முப்பத்தெட்டு மேதைகள்

readBook1

சில மாதங்களுக்கு முன்பாக தமிழ்ச்சங்க நூலகத்தில் புத்தகத்தாங்கிகளில் படிந்திருக்கும்  ஒட்டடையையும் தூசையும் துடைத்து, புத்தகங்களை வரிசைப்படுத்தி அடுக்கிவைக்கும் வேலை பகுதிபகுதியாக நடந்துகொண்டிருந்தது. அதனால் பல நாட்களாக அந்தப் பக்கமாக செல்லவே இல்லை. போன வாரம் சென்றிருந்தபோது தூய்மைப்படுத்தும் வேலை முற்றிலும் முடிந்து நூலகமே புதுக்கோலத்தில் காட்சியளித்தது. எல்லாத் தாங்கிகளும் பளிச்சென்றிருந்தன.  எழுத்தாளர்களுடைய பெயர்களின் அகரவரிசைப்படி புத்தகங்களை அடுக்கி வைத்திருந்தார்கள். பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது.
அ தொடங்கி ஒவ்வொரு தாங்கியின் முன்பும் நின்று புத்தகங்களின் பெயர்களைப் படித்தபடி நடந்தேன். வ வரிசையில் வள்ளியப்பாவின் நூல்களைப் பார்த்துவிட்டு ஒரு கணம் நின்றேன். அவருடைய நூல்களை என் இளமைக்காலத்தில் மிகவும் விரும்பிப் படித்திருக்கிறேன். பாரதியார் பாடல் ஒப்பித்தல் போட்டியில் ஒருமுறை முதல் பரிசைப் பெற்றபோது எனக்கு வள்ளியப்பா எழுதிய ‘சின்னஞ்சிறு வயதில்’  என்னும் புத்தகத்தைத்தான் அன்பளிப்பாகக் கொடுத்தார்கள். விடுமுறை நாட்களில் நான் அந்தப் புத்தகத்தை எடுத்து மீண்டும் மீண்டும் படித்தபடி இருந்ததெல்லாம் நினைவுக்கு வந்தது.  நீண்ட காலம் அந்தப் புத்தகத்தை நான் பாதுகாத்து வைத்திருந்தேன். உலகத்தில் வாழ்ந்த பல அறிஞர்கள், தலைவர்கள்  மற்றும் அறிவியலாளர்களின் இளம்பருவத்துக் குறும்புகள், சாதனைகள், ஆர்வங்கள் ஆகியவற்றைப்பற்றி சுருக்கமாக அந்தப் புத்தகத்தில் படித்த ஞாபகம் இருந்தது. புத்தக வரிசைக்குள் அந்தப் புத்தகம் இருக்குமோ என்கிற ஐயத்தோடு ஒவ்வொன்றாக தள்ளிக்கொண்டே சென்றேன். பாப்பாவுக்குப் பாட்டு, சுதந்திரம் பிறந்த கதை, மலரும் உள்ளம், மூன்று பரிசுகள், நல்ல நண்பர்கள், நேரு தந்த பொம்மை என ஒவ்வொரு புத்தகத்தையும் தொட்டுத்தொட்டு நகர்த்தியபோது ஆழ்மனம் பால்யத்தை நோக்கித் தாவியது. ஒரு சில கணங்களில் ‘சின்னஞ்சிறு வயதில்’ புத்தகமே கைக்குக் கிடைத்துவிட்டது. பின்னட்டையிலும் முன்னட்டையிலும் முழுக்க முழுக்க மாமனிதர்களின் படங்கள் காணப்பட்டன. அவற்றைப் பார்த்ததும் ஒரு பெரிய புதையலைப் பார்த்ததுபோல மனம் பரவசத்தில் திளைத்தது.
நேரு, காந்தி, பாரதியார், தாகூர், வ.உ.சி., வள்ளலார், விவேகானந்தர், லிங்கன், பாரதிதாசன் என அட்டையில் இருந்தவர்களின் படங்களைத் திருப்பித்திருப்பிப் பார்த்தேன். யாரைப்பற்றிய குறிப்பை என்னால் உடனடியாக நினைவுகூர முடியும் என்று யோசித்தபடி மீண்டும் படஙக்ளைப் பார்க்கத் தொடங்கினேன். லிங்கன், காந்தி பற்றிய குறிப்புகள் உடனடியாக நினைவுக்கு வந்தன.
லிங்கனுக்கு இளமைப்பருவத்தில் ஆர்வமுடன் புத்தகங்களைப் படிக்கும் பழக்கம் இருந்தது. ஆனால் வீட்டிலோ ஏழ்மை நிறைந்திருந்தது. பணம் கொடுத்து புத்தகம் வாங்கமுடியாத சூழல். சிறுவனின் வீட்டிலிருந்து வெகுதொலைவில் நகரத்தில் ஒரு  பெரியவர் வாழ்ந்து வருகிறார். அவரிடம் புத்தகங்களை இரவல் வாங்கி வந்து இரவோடு இரவாகப் படித்துவிட்டு அடுத்த சந்திப்பில் அவரிடம் திருப்பிக் கொடுத்துவிடுவான். அது அவனுடைய தினசரி வழக்கம். ஒருநாள் ‘ஜனாதிபதி வாஷிங்டன்’ என்னும் புத்தகத்தை அவரிடமிருந்து இரவல் வாங்கிவந்து படிக்கத் தொடங்கினான். சம்பவங்களின் சுவையின் திளைத்தபடி அவன் இந்த உலகத்தையே மறந்துவிட்டான். படிப்பதை நிறுத்தவே மனம் வரவில்லை. ஆனால், அவன் படிப்பதற்கு அதுவரைக்கும் வெளிச்சத்தைப் பாய்ச்சிக்கொண்டிருந்த விளக்கில் இருந்த எண்ணெய் தீர்ந்துவிட்டது. அதனால் ஜன்னலோரமாக புத்தகத்தை வைத்துவிட்டு தூங்குவதற்குச் சென்றுவிட்டான். விடிந்து ஜன்னலுக்கு அருகிலிருந்த புத்தகத்தை எடுக்க வந்தபோது அவன் மனம் அதிர்ச்சியில் உறைந்துவிட்டது. இரவு பெய்த மழையில் புத்தகம் நனைந்திருந்தது. அச்சமும் அழுகையும் அவனுக்குள் பொங்கி வந்தது. உடனே ஈரமான அந்தப் புத்தகத்தோடு நகரத்துப் பெரியவரைச் சந்திக்கப் புறப்பட்டான். அவன் சொன்ன எந்தக் காரணத்தையும் அவர் நம்பத் தயாராக இல்லை. புத்தகத்துக்கான விலையைக் கொடுக்கவேண்டும் அல்லது அதற்கு ஈடாக வயலில் மூன்று நாட்கள் வேலை செய்யவேண்டும் என்று கறாராகச் சொல்லிவிட்டார். வேறு வழியில்லாமல் அந்தச் சிறுவனும் அதற்குச் சம்மதித்தான். மூன்று நாட்கள் கடுமையாக உழைத்தான். இடையிடையில் புத்தகத்தின் ஈரமான தாள்களைத் திருப்பித்திருப்பி உலரவைத்தான். நான்காவது நாள் அவன் கடனும் தீர்ந்தது. அந்தப் புத்தகமும் அவனுக்குச் சொந்தமாக மாறிவிட்டது.
காந்தியைப் பற்றிய சம்பவம் கூட, அவரை மீறி நடந்துவிட்ட ஒரு பிழைக்காக அவர் தண்டனை பெற்ற நிகழ்ச்சியாகும்.   அவர் படித்துவந்த பள்ளியில் பாடங்களோடு உடற்பயிற்சிக்கும் ஒரு வகுப்பு இருந்தது. ஒவ்வொரு நாளும் மாலை வேளையில் அந்த வகுப்பு நடைபெறும். ஒவ்வொரு மாணவனும் அந்த வகுப்பில் கண்டிப்பாக பங்குபெற வேண்டும் என்பது விதி. பங்கேற்காதவர்கள் தலைமையாசிரியரின் தண்டனைக்கு ஆளாக வேண்டும். சனிக்கிழமை அன்று காலையில் மட்டும்தான் பள்ளிக்கூடம் நடைபெறும். பிற்பகலில் இருக்காது. ஆயினும் அன்றுகூட உடற்பயிற்சி வகுப்புக்கு கண்டிப்பாக அனைவரும் கலந்துகொள்ளவேண்டும். ஒரு சனிக்கிழமை அன்று, காலை வகுப்பு முடிந்து காந்தி வீட்டுக்குத் திரும்பினார். வீட்டில் அவருடைய தந்தையாருக்கு உடல்நலம் சரியில்லை. அவருக்கு உதவியாக வீட்டிலேயே இருந்துவிட்டார். நேரம் போனது தெரியவில்லை. வீட்டிலும் கடிகாரம் இல்லை. வேலைகள் எல்லாம் முடிந்த பிறகு, நான்கு மணி ஆகியிருக்கக்கூடும் என நினைத்து உடற்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள பள்ளிக்குப் புறப்பட்டார் காந்தி. ஆனால் அதற்குள் மணி நான்கைக் கடந்துவிட்டது. வகுப்பே முடிந்துவிட்டது. மாணவர்கள் அனைவரும் கலைந்து சென்றுவிட்டார்கள். ஏமாற்றத்தோடும் திகைப்போடும் காந்தி வீட்டுக்குத் திரும்பினார். திங்கள் கிழமை காலையில் பள்ளிக்குச் சென்றதும் காந்தியை அழைத்த தலைமையாசிரியர் விசாரணை நடத்தினார்.  காந்தி உண்மையில் நடந்தவை அனைத்தையும் அவரிடம் எடுத்துரைத்தார். அவர் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. அபராதக்கட்டணம் செலுத்தும்படி கட்டளையிட்ட பிறகு அனுப்பிவிட்டார். வகுப்புக்குத் திரும்பிய காந்தி மிகவும் மனம் கலங்கினார். தலைமையாசிரியர் தன்னை ஒரு பொய்யன் என்று நினைத்துவிட்டாரே என உள்ளூர வருந்தி அழுதார். உண்மை பேசினால் மட்டும் போதாது, கவனமாகவும் இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டார்.
ஒரு வேகத்தில் என் ஞாபகத்தில் தங்கியிருக்கும் விஷயங்கள் சரிதானா என்று பார்ப்பதற்காக புத்தகத்தை வேகமாகத் திருப்பி லிங்கன் மற்றும் காந்தி பற்றிய கட்டுரைகளை ஒரே மூச்சில் படித்தேன். சரியாகவே இருந்தது. அக்கணத்தில் என் மனம் உணர்ந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
வள்ளியப்பாவுக்கு குழந்தைகள்பால் இருந்த ஈடுபாடு மகத்தானது. கதைகளும் பாடல்களும் நிறைந்த ஓர் உலகத்தை குழந்தைகளுக்காக அவர் கட்டியெழுப்பினார். அந்த உலகம் தமிழ்க்குழந்தைகளுக்காக அவர் உருவாக்கிய சுரங்கம். புதையல். இந்த உலகத்தில் வாழ்ந்து மறைந்த மாபெரும் மனிதர்கள் பலரும் கடந்துவந்த இளமைப்பாதை என்பது எத்தகையது என்பதை வளரும் குழந்தைகள் மனத்தில் அழுத்தமாகப் பதிய வைப்பதற்காகவே அவர் ‘சின்னஞ்சிறு வயதில்’ நூலை எழுதியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. உயர்வு அல்லது உன்னதைத் தேடிய பயணம் என்பது எவ்வளவு பெருமைக்குரியது என்பதை ஏராளமான சம்பவங்கள் வழியாக அந்தப் புத்தகத்தில் நிறுவியிருக்கிறார் வள்ளியப்பா. சோர்வற்ற துடிப்பு என்பதே எங்கெங்கும் பால்யத்தின் அடையாளமாகவும் நம்பிக்கையின் விதையாகவும் தோற்றமளிக்கிறது.
பொங்கியெழுந்த நினைவுகளை உதறிவிட்டு, அந்தப் புத்தகத்தை நூலகத்திலேயே அமர்ந்து படிக்கத் தொடங்கினேன். தொடக்கத்திலேயே ராமகிருஷ்ண பரமஹம்சரின் இளம்வயது அனுபவம் இடம்பெற்றிருந்தது. ஒரு பணக்காரருக்கு சில பெண் குழந்தைகள் இருந்தார்கள். அவர் அக்குழந்தைகளை வெளியேயே அனுப்பமாட்டார். ஆண் குழந்தைகளோடு  பேசவோ விளையாடவோ கூடாது என்பது அவருடைய கட்டளை. வீட்டுக்குள்ளேயே அடைத்துவைத்திருந்தார். அந்த வீட்டுக்கு அருகிலிருந்த  வீட்டில் சின்ன பையனொருவன் இருந்தான். அவனுக்கு அவருடைய போக்கு பிடிக்கவே இல்லை. அதை அவரிடமே சொல்ல அவன் தயங்கவில்லை. ஆனால் அவனுடைய பேச்சைக் கேட்டு அவர் கோபமுற்றார். ஆத்திரத்தில் அவர், “நான் அப்படித்தான் செய்வேன். யாரும் என் பெண்களை நெருங்கிப் பேசக்கூடாது. மீறி நெருங்கினால், என் கோபத்தை நான் செயலில் காட்டுவிடுவேன்” என்று சத்தம் போட்டார். ஒரு நாள் மாலை நேரத்தில் அந்தப் பையன் தன்னை ஒரு சிறுமிபோல ஒப்பனை செய்துகொண்டு அவரிடம் சென்றான். “ஐயா, நான் பக்கத்து ஊர்க்காரி. இந்த ஊர்ச்சந்தைக்கு வந்தேன். என்னோடு வந்தவர்கள் அனைவரும் என்னை விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள். இன்று இரவு இங்கே தங்கிச் செல்ல எனக்கு அனுமதி கொடுப்பீர்களா?” என்று இரக்கமுண்டாகும்படி கேட்டான். அந்தப் பணக்காரரும் மனமிரங்கி ஒப்புக்கொண்டார். அவனை அழைத்துச் சென்று தன் பெண்களின் அறைக்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி வைத்தார். எல்லோரும் சேர்ந்து விளையாடத் தொடங்கினார்கள். நேரம் போனதே தெரியவில்லை. சில மணி நேரங்களுக்குப் பிறகு அந்தப் பையனின் அண்ணன் தெருவில் நின்றுகொண்டு அவனை அழைக்கும் குரல் கேட்டது. அந்தக் குரலைக் கேட்டு சிறுமியின் வேடத்தில் இருந்த அவன் ஓட்டமாக ஓடினான். அதற்குப் பிறகுதான் எல்லோருக்கும் உண்மை புரிந்தது. பணக்காரர் குழந்தைகளின் சுபாவத்தையும் மனத்தையும் உணர்ந்து தன்னை மாற்றிக்கொண்டார். எல்லா மாற்றங்களுக்கும் காரணமாக சிறுவனே பிற்காலத்தில் அனைவராலும் மகானாகக் கொண்டாடப்பட்ட இராமகிருஷ்ண பரமஹம்சர்.
வள்ளலாரின் இளம்பருவத்திலும் இப்படி மனம்கவர்ந்த நிகழ்ச்சி இடம்பெற்றிருக்கிறது. அவருடைய அண்ணன் பெரியபுராணச் சொற்பொழிவாளர். கோவில்களில் திருவிழாக் காலங்களில் தொடர்ச்சியாக சொற்பொழிவாற்றுவது அவர் வழக்கம். ஒருநாள் உடல்நலமில்லாத சமயத்தில் தம்பியை அழைத்து கோவிலுக்குச் சென்று உடல்நலமில்லாத செய்தியைத் தெரிவிக்கும்படியும், சொற்பொழிவைக் கேட்பதற்குத் திரண்டிருந்தவர்கள் ஏமாற்றமடையாமல் இருக்கும்பொருட்டு ஒன்றிரண்டு பாடல்களைப் பாடிவிட்டு வரும்படியும் சொல்லி அனுப்பிவைத்தார். தம்பியும் அப்படியே செய்தான். இரண்டு பாடல்களை மனமுருகும் வகையில் பாடினான். பாட்டைப் பதம்பிரித்து, நன்றாகப் புரியும்படி அவன் பாடிய விதம் பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதனால் அவர்கள் அவனிடம் அப்பாடல்களுக்குப் பொருள் சொல்லும்படி கேட்டுக்கொண்டார்கள். அவனும் பாடல்களின் பொருளை விரிவாகச் சொல்லத் தொடங்கினான். நள்ளிரவைக் கடந்த பிறகுதான் அவன் உரை முடிந்தது. அனைவரும் அந்த உரையைக் கேட்டு மயங்கிவிட்டார்கள். பேச்சு முடிந்ததும் “தம்பி, உங்கள் உரை மிகவும் அருமையாக இருந்தது. நாளை முதல் நீங்களே சொற்பொழிவாற்றுங்கள். உங்கள் அண்ணனிடம் நாங்களே வந்து கேட்டுக்கொள்கிறோம்” என்று வேண்டிக்கொண்டார்கள். அதுபோலவே மறுநாளே அவரைச் சந்தித்து தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தார்கள். அவரும் அந்த ஏற்பாட்டுக்கு ஒப்புக்கொண்டார். சிறுவனின் திறமை நகரம் முழுதும் பரவிவிட்டது. அவன் உரையைக் கேட்பதற்காக, நகரத்தின் பல இடங்களிலிருந்தும் மக்கள் திரண்டு வரத் தொடங்கினார்கள். ஒருநாள், அண்ணனே மறைந்திருந்து அவன் நிகழ்த்தும் உரையைக் கேட்டு மகிழ்ந்தார். அனைவரையும் தன் சொல்லாற்றலால் கவர்ந்தவர் வள்ளலார் என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட இராமலிங்க அடிகள்.
இளமையிலேயே சிறுவர்களை அணியாகத் திரட்டி வைத்துக்கொண்டு யுத்த விளையாட்டு விளையாடிய நெப்போலியனின் வாழ்க்கைச் சம்பவம் மிகவும் சுவாரசியமானது. ஒரு இராணுவப் பள்ளிக்கூடத்தில் அந்தச் சிறுவர்கள் படிக்கிறார்கள். பள்ளியைச் சுற்றி எங்கெங்கும் பனிப்பாறைகளாக இருந்ததால் அவர்கள் விளையாட முடியவில்லையே என ஏங்குவார்கள். பள்ளியில் புதிதாகச் சேர்ந்திருந்த ஒரு சிறுவன் அதைக் கண்டு ஒரு திட்டம் வகுத்தான். எல்லாப் பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு பாறைகள் நிறைந்திருக்கும் இடத்துக்குச் சென்றான். அவர்களுடன் சேர்ந்து பனிக்கட்டிகளால் ஆன ஓர் அரணை ஏற்படுத்தினான். நண்பர்களில் பாதிப் பேரை அரணுக்கு அந்தப் பக்கமாகவும் மீதிப் பேரை இன்னொரு பக்கமாகவும் நிறுத்திவைத்தான். பிறகு இந்தப் பக்கமாக நிற்பவர்களிடம் “உங்களை நீங்கள் இந்த இடத்தைத் தாக்க வந்த எதிரிகளாக நினைத்துக்கொள்ளுங்கள். இந்த அரணைத் தாக்கிச் சிதையுங்கள்” என்று சொன்னான். அடுத்து அந்தப் பக்கமாக நிற்பவர்களிடம் “எதிரிகள் அரணைத் தாக்காதபடி தடுத்து காப்பாற்ற வேண்டும். அவர்களை ஓட ஓட விரட்டவும் வேண்டும்” என்று சொன்னான். இரு அணியினரும் யுத்தத்தில் இறங்கிவிட்டார்கள். வெகு மும்முரமாக நடந்த யுத்தத்தை அக்கம்பக்கத்தினர் அனைவரும் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தார்கள். யுத்தம் செய்யும் முறையை திறமையாகக் கற்றுக் கொடுத்த அந்தச் சிறுவனைப் பாராட்டினார்கள். பிள்ளை விளையாட்டாக யுத்தத்தைக் கற்பித்த அச்சிறுவனே எதிர்காலத்தில் ஐரோப்பியக் கண்டத்தையே ஆட்டி வைத்த நெப்போலியன்.
ஒரு சிறுவன். அவன் வயது பதின்மூன்று. உயரம் குறைவாகவும் மெலிந்தும் காணப்பட்டான். அவனைப் பார்ப்பவர்கள் அவன் எட்டாவது அல்லது ஒன்பதாவது படிக்கும் மாணவன் என்றே நினைப்பார்கள். அப்படி இருந்தது அவன் தோற்றம். ஆனால் அவன் சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ. வகுப்பில் சேர்க்கப்பட்டு, முதல் நாள் கல்லூரிக்கு வந்திருந்தான். முதல் வகுப்பை எடுக்க வந்த ஆங்கிலப் பேராசிரியர் ஒருவர் அவனைப் பார்த்துத் திகைத்து “யார் நீ? இங்கே எதற்காக வந்தாய்?” என்று கேட்டார். அவன் தன்னை அந்த வகுப்பில் படிக்கும் மாணவன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டான். அவருக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. “உன் வயது என்ன?” என்று கேட்டார். அவன் உண்மையைச் சொன்னான். “நீ இண்டர் எங்கே படித்தாய்?” என்று கேட்டார். அவன் வால்டயரில் படித்ததாகச் சொன்னான். அவனைப் பற்றிய விவரங்களை பிறகு அவர் கேட்டுத் தெரிந்துகொண்டார். இளமையிலேயே இரண்டிரண்டு வகுப்புகளாகத் தேறி வந்த அவனுடைய திறமைக்கு மதிப்பளித்து அவனை மிகுந்த உயர்வாக நடத்தினார். கல்லூரியில் இருந்த அனைவருமே அவனிடம் அதிகமாக அன்பு காட்டினார்கள். எல்லோராலும் மாபெரும் திறமைசாலி என பாராட்டப்பட்ட அச்சிறுவனே, நோபல் பரிசு பெற்று தமிழ்நாட்டுக்கே பெருமை தேடித் தந்த அறிவியல் ஆய்வாளரான சி.வி.ராமன்.
பெஞ்சமின் ஃபிராங்ளின் பெரிய அறிஞர். இடிதாங்கியைக் கண்டுபிடித்தவர். அரசியல், கலை, தத்துவம் அனைத்திலும் ஈடுபாடு கொண்டவர். இளமையில் அவர் படிப்பதிலும் எழுதுவதிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவராக இருந்தார். படிக்கப்படிக்க தானும் ஓர் எழுத்தாளனாக வேண்டும் என்ற ஆவல் அவருக்குள் எழுந்தது. அவருடைய அண்ணன் ஒரு பத்திரிகை நடத்திவந்தார். தன் கட்டுரையை அண்ணனிடம் நேரிடையாகக் கொடுக்க அஞ்சிய அவர் ஒருநாள் இரவு யாருக்கும் தெரியாமல் அச்சகத்துக்குச் சென்று ஜன்னல் வழியாக கட்டுரையை வைத்திருந்த உறையை வீசிவிட்டு திரும்பிவிட்டார். மறுநாள் ஆசிரியரான அண்ணன் கீழே கிடந்த  உறையை எடுத்துப் பிரித்து கட்டுரையைப் படித்தார். சிறப்பாக எழுதப்பட்ட அக்கட்டுரையை தன் நண்பர்களிடமும் காட்டிப் படிக்கவைத்தார். பெயரில்லாமலேயே அதைப் பிரசுரம் செய்தார். இப்படி அவர் எழுதிய ஏராளமான கட்டுரைகள் அவருடைய பெயர் இல்லாமலேயே வெளிவந்தன. புகழை விரும்பாத யாரோ ஒருவர் இப்படி எழுதுவதாக எல்லோரும் சொல்லிக்கொண்டார்கள். ஒருநாள் தன்னுடைய தம்பிதான் அவற்றையெல்லாம் எழுதியவர் என்பதை அவர் கண்டுபிடித்துப் பாராட்டுகிறார். இளமையில் தொடங்கிய பெஞ்சமின்னின் எழுத்துப் பழக்கம் அவருடைய ஆயுள் முழுதும் தொடர்ந்தது.
இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத்தின் இளமைப்பருவச் சம்பவம் அவருடைய திறமைக்கு எடுத்துக்காட்டாகும். பள்ளியில் தேர்வு நடந்துகொண்டிருந்தது. கேள்வித்தாளில் மொத்தம் எட்டுக் கேள்விகள் இருந்தன. அவற்றில் நான்கு கேள்விகளுக்கு மட்டுமே விடை எழுதினால் போதும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எல்லாக் கேள்விகளும் கடுமையானவை. பதில் எழுத முடியாமல் திணறிக்கொண்டிருந்தார்கள். அந்த மாணவர்களில் கெட்டிக்கார மாணவன் ஒருவனும் இருந்தான். அவனும் கேள்விகளைக் கண்டு திகைத்தான். இந்த எட்டுக் கேள்விகளில் நான்குக்கு மட்டும்தானே விடை கேட்டிருக்கிறார்கள், எந்த நான்குக்கு எழுதுவது என்கிற குழப்பத்தால் அவன் திகைத்தான். கடைசியில் ஒரு முடிவுக்கு வந்து எட்டுக் கேள்விகளுக்குமே விடை எழுதிவிட்டான். இறுதியில் “ஐயா, தேர்வு அதிகாரி அவர்களே, எட்டுக் கேள்விகளுக்குமே விடை எழுதிவிட்டேன். ஏதேனும் நான்குக்கு மட்டும் மதிப்பெண் போட்டால் போதும்” என்று ஒரு குறிப்பையும் எழுதிவைத்தான். எட்டு விடைகளுமே சரியாக இருந்ததால் அவன் முழு மதிப்பெண்களையும் பெற்றான். இளமையில் கெட்டிக்காரனாக இருந்த அந்த மாணவன் கல்வியை முடித்தடும் வழக்கறிஞராக தொழில் புரிந்தார். தேசப்பற்றின் காரணமாக அனைத்தையும் துறந்து காந்தியின் சீடனாக சேவை செய்தார். சுதந்திர இந்தியாவில் முதல் குடியரசுத்தலைவராகவும் விளங்கினார்.
நரேந்திரன் என்னும் சிறுவன் ஒருநாள் கடைத்தெருவுக்குச் சென்றார். அங்கே ஒரு ராமர் விக்கிரகத்தைக் கண்டான். உடனே அதை விலைகொடுத்து வாங்கிக்கொண்டு வீட்டுக்குத் திரும்பினான். அவனும் அவனுடைய நண்பனும் அந்த விக்கிரகத்துக்கு தினமும் பூசை செய்து வழிபட்டார்கள்.  ஒருநாள் அவர்கள் இருவரும் அந்த விக்கிரகத்தை எடுத்துக்கொண்டு மாடிக்குச் சென்றார்கள். அங்கிருந்த ஓர் அறைக்குள் விக்கிரகத்தை வைத்தார்கள். அறைக்கதவை நன்றாக மூடித் தாழிட்டுவிட்டு பூசை செய்து, தியானத்தில் ஆழ்ந்தார்கள். சிறுவர்கள் இருவரையும் வெகுநேரம் காணாத இருவீட்டாரும் அவர்கள் இருவரையும் தேடத் தொடங்கினார்கள். கடைசியில் அவர்கள் மாடியறையில் இருப்பதை உணர்ந்துகொண்டு, அவர்களை பெயர் சொல்லி அழைத்தபடி கதவைத் தட்டினார்கள். பிறகு கதவை உடைத்துத் திறந்தார்கள். அந்தச் சத்தத்தால் கண்விழித்த நரேந்திரனின் நண்பன் அங்கிருந்த சூழலைப் பார்த்துவிட்டு தப்பித்துச் சென்றுவிட்டான். வந்தவர்கள் நரேந்திரா நரேந்திரா என்று பலமுறை உரத்த குரலில் அழைத்துப் பார்த்தார்கள். பிறகு அவனை அசைத்தும் பார்த்தார்கள். அவனோ தன் தியானத்திலிருந்து கண் விழிக்கவே இல்லை. வெகுநேரத்துக்குப் பிறகுதான் கண்விழித்துப் பார்த்தான். பெற்றோரும் மற்றோரும் அங்கே நிற்பதைப் பார்த்து, அவர்கள் மூலம் நடந்ததைத் தெரிந்துகொண்டான். இளம் வயதிலேயே தியானம் கைவரப்பெற்ற நரேந்திரனே பிற்காலத்தில் விவேகானந்தராக மலர்ந்தார்.
ஒரு மணி நேரம் கடந்துபோனதே தெரியவில்லை. ஒவ்வொரு சம்பவத்துக்கும் ஒரு சிறிய அத்தியாயம். அருமையான சித்தரிப்பு. நரேந்திரன் தியானத்தில் மூழ்கியதுபோல நானும் அந்தப் புத்தகத்தில் மூழ்கிவிட்டேன். ஒருமுறை என் பால்ய காலத்துக்கே சென்று திரும்பியதுபோல இருந்தது. கலை, ஆன்மிகம், அறிவியல், அரசியல் என அனைத்துத் துறைகளிலும் உலக அளவில் சிறந்து விளங்கிய முப்பத்தெட்டு பெரியவர்களுடைய வாழ்க்கை வரலாற்றிலிருந்து படிப்பவர்களுடைய மனம் கவரும் வகையில் இளம்பருவத்துச் சம்பவங்களைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்தளித்திருக்கும் வள்ளியப்பாவை மானசிகமாக ஒரு கணம் தலைதாழ்த்தி வணங்கினேன்.

One Reply to “முப்பத்தெட்டு மேதைகள்”

  1. இந்த நூலை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. நூல் வாங்கக் கிடைக்குமா என்று தேடினேன் விக்கி மூலம் தளத்தில் கிட்டியது
    https://ta.wikisource.org/wiki/அட்டவணை:சின்னஞ்சிறு_வயதில்.pdf

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.