தேனீக்கள், கணிதம், பரிணாமம்- ஒரு கணித-உயிரியலாளருடன் உரையாடல்

Bees_Maths

முனைவர் பார்த்தசாரதி ஸ்ரீனிவாசன் உயிரியலுடன் இணைந்த கணிதவியல் வல்லுனர். தேனீக்கள் தம் வாழுமிடத்தை அமைப்பதில் உள்ள சமிக்ஞைகள் குறித்த அவரது ஆராய்ச்சி சுவாரசியமானது. உயிரியல், கணிதம் ஆகிய இருபுலங்களின் சங்கமத்தில் ஆராய்ச்சிகள் செய்யும் இவருடன் கலந்துரையாட ஒரு வாய்ப்பு அண்மையில் கிட்டியது. அதன் விளைவே கீழே காணும் நேர்காணல். முனைவர் பார்த்தசாரதியுடன் சொல்வனத்துக்காக உரையாடல் நடத்தியவர்கள்: சாந்தினிதேவி ராமசாமி & அரவிந்தன் நீலகண்டன் ]
 
கேள்வி: நீங்கள் இரண்டு அறிவியல் புலங்கள் (கணிதம், உயிரியல்) இணைந்த புலங்களில் ஆராய்ச்சி செய்து வருகிறீர்கள். அது எத்தகைய உணர்வை உங்களுக்குத் தருகிறது?
பார்த்தசாரதி: அற்புதமான சவாலான ஒரு உணர்வு அது. பல நூற்றாண்டுகளாகவே கணிதம் இயற்பியலை விளக்கப் பயன்படுத்தப்படுகிறது. (இதை நேரடியாகவே புரிந்து கொள்ளமுடியும்.) உயிரியலில் விஷயங்கள் அப்படி நேரடியாக இருப்பதாக சொல்லமுடியாது. எனவே உயிரியலில் கணிதத்தை பயன்படுத்துவது என்பதன் மிகப் பெரிய சவாலே அதுதான். என்னுடைய உத்வேகங்களை இவ்விதத்தில் நான் பரவலான வாசிப்பின் மூலம் பெற்றேன் என்று சொல்லலாம். சந்திரசேகரின் ’வெண்-குள்ள விண்மீனுக்காக கச்சிதத்தேவையான மிக அதிக நிறை’ (“The Maximum Mass of Ideal White Dwarfs”) முதல் ஆலன் ட்யூரிங்கின் மார்ஃபோஜெனிஸிஸுக்கான வேதியியல் அடிப்படை (Alan Turing’s “The chemical basis of morphogenesis”) வரை.
கேள்வி: உங்களுக்கு நிகழ்ந்த ‘யுரேகா’ தருணங்கள் ஏதேனும் உண்டா?
நான் கண்டுணர்ந்தது – எந்த ஒரு அறிவியல் கேள்வியையும் அதனை முடிந்தவரை எளிமையாக மாற்றி பயன்படுத்தக்க விதத்திலும் சுவாரசியமான முறையிலும் அதிலிருந்து ஒன்றை கண்டடைவதுதான். அதை நான் யுரேகா தருணமென்று சொல்ல மாட்டேன். இந்த கண்டுணர்தல் பல்லாண்டுகளாக நான் ஆராய்ச்சியாளனாக பல்வேறு கேள்விகளை அணுகியதால் கிடைத்த அறிவு முதிர்ச்சி என கருதலாம்.
கேள்வி: பொதுவாக கணித அமைவுகள் (mathematical systems) துல்லியம் கொண்டவை. உயிரியல் அமைவுகளோ (biological systems) சிக்கலான கட்டமைப்புகள் கொண்டவை. துல்லியமற்ற இயக்கங்கள் கொண்டவை. இவ்விதமாக இரு வேறுபட்ட துறைகளில் ஒரு துறை சார் அறிவு கொண்டு மற்றொரு துறையை அணுகுவது எப்படி?
மானுடர்கள் இரண்டு கண்கள், ஒரு மூக்கில் இரு நாசித்துவாரங்கள், ஐந்து விரல்களுடன் பிறக்கிறார்கள். ஏன் இப்படி பிறக்க வேண்டும்? இதை புரிந்து கொள்வது சுவாரசியமானது. எந்த அளவு சுவாரசியமென்றால் கோல்ட்பாக் கற்பிதம் (Goldbach conjecture) சொல்கிறதே – இரண்டுக்கு மேலான எந்த இரட்டை எண்ணையும், இரண்டு பகா எண்களின் கூட்டுத்தொகையாக எழுத முடியும் என்பதும் அதைப் போலவே சுவாரசியமான விஷயம்தான். ஒருவரது ஆர்வமும் பார்வைக் கோணமும் இவற்றை முடிவு செய்யுமென்று கருதுகிறேன்.
கேள்வி: நீங்கள் இயங்கும் இரு அறிவியல் துறைகள் ஒன்றொடொன்று தொடர்பற்றவையாகத் தோன்றுபவை. ஆனால் அவற்றுக்குள் இருக்கும் ஒரு பொது திரி ஒன்றில் நீங்கள் இயங்குகிறீர்கள். இவ்வாறு வெவ்வேறு அறிவியல் துறைகளிடையே பொதுத்தன்மையை அறியக் கூடியத் தன்மையை இளம் உள்ளங்களில் வளர்க்க எவ்வித தயாரிப்பு தேவைப்படும்? உதாரணமாக இசையிலிருந்து பரிணாம வளர்ச்சி முதல் சூழலியல் வரை கணிதத் திறன்களை வெவ்வேறு புலங்களில் பயன்படுத்துவது குறித்த ஒரு பார்வையை இளம் வயதிலேயே உருவாக்குவது குறித்து?
பொதுவாக உயிரியல் அமைவுகளை அளவைக்கு உட்படுத்தும் போது நாம் எளிதாக வேதியியலையோ அல்லது இயற்பியலையோ பயன்படுத்த முடிகிறது. மருத்துவத்தில் நமக்கு தேவையான ஒரு தீர்வு, பொறியியல் தொழில்நுட்பத்திலிருந்து கிடைக்கக் கூடும். நம் மாணவர்களை மிகவும் ஆரம்பத்திலிருந்தே சிலவிஷயங்களில் தெளிவுடையவர்களாக்குவது நல்லது. வெவ்வேறு புலங்களிடையே இருக்கும் எல்லைக் கோடுகள் உண்மையில் நாம் உருவாக்கியவைதான். நமக்கு சுவாரசியமான நம்மைச் சுற்றி நம்மை ஈர்க்கும் விஷயங்களை அறிந்திட அவற்றை விளங்கிக் கொள்ள நாம் முயற்சி செய்வதே நமக்கு முக்கியமானது. இதை நாம் உணர்த்த வேண்டும். இன்று நாம் கற்பிக்கும் – சிந்திக்கும் முறையிலிருந்து ஒரு பெரிய மாற்றத்தைக் கோர வேண்டும். இன்று அறிவியல் புலங்களில் இயங்குவோர் தத்தம் துறைகளின் எல்லைகளுக்குள் இயங்குவோராக இல்லாமல் எல்லைகளைத் தாண்டி இயங்குவது இதற்குத் தேவையான ஒன்றாகும்.
கேள்வி: கணித அடிப்படைகள் கொண்டதான கோட்பாட்டு உயிரியல் (theoretical biology) எவ்வாறு அறிதலுக்குப் பயன்படுகிறது என்பதை விளக்க இயலுமா? … விரும்பினால் குறிப்பாக நீங்கள் தேனீக்கள் குறித்து மேற்கொண்ட ஆராய்ச்சிகள் மூலம்…
தேனீக்கள் தங்கள் கூடுகளைக் கட்ட எவ்விடங்களைத் தேர்ந்தெடுக்கின்றன என்பதை அறிவதில் ஆர்வம் கொண்டேன். இதற்குக் காரணம் கார்னெல் பல்கலைக்கழகத்தின் டாம் ஸீலியின் (Tom Seeley) அருமையான ஓரிரு பேருரைகள்தான். அவர் அந்த விஷயத்தில் ஏற்கனவே விரிவான ஆராய்ச்சிகள் செய்திருந்தார்.  என்னுடன் மற்றொரு சக ஆராய்ச்சியாளரும் (ஆண்ட்ரூ நெவாய் (Andrew Nevai) அதே விஷயத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். எனவே நாங்களும், இதில் ஆர்வம் கொண்ட இன்னும் சில ஆராய்ச்சியாளர்களும் தேனீக்கள் குறித்த இந்த ஆராய்ச்சியில் கைகோர்த்துக் கொண்டோம்.
தேனீக்கள் தங்கள் கூட்டைக் கட்டும் நிகழ்வென்பது சுவாரசியமான சிக்கலான ஒரு விஷயம். முதலில் அந்த வட்டாரத்தை வேவு பார்க்கும் தேனீக்கள் அந்த இடத்தில் சுற்றும். அவற்றில் ஒன்று ஒரு சாதகமான இடத்தைப் பார்த்ததும் அது நடனமிடுவது போன்றதொரு இயக்கத்தை – waggle dance – ஆரம்பிக்கும். இது மற்ற வேவு ஈக்களுக்கான சமிக்ஞை. அவை அந்த இடத்தைப் பார்த்து முடிவு செய்ய அழைக்கும் சமிக்ஞை. தான் தேர்ந்தெடுத்த இடம் அமைந்திருக்கும் விதத்தையும் அதன் தரத்தையும் மற்ற வேவு ஈக்களுக்கு சமிக்ஞை செய்கிறது. இதன் நோக்கம் ஒருவித ஒருமித்த முடிவை எட்டுவது. இன்னொரு விதத்தில் சொல்வதானால் ஒரு இடத்தை கூடு கட்ட தகுதியானதென தேர்ந்தெடுத்த தேனீ தான் கண்டடைந்த இடத்தை ஏற்கும்படியாக மற்ற வேவு ஈக்களில் ஒரு ‘தொற்றை’ (infection) ஏற்படுத்துகிறது. பொதுவாக தொற்றை நாம் மோசமான ஒரு விஷயமாக கருதுகிறோம். இங்கோ அது ஒரு நல்ல விஷயமாக இருக்கிறது எனச் சொல்லலாம்.
கேள்வி: பொதுவாகவே கணிதம் என்றால் ஒரு அச்சம் இருக்கிறது. அதை நீக்க நீங்கள் என்ன தீர்வை சொல்வீர்கள்?
அப்படிப்பட்டவர்களுக்கு நான் சொல்லும் தீர்வு: உங்களுக்கு எந்த விதமான துறையில் எந்த ஒரு விஷயம் ஆர்வத்தை ஏற்படுத்துகிறதோ அந்த விஷயத்தை ஆராய்ச்சி செய்ய்யுங்கள். அந்த ஆராய்ச்சி கணித அறிவை உங்களுக்குத் தேவையாக்குகிறதென்றால் அப்போது அந்த மாணவருக்கு கணிதத்தை படிப்பதில் ஒரு ஆர்வம் தானாக ஏற்படும். அப்போது கணிதத்தை அறிந்து கொள்ள அவர் தானாகவே வழிமுறைகளைக் கண்டடைவார். விஷயமென்னவென்றால் ஆர்வத்தை தூண்டுவதுதான் முக்கியமானது.
ஒரு பதின்ம வயது மாணவனை எடுத்துக் கொள்வோம். அவருக்கு கணிதத்தில் ஒரு ஆர்வம் ஏற்பட வேண்டுமென்றால் நான் என்ன செய்வேன்? நல்ல எடுத்துக் காட்டுகளை பயன்படுத்துவேன். உதாரணமாக தேனீக்கள் செயல்படும் விதத்தைக் குறித்து விளக்குவேன். அந்த வேவு தேனீக்கள் செயல்படும் விதத்தை எடுத்துக் கொள்ளுங்களேன். தம் கூட்டைக் கட்ட ஒரு இடத்தைத் தேர்ந்தெடுக்கவும் ஒருவித ஒருமித்த கருத்தை உருவாக்கும் முயற்சியில் அவை ஈடுபடுகின்றன.  ஆதர்ச ஜனநாயகத்தில் எப்படி ஒவ்வொரு தளத்திலும் அது செயல்பட வேண்டுமென்பதை இது சுட்டுவதாகக் கருத முடியும் இல்லையா?
கேள்வி: ஜுராசிக் பார்க் திரைப்படத்தில் இயான் மால்கம் என்கிற கணிதவியலாளரைக் காட்டுவார்கள். இன்றைக்கு மிகவும் பிரசித்தி பெற்றுவிட்ட ’கேயாஸ்’ கோட்பாடு (Chaos theory) மூலம் அவர் நிஜவாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை முன்-கணிக்கிறார். குறிப்பாக உயிரியல் தொடர்பான சம்பவங்களில் இது நிகழ்கிறது. கேயாஸ் கோட்பாட்டை மிகவும் தீர்க்கமாக பொது மனதில் கொண்டு சென்றதில் இது ஒரு முக்கிய ஊடக நிகழ்வாக இருந்தது எனலாம். பொது மக்களுக்காக அறிவியலை கட்டுரைகள், ஊடகங்கள் மூலமாகக் கொண்டு செல்வது குறித்து அதன் முக்கியத்துவம் அதன் பங்களிப்பு குறித்து உங்கள் எண்ணங்கள்?
என் பார்வையில் அவற்றின் பங்கு முக்கியமானது. அவற்றை என்றைக்குமே அதிகமாக மதிப்பிட்டுவிட்டதாக நாம் சொல்லமுடியாது, அவை எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக வருகின்றனவோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது என்றே சொல்வேன். குறிப்பாக இப்போதெல்லாம் டேவிட் அட்டன்பரோ உருவாக்கும் உயிரியல் இயற்கை ஆவண காணொளிகளும், ரிச்சர்ட் டாக்கின்ஸின் ‘சுயநல மரபணு’வும் (The Selfish Gene) மிக சிறப்பான அனுபவங்களை நமக்கு தருகின்றன. இவ்வாறு தொடர்ந்து இவை உருவாகி வெளிவர வாசகர்களிடமிருந்தும் தொடர்ச்சியான ஆர்வம் வேண்டும். இவற்றை உருவாக்கப் பாடுபட்டு உழைக்கவும் வேண்டும்.
கேள்வி: கணிதம் உயிரியல் தத்துவம் இவை சந்திக்கும் ஒரு இடம் இருக்கிறதா? அதைக் குறித்து உங்கள் எண்ணம் என்ன? ஆல்பர்ட் நார்த் ஒய்ட்ஹெட் (AN Whitehead ) பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் என முக்கியமான கணிதவியலாளர்களுக்கு கணிதத்தின் தத்துவத்தில் ஆழமான ஈடுபாடு இருந்தது. உங்கள் எண்ணங்கள்?
இது ஒரு சிக்கலான கேள்வி.  டார்வினின் இயற்கைத் தேர்வு எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. உங்களுக்குத் தெரிந்திருக்கும் அதற்கு முதலில் கடுமையான எதிர்ப்பு இருந்தது.  அதற்கு காரணம் பலர் இயற்கைத் தேர்வு என்பது மனிதர்களின் இடத்தை பல விதங்களில் மிகவும் குறுக்கிவிடுவதாக உணர்ந்தனர்.  இயற்கைத் தேர்வு மட்டுமல்ல, அதனுடன் இணைந்து உயிர் எனும் நிகழ்வு வெவ்வேறு இடங்களில் உருவாகவில்லை, மாறாக ஒரு முறை ஓரிடத்தில் மட்டுமே முகிழ்த்தது என்பதே நாமறிந்த தரவுகளின் அடிப்படையில் உண்மையாக இருப்பதுமான இரண்டு விஷயங்களும் இணையும் போது நமக்கு கிடைக்கும் தத்துவப் பார்வை சுவாரசியம் மிக்கது. பீட்டர் சிங்கர்* போன்ற தத்துவவியலாளர்களின் கோட்பாடுகள் இத்தகைய அறிவியல் தரவுகளை உள்வாங்குவதன் மூலம் உருவாகின்றன எனலாம். ரிச்சர்ட் டாக்கின்ஸ் முன்வைத்த புறவெளிப்பாட்டு நீட்சி (extended phenotype) போன்றவையும் ஒரு உயிரிக்குழு (species) என்னும் வகையில் உலகை அறிந்து அதில் நம் இடமென்ன என்பதை அறிந்து கொள்ள உதவி செய்யலாம்.
கேள்வி: புறவெளிப்பாட்டு நீட்சி (extended phenotype) குறித்துக் கூறினீர்கள். பணம்- நாணயம் கரன்ஸி இவை- மானுட உயிரினத்தின் புறவெளிப்பாட்டு நீட்சிகளில் ஒன்று. பகுத்தாய்ந்து பார்த்தோமானால் பணம் என்பது அதன் இறுதி நிலையில் ஆற்றலையே அளக்கிறது என கூறலாம். அதாவது மானுட இனம் எப்படி ஆற்றலைப் பயன்படுத்துகிறது, அதற்கு எந்த அளவு ஆற்றல் கிடைக்கிறது என்பதையே பணம் காட்டுகிறது. எனவே மானுட உயிரினம் பிழைத்திருக்குமா என்பதைக் காட்டும் ஒரு குறியீடாகவே அது விளங்கக் கூடும். என்ற போதிலும் நம் பொருளாதாரக் கோட்பாடுகள் முடிந்த வரை இந்த தன்மையை மறைத்தே வைத்திருக்கின்றன. இனிவரும் நாட்களில் பணம் என்பது உதாரணமாக ஒரு இந்திய ரூபாய் என்பது இத்தனை எர்க் அல்லது ஜூல்களைக் காட்டும் ஒன்றாக கருதப்பட வாய்ப்பிருக்கிறதா?
இங்கு ஒரு மிகவும் சுவாரசியமான விஷயத்தை கொண்டு வந்திருக்கிறீர்கள். பணம் என்பது ஆற்றலின் அளவைக் குறியீடாகப் பயன்படுத்தப்பட வேண்டுமென்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் பணத்தின் இந்த தன்மைகள் நம் பொருளாதாரப் பார்வையில் ஏன் மறைக்கப்படுகின்றன? இதற்கான விடையை நாம் கண்டடைந்தோமென்றால் வரும் காலகட்டத்தில் நாம் பணத்தை ஆற்றல் பயன்பாடு, ஆற்றல் இருப்பு ஆகியவற்றின் அளவைக் குறியீடாக மாற்ற முடியுமா என்பதற்கான பதிலையும் வந்தடைய முடியும். என் கருத்து என்னவென்றால் இன்றைய தேதியில் நம் பொருளாதாரக் கோட்பாடுகள் அதிகாரத்தை நாடும் தக்கவைத்துக் கொள்ளும் ஒரு சிலரின் ஆதாயங்களை உத்தேசித்தே உருவாக்கப்பட்டுள்ளன.  உங்களுக்கும் உங்கள் வாசகர்களுக்கும் இதில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.
கேள்வி: டார்வினின் கோட்பாடு குறித்துச் சொன்னீர்கள். டார்வினின் ‘ஆபத்தான கோட்பாடு’ (டார்வினியரான கார்ல் ஸிம்மர் அப்படித்தான் சொல்வார்) இதைக் குறித்துப் பேசும் போது மனதிற்கு வருவது, அது குறித்து டேனியல் டென்னெட் கூறியதுதான்.  இயற்கைத் தேர்வு ஒரு அல்காரிதமிக் நிகழ்வு என்றார் அவர். மாற்றங்களுடன் கூடிய சுய-பெருக்க அமைவுகள் போட்டியிடும் சூழல் (competing self-replicators with variations)நிகழும் எல்லா சூழல்களிலும் இயற்கைத் தேர்வு நடை பெறும் என்று அவர் கூறுகிறார். எனில் இயற்கைத் தேர்வு என்பது உயிரியல் தாண்டிய ஒரு அடிப்படையான இயக்கம் என கருதலாமா?   உதாரணமாக ஆதி பிரபஞ்சங்கள் வெவ்வேறு மாறிலிகளுடன் தொடக்கத்தில் இருந்திருந்து, அவற்றிலிருந்து இயற்கைத் தேர்வின் மூலம் இன்று நாம் காணும் ஒரு பிரபஞ்சம் வந்திருக்க கூடுமா?
பிரபஞ்சவியல் என் புலம் அல்ல. எனவே அதைக் குறித்து எனக்குப் பேச அதிகம் இல்லை. இயற்கைத் தேர்வைப் பொறுத்தவரையில் ஒரு கட்டத்தில் உயிர் என்பது ஒற்றையான தொன்மை செல் நுண்ணுயிரிகள் (prokaryotes உட்கரு இல்லாத வளைய டி.என்.ஏ கொண்ட செல்கள் – குறிப்பாக பாக்டீரியங்கள்) என்கிற அளவில் தேங்கி நின்றிருந்திருக்கலாம். யூகேரியோட் செல்கள் (நியூக்ளியஸ் உட்கரு கொண்ட செல்கள்)  என்பவை ஒரு இயற்கைத் தேர்வினால் ஏற்பட வேண்டிய நிர்ப்பந்தங்கள் இல்லாத ஒரு சமாச்சாரம். யூகேரியோட் செல்கள் கொண்ட உயிர்களின் பரிமாணத்தில் இயற்கைத் தேர்வைத் தாண்டிய பிற இயக்கங்கள் தூண்டுதல்களாக செயல்பட்டிருக்க வேண்டும். யூகேரியோட் செல்களின் உதயம் குறித்து சுவாரசியமான கருதுகோள்கள் உள்ளன.  அது ஒரு அசாதாரணமான அபூர்வமான ஒரு நிகழ்வாக இருக்க வேண்டும். பொதுவாக நான் உவமைகளைப் பயன்படுத்துவதில்லை. ஆனால் பரிணாம இயக்கத்தின் எஞ்ஜினாக நீங்கள் இயற்கைத் தேர்வினைக் கருதினால் எஞ்சினைத் துவக்க வைக்கும் ஒரு கனல் பொறியாக யூகேரியோட் செல்களின் உதயத்தை நீங்கள் கருதலாம். உண்மையில் இரண்டு இயக்கங்களுக்குமே வெளித்தூண்டுதல் எதுவும் தேவையில்லை என்பதை நீங்கள் உணர்வீர்கள் எனவேதான் உவமைகள் எப்போதுமே முழுமையானவை இல்லை என சொன்னேன். இந்த எஞ்ஜீன் உவமை என்பது ரொம்ப சிறந்த ஒன்றெனக் கூற முடியாது.
கேள்விஇன்று கணித அடிப்படையிலான கோட்பாட்டு உயிரியல் (theoretical biology) செல்லும் திசை என்னவென்பதையும் உயிரியியலுடான உறவின் மூலம் கணிதம் நம் உலகை அறிய எவ்வித கருவிகளை செதுக்குகிறது என்பதையும் தெரிந்து கொள்ளலாமா?
உயிரியலால் உத்வேகம் பெற்ற முறைகளான ’ஜெனடிக் அல்காரிதம்’ போன்றவை பிரச்சனைகளுக்கான திறச்சீர்மை கொண்ட முடிவுகளுக்குப் பயணிக்க உதவுகிறது. மருத்துவத் தொழில்நுட்பங்களிலும், கணிதம் துயரையும் கஷ்டங்களையும் குறைக்கும் வழிமுறைகளைக் கண்டடைய நமக்குப் பெரிதும் உதவும். உயிரியல் சூழலியல் சார்ந்த சமுதாய பிரச்சனைகளுக்கான வளங்குன்றா வளர்ச்சி ஆற்றல் பயன்பாடு ஆகியவற்றிலும் கணிதம் ஒரு சிறந்த திறப்பினைக் காட்டும்.
கேள்வி: நீங்கள் ரிச்சர்ட் டாக்கின்ஸ் குறித்து குறிப்பிட்டீர்கள். அவரது ’குருட்டு கைக்கடிகார வடிவமைப்பாளர்’ ’சுயநல மரபணுக்கள்’ ஆகியவை ஒரு தலைமுறைக்கே பார்வை மாற்றம் அளித்த நூல்கள் எனலாம். கார்ல் சாகனின் ‘காஸ்மாஸ்’ நூலும் தொலைகாட்சி தொடரும் அறிவியல் பொதுமன இணைப்பில் ஒரு அற்புத நிகழ்வாக அமைந்தன.  ஐஸக் அஸிமாவ், ஆர்தர் சி க்ளார்க், ஸ்டீவன் ஒய்ன்பர்க் – என அவர்களின் பங்களிப்பு நம்மிடையே இருக்கும் செயற்கைப் பிரிவுகளுக்கு அப்பால் நம்மை இணைக்கும் ஒரு பண்பாட்டுணர்வை உருவாக்கின.  சரி. இன்று பொதுவெளியில் அறிவியல் எழுத்து எவ்வாறு உள்ளது? மேற்கத்தியரல்லாத மற்ற சமுதாயங்களில் பண்பாடுகளில் பொதுப்புல அறிவியல் எழுத்துக்களின் தேவைகளை எவ்விதம் கருதுகிறீர்கள் – குறிப்பாக காலனியாதிக்கத்திலிருந்து விடுபட்டவையும் தமக்கென நீண்ட பாரம்பரியங்கள் கொண்டவையுமான வளரும் சமுதாயங்களில் அறிவியல் எழுத்து அச்சமுதாயங்களிலிருந்து வரும் அறிவியல் எழுத்து ஆகியவற்றை எவ்விதம் காண்கிறீர்கள்?
சுவாரசியமான விஷயம் என்னவென்றால் சில மிகச்சிறந்த பொதுப்புல அறிவியல் எழுத்துக்கள் அறிவியலாளர்களால் எழுதப்பட்டவை அல்ல. பில் ப்ரைஸன் (Bill Bryson) எழுதிய ‘ஏறக்குறைய அனைத்துடையவும் ஒரு சுருக்கமான வரலாறு’ (“A Short History of Nearly Everything”) நூலை நான் பரிந்துரை செய்வேன். இந்நூலாசிரியர் அடிப்படையில் பயண அனுபவங்களை எழுதுபவர். மற்றொரு முக்கிய பிரபல அறிவியல் நூலாக நான் பரிந்துரைப்பது ‘ஆக்ஸிஜன் உலகை மாற்றிய மூலக்கூறு’ (Oxygen: The Molecule that Made the World).இந்நூலை எழுதிய நிக் லேன் (Nick Lane) ஒரு பரிணாம உயிரியலாளர் (லண்டன் யூனிவர்ஸிட்டி காலேஜ்). இன்று காலம் அவசர கதியில் ஓடுகிறபோது தரமான எழுத்துக்கள் பல (கவனம் பெறாமலே) கடந்து செல்லப்படுகின்றன. பொது ஊடகம் இன்னும் மிகப் பெரிய அளவில் அறிவியலை பொதுக் கவனத்துக்கு கொண்டு வந்து உள்வாங்க வைக்கலாம். அது அறிவியலை புரிய வைப்பதுடன் ஒரு மிகப் பெரிய பின்புலத்தில் நம்மை பொருத்திப் பார்க்கவும் உதவும்.  அறிவியல் அதிகமாக எழுதப்பட அறிவியல் அதிகமாக வாசிக்கப்பட வேண்டும். அறிவியல் ஆராய்ச்சிகள் அதிகமாக நடக்கவும் வேண்டும்.  இந்தியா சீனா போன்ற தேசங்கள் தயையையும் அனுகம்பத்தையும் (empathy) சக மனிதர்களிடமும் பிற உயிரினங்களிடமும் வலியுறுத்தியவை. அத்தகைய பண்பாடுகளிலிருந்து வரும் அறிவியல் எழுத்து எவ்வித புரிதல்களை ஏற்படுத்தும் என்று அறிவது அற்புதமான ஒரு விஷயமாக இருக்கக் கூடும்.
***
பின் குறிப்பு:
பீட்டர் சிங்கர்  ஒரு  தத்துவவியலாளர். அவருடைய 1976 ஆம் வருடத்து  ’விலங்குகளின் விடுதலை’ (Animal Liberation) என்னும் நூல் முக்கியமானது. விலங்குகளின் உரிமைகள் அவற்றின் உயிரின வேறுபாடுகளைச் சார்ந்து மறுக்கப்படுவதைக் கேள்விக்குள்ளாக்குகிறது. அடிப்படையில் இவரது பார்வை உயிரி-மைய பார்வை (biocentrism) என அழைக்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.