ஸ்பினோஸா ஏன் இன்றும் பொருட்படுத்தக் கூடியவராக இருக்கிறார்?  

 spinoza

மதத் தீவிர வாதம் உச்சத்தில் இருக்கும் காலத்தில், அச்சமில்லாது கருத்து சுதந்திரத்தைக் காக்க முயன்ற ஸ்பினோஸாவின் சிந்தனை, முன்னெப்போதையும் விட காலப் பொருத்தம் உள்ளதாக இருக்கிறது. – ஸ்டீவன் நாட்லர்
(ஸ்டீவன் நாட்லர் விஸ்கான்ஸின் பல்கலையின் மாடிஸன் வளாகத்தில், வில்லியம் எச். ஹேய்  (அமைப்பு) தத்துவப் பேராசிரியராக இருக்கிறார். இவரது புத்தகங்களில், ‘ஸ்பினோஸா: எ லைஃப்’ (1999) மற்றும், ‘எ புக் ஃபோர்ஜ்ட் இன் ஹெல்: ஸ்பினோஸாஸ் ஸ்காண்டலஸ் ட்ரீடிஸ் அண்ட் த பர்த் ஆஃப் த செகுலர் ஏஜ்’ (2011) ஆகியவை அடங்கும். )

1656 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், 23 வயதான பெண்டோ த ஸ்பினோஸா ஆம்ஸ்டர்டாம் மாநகரின் போர்ச்சுகீஸிய யூதர் சமூகக் கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். அதுகாறும் அந்த சமூகத்தால் விதிக்கப்பட்ட சமூக விலக்கத் தண்டனைகளிலேயே (ஹெரெம்- தடை) இதுதான் கடுமையானது. இன்றும் இருக்கிற இதுகுறித்த தீர்ப்புப் பத்திரம், அமிலத்தில் தோய்த்த, நீண்டதொரு வசைமாரி கொண்டது. ஒரு இளைஞனின் ‘ஆபாசமான புரட்டல்வாதங்கள்’, மேலும் ‘கொடும் செயல்கள்’ பற்றியது.
சமூகத்தின் தலைவர்கள், ராபைகளிடம் (யூத மதகுருமார்) கலந்து பேசிவிட்டு, ஸ்பினோஸாவின் ஹீப்ரு மொழிப் பெயரைக் குறிப்பிட்டு, இத் தீர்ப்பின் மூலம் ‘பரூச் த ஸ்பினோஸாவை வெளியேற்றுகிறோம், விலக்கி வைக்கிறோம், அவர் நரகத்துக்குப் போகக் கடவார் என்று சபிக்கிறோம்,’ என்று அறிவிக்கிறார்கள். அவர் ‘இஸ்ரேயலின் அனைத்துச் சமூகக் குழுக்களிலிருந்தும் தூர எறியப்பட்டு விட வேண்டும்’, மேலும் அவரது பெயர் ‘சொர்க்கத்துக்குக் கீழுள்ள அனைத்து இடங்களிலிருந்தும் அழிக்கப்பட வேண்டும்’ என்றும் சொல்கிறார்கள்.
பின் வந்த பல நூற்றாண்டுகளில், ஸ்பினோஸாவின் மீது சுமத்தப்பட்ட ‘ஹெரெம்’ தண்டனையை அகற்றச் சொல்லி அவ்வப்போது குரல்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. இஸ்ரேயலின் முதன் மந்திரியாக இருந்த டேவிட் பென் – குரியான் கூட, ஆம்ஸ்டர்டாம் போர்ச்சுகீஸிய (யூத) சமூகம் ஸ்பினோஸாவுக்கு இழைத்த அநீதியைச் சரி செய்ய வேண்டும் என்று பொதுவில் கோரிக்கை வைத்தார். ஆனால், கடைசியாக 2012 ஆம் ஆண்டின் துவக்கத்தில்தான், ஓர் உறுப்பினரின் வற்புறுத்தலினால், ஆம்ஸ்டர்டாம் பிரார்த்தனைக் குழுவினர் முறைப்படி ஒரு கேள்வியை விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர்.
அப்போது, ஸ்பினோஸாவுக்கு மறுவாய்ப்பு கொடுப்பதற்கான நேரம் வந்திருக்கிறதா என்ற கேள்வியையும், அவ்வளவு சகிப்பின்மையோடு தம் சமூகக்குழு வெளியேற்றியிருக்கையில் அவரை வரவேற்று மீண்டும் இணைக்க வேண்டுமா என்ற கேள்வியையும் பரிசீலிக்க முனைந்தனர். ஆனால், அதற்கு அவர்களுக்கு ஒன்று தெரிய வேண்டியிருந்தது: “நாம் இன்னமும் ஸ்பினோஸாவை சமயப் பாதையை உதறியவராகப் பார்க்கிறோமா ?’ என்ற கேள்விக்கான விடைதான் அது.
துரதிர்ஷ்டவசமாக, ஹெரெம் பத்திரம் ஸ்பினோசாவின் குற்றங்கள் என்னவாய் இருந்தன என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லத் தவறுகிறது- அதனால் எதிர்காலத்தில் தத்துவாளராக ஆகப் போகிற அவரின் வாழ்வில் நேர்ந்த பொருள் பொதிந்த ஒரு சம்பவத்தைச் சுற்றிலும் உள்ள மர்மம் இன்றும் தொடர்கிறது. ஆனால், ஸ்பினோசாவின் முதிர்ச்சி பெற்ற தத்துவக் கருத்துகளோடு பரிச்சயம் உள்ள எவருக்கும், அப்படி ஏதும் மர்மம் இருப்பதாகத் தெரிய வராது.
அவர் அந்தக் கருத்துகளை, சமூகத்திலிருந்து பகிஷ்கரிக்கப்பட்ட பின் சில வருடங்கள் கழித்து எழுத்து வடிவில் வெளியிடத் துவங்கி இருந்தார். துவக்ககால நவீன ராபையினிய யூதத்தின் அளவைகளால் -அதுவும் குறிப்பாக ஆம்ஸ்டர்டாம் நகரின் செஃபார்டிய யூதர்கள் நடுவே.
அவர்களோ ஐபீரியாவில் தொடங்கப்பட்ட கிருஸ்தவக்  கொடுவிசாரணை முகாம்களில் கடுமையாகத் துன்புறுத்தப்பட்டு மதம் மாற்றப்பட்ட போதும் தப்பி ஓடி வந்தவர்களின் வம்சாவளியினர். அந்தச் சமூகத்தினரோ ஆம்ஸ்டெல் நதியின் கரைகளில் முறையானதொரு யூதச் சமூகத்தைக் கட்டி எழுப்ப இன்னமுமே பல துன்பங்களை அனுபவித்து வந்தனர். அவர்கள் பார்வையில்  நோக்கினால், ஸ்பினோஸா சமயப் பாதையை உதறியவர், அதைத் தவிர ஆபத்தானவரும் கூட.
பாதை விலகிய இவருடைய சாவிற்குப் பிறகு கிட்டத்தட்ட மூன்றரை நூற்றாண்டுகள் கழிந்து விட்டன. ஆனாலும் இன்னமும் இவர் இத்தனை பிரபலமாக இருக்கிறார் என்பது மிக்க கவனத்துக்குரிய ஒன்றாகும்.
ஸ்பினோசாவிற்குச் சமகாலத்தவர்களாக இருந்த லீப்னிட்ஸும், ரெனெ டெகார்த்தும் நவீன காலத் தத்துவத் துறைக்கு மிகமிக முக்கியமானவையும், பிரமாதமான தாக்கமும் கொண்ட அளிப்புகளைக் கொடுத்தவர்கள்தாம். ஆனால், இன்று தம் சார்பில் உறுதி கொண்ட கார்டீசியர்களையோ, லீப்னிட்ஸியர்களையோ நாம் காண்பது அரிது. மாறாக, ஸ்பினோஸியர்கள் நம்மிடையே உலாவுகிறார்கள். பல்கலைகளுக்கு வெளியே உள்ள இந்த பக்தர்கள், ஸ்பினோஸா சங்கங்களை அமைக்கிறார்கள், படிப்பு வட்டங்களை உருவாக்குகிறார்கள், பொது நூலகங்களிலும், யூத சமூகக் கூடங்களிலும், வணக்கத் தலங்களிலும் (ஸினகாக்கள்) ஸ்பினோஸாவைப் படிக்கவெனக் கூடுகிறார்கள்.
ஸ்பினோஸா பற்றி ஒரு நாள் உரை அரங்கம் ஏற்பாடானால் பல்வேறு அரசியல், மதச் சார்புள்ளவர்கள் நூற்றுக்கணக்கான எண்ணிக்கையில் வருகிறார்கள். அவர்கள் ஸ்பினோஸாவைப் படித்திருக்கிறார்களோ இல்லையோ, வருகிறார்கள்.
ஸ்பினோஸா பற்றி நாவல்கள், கவிதைகள், சிற்பங்கள், ஓவியங்கள், ஏன் நாடகங்களும், இசை நாடகங்களும் (ஓபெரா) கூட படைக்கப்பட்டுள்ளன. இதெல்லாம் நல்ல விஷயங்களே.
புதிராக உள்ளது இதுவே. 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர்ச்சுகீஸிய யூதத் தத்துவாளர், அவருடைய எழுத்துகளோ அடர்த்தியாகவும், புரிந்து கொள்ளவே முடியாதபடியும் மோசமாக இருப்பவை எனக் கருதப்பட்டு வந்திருக்கிறது. ஆனால், இன்று அவை இத்தனை உணர்ச்சி மேலிட்ட பக்தியையும், ஏன் தீவிர வசியத்தையும், 21ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சாதாரண மக்கள் நடுவே ஏன் எழுப்புவானேன்?
அவருடைய வாழ்வின் மையத்தில் இருக்கிற நாடகத் தன்மையும், அதைச் சுற்றியுள்ள மர்மங்களும்தான் இந்தக் கேள்விக்கு ஒரு பகுதி பதிலெனலாம். அவரை வளர்த்துப் போஷித்த ஒரு சமூகம் அவரை ஏன் இத்தனை கடுமையாகத் தண்டித்தது என்ற கேள்வி இந்த வகை உணர்வுகளைத் தூண்டுகிறது. இதே அளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டிய இன்னொரு காரணம்- எல்லாருக்குமே புனிதங்களை உடைப்பவரைப் பிடிக்கும் என்பது- குறிப்பாக தீவிர நோக்குள்ள, அச்சமேயில்லாத ஒரு மனிதர் தன் வாழ்நாளில் கண்டனங்களையும், துன்பங்களையும் தன் கருத்துகளுக்காகவும், மதிப்பீடுகளுக்காகவும் அனுபவித்திருக்கிறார். அந்தக் கருத்துகளோ இன்று நமக்கு அத்தனை முக்கியமானவையாகத் தெரியும் வகையானவை.
ஸ்பினோஸா அறிவுத் தளத்தில் தீரமாக இருப்பவர்களுக்கு ஒரு முன்மாதிரியானவர். ஒரு தீர்க்கதரிசியைப் போல அதிகாரத்தில் இருந்தவர்களை தயக்கமேதும் இல்லாத நேர்மையோடு எதிர்கொண்டார்.
அந்த நேர்மை அவரது சக குடிமக்களைப் பற்றியும், அவர்களது சமூகத்தைப் பற்றியும் மோசமான உண்மைகளை வெளிக் கொணர்ந்தது.
குடிமக்களைத் தமது நலன்களுக்கு எதிராகச் செயல்படுமாறு தூண்டுவோருக்கு எதிராக அறிவார்ந்த எதிர்ப்பைத் தெரிவிப்போருக்கு ஒரு முன்மாதிரியாக நிற்பவர் ஸ்பினோஸா.
ஸ்பினோஸாவின் தத்துவத்தில் பெருமளவும் 17ஆம் நூற்றாண்டின் நடுவருடங்களில் டச்சுக் குடியரசில் நிலவிய மோசமான அரசியல் நிலைக்கு ஒரு மறுவினையாக உருவானவைதான். 1660களின் இறுதி வருடங்களில், ‘உண்மையான சுதந்திரம்’ நிலவியதென்று கருதப்படும் கட்டத்தில் – அப்போது தாராளவாதிகளும், சுதந்திரச் சந்தையை முன்வைத்தவரும் நகரிலும், மாநிலத்து அரசுகளிலும் பெரும்பான்மை பிரதிநிதிகளாக இருந்தனர் – அச்சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலாக எழுந்தனர், மரபுவாதிகளான ஒராஞ்சியப்* பிரிவினர்.
*(அவர்கள் அப்படி அழைக்கப்படுவதற்குக் காரணம், இந்தப் பிரிவினர் ஒராஞ்ச் மாநிலத்தின் அரசகுமாரரின் கையில் குவிக்கப்பட்ட அதிகாரத்தை விரும்பினர், நிர்வாகம் அதற்குத் திரும்ப வேண்டுமெனக் கருதினர்.)
நெதர்லாந்தில் மாநிலக் கூட்டமைப்பு நிறுவப்பட்டபோது ஏற்பட்ட உடன்படிக்கையில் மரியாதைக்குரியதாக அமைக்கப்பட்டிருந்த சகிப்புத்தன்மை, மதச்சார்பற்ற நிலை ஆகிய கொள்கைகள் மதத்துக்கு அடிபணிவதையும், அரசியலிலும் சமூகத்திலும் பழமைக்கு அடிபணிவதையும் முன்வைக்கும் அரசியலால் அச்சுறுத்தப்படுவதாக, அரிக்கப்படுவதாக ஸ்பினோஸா கருதினார்.
1668ல், இவரின் நண்பரும், தீவிர அரசியலில் கூட்டாளியுமான ஆட்ரியான் கூர்பாஹ், கடவுள் நிந்தனை புரிந்ததாகவும், நாசகார வேலைகளில் ஈடுபட்டதாகவும் தண்டனை பெற்றார். அடுத்த வருடமே அவர் சிறைக்கூடத்தில் இறந்தார்.
அதற்கு மறுவினையாக ஸ்பினோஸா 1670ஆம் வருடம் தன் ‘மதத் தத்துவ- அரசியல் அறிக்கையை’ எழுதி வெளியிட்ட போது அது குறித்துப் பெரும் ஆரவாரம் எழுந்தது.
கடவுள், மதம், மற்றும் சமூகம் குறித்த ஸ்பினோஸாவின் கருத்துகள் இன்னமும் குறையாது பயனளிப்பவை.  பாதுகாப்பை நாடி, பேரத்தில் தம் உரிமைகளை விட்டுக் கொடுத்து விட அமெரிக்கர்கள் தயாராக உள்ள இந்தக் காலகட்டத்தில், அரசியலாளர்கள் ஒரு வகை மத நம்பிக்கை உள்ளவர்களை இந்தக் கரையில் (மொ.பெ. குறிப்பு: அமெரிக்க நிலத்தைச் சொல்கிறார் கட்டுரையாளர்) தடை செய்வதாகச் சொல்லித் திரியும் இக்காலத்தில், மதத் தீவிர வாதம் நம் சட்டங்கள் மீதும், பொதுக் கொள்கை மீதும் பெரும் தாக்கம் கொண்டு விளங்கும் இந்தக் காலத்தில், ஸ்பினோஸாவின் தத்துவம்- குறிப்பாக ஜனநாயகம், சுதந்திரங்கள், மதச் சார்பின்மை மேலும் சகிப்புத்தன்மை ஆகியனவற்றைக் காக்க அவர் முன்வைத்த கருத்துகள்- முன்னெப்போதையும் விடக் காலப் பொருத்தம் உள்ளவையாகின்றன.
டச்சுக் குடியரசில் க்ஷீணித்து வந்த அரசியல் நிலைகள் குறித்து அவர் கொண்ட மனத்துன்பங்களாலும், தனக்கே ஏற்பட்டு இருந்த ஆபத்துகளாலும் தயக்கம் கொள்ளாமல், ஸ்பினோஸா தானும், தன் சமகாலத்துச் சிந்தனையாளர்களில் பலரும் மிகவும் மதித்த மதியொளிக்கான தீவிர மதிப்பீடுகளைக் காக்கச் சிறிதும் தயங்கவில்லை.
நசுக்கும் அதிகாரத்தை எதிர்ப்பதற்கு ஊக்கத்தை ஸ்பினோஸாவிடம் பெறுகிறோம்; அறிவுக்கு  ஒவ்வாத நம்பிக்கைகளை ஊக்குவிப்பதன் மூலமும், அறியாமையை நீடிக்கச் செய்ய முயல்வதன் மூலமும், மக்களைத் தம் நலன்களுக்கு எதிரான வகையில் நடந்து கொள்ள வைக்க முயல்வோருக்கு எதிரான அறிவார்ந்த மறுப்பைத் தெரிவிப்பதற்கும் ஒரு முன்மாதிரியான நபரை நாம் காண்கிறோம்.
அப்ரஹாமிய மதங்களுக்குப் பொதுவாக உள்ள தேவபிதாவை மறுப்பதைத் தன் அடித்தளமாகக் கொண்டது ஸ்பினோஸாவின் தத்துவம். ஸ்பினோஸாவின் கடவுள், மனித அனுபவ உணர்தல்கள் அனைத்தையும் கடந்த, எல்லாப் பாதுகாப்பையும் கொடுக்கும் தேவதையின் உளநிலை, ஒழுக்க குணங்கள் எதுவும் இல்லாத ஒரு கருத்துரு.
ஸ்பினோஸாவின் ‘அறம்’ (1677ஆம் வருடத்தியது) என்னும் தத்துவச் சாதனையான புத்தகத்தில் உள்ள ‘தேவன்’ அன்பு செலுத்தும் ஒரு நபர் அல்ல. அதற்கு நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள், ஆசைகள் அல்லது உணர்ச்சிகள் எவையும்  கிடையாது.
ஸ்பினோஸாவின் ஆண்டவன் நல்லவரோ, மதியூகியோ (நல் ஞானியோ),  தான் அளித்துள்ள நீதி பொருந்திய சட்டங்களின் கட்டளைகளை ஏற்று நடப்போருக்கு சன்மானங்களையும், அதை விட்டு விலகியோருக்குத் தண்டனைகளையும் கொடுக்கும் நீதிபதியோ அல்ல.
ஸ்பினோஸாவின் கடவுள் இயற்கையே.
எங்கும் நிலவுவது இயற்கை ஒன்றுதான் (அவருடைய சொற்களில் ‘Deus Sive Natura,’ ‘கடவுள் அல்லது இயற்கை’). எதெல்லாம் இருக்கிறதோ அவை இயற்கையிலேயே இருக்கின்றன, இயற்கையின் விதிகளால் உண்டாகும் அவசியத்தாலேயே இருக்கின்றன. இயற்கைக்கு அப்பால் ஏதும் இல்லை, இயற்கையின் ஒழுங்கிலிருந்து விலகிப் போகும் எதுவும் இல்லை – அதிஅற்புதங்களும், இயற்கைக்கு மீறிய சம்பவங்களும் நடக்க முடியாதவை.
இயற்கையில் மதிப்பீடுகளும் இல்லை. எதுவும் இயல்பாகவே நல்லதோ, கெட்டதோ அல்ல, இயற்கையோ அல்லது இயற்கையில் உள்ள எதுவுமோ ஏதோ ஒரு நோக்கத்துக்காக இருப்பதுமில்லை. எதெல்லாம் இருக்கிறதோ அது இருக்கிறது, அவ்வளவே.
‘அறம் (Ethics)’ எனும் தன் நூலில் ஸ்பினோஸா சொல்கிறார்:

‘பிறழ்வான முடிவுகள் என்று இங்கு நான் அம்பலப்படுத்த முனையும் அனைத்தும் ஒன்றைத்தான் நம்பி இருக்கின்றன: மனிதர் பொதுவாக நம்புவதொன்று உண்டு, அது இயற்கையிலுள்ள எல்லாம், மனிதரைப் போல, ஒரு முடிவை நோக்கித்தான் செயல்படுகின்றன என்பது; எல்லாவற்றையும் கடவுள், தானே ஒரு நிச்சயமான முடிவை நோக்கி இயக்குகிறார் என்பதே அவர்கள் உறுதியாகச் சொல்வது. ஏனெனில், கடவுள் அனைத்துப் பொருட்களையும் மனிதனுக்காகத்தான் உருவாக்கி இருக்கிறார், அது மனிதன் ‘ஆண்டவரை’ வழிபட வேண்டும் என்பதற்காக என்று அவர்கள் சொல்கிறார்கள்’.

ஸ்பினோஸா பல சமயம் ‘பல கடவுள் வழிபாட்டாளர்’ என்று குறிப்பிடப்படுகிறார். ஆனால், ‘நாத்திகர்’ என்பதே பொருத்தமான சொல்லாக இருக்கும். இயற்கையை ஸ்பினோஸா இறையாம்சம் உள்ளதாக ஆக்குவதில்லை. வணக்கம் நிறைந்த பிரமிப்போடோ, அல்லது மத நம்பிக்கை சார்ந்த பணிவோடோ பார்க்கப்படும் பொருளல்ல இயற்கை.
ஸ்பினோஸா சொல்கிறார்:

மதியாளரான ஒருவர்’ இயற்கையைப் புரிந்து கொள்ள முயல்கிறார், அதைப் பார்த்து ஒரு மூடனைப் போல வாயைப் பிளந்து நிற்பதில்லை.’ கடவுளோ, இயற்கையோ எதையும் நோக்கி நாம் மேற்கொள்ள வேண்டியது, புத்தியின் மூலம் அதை அறிய விரும்பும் ஒரு பெருவிருப்பையே.

அனைத்தையும் காக்கும் ‘தேவபிதா’ என்ற உருவை அகற்றுவதன் மூலம், நிறுவனமாக்கப்பட்ட மதத்தால் முன்நிறுத்தப்படும் கொள்கைகளிலேயே மிகத் தொல்லைப்படுத்தும் கொள்கை என்று ஸ்பினோஸா குறிப்பிடும் ஒரு கருத்தின்மீது நாம் சந்தேகத்தை எழுப்ப முடிகிறது; அழிவில்லாத ஆன்மாவையும், அதன் மீது  ஏதோ ஓர் உலகில் இருக்கும் ஆண்டவரால் சுமத்தப்படப் போகிற தீர்ப்பையும் பற்றி நாம் ஐயம் கொள்ள முடிகிறது.
தேவபிதா நல்லவர்களுக்கு நன்மையையும், தீயவர்களுக்குத் தண்டனையும் கொடுப்பார் என்ற நம்பிக்கை உடைய மனிதர் ஒருவரின் வாழ்க்கை தொடர்ந்து எதிர்பார்ப்புகளாலும், அச்சங்களாலுமே வழி நடத்தப்படும். தேவபிதா தேர்ந்தெடுக்கும் மனிதருள் ஒருவராக இருப்போம் என்ற எதிர்பார்ப்பும், என்றென்றைக்குமாக சபிக்கப்பட்டு விடுவோம் என்ற அச்சமுமே அவை.
இப்படி, புத்திக்கு மாறான உணர்ச்சிகளால் அடக்கியாளப்படும் ஒரு வாழ்க்கை, ஸ்பினோஸாவின் சொற்களில், ஒரு ‘அடிமை’ வாழ்வு, அறிவுசார்ந்திருப்பதால் கிட்டும் சுதந்திர வாழ்க்கை அல்ல.
அறிவு மூலம் வாழ்க்கை நடத்தாது, உணர்ச்சிகளின் வழியே வாழ்வு நடத்தும் மனிதர்கள் மதப் பிரசாரகர்களினால் எளிதே மதி மயக்கப்படுகிறார்கள். சீர்திருத்தப்பட்ட சர்ச்சின் அடக்குமுறையையும், சகிப்பின்மையையும் முன்வைக்கும் கூறுகள் ஹாலந்தில் நிறைய பாதிப்பைக் கொணரத் தலைப்பட்டதும், மேற்படி மதிமயக்கம் பற்றிய கவலைதான் 1660களில் ஸ்பினோஸாவை மிகவும் பாதித்தது.
இன்று, மதங்களின் பல பிரிவுகளிலுள்ளவர்கள் பொது வாழ்வின் மீது அச்சம் தருமளவு தாக்கத்தைக் கொண்டு உலவுகையில் தெளிவு பெற்ற, மதச் சார்பற்ற ஜனநாயகங்களுக்குக் கூட இந்த வகை மயக்கம் அபாயமானதாகவே இருக்கிறது.
பொது வாழ்விலும், தனி மனித ஒழுக்கத்திலும் மத நம்பிக்கையின் இத்தகைய தலையீட்டின் தாக்கத்தைக் குறைக்கத்தான், ஸ்பினோஸா மரணத்துக்குப் பின் ஒரு அழிவில்லா வாழ்வு ஆன்மாவுக்கு உண்டு என்ற நம்பிக்கையைத் தாக்குகிறார்.
ஸ்பினோஸாவைப் பொறுத்தவரை, இறந்தோமானால் நாம் இறந்தவர்களே. மானுட புத்தியின் ஒரு பகுதி வேண்டுமானால் அழிவில்லா நிலைப்பு பெற்று இருக்கலாம். மீபொருண்மை (metaphysics), கணிதம் ஆகியனவற்றில் பொதிந்துள்ள கருத்துகளை நம் வாழ்நாளில் நாம் சேகரிக்கிறோம். அவை நம் அறிவின் பகுதியாகின்றன, அவை நாம் இறந்த பிறகும் உயிர்ப்போடு இருக்க வாய்ப்பு உண்டு.
ஏனெனில், அவையோ நிரந்தரமான உண்மைகள் – ஆனால் அவற்றில் ஏதும் தனிப்பட்ட வாழ்வுடையது அல்ல. அப்படிப்பட்ட அறிவுத் திரட்டின் பலன்கள் அல்லது சன்மானங்கள் இந்த உலகுக்கானவை, (மரணத்துக்குப் பிறகு) வரப்போகிறதென்று சொல்லப்படுகிற உலகுக்கானவை அல்ல.
இயற்கையைப் பற்றி நாம் மேன்மேலும் அறிகிற போது, அதுவும் குறிப்பாக ஒரு மனித ஜீவனாக நம்மைப் பற்றிய அறிவு கூடும்போது, மூர்க்கத்தனமான சந்தர்ப்ப நிகழ்வுகள் நம் மீது வீசும் அம்புகளையும், கவண்கற்களையும் தவிர்க்க முடியும். இயற்கையில் வாழும் எவருக்கும் சந்தோஷத்துக்கும், நலமான வாழ்வுக்கும் தடைகளாக இருப்பனவற்றைக் கடந்து செல்வது சாத்தியமாகும்.
அப்படிப் பட்ட அறிவுத் தெளிவின் விளைவு மன அமைதி: லாபங்களையும், நஷ்டங்களையும் வாழ்வு தவிர்க்கவொண்ணாமல் கொணரும்போது ஏற்படும் உணர்ச்சிப் பீறிடல்கள் மட்டுப்படுத்தப்படும், சாவுக்குப் பிறகு என்ன வருமோ என்ற கவலை பற்றி நாம் உளைச்சல் கொள்ளவும் மாட்டோம்.
ஸ்பினோஸா இதை லாகவமாக எழுதுகிறார்,

“சுதந்திரம் பெற்ற மனிதர் ஒருவர் சிந்திக்கும் விஷயங்களில் சாவு என்பதுதான் கடைசி பட்சமாக இருக்கும், அவருடைய தெளிவான அறிவு என்பது வாழ்வைப் பற்றிய ஆழ்யோசனையாகவே இருக்கும், சாவைப் பற்றியதாக இருக்காது.”

குடிமக்களின் வாழ்வுகளைத் தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பும் மதப் பிரச்சாரகர்களிடம் கைவசம் உள்ள போர்க்கலன்களில் இன்னொரு ஆயுதம் இருக்கிறது.
அவர்கள் ஒரே ஒரு புத்தகம்தான் கடவுளின் உறுதிமொழிகளை நமக்குக் காட்டுகிறது எனவும், இறுதியில் இரட்சிப்புக்கான பாதையையும் அது ஒன்றே காட்டுகிறது எனவும், அவர்கள் மட்டுமே அந்தப் புத்தகத்தை எப்படிப் புரிந்து கொள்வது என்று தெரிந்தவர்கள் என்றும் சொல்வார்கள்.
உண்மை என்னவென்றால், ஸ்பினோஸா இப்படி அறிவிக்கிறார் அதை,

‘அவர்கள் தம்முடைய எல்லையற்ற கற்பனையில் என்னவெல்லாம் தோன்றியதோ அதை எல்லாம் புனித ஆவி சொன்னதாகச் சொல்லி விடுவார்கள்.’

ஸ்பினோஸாவின் மிகப் புகழ் வாய்ந்தவையும், தாக்கமுள்ளவையும், எரியூட்டக் கூடியவையுமான கோட்பாடுகளில் ஒன்று, புனித விவிலிய நூலின் (scripture) மூலாதாரத்தையும், அவற்றுக்கிருக்கும் அந்தஸ்தையும் பற்றியது.
விவிலியம் (பைபிள்) என்பது நேரடியாகக் கடவுள் படைத்ததல்ல என்று தன் ‘தியலாஜிகல்- பொலிடிகல் ட்ரீடீஸ்’ என்ற நூலில் வாதிடுகிறார் ஸ்பினோஸா. இயற்கை பொருண்மையைத் தாண்டி வந்து அறிவிப்புகள் செய்யக் கூடியதல்ல, அல்லது எழுத ஆக்கினையிட்டுப் பேசுவதில்லை, எதையும் எழுதுவதும் இல்லை. புனித நூல் (scripture) ‘சுவர்க்கத்திலிருந்து கடவுளால் கீழே உள்ள மனிதருக்கு அனுப்பப்பட்டதுமல்ல’.  மாறாக, அது இவ்வுலகைச் சேர்ந்த ஓர் ஆவணம்.
பல சமூகப் பொருளாதாரப் பின்னணிகளிலிருந்து வரும் பல ஆசிரியர்கள் நீண்ட கால இடைவெளியில் பலவேறு தருணங்களில் எழுதிப் படைத்த பிரதிகள், சரித்திரத்திலும், அரசியலிலும் பற்பல சூழல்களில் எழுதப்பட்டவை. பிரதிகளிலிருந்து எடுக்கப்பட்ட பிரதிகளிலிருந்து எடுக்கப்பட்ட பிரதிகள் வழியே பல தலைமுறைகளுக்குக் கொடுக்கப்பட்டவை.
இறுதியில், இரண்டாம் மடாலயக் காலத்தில் (Second Temple period), அனேகமாக எஸ்ராவின் பதிப்பாசிரிய மேற்பார்வையின் கீழ், இந்தப் படைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றன. (அதுவும் பல தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவுகள் கொண்ட நடைமுறைதான், என்று ஸ்பினோஸா வலியுறுத்துகிறார்).
எஸ்ராவுக்கோ இந்தப் பல மூல நூல்களிலிருந்து சில பகுதிகளைத்தான் ஒருங்கிணைக்க முடிந்திருக்கிறது. அப்படித்தான் ஒரு நூலாக இது உருவெடுத்தது. இப்படி குறைகளோடு இணைக்கப்பட்ட தொகுப்புதான் பல நூற்றாண்டு காலவெளியில் கடத்தப்பட்டபோது ஏற்படும் மாற்றங்கள் கொண்ட பிரதியாகத்தான் கிட்டி இருக்கிறது.
இன்று நம்மிடம் இருக்கும் விவிலிய நூல் ஒரு இலக்கியப் படைப்புதான், அதுவும் ‘தவறுகளைக் கொண்டதும், சிதைக்கப்பட்டதும், கலப்படங்கள் கொண்டதும், முன் பின் முரண்களைக் கொண்டதுமான’ நூல். பிறப்பிலேயே அது ஒரு கலப்பின நூல், பல நூறாண்டுகளைக் கடந்து வரும்போதும், பாதுகாப்பு முறைகளாலும் பலவேறு கலப்படங்களால் மாற்றப்பட்டதுமான நூல். பல வேறு காலங்களில், பலவேறு வாசகர்களுக்காக, பலவகை மனிதர்களால் எழுதப்பட்ட பலவேறு பிரதிகளின் கலவை.
மனிதர் தோற்றுவிக்கப்பட்டது பற்றி, விவிலியக் கோட்பாடுகள் பற்றி, தன் கருதுகோளை முன்வைப்பதோடு விவிலிய நூலின் படைப்பாளர்களைப் பற்றிய விவரணைகளையும் கொடுக்கும் ஸ்பினோஸா, அந்த விவரணையில் அம்மனிதர்களைக் கீழிறக்கி வைக்கிறார்.
தீர்க்கதரிசிகள் என அறியப்பட்டவர்கள் அப்படி ஒன்றும் கற்றறிந்த மனிதர்கள் அல்ல. உயர்ந்த அளவு படிப்பைப் பெற்றவர்களோ, ஆழ்ந்த அறிவு சார்ந்த சிந்தனை வளம் கொண்டவர்களோ அல்ல. அவர்கள் நிச்சயமாக தத்துவாளர்களோ, இயற்பியலாளரோ அல்லது வான சாத்திரமறிந்தவர்களோ இல்லை. இயற்கை பற்றியோ, அண்டவெளி பற்றியோ அவர்களின் படைப்புகளிலிருந்து நமக்கு எந்த உண்மைகளும் கிட்டுவதில்லை. (ஜாஷுவா சூரியன் பூமியைச் சுற்றுகிறது என்று நம்பியவர்.) மீபொருண்மைத் தளத்திலோ, ஏன் சமயத் தத்துவத்திலோ கூட அவர்களிடமிருந்து உண்மைகள் ஏதும் கிட்டுவதில்லை. தீர்க்கதரிசிகள் பெரும்பாலான நேரங்களில் கடவுளைப் பற்றி மிகவும் வெள்ளந்தியான அல்லது, தத்துவ ரீதியாகத் தவறான நம்பிக்கைகளையே கொண்டிருந்தனர்.
ஆனாலும், அவர்கள் ஒழுக்கத்தில் உயர்ந்த மனிதர்களாகவும், ஜீவனுள்ள கற்பனை வளம் கொண்டவர்களாகவும் இருந்தனர், அதனால் விவிலியத்திலிருந்து பெறுவதற்குச் சிறிதேனும் உண்மை இருந்தது. அந்த உண்மையே சிதைப்பு இல்லாமல் உரக்கவும் தெளிவாகவும் வெளிப்படுகிறது. விவிலியத்தின் இறுதிப் படிப்பினை என்றால், அது மிக எளியதொன்றுதான்: உன் சக மனிதர்பால் நீதியைக் கடைப்பிடி, பாசமுள்ள அன்பைக் காட்டு.
புனிதநூலின்  அனைத்துக் கதைகளிலிருந்தும், கட்டளைகளிலிருந்தும் வெளிவருவது இந்த ஒழுக்கச் செய்திதான் அடிப்படையானது. பல நூற்றாண்டுகளில் கடந்து வரும் பிரதிகளில் ஊழல்களாலும், திருத்தங்களாலும், எழுதியவர்கள் செய்த பிழைகளாலும் சிதைப்புண்ட பிரதிகளில், பல மொழிகளிடையே இருக்கும் வேறுபாடுகளையும் கடந்து அழியாமல் வரும் ஒரு செய்தி அதுதான். இது ஹீப்ரூ பேசிய தீர்க்கதரிசிகளிடமே இருந்தது என்று ஸ்பினோஸா சாதிக்கிறார்.

‘உங்கள் மக்களில் ஒருவரிடம் பகைமை பாராட்டாதீர்கள், பழி தீர்க்க எண்ணாதீர்கள், ஆனால் உங்கள் அண்டை வீட்டாரிடம் சுயத்தின் மீதுள்ள அதே கனிவைக் காட்டுங்கள்.’

[லெவிடிகஸ் [19:18] ) பௌலின் கடிதங்களிலும் இது உள்ளது (’தன் அண்டை வீட்டுக்காரரிடம் எவனொருவன் கனிவு காட்டுகிறானோ, அவன் சட்டத்தின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்துள்ளான்.’ [ரோமர் 13:8]).
ஸ்பினோஸா மேலும் எழுதுகிறார்:

‘இப்படி ஒரு போதனையில் குழப்பத்தையோ, சந்தேகத்தையோ விதைக்கக் கூடிய எந்தப் பிழையையும், அல்லது மாற்று வாசிப்பையும் நான் ஒழுக்கக் கோட்பாடுகளில் எங்குமே பார்த்ததில்லை என்று நிச்சயமாகச் சொல்வேன்.’

இந்த ஒழுக்கக் கோட்பாடுதான் விவிலிய நூலின் தெளிவானதும், உலகப் பொதுவுமான செய்தி. அதிகாரத்துக்கான வெறியோ, மூட நம்பிக்கையோ, வெறுப்போ தடுப்பதால் இதைச் சரியாகப் படிக்க முடியாதிருப்பவர்களைத் தவிர மற்றெல்லாருக்குமாவது கிட்டக் கூடியது இதுவே.
விவிலியத்தை ‘தேவன் அருளியது’ என்று எந்த அடிப்படையிலாவது ஸ்பினோஸா நம்புகிறாரா? அப்ரஹாமிய மதங்களின் மரபுகளுக்கோ, தீவிரவாதிகளின் நம்பிக்கைகளுக்கோ அவசியமான எந்த வடிவுகளிலும் எதெல்லாம் மையமாக உள்ளனவோ அவற்றை ஸ்பினோஸா ஏற்கவில்லை. ஸ்பினோஸாவுக்கு விவிலிய நூலின் இறைத் தன்மை என்பது- உண்மையில் எந்த நூலிலும் உள்ள புனிதத் தன்மை- முற்றிலும் அதன் செயல்திறனைப் பொறுத்ததே. ஓர் இலக்கிய நூல் அல்லது கலைப் படைப்பு என்பது, ‘இறைவனின் வாக்கை’ திறமையோடு கொண்டு வந்து சேர்க்கும்போதே அது ‘புனிதமானது’ அல்லது ‘தேவனருள்’ கொண்டதாகிறது.
‘தேவனின் செய்தி’ எனும் ‘உலகப் பொது மறைச் சட்டம்’ என்பது என்ன?
எது விவிலியப் பிரதிகளூடே செய்தியாகக் கிட்டுகையில் ‘சிதைக்கப்படாமலும்’ ‘கலப்படமில்லாமலும்’ இருக்கிறதோ அதுவே அந்தச் சட்டம்: உங்கள் அண்டை வீட்டாரை நேசியுங்கள், அவர்களை நீதியோடும், கருணையோடும் நடத்துங்கள்.
ஆனால் புனிதநூல் வேறெந்த இலக்கியப் படைப்பையும் விட, தேவனின் நீதியையும், கிருபையையும் அது சித்திரித்த வகையில் இருந்து கிட்டிய பாடங்களைத் தம் வாழ்வில் பின்பற்றவும், கடைப்பிடிக்கவும் மனிதருக்கு உந்து சக்தியாக இருப்பதில் மிக்க தாக்கமுள்ளதாக இருக்கிறது.
ஒரு பொருள் புனிதமானது என்றும் தெய்வீகமானது என்றும் குறிக்கப்படுவதற்குக் காரணம், அதன் நோக்கம் சிரத்தையையும், மத நம்பிக்கையையும் வளர்ப்பதாக இருப்பதே. மனிதர் மதவழியைக் கடைப்பிடிக்க எத்தனை காலம் பயன்படுத்துகிறாரோ அத்தனை காலம்தான் புனிதமானதாக இருக்கும்.’ என்கிறார் ஸ்பினோஸா.
வேறு விதமாகச் சொன்னால், அனைத்துக்கும் மேலாக, ஒழுக்க நடத்தையை மேன்மைப்படுத்தும் இலக்கியப் படைப்பாக அது இருக்கிறது என்பதில்தான் புனிதநூலின்  தெய்வீகத் தன்மை உள்ளது.
ஆனாலும், இந்தக் காரணத்தாலேயே, புனிதநூல்  மட்டுமே ‘தெய்வீகமான’ ஒரே இலக்கியமாக ஆகாது. வில்லியம் ஷேக்ஸ்பியரின் ‘த டெம்பஸ்ட்’ (நாடகத்தையோ), மார்க் ட்வெயினின் ‘அட்வெஞ்சர்ஸ் ஆஃப் ஹக்குல்பெர்ரி ஃபின்’ நாவலையோ படித்து ஒருவர் நீதியையும், கருணையையும் நோக்கி நகர்ந்தாரென்றால், அல்லது சார்ல்ஸ் டிக்கென்ஸின் ‘ஹார்ட் டைம்ஸ்’ ஐப் படிப்பது ஒருவரை அன்பையும், தயாள குணத்தையும் நோக்கி நகர்த்தியதென்றால், அப்போது இந்த நூல்களும் தெய்வீகமானவை, புனிதமானவை என்றாகி விடும்.
கடவுளின் வாக்கு என்பது, ஸ்பினோஸாவின் கூற்றுப்படி, ‘எண்ணிக்கையில் குறைவான சில புத்தகங்களின் எல்லைக்குள் அடைக்கப்பட்டு விடுவதில்லை.’
டெகார்த்தியத்தைப் பின்பற்றிய லாம்பெர் வான் வேல்தூய்சென், ஸ்பினோஸாவுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் எதிர்ப்பைத் தெரிவிக்கிறார். தியலாஜிகல்-பொலிடிகல் ட்ரீடீஸ் புத்தகத்தின் கருத்துப்படி, ‘குரானும் கூட, கடவுளின் வாக்கு என்பதோடு சமமாக வைக்கப்பட்டு விடும்’. ஏனெனில் ‘துருக்கியர்கள்… அவர்களுடைய நபியின் கட்டளைப்படி, நாடுகளிடையே வேறுபாடு ஏதும் இல்லாத சில ஒழுக்க நன்னெறிகளைக் கடைப்பிடிக்கிறார்கள்.’
ஸ்பினோஸா இந்தச் சுட்டுதலை அங்கீகரிக்கிறார், ஆனால் அதை ஒரு மறுப்பாகப் பார்க்கவில்லை. யூத மற்றும் கிருஸ்தவ மரபுகளின் புனித நூலிலும், அப்படிப்பட்ட இதர புத்தகங்களிலும் உள்ள தீர்க்கதரிசிகளைத் தவிர வேறு உண்மையான தீர்க்கதரிசிகள் இருப்பதாக ஏற்க அவருக்கு ஒரு தடையும் இல்லை.
சக மனிதர்களை எப்படி நடத்த வேண்டுமென்று சொல்லும் விவிலியத்தின் ஒழுக்க நெறி பற்றிய செய்தியும், இதர வழிநடத்தல்களும் உண்மையாக, ‘கடவுளின் உரை’தான். அப்படியானால், உண்மையான இறைவழிபாடும் மத ஒழுக்கமும், சடங்குகளோடும், விழாக்களோடும் சிறிதும் தொடர்பற்றவை என்று ஸ்பினோஸா வலியுறுத்துகிறார்.
உணவுப் பழக்க விதிகள், வழிபாட்டு முறைகள், பலி கொடுக்கும் முறைகள், பிரார்த்தனைகள்- நிறுவனமாக்கப்பட்ட மதத்தின் இத்தகைய கூறுகள் எல்லாமே மூட நம்பிக்கைகளே அன்று வேறில்லை. அவற்றின் வரலாற்று- அரசியல் வேர்கள் என்னவாக இருந்த போதிலும், அவற்றுக்கு இன்று தர்க்க ரீதியாக எந்த அவசியமும் இல்லை. அவை மதபோதகர்களால் இன்னும் முன்வைக்கப்படுவதற்கு ஒரே காரணம், அவை பணிவாக, சொன்னதைச் செய்யும் வழிபாட்டாளர்களை உருவாக்கும் என்பதே.
ஸ்பினோஸா ‘உண்மையான மதம்’ என்றும் ‘உண்மையான இறைவணக்கம்’ என்றும் கருதுகிறது எதுவோ அதற்கு, ஒரு வரலாற்றுச் சம்பவத்தின்பாலும் நம்பிக்கை தேவைப்படாது. இயற்கையை மீறிய அதிசய நிகழ்வுகளோ, மீபொருண்மை சார்ந்த கோட்பாடுகளோ தேவைப்படாது. அது எந்த பக்திச் சடங்குகளையும் முன்வைப்பதும் இல்லை. கடவுளின் தன்மை பற்றியோ, அண்டபேரண்டத்தையும் அதன் துவக்கங்கள் பற்றியும் எந்த தத்துவச் சாதிப்புகளையும் நம்பும்படி அது வலியுறுத்துவதில்லை.
தெய்வீகச் சட்டம் என்பது இதர மனிதர்களின்பால் நீதியோடும், தயாள உணர்வோடும் நடக்கும்படி மட்டுமே சொல்கிறது. ‘[நாம்] நீதியை முன்வைக்க வேண்டும், திக்கற்றவர்களுக்கு உதவ வேண்டும், கொலை ஏதும் செய்யக் கூடாது, சக மனிதரின் பொருட்களுக்கு ஆசைப்படக் கூடாது, இத்தியாதி…’.
இதர சடங்குகள், விழாக்கள் என்று விவிலியத்தில் கட்டளையிடப்பட்டன எல்லாம் உள்ளீடற்ற வழக்கங்கள், அவை ‘ஆசீர்வதிக்கப்பட்ட நிலையையோ, நன்னெறியையோ’ அளிப்பதில்லை [என எழுதுகிறார்].
உண்மையான மதம் என்பது ஒழுக்கமான நடத்தையன்றி வேறல்ல. அது நீங்கள் நம்புவது ஏதுமல்ல. ஆனால், நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதுதான் பொருட்படுத்தப்பட வேண்டியதாகும்.
1675 இல், ராயல் சொஸைட்டி ஆஃப் ஓல்டன்பர்க் என்னும் அமைப்புக்கு  எழுதுகையில் ஸ்பினோஸா சொல்கிறார், ‘மதத்துக்கும், மூட நம்பிக்கைகளுக்கும் இடையே வேறுபாடு என்று நான் காண்பது இதுவே: பின்னது அறியாமையால் நிறுவப்படுகிறது, முன்னது மதிவிசாலத்தால்’.
தியலாஜிகல்-பொலிடிகல் ட்ரீடிஸ் புத்தகத்தில் ஒரு அரசியல் லட்சியமாக ஸ்பினோஸா முன்னிறுத்துவது மதச்சார்பற்ற, ஜனநாயக, பொதுவளமை (குடியரசு) அமைப்பு. அது மதபோதகர்களின் இடையீடு இல்லாததாக இருக்கும்.
வரலாற்றில் சுதந்திரத்துக்கும், சகிப்புத்தன்மைக்கும் ஆதரவு தெரிவிப்பதில் நாவன்மை மிக்கவர்களாகத் தெரிபவர்களில் ஸ்பினோஸாவும் ஒருவர். ட்ரீட்டிஸ் புத்தகத்தின் இறுதி லட்சியம் அதன் கிளைத்தலைப்பிலும், இறுதி அத்தியாயத்தில் உள்ள வாதங்களிலும் மையமாகப் பொதிந்துள்ளது:

‘தத்துவம் படைக்கும் சுதத்திரத்தால் இறைநம்பிக்கைக்கும், குடியரசுடைய நிலைப்புக்கும் எந்த ஆபத்தும் விளையாது என்பது உணரப்படுவதோடு, அந்த சுதந்திரத்தை மறுப்பது குடியரசின் அமைதியையும், இறைநம்பிக்கையையுமே குலைக்கும் என்பதும் அறியப்பட வேண்டும்.’

எல்லாக் கருத்துகளும், அவை என்னவாக இருந்தாலும், மதம் சார்ந்த கருத்துகளாக இருந்தாலும், முற்றிலும் சுதந்திரமாகவும், தடுக்கப்படாமலும் அனுமதிக்கப்பட வேண்டும். இது அவசியம் கருதியும், உரிமை என்றும் அனுமதிக்கப்பட வேண்டும்.

‘புத்தி என்பது இன்னொருவரின் முழுக் கட்டுப்பாட்டில் இருப்பது எனும் போக்கு சாத்தியமில்லாத ஒன்று; ஏனெனில், எந்த விஷயத்தைப் பொறுத்தும் சுதந்திரமாகச் சிந்திக்கவும், தன் மதிப்பீடுகளைத் தானே உருவாக்கிக் கொள்ளவும் ஒருவருக்கு இயற்கையில் உள்ள தன் உரிமையை இன்னொருவருக்கு கொடுத்துவிட யாருக்குமே இயலாது. அப்படி ஒருவரை நாம் வற்புறுத்தவும் முடியாது.’

அவர் காலத்துக்கு மிகத் துணிகரமானதும், அதே நேரம் மிகச் சரியானதுமான ஒரு பத்தியில் ஸ்பினோஸா எழுதுகிறார்:

‘மனிதரின் புத்திகளைக் கட்டுப்படுத்த முயலும் ஒரு அரசாங்கம் கொடுங்கோல் அரசாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு மனிதருக்கும் எதை உண்மை என்று ஏற்க வேண்டும், எதைப் பொய் என்று விலக்க வேண்டும், எந்த நம்பிக்கைகள் கடவுளின்பால் விசுவாசத்தை வளர்த்துக் கொள்ள அவருக்கு ஊக்கம் தரும் என்றெல்லாம் ஓர் அரசர் ஆணையிட முயன்றால் அவர் பிழை புரிபவராவார். இந்த விஷயங்கள் எல்லாம் தனிமனித உரிமையைச் சார்ந்தவை. தன் சுய விருப்பத்தினாலும் கூட ஒரு மனிதரால் இந்த உரிமைகளைக் கைவிட்டு விட முடியாது.’

ஓர் அரசு, மக்கள் என்ன சிந்திக்கிறார்கள் என்பதைக் கட்டுப்படுத்த நிச்சயமாக முயலலாம். ஆனால், அப்படிப்பட்ட ஒரு பயனற்ற, முட்டாள்தனமான அரசுக் கொள்கை நிச்சயமாக அந்த ஆட்சி மீது வெறுப்பையும், அதற்கு எதிர்ப்பையும்தான் உருவாக்கும்.
ஆனாலும், நம்பிக்கைகளைச் சகித்துக் கொள்வது ஒரு விஷயம். அதை விடக் கடினமான செயல், குடிமக்கள் எழுத்திலோ, பேச்சிலோ தம் நம்பிக்கைகளை வெளிப்படுத்துவதற்குக் கொள்ளும் உரிமையைப் பொருத்தது. இங்கு ஸ்பினோஸா 17 ஆம் நூற்றாண்டிலிருந்த வேறெவரையும் விட அதிகத் தொலைவு செல்கிறார்.

‘ஓர் அரசு, குடியரசில், வெவ்வேறானவையும், எதிரெதிரானவையுமான கருத்துகள் கொண்ட மனிதரை, தான் முன்வைக்கும் விதங்களில்தான் பேசலாம் என்று வற்புறுத்த ஏதும் முயற்சி செய்தால் அது முழுத்தோல்வியில்தான் முடியும்…. தான் நினைப்பதை வெளிப்படுத்தவும், பிறருக்கு அதைத் தெரிவிக்கவும் ஒரு தனிநபருக்கு உள்ள உரிமையைத் தடை செய்யும் அரசு மிக ஒடுக்குமுறை கொண்ட அரசாகவே இருக்கும். மிதமான அரசு என்பது எங்கே ஒவ்வொரு மனிதருக்கும் இந்தச் சுதந்திரம் கொடுக்கப்படுகிறதோ அங்குதான் இருக்கிறது.’

ஒருவர் விரும்பியபடி பேசக் குடிமக்களுக்கு உள்ள உரிமை (அதிகாரம்) குறித்த நடைமுறை நிஜம்; அப்படிப்பட்ட சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த ஓர் அரசு முயன்றால் அது எப்படிப்பட்ட எதிர்விளைவைக் கொணரும் என்கிற இன்னொரு நிஜம் ஆகிய இவ்விரண்டையும் அடிப்படையாகக் கொண்டது நம்பிக்கைகளைப் பொறுத்த சுதந்திரம், என்பது ஸ்பினோஸாவின் வாதம்.
பேச்சுரிமை மற்றும் இதர வகை வெளிப்பாடுகளுக்கு எதிராக என்ன சட்டங்களை இயற்றினாலும், குடிமக்கள் தாம் நம்புவதைச் சொல்வதைத் தொடரவே செய்வார்கள். என்ன, இப்போது அதை ரகசியமாகச் செய்வார்கள்.
வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை அடக்கச் செய்யும் இந்த எல்லா முயற்சிகளும் அரசின் மேலான விசுவாசத்தினால், ஒட்டுறவால் மக்கள் இணைவதை மெலிதாக்கும். ஸ்பினோஸாவின் கருத்தில், சகிப்பில்லாத சட்டங்கள் இறுதியில் வெஞ்சினத்துக்கும், பழி வாங்கலுக்கும், தேசத் துரோகத்துக்கும்தான் இட்டுச் செல்லும்.
நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட அரசில் கருத்துகள் குற்றங்களாக ஆக்கப்பட மாட்டா. ஒரு ஆரோக்கியமான பாதுகாப்புள்ள அமைதியான குடியரசைப் பெறும் பொருட்டும், பொருள்வளம், மற்றும் அறிவார்ந்த முன்னெடுப்பு ஆகியனவற்றை அடையும் பொருட்டும், தத்துவ விசாரத்துக்கான சுதந்திரம் என்பது உயர்த்திப் பிடிக்கப்பட வேண்டும்.
சமூக உரிமைகளுக்குப் பரவலாக மரியாதை செலுத்துவது என்பது சில கசப்பான விளைவுகளுக்கு இட்டுச் செல்லும் என்பதை ஸ்பினோஸா புரிந்து கொண்டிருக்கிறார்.
மக்கள் அரசியல், சமூகம், ஒழுக்கம் மற்றும் மதம் பற்றிய விஷயங்களில் தம் கருத்துகளைச் சுதந்திரமாகச் சொல்ல முயலும்போது பொதுவில் சர்ச்சைகள் எழும்; குழுக்களாகப் பிரிந்து எதிரெதிராக நிற்பது எழும். இருந்தபோதும், ஒரு ஆரோக்கியமான, ஜனநாயகம் உள்ள, சகிப்புத்தன்மை உள்ள சமூகத்தின் விளைவுகளே இவை.

‘இறைநம்பிக்கை மற்றும் மதம் ஆகியன தொண்டை, நியாயமான செயல்பாடுகளை நடத்தையில் கொள்வதுதான் என்று கருதுவதை விட பாதுகாப்பான பாதை ஓர் அரசுக்கு இராது. மேலும், மதம் மற்றும் மதச் சார்பில்லாத விஷயங்களில் ஓர் அரசின் உரிமை என்பது மனிதரின் செயல்கள் மீதுதான் செலுத்தப்பட வேண்டும். மற்றபடி எல்லா மனிதரும் அவர்கள் விரும்புவதை எண்ணவும், சிந்திப்பதைப் பேசவும் உரிமை பெற்றிருக்க வேண்டும்.’

சகிப்புத் தன்மை பற்றிய நவீனகாலத்தின் அருமையானதோர் அறிக்கையான இந்த வாக்கியம்தான், ஒருவேளை, ட்ரீட்டீஸ் புத்தகத்தின் உண்மையான படிப்பினையோ என்னவோ. மேலும், இதற்காகத்தான் ஸ்பினோஸா இன்றளவும் நினைவு வைத்திருக்கப்படுகிறார் போலும்.
2012 ஆம் ஆண்டில், ஆம்ஸ்டர்டாம் நகரின் போர்ச்சுகீஸிய யூதப் பிரார்த்தனை சமூகத்தின் ஓர் உறுப்பினர், ஸ்பினோஸா மீது சுமத்தப்பட்ட ஹெரெம் தண்டனையை நீக்குவது குறித்து முடிவெடுக்கும் காலம் இறுதியில் இப்போது வந்துவிட்டது என்று வற்புறுத்தினார். அப்போது, மா’மத் அல்லது மதபோதகர்களல்லாத சமூகத் தலைவர்கள், இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த முடிவை எடுப்பதற்கு வெளியிலிருந்து ஆலோசனைகளைத் தேடினர்.
ஸ்பினோஸாவின் மீது விதிக்கப்பட்ட தடைக்குப் பின்னுள்ள வரலாறு, தத்துவம், அரசியல், மற்றும் மதச் சூழ்நிலைகள் மீதான பல கேள்விகளுக்கு விடைகள் தருவதற்கென – என்னோடும், கூட இன்னும் வேறு மூன்று அறிஞர்கள் கொண்ட குழுவை- ஆலோசனைக் குழுவாகக் கூட்டினர். அவர்கள் எங்களிடம் எந்த குறிப்பிட்ட நடவடிக்கையை எடுக்கலாம் என்று பரிந்துரைக்கும்படி கேட்கவில்லை எனினும், தடையை நீக்குவது என்ற செய்கையின் சாதக பாதகப் பின் விளைவுகளைப் பற்றி எங்கள் கருத்துகளைக் கேட்டறிந்தார்கள்.
நாங்கள் எங்கள் அறிக்கைகளைச் சமர்ப்பித்தோம். பிறகு ஒரு வருடத்துக்கும் மேலாக எந்தச் செய்தியும் இல்லாதே காலம் கழிந்தது. இறுதியாக, 2013 ஆம் வருடத்தின் கோடைகாலத்தில், எங்களுக்கு வந்த ஒரு கடிதம், அந்தப் பிரார்த்தனை சமூகத்தின் ராபை (மதபோதக வழிகாட்டி) அந்த ஹெரெம் நீக்கப்படலாகாது என்று முடிவு எடுத்திருப்பதாகத் தெரிவித்தது.
ஸ்பினோஸா பாதை தவறியவர்தான் என்பது அவர் கருத்து. பொதுச் சமூகத் தளத்தில் கருத்து சுதந்திரம் இருப்பதை நாம் எல்லாரும் பாராட்டுவோம்; என்றாலும், மரபு சார்ந்த யூதம் என்னும் உலகில் அப்படி ஒரு சுதந்திரம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதற்கு ஒரு காரணமும் இல்லை என்று அவர் சொல்லி இருந்தார்.
தவிரவும், அவர் சாதுரியமான ஒரு கேள்வியையும் எழுப்பி இருந்தார், ‘இன்றைய சமூகத் தலைவர்கள் ஸ்பினோஸாவின் விஷயத்தில் முடிவெடுப்பதற்கு, முதலில் அவரைத் தண்டித்த ராபைகளை விட ஞானஸ்தர்களா, மேலான விஷய அறிவுள்ளவர்களா?’
இந்த சம்பவத்தைப் பார்த்திருந்தால் ஸ்பினோஸா இவற்றை எல்லாம் நகைப்பூட்டுவதாகவே பார்த்திருப்பார் என்பதில் ஐயமில்லை.
‘இஸ்ரெயிலின் மக்கள்-சமூகத்தில்’ மறுபடி சேர்க்கப்படுவதை அவர் விரும்புகிறாரா என்று அவரைக் கேட்டிருந்தால், அனேகமாக அவர் பதில் இப்படி இருந்திருக்கும்: ‘உங்களுக்கு என்ன வேண்டுமோ அதைச் செய்யுங்கள். எனக்கு அது பற்றி ஒரு அக்கறையும் இல்லை.’

Hirszenberg_-Spinoza-and-the-Rabbis

இயான் பத்திரிகையில் 28 ஏப்ரல் 2016 அன்று வெளியான கட்டுரை. சுட்டி இதோ: At a time of zealotry, Spinoza matters more than ever | Aeon Essays
ஆங்கில மூலம்: ஸ்டீவன் நாட்லர்
தமிழாக்கம்: மைத்ரேயன் (ஜூன் -ஜூலை 2016)

3 Replies to “ஸ்பினோஸா ஏன் இன்றும் பொருட்படுத்தக் கூடியவராக இருக்கிறார்?  ”

 1. அவசியமான கட்டுரை. இன்றும் ஸ்பினோஸா விலக்கப்பட்டவராகவே இருக்கும் தகவல் லேசான அதிர்ச்சி தருகிறது.
  மதத்தில் இருந்து விலக்கப்பட்ட ஒருவரின் சிந்தனைகளை அந்த மத வழிபாட்டுத் தலத்தில் உரையாட, பாராட்ட அதே மதம் இடம் கொடுப்பதும் சுவாரஸ்யம். இது மற்ற ஆபிரகாமிய மதங்களிடம் இருந்து யூத மதத்தை பிரித்துக் காட்டுகிறது.
  பெட்ரன்ட் ரஸ்ஸலின் கருத்துக்களை ஒரு சர்ச்சில் வைத்து பாராட்ட முடியாது. அபு ஈஸ அல்-வரக், இப்ன் அல்-ரவண்டி, அல்-மாரி, இப்ன் வரக், அலி டசஷ்டி, இப்ன் மஸுத், ஸையத் அஹ்மத் க்ஹான் போன்றோர்களின் சிந்தனைகளை எந்த மசூதியிலும், தர்காவிலும் வைத்து உரையாட முடியாது.
  அவ்வகையில், இது யூத மதத்தின் தனித்துவமாகத் தெரிகிறது.

 2. கட்டுரையாளர் ஸ்பினோஸாவை ஒரு நாத்திகர் என்கிறார். இது ஆபிரகாமிய உலகின் பார்வையில் சரியாக இருக்கலாம். ஆனால், ஒரு உலகில் உள்ள அனைத்துத் தத்துவங்களையும் ஒப்பீட்டில் நன்கு கற்று அறிந்த கட்டுரையாசிரியர் இப்படிச் சொல்வது ஆச்சரியம் தருகிறது.
  ஸ்பினோஸாவின் சிந்தனைகளை அவர் ஒரு ஆபிரகாமியப் பார்வையில் சுருக்கி விடுகிறார். “ஸ்பினோஸாவின் கடவுள் இயற்கையே.” என்று அவர் சொல்லும்போது அது சற்று அபத்தமாகவே தெரிகிறது.
  ஏனெனில், பேந்தியிஸம் (Pantheism) என்றழைக்கப்படும் தத்துவங்களின் தொகுப்பில் ஸ்பினோஸா தலைமகனாகக் கருதப்படுகிறவர். அவரை நாத்திகவாதி என்று சொல்வது அகடமிக்கலாகவே தவறானது.
  பேந்தியிஸத்தின்படி கடவுள் என்பது மானுடக் குணங்கள், உருவங்கள் அற்ற ஒரு ஒழுங்கமைக்கும் சக்தி. அனைத்துமாக இருப்பதும் இந்த சக்தியே. இதை வெறுமே “ஸ்பினோஸாவின் கடவுள் இயற்கையே” என்று சுருக்குவது அபத்தமாகத் தென்படுகிறது. ஏனெனில், ஸ்பினோஸா பேசுவது புலனுக்குத் தெரியும் இயற்கையையும் ஒழுங்குபடுத்தும் புலன் தாண்டிய விஷயம்.
  இந்தப் பேந்தியிஸமும் ஸ்பினோஸாவுக்குப் பல நூற்றாண்டுகள் முந்தைய க்ரேக்கச் சிந்தனைகளிலும் இருக்கிறது.
  க்ரேக்க மொழியில் “பேன்” என்றால் அனைத்தும் என்று பொருள். “தியோஸ்” என்றால் கடவுள். அதாவது, “அனைத்தும் கடவுளே”. இது ஏறத்தாழ, “அனைத்தும் ப்ரஹ்மமே” எனும் இந்தியாவின் அத்வைதத்தை ஒத்ததே.
  அமெரிக்காவில், கிறுத்துவ முகமதிய மத ஆதிக்கத்துக்கு எதிராக எழும் கார்ப்பரேட் நாத்திகத்திற்கு ஒரு ஹீரோவைத் தருவதற்காக ஸ்பினோஸாவிற்கு நாத்திகத் தோல் போர்த்தி இருக்கிறாரோ கட்டுரையாசிரியர் என்கிற சந்தேகம் எழுகிறது.
  ஆனால், ஸ்பினோஸா மறுத்த ஆபிரகாமியச் சிந்தனைகளின் ஆதிக்கம் அமெரிக்காவில் இல்லை. அந்த ஆதிக்கம் இந்தியா போன்ற மறைகாலனிய நாடுகளில்தான் இருக்கிறது. எனவே, இங்கேதான் ஸ்பினோஸா தேவைப்படுகிறார்.
  அதை இந்தியாவுக்குச் சொன்ன மைத்ரேயனுக்கு ஒரு ஷொட்டு.
  அத்துடன், ஸ்பினோஸா ஒரு புதிய தத்துவத்தை முன்வைத்தவர் அல்ல. ஏற்கனவே இருக்கும் சிந்தனையான பேந்தியிஸத்தை மொழிபவர். அவ்வகையில் அவரை “தத்துவாளர்” என்ற புதிய வார்த்தையில் மைத்ரேயன் குறிப்பிடுவது மிக மிகப் பொருத்தமானது. அவர் தத்துவவாதி அல்ல. தத்துவாளார்.
  அருமையான மொழிபெயர்ப்பு. தமிழுக்கு இது ஒரு வரவு. முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டிய வரம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.