தோள்வலி வீரமே பாடிப்பற!

kaliya-daman-bm05_l

தெய்வம்பற்றிய எந்த ஒரு கதையையும் எடுத்துக்கொண்டால் அதற்கு ஒரு முடிவுரை போல பலச்ருதி என்னும் பகுதி அமைந்திருக்கும். உரைநடை நாவல்களுக்கும்கூட இப்பகுதி முக்கியமானதாகும். இது பாட்டுடைத்தலைவனின் / கதாநாயகனின் புகழையும் பெருமைகளையும் சுருங்கத் தொகுத்தளித்து, அவற்றைப் பாடியதன், பயின்றதன் பலன்களை விளக்கியும், இன்னும் கட்டுரையில் சொல்லவிட்டுப்போன சில நுட்பமான கருத்துக்களையும் இணைத்துக்கொண்டு இலங்கும்.
பெரியாழ்வார் திருமொழி இப்படிப்பட்ட ஒரு பகுதியைக் கொண்டிராவிடினும், ‘கிருஷ்ணன் எனும் சிறுகுட்டன்,’ என்று இத்தனை அத்தியாயங்களில் நாம் படித்து மகிழ்ந்த பாசுரங்களுக்கு முடிவுரை போல அமைந்த சில பாடல்களைக் காணலாம். இவையே இத்தொடரின் பலச்ருதியாகப் பொருந்துகின்றன எனக்கொள்ளலாம். இவைதவிர ஒவ்வொரு பத்தின் கடைசிப்பாடலும் அதனைப் பாடுவதன் பயனை விளக்குகிறது.
கிருஷ்ணனைக் குழந்தையாகக் கொண்டாடுவது மிகமிக எளிது. பெரியாழ்வார் கிருஷ்ணனைக் குழந்தையாகக் கண்டு அந்த அனுபவத்தில் உருகிக் கரைந்ததைப்போலவே தாமும் உருகிக்கரைந்தவர்கள் பலர் என்றும் பார்த்தோம். கேட்கக் கேட்க அலுக்காததும் புதுமை நயங்கள் மிளிர்வதுமே கிருஷ்ணனின் கதை. திரும்பத்திரும்பக் கேட்பதனால் என்ன நிகழ்கின்றது? நம்முடனே வாழ்ந்த ஒரு குழந்தை, நம் கண்முன்பே வளர்ந்து பெரியவனாகி, குழந்தைக் குறும்புகளையும் வாலிபச் சேட்டைகளையும் தன் மனம்போன போக்கில் செய்து அச்செயல்களால் எல்லாரையும் சிறிது இக்கட்டிலும், பெரிதும் மகிழ்ச்சியிலுமாக ஆழ்த்தி வைத்ததொன்றே போதுமல்லவா நாம் அவனைக் கொண்டாடுவதற்கு?
நந்தன் மதலையான காகுத்தனைப் பாடிப்பரவி  ‘உந்திபறத்தல்‘ என ஒரு சிறுமியர் விளையாட்டில் அவன்பெருமைகளை இணைத்துப்பாடிக் களிக்கிறார் பெரியாழ்வார். ‘உந்திபறத்தல்’ என்பது சிறுமியர் கரம்கோர்த்து விளையாடும் ஒருவகை விளையாட்டு. வெறுமனே, ‘காரே பூரே’ எனக் கத்திச் சப்தமிட்டுக்கொண்டு அவர்கள் விளையாடிக்கொண்டிருந்த விளையாட்டினை, கிருஷ்ணனுடைய பெருமைகளைப் பாடிப்பரவும் செயலாக மாற்றிக்கொடுக்கிறார் அவனிலே ஆழ்ந்த பேரடியார்.
*****
தன்னை உருகியுருகிக் காதலித்து மணாளனாக வரித்துக்கொண்ட ருக்மிணியைத் தேரிலேற்றிக் கொண்டு (அவள் விருப்பத்துடனே கடத்திக் கொண்டு) துவாரகைக்கு விரைகிறான் கிருஷ்ணன். கிருஷ்ணனைப் பிடிக்காத அவளுடைய அண்ணன் ருக்மி, கிருஷ்ணனின் தேரைத் தொடர்ந்து விரைகிறான். தேரை நிறுத்தி, அவனுடன் போரிட்டு அவனுடைய செருக்கினை அழிக்கிறான் கிருஷ்ணன்- எப்படி, அவனை என்னதான் செய்தான்? அவன் தலையை மழுங்கச் சிரைக்கிறான். பின்பு ருக்மிணியின் வேண்டுதலால் அவனை விடுவிக்கிறான். தேவகியின் மகனான சிங்கம் போன்ற இவனது பெருமையைப் பாடி உந்திபற ……………..
உருப்பிணி நங்கையைத் தேரேற்றிக் கொண்டு
        விருப்புற்றங் கேக விரைந்தெதிர் வந்து
        செருக்குற்றான் வீரஞ் சிதைய, தலையைச்
        சிரைத்திட்டான் வண்மையைப் பாடிப்பற
                தேவகி சிங்கத்தைப் பாடிப்பற.
(பெரியாழ்வார் திருமொழி- மூன்றாம் பத்து-9)
நமது கதாநாயகனான கிருஷ்ணனின் அருமையான ஒரு காதல் கதை இது! நமது உள்ளம்கவர் குழந்தை வாலிபனாகி நடத்திய காதல், அழுகை, வியப்பு, பயம், பெருமிதம், அருவருப்பு, வீரம், கருணை, சாந்தம் என்னும் நவரசங்களும் ததும்புவது. அதைப்பாடி மகிழ்வதில் பக்தர்களுக்குப் பேரானந்தம்!
*****
கோகுலத்தில் அத்தனை இடையர்களையும் அச்சத்திலாழ்த்தி வைத்திருந்தான் காளியன் எனும் நச்சுப்பாம்பானவன். அவன் இருந்த பொய்கை கலங்குமாறு அவனுடைய ஐந்து தலைகளிலும் மாறிமாறிக் குதித்து நடனமாடி அவனை அடக்கி, கொடியவனான அவனுக்கும் அருள்செய்தான் கிருஷ்ணன். அவனுடைய தோள்வலிமையைப் பாடி உந்திபற……
காளியன் பொய்கை கலங்கப்பாய்ந் திட்டு,அவன்
        நீள்முடி ஐந்திலும் நின்று நடஞ்செய்து
        மீள அவனுக் கருள்செய்த வித்தகன்,
        தோள்வலி வீரமே பாடிப்பற.
                தூமணி வண்ணனைப் பாடிப்பற.
(பெரியாழ்வார் திருமொழி- மூன்றாம் பத்து-9)
(இங்கு ஊத்துக்காடு வேங்கடகவி இயற்றியுள்ள காளிங்க நர்த்தன தில்லானாவைப் பற்றிக் குறிப்பிட வேண்டும். காளிங்கனின் நீள்முடி ஐந்திலும் அவன் ஜதிக்கேற்பவும், விதவிதமாகவும் ஆடிய நடனத்தைக் கண்டு களித்து, அதில் லயித்து, ஆழ்ந்து, தன்னை இழந்து, பக்தியின் பெருக்கில் சொற்கள் கோர்வையாக அணிவகுக்க, இசையும் ஜதியும் சொற்கட்டுகளும் இணைந்து தாமும் இனிய நடனமாட, அந்த அதி அற்புத நடனத்தில் ஒன்றிவிட்ட அடியாரின் அன்பின் உச்சநிலை இந்தத் தில்லானா. திருமதி அருணா சாய்ராமிம் குரலில் ஒருமுறை இதனைக் கேட்டுவிட்டால் போதும், பின் திரும்பத்திரும்பக் கேட்கத் தூண்டும் நயம் மிகுந்தது).
*****
கரிய ஆழ்கடலை குரங்குகளின் துணைகொண்டு கற்களால் அடைத்தான்; பின்பு அதன்வழியாகச் சென்று இலங்கையை அடைந்தான்; தனது வீரத்தை அறியாது அவமதித்த இராவணனின் பத்து தலைகளையும் சீவினான். பின் இலங்கையின் ஆட்சியை அவனது தம்பியான விபீஷணனுக்குக் கொடுத்தருளினான். இவன் எப்படிப்பட்டவன் தெரியுமா? எவ்வளவு உண்டாலும் திருப்தியைக் கொடுக்காத அமுதம் போன்றவன்- ஆரா அமுதன்- அவனை, அயோத்தியின் அரசனைப் பாடி உந்திபற……..
காரார் கடலை அடைந்திட் டிலங்கைபுக்கு
        ஓராதான் பொன்முடி ஒன்பதோ டொன்றையும்
        நேரா அவன்தம்பிக் கேநீ ளரசீந்த
        ஆரா வமுதனைப் பாடிப்பற.
                அயோத்தியர் வேந்தனைப் பாடிப்பற.
(பெரியாழ்வார் திருமொழி- மூன்றாம் பத்து-9)
          *****
இவ்வாறு நந்தன் மதலையாகவும், காகுத்தனான இராமனாகவும் கிருஷ்ணனைப்பாடி மகிழ்ந்து உந்திபறத்தல் எனும் விளையாட்டினைக் குதித்து விளையாடி மகிழ்கிறார்கள் சிறுபெண்கள். ‘விஷ்ணுசித்தன் எனும் ஸ்ரீவில்லிப்புத்தூர்ப் பெரியாழ்வார் அருளிய இப்பத்துப் பாடல்களைப் பாடுவோருக்குத் துன்பமில்லை,’ எனக் கூறுகிறார்.
நந்தன் மதலையைக் காகுத்த னைநவின்று
        உந்தி பறந்த வொளியிழை யார்கள்சொல்
        செந்தமிழ்த் தென்புது வைவிட்டு சித்தன்சொல்
        ஐந்தினோ டைந்தும்வல் லார்க்கல்ல லில்லையே.
(பெரியாழ்வார் திருமொழி- மூன்றாம் பத்து-9)
*****
பெரியாழ்வார் தமது நான்காம் பத்தில், குழந்தைகளுக்குப் பெயர்வைப்பது சம்பந்தமான ஒரு கருத்தினை வெளியிடுகிறார்.
‘காசுக்கும் துணிக்கும் ஆசைப்பட்டு கண்டகண்ட பொருளற்ற பெயர்களைப் பிள்ளைகளுக்கு வைக்காதீர்கள். கேசவன் எனும் அந்த இறைவனின் பெயரை இடுங்கள்.
‘அழிகின்ற மனிதனுக்கு, சிவந்த கண்களையுடைய திருமாலின் என்றுமே அழியாத பெயரான ஸ்ரீதரன் எனும் பெயரை இட்டு மகிழுங்கள்.
‘மண்ணாகப் போகும் மனிதனுக்கு கருமுகில் வண்ணனின் நாமத்தை வைத்து அழைத்தால் நல்லது,’ எனவெல்லாம் கூறுகிறார்.
மண்ணில் பிறந்து மண்ணாகும் மானிடப் பேரிட்டு, அங்கு
        எண்ணமொன் றின்றி யிருக்கும் ஏழை மனிசர்காள்,
        கண்ணுக் கினிய கருமுகில் வண்ணன் நாமமே
        நண்ணுமின், நாரணன் தம்மன் னைநர கம்புகாள்.
(பெரியாழ்வார் திருமொழி- நான்காம் பத்து-6)
கால ஓட்டத்தில், நமது எண்ணங்களும் சிந்தனைகளும் மாற்றமடைகின்றன. ஆகவே நமது வாழ்க்கையின் நடைமுறைகளுமே மாற்றமடைகின்றன. கடவுள் பெயரைத்தான் ஏன் வைக்கவேண்டும் என வாதிடும் பகுத்தறிவாளிகள் நம்மில் உண்டு; அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இராவணன், கம்சன் என்றோ தாடகை அல்லது கைகேயி என்றோ ஏன் பெயரிடுவதில்லை? சிந்தித்துப்பார்க்க வேண்டியது இது. எல்லாரும் ஆழ்மனத்தில் விரும்புவது இனிமையானவற்றையே; அழகானவற்றையே; காதால் கேட்கும்போது இனிமையான அந்தப் பெயர்கொண்ட ஒருவனுடன் அல்லது ஒன்றுடன் பொருத்திப்பார்த்து மகிழ்வதையே! இதனையே அந்தக் கிருஷ்ணானுபவத்தில் ஆழ்ந்துவிட்டவரான பெரியாழ்வாரும் சிறிது வற்புறுத்தியே கூறியுள்ளார். ஒன்றல்ல, இரண்டல்ல, ஆயிரம் நாமங்கள் கொண்டவனல்லவா அவன்?
கிருஷ்ணனின் பெயரின் இனிமையில் துவங்கிய இக்கட்டுரைத்தொடர், அவன் பெயர்களின் பெருமையைப் போற்றி நிறைவதும் பொருத்தமானதே.
மனிதர்களாகிய நாம் வாழ்வில் எப்போதுமே அற்புதங்களை எதிர்பார்த்து ஏங்குகிறோம். நம்முள், நம் குடும்பத்தில், நமது ஊரில், நாட்டில் ஒருபிள்ளை அசகாயசூரனாகவும், அளவுக்கு மீறிய சமர்த்தனாகவும் பிறந்துவிட்டால், தலையில் வைத்துக்கொண்டு கூத்தாட மாட்டோமா? கிருஷ்ணன் அப்படிப்பட்ட ஒருபிள்ளை! அதனால்தான் அவன் எப்போதும் எங்கும் விரும்பப்படுகிறான். எல்லாரும் விரும்புவது அவனைப்போல் ஒரு மகனுக்கோ, சகோதரனுக்கோ, காதலனுக்கோ, தந்தைக்கோ தான். பாரதியார் இந்த ஆசையை வெளிப்படையாக்கிப் பாடல்களாக்கினார்.
இந்தத் தொடரை எழுதத் துவங்கியதே கிருஷ்ணன் எனும் சிறு குட்டனைக் கொஞ்சி மகிழத்தான். அவன் அருமைபெருமைகளை எல்லாருடனும் பகிர்ந்து கொள்ளத்தான்! இச்சிறுகுட்டன், பகவத்கீதை எனும் மகத்தான ஒரு உபதேசத்தை உலகிற்கு அளித்தவன் எனும்போது அவனடியவர்களுக்குப் பெருமை கொப்பளிக்கிறது. உண்ணும்சோறும், பருகும் நீரும் தின்னும் வெற்றிலையும் அவனே எனப் படிக்கும்போது மெய்ப்புளகமுறுகின்றது.
கண்ணன் உபதேசித்த கீதையின் சாராம்சத்தைப் பிழிந்து தனது அற்புதக் கவிதைவரிகளில் அடக்கி கண்ணதாசன் அவர்கள் கொடுத்துள்ள பாடலை சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் கேட்கும்போது அதன் ஆழத்தையும் சத்தியத்தையும் உணர்ந்து கண்களில் நீர் வடிகின்றது.
மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா!
        மரணத்தின் தன்மை சொல்வேன்…
        மானிடர் ஆன்மா மரணமெய்தாது
        மறுபடிப் பிறந்திருக்கும்……….
(மேனியைக்கொல்வாய்; ஆனால் ஆன்மாவைக்கொல்ல இயலாது. அது திரும்பத்திரும்பப் பிறக்கும்…..)
 
என்னை அறிந்தாய் எல்லா உயிரும் எனதென்றும் அறிந்துகொண்டாய்
        கண்ணன் மனது கல்மனதென்றோ காண்டீபம் நழுவவிட்டாய்
        மன்னனும் நானே மக்களும் நானே மரம்செடிகொடியும் நானே
        சொன்னவன் கண்ணன்; சொல்பவன் கண்ணன்.
        துணிந்துநில் தர்மம் வாழ.
(அவனன்றி ஓர் அணுவும் அசையாது; பின் இதில் நம் பங்கு என்ன உள்ளது? நல்லதை நினைக்கவும், நினைத்ததைச் செயல்படுத்தவும் அறிவும் ஞானமும் அளிக்கப்பட்டுள்ளதால், அவற்றின் மூலம் நம் செயல்களைத் தொடர்ந்து செய்துகொண்டிருப்பதே நல்வழி).
 
புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால் அந்தப்
        புண்ணியம் கண்ணனுக்கே- போற்றுவார் போற்றலும்
        தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே….
        கண்ணனே காட்டினான் கண்ணனே தாக்கினான்
        கண்ணனே கொலை செய்கின்றான்.
        காண்டீபம் எழுக! நின் கைவன்மை எழுக!….
(இது ‘நான்’, ‘எனது’, எனும் எண்ணங்களை அழித்தொழிக்க நம்மை வலியுறுத்தும் வரிகள்….)
 
பரித்ராணாய ஸாதூனாம் வினாசாயச துஷ்க்ருதாம்
        தர்மசம்ஸ்தாபனார்த்ராய ஸம்பவாமி யுகேயுகே!
தர்மத்தை நிலைநாட்ட நான் திரும்பத் திரும்ப அவதரிப்பேன்- வேறென்ன பெரிய வாக்குறுதியை நாம் இன்னும் அவனிடமிருந்து பெற முடியும்?
எல்லாவற்றையும், அவனாகவே காணும், அவனாகவே கொள்ளும் இதுவே கிருஷ்ணானுபவம் அல்லவா?
லீலாசுகர் கூறுகிறார்: மயிலின் இறகைத் தலையணியாகக் கொண்டுள்ளான்; அவனுடைய திருமுகம் அழகுவாய்ந்த தாமரை மலராகப் பொலிகின்றது; கோபியரின் கடைக்கண் பார்வையால் வஞ்சிக்கப்பட்டவன் (பார்க்கப்பட்டவன்). எனது சொல்வடிவாய நூலுக்கு உயிர்போன்றவன் (வாங்மய ஜீவிதம்); அந்தக் கிருஷ்ணன் வெற்றியுடன் விளங்கட்டும்.
மதசிகண்டி- சிகண்ட- விபூஷணம்
                மதன-மந்தர-முக்த- முகாம்புஜம்
        வ்ரஜவதூ-நயனாஞ்சல-வஞ்சிதம்
                விஜயதாம் மம வாங்மய-ஜீவிதம்.
(ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம்- 1.8)
அவன் தாள்வணங்கிடவும் அவனருள் வேண்டுமல்லவா?
த்வதீயம் வஸ்து கோவிந்தா துப்யமேவ சமர்ப்யதே! (எனது எல்லாமே உனது கோவிந்தா! உனக்கே எல்லாவற்றையும் சமர்ப்பணமாக்குகிறேன்)
கிருஷ்ணார்ப்பணம்!
(நிறைந்தது)
****************
 
_
 
 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.