சுட்டுக் குறிப்புக்கு அப்பால்

லோரி மூர்

Shadows_1


அவளுடைய புத்தி பிசகிய மகனுக்குப் பொருத்தமான பிறந்த நாள் பரிசு என்ன என்பது பற்றி, மூன்று வருடங்களில் மூன்றாவது தடவையாக அவர்கள் பேசிக் கொண்டார்கள். நடைமுறையில் அவர்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டவை மிகவும் சிலதான்: அனேகமாக எந்தப் பொருளுமே ஒரு ஆயுதமாக மாற்றப்படக் கூடியது என்பதால், அனேகப் பொருட்களையும் முன்னறையில் அலுவலரிடம் விட்டு விட்டுப் போக வேண்டும் என்றிருந்தது. பிறகு, தேவை என்று வேண்டுகோள் விடுத்தால், மஞ்சள் முடியும் பெரிய உருவும் கொண்ட ஒரு உதவியாளர், அந்தப் பொருட்களுக்குக் காயப்படுத்தும் சாத்தியங்கள் உண்டா என்பதை முன்னதாகப் பரிசீலித்து விட்டு, எடுத்து வருவார். பீட் ஒரு கூடை அளவு பழக்கூழ்களைக் கொணர்ந்திருந்தார், ஆனால் அவை கண்ணாடி ஜாடிகளில் இருந்தன, அதனால் அனுமதிக்கப்படவில்லை.” எனக்கு அது மறந்து விட்டது,” என்றார் அவர். நிறவாரியாக அவை அடுக்கப்பட்டிருந்தன, பளிச்சென்றிருந்த மார்மலேடிலிருந்து, க்ளௌட்பெர்ரிக்குப் பிறகு அத்திப் பழம், ஏதோ அவற்றில் இருந்தவை, படிப்படியாக உடல் நிலை மோசமாகி வரும் ஒரு நபரின் சிறுநீர் மாதிரிகள் கொண்டவை என்பது போல. அவை பறிமுதல் செய்யப்பட்டது நல்லதுதான், என்று அவள் நினைத்தாள். கொண்டு வர ஏற்றதாக வேறு ஏதாவதை அவர்கள் இனிக் கண்டு பிடிப்பார்கள்.
அவளுடைய மகனுக்குப் பன்னிரெண்டு வயதாகும்போது அவன் குழம்பியவனாக, சன்னமாக முணுமுணுப்பதைத் துவங்கியபோது, ஏற்கனவே அவன் பல் துலக்குவதையே நிறுத்தி விட்டிருந்தான். அப்போதே பீட் அவர்கள் வாழ்வில் நுழைந்து ஆறாண்டுகள் ஆகி இருந்தன, இப்போது இன்னும் நான்காண்டுகள் கடந்து விட்டன. பீட்டிடம் அவர்களுக்கு இருந்த அன்பு நெடியது, நிறைய வளைவு நெளிவுகள் கொண்டது, ஆனால் ஒரு போதும் நிஜமாக நின்று போனதில்லை. அவளுடைய மகன் அவரை மாற்றுத் தந்தையாகத்தான் நினைத்தான். அவளும், பீட்டும் சேர்ந்து வயதானவர்களாக ஆகிக் கொண்டிருந்தனர், ஆனால் ஒல்லியாகத் தெரிவதற்காக அவள் அணிந்த, சட்டை போன்ற கருப்பான ஆடைகளாலும், இப்போது நரைக்கத் துவங்கியிருந்த, சாயம் பூசப்படாது, ஸ்பானியப் பாசி போல இழைகள் தொங்கிக் கொண்டிருக்கும்படி அவ்வப்போது அள்ளி உயர்த்திக்  கொண்டை ஊசிகளால் பிணைத்து நிறுத்தப்பட்ட அவளுடைய தலைமுடியாலும், அவளிடம்தான் வயதானதன் தாக்கம் கூடுதலாகத் தெரிந்தது. அவளுடைய மகனின் ஆடைகள் உரியப்பட்டு, ஒரு மேலங்கி அணிவிக்கப்பட்டு அவன் ஒரு மனநல மனையில் அனுமதிக்கப்பட்ட பின், அவள் தன் கழுத்து ஆரங்களையும், காதணிகளையும், கழுத்துச் சவுக்கங்களையும்- தன்னுடைய எல்லா முட நீக்கக் கருவிகளையும் என்று சிரிப்பூட்டவென்று பீட்டிடம் அவள் வருணித்தாள்- நீக்கி விட்டாள், தாழ்ப்பாள் இருந்த ஒரு விசிறிக் கோப்பில் தன் படுக்கைக்குக் கீழே போட்டு வைத்தாள். அவனைப் பார்க்கச் செல்லும்போது அவற்றை அணிய அவளுக்கு அனுமதி இல்லை, அதனால் இனிமேல் அவள் அவற்றை ஒருபோதுமே அணிய மாட்டாள், தன் மகனுடன் ஒரு விதமான தோழமையை அது காட்டும், அவளிடம் ஏற்கனவே இருந்த விதவைத்தனத்தின் மீது இன்னொரு விதவைத்தனத்தை இது சுமத்தும். தன் வயதினரான இதர பெண்களைப் போல அல்லாமல் (பகட்டான உள்ளாடைகளையும், மின்னுகிற ஆபரணங்களையும் அணிந்து, வயதை மீற அவர்கள் அளவு மீறிய முயற்சி செய்தனர்), அவள் அந்த வகை முயற்சிகளெல்லாம் கேவலமாக இருப்பதாக இப்போது உணர்ந்தாள், வெளி உலகில் அவள் இப்போது ‘ஆமிஷ் பெண்’ணாக (ஒப்பனையற்று) சென்றாள், அல்லது ஒருவேளை இன்னும் மோசமாக, வசந்தகாலத்தின் இரக்கமற்ற ஒளி அவள் மீது வீசும்போது, ஓர் ஆமிஷ் ஆண் போலத் தோற்றம் தந்து சென்றாள். அவள் மூதாட்டியாகத் தெரியப் போகிறாள் என்றால், பழைய நாட்டின் முழு பிரஜை போலத் தெரிய வந்தால்தான் என்ன! “எனக்கு, நீ எப்போதுமே அழகாகத்தான் தெரிகிறாய்,” என்று பீட் இப்போதெல்லாம் சொல்வதில்லை.
சமீபத்தியப் பொருளாதாரச் சரிவில் பீட் தன் வேலையை இழந்திருந்தார். ஒரு கட்டத்தில், அவளோடு சேர்ந்து வாழலாம் என்று கூட ஒரு எண்ணம் இருந்தது, ஆனால் அவளுடைய பிள்ளையின் உபாதைகள் ஆழப்படத் துவங்கியது அவரைப் பின் வாங்கச் செய்தன. அவளைத் தான் காதலிப்பதாகவே அவர் சொன்னார், ஆனால் அவளுடைய வாழ்விலோ, வீட்டிலோ அவருக்குத் தேவையான இடத்தை அவரால் கண்டு பிடிக்க முடியவில்லை என்றார். (அவளுடைய மகனை அவர் குறை சொல்லவில்லை- இல்லை, அப்படித்தான் சொன்னாரா?) அவளுடைய மகன், வீட்டில் இருந்தபோது, பெரிய போர்வைகளோடும், பைண்ட் அளவு ஐஸ்க்ரீம் இருந்த காலி டப்பாக்களோடும், எக்ஸ்-பாக்ஸ், டிவிடிகளோடும் வசித்த அறையை ஓரளவு வெளிப்படையான கவரும் நோக்கம் கொண்டும், வெறுப்பு தொனிக்கும் குறிப்புகளோடும் அவர் பார்த்த பார்வைகள்!
சில சமயங்கள் வாரக்கணக்கில் பீட் எங்கே போனார் என்பது இப்போதெல்லாம் அவளுக்குத் தெரிவதில்லை. அதைப் பொருட்படுத்தாமல் இருக்க முயல்வதும், ஏதும் கேள்வி கேட்காமல் இருப்பதும் அக்கறையும் பொறுப்பும் கொண்ட அன்பான செய்கை என்று அவள் நினைத்தாள். ஒரு தடவை தொடுகைக்கு அத்தனை ஏக்கம் எழவும், அவள் தெரு முனையில் இருந்த ‘அழுத்தத்துக்கு ஆளான மரங்கள்’ என்ற சலொனிற்குப் போய் தன் தலைமுடியைக் கழுவிக் கொண்டாள். பஃபலோ நகரில் இருந்த தன் சகோதரனையும், அவன் குடும்பத்தையும் பார்க்கச் சென்ற போது, விமான நிலையத்திலிருக்கும் பாதுகாப்பாளர்களிடம், எந்திரங்களின் கதிர்வீச்சால் ஊடுருவப்படுவதற்குப் பதிலாக, உடலைத் தடவிச் சோதிப்பதற்கும், சோதிப்புக் கம்புகளால் தட்டப்படுவதற்கும் ஆட்பட விருப்பம் தெரிவித்திருந்தாள்.
”பீட் எங்கே?” தனியாக அவள் பார்க்கச் செல்லும் தருணங்களில் அவளுடைய மகன் கூவினான், அவனுடைய முகம் ஆக்னி[i] தொற்றால் சிவந்திருக்கும், அவனுக்குக் கொடுக்கப்பட்ட மருந்துகளால் அவன் முகம் உப்பியும் அகன்றும் இருக்கும், அம்மருந்துகள் மாறிக் கொண்டே இருந்தன, மறுபடி மாற்றப்பட்டன. அப்போது அவள், பீட் இன்று நிறைய வேலையாக இருந்தார், சீக்கிரமே, மிகவும் சீக்கிரமே, ஒரு வேளை அடுத்த வாரமே அவர் வருவார், என்று சொல்வாள். தாய்மையின் தலை சுற்றல் அவளை அப்போது சூழும், அறை சுழல்வதாகத் தெரியும், மகனின் கரங்களில் இருந்த மெல்லிய தழும்புகள் சில நேரம் பீட்டின் பெயரை எழுதிக் காட்டுவது போலத் தோன்றும், தகப்பன்களை இழப்பது தோலின் அல்ஜீப்ராவாக அனாதிகாலமாகப் பொறிக்கப்பட்டிருப்பது போலத் தெரியும். ரங்கராட்டினமாகச் சுழலும் அறையில், அந்த வெள்ளையான வலையாகத் தெரியும் கோடுகள், முகாமிடும் மைதானங்களில் காணும் நாகரீகமற்ற சுவர்க்கிறுக்கல்களைப் போலிருந்தன- அந்த மைதான வெளிகளின் பிக்னிக் மேஜைகளிலும், மரங்களிலும் இளைஞர்கள் இறுக்கமான எழுத்துகளில் ‘பீஸ்’ என்றும்,‘ஃபக்’ என்றும் செதுக்கி இருப்பார்கள். அதில் ‘ஸி’ என்ற எழுத்து ஒரு சதுரத்தின் முக்கால் பங்காகத் தெரியும். இப்படி (தோலைச்) சிதைப்பதே ஒரு மொழி. அல்லது மறுதலை.[ii] இந்தத் தோல் வெட்டுகள் அங்கிருந்த பெண்களுக்கு இவனை வசீகரமாக்கின. அப்பெண்களில் பலரும் இப்படித் தோலை வெட்டிக் கொள்பவர்களாகவே இருந்தனர். அவர்கள் பையன்களில் இப்படி வெட்டிக் கொள்பவர்களைப் பார்த்ததில்லை. அதனால் சிகிச்சை நிமித்தம் கூடிப் பேசும் நேரங்களில், அவன் பிரபலமாக இருந்தான். அதை அவன் பொருட்படுத்தவும் இல்லை, ஒருவேளை நிஜமாகவே கவனிக்கவும் இல்லை. யாரும் பார்க்காதபோது சில சமயங்களில் அவன் தன் பாதங்களின் அடிப்பகுதிகளை, கைவினைப் பொருட்கள் இருந்த அறையில் கிட்டும் புதுக் கருக்குள்ள காகித விளிம்புகளால் வெட்டிக் கொண்டான்.  கூட்டச் சிகிச்சை நேரங்களில், உள்ளங்கைகளைப் பார்த்து ஜோசியம் சொல்வது போல பெண்களின் பாத அடிப் பகுதிகளைப் படிப்பதாகப் பாவனை செய்தான். புது நபர்கள் அவர்கள் வாழ்வில் வரப்போவதாகவும், அது காதலை நோக்கிச் செல்லும் என்றும் ஆரூடம் சொன்னான் – டோமான்ஸ் என்று அவற்றை அவன் அழைத்தான்[iii] –  சில நேரங்களில் தன் எதிர்காலத்தையும் அவர்கள் அங்கு கொணர்ந்த வெட்டுகளில் பார்ப்பதாகவும் சொன்னான்.
இப்போது அவளும், பீட்டும் பழக் கூழ்கள் இல்லாமல் அவளுடைய மகனைப் பார்க்கச் சென்றார்கள். ஆனால் அவளுடைய புத்தக அலமாரியிலிருந்து உருவிய, டானியல் பூன் பற்றிய, மிருதுவான விளிம்புகள் கொண்ட ஒரு புத்தகத்தைக் கொண்டு சென்றார்கள், அது அனுமதிக்கப்பட்டிருந்தது. அந்தப் புத்தகம் தனக்கு ஏதோ செய்திகள் கொடுக்கிறது என்று அவள் மகன் நம்பினான் என்ற போதும், அது என்றோ கடந்த நாளில் வாழ்ந்த ஒரு நபரைப் பற்றிய கதை என்ற போதும் அப்படி நம்பினான், அது தன்னுடைய சொந்த சோகங்களையும், எல்லா விதப் பாழ்வெளியையும், தோல்வியையும், கடத்தலையும், தான் எதிர்கொண்டதில் இருந்த சாகசத்தன்மையையும் சொல்லும் கதை என்றும் நம்பினான். தன் சொந்த வாழ்க்கையை அந்தப் புத்தகத்தின் மீது போர்த்தி விட முடியும் என்றும், அப்புத்தகமே அவனைப் பற்றிய கதைகளை வெளிப்படுத்த உதவும் ஒரு மேன்மையான உள்கட்டடம் என்பது அவன் கருத்து. கூட்டினால் அவனுடைய வயதைக் காட்டும் எண்களுடைய பக்கங்களில் இதற்கான துப்புகள் கிட்டும்: 97,88, 466. அவன் வாழ்க்கைக்கு வேறு சற்றே ஒளிவான சுட்டுகளும் இருக்கும். அவை எப்போதுமே இருந்தன.
அவர்கள் வருகை தந்தவர்களுக்கான மேஜையில் சேர்ந்து அமர்ந்தனர், அவளுடைய மகன் புத்தகத்தை அப்பால் வைத்தான், அவர்கள் இருவரையும் நோக்கிச் சிரிக்க முயன்றான். அவன் கண்களில் இன்னமும் கொஞ்சம் இனிமை எஞ்சி இருந்தது, பிறந்தபோது அவனிடம் இருந்த இனிமை அது, அவ்வப்போது கடும் சினம் அவற்றின் குறுக்கே தாறுமாறாகத் தாவிக் கடக்கும் என்ற போதும். யாரோ அவனுடைய மங்கலான பழுப்பு நிற முடியை வெட்டி இருந்தனர்- அல்லது, குறைந்த பட்சம், வெட்டி விட முயன்றிருந்தனர். ஒரு வேளை, அலுவலர் ஒருவர் அவனருகே கத்திரிக்கோல் அதிக நேரம் இருப்பதை விரும்பாமல், அவசரமாக முடியை வெட்டினார் போலும். உடனே தாவி அகன்றிருப்பார், மறுபடி கிட்டே வந்து, முடியைப் பிடித்து வெட்டி விட்டு, பின்னோக்கித் தாவி இருப்பார். பார்க்க அப்படித்தான் இருந்தது (வெட்டப்பட்ட முடி). அவளுடைய மகனுக்கு அலையலையான முடி, கவனமாக வெட்டப்பட வேண்டியது அது. இப்போதோ அது சரிந்து வழிந்து விழவில்லை, ஆனால் தலைக்கு நெருக்கமாக இருந்தது, பல கோணங்களில் நீட்டிக் கொண்டிருந்தது, ஒருக்கால் அது ஒரு அம்மாவைத் தவிர வேறு யாருக்கும் அத்தனை பொருட்படுத்தக் கூடியதாகத் தெரியாமலிருக்கலாம்.
அவள் மகன் பீட்டிடம் கேட்டான், “ஆமாம், நீங்கள் எங்கே போயிருந்தீர்கள்?”
”நல்ல கேள்வி,” பீட் சொன்னார், ஏதோ அதை மெச்சுவதால் அந்தக் கேள்வியைக் காணாமல் அடித்து விடலாம் என்பது போல. இப்படி ஓர் உலகில் மனிதர்கள் எப்படி நலமான மனதோடு இருக்க முடியும்?
”எங்களைப் பார்க்காமல் வருத்தமாக இருந்ததா?” பையன் கேட்டான்.
பீட் பதில் சொல்லவில்லை.
“இரவு நேரத்தில் மரங்களின் கருப்பு நாளங்களைப் பார்க்கும்போது என்னை நீங்கள் நினைத்துக் கொள்கிறீர்களா?”
“அப்படி நேர்கிறது என்றுதான் நினைக்கிறேன்.’ பீட் அவனை உற்று நோக்கினார், தன் இருக்கையில் சங்கடப்படாமல் இருப்பதைத் தவிர்ப்பதற்காக. “நான் எப்போதுமே நீ இங்கே சரியாக இருக்கிறாய் என்றும், இவர்கள் உன்னை நல்லபடியாக நடத்துகிறார்கள் என்றும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறேன்.”
“மேலே மேகங்களையும் அவை வைத்துக் கொண்டிருக்கும் எல்லாவற்றையும் உற்றுப் பார்க்கும்போது என் அம்மாவை நினைப்பீர்களா?”
பீட் மறுபடி மௌனத்தில் அடங்கினார்.
”சரி, அவ்வளவு போதும்,” மகனிடம் அவள் சொன்னாள், அவன் முகமாறுதலுடன் அவளை நோக்கித் திரும்பினான்.
“யாருடைய பிறந்த நாளுக்காகவோ இன்று மாலை இங்கு கேக் ஒன்று இருக்கப் போகிறதாம்,” என்றான்.
“அது அருமையாக இருக்குமே!” என்றாள் அவள், சிரித்தபடி.
“மெழுகுவர்த்திகள் கூடாது, அது தெரியுமில்லையா. முள் கரண்டிகளும் கிடையாது. நாங்களெல்லாம் கேக்கின் மேல் பாகை அப்படியே கையால் அள்ளி எங்கள் கண்களில் அப்பிக் கொண்டு குருடாக வேண்டும் போலிருக்கிறது. மெழுகுவர்த்தியை ஏற்றும் நேரத்தில், புகையை அந்தக் கணங்கள் ஏந்திக் கொண்டு போகின்றன என்றாலும், காலம் எப்படி அசைவே இல்லாமல் நிற்கிறது, அதைப் பற்றி எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அது சுடுகிற அன்பைப் போல இருக்கும். எத்தனையோ பேர்களிடம் அவர்களுக்குச் சிறிதும் தகுதியே இல்லாத பொருட்கள் இருக்கின்றன, அவை எல்லாம்தான் எத்தனை அபத்தமானவை என்பதைப் பற்றி எல்லாம் எப்போதாவது வியந்திருக்கிறீர்களா? யாரிடமும் ஒரு போதும், ஒரு போதும் ஒரு போதும் எப்போதுமே சொல்லாமல் இருந்தால் உங்களுடைய ஓர் ஆசை உண்மையாகவே பலிக்கக் கூடும் என்று நீங்கள் நிஜமாக நம்புகிறீர்களா?”
 
வீட்டுக்குத் திரும்பும் பயணத்தில், அவளும் பீட்டும் ஒரு வார்த்தை கூடப் பேசிக் கொள்ளவில்லை, காரை வழி நடத்தும் சக்கரத்தை இறுகப் பிடித்திருக்கும், மூட்டு வாதம் பாதித்த, நன்கு பழக்கமான கட்டை விரல்கள் கொஞ்சம் குரங்குத்தனமாக வளைந்து கீழ்ப்புறம் இருக்க, வயதாகி வரும் தன் கைகளைப் பார்க்கும் ஒவ்வொரு தடவையும், அவரவரின் நம்பிக்கையின்மை வேறு வேறு விதமானது, பகிரப்படாதது என்று இருந்தாலும், தாம் இருவரும் என்னவொரு நம்பிக்கை சிறிதும் அற்ற நிலையில் இருக்கிறோம் என்பதை, மறுபடி புதியதாக அவள் உணர்ந்தாள், அப்போது அவள் கண்கள் மெலிதாகக் குத்தும் கண்ணீரின் அழுத்தத்தை உணர்ந்தன.
சென்ற தடவை அவள் மகன் அதை முயன்றபோது, அவனுடைய முயற்சியின் உத்தி, மருத்துவரின் வருணனையில், இருண்மையான நோய்ப்பட்ட விதமாக, அதிபுத்திசாலித்தனமாக இருந்தது. அவன் அதில் வெற்றி பெற்றிருக்கக் கூடும், ஆனால் ஒரு சக நோயாளி, அவனுடைய குழுவிலிருந்த ஒரு பெண், கடைசி நிமிடத்தில் அவனைத் தடுத்து விட்டிருந்தாள். ஆயின் ரத்தம் இருந்தது, மெழுகித் துடைக்கப்பட வேண்டியதாயிற்று. கொஞ்ச காலத்துக்கு அவள் மகன் சுய கவனத்தைத் திருப்பக் கூடிய வலியைத்தான் விரும்பினான், ஆனால் நாளோட்டத்தில் கடைசியில் அவன் தன்னுள் ஒரு துளையிட்டு, அதன் வழியே தப்பித்து ஓடிடவே விரும்பினான். வாழ்க்கை, அவனைப் பொறுத்த வரை, உளவு பார்ப்பவர்களாலும், முனைப்புள்ள சதித்திட்டங்களாலும் நிறைந்திருந்தது. ஆனால் சில நேரம் உளவாளிகளும் தப்பித்து ஓடி விடுவார்கள், யாராவது அவர்களைத் துரத்திப் போக வேண்டி இருக்கும், நீண்டு கிடக்கும் கனவு நில வெளிகளை எல்லாம் கடந்து, இளங்காலை நேரத்தில் எழும் மலைகளான அர்த்தப்படுத்தல்களுக்குள் ஊடுருவ வேண்டி வரும். அதுவும் புதிர்தான், ஏனெனில் இப்படிச் செய்வதே அவற்றிலிருந்து முற்றிலும் தப்புவதற்காகத்தான் என்றிருக்கும்.
ஒரு பேய்மழை தொலைவில் எழுந்து கொண்டிருந்தது, மின்னல் அதன் முனைப்போடு கூடிய வெட்டுப் பாய்ச்சல்களால் மேகங்களைக் கடந்தது. தொடுவான்கள் நொறுக்கப்படக் கூடும் என்பதற்கு இத்தனை வெட்ட வெளிச்சமான நிரூபணம் அவளுக்குத் தேவைப்படவில்லை. செய்திகளும், நொறுங்கிய சங்கேதக் குறியீடுகளுமாகக் கொண்ட நிரூபணம், ஆனாலும் அது அங்கே இருந்தது. மின்னல் ஒரு பக்கம் தெறித்துக் கொண்டிருக்கையிலேயே, வசந்த காலத்துப் பனிப்பொழிவு வீழத் துவங்கியது. பீட் முன்கண்ணாடியைத் துடைக்கும் தகடுகளை ஓட விட்டார், துடைக்கப்படும் அரை வட்டங்களூடே அவர்கள் காரின் முன்னால் இருண்டபடி போய்க் கொண்டிருக்கும் சாலையைப் பார்க்கவென்று. அவளுக்குத் தெரியும், உலகம் அவளிடம் பேசுவதற்காகப் படைக்கப்படவில்லை என்று. ஆனாலும், அவளின் மகனுக்குத் தோன்றியது போலவே, அவளுக்கும் அவை அப்படித் தெரிந்தன. உதாரணமாக, பழ மரங்கள் தக்க காலம் வருமுன்னரே பூத்துக் குலுங்கின- அவர்கள் கடந்த பழத் தோட்டங்கள் இளஞ்சிவப்பாகத் தெரிந்தன- ஆனால் அந்த காலம் தவறி முன் கூட்டி எழுந்த கதகதப்பில், தேனீக்களைக் காணோம், எனவே பழம் ஏதும் வராது. இந்தப் புயலிலேயே தொங்குகிற பூக்களெல்லாம் உதிர்ந்து விடும்.
அவள் வீட்டில் அவர்கள் வந்து சேர்ந்து வீட்டுக்குள் சென்றதும், பீட் முன்னறைக்குச் செல்லும் வழியிலிருந்த கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டார். ஒருக்கால் பார்வைக்குத் தெரிவதில் ஆவியைப் போல இருந்தாலும், தான் இன்னும் உயிரோடு இருக்கிறோம் என உறுதி செய்து கொள்வது அவருக்குத் தேவைப்பட்டிருக்கலாம்.
“குடிக்க ஏதாவது வேண்டுமா உங்களுக்கு?” அவள் கேட்டாள், அவர் தங்குவார் என்ற சிறு நம்பிக்கையோடு. “என்னிடம் கொஞ்சம் வாட்கா இருக்கிறது. அருமையான வெள்ளை ரஷ்யன் ஒன்றை என்னால் தயாரிக்க முடியும்!”
“வெறும் வாட்கா,” அவர் விருப்பமின்றிச் சொன்னார். “நேரடியானதாக.”
அவள் வாட்காவைத் தேட ஃப்ரீஸரைத் திறந்தாள், அதை மூடும்போது ஒரு கணம், ஃப்ரிட்ஜின் கதவில் அவள் ஒட்டி இருந்த ஒளிப்படம் தாங்கிய காந்தங்களைப் பார்த்தபடி, அப்படியே நின்றாள். ஒரு குழந்தையாக அவளின் மகன் அனேகக் குழந்தைகளை விடச் சந்தோஷமுள்ள குழந்தையாகத்தான் இருந்தான். ஆறு வயதில், அவன் நட்சத்திரச் சிதறல்கள் போல கால் கைகளை வீசி ஆட்டிக் கொண்டு, கச்சிதமான இடைவெளிகள் கொண்ட பற்கள் ஒளிர, தலைமுடி தங்கச் சுருள்களாக வழிய தொடரும் சிரிப்புடன், பாவனைகளை எல்லாம் செய்து கொண்டுதான் இருந்தான். பத்து வயதில் அவனிடம் சந்தேகத்துக்குரிய வகையில் கவலையும், பயமும் கொண்ட பாவங்கள் தெரிந்தன. அவனுடைய ஒன்று விட்ட சகோதர சகோதரிகள் அருகில் இருக்கையில், அவன் கண்களில் இன்னும் ஒளி இருந்தது.  அங்கே, பூசினாற்போல இருந்த ஒரு பதின்ம வயதினனாக, பீட்டைச் சுற்றிய அவனுடைய கரங்களோடு, அவன் இருந்தான். அதோ அங்கே, மூலையில், இன்னும் ஒரு சிறு குழந்தையாக, அவனுடைய வடிவான, கண்ணியமான தோற்றம் தரும் அப்பாவோடு, அவரை இப்போது அவனுக்கு நினைவில்லை, ஏனெனில் அவர் வெகு நாள் முன்பு எப்போதோ இறந்திருந்தார். இதை எல்லாம் ஏற்றுக் கொள்ள வேண்டியதாக இருந்தது. வாழ்வது என்பது ஒரு மகிழ்ச்சியின் மீது இன்னொன்றாக அடுக்கப்படுவது இல்லையே. அது போகப் போக வலிகள் குறையும் எனும் நம்பிக்கை மட்டுமே, சீட்டுக் கட்டு விளையாடுவதைப் போல ஒரு நம்பிக்கையை இன்னொரு நம்பிக்கை மீது போட்டு விளையாடப்படுவது. ஆட்டத்தில் ஒரு எதிர்பாராத திருப்பமாக, ராஜாக்களும், ராணிகளும் அவ்வப்போது கைக்கெட்டுவது போல, அன்பான செய்கைகளும், கருணை பாலிப்புகளும் கிட்டுமென்ற விருப்பத்தோடு ஆடப்படுவது. நாமே அந்தச் சீட்டுகளை வைத்திருக்கிறோமோ இல்லையோ: அவை எப்படியுமே முன்னே விழத்தான் செய்யும். மென்மை என்பது அதில் நுழைவது இல்லை, எப்போதாவது சிதிலமடைந்ததாகக் கிட்டலாம்.
”உங்களுக்கு ஐஸ் வேண்டாமா?”
“வேண்டாம்,” பீட் சொன்னார். “வேண்டாம், நன்றி.”
அவள் இரண்டு வாட்கா நிரம்பிய கண்ணாடிக் குடுவைகளை சமையலறை மேஜையில் வைத்தாள். அவருக்கெதிரே ஒரு நாற்காலியில் அமிழ்ந்தாள்.
“ஒரு வேளை இது உங்களுக்குத் தூங்குவதற்கு உதவலாம்.” அவள் சொன்னாள்.
“எதுவுமே அதற்கு உதவுமா என்று எனக்குத் தெரியவில்லை,” அவர் சொன்னார், ஒரு வாய் உறிஞ்சிக் குடித்தபடி. தூக்கமின்மை அவரை உபாதை செய்தது.
“அவனை இந்த வாரம் வீட்டுக்கு அழைத்து வரப் போகிறேன்,” அவள் சொன்னாள். “அவனுக்கு அவனுடைய வீடும், அவனுடைய அறையும் திரும்ப வேண்டி இருக்கிறது. அவன் இப்போது யாருக்கும் ஆபத்து விளைவிக்கக் கூடியவன் இல்லை.”
பீட் சத்தம் போட்டு உறிஞ்சியபடி, இன்னும் கொஞ்சம் குடித்தார். இதிலெல்லாம் அவருக்கு ஏதும் பங்கெடுக்க விருப்பமில்லை என்று அவளுக்கு உணர முடிந்தது, ஆனாலும் தனக்கு வேறேதும் தேர்வு இல்லை, மேலும் தொடரத்தான் வேண்டும் என்பது போல அவள் உணர்ந்தாள். “நீங்கள் ஒருக்கால் உதவ முடியலாம். அவன் உங்களை நம்புகிறான்.”
“உதவுவது என்றால் எப்படி?” சிறிது கோபத்துடன் பீட் கேட்டார். மேஜையின் மீது வைத்த அவருடைய குடுவையின் கிளிங்கென்று ஒலித்தது.
“நாம் ஒவ்வொருவரும் இரவில் ஒரு பகுதியை அவனோடு கழிக்கலாம்.” எச்சரிக்கையோடு சொன்னாள்.
தொலைபேசி கிணுகிணுத்தது. ரேடியோ ஷாக் எனும் கடையில் வாங்கிய (மலிவான) தொலைபேசி எப்போதும் கெட்ட சேதியைத்தான் கொணர்ந்தது, அதனால் அதன் கிணுகிணுப்பு, குறிப்பாக மாலை நேரங்களில், அவளை அதிரவே வைத்தது. அவள் தன் நடுக்கத்தை மறைத்துக் கொண்டாள், ஆனால் அவள் தோள்கள் ஒடுங்கின, நிற்கையில் அவள் ஏதோ ஓர் அடி விழுவதை எதிர்பார்த்தவள் போல.
இதயம் படபடக்க, மூன்றாவது ஒலிப்பில் அதை எடுத்துப் பதில் சொன்னவள், “ஹெலோ?” என்றாள். ஆனால் தொலைபேசியின் மறு புறம் இருந்த நபர் தொடர்பைக் கத்திரித்தார். அவள் மறுபடி கீழே அமர்ந்தாள். “அது ஏதோ தப்பான எண் என்று நினைக்கிறேன்,” என்றவள், கூடுதலாக சொன்னாள், “ஒருவேளை உங்களுக்கு இன்னும் வாட்கா வேண்டி இருக்குமோ?”
”கொஞ்சம்போல. பிறகு நான் போகணும்.”
அவள் அவருக்கு இன்னும் சிறிது ஊற்றினாள். தான் என்ன சொல்ல வேண்டுமோ அதைச் சொல்லி விட்டதால், மேலும் பேசி அவரைச் சம்மதிக்க வைக்க வேண்டுமென அவள் நினைக்கவில்லை. சரியான சொற்களைச் சொல்லி அவராகவே முன்னகர்ந்து வர அவள் காத்திருப்பாள். அவளை எச்சரிக்கை செய்த அற்ப புத்தி கொண்ட அவளுடைய சில நண்பர்களைப் போல இல்லாமல், பீட்டிற்கு ஒரு நல்ல பக்கம் இருந்தது என்று அவள் நம்பினாள், அதற்கென அவள் பொறுமையாகவே எப்போதும் இருந்தாள். வேறெப்படி அவளால் இருக்க முடியும்?
தொலைபேசி மறுபடி மணி அடித்தது.
“ஒரு வேளை தொலைபேசி வழியே விற்பவர்களாயிருக்கும்.”
” அவர்களை நான் வெறுக்கிறேன்,” என்றாள் அவள். “ஹெல்லோ?” என்று உரக்கச் சொன்னாள் தொலைபேசியில்.
இந்த தடவை அந்தப் புறம் கூப்பிட்டவர் தொடர்பைக் கத்திரித்த போது, தொலைபேசியில் இருந்த ஒளிரும் சிறு வில்லையைப் பார்த்தாள், பொதுவாக அது யார் கூப்பிட்டார்களோ அவர்களின் எண்ணைக் காட்ட வேண்டும்.
அவள் மறுபடி அமர்ந்தாள், தனக்குக் கொஞ்சம் வாட்காவை ஊற்றிக் கொண்டாள். “உங்கள் அடுக்ககத்திலிருந்து யாரோ கூப்பிடுகிறார்கள்,” என்றாள்.
“அவர் தன்னுடைய மீதி பானத்தை ஒரே மடக்கில் ஊற்றிக் கொண்டு விழுங்கினார். “நான் போகணும்,” என்றார், எழுந்தார். அவள் அவரைப் பின் தொடர்ந்தாள். கதவருகே, கைப்பிடிக் குமிழை அவர் பிடித்து அழுத்தமாகத் திருப்புவதைப் பார்த்தாள். அவர் கதவை அகலத் திறந்தார், கண்ணாடியை மறைத்தது அது.
“குட் நைட்,” என்றார் அவர். அவருடைய முகபாவம் ஏற்கனவே அவரை தூரத்தில் இருக்கும் ஏதோ இடத்துக்கு இட்டுச் சென்றிருந்தது.
அவள் தன் கரங்களை அவரைச் சுற்றிப் போட்டு அவருக்கு ஒரு முத்தம் கொடுக்கப் போனாள், ஆனால் அவர் தன் தலையைச் சட்டெனத் திருப்பியதில், அவளுடைய வாய் அவருடைய காதின் மீது படிந்தது. இதே போன்ற ஒரு தவிர்க்கும் நகர்தலை பத்து வருடங்கள் முன்பு அவர் செய்திருந்தார் என்பது அவளுக்கு நினைவு வந்தது, அது அவர்கள் முதல் தடவையாகச் சந்தித்த நேரம், அப்போது அவருக்கு ஏற்கனவே ஒரு தொடர்பு இருந்ததால் அவள் மேல்படியான உறவு ஆகவிருந்தது.
“என்னோடு வந்ததற்கு நன்றி,” என்றாள் அவள்.
“அதை நான் வரவேற்கிறேன்,” பதில் சொன்னார் அவர், பிறகு படிகளில் அவசரமாக இறங்கிச் சிறிது தூரத்தில் நடைபாதை விளிம்பில் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த தன் காரை நோக்கிச் சென்றார். அவள் அவரோடு கார் வரை நடக்க முயலவில்லை. தன் முன் கதவை மூடினாள், அதைப் பூட்டினாள், அப்போது தொலைபேசி மணி மறுபடியும் அடித்தது.
அவள் சமையலறைக்குச் சென்றாள். மூக்குக் கண்ணாடி இல்லாமல் அவளால் அதில் தெரியும் எண்ணைப் படித்திருக்க முடியவில்லை, அதனால் அது பீட்டுடைய எண் என்பதை அவள் இட்டுக் கட்டிச் சொல்லி இருந்தாள், ஆனால் எப்படியுமே அவர் அதை நிஜமாக்கி விட்டிருந்தார். இது ஒரு விதத்தில் பொய்களின் மாயாஜால வித்தையும், சாமர்த்தியமான ஊகங்களும், சாதுரியமான மறைப்புகளுமாகப் போயிற்று. இப்போது அவள் தன்னை உறுதியாக்கிக் கொண்டாள். தன் கால்களை அழுத்தமாக ஊன்றினாள்.
ஐந்தாவது தடவையாக மணி  அடித்தபின்  எடுத்து,“ஹெல்லோ?” என்றாள். கூப்பிட்டவரின் எண்ணைக் காட்ட வேண்டிய அந்தப் ப்ளாஸ்டிக் தகடு மசமசப்பாக இருந்தது, ஏதோ ஒரு வலைத் துணி அதன் மீது ஒட்டியிருந்தது போல. வெங்காயத்தின் மீது ஒட்டி இருக்கும் வெங்காயத் தோல் போல இருந்தது-அல்லது வெங்காயத்தின் படத்தின் மீது ஒட்டியது போல. ஒரு சித்திரிப்பின் மீது இன்னொரு சித்திரிப்பு.
”குட் ஈவ்னிங்,” உரக்க அவள் சொன்னாள். என்ன வெடித்து வெளி வரும்? ஒரு குரங்கின் கை. ஒரு பெண். ஒரு புலி.
ஆனால் அங்கு எதுவுமே இல்லை.
***
———————————————————-
‘த பெஸ்ட் அமெரிக்கன் ஷார்ட் ஸ்டோரிஸ்- 2013’ என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட கதை. பதிப்பாசிரியர் எலிஸபெத் ஸ்ட்ரௌட். பிரசுரகர்த்த நிறுவனம்: ஹௌடன் மிஃப்ஃபில் ஹார்கோர்ட். வருடம்:2013
இங்கிலிஷில் மூலக் கதையை எழுதியவர்: லொரி மூர். கதைத் தலைப்பு: ரெஃபெரென்ஷியல்.
தமிழாக்கம்: மைத்ரேயன் / ஜூலை 2016
————————————————————
[i]  ஆக்னி- பதின்ம வயதினர் வயதுக்கு வரும் தருவாயில் எதிர் கொள்ள நேரும் தோல் தொற்றில் ஒருவகை.
[ii] மொழியே சிதைப்புதான் என்ற பொருளில்.
[iii] ரொமான்ஸ் என்ற சொல்லின் மறு உருவாக்கம். டோ= கால் விரல்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.