இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர்: புதிய பயிற்சியாளர் – புதிய பாதை

Team-India-Test-7

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய கேப்டன் அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டதிலிருந்து, இந்திய அணி புதிய உத்வேகம் காட்ட ஆரம்பித்துள்ளது. அனில் கும்ப்ளே ஒரு முன்னாள் கிரிக்கெட் வீரர் என்பதோடு, படிப்பளவில் ஒரு இஞ்ஜினீயரும் கூட. கிரிக்கெட் என்கிற நவீன விளையாட்டின் மாறிவரும் முகங்களை, அதன் தொழில்முறை மாற்றங்களை நன்கு அவதானித்தவர். அதன் நுணுக்கங்களை, புதிய வழிமுறைகளை தன் விளையாட்டுக்காலத்திலேயே ஆழமாக ஆராய்ந்தவர். ஓய்வுக்குப் பின்னும் உன்னிப்பாக கவனித்துவருபவர்; தான் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றபின் இந்தியாவின் டெஸ்ட் கேப்டனான விராட் கோஹ்லி, மற்றும் ஒரு-நாள், டி-20 கேப்டனான மகேந்திர சிங் தோனி ஆகியோருடன் அணிபற்றி கலந்தாலோசித்தார். ஆன்ட்டிகுவாவில் ஆடவிருந்த இந்திய அணியினருடன் பேசி உற்சாகமளிக்க (pep talk), ஆண்ட்டிகுவாவின் கிரிக்கெட் சிங்கமான சர் விவ் ரிச்சர்ட்ஸை (Sir Viv Richards) அழைத்திருந்தார் பயிற்சியாளர் கும்ப்ளே.
இந்திய அணியின் வெஸ்ட் இண்டீஸ் பயணத்துக்கு முன்பாக, பெங்களூரில் நடந்த பயிற்சி முகாமில், இந்தியாவின் புதிய கோச்சின் நுணுக்கமான பயிற்சி முறைகள் கவனத்துக்கு வந்தன. கிரிக்கெட் பயிற்சி வழிமுறைகளில், அதில் ஏற்படுத்தும் மாற்றங்களில் கும்ப்ளே ஒரு கார்ப்பரேட் மேனேஜரைப் போன்றவர். மேலும் இளம் வீரர்களுக்கு, ஒரு சகோதரனைப் போல அவர்களை தனியே சந்தித்து அவர்களுடைய கிரிக்கெட் பிரச்னைகளை அலசுகிறார். பயிற்சியில் நேரம் தவறாமை, கலந்தாலோசித்தல், புதிய யுக்திகள், நெட்-பயிற்சியின்போது பௌலர்களை ஒரு குறிப்பிட்ட திட்டப்படி பந்து வீசச் செய்தல், அதே போல பேட்டிங், ஃபீல்டிங், த்ரோ-இன் எனக் கடுமையான ஆனால் முறையான வழிகளை கையாள்கிறார். ஒரு டெஸ்ட் மேட்ச்சின் இக்கட்டான நிலையில் என்ன செய்ய வேண்டும்? அணியின் பதினோரு பேரும் தங்களின் வழக்கமான பொறுப்பையும் தாண்டி, அணியின் வெற்றிக்கு எப்படியெல்லாம் பங்கு தர முடியும் என வீரர்களை சிந்திக்கவைக்கிறார். ஐந்து வருடங்கள் இந்திய அணியின்  பயிற்சியாளராக இருந்த நியூசிலாந்தின் ஜான் ரைட் அறிமுகப்படுத்திய buddy system என்று அழைக்கப்பட்ட, ஒரு பௌலர்- ஒரு பேட்ஸ்மன் என ஜோடி, ஜோடியாகப் பந்துவீச்சு, பேட்டிங் எனப் பயிற்சி செய்தலை கும்ப்ளே மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளார். அதே சமயம், நெட்-பயிற்சியை உன்னிப்பாகக் கவனித்து இந்திய வீரர்களுடன் அவர்களது பேட்டிங் செய்யும் முறை, பௌலிங் ஆக்‌ஷன் போன்றவைகளில் ஏதேனும் குறை தெரிந்தால், மாற்றம் தேவைப்பட்டால் அதுபற்றி அவர்களுடன ஒன்றுக்கு ஒன்றாய் பேசி, கவனத்தைக் கொணர்கிறார். தேவையான மாற்றங்கள் செய்து மீண்டும் அவர்களை முறையே பௌலிங் அல்லது பேட்டிங் செய்யவைத்துக் கூர்ந்து கவனிக்கிறார்.  இந்த நேரடி வழிமுறை, அணுகுமுறையினால் வீரர்களின் கிரிக்கெட் பயிற்சி, தொழில்ரீதியான முன்னேற்றம் முறையாக கவனிக்கப்படுகின்றது. அவர்கள் பெங்களூரில் முகாமில் உற்சாகமாகப் பயிற்சி செய்தனர்.
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட், ஆண்ட்டிகுவா(Antigua) : அனில் கும்ப்ளே பயிற்சியாளராகப் பொறுப்பேற்றபின் இந்தியா சந்திக்கும் முதல் டெஸ்ட் தொடர் இது. விராட் கோஹ்லி, இந்திய துணைக்கண்டத்திற்கு (Indian sub-continent) வெளியே தலைமைதாங்கும் முதல், முழுமையான டெஸ்ட் தொடர். வெஸ்ட் இண்டீஸ் ரசிகர்களின் சூப்பர் ஹீரோவான க்ரிஸ் கெய்ல் (Chris Gayle) ஆடாத தொடர் இதுவே. அணியில் கேப்டனும் ஆல்-ரவுண்டருமான ஜேஸன் ஹோல்டர் (Jason Holder), பேட்ஸ்மன்கள் மார்லன் சாம்யுவெல்ஸ் (Marlon Samuels), டேரன் ப்ராவோ (Darren Bravo) தவிர மற்றவர்கள் டெஸ்ட்டுக்குப் புதியவர்கள் அல்லது போதிய சர்வதேச அனுபவம் இல்லாதவர்கள்.
ஜூலை 21-ல் துவங்கிய  ஆட்டத்தில், இந்தியா டாஸ் வென்று பேட்டிங் செய்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பிலிருந்து வேகப்பந்துவீச்சாளர்கள் ஜேஸன் ஹோல்டரும், ஷேனன் கேப்ரியலும் (Shannon Gabriel) சிறப்பாக வேகப்பந்து வீசினர். குறிப்பாக கேப்ரியலின் பந்துகள் ஷார்ட்-பிட்ச்சாக 145 கிமீ-க்கு மேல் எகிறி ஷிகர் தவனைத்(Shikar Dhawan) தடுமாற வைத்தன. 151 கிமீ.-ல் முகத்தருகே சீறி எகிறிய பந்து ஒன்றை (snorter of a ball) முரளி விஜய் ,பேட்டை உயர்த்தி தடுக்க முயல, அது ஓரத்தில்பட்டு ஸ்லிப் திசையில் உயர்ந்தது. தட்டுத்தடுமாறி க்ரெய்க் ப்ராத்வெய்ட்(Kraigg Brathwaite) அதனைக் கேட்ச் செய்ய, சொற்ப ரன்களிலேயே முரளி விஜய் பெவிலியன் திரும்பினார். இந்தியா 14 ரன்களில் ஒரு விக்கெட். வெஸ்ட் இண்டீஸுக்கு ஜோரான ஆரம்பம்.
சேத்தேஷ்வர் புஜாராவும் (Cheteshwar Pujara),  தவணும் சமாளித்து ஆடினர். ஒன்று, இரண்டு என ஓடி, ஓடி ரன்னெடுத்தனர். மெதுவாக உயர்ந்தது ரன்கள். ஆனால் மதிய உணவு இடைவேளைக்குப்பின் முதல் ஓவரில்,  ஸ்பின்னர் தேவேந்திர பிஷுவின் அப்பாவித்தனமான பந்தில் ஆவேசம் காட்டப்போய், புஜாரா  கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஒரு வகையில் நல்லதாகப் போயிற்று. அடுத்துவந்த கேப்டன் கோஹ்லி ஒரு திட்டத்துடன் இறங்கினார் போலும். நேரத்தை வீணாக்கவில்லை. கொஞ்சம் தடுத்தாடி, பிறகு பௌண்டரிகளாக வெஸ்ட் இண்டீஸின் பௌலர்களைப் பதம் பார்த்தார். தவணும் உற்சாகமாக, இரண்டு தரப்பிலிருந்தும் ரன்கள் பாய, ரன்விகிதம் எகிறியது. தேநீர் இடைவேளைக்கு முன் 84 ரன்னில் தவண் அவுட்.  அஜின்க்யா ரஹானே. நன்றாக ஆரம்பித்தும் 22 ரன்களைத் தாண்டமுடியவில்லை. அடுத்து களம் இறங்கவேண்டிய விருத்திமான் சாஹாவின் இடத்தில், அஷ்வின் களம் புகுந்தார். அவர் கேப்டனுடன் ஜோடி சேர்ந்து அருமையாக ஆட, மறுமுனையில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார் விராட் கோஹ்லி. அலட்சியமான ஆஃப்-ட்ரைவ்களும் (off-drives) ,  பிரமாத லெக்-சைட் புல் ஷாட்டுகளும் (legside pulls) இதில் அடங்கும். அவருடைய முதல் இரட்டை சதம், இந்தியக் கேப்டன் ஒருவர் வெளிநாட்டில் அடித்த முதல் இரட்டை சதம் என்றும் ஆனது. கோஹ்லி 200-லேயே அவுட் ஆனவுடன், விருத்திமான் சாஹா இறங்கினார்.
கோச் கும்ப்ளே, கேப்டன் கோஹ்லியினால் திட்டமிடப்பட்டு ஆறாவது நம்பரில் இறக்கப்பட்டிருந்த அஷ்வின், மிடில் ஆர்டரில் பேட் செய்ய கிடைத்த  வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டார்.  டெஸ்ட்களில் தன்னுடைய மூன்றாவது சதத்தை விளாசினார். இந்தியாவுக்கு வெளியே அஷ்வினின் முதல் சதம் இது. 113-ல் அஷ்வின், 40 ரன்களில் சாஹா, 52 -ல் மிஷ்ரா என விக்கெட்டுகள் விழ, இந்திய ஸ்கோர் 8 விக்கெட் இழப்புக்கு 566-ஐத் தொட்டது. இது போதும் என்று இன்னிங்ஸை டிக்ளேர் (declare) செய்தார் கோஹ்லி. ஸ்பின்னர்கள் க்ரெய்க் ப்ராத்வேய்ட், தேவேந்திர பிஷு நன்றாக உழைத்து, தலா 3 விக்கெட்டுகளையும், வேகப்பந்துவீச்சாளர் ஷேனன் கேப்ரியல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
அந்தக்கால வெஸ்ட் இண்டீஸ் அணியாக இருந்தால், பதிலுக்கு மைதானத்தில் பௌண்டரிகள், சிக்ஸர்கள் எனக் கொளுத்திப்போட்டிருப்பார்கள். இந்திய பௌலர்களுக்கு மூச்சுப்பிடிப்பு ஏற்பட்டிருக்கும். ஆனால் அனுபவமற்ற டெஸ்ட் வீரர்களுடன் மைதானத்தில் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் நிதானமாக ஆடியது. குறிப்பாக துவக்க ஆட்டக்காரரான க்ரெய்க் ப்ராத்வேய்ட். மறுமுனையில் விக்கெட்டுகள் விழுந்துகொண்டிருக்க, ஒரு அனுபவ டெஸ்ட் பேட்ஸ்மன் போல ஆரவாரமின்றி ரன் சேர்த்தார். இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது.  முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் நன்றாக வீசினார்கள். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டேரன் ப்ராவோவும், மார்லன் சாமுவேல்ஸும் இந்திய பந்துவீச்சின் முன் அதிக நேரம்  தாக்குப்பிடிக்கவில்லை. க்ரெய்க் ப்ராத்வேய்ட் 74 ரன் எடுத்து அவுட் ஆனார். விக்கெட் கீப்பர் ஷேன் டௌரிச் (Shane Dowrich)  இந்திய ஸ்பின்னர்களை அலட்சியமாகத் தாக்கி 57 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் நின்றார். மற்றவர்கள் வந்தனர்; சென்றனர். வெஸ்ட் இண்டீஸ் 243 ரன்களில் சுருண்டது. முகமது ஷமியும் உமேஷ் யாதவும் தலா 4, அமித் மிஷ்ராவுக்கு 2 என விக்கெட்டுகள் சரிந்தன.
இந்திய கேப்டன் கோஹ்லி , சொற்ப ரன்களில் வீழ்ந்த வெஸ்ட்-இண்டீஸை ஃபாலோ-ஆன் (follow-on) செய்ய வைத்தார். இரண்டாவது இன்னிங்ஸிலும் அதனால் பெரிதாக முன்னேற்றம் காண்பிக்க முடியவில்லை. இந்த முறை ஆஃப் ஸ்பின்னர் அஷ்வினின் சுழலைச் சந்திக்க முடியாமல் திணறியது வெஸ்ட் இண்டீஸ் . மார்லன் சாமுவேல்ஸ் 50, தேவேந்திர பிஷு 45, கார்லோஸ் ப்ராத்வேய்ட் (Carlos Brathwaite- வெஸ்ட் இண்டீஸின் டி-20 உலகக்கோப்பை ஹீரோ) 51 நாட்-அவுட். இதற்குமேல் காண்பிக்க வெஸ்ட் இண்டீஸிடம் ஒன்றுமில்லை. முதல் இன்னிங்ஸில் விக்கெட் ஏதும் எடுக்காத அஷ்வின், அபாரமாக சுழற்றினார் பந்தை.  83 ரன்கொடுத்து 7 விக்கெட்டுகளை சாய்த்தார். இஷாந்த், யாதவ், மிஷ்ராவுக்கு தலா ஒரு விக்கெட். ஆட்டத்தின் நான்காவது நாளிலேயே, ஒரு இன்னிங்ஸ் 92 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸுக்கு இன்னிங்ஸ் தோல்வியை வழங்கியது விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி. அந்தக்கால இயன் போத்தம் (Ian Botham)போல  ஆல்ரவுண்ட் திறமையை நிரூபித்த அஷ்வின் ஆட்ட நாயகனாகத் தேர்வானார்.
அனில் கும்ப்ளேயின் பயிற்சித் தலைமை, பலன்களைத் தர ஆரம்பித்துவிட்டது என்றே தோன்றுகிறது. அணியின் வேகப்பந்துவீச்சாளர்களில் ஷமி, யாதவ்-இவர்களின் பந்துவீச்சில் பாராட்டத்தக்க மாற்றம் காணப்பட்டது. வெறும் வேகத்தை மட்டும் நம்பாமல், துல்லியம், லைன் அண்ட் லெங்த், பழைய பந்திலும் ஸ்விங் என முன்னேற்றம் தெரிந்தது. மற்றொரு நல்ல விஷயம்: பொதுவாகவே ஃபீல்டிங்கில் பந்தைத் துரத்துவதில் மந்தகதியைக் காண்பிக்கும் யாதவ், ஷமி, இஷாந்த் போன்றவர்களிடம் புதிய உத்வேகம் தென்படுகிறதோ எனத் தோன்றுகிறது. சப்ஸ்டிடியூட் ஃபீல்டராக இறங்கிய கே.எல்.ராகுல் பௌண்டரி நோக்கி சீறிய பந்துகளைத் துரத்தி நிறுத்தி ரன்களைக் கசியவிடாமல் செய்தார். இன்னும் நிறைய நல்ல மாற்றங்களை வரும் போட்டிகளில் எதிர்பார்க்கலாம் என்கிற நம்பிக்கை வருகிறது. டெஸ்ட் தொடரை சும்மா 1-0 என்று ஜெயித்துவிட்டு வராமல், ஒவ்வொரு போட்டியையும் வெல்ல முயற்சிக்கும் புதிய சிந்தனை, உத்வேகம் காணப்படுகிறது.
அடுத்த மேட்ச் ஜமைக்காவின் கிங்ஸ்டன் மைதானத்தில். இப்போதிருக்கும் கரீபியன் பிட்ச்சுகளைப்பற்றி ஏதும் சொல்வது கஷ்டம் என்கிறார் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர். பொறுத்திருந்து பார்ப்போம். வெஸ்ட் இண்டீஸ் அணியில் மாறுதல் இருக்கலாம். இந்திய அணியில் மாறுதல் இருக்காது என்றே தோன்றுகிறது.
**
 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.