். வாழ்க்கைக்கு ஏற்ற வண்ணம் அறக்கருத்துக்களைத் புரிந்து கொள்ளுதல், நடைமுறை வாழ்வில் அவற்றைக் கடைபிடித்தற்கு வகை செய்யும் என்ற உண்மையை உணர்ந்தவர் வ.உ.சி.

  1. பரிமேலழகர் உரை மறுத்தல்

‘ஈன்ற பொழுதின்’ என்ற குறட்பாவிற்குப் “‘பெண்ணியல்பால் தானாக அறியாமையின் கேட்ட தாயெனக் கூறினார்’ என்று உரைப்பாரும் உளர். ‘பெண்ணின் இயல்பு தானாக அறியாமை’ என்பது அறிவிலார் கூற்றென அவ்வுரையை மறுக்க” எனக் கடுமையாக (பரிமேலழகரை) சாடுகிறார் வ.உ.சி. இக்கடுமை வ.உ.சி. பெண்கள்பால் கொண்ட பெருமதிப்பைக் காட்டுவதாகும்.
மேற்கண்ட சான்றுகள் வ.உ.சி.யை சிறந்த இலக்கிய உரையாசிரியராக இனம் கண்டு பாராட்ட வழிவகுக்கின்றன.பின்னர், தமிழ் ஆய்வு உலகில் குறள் உரை வேறுபாடுகளும் மிகப்பலவாகப் பெருகின. ஆயின், குறள் மக்களிடையே பரவலான செல்வாக்குப் பெறாத காலங்களில் குறளைப் பரப்பியும், உரை விளக்கம் தந்தும் , புது விளக்கம்(Interpretation), மறு விளக்கம் (Re interpretation) என்ற இரு வகை ஆய்வு நெறிகளைப் பின்பற்றிப் புத்துரையும் மறு உரையும் கண்டு, தமிழ் இலக்கிய நலன்களைப் போற்றிக் காத்த வ.உ.சி. யின் தொண்டு, குறிப்பாக குறள் தொண்டு, தமிழ் ஆய்வு வரலாற்றில் மிகப் பாராட்டிப் போற்றத்தக்கதாம் என்று தனது “தமிழ் தந்த வ.உ.சி.” என்ற நூலில் தி. லீலாவதி குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த்தொண்டு
28-3-1935-ல் த.வேதியப்ப பிள்ளைக்கு வ.உ.சி. எழுதிய கடிதத்தில் “திருவள்ளுவர் திருக்குறளுக்கு யான் இயற்றியுள்ள உரையில் அறத்துப்பால் புத்தகம் ஒன்று இதனுடன் Book Post-ல் வருகின்றது. இதனையும் வாங்கிப் படிப்பார் தமிழ் நாட்டில் இரார் என்றுதான் தோன்றுகிறது” என்று எழுதியுள்ளார். இதிலிருந்து வ.உ.சி. பொருள் வரவை எதிர்பார்த்து திருக்குறள் பணியினைச் செய்யவில்லை என்பது புலனாகிறது. பொருள் இழப்பை எதிர் நோக்கியே தமிழ்த்தொண்டாற்றியுள்ளார் எனத் தெரிகிறது என்பர் தி. லீலாவதி. மேலும் “பதிப்புப் பணியில் சி.வை. தாமோதரம் பிள்ளை, உ.வே. சாமிநாதையர் என்ற பதிப்பாளர் வரிசையில் வ.உ.சிதம்பரனாரையும் இணைத்து வைத்துப் போற்றும் கடப்பாடு நமக்குண்டு” என்கிறார்.(தமிழ் தந்த வ.உ.சி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்)
வள்ளல் உள்ளம்
4-9-1935-ல் த.வேதியப்ப பிள்ளைக்கு வ.உ சி. எழுதிய கடிதத்தில் “இதனுடன் திருக்குறள் 1ம், மெய்யறம் 1ம் Certified Book Post-ல் வருகின்றன. பாடத் திருத்தங்களிலும் தங்களுக்கு உண்டாகும் சந்தேகங்களையெல்லாம் தெரிவித்திடுக. அவற்றை நிவர்த்திக்க முயலுகிறேன். எனது நூல்களைத் தாங்கள் வேண்டும் பிரதிகள் அனுப்பச் சித்தமாயிருக்கிறேன். அவற்றைத் தாங்கள் விற்றுத் தங்கள் செலவுக்குப் பணத்தை உபயோகித்துக்கொள்ளலாம்.” என்று குறிப்பிட்டதில் வறுமையிலும் வ.உ.சி.யின் வள்ளல் உள்ளம் தெள்ளத் தெளிவாகத் தொரிகிறது.
..சியின் பொருட்பால் விருத்தியுரை
வ.உ.சி. பொருட்பால் மூலமும், உரையும் 300 பக்கங்களிலும் இன்பப்பால் மூலமும், உரையும், திருக்குறள், திருவள்ளுவர் குறித்த ஆராய்ச்சிக் குறிப்புகளும் 300 பக்கங்களிலும் வெளியிட எண்ணியுள்ளதாக திருக்குறள் அறப்பால் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
வ.உ.சி 1935-இல் வெளியிட்ட அறப்பால் விருத்தியுரையின் பின் பக்கத்தில் ‘திருக்குறள் எனது பொருட்பால் அச்சில் ஒரு ரூபாய்’ என்று விளம்பரம் செய்துள்ளார். வ.உ.சியின் பொருட்பால் விருத்தியுரை அச்சேறிக்கொண்டிருந்ததாக சென்னை மாகாண தமிழ்ச் சங்க அமைச்சர் இ.மு.சுப்ரமணிய பிள்ளை தனது ‘நெல்லை தமிழ்ப்புலவர்கள்’ என்ற நூலில் குறிப்பிடுகிறார். “1936 ஏப்பிரலில் முதல் வாரத்தில் பொருட்பாலின் முதல் எட்டுப்பக்கங்கள் என் பார்வைக்கு வந்தன.” அவைகளை அவர் திருத்தியனுப்ப  வ.உ.சி. பாராட்டிக் கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதிய திருத்தங்களையும் ஆராய்ச்சிக் குறிப்புகளையும் வ.உ.சி. ஏற்றுக்கொண்டுள்ளார். 23 அதிகாரங்களும் 24-ஆவது அதிகாரத்தில் ஏழு பாடல்களும்  அச்சாகியுள்ளன. அச்சிட்டு முடித்தவுடன் இ.மு.சுப்ரமணிய பிள்ளையின் பார்வைக்கு அதனை அனுப்பி வைத்தார். “வ.உ.சி. யின் பொருட்பாலுரை முழுவதும் அச்சாகி வருதல் வேண்டும். காமத்துப்பாலுக்கும் வ.உ.சி. விரிவுரை எழுதி முடித்து வைத்திருக்கிறார். அவைகள் வெளிவந்தால் தமிழ் நூல்களிலே ஒப்புயர்வற்றதாகிய திருக்குறளுக்குச் சிறந்த திறவுகோள்களாகப் பெரிதும் உதவும். வீரர் சிதம்பரனார் தம் வாழ் நாளெல்லாம் அரிதின் முயன்று ஆராய்ந்து கண்ட உண்மைகள் வீண் போகாமல் நிலை நிற்கும்.” என்று இ.மு.சுப்ரமணிய பிள்ளை குறிப்பிடுகிறார். ஆனால் வ.உ.சி. யின் பொருட்பால் விருத்தியுரை வ.உ.சி. காலத்தில் வெளிவரவில்லை. அவர் உடல் நலம் குறைந்து அதே ஆண்டு நவம்பரில் இறந்துவிட்டார்.
தர்ம சாஸ்திரம்
1933-ஆம் ஆண்டு தொடங்கிய தூத்துக்குடி கம்பன் கழகத்தின் மூலஸ்தாபகர்களில் ஒருவர் என்றும் கம்பன் பற்றிய ஆராய்ச்சிகள் நிகழ்ந்த ஏறக்குறைய 150 கூட்டங்களுக்கும் வ.உ.சி. வந்து கலந்து கொண்டார் என்றும் தமிழறிஞர் ஏ.சி. பால் நாடார் குறிப்பிடுகின்றார். (தென்னாட்டுத் திலகர், வ.உ.சி.மலர், பம்பாய் தமிழ் சங்கம், பக்-60)
வள்ளுவரையும் கம்பனையும் தமிழர் அனைவரும் கற்க வேண்டுமென்று  வ.உ.சி.  அந்த நாளில் அடிக்கடி நண்பர்களிடம் கூறுவதுண்டு. அது தர்ம சாஸ்திரம், இது சகோதர தர்ம சாஸ்திரம் அதன் விளக்கம் இது என்று கூறுவார் என்று பி.ஸ்ரீ.  வ.உ.சி. யின் இரு பெரும் இலக்கிய ஈடுபாட்டினைச் சுட்டிக்காட்டுகிறார். (தென்னாட்டுத் திலகர், வ.உ.சி.மலர், பம்பாய் தமிழ் சங்கம், பக்-60)
..சி. க்குப் பிடித்த அதிகாரங்கள்
வ.உ.சி. க்குப் பிடித்த அதிகாரங்கள் ஊழ், செய்ந்நன்றி அறிதல் என்பர். “ஊழையும் உட்பக்கம் காண்பார்” என்ற குறளையும், ” எந்நன்றி கொன்றார்க்கும்”என்ற குறளையும் எல்லாக் கூட்டங்களிலும் தவறாது சொல்லிக் காட்டுவார் என்று பரலி சு.சண்முக சுந்தரம் குறிக்கின்றா. (“தமிழ் தந்த வ.உ.சி.” என்ற நூலில் தி. லீலாவதி)
மெய்யறம்
மெய்யறம் திருக்குறளை- திருக்குறள் விளக்கும் நீதிக்கருத்துக்களை- மையமாக வைத்து எழுதப்பட்ட நூலாகும். தமிழ் இலக்கியங்களுக்குள் வ. உ.சி. யின் மனதை மிகவும் ஈர்த்தது திருக்குறளே ஆகும். மாக்களைப்போல் மனம் போனபடி வாழ்க்கை நடத்தும் மக்கள் மனந்திருந்தி நல்வாழ்வு வாழத் துணைபுரிவது திருக்குறளே என்பது வ. உ.சி. யின் அசைக்க முடியாத நம்பிக்கை. மக்கள் மன நலம் பேணி நல்வாழ்வு பெற வேண்டும் என்பதற்காகக் குறளின் அடிப்படையில் மெய்யறம் என்னும் இந்நூலை இயற்றியுள்ளார். இதனைத் திருக்குறளின் வழிநூல் (வள்ளுவர் மறையின் வழிநூன் மெய்யறம்- பாயிரம்- வாரி-2) என்றே வ. உ.சி. குறிப்பிடுகின்றார்.
திருக்குறள் இரண்டு அடிகளால் ஆனது. மெய்யறம் ஒரே அடியால் ஆனது. அது 133 அதிகாரங்களைக் கொண்டது. இது 125 அதிகாரங்களைக் கொண்டது. இரண்டுமே ஓர் அதிகாரத்திற்கு 10 பாடல்கள் கொண்டவை. திருக்குறளில் கூறப்பட்டவை சுமார் 82 அதிகாரங்களில் மெய்யறத்திலும் கூறப்பட்டுள்ளன.
இப்படியும் ஒரு தமிழ்க்காதலா?
வ.உ.சி.மறைவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் சந்தித்த கெ. அனந்த ராமையங்கார் கூறுகிறார்,”கைகளைக் கட்டிக்கொண்டு ‘என்னை மன்னித்து விடுங்கள். உங்களைக் கண்டால் இரண்டு குறளை உங்களுக்குச் சொல்லி இரண்டு செய்யுள் இராமாயணத்தில் இருந்து நீங்கள் சொல்லக் கேட்டு இன்பமடைவேன். இனிமேல் அதற்கும் இயலாது, என்னை மன்னித்துவிடுங்கள்’ என்று தழுதழுத்த குரலில் பேசிய அவர் முகத்தைப் பார்க்க கண்ணீர் நிறைந்த கண்கள் மறுத்தன. சொல்லும் பதிலோ தொண்டையில் சிக்கிக் கொண்டது. முகத்தை மூடிக்கொண்டு வீடு திரும்பினேன்.இரண்டு நாளில் விடுதலை வீரர் விடுதலை அடைந்த செய்தியைக் கேள்வியுற்றேன்.இப்படியும் ஒரு தமிழ்க்காதலா?என்று பெருமூச்செறிந்தேன்.என் நெஞ்சு பெருமிதத்தில் விம்மியது.” (பாவலர் ஆ.முத்துராமலிங்கம்-வரலாற்று நாயகர் வ.உ.சிதம்பரனார்)
செ.திவான் “வ.உ.சி.யும் திருக்குறளும்” என்ற நூலை எழுதியுள்ளார்.
திருக்குறள் வகுப்பு
வ.உ.சி.தினமும் மாலையில் சிறுவர்களுக்கு திருக்குறள் வகுப்பு நடத்துவார் என்றும் வகுப்பு முடிந்த உடன் சிறுவர்களுக்கு சுண்டல் வழங்கப்படும் என்றும் எனது தந்தையார் மதிப்பிற்குரிய வ.உ.சி.வாலேஸ்வரன் அவர்கள் குறிப்பிடுவார்கள்.
இறக்கும் போதும் திருக்குறள் பற்றிய சிந்தனை
வ.உ.சி. இறக்கும் போது அவருக்கு இரண்டே இரண்டு வருத்தங்கள் தான் இருந்தன. சுதந்திர இந்தியாவில் வாழ முடியவில்லை என்பதும் திருக்குறள் உரை முழுவதும் அச்சிட்டு வெளியிடவில்லை என்பதும் தான் அவை. வாழும் போது மட்டுமல்லாமல் இறக்கும்       போதும் தாய் நாடும் திருக்குறளும் தான் அவர் நினைவில் இருந்தன.
..சி. திருக்குறள் உரை
வ.உ.சி. திருக்குறள் உரை இப்பொழுது பல பதிப்பகத்தாரால் அச்சிடப்பட்டுள்ளது. கையடக்கப் பதிப்பாகவும் விளக்கமான பதிப்பாகவும் வெளியிடப்பட்டுள்ளது. மலிவு விலைப்பதிப்பும் கிடைக்கிறது. வ.உ.சி. யின் கனவு தற்போது பலித்துவிட்டது. எல்லோரும் திருக்குறளைப் படிக்க வேண்டும் என்ற வ.உ.சி. யின் நல்லெண்ணத்தையும் நாம் நிறைவேற்றுவோம்.
***

scan0002இக்கட்டுரையை எழுதியவர் திருமதி. மரகத மீனாட்சி ராஜா அவர்கள். இவர் திருவாளர் வ . உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் பேத்தியுமாவார். கட்டுரை ஆசிரியர் பிரஞ்ச் மொழியில் எம்.ஃபில் பட்டம் பெற்றவர். எம்.ஏ. படிப்புக்காக வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை பிரஞ்ச் மொழியில் எழுதியுள்ளார். எம்.ஃபில் படிப்புக்காக வ.உ.சிதம்பரனார் எழுதிய மெய்யறம் என்ற நூலில் 500 வரிகளை மொழி பெயர்த்துள்ளார்.பின்னர் மீதி 750 வரிகளையும் மொழி பெயர்த்தார். மெய்யறம் 1250 வரிகளுக்கும் பொழிப்புரை எழுதியுள்ளார். வ.உ.சிதம்பரனார் பற்றி விக்கிப்பீடியாவில் ஆங்கிலம் மற்றும் தமிழில் இருந்த விக்கி பக்கங்களை விரிவுபடுத்தியுள்ளார். மேலும் குஜராத்தி, ஹிந்தி மற்றும் பிரஞ்ச் மொழியில் விக்கி பக்கங்களை உருவாக்கியுள்ளார். மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களான உத்தம் சிங், கர்த்தார் சிங் சரபா, மதன்லால் டிங்கரா ஆகியோர் பற்றியும் நேதாஜியின் மரணத்தின் மர்மம் பற்றியும் தமிழில் விக்கி பக்கங்களை உருவாக்கியுள்ளார். திலகர் கால சுதந்திரப் போராட்டத் தலைவர்களின் தமிழ் விக்கி பக்கங்களை விரிவுபடுத்தியுள்ளார். திலகர் கால சுதந்திரப் போராட்டத் தலைவர்களின் தியாகங்கள் குறித்து மக்கள் அறிய வேண்டும் என்பதில் ஆர்வம் உள்ளவர். நமது சுதந்திரம் எத்தனையோ போரின் தியாகத்தால்தான் நமக்கு கிடைத்தது என்பதை மக்கள் உணர்ந்தால் நாட்டுப்பற்று அதிகமாகும் என்ற எண்ணம் உள்ளவர்.

3 Replies to “வ.உ.சி.யின் திருக்குறள் பற்று”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.