தச்சன்

mary magdalene

அன்றைக்கெல்லாம் அவளுக்கு உறக்கமில்லை. விடியலிலே தான் வரமுடிந்தது. கண்கள் எரிச்சலடைந்து கால்கள் தளருகின்றன. தண்ணீரற்ற தோல் துருத்திகள் அமரவிடவில்லை. கற்களடுக்கிய சுவற்றின் இடுக்கிலிருந்து தலைக்குப் போர்த்தும் சீலையை எடுத்துக்கொண்டு குனிந்து வெளியில் வருகிறாள். காற்றில் மணல் சுழன்றடிக்கிறது. கண்களை ஒரு கையால் மூடுகிறாள். தோல் துருத்தியை இடுப்பில்  வைத்து நடக்கிறாள்.
நீர் எடுக்கும் கிணற்றண்டையில்  நிறையபேர் நிற்கிறார்கள். அவர்கள் கவனம் தண்ணீர் மொள்வதில் இல்லை என்று அருகில் சென்றதும் அறிகிறாள். முழங்கால்கள் வலிக்க நீர் இறைக்கும் சிறிய கட்டை தோணியை எடுக்கிறாள்.மஞ்சள் நிறமாய் மின்னும் கால்கள் தெரிய எட்டிப்பார்க்கிறாள் அருகில் நிற்பவள்.
“அதோ பாரேன்…”
மலைக்குன்றுகளும் புழுதிப்படலமும்  தான் தெரிந்தன. காட்டத்தி மரங்களும், படர்ந்த ஒலிவமரங்களும் அடர்ந்த அவ்வழியில் அவர்கள் வருகிறார்கள். அவர்கள் நடுவில் நீலநிற உடையில் அவன்.
’தச்சனின் மகன், தச்சனின் மகன்’ அருகில் நிற்பவன் சொல்கிறான். மக்தலீன் எட்டிப்பார்க்கிறாள்.
சரியாகத் தெரியவில்லை. தலைமுடியும் மூக்கும் மட்டுமே தெரிகிறது. நீலவண்ண ஆடை தழுவிய அவன் தோள்கள்.
“…இவன்பின்னே தான் இப்பொழுதெல்லாம் நிறையபேர் போகிறார்கள்.அருமையாகப் பேசுகிறான்.பிலாத்துவையும் ராயனையும் சீசரையும் எத்தனை தைரியமாக எதிர்த்துப் பேசுகிறான்.”
தண்ணீரைச் சுமந்து வரும் வழியெல்லாம் மக்கதலீனாவுக்கு நீல வண்ண ஆடைகளே நினைவில். அவன் பேசும்போது எப்படியாவது கேட்டுவிடவேணும்.
“காடுகளில் வனாந்திரங்களில் மலரும் பூக்களைப் பாருங்கள். அவை என்றாகிலும் நெய்ததுண்டோ? என்றாலும் சாலமோனின் காலம் கொண்டு அவற்றைப் போன்று ஒளியாய் வண்ணங்களாய்  எவர் ஆடைகளை அணிந்ததுண்டு ? கவலைப்படாதிருங்கள்…”
வெண்கல மணியின் ஒலிபோல அவன்குரல் காற்றில் தனித்துக் கேட்கிறது. அவன் அமர்ந்திருந்த பாறையிலிருந்து தொலைவில் மரங்களின் நிழலில் மறைந்து நிற்கிறாள். எவ்வளவு கம்பீரமாய்அ மர்ந்திருக்கிறான்.
“பேசமுடியுமா ?..”
“அய்யோ, என்னைப்பற்றித் தெரிந்தால் என்ன ஆகும்?..”
“இவன் புனிதனல்லவா ?”
பேச்சிலும் கண்களிலும் உடலிலும் தெரியும் தூய்மை, பேரன்பு, சமாதானம்…ஒரு வார்த்தை பேசிவிட்டால் அவளுக்குப் போதும்.
அதோ குழந்தைகளும் பெண்களும் சூழ்ந்து கொள்கிறார்கள்.சீடர்கள் விலக்குகிறார்கள். தனித்து நிற்கிறாள். கண்ணீர் பெருகுகிறது.
“என்னைப் பார்க்கமாட்டாயா ?..உன் அருளின் ஒரு துளியை எனக்குள் ஊற்றிவிட மாட்டாயா ?”
“உன் பாதங்களை நான்  தொட அருகதையற்றவள். பாவி. உண்மை தூய்மை பரிசுத்தம் வெண்மை  என்னால் காணமுடியுமா உன் முகத்தை ?”
யூதேயாவும் சமாரியாவும் நாசரேத்தும் பெத்தானியாவும் கர்மேல் மலைகளும் நடந்து நடந்து அவன் சோர்கிறான்.
சுற்றிலும் மனிதர்கள். எங்கே சென்றாலும் நோய்கள்,பாவங்கள், என்னைக் காப்பாற்று என்று எளிய மக்களின்  கூக்குரல்கள்.
அவன் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும்  கேட்கும்  பெருந்திரளான கூட்டம். சீடர்கள். பேதுரு சீமோன் போன்ற உரிமையான நண்பர்கள். அவன் நிமித்தம் எல்லாப் பழியையும் ஏற்று கருணையினால் நிறைந்த அன்னை.
ஆனாலும்,  அவனுக்கென எவருமில்லை.
அவன் மனம் தனித்தே நிற்கிறது. எங்கோ ஓர் வெறுமை.எனக்கென என் மனதுடன் உரையாட ஓர் அன்பு நெஞ்சமில்லை. எல்லோருக்கும் நான் ரபி, குரு, ஞானத் தந்தை…என்னுடன் முகமுகமாய் அளவளாவ நண்பனே என்று அழைக்க எவருண்டு ?
“சீமோன் ஊருக்குச் செல்லலாம் ரபி” லாசரு சொல்கிறான்.
நீண்ட தொலைவு கற்கள்  நிறைந்த பாதையில் செல்ல வேண்டும். சாவின் கல்லறையினின்று பிழைத்து வந்ததிலிருந்து அவனுடனே இருக்கிறான். வளைந்த அவன் மூக்கு தொடர்கிறது.
“இன்று எங்கே உணவு?”
”இவ்வூரின் கோதுமை வியாபாரி யாசவ்வாவின் இல்லத்தில்  ரபி” யூதாஸ் சொல்கிறான்.
எங்கே தங்குவது,என்ன உணவு,எவ்வளவு பணம் தேவை   என்பதையெல்லாம் தீர்மானிப்பது அவன்தான்.
ஒலிவ எண்ணெயில் சுட்ட கோதுமை அப்பங்களும்,நெருப்பில் வாட்டிய மாட்டின் தொடைக்கறியும், சிவந்த ஒட்டக இறைச்சியும்,உயர்ந்த திராட்சரச மதுக்குடுவைகளும்,உப்பும் சுவையுமிட்ட ஆட்டின் தலையும், வாதுமை கொட்டைகளும், மாதுளம்பழங்களும், திராட்சங்குலைகளும் …
விதவிதமாய் அடுக்கப்பட்ட மேசையில் அமர்ந்திருக்கிறான்.
யாசவ்வாவும் அவன் மனைவியும் வந்து பணிகிறார்கள். இறைச்சியின் கொழுத்த பங்கு இவன் முன்னே. அவனுடன் வந்தவர்களும் சீடர்களும் திராட்சை ரசங்களையும் இறைச்சிகளையும் ஆவலாய் உண்கிறார்கள்.
வாட்டப்பட்ட இறைச்சியின் மணம்  பசியைத் தூண்டுகிறது. ஆம் நான் போஜனப்பிரியன் தான்.மதுவும் எனக்கு  இனிமையானதே.
நாசரேத்தில் தச்சனாய் இருக்கையிலேயே அன்னை சலித்துக்கொள்வாள். உனக்காக மட்டும் எங்வளவு மாவினை எந்திரக்கல்லில் நான் அரைப்பது என. ஆனால், அப்பங்களையும்  மாட்டிறைச்சியையும் யூதாவுக்கும், ஆபிக்கும் வைப்பதைவிட இருமடங்காய் இவனுக்குப் பங்கிடுவாள்.
அம்மாவின் கரங்களில்  சாப்பிட்டு எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன ? அவள் மடியும், ஆடைகளின் வாசமும் தலைசாய்க்க இடம் தேடும் மனம் நாடுகிறது.
சென்ற முறை,  வரும் வழியில் நாசரேத்தில் பார்த்தது.சுற்றிலும் கூட்டம். கண்கள் மலரப் பார்த்தாள். ஒரு நாள் இருந்து செல்லக்கூடாதா என்றது அப்பார்வை.
மலைகள் நிறைந்த பகுதியை புழுதிப்புயலுக்கு முன் தாண்டிவிட பயணத்திட்டம். அவள் பாதங்களில் பணிகையில் வாரி அணைத்துக் கொண்டாள். அவள் உடைகளில் ஆட்டுப்பாலின் மணம். மரியாளுக்கென்றேயான தனிப்பட்ட எண்ணெய் வாசம். ஐந்து வயது பாலகனாய் அவள்  மடியில் சாய்ந்திருந்த வாசம். கழுத்தில் கட்டிக்கொண்டு குளிர் இரவில் அவளுடன் இணைந்த போர்வை மணம். அம்மாஆஆ….
முறுக்கி காய்ச்சப்பட்ட ஆட்டுப்பாலில் நறுமணங்களும் வாதுமைக்கொட்டைகளும் அரைத்து ஊற்றப்பட்ட பானத்தை அருந்துகையில் அம்மாவின் வாசம்.
பாலைவெளியில் வனாந்திரத்தில் சுற்றித்திரியும் ஜாவானை பற்றி இம்மக்கள் அச்சமடைகிறார்கள்.
வெட்டுக்கிளிகளையும் காட்டு- மரங்களில் தேன்கூடுகளில் வழியும் தேனையும் மட்டுமே  உண்டு வாழும் அவனை மெசையாவா என்று சந்தேகிக்கிறார்கள்..
விரியன்பாம்புக் குட்டிகளே என்று அவன் கடிந்து பேசுகையில் கலங்குகிறார்கள்.
எதையும் உண்ணாமல் துறவியாய் வாழ்பவனையும் தூற்றுகிறார்கள்.
எல்லாவற்றையும் ருசித்து உண்ணும் என்னையும் ஏசுகிறார்கள்.
இறைவன் எளிமையை எங்கு கேட்கிறான், உள்ளத்தில்…இவர்களோ அதனை வெளியில் தேடுகிறார்கள்…
சீமோனின் ஊரை  வந்தடைய மாலையாகிவிடுகிறது. அவ்வீட்டினுள்ளே நிறைய கூட்டம். அமர்ந்து உரையாடிக் கொண்டிருக்கையில் தான் அவள் வருகிறாள். நீண்ட மாணிக்கவண்ண அங்கியும் மேலாடையும் அணிந்து அழகாக இருக்கிறாள்.
உடைகளின் மறைவிலிருந்து அதனை எடுக்கிறாள்.ஒலிவ இலைகளும் வாற்கோதுமை கதிர்களும் மாதுளம் மொக்குகளும் நிறைந்த நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட எகிப்திய குப்பி. விலையுயர்ந்த பரிமளதைலம். கிரேக்கத்திலும் யவன தேசங்களிலுமிருந்து வரும் வியாபாரிகளிடம் மட்டுமே பெற முடிந்த திரவியம்.
‘என் ஆண்டவனே’  அவன் பாதங்களைத் தழுவிக்கொள்கிறாள். தைலக் குப்பியைத் திறந்து நடந்து நடந்து சிவந்த அவன் பாதங்களில் ஊற்றுகிறாள். நைல் நதியின் நீரோட்டம் போன்று புரளும் தன் கூந்தலினால் பாதங்களைத் துடைக்கிறாள். ரபி ரபி முத்தமிடுகிறாள்.
அறையெங்கும் மனதை நிறைக்கும் வாசம் பரவுகிறது. அவன் குனிந்து அவளைப் பார்க்கிறான். நெளியும் பொன்னிறக் கூந்தல், கைகளால் பிடிக்க முடியாத அடர்வு தரையெங்கும் புரள்கிறது.
கிரேக்கச்சாயல் கொண்ட மஞ்சள் நிறமான முகம். அகன்று நீண்ட நீலநிற விழிகள் நோக்குகின்றன. சீரான உயர்ந்த நாசி. ததும்பும் இதழ்கள். நீண்ட கழுத்து, பெண்ணின் பேரழகு..
’தெய்வமே’ அவள் உதடுகள் முணுமுணுக்கின்றன.அந்தக் கண்கள். கண்ணீர் ததும்பும் அவை இறைஞ்சுவது எதனை. எத்தனை அழகிய விழிகள். செவ்வரிகள் ஓடிய வெண்மை.
இவள் பரஸ்திரீயா ? வேசியா? இல்லை இல்லை. அக்கண்கள் மட்டும் போதுமே. அவள் தூயவள் என்றறிய.
“என்ன கேட்கிறாள் என்னிடம்? ஏன் இப்படிப் பார்க்கிறாய் பெண்ணே?”
அவள் குனிந்து பாதங்களை முத்தமிடுகிறாள். அவள் கண்ணீர் அவன் பாதங்களை நனைக்கிறது.
அறையில் முணுமுணுப்புகள். அய்யோ இவள் பாவியாயிற்றே ! இவர் மெசியா என்றால் அது தெரியாதா ?
“ரபி இவள் இத்தைலத்தை வீணாக்கினாளே. இதனை விற்று முன்னூறு பணத்தை ஏழைகளுக்கு தந்திருக்கலாமே !”
சீடன் குமுறுகிறான்.
“ஏழைகளும் தரித்திரரும் எப்பொழுதும் உங்களிடம் இருக்கிறார்கள். நான் செல்ல வேண்டுமே. என் தந்தையிடத்தில். செல்லவே இவள் தைலத்தால் என்னை தூய்மையாக்குகிறாள். தன் கண்ணீரால் என் பாதங்களைக் கழுவுகிறாள். பெண்ணே உன் பாவங்கள் உன்னை விட்டகன்றன. நீ செல்.”
அவள் விழிகள் ஒளிர்கின்றன. என் தெய்வமே.இடுங்கி புன்னகைக்கும் அவ் விழிகளில் என்ன?
அவன் தேடிக் கொண்டருந்த நேசம் அது தானா ?
உள்ளத்தில் மறைக்க எதுவுமற்ற சிநேகம். வா என்று கைகளைப்பற்றி நதியோரங்களில் கிளிஞ்சல்கள் சேகரிக்க அழைத்துச்செல்லும் நட்பு. உள்ளங்கையில் மறைத்து வைத்திருந்த தேனிட்ட பண்டத்தை பாதிக் கடித்து எச்சிலுடன்  தரும் தோழமை. அவன் தேடியது இதனைத்தானா ?
மரியாளின் மடியின் வாசம். ஆவியணைக்கும் பேரன்பு. அவளைப் பார்த்து, “சகி” என்று புன்னகைக்கிறான்.
கற்களும் பாறைகளும் நிறைந்த பாதைகளில் நடந்து நடந்து சோர்ந்து போகும் அவன் பாதங்கள் அன்று புத்துணர்வடைகின்றன. யாரிடமும் ஒன்றாத அவன் தனிமை அவளின் கருணை நிறை அன்பில் கரைகிறது. உடைக்கப்படும் புனிதங்கள். கட்டளைகள் மீறப்படுகின்றன. அவள் உன்மத்தமாகிறாள்…
சுருண்ட அவன் மயிர்கள், ஒளிவீசும் அவ்விழிகளின் தூய நேசம், கூரிய நாசி, அழுந்திய உதடுகள், ஒளிரும் பற்களின் வசீகரம், நீண்ட கரங்கள், நடந்து வலுப்பெற்ற கால்கள், என் பிரியமே அரவணைக்கும் அவன் தோள்கள்…
அவள் உடைகிறாள்..
அவன் நேசம் அவளைத் தூய்மையாக்குகிறது
பழுப்பு வண்ண அவன் கூரிய  விழிகளில் கண்ணீர்.
“ஏன் அழுகிறாய் என் நண்ப…. ?”
தலையில் சூட்டப்படும் முள் குத்திக் கிழிக்கிறது, உள்ளங்கைகளில் நீ தழுவும் பாதங்களில் அறையப்படும் ஆணிகள், பெரும் துயர், விலாவில் இறங்கும் கூரிய ஈட்டி  கனக்கும் சிலுவை…
என் சகி எப்படித் தாங்குவேன் இப்பாடுகளை.. ?
என்னை விட்டு நீங்காதா இப்பாத்திரம்…?
என் இறைவனின் கட்டளையை மீற முடியாதவன்…
என் நேசனே நான் வருகிறேன் உன்னுடன், உன் பாடுகளுடன் .. இச்சிறியவளின் சிநேகம் உன்னுடன் என்றும்… என் பிரிய தச்சனே…
கொல்கதா மேட்டில் அவன் பேருயிர் பிரிகையில்  அவள் முகமே அவனுடன்…
அன்பு ததும்பும் நீல விழிகள்…நண்ப எனும் அவள் குரல்…
மன்னனின் அரண்மனையில் கண்ணீர் விட்டழுத எஸ்தரின் வலு, பொறுமையின் பாத்திரம், அற்பமாய் எண்ணப்பட்ட  ரெபேக்காளின் தூய்மை, தன் சகோதரரால் விற்கப்பட்ட தபராவின் கண்கள் … கன்னியாய் கருத்தரித்த மரியாவின் அவமானம்,இழிவு…
என் நேச அன்னையே,பிரியசகியே…உன்னை விட்டகல்கிறேன்..,
வருவாயா என்னுடன்….பேரமைதியே…
***

3 Replies to “தச்சன்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.