பக்கிரிப் பிள்ளையும் உப்புப் பருப்பும்

chunky-vegetable-pickle

ராட்டட்டூயி என்றொரு பெரும் வெற்றி பெற்ற கார்ட்டூன் படம். அதில் ஒரு எலி பாரிஸ் நகரின் மிகப் பிரபலமான உணவகத்தில் ஒரு சமையல் நிபுணரின் தொப்பிக்குள் இருந்து கொண்டு யாருக்கும் தெரியாமல் மிகச் சுவையான உணவு சமைக்கும். அது பாரிஸ் நகரெங்கும் பிரபலமாகிவிட  ஒரு நாள் அந்தச் சமையலை உண்டு மதிப்பிட நகரின் மிகப் புகழ்பெற்ற உணவு விமரிசகர் வருவார். எலி சமைத்த அந்த உணவை நாக்கிலிட்டதும் அப்படியே காலம் பின்னோக்கிச் சென்று அவருக்கு அவரின் பாட்டியின் நினைவு வந்து விடும்.
எனது சகா சுமீத் பட்நாகர் பலமுறை நினைவுபடுத்தியும் டர்பன் நகரின் அந்த நிறுவனத்தின் பெயர் நினைவிலேயே நிற்கவில்லை. பாக்கோ என்பது அந்நிறுவனத்தின் பெயர். பாட்கோ, டாட்கோ என்று மாற்றி மாற்றி உளறிக் கொண்டேயிருந்தேன். அந்த நிறுவனத்துக்கு மதிய உணவு நேரத்தில் வருகிறோம் எனச் சொல்லியிருந்தோம். போய்ச் சேர 2 மணியாகிவிட்டது.
போய்ச் சேர்ந்ததும் வரவேற்பறையில் மார்பளவுச் சிற்பமாக இருந்த ஒருவர் என்னை முறைத்தார். கீழே அவர் பெயர் பொறித்திருந்தது – பக்கிரி பிள்ளை, நிறுவனர், பாக்கோ. அதாவது, பக்கிரிப் பிள்ளை அண்டு கம்பெனி, ஊறுகாய் வியாபாரம், டர்பன். (எனக்கு அசந்தர்ப்பமாக கல்யாணப் பரிசு திரைப்படம் நினைவுக்கு வந்தது).
என்னை வரவேற்ற வாசி என்னும் தமிழ் வம்சாவளி அம்மை அவர் சகாவான ஒரு வெள்ளைக்காரரை அறிமுகப்படுத்தினார்.  “வாங்க சாப்பிடலாம்” எனச் சொல்லுவார் என எதிர்பார்த்தேன். ஒரே பசி! ஆனால், அவர் “முதலில் தொழிற்சாலையைச் சுற்றிப் பார்த்து வாருங்கள்” எனச் சொல்லி அந்த வெள்ளைச் சகாவுடன் அனுப்பி வைத்தார். “நான்கு தலைமுறைகளுக்குள் தமிழரின் விருந்தோம்பல் மறந்து விட்டது போல” என மனதுக்குள் நொந்து கொண்டே, உள்ளே சென்று, தொழிற்சாலைக்குள் நுழையும் சீருடை, பாதுகாப்புக் காலணி, மற்றும் முகமூடியை அணிந்து கொண்டேன். மதிய வெப்பத்தில் உடல் வியர்வை உற்பத்தியைத் துவங்கியது.
வெள்ளைச் சகோதரர் ஒரு உணவுத் தொழில்நுட்பர். “அடாடா. தமிழ் ஊறுகாய் செய்வதை எனக்கு எடுத்துச் சொல்ல ஒரு வெள்ளைக்கார தொழில்நுட்பர். வாரே வா !” எனச் சொல்லிக் கொண்டேன்.  தளம் முழுக்க சீருடை அணிந்த உழைப்பாளிகள். பலரும் தமிழ் முகங்கள். ஒன்றிரண்டு உள்ளூர் தென்னாப்ரிக்கர்கள். அடாது அனலடித்தாலும் நம் சகா விடாது தாம் செய்யும் மாங்காய் ஊறுகாயின் அருமை பெருமைகளைப் பீற்றிக் கொண்டிருந்தார். நடுநடுவில் இந்த க்ரேட் இந்தியன் மசாலா எனக்கு ஒத்துக்கொள்வதில்லை என்னும் அலட்டல் வேறு.
ஊறுகாயோடு முடித்துக் கொள்வார் என ஆவலோடு எதிர்பார்த்த என் எண்ணத்தில் ஆப்பிரிக்க மண்ணை அள்ளிப் போட்டு அடுத்த தளத்துக்கு அழைத்துச் சென்றார். அது மசாலா அரைக்கும் இடம். மிளகாய் வற்றல் காந்தியது. ”யோவ் இதெல்லாம் வேணாம்னுதானே இந்தியாவை விட்டு ஓடி வந்தேன். இங்கியும் இம்சை பன்றீங்களே”ன்னு ஒரு சைலண்ட் ஒப்பாரி வைத்தேன். ஆனால், அவரின் கடமை உணர்ச்சி அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் எல்லை தாண்டிப் போய்க்கொண்டேயிருந்தது. அடுத்த தளம் – கேனிங் தளம். அதாவது உணவைச் சமைத்து ஒரு அலுமினியம் அல்லது டின் கேனில் காற்றுப் புகாமல் அடைத்து கொதிக்கும் நீரில் முக்கியெடுத்து அதைப் பதப்படுத்துவார்கள். அவ்வாறு பதப்படுத்தப்பட்ட உணவு பல மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.
கோழிக்கறி, ஆட்டுக்கறி, மாட்டுக்கறி,பிரியாணி, டால் (பருப்பு) எனப் பலதும் செய்வோம் என மார்தட்டினார்.  அந்த தளம்தான் அந்தத் தொழிற்சாலையின் மிக முக்கிய பகுதி எனச் சொல்லி அதன் அருமை பெருமைகளைப் பெரும் ஆவர்த்தனம் செய்தார். முடித்த பின்பு “கேள்விகள் உண்டா?” எனக் கேட்டார். “மதியம் சாப்பாடு போடுவீங்களா” எனக் கேட்க நினைத்துப் பின் அது நம் கொள்கைக்கு அழகில்லை எனக் கைவிட்டு “ரொம்பத் தெளிவாகச் சொன்னீர்கள், நன்றி” என்றேன்.
பின்னர் ஒருவழியாகச் சீருடைகளைக் களைந்து காலணிகளை உதறி ஒப்பனையறை சென்று நீரில் நன்றாக முகம் குளிர அலம்பிக்கொண்டேன். வெள்ளைப் பூத்துவாலையில் முகம் துடைத்து சந்திப்பு அறைக்குள் சென்று அமர்ந்தேன். சில்லென்று முகத்திலறைந்தது குளிர் காற்று – ஆகா ! என்ன இன்பம் !
வாசி இப்போது கேட்டார் அந்தக் கேள்வியை “சாப்பிடலாமா?”. “ஓ யெஸ்” எனத் துள்ளிக் குதித்தேன். “நீங்கள் என்ன சாப்பிடுவீர்கள் எனத் தெரியாததால் தென்னிந்திய சைவ உணவு தான் செய்ய முடிந்தது. மன்னிக்கவும்” என்றார் வாசி. “தெய்வமே!  மன்னிப்பா? உங்கள் கால் எங்கே?” என மனதுக்குள் தேடினேன். டார் எஸ் ஸலாமில் கடந்த ஆறு மாதங்களாக சோத்துக்கு சிங்கியடிக்கும் எனக்குத் தமிழுணவு. அரிசி, பருப்பு, மற்றும் பொறியல். எச்சுவை பெறினும் வேண்டேன் என வெறியோடு ஸ்பூனில் அரிசியையும் பருப்பையும் கலந்து வாயிலிட்டேன். இட்டதும் ஒரு ராட்டட்டூயி மொமெண்ட்.
தளவாய்ப்பேட்டையில்  வாழ்கையில் புரட்டாசி மாதங்களில் விரதம் இருப்போம். காலையில் சோறு குடிக்காமல் பெருமாபாளையம் பெருமாள் கோவிலுக்குப் போய் வந்த பின்பு மதியச் சோத்துக்கு குழம்புக்குப் பதிலாக பருப்பு இருக்கும். பருப்பு எனில் வெறும் பருப்பல்ல. கடுகு, கறிவேப்பிலை கொண்டு தாளிக்கப்படும் அது “உப்புப் பருப்பு” என அழைக்கப்படும். சுடுசோற்றில் உப்புப் பருப்பையும் நெய்யையும் கலந்து (காலை பட்டினிக்குப் பின்பு) கட்டினால் அது அமிர்தம் என அழைக்கப்படும். அந்த உப்புப் பருப்பு வடித்த நீரில் செய்யப்படும் ரசம் – அமிர்த ரசம்.
”எப்படி இருக்கு?” என்றார் வாசி. “அற்புதம்” என்று சொன்னேன். உணவினூடே அவரின் பாட்டனார் (எள்ளா கொள்ளா தெரியவில்லை) தென் ஆப்பிரிக்கா வந்த கதையைச் சொன்னார்.  “சின்னப் பயனா இருக்கும் போது அவருக்கு யாரோ இங்க வந்தா மண்ணுல மம்பட்டியப் போட்டுத் தோண்டுனா தங்கம் கிடைக்கும் சொன்னாங்கன்னு வந்தாராம்”. உப்புப் பருப்புக்கப்பறம் இது ரெண்டாவது க்ளூ, நெம்ப ஸ்ட்ராங்கான க்ளூ . இனி பொறுப்பதில்லை தம்பீன்னு அந்தக் கேள்வியைக் கேட்டேன். “உங்க சர் நேம் என்ன?”  “கோவேண்டர்” இதற்கு அடுத்த கேள்வி கேட்பது வேஸ்ட் என்றாலும் கேட்டேன் – “எந்த ஊர்?” – “கோயமுத்தூர் பக்கம். ஆனால், என்ன ஊர் என்பது தெரியாது.”
“இந்தப் பருப்புக்கான ரெசிப்பியை யார் தயார் செய்தது? “ எனக் கேட்டேன். ”இது இங்க வழக்கமா எல்லார் வீட்டிலேயும் செய்யறதுதான். நாங்களே பண்ணிட்டோம்”. கெளம்பும் போது போற வழிக்கு இரண்டு டப்பா வாங்கிவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.
டர்பன் நகரைச் சுற்றி பெருமளவில் தமிழ் வம்சாவழியினர் இருக்கிறார்கள் என்றார் வாசி. முருகன், மாரியம்மன் எனத் தமிழ்த் தெய்வங்கள். ஏழு கொண்டல வாடாவும் உண்டு. அய்யப்பனும் இருக்கிறாராம். எப்ப வந்தார் என்பது தெரியவில்லை. புரட்டாசி நோன்பும், பங்குனி உத்திரமும், தைப்பூசமும், பெரும் பண்டிகைகள். மாரியம்மன் கோவிலில் தீமிதி உண்டு. ஒப்பு நோக்குகையில் பொங்கலும் தீபாவளியும் பெரும்பண்டிகைகள் அல்ல. கோவில்களில் இந்தியாவில் இருந்து அர்ச்சகர்களை அழைத்து வந்து மரியாதை செய்கிறார்கள்.
“சில ஆண்டுகளுக்கு முன்பு பழனி வந்து காவடி தோளில் கொண்டு 680 படி ஏறினேன்.  முருகனைப் பார்த்தேன்” என்றார் வாசி. “அங்கே எல்லோரும் முருகனைத் தான் கும்பிடறாங்களா?” என்றார்.  ”அந்த ஊர்ப்பக்கம் நெறயப் பேருக்கு முருகன் தான் தெய்வம். எனக்கும்” என்றேன். பல முருகன் கோவில்கள் இருந்தாலும் பழனி தான் தலைமை அலுவலகம். கிறித்துவர்களுக்கு ஜெருசலேம் போல. என்றேன். வாசி நெகிழ்ந்து விட்டார்.
வாசி தமிழ் அதிகம் பேசுவதில்லை. தெரியாது. “கொஞ்சம் கொஞ்சம் பேசுவேன்” எனக் கொஞ்சினார்.  அவரது குழந்தைகளுக்குத் தமிழ் சுத்தமாகத் தெரியாது. பெரும்பாலான தமிழ்நாட்டுத் தமிழர்கள் சமஸ்கிருதப் பாடல்களைக் கேட்பது போல் இவர்கள் தேவாரத்தையும்திருவாசகத்தையும் கேட்கிறார்கள். ஒலிகளாக !
திருவாசகம் என்ற உடனே, “ஆறுவது சினம் கூறுவது தமிழ்” என கேபிஎஸ் போலக் கிளம்பி ராஜா புகழ் பாடத் தொடங்கி விட்டேன். அவர்களுக்கு ராஜா, ரஹ்மான் எல்லாரையும் தெரிந்திருக்கிறது. ஆனால், ராஜா ஸார் திருவாசகத்துக்கு இசை அமைத்தது தெரியவில்லை.  பேசிக் கொண்டிருக்கும் போதே அவரது சகா, பாட் நாய்டூ (பத்மநாபன் நாயுடு ?)  வந்து சேர்ந்து கொண்டார். அடுத்த ஒரு மணிநேரம், நதியில் விளையாடிக் கொடியில் தலை சீவி, தமிழ்நாடு பற்றிப் பேசிச் சீராடினோம். என் சகா சுமித் பட்நாகர், நான் அவரின் உயர் அதிகாரி என்பதற்காக இந்த வன்கொடுமையைச் சகித்துக் கொண்டு வலிந்து புன்னகைத்துக் கொண்டிருந்தார். “இந்த மதராஸிகளையெல்லாம் வரிசையா நிக்க வெச்சு சுடோனும்”னு அவர் மனசுக்குள் இந்தியில நினைத்தது சத்தமாகக் கேட்டது.
டர்பன் வரும் முன்பு ஜோஹன்னஸ்பர்க் சென்றிருந்தோம். நம்ம தல தென்னாப்ரிக்காவின் மிகப்பெரும் அட்டர்னிகளில் ஒருவராகப் போடு போடு என்று போட்ட இடம். என்னை வரவேற்க மால்க்கம் நாய்டூ வந்திருந்தார். அவர் தந்தை பெயர் மார்கன் (முருகன்) நாய்டூ. மால்க்கம் மிகத் தீவிரமாக உடற்பயிற்சி நிலையம் செல்வதை அவர் உடல்கட்டு உடையைத் தாண்டிச் சொன்னது. அவரின் நிறுவன உரிமையாளர் ஒரு அரபி இஸ்லாமியர். நிறுவனத்தில் இரண்டு மூன்று  பேர் வெள்ளை / இந்திய மேலாளர்கள். தொழிலாளிகள் அனைவரும் உள்ளூர் கறுப்பினத்தவர்கள்.
வேலை முடிந்து இன்னொரு நிறுவனத்துக்கு அழைத்து செல்லும் உதவியைச் செய்ய முன்வந்தார் மால்க்கம். காரில் செல்லும் போது மிக வசீகரிக்கும் ஒரு விஷயம் – சாலைகளின் கட்டமைப்பு. அது ஐரோப்பாவை நினைவுபடுத்துகிறது. மிக விஸ்தாரமான, தரமான சாலைகள். எனது சகா இதை ஆஃப்ரிக்கன் ஐரோப்பா என்றழைத்தார். மிகையில்லை என்றே தோன்றுகிறது. சாலைக் கட்டமைப்பில் தென்னாப்பிரிக்கா உலகின் நான்காவது இடத்தில் இருக்கிறது. இதுவரை இந்தக் கண்டத்தில் ஏழு நாடுகள் பயணம் செய்துவிட்டேன். ஐரோப்பாவிலும், சீனத்திலும் பயணித்திருக்கிறேன். ஜெர்மனிக்கு நிகரான சாலைக் கட்டமைப்பு.
கட்டமைப்பை ஏற்படுத்துவதில் ஒரு பெரும் மனச்சாய்வு இருக்கிறது. அது ஒரு நாட்டின் / இனத்தின் மனநிலையைக் குறிப்பதாகத் தோன்றுகிறது.  ஆஃப்பிரிக்க /ஆசியக் கண்டங்களில் இந்தக் கட்டமைப்பை சமூகத்தின் இன்றியமையாதத் தேவையாக வருங்காலம் நோக்கிச் செய்யும் ஒரு மனநிலை இருப்பதில்லை. மேற்கத்திய மனம் கட்டமைப்பை மிக விஸ்தாரமாக யோசிக்கிறது. ஆசிய மனம் அதை குறுக்கிக் கொள்கிறது எனும் எண்ணம் இந்தப் பயணங்களில் மீண்டும் மீண்டும் தோன்றுகிறது.  30 கோடி மக்கள் தொகை இருக்கும் போது வெள்ளையர்களால் கட்டப்பட்ட மும்பை விக்டோரியா இருப்பூர்தி நிலையம் இன்று மக்கள் தொகை 120 கோடியான பின்பும் அப்படியே இருப்பது அதற்கான சாட்சி.
மால்க்கமிடம் கேட்டேன், “இங்கே காந்தி ஏற்படுத்தின டால்ஸ்டாய் ஃபார்ம் எங்கே?”. அவருக்குத் தெரியவில்லை. கூகிலாண்டவரிடம் கேட்டுக் கண்டுபிடித்தேன். அது நான் தங்கியிருந்த இடத்தை விட்டு 20 கிலோ மீட்டர் தள்ளியிருந்தது. பணிச் சுமையால் போக இயலவில்லை.
பின் அங்கிருந்து டர்பன் பயணித்தோம். அங்கே எம்மை வரவேற்றவர் ரவி தேசாய் என்னும் இந்திய (குஜ்ராத்தி) வம்சாவளியினர். அவர்தம் மூதாதையர்கள் டர்பனிலுள்ள ஃபீனிக்ஸ் பண்ணை அருகில் வசித்து வந்தார்கள் எனச் சொன்னார். இன்று அவர் பெரும் தொழில் அதிபர். இந்தியப் பெரும் நிறுவனமான எல் அண்ட் டி யின் தென்னாப்பிரிக்க தொழில் பங்குதாரர். காலைச் சிற்றுண்டிக்கு டர்பன் கடற்கரையோரம் அமைந்திருந்த ஒரு உணவகத்துக்கு அழைத்துச் சென்றார்.
சிற்றுண்டி முடிந்து ஒரு சிறு நடை சென்றோம். சுத்தம் என்பதின் உண்மையான அர்த்தத்தை டர்பனில் அந்தக் கடற்கரையில் பார்த்தேன். இந்தியன் என எண்ணிக் கொள்ளவே வெட்கமாக இருந்தது.  சற்று நேரம் கடலைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தோம். ஒரு பெரும் கப்பல் நின்று கொண்டிருந்தது.  1891 அம் ஆண்டு காந்தி டர்பனில் வந்திறங்கிய போது அவர் வந்த கப்பல் தொற்று நோய்ப் பீதி காரணமாக 14 நாட்கள் கடலில் நிற்க வேண்டியிருந்தது.  இதே கடல்தான்.
டர்பனிலும் பணிச் சுமையால் ஃபீனிக்ஸ் செல்ல இயலவில்லை. டர்பன் நகரத்தில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் இந்திய வம்சாவளியினர் வசிக்கிறார்கள். இந்தி, குஜராத்தி, தமிழ், மராத்தி எனப் பல மொழிகள் பேசப்படுகின்றன. டர்பன் விமான நிலையத்தில் இந்திய முகங்கள் வெகு சகஜமாகத் தென்பட்டன. ஜோஹன்னஸ் பர்க்கில் அவ்வளவு இல்லை.
தென் ஆப்பிரிக்கப் பயணம் துவங்கும் முன் பிஃப்ரவரி மாதத்தில் ஒரு நாள் எனது வங்கியாளர் தென் ஆப்பிரிக்காவிலுள்ள அவரது தலைமை அலுவலகத்தில் இருந்து ஒரு நிதி மேலாண்மை அலுவலர் மரியாதை நிமித்தமாகச் சந்திக்க வருவதாகச் சொன்னார். அவர் பெயர் மகேஷ் மேனன். வருமுன் போன் செய்தார். அவரது ஆங்கிலத்தில் இருந்து அவர் முதல் தலைமுறை இந்தியர் எனப் புரிந்து கொண்டேன்.
அதற்குப் பின் அவர் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதில் தன்னுடன் பணி புரியும் Kosheik என்பவரும் வருவதாக எழுதியிருந்தார். ஏதாவது லெபனான் / மத்திய கிழக்கு ஆசாமி போல என நினைத்துக் கொண்டேன். சந்திப்பின் போது மேனன் மேனன் போலவே இருந்தார். ஆனால், இந்த Kosheik ஐப் பார்த்ததும் அசந்து போனேன். அவர் லிபியரோ / மத்திய கிழக்கு ஆசாமியோ அல்ல, தமிழகத்து கௌஸிக்.  கிரிக்கெட்டர் அஸ்வின் போல இருந்தார்.  ஐந்தாம் தலைமுறை.
மரியாதை நிமித்தம் பேச்சுக்கள் முடிந்ததும் கேட்டேன், “உங்கள் முன்னோர்கள் எதற்குத் தென்னாப்பிரிக்கா சென்றார்கள்?”. அதற்கு அவர் நாங்கள் பண்டிட்ஸ் என்றார். அவரது தென்னாப்பிரிக்க உச்சரிப்பில் எனக்கு அது bandits எனக் கேட்டுக் கொஞ்சம் குழம்பினேன். (அது சரி. மிகப்பிரபலமான கோவில்களில் bandits தானே இருக்கிறார்கள் !) “உங்கள் தாத்தா பெயர் என்ன?” எனக் கேட்டேன். “பைஜ்நாத்” என்றார். அதைத் தமிழ்ப்படுத்தி “வைத்தியநாதன்” எனப் புரிந்து கொண்டேன். இன்று கோஷீக்குக்கும் அவரது முன்னோர்களின் தொழிலுக்கும் தொடர்பு இல்லை.  உணவில் மட்டும் இன்னும் இருக்கிறது. முட்டை மட்டும் சாப்பிடும் சைவர். பரவாயில்லை.
தென் ஆஃப்பிரிக்கப் பயணத்தில் ஜோஹன்ன்ஸ்பர்க் மற்றும் டர்பன் என்னும் இரண்டு நகரங்களில் உள்ள எமது தொழில்த் தொடர்புகளுடன் நேரில் பேசப் போனதால் நகர் தாண்டி வெளியே செல்ல முடியவில்லை. எனவே, இந்நாடு பற்றியும், உள்ளூர் அரசியல் பொருளாதார விஷயங்கள் பற்றியும் அதிகம் கவனிக்க முடியவில்லை.
பொருளாதாரம் மிக மந்தமாக இருக்கிறது. கறுப்பினத்தவர்களிடையே மிக அதிகமான வேலையின்மை இருக்கிறது. தலைவர் மீது பெரும் ஊழல் குற்றச் சாட்டுகள் இருக்கின்றன. இங்கே இருக்கும் உற்பத்தித் துறை ஓரளவு நவீனமாக இருக்கிறது. பொருளாதாரத் தேக்க நிலையினால் புது முதலீடுகள் உற்பத்தித் துறையில் அதிகம் இல்லையென்கிறார்கள். எனது தொழில் தொடர்பான சில ஆலைகளுக்குச் சென்றபோது அதை நேரில் உணர்ந்தேன். இந்தியா போன்ற வளரும் பொருளாதாரங்களில் இதைத் தாண்டிய நவீனத் தொழில் நுட்பம் வந்துவிட்டது.
இங்கே இன்னும் 90களின் இயந்திரங்கள். தென்னாப்பிரிக்கா இன்னும் பத்தாண்டுகளில் எங்கே இருக்கும்? மில்லியன் டாலர் கேள்வி !

2 Replies to “பக்கிரிப் பிள்ளையும் உப்புப் பருப்பும்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.