ரூபம் பிரதிரூபம் மற்றும் பாவனை

gnanakoothan

செய்யுள்களில் பாடபேதங்கள் தோன்றுவது பழங்காலத்தில் இருந்தே பார்க்கப்பட்ட ஒன்று. அகத்திணைப் பாடல்களில் பேசுபவரே கூட யாரென்று அறுதியிட்டுக் கூறமுடியாத குழப்பம் இருக்கிறது. இது தலைவி கூறியது என்று சொல்லிவிட்டு, அதையே பரத்தை கூறியதாகவும் கொள்ள முடியும், என்று குறிப்புகள் கூறுகின்றன. சில சமயம் தலைவியின் பேச்சை தோழி பேசுகிறாள். பெற்ற தாயின் பேச்சை செவிலித்தாய் பேசுகிறாள். புறநானூறு 86ம் பாடலை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்
பாண்டுளயனோ என வினவுதி. என்மகன்
யாண்டுளன் ஆயினும் அறியேன். ஓரும்
புலிசேர்ந்து போகிய கல் அளை போல
ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ. போர்க்களத் தானே.
”உன் மகன் எங்கிருக்கிறான் என்று கேட்கிறாய். அவன் எங்கிருக்கிறானோ நான் அறியேன். ஆனால் அந்தப் புலி இருந்து போன மலைக்குகை போன்ற வயிறு இதோ இருக்கிறது” என்று ஒருத்தி சொன்னதாகக் கூறுகிறது இந்தச் செய்யுள். இதனைப் பாடியது ஒரு புலவராகத் தானே இருக்கவேண்டும்? ஆனால் பாடியவர் காவற்பெண்டிர் என்று குறிப்பு கூறுகிறது. காவற்பெண்டிர் என்பது பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ளும் பெண் என்பதால் செவிலித்தாய் என்று ஆகிறது. ஆனால் பிரதிபேதமாக காதல்பெண்டிர் என்றும் பெயர் குறிப்பிடப் படுகிறது. காவற்பெண்டிரும், காதற்பெண்டிரும் வேறு வேறு ஆவர். இருவர் தொழிலும் வேறாகும். ஆனால் இந்தக் கூற்றுகள் பெற்ற தாய்க்கு பதிலாக அமைந்துள்ளன. பெற்றதாய் கூற வேண்டியதை, செவிலி கூற முடியுமா? எல்லாவற்றையும் கூற முடியுமா? அதுவும் தன் வயிற்றைக் காட்டி? காவற்பெண்டும் காதற்பெண்டும் ஆசிரியப்பாவில் பதில் சொல்ல புலவர்களா என்ன? காவற்பெண்டோ காதற்பெண்டோ, இவை பாத்திரங்களாகத்தான் இருக்க முடியும். ஆயினும் இதன் துறை புறத்தில் அடங்கியதால், புறத்திணையில் இடம் பெற்றது போலும். பெற்ற தாய்க்கு பதிலாக இக்கூற்று அமைந்திருப்பதின் உறுத்தலைப் போக்க, புலியூர்க் கேசிகன், நற்றாய்க்கும் தனக்கும் பாசத்தாலே வேறுபாடற்ற நிலையில் இவ்வாறு செவிலி கூறுகிறாள், என்று உரை சொல்கிறார். ஆனால் சமாதானப் படவில்லை. என் மகன் என்று சொல்வது கூட சரியாகப் படவில்லை. என் மகன் என்பதை என் எஜமானியின் மகன் என்று கொள்ள வேண்டும். பணி செய்கிறவர்கள், தான் பணியாற்றும் குடும்பத்துப் பிள்ளைகளை ‘எங்கள் வீட்டுப் பிள்ளைகள்’ என்றுதான் குறிப்பிடுவார்கள். கேள்விகேட்டவள், நின் மகன், என்றதால், அவள் செவிலியின் மகனைத் தான் அப்படி கேட்டிருக்க வேண்டும். அப்போது அவள் தன் வயிற்றை சுட்டிக்காட்டிப் பேசினால் தவறில்லை. அல்லது, ஈன்ற வயிறு இது, என்று சுட்டிக்காட்ட அங்கே பெற்ற தாய் அருகில் இருக்கவேண்டும். கேள்வியை அவள் ஏற்றுக்கொண்டு பதில் சொல்லும் போது, ‘என் மகன்’ என்று சொன்னதை சூழ்நிலை கருதி அதற்கு அமைதி கூறலாம். உண்மையில், காவற்பெண்டு காதற்பெண்டு என்பவை, பாடபேதங்களாக அமைந்து செய்யுளைக் குழப்புகின்றன. மேலோட்டமான வாசிப்பில் கிடைத்த பெருமிதம் சற்று இறங்கிவிடுகிறது.
காவற்பெண்டோ காதற்பெண்டோ, தன் மகனைப் பற்றித்தான் கூறினாளே தவிர, தன் எஜமானியின் மகனைத் தன் மகன் என்று கூறவில்லை, என்றால் பிரச்சினை தீர்ந்தது. புலியூர்க் கேசிகன் உரையைப்போல் சரி எனக் கொண்டால், அதனால் விளையும் ஆட்சேபணையைத் தவிர்க்க, செய்யுளை ஒருவர் திருத்திவிடவும் தயங்கியிருக்க மாட்டார்.
2
ஆவூர் மூலங்கிழார் ஒருவரைப் பாடுகிறார். அவர் பெயர் பாண்டியன் கீரன்சாத்தன். ஆனால் இந்தப் பெயருக்கு ஒரு பாடபேதம் உண்டு. அதன்படி அவர் பெயர் பாண்டியன் குதிரைச் சாக்கியன். கீரன்சாத்தன் எங்கே, குதிரைச் சாக்கியன் எங்கே? இப்படி பிழைகள் ஏன் நேர்கின்றன? பிரதி செய்கிறவர்கள் தங்கள் கவனக் குறைவால் இப்படிச் செய்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. பிரதி செய்பவர்கள், அதாவது இலக்கிய நூல்களைப் பிரதி செய்பவர்கள், ஓரளவு இலக்கியப் பயிற்சி உடையவர்களாய்த் தான் இருந்தாக வேண்டும். அவர்களே இப்படிப்பட்ட பிழையைச் செய்திருக்கிறார்களா? அவர்கள் செய்த பிழைகளை, சுவடிகளைப் பயன்படுத்திக் கொண்டவர்கள் ஏன் திருத்திக் கொள்ளவில்லை என்பது புதிராய் இருக்கிறது. அவர்களிடமும் அதே அக்கறையின்மையா?
ஒரு நூலில் சிவபாத சுந்தரம் என்ற பெயர் சிவப்பு சுந்தரம் என்று அச்சாகி யிருந்தது. நகில்கள் என்ற சொல் நகங்கள் என்று ஒரு கட்டுரையில் அச்சாகி யிருந்தது. பரணர் தெரு எனற் பெயர் ஆங்கிலத்தில் ‘பர்’னா என்றாகி தமிழிலும் பர்ணர் தெரு என்று மாற்றப்பட்டு விட்டது.
3
அக்கறையற்ற தன்மையில் செய்யுள்கள் இப்படிப்பட்ட நிலையை எதிர்கொள்ள வேண்டியிருப்பது போல சிலருடைய அதித அக்கறையாலும் செய்யுளின் பாடம் பேதப்படுகிறது.
தொல்காப்பியம் களவியலின் 13ம் நூற்பா ‘பாங்கன் நிமித்தம் பன்னிரண்டென்ப’ என்கிறது. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் 1953ம் ஆண்டின் கையடக்கத் தொல்காப்பியப் பதிப்பில் பாங்கன் என்று ஒருமையில் பாடம் காணக்கிடைக்கிறது. மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகப் பதிப்பில் (1963) பாங்கர் என்று பன்மையில் காணப்படுகிறது. பாங்கர் என்பதே சரியான பாடமாகத் தெரிகிறது. பாங்கர் என்பவர் யார்? ”இந்நூற்பாவில் உள்ள பாங்கன் என்ற சொல், அகன் ஐந்திணையில் வரும் பாங்கனைக் குறியாது, உலகியலாற் காளையொடு கன்னியரை மணம் செய்து வைத்தற்குத் துணையாயினாரைக் குறித்து நின்றது என்பதும், ஈண்டு பாங்கன் எனப்பட்டான், மணமகள் மணமகன் என்னும் இருவருடைய கோத்திரங்களையும் நன்குணர்ந்து நடுநின்று திருமணத்தை நடத்திவைக்கும் பார்ப்பான்” என்பது நச்சினார்க்கினியர் கருத்தாகும். இந்த நூற்பாவுக்கு உரை எழுதிய இளம்பூரணரும், பிரமம் முதலிய நான்கும், கந்தருவப் பகுதியாகிய களவும், உடன்போக்கு முதல் பிறவும், எனப் பன்னிரண்டைக் கணக்கிடுகிறார். பிரமம், காந்தருவம் என்ற வேதமுறைத் திருமணங்களை இருவரும் நினைவுகொண்டு உரை எழுதுகின்றனர். ஆனால் நவின காலத்துத் தமிழறிஞரான வெள்ளை வாரணன் அவர்களுக்கு இது ஏற்புடையதாக இல்லை. ஏனெனில் ‘பண்டைத் தமிழர்கள்’ அம்மி மிதித்து அருந்ததி பார்த்து திருமணம் செய்துகொண்டவர்கள் என்பதை வெள்ளை வாரணன் அவர்களால் ஏற்க முடியவில்லை. ஆனால் பாங்கர்க் கூட்டம் என்பதில் பார்ப்பான் – மாப்பிள்ளைத் தோழன் – பங்கை உரையாசிரியர்கள் கூறியிருக்கிறார்கள். பாங்கர் நிமித்தம் என்பதை, பாங்கா நிமித்தம் என்று பாடியதாகப் புதிதாய் அமைத்துக்கொண்டு வெள்ளை வாரணன் ஆய்வுரை எழுதுகிறார். இப்படி மாற்றுவதால், தொல்காப்பிய உரையாசிரியர்கள் சொன்ன பாங்கனைத் தமிழரின் பழைய மணமுறையில் இருந்து அவரால் நீக்கிவிட முடிகிறது. ‘பாங்காம் நிமித்தம்’ என்பது பாங்கு ஆம் நிமித்தம் எனப் பிரியும். பாங்கு – துணை. நிமித்தம் – காரணம். பாங்கா நிமித்தம் என்பதே ஏடெழுதுவோரால் பாங்கர் நிமித்தம் எனப் படிக்கப் பெற்றிருத்தல் வேண்டும், என்கிறார் வெள்ளை வாரணன். இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும் தங்கள் சுவடிகளைப் பரிசீலிக்காமல் உரை எழுதினார்கள் போலும்.
வெள்ளை வாரணன் பாங்கர் என்ற சொல்லைத் திருத்தம்கொள்ள நினைத்ததற்கு வேறு காரணம் உண்டோ என்று தெரியவில்லை. இவரைப் போலவே நாவலர் சோமசுந்தர பாரதியாருக்கும் பெயர்ச்சொல் ஒன்றில் ஒரு பிரச்னை. அந்தச் சொல் தொல்காப்பிய மெய்ப்பாட்டியலில் வரும் பண்ணை என்ற சொல். இந்தச் சொல்லும் கெடவரல் என்ற சொல்லும் கூட்டமாகச் செய்யும் விளையாட்டைக் குறிக்கும், என்று தொல்காப்பியரே கூறுகிறார். உரியியலில் ‘கெடவரல் பண்ணைஆயிரண்டும் விளையாட்டு’ என்று சொல்கிறார் தொல்காப்பியர். ஆனால் சோமசுந்தர பாரதியார், பண்ணை என்பது தொகுதி, ‘இஃது இப்பொருட்டாதல், ஒலித்தன முரசின் பண்ணை, என்னும் கம்பரின் செய்யுளடியால் தெளிக,’ என்கிறார். ஏன் தொல்காப்பியரின் உரையை, அதாவது, பண்ணை என்பது விளையாட்டைக் குறிக்கும் சொல், என்பதை விட்டுவிட்டு, அது ஒரு தொகுதி என்னும் பொருளுடையது என்கிறார்?
பண்ணை என்பது தொகுதி என்ற பொருளில் கம்பர் எழுதும்போது குறைந்தது ஆயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டன. பிற்காலத்துப் பொருளை முற்காலத்துக்குக் கொண்டுபோக சோமசுந்தர பாரதியாருக்கு என்ன அவசியம் நேர்ந்தது? அவர் மேலும் எழுதுகிறார்…
… ஆரியநூல் வழக்குகளைக் கொள்ளாது தமிழ் மரபினரையே தாம் கொள்வதாகப் பல இடத்தும் தொல்காப்பியரே வற்புறுத்துவதாலும், தொல்காப்பியர் கூறும் மெய்ப்பாடுகள் உள்ளிட்ட செய்யுள் உறுப்பனைத்தும் இயற்றமிழ் மரபு தழுவியவே ஆகும், என்பது ஒருதலை இவ்வுண்மைக்கு மாறாக பிற்கால உரைகாரர் தொல்காப்பியருக்குக் காலத்தாற் பிந்திய வடஆரியக் கூத்து நூல்களிலான கொள்கைகளே தொல்காப்பியமும் கூறுவதாகக் கொண்டு இவ்வியற்றமிழ் சூத்திரங்களுள்  வடநூல் வழக்குகளைப் புகுத்தி இடர்ப்பட்டுச் சொல்லொடு செல்லா வல்லுரை வகுத்து மயங்க வைத்தார்….
உரையாசிரியர்களின் உரைகள் வடநூல் கருத்துகளைப் பின்பற்றி அதுவும் தொல்காப்பியருக்குக் காலத்தால் பிந்திய கூத்து நூல்களைப் பின்பற்றி எழுதப்பட்டவை என்கிறார் சோமசுந்தர பாரதியார். ஆனால் மற்ற நூலாசிரியர்களின் கருத்துக்களை எடுத்துக் கூறுவதும் மரபுதான் என்கின்றனர் சிலர். ஆனால் தொல்காப்பியரே அகத்திணை இயலில்
… நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற  புலநெறி வழக்கம், என்று நாடக வழக்கு பற்றிப் பேசுகிறார். ‘நாடகம்’ என்ற ஸமஸ்கிருதச் சொல்லும், அதற்கொரு வழக்கும் உண்டென்பதாலும் தானே தொல்காப்பியர் நாடக வழக்கென்றார்? ‘நாடகம்’ என்பது தொல்காப்பியருக்கு முந்தியதாக இருந்ததால் தானே அவர் நாடக வழக்கென்றார்?
சோமசுந்தர பாரதியாருக்கு ‘பண்ணை’ என்ற சொல்லுக்கு உரையாசிரியர் கொடுத்திருக்கும் விளக்கம் தான் தொல்லையாகி விட்டதோ என்னவோ! உரையாசிரியர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள்?
‘வேந்தரும் குறுநில மன்னரும் முதலாயினோர் நாடக மகளிர் ஆடலும் பாடலும் கண்டும் கேட்டும் காமம் நுகரும் இன்ப விளையாடடினுள் தோன்றிய…’
மெய்ப்பாடுகள் என்பதை நாடக மகளிரின் ஆடல் பாடல்களின் வெளிப்பாட்டின் போது உருவானவை என்பது சோமசுந்தர பாரதியாருக்குப் பிடிக்கவில்லையோ, என எண்ணத் தோன்றுகிறது. மன்னர்களின் காமம் நுகரும் சபையில் தோற்றம் கொண்டவை மெய்ப்பாடுகள் என்ற கருத்தை விலக்க வேண்டுமானால், பண்ணை என்ற சொல்லுக்குப் பொருளை மாற்றவேண்டும். ஆனால் மெய்ப்பாடு கலையாக எங்கு உருவானது என்று தொல்காப்பியர் சொன்ன ஆதாரம் மறைந்து விடுகிறது. வேந்தரும் குறுநில மன்னரும், என்று உரையாசிரியர்கள் கூறியபோது, அவர்கள் தமிழ் வேந்தர்களையும் குறுநில மன்னர்களையும் தான் மனத்தில் கொண்டு சொல்லியிருக்கிறார்கள். ஆனால் சோமசுந்தர பாரதியார், பண்ணை என்பதை மகளிர் விளையாட்டெனக் கொண்டு பிற மொழி கூத்தியல் கொள்கைகளை இதில் புகுத்தி இடர்ப்படலாயினர், என்கிறார். ஆடல் பாடலில், ஆண் பெண் விளையாட்டை, மகளிர் விளையாட்டாக மட்டுமே கொண்டு சோமசுந்தர பாரதியார் கொஞ்சம் இடர்ப்படுகிறார். தமிழ் நிலத்தையே நாடகத்தின் ஆதார பூமியாகக் கொண்ட தொல்காப்பியரையும் உரையாசிரியர்களையும் விலக்குவதால் தமிழ்க் கூத்தின் தோற்றம் எங்கு நிகழ்ந்தது என்பது மறைக்கப் படுகிறது. ஆனால் சோமசுந்தர பாரதியார் பண்ணைக்குப் பொருள் மாற்றிச்சொன்னாரே யொழிய அந்தச் சொல்லை மாற்றும் எண்ணம் அவரிடம் இல்லை.
சோமசுந்தர பாரதியார் பண்ணை என்ற சொல் விஷயத்தில் காட்டிய அக்கறை போன்றது அவர் திணைக் கடவுள்கள் மீது காட்டிய அக்கறையும். அகத்திணை இயல் 5ஆம் நூற்பா மாயோன், சேயோன், வேந்தன், வருணன் ஆகிய திணைக் கடவுள்களைக் குறிப்பிடுகிறது. அவை வேதத்தில் குறிப்பிடப்பட்ட விஷ்ணு, இந்திரன், வருணன் ஆகிய கடவுள்களும் பின்னாளில் சுப்ரமணியனாகக் கருதப்பட்ட முருகனும் ஆவர். இவர்களைப் பற்றி சோ.சு. பாரதியார் எழுதும்போது, ‘ஈண்டுக் கூறப்பட்ட மாயோனும் சேயோனும் கருநிறக் கடவுளும் செவ்வேளுமாகத் தொன்றுதொட்டுத் தமிழர் தொழும் கடவுளர்களாவர். கருநிறத்தைப் பழிப்பதன்றிப் பாராட்டுதல் தொல் ஆரியர் வழக்கன்று. தமிழிலோ எழில்பாராட்டி மாயோன் எனவும், மாயோயே எனவும் வரும் பழம் பாட்டுகளின் தொடர்களும் குறிப்புகளும் இங்கு சிந்திக்கத் தக்கனவாம். இனி இந்திரனும் வருணனும் ஆரியர் வழிபடும் கடவுளராய்க் கருதப் பெறினும் அறப் பழங்காலத்தே அவர் தமிழர் வழிபட்ட தெய்வங்களாகவும், பிறகு ஆரியர் வாங்கித் தமிழ் வழிபடு கடவுளாக்கிக் கொண்டனர், எனவும் சில மேனாட்டுப் புலவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகளால் அறிகிறோம். உண்மை எதுவாயினும் பண்டைக்கால முதல் இக்கடவுளர் பெயரும் வழிபாடும் தமிழகம் அறிந்ததென்பது தெளியப்படும்’ என்கிறார்.
ஆடல் பாடல் விஷயத்தில் பிற்காலத்து ஆரியக் கூத்தியல் என்று பேசிய சோ.சு. பாரதியார், கடவுள் விஷயத்தில் மேனாட்டுப் புலவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகளின் கீழ் நிழல் பார்க்கிறார்.
ஆனால் தொல் ஆரியர்கள் கரு நிறத்தைப் பழிப்பதன்றி, பாராட்டுபவர்கள் அல்லர், என்று சோ.சு. பாரதியார் கூறுவது பிழை தான். ஆரியக் கடவுள்கள் என்பதே தவறான வர்ணிப்பு. இந்தியக் கடவுள்கள் பல வண்ணத்தவர்கள். இராமனும் கண்ணனும் கருப்பு. இலக்குவன் சிவப்பு. பலராமன் வெளுப்பு. மேலும் கணவன் மனைவி தங்களுக்குப் பிடித்த நிறத்தில் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும், அதற்குரிய சடங்கையும் பிரகதரணய உபநிஷதம் நான்காம் ப்ராமணம் சொல்கிறது. அது கூறும் நிறங்களில் கருமையும் உண்டு. எனவே சோ.சு. பாரதியார் கூறுவது பழியாகும். தொல்காப்பியரின் நூற்பாக்களுக்கு உரையெழுதிய பதிப்பாசிரியர் ஆ. சிவலிங்கன் என்பவர், தொல்காப்பிய நூற்பாவுக்கு வினோதமான உரை எழுதியிருப்பதோடு, வருணன் என்பது வருநன் என்ற பாடபேத விழைவு காட்டும் உணர்வுடன் செயல்பட்டிருக்கிறார். வருணன் யார் தெரியுமோ? ‘கடல்நோக்கி வழிபடுவோர்க்கு கடலில் தோன்றி வந்து அருள் செய்பவன், வருநன் எனப்பட்டான். வருநன் வருணன் ஆயிற்று,’ என்கிறார் சிவலிங்கன். இதன் ஆதாரமாக ஏதேனும் செய்யுளைக் காட்டுகிறாரா சிவலிங்கன்? கிடையாது. ஆனால் வருணன் என்பதை, வருநன் என மாற்ற விரும்புகிறார். செய்யுளின் பாடம் இதற்கெல்லாம் இடம் தராது.
4
ஓர் ஆசிரியர் எழுதியவற்றில் ஒரு சொல்லை அசிரத்தையால் அல்லது ஆசையால் அல்லது நல்ல நோக்கம் என்று சொல்ல முடியாத ஒரு நோக்கால் மாற்றி அமைப்பதைப் பாடபேதம் என்கிறோம். நல்ல நோக்கம் என்று சொல்ல முடியாத நிலைக்குச் சான்று –
பழைய இலக்கியத்தின் அரிய நூல்களில் ஒன்றான பரிபாடலுக்கு பரிமேலழகர் உரை எழுதியிருக்கிறார். இந்த உரைக்கு உரைச்சிறப்புப் பாயிரம் ஒன்று அமைந்திருக்கிறது. இந்தப் பாயிரம் செய்யுள்களின் பண்பாட்டியலில் ஆர்வம் உடையவர்க்கு ஒரு சிறு கொடை போல. இதோ அது.
கண்நுதற் கடவுள் அண்ணலங் குறுமுனி
முனைவேல் முருகன் எனஇவர் முதலில்
திருந்துமொழிப் புலவர் அருந்தமிழ் ஆய்ந்த
சங்கம் என்னும் துங்கமலி கடலுள்
அரிதின் எழுந்த பரிபாட்டு அமுதம்
அரசுநிலை திரீஇய அளப்பருங் காலம்
கோதில் சொல்மகள் நோதகக் கிடத்தலிற்
பாடிய சான்றவர் பீடுநன்குணர
மிகைபடு பொருளை நகைபடு புன்சொலில்
தந்து இடைமடுத்த கந்திதன் பிழைப்பும்
எழுதினர் பிழைப்பும் எழுத்துரு ஒக்கும்
ஒருங்குடன் கிடந்த ஒவ்வாப் பாடம்
திருந்திய காட்சியார் செவிமுதல் வெதுப்பலில்
சிற்றறிவினார்க்குத் தெற்றெனத் தோன்ற
மதியின் தகைப்பு விதியுளி அகற்றி
எல்லையில் பிறப்பில் தொல்லோர் பாடிய
அணிதிகழ் பாடத்துத் துணிதரு பொருளைச்
சுருங்கிய உரையின் விளங்கக் காட்டினன்
நீள்நிலம் கடந்தோன் தாள்தொழு மரபில்
பரிமேலழகன் உரிமையின் உணர்ந்தே.
இந்தப் பாயிரத்தில், கதை எழுதிய ஆசிரியர் நூல் படும் அவஸ்தைகளை எடுத்துக்காட்டி யிருக்கிறார் பாயிரக்காரர். அரசியல் நிலைமை மாறினால் நீண்ட காலத்துக்கு சொல்லாகிய திருமகள் நொந்து கிடப்பாள் என்கிறது பாயிரம். இப்படிப்பட்ட காலத்தில் நல்ல சொற்களை அழித்து அதனிடத்தில் சிரிப்புக்கிடமான சொற்களை அமைத்து சிலபேர் செய்யுளைத் திருத்தி விடுவார்களாம். இந்த வேலையை இடைமடுப்பு என்று பெயரிடுகிறது பாயிரம். இப்படிச் செய்த ஒருவரின் பெயரையும் அது சொல்கிறது.  அவர் பெயர் கந்தி என்பதாகும்.
இதைப் போலவே கம்பராமாயணத்தில் இடைச்செருகல் செய்தவர் வெள்ளியம்பலக் கவிராயர் என்பவராம். இவரது செய்யுள்களை வெள்ளிச் செய்யுள்கள் என்றே கூறினார்கள்.
இவற்றை ஆராய்ந்தால் சில செய்திகள் புலனாகின்றன. மூல ஆசிரியர் சொல்ல விட்டுவிட்டார் என்று இவர்கள் நம்பிக்கொண்டு, சொல்லாமல் விட்டுவிட்ட பகுதி என்று இவர்கள் நம்புவதை இவர்களே இயற்றி சேர்த்து விடுவது. பிரதி எடுத்துத் தரும்போது இவற்றை நூலில் சேர்க்க அவர்களே ஏற்பாடுகள் செய்திருக்கவும் கூடும். இரண்டாவது, பிரசங்கிகளுக்கு உதவியான செய்திகளைச் செய்யுளாக இயற்றி இணைத்து விடுவது. முதல் வகையில் மூல ஆசிரியரின் சுருங்கக் கூறல் என்ற முறை உணரப்படாமலே போய்விடுகிறது. இரண்டாம் வகையில் நூலுக்கு உதவுகிற, ஆனால் மூல ஆசிரியன் சொல்லாதவை நுழைக்கப்படுவதால் மூல ஆசிரியனின் உண்மை நிலை புலப்படாமல் மறைக்கப்படுகிறது. மற்றவகை திருத்தங்கள் கல்வி அறிவுடையவனின் வக்கிர புத்தியைக் காட்டுவனவாகும். வெறுங்கல்வி தொழிலாக மட்டும் சிறுத்துவிடுகிறது. திருந்திய காட்சியோர் செவி உணர்வை வெதுப்புகிற இச்செயல் பண்பாட்டாளர்களின் செயலாக இராது.
5
இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் அறங்காற்றுக் காதையில் அவர் காலத்தில் அவர் கண்ட நிலையை எழுதுகிறார்.
அசையா மரபின் இசையோன் தானும்
அமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறிய …
தமிழ்முழுது அறிந்த தனிமையின் ஆகி
வேத்தியல் பொதுவியல் என்றிரு திறத்தின்
நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்து
இசையோன் வக்கரித்திட்டதை உணர்ந்தாங்கு
அசையா மரபின் அதுபட வைத்து
மாற்றோர் செய்த வசைமொழி அறிந்து
நாத்தொலைவில்லா நன்னூற் புலவனும்
ஆடல் பாடல் இசையே தமிழே…
இளங்கோவடிகள் ஆடலுக்கும் பாடலுக்கும் உபயோகப்படும் செய்யுளில் மாற்றோர் செய்த வசைமொழிகள் இருக்கும், என்பதைக் கூறுகிறார். அரசன் முன் அரங்கில் ஆடப்போகும் பாட்டில் இச்சொற்களை நீக்கி உரிய சொற்களைப் பெய்கிறானாம் நன்னூற் புலவன். அரசன் முதலான பெரிய மனிதர்கள் கேட்டால் அவர்களை வெறுப்புறச் செய்யும் இடைமடுப்புகளை இளங்கோவடிகளும் சொல்வதால் இக்காரியங்கள் தொன்றுதொட்டே இருந்து வருகின்றன என்பது தெளிவு.
6
‘பாடம்’ கொள்வதில் வாசிப்பவர் கொள்ளும் அக்கறைக்கு இன்னொரு வகை உதாரணத்தை ஒரு பக்திநூல் கொண்டு பார்க்கலாம். இந்த நூல் ஸம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டது. ஹரிபக்த சுதோதயம் என்பது அதன் பெயர். இதைத் தமிழ் உரையுடன் எழுதிய இளைய கேள்வி அப்பன் சடகோப ராமானுஜ சின்ன ஜீயர் என்ற வைணவப் பெரியவர் ஒரு பாடபேதம் பற்றிய கதையைக் கூறுகிறார்.
‘ரகுவீர கத்யம்’ என்ற நூலில் வரும் ஒரு வரியை அவர் குறிப்பிடுகிறார். ‘மாரிச மாயம்ருக சர்ம கர்மித நிர்மாத தர்ப்பாஸ்தான’ என்ற வரியைக் கூறி, அதன் பொருளை ‘மாரிச மாயா மிருகத்தினுடைய தோலினால் அலங்கரிக்கப்பட்ட தர்ப்பாஸனத்தை உடையவன்’ என்று ஜீயர் தன்னுடைய மூத்த ஜீயருக்குக் கூறுகிறார். ஆனால் இதன்பொருள் சரியல்ல. மாரிசன் என்ற அரக்கன் பொன்மான் உருவத்தில் வந்திருக்கிறான் என்று தெரியாமல் சீதை அந்தப் பொன்மானுக்கு ஆசைப்பட்டு, ராமனிடம் ‘அந்தப் பொன்மானை உயிருடன் பிடித்துக்கொடுங்கள். இல்லையென்றால் அதைக்கொன்று அதன் தோலையாவது கொண்டுவாருங்கள்’ என்று வேண்டுகிறாள். ஆனால் அந்தப் பொன்மானை ராமன் கொல்லவே நேர்கிறது. ராமன் எய்த அம்பினால் தாக்கப்பட்டதும் மாரிசன் தன் பொன்மான் உருவத்தை இழந்து தன் ஸ்வயரூபமான அரக்க உருவத்துடன் விழுந்தான், என்று வால்மிகி சொல்லியிருக்க, ‘மாரிச மாயா மிருகத்தினுடைய தோலால் அலங்கரிக்கப்பட்ட தர்ப்பாஸனத்தை உடையவனாக இராமன் இருந்தான், என்று கூறு முடியாது. பொன்மான் ஒரு மாயமான். கண்ணில் தெரிந்த ஒரு தோற்றமே அன்றி அது உண்மை அல்ல. அதற்குத் தோலும் கிடையாது. ஆனால் தோல் இருப்பது போல எழுதியவர் ஸம்ஸ்கிருதத்தில் பெரும் புலவரான வேதாந்த தேகிகர். அவர் தவறாகக் கூறிவிட்டார் என்று எப்படிச் சொல்ல முடியும்?
எனவே மூத்த ஜீயர் ஒரு பாடம் சொல்கிறார். பொன்மானின் தோலை தர்ப்பைப்புல்லால் ஆன இருக்கையின் மேல் விரித்து, என்று கொள்ளாமல் பொன்மானின் தோலைப் போல ஒன்றைச் செய்து, அதைத் தர்ப்பைப் புல்லால் ஆன இருக்கையின் மேல் விரித்து, என்று பாடம் கொள்கிறார் பெரிய ஜீயர். தோலினால் என்னாமல், தோலைப்போல் ஒன்றினால், என்று பாடம் சொல்வது புலமைக்கு இழுக்கு வராமல் காக்கிறது. ‘மாயா ம்ருக சர்மணா’ என்பதை ‘மாயா ம்ருக சர்மவத்’ என்று கொள்கிறார் ஜீயர்.
இலக்குவனால் செய்துதரப்பட்ட இந்தப் போலி மான்தோல் ஆசனத்தை இராவண வதம் செய்து சீதையை நேரில் பார்க்கும் வரைக்கும் இராமன் பாதுகாத்தான் என்கிறது ரகுவீர கத்யம். இங்கு இலக்குவன் செய்தது ப்ரதி வஸ்து. மெல்லிய புற்களால் சீதை பார்த்த பொன்மானைக் காட்டுவதாகவே இந்த ப்ரதி வஸ்துவை மான்தோலாகப் பாவிக்கிறார்கள் ராமனும் இலக்குவனும். பின்னர் சீதையும். இதை ப்ரதி வஸ்து பாவனை என்கிறது ஸம்ஸ்க்ருதக் கவிதை இயல். இந்தப் ப்ரதி வஸ்து பாவனைதான் கலையின் அடிப்படை என்பது தவறாகாது.
***

[இக்கட்டுரை ஒரு மீள் பதிப்பு. இருவாட்சி என்னும் இலக்கிய இதழின் 2012 ஆம் வருடத்து மலரில் வெளியான கட்டுரையை, இருவாட்சி இதழின் பதிப்பாசிரியர் திரு.ஷங்கர் நாராயணனின் அனுமதி பெற்று இங்கு பிரசுரிக்கிறோம். அன்னாருக்கு எங்கள் நன்றி. தக்க தருணத்தில் உதவி இருக்கிறார்.]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.