ஏழு குறுங்கதைகள்

Processed with VSCOcam with t1 preset

“கரடி வேடம் போட்டவனின் வாழ்விலே ஒரு நாள்…சுட்டு விடாதே என்றான்”

– உலகின் மிகச் சிறிய கதை எனக் கூறுவர்.
எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் மிகப் புகழ்பெற்ற ஆறு சொற்கள் கொண்ட ஒரு வரிக் கதை:

“விற்பனைக்கு: குழந்தையின் காலணிகள், அணியவே இல்லை” (For sales: baby shoes, never worn).

இக்கதையின் சொல்லவொணாத் துயரம் மீண்டும் மீண்டும் ஒரு கலைடாஸ்கோப்பில் மாறி மாறி அமையும் துயர்தரு கலை வடிவத்தை ஒத்திருக்கின்றன.
அதே போல கௌதமாலா நாட்டின் சிறுகதை ஆசிரியர் அகஸ்டா மாண்டிரஸோ எழுதிய எட்டுச் சொற்கள் கொண்ட “எல் டைனோஸரியோ” என்ற ஒரு வரிக் கதை இப்படி நிகழ்கிறது.

“நான் எழுந்தபோது, டைனோஸர் இன்னும் அங்கேயே இருந்தது” (When I woke up, the dinosaur was still there).

மீள் வாசிப்பில் இது பல்வேறு சாத்தியங்களை நம் முன்னே திறக்கிறது. எல்லோராலும் ரசிக்கப்படும் சுஜாதா கூறிய ஒரு கதையையும் அதே வகையில் வாசிக்கலாம்:

“உலகின் கடைசி மனிதன் இருட்டறையில் உட்கார்ந்திருந்தான். கதவு பூட்டப்பட்டது”.

சிறுகதைகள், வாசிப்பவனை ஏதோவொரு வரியில் பிரதிக்கு அப்பால் அவனது மனத்தை விரித்துச் சென்று கதையின் முழுமையை அடையச் செய்பவை. அந்த ஏதோ வரியிலேயே சிறுகதை நிகழ்கிறது.
பெரும்பாலான சிறுகதைகளில் அது கடைசியில் நிகழ்ந்து ஆச்சரியம் அளிக்கிறது, வாசிப்பின்பத்தைக் கூட்டுகிறது.
வெகுசன ஊடகங்களிலும் வணிக இதழ்களிலும் வரும் கதைகளில் அந்த ஆச்சரிய வரியை நோக்கித் தள்ளுவதே வாசக மனத்திற்கும் சுவாரசியம் தருவதாகவும் எழுத்தாளனுக்கு சவால் மிக்கதாகவும் உள்ளது. ஆனால், சிறுகதையின் இடையிலும் இந்நிகழ்வு அல்லது திருப்பம் நடக்கச் சாத்தியமுள்ள கதைகளும் இருக்கின்றன.
குறுநாவல் போன்ற சிறுகதைகளும் (கிழவனும் கடலும்) வாசிப்பு பரப்பின் பல்வேறு சாத்தியங்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன.
ஒரு படிமத்திற்காகக் காத்திருக்கும் கவிஞன் போல அந்தத் திருப்பம் நிகழும் வரிக்கு வாசகன் படித்து முடிக்கும் வரை காத்திருந்தாலும் மனதளவில் விரைந்து செல்கிறான். ஊகிக்க முடியாத அந்த திருப்பமே சிறுகதையாக அவனுள் நிற்கிறது.
மற்றவை எல்லாம் அவன் எதிர்பார்த்தது போலவே இருப்பின் அற்புதங்கள் நிகழாத நிலையில் மேலதிக கற்பனைக்கோ சிந்தனைக்கோ வெளி அமையாத போது, அது சிறுகதையாகுமா என்ற கேள்வி எழுகிறது.
மொத்தக் கதையும் இறுதியில் முட்டி நின்று திரும்பி அலைபோல துவங்கிய இடத்திற்குச் சென்று மீண்டும் கதையை வேறு கோணத்தில் வேறு என்ன நடந்திருக்கச் சாத்தியம் என்பதான கேள்விகளை (எ.கா. பிரயாணம் – அசோகமித்திரன்) வாசகனுக்குள் ஏற்படுத்துவதே சிறுகதை எனில் சில வரிகளில் அது நிகழவும் வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டியிருக்கிறது.
சொல்லப் போனால் கதையின் கவிதைக் கணங்களே சிறுகதையாக பரிணமிக்கிறதோ என்று தோன்றுகிறது. அதுதான் சிறுகதை என்றால் அந்தக் கதைகள் எவ்வளவு சிறிதாகவும் இருக்க வாய்ப்புகள் உண்டு என்பதைப் பெருகி வரும் திடீர் கதைகள், குறுங்கதைகள், குட்டிக் கதைகள் என்று பல வகைமைகள் காண்பிக்கின்றன.
வார இதழ்களில் இது போன்ற கதைகள் வெறும் கேளிக்கையாக உள்ள நிலையில் குறுங்கதைகளிலும் ஒரு தீவிர இலக்கிய, தத்துவ விசாரங்கள், தரிசனங்கள் இருப்பதை உலகளவில் வெளியாகும் பல கதைகள் சொல்கின்றன.
இரண்டு அல்லது மூன்று வரிகளில் பேரன்பையும், பேரண்டத்தின் சிறு துளியையும் விளக்கும் ஹைக்கூவின் இடம் கவிதைகளில் முக்கியத்துவம் பெறுவது போல் மிகச் சில வரிகளில் ஒரு முழுமையான கதையைக் கூறுகின்றன.
அவ்வகையில் இந்த Micro Fiction எனும் குறுங்கதைகளை Micro Fiction Monday Magazine என்ற இணையதளத்தில் வாசிக்க நேர்ந்து, ஈர்ப்படைந்து, அதில் உந்தப்பட்டு மொழிபெயர்க்கப்பட்ட சில கதைகளே இவை.
இந்தக் கதைகள் பெரும்பான்மையானவை ஏற்கெனவே சிறுகதை, நாவல்கள், கட்டுரைகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களால் எழுதப்பட்டவை. இக் கதைகள் நீங்காத் துயரத்தையும், திடீர் தரிசனத்தையும், தத்துவ சிக்கலையும், வாழ்க்கையின் அபத்தத்தையும் மனித உறவுகளிடையே தெரியும் இருள் மௌனத்தையும் சுய பரிசோதனையையும் காட்டுவதாக உள்ளன. ஒரு மகத்தான கவிதை போல அக் கதைகளுக்கு இந்தக் குறுகிய வடிவம் ஏற்றதாக உள்ளதோ என எண்ணத் தோன்றுகிறது.


 
1. தாகம்
Thirst by Shih-Li Kow
மழை மேகங்களைத் தேடி நாங்கள் மீண்டும் நகர்ந்தோம். மிக மெதுவாகவே சென்றோம். பல நாட்களாக யாரோ சிலரால் விட்டுச் செல்லப்பட்ட சேற்றுத் தாரையைத் தவிர எதையும் காண முடியவில்லை.
ஆனால், இன்று கைவிடப்பட்ட இந்தப் பள்ளத்தாக்கின் ஒரு மரத்தில் சிக்கியிருந்த மேகக்கூட்டத்தை நாங்கள் பார்த்தோம். அதன் கீழே வாளிகளை வைத்து அந்த மரத்தை அசைத்தோம். எப்போதும் போல அம்மா கொஞ்சம் கடுமையாக நடந்து கொண்டாள்.
அது கசியும் போது அந்த மழையில் நாங்கள் நின்று கொண்டு வாய் நனைக்க வாய் பிளந்து நின்றோம். உடல் கிளர்ச்சியை மறைத்துக் கொள்ள தெரிவிக்கப்பட்டிருந்தாலும் என்னால் என் துடிப்பை நிறுத்த இயலவில்லை. முடிவிலா தாகத்துக்குப் பின் கிடைத்த ஒவ்வொரு சொட்டு நீரும் சுத்தமான போதை மருந்துதான்.


2. பிளேட்டோவின் குகை *
Plato’s Cave by Jennifer L Freed
கனவில் உங்கள் பிறந்தநாள். ஆனால், கேக் எதுவும் இல்லை. நீங்கள் அச்சமடைகிறீர்கள். உங்கள் மருத்துவர் ஏதோ முக்கியமான விஷயம் கூறியதை நீங்கள் மறந்துவிட்டீர்கள். நீங்கள் ஒரு குகையில் மறைந்திருக்கிறீர்கள். அங்கே வெம்மையாகவும் பாதுகாப்பாகவும் உணர்கிறீகள். அசைந்தாடும் நிழல்கள் எரியும் மெழுகுவர்த்தியை நினைவூட்டுகின்றன. இருளில் அரை விழிப்பில் உங்களுக்கு எதுவும் நினைவில்லை. எனினும் உங்கள் மருத்துவரைப் பற்றிச் சிறிது சிந்திக்கிறீர்கள். உங்கள் மண்டையோட்டின் அடியில் சிறிய கட்டி இருப்பதைக் கண்டறிகிறீர்கள். மீண்டும் போர்வைக்கடியில் நுழைந்து சுருண்டு படுத்துக் கொள்கிறீர்கள், சாக்கலேட் கேக்கை கனவு கண்டபடி.
* Allegory of the Cave என்ற பிளேட்டோவின் தத்துவக் கதையின் பின்னணியில் வாசிக்கலாம்.


3. டார்லாவின் குறிப்பேடு
Darla’s Notebook by Bob Thurber
என் தங்கை வீட்டிலிருந்து நிரந்தரமாக ஓடிப் போன பிறகு, பித்தேறிய ஓவியங்களும் மந்தாரமான கவிதைகளும் நிரம்பிய ஒரு குறிப்பேட்டை அம்மா கண்டெடுத்தாள். ஒரு கவிதை F••K என்று தலைப்பிடப்பட்டிருந்தது. பல பக்கங்களில் அவ்வாறான கவிதையே தொடர்ந்தது. மற்றொரு கவிதை சிவப்பு முக்காடிட்ட பெண் ஓநாயால் அல்ல மரம்வெட்டியால் கற்பழிக்கப்பட்டாள் என்றும், இன்னொன்றோ ஒரு மனிதனை பதினோரு வகையில் கொல்வதன் மூலம் எவ்வாறு அவன் தாங்கவொணாத் துயரத்தில் மெல்ல இறப்பான் என்றும் பட்டியலிட்டது.
என் அம்மா அந்தக் குறிப்பேட்டை அவளுடைய ஆண் நண்பன் கார்லிடம் கொடுக்க, அதை அவன் சலவை இயந்திரத்திலிட்டு, பிளீச்சிங் பொடியை கொட்டி மிக வேகமாகச் சுழலவிட்டான்.


4. எப்போதும் குளிர்
Forever Winter by Jareb Collins
“இவ்வாழ்வின் பயங்கரங்களிலிருந்து ஆசீர்வதிக்கப்பட்ட மறுபிறவிக்குச் செல்ல ஒரு மென்மையான வழி மரணம் தான்” என்பதைத்தான் அருள்திரு.டாமி எப்போதும் கூறுவார். கவித்துவம் நிறைந்த வார்த்தையென நான் அடிக்கடி உணர்வேன்.
வெள்ளாடை அணிந்த அவரிடம் வாதம் செய்வது தீவினைக் கர்மம் என்பதாகவே தெரிந்தது. ஆனால், சயனைட் என் குடலை எரித்து மெதுவாக ஓட்டையிட்டபோது என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.
ஒரு உறைந்த இரும்புப் பெட்டியில் அடைத்து துருப்பிடித்த தண்டவாளத்தில் வேகமாக உருட்டியதைப் போல் உணர்ந்தேன்.
நான் கடுமையாக நடுங்கியபடியிருக்க என் உதடுகளில் ரத்தம் தோய்ந்த நுரை குமிழியிட்டு வெளியேறியது. உலகம் மங்கி வரத் தொடங்கியது. முடிவற்ற சுடரிலிருந்து வெளியேறுவதற்காக வருத்தப்பட்டேன். மரணம் குளிராக இருந்தது.


5. குறுக்குநடை
Crosswalk by Mattie Blake
நான் வாகனம் ஓட்டிக் கொண்டிருப்பதாகக் கனவு கண்டபோது ஒரு குறுக்குச் சாலையில் நிறுத்தினேன். ஒருவொருக்கொருவர் முட்டிச் செல்வதுபோல் சாலை நடுவே பாதசாரிகள் கடந்தனர். நான் அவசரப்படுவதை உணர்ந்தபோது அவர்கள் அனைவரும் என்னைப் பார்த்தனர்.
“மக்களின் மீது உங்களுக்கு அன்பில்லையா?” என்றார் ஒருவர்.
“நான் அன்பை உணர்கிறேன். ஆனால் அது ஏதோ ஒன்றுடன் புதைக்கப்பட்டிருப்பதாக நினைக்கிறேன்.”
“இந்த உலகத்தில் எல்லா இடமும் அன்பு செலுத்துவதற்கான இடம் தான்” என்றார் அவர்.
“சில இடங்கள் கார்களுக்கானவை. நீங்கள் இவ்வாறு செய்வதன் முலம் அன்பை இழிவுபடுத்துகிறீர்கள்.”
“நீங்கள் ஒரு மோசமான குருடன்” என்றார்.
“உங்களைவிட நான் இன்னும் சாலையை நன்றாகவே பார்க்கிறேன்” என்றேன்.


6. நகருக்கு மறுபக்கம்
Across Town by Andrew Bertaina
நகருக்கு மறுபக்கம் என் மனைவி ஒருவனுடன் நெருங்கிப் பழகிக் கொண்டிருக்கிறாள். நான் இங்கே ஜன்னலில் கதிரொளியை பெறும் மலரைப் போல அவளைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறேன். நினைத்துப் பாருங்கள், அவள் காபி பருகச் செல்லும்போது அல்லது திடீரென கைகளை அகற்றும் போதோ திடீரென என்னை நினைக்கும் நேரத்திலோ எங்களிடையே பல மைல்கள்; இருவரும் தனிமையில் வசிக்கிறோம்.


7. எண்கள் பொய்யுரைப்பதில்லை
Numbers Never Lie by Jace Killan
அவன் வழக்கமாக எண்களை விரும்பினான். எண்கள் பாதுகாப்பானவை. எண்கள் பொய்யுரைப்பதுமில்லை; இந்த எண்களை திட்டமிட்டவர்கள் பொய்யர்களாக இல்லாமல் இருப்பின் அவை கற்களில் பதியப்பட்டவை போல உறுதியானவை, நிலையானவை தான் என்று நினைத்தான். ஆனாலும், உங்களால் எண்களை குறை கூற முடியாது. உண்மையை கட்டமைப்பவர்களால் கற்களில் இப்போது பொறிக்கப்பட்டுள்ளது அவற்றின் தவறல்ல. பாவிகள் !
நீதி தர்மத்தின் நிந்தனையாளர்கள். அது தகுதியற்றதா? புறக்கணிப்பா? திட்டமிட்ட சதிச்செயலா?
உறுதியாக பின்னர் கூறியதுதான்.
லாரன்ஸ் ஆழ்ந்து மூச்சிழுத்துவிட்டு ட்ரிக்கரை அழுத்தினான். உயர்ந்து, உயர்ந்து, உயர்ந்து வரும் காஸ் பம்பின் எண்களை கடுகடுப்புடன் பார்த்தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.