அதைப் போக விடு

ஜான் பான்வில் என்ற புகழ் பெற்ற அயர்லாந்திய எழுத்தாளர்,  டப்லின் ரெவ்யூ பத்திரிகையில் சீர்தூக்கிப் பார்த்த கட்டுரையின் தமிழாக்கம் இது. மதிப்புரை பெற்ற புத்தகம்: மறதியைப் பாராட்டி: வரலாற்று ஞாபகமும் அதன் சுவையான முரண்களும்:டேவிட் ரீஃப், யேல் பல்கலைக்கழக அச்சகம், 160 பக்கங்கள்,  £14.99, ISBN: 9780300182798

இது ஒரு அதிர்ச்சி தரும் புத்தகமாக இருப்பதோடு, அவ்வதிர்ச்சி குறித்த எதிர்பார்ப்புகளை விஞ்சியதாகவும்  இருக்கிறது. செம்மையான சிந்தனை கொண்ட, வரலாறு பற்றிய தகவல்களை நன்கு அறிந்த, நீதி குறித்து உயிரோட்டமான புரிதல் உள்ள மக்கள், இந்நூலில் மையமாக உள்ள வாதத்தால்  மிரளப் போகிறார்கள், சீற்றம் கூட அடையப் போகிறார்கள். இருந்தாலும் இந்த வாதத்தினை மறுக்க முடியாத கடினமான நிலைக்குத் தள்ளப்படுவார்கள். [நூலின்] முடிவடையும் பகுதிகளில், அவருடைய தரப்பை, அது அலங்காரப்பேச்சு வடிவில் அமைந்து இருந்தாலும், தெளிவாகவும் நேரடியாகவும் டேவிட் ரீஃப் கூறுகிறார்: “இதை யோசிக்க முடியுமா”, அவர் எழுதுகிறார், “நமது சமூக அமைப்புகள் அவற்றின் நினைவில் நிறுத்துவதற்காகச் செலவழிக்கும் ஆற்றலில் ஒரு சிறுகூறையாவது மறப்பதற்குச் செலவழித்து இருந்தால்…உலகின் அதிமோசமான சில பகுதிகளில் அமைதி ஏற்படுவது ஒரு படி அருகில் நெருங்குவது சாத்தியமாகி இருக்குமோ?”
ஒரு கல்விமானும் பத்திரிகையாளருமான ரீஃப் அவர் பேசுவதைப் பற்றி அறிந்தே பேசுகிறார். போஸ்னியப் போர் குறித்த செய்தியாளராக இருந்த அவர், அப்பணியின் தொடர்ச்சியாக, அந்த மோதல் குறித்து  “கசாப்புக் கொட்டில்” (Slaughterhouse) எனப் பொருத்தமாகத் தலைப்பிடப்பட்ட நூலை எழுதினார். அவருடைய மிக சமீபத்திய படைப்பான, “பசியை நிந்தித்து: 21ம் நூற்றாண்டில் உணவு, நீதி, மற்றும் பணம்” [எனும் நூலானது] எச்சரிக்கையுடன் ஆனால் ஊக்குமளிக்கும் வகையில், வறுமை மற்றும் பசிக்கு எதிரான போரில் ஜனநாயக அரசே மையப்புள்ளியாக இருக்கிறது எனும் முடிவை மறுபடியும் ஆமோதிப்பதாக இருக்கிறது.
”முன்னேற்றம்” குறித்த நமது கருத்துகள், மற்றும் உலகமயமாதலினால் பிணிகள் தீர்ந்துவிடும் எனும் மதிப்பீட்டால் நாம் கொள்ளும் எதிர்பார்ப்புகளின் பேதமை குறித்து, ஆங்கிலேய அரசியல் தத்துவாளரான ஜான் க்ரேவைப் போலவே தெளிந்த பார்வையுடன் இருக்கும் அவர், பில் [கேட்ஸ்] மற்றும் மெலிண்டா கேட்ஸ் போன்ற “பிரபலமான மனிதநேயர்களை” – அவர்களுடைய நல்ல நோக்கங்களை அவர் சந்தேகிக்காவிட்டாலும் – [சந்திக்க] நேரமில்லாதவராய் இருக்கிறார். அவர் கஸ்ஸாந்த்ராவும் (Cassandra) இல்லை, தெரெஸியாஸும் (Tiresias) இல்லை, ஆனால், அரிதானவைகளில் அரிதான அந்தவொரு மனசாட்சியுள்ள யதார்த்தவாதியாக இருக்கிறார்.
எதிர்பாராமல் வெடித்த பெரும் போருக்கு ஆறு வாரங்களுக்குப் பின்பும்,  ஈப்ரெஸ் (Ypres)ல் நடந்த முதல் போருக்கு – அப்போரில், ரீஃப் குறிப்பிடுகிறபடி, “பிரிட்டனின் போருக்கு முந்தைய அதிகாரபூர்வ ராணுவத்தின் பெரும்பான்மை கொல்லப்பட்டது அல்லது காயம்பட்டது” – இரண்டு மாதங்களுக்கு முன்பாக, செப்டம்பர் 21, 1914 அன்று லண்டன் டைம்ஸில் முதன் முதலில் பதிப்பிக்கப்பட்ட லார’ன்ஸ் பின்யான் (Lawrence Binyon)இன் “வீழ்ந்தவருக்காக” எனும் கவிதை பற்றிப் பேசுவதோடு தன்னுடைய “மறதியைப் பாராட்டி” (In Praise of Forgetting)ஐ ஆரம்பிக்கிறார் ரீஃப்.
[“வீழ்ந்தவருக்காக” எனும்] அக்கவிதையானது, அப்பெரும் போரில் “வீழ்ந்தவர்” பற்றிய அரற்றல் அல்ல – இக்கவிதை எழுதிய அச்சமயத்தில் பெருந்தொகையான இராணுவத்தினர் இன்னும் வீழ்ந்திருக்கவில்லை –ஆனாலும், ஹோரெஸ் (Horace)ன் ‘Dulce et decorum est pro patria mori’  (ஒருவரது நாட்டுக்காக மரணிப்பது இன்சுவையும் பொருத்தமானது)மின் உத்வேகத்துக்கு நெருங்கியதாக இருந்த “ஒரு மரபான தேச பக்தி பாடல்” என அக்கவிதையை ரீஃப் சுட்டுகிறார்.
”நாம் மறந்து போகாதவாறு – நாம் மறந்து போகாதவாறு” என்ற வரியோடு முடிகிற வரித்தொகுப்பு (stanza) கொண்ட – ரீஃபின் வாசிப்பின்படி, “அத்தகைய மறத்தலானது தவிர்க்க முடியாதது என்பதை விசனம் மீதுற அங்கீகரிக்கச் செய்கிற” – மிகச் சிறந்த படைப்பாக அவர் கருதும், கிப்ளிங்கின் (Kipling) கவிதையான “இடைவேளைப் பாடலோடு” (recessional), பின்யனின் [“வீழ்ந்தவருக்காக” எனும் இந்தக்] கவிதையை மட்டம்தட்டும் விதத்தில் ஒப்பிடுகிறார் ரீஃப்.
சில சமயங்களில், ஸாம்ராஜ்யத்தின் குடமுரசை டமாரமடித்துச் செல்லும் தேசவெறி கொண்டவராகத் தெரியும் கிப்ளிங்கை, அவர் அப்படித் தென்பட்டாலும்,  ரீஃப் அப்படிப் பார்க்கவில்லை; மாறாக, தன்னைப் போன்ற ஒரு யதார்த்தவாதியாகவே – யதார்த்தவாதத்திலும் ஆழமான மருள் பார்வையை கொண்டவர் கிப்ளிங் – பார்க்கிறார். இந்தத் தறுவாயில், கிப்ளிங்கின் இன்னொரு செய்யுளில் இருந்து – அச்செய்யுளானது கிப்ளிங்கின் இயல்புக்கு ஒவ்வாவததாக நம்மில் பெரும்பாலோர் கருதத் தகுந்தது – அவர் மேற்கோள் காட்டுகிறார்:
இந்தப் பருவத்தின் குவளைமலர்,
அவள் எப்போதும் கேட்பதில்லை,
மாற்றம் என்ன, வாய்ப்பு என்ன, தணுப்பு என்ன,
கடந்த வருடத்தியதை வெட்டித் தள்ளு,
ஆனால், துணிவு பொலியும் முகத்தோடு
குறைந்த அறிவினரோ
அவளது ஏழு நாட்களின் முகப்பொலிவை
என்றென்றைக்குமானது என மதிப்பிடுகிறார்.
ஆனால், எதுவும் விரைந்து கரையும் மானுடரின் குவலயத்தில் நித்தியமானதல்ல; அதிலும் முக்கியமானவை கோரமான,  அதிவிஸேஷமான நம் கடந்ததகால நிகழ்வுகளின் நினைவுகள். மறந்துபோதலைத் தவிர்க்கமுடியாமை பற்றி ரீஃப் மேற்கோள் காட்டிடும் பல தருணங்களில் முதன்மையானதாக, அவர் நினைவூட்டுவது – நம்மில் பெரும்பான்மையோர் இதை முதன்முதலாகக் கேள்விப்படுவர் என ஒருவர் சந்தேகிக்கக்கூடிய, “நினைவு நாள்” (Memorial Day) எனும் அமெரிக்க தேசிய விடுமுறை; மே மாதத்தின் கடைசி திங்கட்கிழமையில் வருகிற அது, மே 1ம் தேதி, 1865ம் வருடம், “தெற்கு கரோலினாவில் சார்ல்ஸ்டன் நகரில் (Charleston), உள்நாட்டுப் போரின் (Civil War) போது  பிடிக்கப்பட்டு, சிறைச்சாலையாக்கப்பட்ட உள்ளூர் குதிரைப் பந்தைய மைதானத்தில் வைக்கப்பட்டு இறந்துபோன 257 ஐக்கிய அணி வீரர்களின் (Union soldiers) நினைவைப் போற்றுவதற்காக, அடிமை நிலையில் இருந்து விடுதலை பெற்ற ஆஃப்ரிக்க அமெரிக்கர்களால் முதன் முதலில் ஏற்பாடு செய்யப்பட்டு நடந்த நிகழ்வு” – என்பது வெள்ளையின மேலாதிக்கத்துக்கு அர்ப்பணிப்பு கொண்டவனை அவன் பியர் குடிக்கையில் புரையேறச் செய்துவிடும் ஒரு மெய்த்தகவல் (fact).
அப்படிப்பட்ட தீவிரவாதியான டைலான் ரூஃப் (Dylann Roof), ஜூன் 2015 அன்று அதே சார்ல்ஸ்டன் நகரில் உள்ள ஒரு ஆஃபிரிக்க மெதடிஸ்ட் எபிஸ்கோப்பியன் சர்ச்சுக்குள் புகுந்ததோடு, ஒன்பது கருப்பின மக்களைச் சுடவும் செய்தான். அந்தத் திரள்கொலைகளை ஒட்டி எழுந்த பின்விளைவாக, ரீஃப் சுட்டுகிறார், “இந்த உள்நாட்டுப் போர் நடந்தது எதற்காக எனும் கேள்வியானது, [கடந்து போன] பல பத்தாண்டுகளில் முதன்முறையாக, மையமான உரையாடல்களின் ஒரு பகுதியாக ஆனது.” ஆனால், அவர் கேட்கிறார், ஒருவேளை, ரூஃபின் வெறுப்புக்கு இலக்காகிப் போனவர்கள் கருப்பருக்குப் பதிலாக அமெரிக்கப் பழங்குடியினராக இருந்திருந்தால்?
“அந்த அதிர்ச்சியானது அதே அளவு பெரியதாக இருக்கும் என்று பாவித்தாலும், இந்தத் திரள்கொலைகளுக்கு ஒப்பான மன அதிர்ச்சியை, துல்லியமாகவோ அல்லது துல்லியமற்றோ, இறைத்து எடுக்கத் தேவையான ஞாபகக் கிடங்கு ஏதும் இருக்கப் போவதில்லை . . . இதற்கான காரணங்களோ வரலாற்றோடு செய்வதற்கு ஏதுமில்லாதவை, அமெரிக்க மக்கள் எதை நினைவில் வைத்திருக்கிறார்கள் எதை மறந்துவிட்டார்கள் என்பதுடன் அனைத்து சம்பந்தங்களும் கொண்டவை”.
இந்தக் கூற்றை ஆதரிப்பதற்காக அவர், ப்ளிமத் காலனியில் வந்தேறிய ஆங்கிலேயர்களை கிட்டத்தட்ட அழித்த, மெடகாமின் புரட்சி (Metacom’s Rebellion) என்றும் அறியப்படுகிற, 1675-76 வருடத்திய கிங் ஃபிலிப்பின் போரை குறிப்பிடுகிறார். அந்தப் போர் உண்டாக்கிய படுகொலைகள் அதிபயங்கரமானவை – மாஸச்சூட்ஸ் மற்றும் ரோட்ஸ் தீவுகளில் இருந்த அமெரிக்கப் பழங்குடியினரின் மக்கள்த்தொகையானது எண்பது சதவீதமாக வீழ்ந்த அதேசமயத்தில் வந்தேறிகளின் பக்கத்தில் இழப்புகள், ஒப்பீட்டில் குறைவு என்றாலும், பயங்கரத்தில் எந்தவகையிலும் குறைந்தது இல்லை. ஆனால், இப்போது யார் – துறைசார் வரலாற்றாலாளர்களைத் தவிர்த்து, கிங் ஃபிலிப்பின் போர் பற்றிப் பேச அல்லது நினைவுகூறவாவது செய்கிறார்கள்? “இது எதைக் காட்டுகிறது என்றால்”, சொல்கிறார் ரீஃப், “அது நடந்த காலத்திலும், அதைத் தொடர்ந்த பல்லாண்டுகள் கழிந்தபின்னும் வரலாற்றில் முக்கியமாகக் கருதப்படும் ஒரு நிகழ்வானது, அடுத்த நூற்றாண்டில் நினைக்கப்படும் என்பதற்கே எந்த உத்தரவாதமும் இல்லை எனும்போது பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் அதன் நினைவு பற்றிச் சொல்லவேண்டியதில்லை.”
இது ஒரு புலம்பல் இல்லை, ஆனால், விஷயங்கள் எப்படி இருக்கின்றன எனும் கூற்று. அனைத்துமே சீக்கிரமாகவோ இல்லை தாமதித்தோ, காலத்தின் முழுமையிலோ அல்லது வெறுமையிலோ மறக்கப்படப்போகிறது என்றாலும், கடந்தகாலத்தில் நடந்த நிகழ்ச்சிகள் எப்போதேனும் நினைவுக்குக் கொண்டு வரப்பட்டாலும், அவை அநேகமாக திரிக்கப்பட்டதாகவோ அல்லது நிகழ்காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப திரள் நினைவினால் வடிவமைக்கப்பட்டதாகவோ இருக்கும்.
திரள் நினைவு (Collective Memory) எனும் கருத்து குறித்து அதிக அளவு சிந்தனைகளைத் தரும் ரீஃப், அக்கருத்திற்குப் பெரும் அழுத்தத்தையும் வைக்கிறார். அவர் எடுத்தாளும் ஃப்ரெஞ்ச் சமூகவியலாளாரான மௌரிஸ் ஹல்ப்வாக்ஸுக்கோ (Maurice Halbwachs) திரள் நினைவு என்பது “நிகழ்காலத்து வெளிச்சத்தில் பழங்காலத்தை புனரமைத்தல்”, அத்துடன் “சமூகங்களும் தேசங்கள் முழுமையும் அவற்றின் அடையாளத்தை வார்ப்படம் செய்வதற்கான வழியாகவும் இருக்கிறது”. “ஐரிஷ் வரலாறானது”, சொல்கிறார் ரீஃப், “கூட்டு நினைவைக் கட்டமைக்க, புனரமைக்க, திருத்த, மற்றும் உருமாற்ற, கடந்த காலத்தினை உபயோகிப்பது, துர்பிரயோகிப்பது பற்றி, தனிப்பட்ட தரவாய்வு ஒன்றைத் தருகிறது”. அவர் அதை மறுபடியும் கூடச் சொல்லலாம்.
ராய் ஃபாஸ்டரின் (Roy Foster) படைப்புகளைப் பார்க்கும்போது, முக்கியமாக அவருடைய 1916 ஆம் ஆண்டு குறித்த சமீபத்தைய, “தெளிவான முகங்கள்: அயர்லாந்தின் புரட்சிகரத் தலைமுறை, 1890 – 1923” எனும் கலக்கலான ஆய்வைப் பார்த்த பின்னர், ரீஃப் அடித்துச் சொல்கிறார், “வரலாற்றை நினைவுகொள்வதின் சாராம்சமாக இருப்பது, வரலாற்றுத் துல்லியத்தைவிட, அடையாளப்படுத்துதல் மற்றும் மனோபாவ நெருக்கமே எனும்போது வரலாற்று நுணுக்கங்கள் மற்றும் ஆழம் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.” இது நிச்சயமாக உண்மைதான் என்றாலும், நுட்பமானதும் கிளர்ச்சியூட்டுகிறதுமான இப்புத்தகத்தில், இந்த இடத்திலும், மற்ற இடங்களைப் போலவே, “வரலாற்றுத் துல்லியம்” என்பது – அல்லது, கறாராகப் பேசுகையில், அப்படிப்பட்ட ஒரு விஷயம் உண்மையாகவே இருக்குமானால் – மெய்யாக எதைக் கொண்டிருக்கிறது எனும் கேள்வியைச் சுற்றி ரீஃப் நழுவிக்கொண்டு செல்கிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டு ஃப்ரெஞ்ச் வரலாற்றாளரான எர்னெஸ்ட் ரொனொ(ன்) (Ernest Renen), “வளமான நினைவு மரபுகளின் மேலே” தேசங்கள் நிறுவப்பட்டன என்பது பற்றி எந்த சந்தேகமும் இல்லாதவர் எனினும் அவர் அத்தகைய திரள் நினைவுகளின் துல்லியம் பற்றி எந்தவிதப் பிறழ்தோற்றங்களும் கொண்டிருக்கவில்லை: “மறந்துபோவது”, அவர் எழுதினார், “நான் வரலாற்றுத் தவறென்றே சொல்லக்கூடிய அது, தேசத்தை உருவாக்குவதில் ஒரு சாராம்சமுள்ள காரணியாக இருக்கிறது”.
இருந்தாலும், நாம் நினைவுகொள்வது நிஜமாகவே கடந்த காலத்தைத்தானா, அல்லது தெரிந்தோ அல்லது வேறு வகையிலோ திரிக்கப்பட்ட நிகழ்வுகளின் பதிப்புருவையா, எனும் அக்கேள்வியானது எழுகிறது. இது, ரீஃபின் வாதமான “நாம் விருப்பத்தோடு மறக்கவேண்டியது கடந்தகாலத்தையா, அல்லது கடந்த காலம் குறித்த ஒரு கனவையா?” வேறு வார்த்தைகளில், அவர் வாதிடுவது, நிகழ்வுகள் பற்றிய சரியான நினைவுகளைக் கைவிடச் சொல்லியா அல்லது நமது கனவுகளையா ? எனும் இன்னொரு கேள்வியை நோக்கி தலையெடுத்துச் செல்கிறது. யேட்ஸ் (Yeats) அவருடைய மிகச் சிறந்த கவிதையான “உள்நாட்டுப் போர்க் காலத்திய ஆழ்சிந்தனைகள்” (Meditations in Time of Civil War) எனும் கவிதையில் சொல்வதுபோல,
நாம் இதயத்திற்கு ஊட்டினோம் கனவுருவங்களை
இந்தத் தீனியில் வளர்ந்து கொடூரமானது  இதயம்
சமகாலத்திய சிந்தனையாளர்களான, இஸ்ரேலிய தத்துவாளரான அவிஷாய் மார்காலீட் (Avishai Margalit) மற்றும் பல்கேரியன் வரலாற்றாளரும் விமர்சகருமான ட்ஸ்வேடான் டொடரொவ் (Tzvetan Todorov) போன்றோருக்கு எதிராக வரலாற்று, சமூக, மற்றும் தார்மீக வளைதண்டங்களைக்கூட எடுத்துக்கொண்டு அவர்களை எதிர்க்கும் ரீஃப், அவர்களைப் பற்றி, சூசகமாகச் சொல்கிறார், இருவரும், ஃப்ரெஞ்ச் தத்துவாளரான பௌல் ரிகொய்ர் (Paul Ricoeur) பின்வருமாறு எழுதியதை ஏற்றுக்கொள்வார்கள்: “நாம் கண்டிப்பாக நினைவு கொள்ள வேண்டும், ஏனெனில் அது நமது தார்மீகக் கடமை. நாம் பலியானவர்களுக்குக் கடன் பட்டிருக்கிறோம் . . . நினைவுபடுத்துதல் மற்றும் சொல்வதன் மூலமாக, நாம் . . . மறதியானது அவர்களை இரண்டாம் முறையாகக் கொல்வதைத் தவிர்க்கிறோம்”. நிச்சயமாக இது ஏற்கப்பட்ட தாராளவாத நிலை.
“ஆனால், எனது வாதங்கள் உள்ளுணர்வுக்கு எதிரானவை போலத் தோன்றினாலும்”, ரிகௌர், டொடொரொவ், மார்காலீட் போன்றவர்களின் “தார்மீக தீவிரத்தன்மையை எவ்வளவுதான் ஒருவர் கௌரவித்தாலும்,” ரீஃப் தருவது, “அவர்களுடைய கருத்துகள் தவறானவை என்றால்?” (எனும் கேள்வியைத்தான்.)
“காலத்தின் நீளத்தால், மறதியானது தவிர்க்க முடியாததாக இருப்பதால், சமகாலத்திய ஆழ்கொடூரத்தின் ஒரு நிகழ் குறித்த நினைவானது, ஷோஆ’வின்* காலம்வரை, ஷோஆ’ நிகழ்வையும் சேர்த்தே, ஒப்பீட்டில் சிறிய காலமெனும்போது, இந்தச் சமூகத்தை அதன் எதிர்கால நிகழ்வுகளிலிருந்து காக்க (இந்நினைவுகள்) எதுவும் செய்வதில்லை எனில்?”.
அதிலும் இருபதாம் நூற்றாண்டின் கொடூரங்களை மட்டுமே நினைவுகொள்ளும்படி நம்மை நாமே அடைத்துக்கொள்கையில், ரீஃப் போன்ற ஒரு யூதரே, இக்கேள்வியை முன்வைக்கும்போது, அது, உண்மையிலேயே, யாரும் முன்பின் அறியாத,  ஆதாரத்தையே அசைக்கும் ஒரு கேள்வியாகிறது. ஆனால், இப்புத்தகம் முழுமையும் இந்தக் கேள்வியுடன்தான் ரீஃப் நம்மை மீண்டும் மீண்டும் எதிர்கொள்கிறார். அவருடைய நிலைப்பாடு பற்றி குறிப்பிடத்தக்க ஒரு சுருக்கமான உருவாக்கம் இதோ.
அவர் கேட்கிறார், “நினைவுகூர்தல் என்பது அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும், ஒழுங்கு ரீதியாகவும் அபாயமான ஒரு ஈடுபாடாக இருக்கையில், பொருட்படுத்தும் அளவு சமூக மறத்தலே ஒரு அமைதியான வரம்புமீறாத சமூகத்திற்கு இன்றியமையாதது. அல்லது, சற்றே வேறுவகையில் வைத்துச் சொன்னால், எந்த அளவு வேண்டுமானாலும் தாராளமாகவும் உள்ளேற்கும் விதமாகவும் . . . வரலாறானது பொழிப்புரைக்கப் பட்டாலும், கடந்தகாலமானது திருப்தி தரக்கூடிய பொருளைத் தரமுடியாததாக இருந்தால் ? சுருக்கமாக, ஏதோ சில இடங்களில் மற்றும் ஏதோ சில வரலாற்றுத் தருணங்களில், நினைவுகொள்ள வேண்டும் எனும் தார்மீக வற்புறுத்தலால் வரப்போகிற மானுட மற்றும் சமூகச் செலவின் அதீதத்தை ஒப்பிடுகையில், நினைவு கொள்வது இச்செலவளிப்புக்குத் தகுந்ததுதானா ?”
அயர்லாந்தில் இருக்கும் நாங்கள் நினைவுகூர்கிறோம், தெள்ளெனவே நினைவுகூர்கிறோம், நாங்கள் எங்கள்மீதே சுமத்திய கோரங்களை – நாங்களும், நம்மவர் அல்லாதோர் என நாம்  அடையாளம் கண்ட “மற்றவர்களும்” நிகழ்த்திய – 1960களின் இறுதியில் இருந்து 1990களின் நடுவாண்டுகள்வரை  வட அயர்லாந்தில் குமுறிய ஜாதிகளுக்கிடையேயான போர்களை – நினைவு கூர்பவர்களுக்கு மிகச் சரியாகவே தெரிந்து போகும் ரீஃப் எதுபற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார் என்பது. நாங்கள், கூட்டாகவே நிறையவே மறந்திருந்தோம் – “மறந்தோம்” எனும் வார்த்தை இங்கே பயன்படுத்தப்பட்டு இருந்தாலும், இந்தப் புத்தகம் முழுமையும் ரீஃப் அதை பயன்படுத்துவது போல, ஒரு சிறப்பான பொருளில், உதாரணமாக, வடக்கிலும் தெற்கிலும் இருக்கும் எங்களது பாராளுமன்றங்களில் வீற்றிருக்கும் மக்களின் கைகளில் இரத்தமானது இன்னும் கொஞ்சம்கூடக் காய்ந்துவிடவில்லை, என்பதை ஒப்புக்கொண்டுவிடும் பொருளில். 1994ல், ஐ.ஆர்.ஏ. (IRA)வானது அதனுடைய வன்முறை பரப்பலை முடிவுக்குக் கொண்டு வந்த அந்த வாரத்தில், மைக்கல் லாங்லீ (Michael Longley)யுடைய கவிதையான “போர்நிறுத்தம்” தி ஐரிஷ் டைம்ஸ்ல் பிரசுரமானது. அந்தக் கவிதையானது வட அயர்லாந்து பற்றியோ அல்லது ஐ.ஆர்.ஏ. பற்றியோ எதுவும் குறிப்பிடவில்லை, இருந்தாலும் அது எக்டொரை  வதைத்த அக்கிலெஸை (Achilles) சமரசத்துக்காக சந்திக்க வரும் ப்ரியம் சொல்லுவதாக இலியாஸில் (iliad)ல் வரும் பகுதியின் ஒரு படைப்புரு. அந்த வரித்தொகுப்பில், அவன் சொல்கிறான்:
எனது முழந்தாள்மேல் நான் மண்டியிடுகிறேன்,
எது செய்யப்பட வேண்டுமோ செய்கிறேன்
முத்தமிடுகிறேன் அக்கிலெஸ்ஸின் கரத்தில்
கொன்றானே என் மகனை
கடினமானதாகவும் கோரமானதாகவும் இது இருக்கலாம், ரீஃப் எடுத்துச் சொல்கிறார், சில சமயங்களில் நாம் மாபெரும் தவறுகளை மறக்க முடிந்தவர்கள் போல விரும்பி நடந்துகொள்ள வேண்டியது கட்டாயம். அவர் எழுதியிருப்பது போல, சில நிகழ்வுகள் இருக்கின்றன,
எண்ணிக்கையில் சிறியவை இவை, சந்தேகம் இல்லை, இருந்தாலும் மானுடத் துயரம் தரக்கூடிய உள்ளாற்றலில் பெரியது எனில், மறந்து போகுதல் கடந்த காலத்துக்கு அநீதியைச் செய்வது போல, நினைவுகூர்தலானது நிகழ்காலத்துக்கு அநீதியைச் செய்வது, இச்சிறிய அளவிலும் சாத்தியமே.
****
பின் குறிப்புகள்:
* [ஷோஆ’ (Shoah) –  அனைத்தும் அழிக்கப்படும் சம்பவமான ஹோலோகாஸ்ட், யூதர்களால் ஷோஆ என அழைக்கப்படுகிறது. ஹீப்ரூ உச்சரிப்பு இது.]
தமிழாக்கத்தின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்: http://www.drb.ie/essays/let-it-go
தமிழாக்கம்: ஆனந்த கணேஷ் வை
விமர்சிக்கப்பட்ட புத்தகத்தின் விவரங்கள் :
In Praise of Forgetting: Historical Memory and Its Ironies, by David Rieff, Yale University Press, 160 pp, £14.99, ISBN: 9780300182798
______________________________________

டப்லின் ரெவ்யு என்கிற அயர்லாந்திய இலக்கியப் பத்திரிகையில் வந்த மூல இங்கிலிஷ் கட்டுரையை எழுதியவர் ஜான் பான்வில்.
ஜான் பான்வில் பற்றிய ஒரு ருசிகரமான தகவல்- இவர் இங்கிலிஷில் பல சிறப்பான துப்பறியும் நாவல்களை எழுதியிருக்கிறார். அவை பெஞ்சமின் ப்ளாக் என்ற புனைபெயரில் பிரசுரமாகிப் பிரபலமாகி இருக்கின்றன. அது தவிர ஜான் பான்வில் என்கிற பெயரில் இலக்கிய நாவல்கள், கட்டுரைகள், திரைக்கதை எல்லாம் எழுதுகிறார். குறிப்பாக இவர் எழுதிய மூன்று நாவல் கொத்து புகழ் பெற்றது. அவை கோபர்நிகஸ், கெப்லர், நியூட்டன் என்கிற மூன்று பெருமை வாய்ந்த யூரோப்பிய அறிவியலாளர்களைப் பற்றியவை.
2009 ஆம் ஆண்டில், இவருடன் ஒரு நேர்காணலை பாரிஸ் ரெவ்யு என்கிற இலக்கியப் பத்திரிகை பிரசுரித்திருக்கிறது. அதை இங்கே காணலாம்:
http://www.theparisreview.org/interviews/5907/the-art-of-fiction-no-200-john-banville
டேவிட் ரீஃப் ஒரு சமூகவியலாளர். இவர் வேறு சில புத்தகங்கள் எழுதி இருக்கிறார். குறைந்த பட்சம் அவை நிறைய சர்ச்சைகளை எழுப்பியவை என்று சொல்லப்படுகிறது. அவற்றையும் இவரையும் பற்றி ஏ. ஓ. ஸ்காட் எழுதிய ஒரு கட்டுரையை இங்கே காணலாம். ரொம்பவே கஜகர்ணமெல்லாம் போடும் ரீஃபை நையாண்டி செய்யும் ஸ்காட், இவர் எந்தப் பக்கம் என்பது இவருக்கே தெரியுமா என்பது ஐயம் என்கிறார்.
http://www.slate.com/articles/news_and_politics/assessment/1999/07/david_rieff.html
ரீஃபைப் பற்றிய விக்கிபீடியா குறிப்பில் கிட்டிய ஒரு துணுக்கு: இவர் பிரபல அமெரிக்க விமர்சகரும், புனைவெழுத்தாளருமான (மறைந்த) சூஸன் ஸாண்டாக் என்பாரின் மகன்.
இவருடைய இன்னொரு நேர்காணலை இங்கே விடியோவாகக் காணலாம்:

இதில் வருகிற அவிஷாய் மார்கலிட் என்கிற இஸ்ரேலிய வரலாற்றாளர்/ தத்துவாளர் பற்றிய மூன்று விடியோக்களை இங்கே காணலாம்.
1.  https://www.youtube.com/watch?v=lDfdQRYkNU8
2. https://youtu.be/lQrPJFD2caE
3. https://www.youtube.com/watch?v=5GC185LmVro
இந்த உரையாடல்கள் எத்தனை பயனுள்ளவை என்று நம்மை வியக்க வைக்கிற விடியோக்கள் இவை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.