தீரா பாரிஸ் பக்கங்கள்…

ParisExPat1

சில வருடங்களுக்கு முன் ஓர் வார இறுதியின் இரவில், உணவு மேசையிலிருந்த என் மனைவி குழந்தைகளுக்காக நூலகத்திலிருந்து கொண்டு வந்த புத்தகங்களை புரட்டிப் பார்த்தேன். ஒரு புத்தகத்தை அதன் அட்டையே சலிப்பாக இருக்கிறது என்று குழந்தைகள் தூக்கிப் போட்டுவிட்டார்கள்.
டான் ஃபெண்ட்லர் எனும் பன்னிரண்டு வயது அமெரிக்க சிறுவன், மெய்ன் மாநிலத்தில் உள்ள கடாடின் மலைக்கு (Mount Katahdin), சகோதரர்கள் மற்றும் வழிகாட்டி சூழ போயிருக்கிறான். சிறுவனும் வழிகாட்டியும் மலையுச்சிக்கு முதலில் போய்ச் சேர்ந்து விட்டனர். தகப்பனார் இவர்களுடன் இன்னும் சேரவில்லை. அவர் டானின் இளைய சகோதரனுடன் மேலே ஏறி இவர்களை நோக்கி கொண்டிருந்தார் – ஒரு மைல் இடைவெளியில். டான் பொறுமை இல்லாமல், மழையில், பத்து அடிகளுக்கு மேல் பார்க்க முடியாமல் மேகங்கள் மறைத்துக்கொண்டிருக்க, நான் அப்பாவை எதிர் கொள்கிறேன் என்று தனியே கீழே இறங்கத் தொடங்கினான்.
வழியில் அப்பாவை எதிர்கொள்ளவில்லை, ஏனெனில் மேகங்கள் சுத்தமாக மறைக்க வழி தவறிவிட்டான்…
இன்னும் கொஞ்ச நேரத்தில் சேர்ந்து விடலாம்…இல்லை, மாலை சேர்ந்துவிடலாம், தன்னை எப்படியும் கண்டுபிடித்து விடுவார்கள் என்று நம்பிக்கையாக இருந்தான்.
அது நடக்கவில்லை; அன்றிரவு காட்டில் தங்க வேண்டியதாகிற்று.
மறு நாள், அதற்கு அடுத்த நாள்…ம்ஹூம்.
நூற்றுக்கணக்கானோர் அவனைத் தேடி காட்டில் அலைந்தனர். மோப்ப நாய்கள் கொஞ்ச தூரம் ஓடி நின்றுவிட்டன.
பையன் ஏதாவது மலைச் சிடுக்குகளில் சிக்கி அல்லது ஆற்றில், நீரோடையில் சிக்கி இறந்திருக்கலாம் என்று அனைவரும் நம்பிக்கை இழக்க ஆரம்பித்தனர். தேடுவதை ஒரு வாரத்திற்குப் பின் கைவிட்டனர். அவனது தகப்பனார் மட்டும் நம்பிக்கை இழக்கவில்லை.
பயல் ஒன்பது நாட்களுக்குப் பின் காட்டின் ஏதோ ஒரு பக்கத்தில் வெளிவந்து நாகரீக உலகை மீண்டும் கண்டுபிடித்தான் – அவனாகத்தான் கண்டுபிடித்தான். இவர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை…
எனக்குத்தான் இது போன்ற சாகச கதைகள் பிடிக்குமே – அண்டார்டிக்கா, cast away ! வால்டர் மிட்டி போன்று ஒரே வாழ்க்கையில் ஓராயிரம் வாழ்க்கை வாழுவோமே! புத்தகத்தை சட்டென படித்துவிட்டேன், சின்னப் புத்தகம்தான்.
இரவு படுக்கையில் சிறியவனிடம் இந்த முழுக்கதையும் சொல்லிக்கொண்டு வந்தேன். அப்பா, என்று டான் கண்டுபிடிக்கப்பட்டான் என்று கேட்டான். ஜூலை 25 என்றேன். ஓ, எனது பிறந்த மாதம் என்றான். அட, ஆமாம் என்று சொல்லிவிட்டே வருடத்தைப் பார்த்தேன். 1937!
அதுதான் புத்தகத்தின் அட்டை பழைய ஸ்டைலாக இருக்கிறது, பயல்களுக்குப் பிடிக்கவில்லை என்று நினைத்துக்கொண்டு லேப்டாப்பை திறந்து சுட்டினேன்.
சுட்டி விரிந்தால், கண்டுபிடிக்கப்பட்டு 75 ஆண்டுகளுக்குப் பின் டான் இன்று கிழவராக பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கிறார்!
அந்த புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கும் போது ஒரு பன்னிரெண்டு வயது சாதாரணனாகத்தான் மனதில் “கீறி”யிருந்தான் அந்த சிறுவன். புத்தகத்திலும் எதையாவது அதிசயிக்கும்போது அல்லது சலித்துக்கொள்ளும் போதெல்லாம் Oh boy! Christmas! என்ற பதங்கள் உபயோகிக்கும் சிறுவனின் 75 வருட வாழ்க்கையை, ஒரே ஒரு க்ளிக்கின் மூலம் ஒரே மணி நேரத்தில் நான் கடந்து கிழவராகப் பார்த்துவிட்டேன்!
கிட்டதட்ட இது போல்தான் உணர்ந்தேன், “எழுதித் தீராப் பக்கங்கள்” புத்தகத்தைப் படிக்கும் போது. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் “காலம்” செல்வம் அருளானந்தம் வாழ்ந்த பாரீஸ் வாழ்க்கையை, சந்தித்த மனிதர்களை, அவமானங்களை, நெகிழ்ந்த தருணங்களை எல்லாம் ஒரு வசந்த கால மழை நாளில் சந்தித்துவிட்டேன்.
பெல்ஜியத்திலிருந்து ப்ரான்ஸிற்கு முறையான ஆவணங்கள் இல்லாமல் தன்னை கடத்திக் கூட்டிச் செல்பவரிடம் எல்லை கடந்ததும் செல்வம் கேட்கிறார்.
“நீங்கள் வெளிநாட்டிற்கு வந்து எத்தனை வருடங்களாயின?”
அவர், நான்கு வருடங்களாகின்றன, இன்னும் எத்தனை வருடங்களாகுமோ, ஊருக்குத் திரும்ப என்று புன்னகையுடன் சொல்ல, செல்வம் ஆச்சரியப்பட்டு “ என்னது நான்கு வருடமோ?
என்னாலெல்லாம் இத்தனை வருடங்கள் பிரிந்து இருக்க முடியாது, இரண்டே வருடங்களில் திரும்பிவிடுவேன்” என்று சொல்கிறார். அந்த கார் ஓட்டுனரைப் போலவே நானும் புன்னகைத்தேன். முப்பத்தைந்து வருடங்கள் கழிந்தும் ஓட்டுனரின் சிரிப்பை செல்வம் – அவசரமாக ஓரிரு முறை ஊருக்குப் போய் சில நாட்கள் நின்று வந்ததைத் தவிர நிரந்தரமாக வெளிநாட்டில் குடியேறிவிட்ட – நினைவில் வைத்திருப்பது ஆச்சரியம் இல்லை.
வாழிட மாறுதல் மானிட வாழ்வில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கும் ஒன்று. பற்பல காரணங்களுக்காக நதிக்கரை நாகரிக நாட்களிலிருந்து இன்று வரை மானிடர்கள் இடம் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். படிப்பு, தகப்பனார் பணி மாற்றம் போன்ற இயல்பான காரணங்களிலிருந்து வியாபாரம், கடன், வறுமை, வேலை வாய்ப்புகள் என்று காரணங்கள் கொட்டிக்கிடக்கின்றன.
பிறந்த மண் நினைவுகளை மாறிச் செல்பவர்கள் மனக் குடுவைகளில் பொத்தி வைத்துக்கொள்கிறார்கள்.
செல்வம் பாரிஸ் செயின் நதிக்கரையோரத்தில் அவ்வப்போது வந்து அமர்ந்த தருணங்கள் போன்ற ஓர் தளர்வான அமைதியான தருணத்தில் அக்குடுவைகள் திறந்து கொண்டு நினைவுகள் கிளர்ந்து மேலெழுகின்றன. அகிற் புகையாய் சுழன்று இறுக்கிக் கொள்கின்றன.
“விடியத் தொடங்கி கதிரவன் சாடையாய்த் தெரிந்த ஓர் இளவேனிர் காலத்தில்” பாரீஸில் நுழைந்து, “ஐஸ் போட்டு சிவந்த விளைமீன் போன்று விறைத்த” முக அதிகாரி அளிக்கும் அகதி என்ற புது பெயருடன் தன் பாரிஸ் வாழ்க்கையை துவக்குகிறார் செல்வம். மொழி தெரியாத தேசத்தில் வாழத் தொடங்குவது, அதுவும் பணமில்லா, அகதி வாழ்வின் சிரமத்தை ஊகிப்பது அதிக சிரமமில்லை. செல்வம் பாரிஸில் தனியே அகதி அலுவலகத்தை அடைய மெனக்கெடுவதிலிருந்து அவரது பாரிஸ் வாழ்க்கை ஆரம்பித்து வழியில் பற்பல மனிதர்களை சந்தித்து போய்க்கொண்டே இருக்கிறது.
குன்றேறிப் பாதுகாப்பாக அமர்ந்து, யானை போர் புரிவதை பார்ப்பதைப் போல் செல்வமும் அவர் நண்பர்களும் பட்ட சிரமங்களை இப்போது உட்கார்ந்து படித்து மெல்ல நகைத்தாலும் வலிகளை உடனே உணர முடிகிறது.
அகதி அலுவலகத்திற்கு உடனே வந்து சந்திக்குமாறு கூறும் கடிதத்துடன் செல்வத்தின் நண்பர் ஓர் மெத்ரோ நிலையத்தில் இறங்கி எதிர்ப்படும் ப்ரெஞ்ச் கனவானிடம் அலுவலகத்திற்கு வழி கேட்கிறார், கடிதத்தைக் காட்டி. கனவானோ கடிதத்தை பத்து நிமிடம் வடிவாகப் பார்த்துவிட்டு நண்பரை கூட்டிச் செல்கிறார். சென்று கொண்டே இருக்கிறார். அகதி அலுவலகம் வருவதாகத் தெரியவில்லை.
கடைசியில் ப்ரெஞ்ச் கனவான் ஓரிடம் வந்து நின்று “இதோ” என்று பெருமையாக கை காட்டுகிறார். அது நண்பர் தங்கியிருக்கும் வீடு!
கடிதத்தில் அகதி அலுவலகத்தின் முகவரி மட்டும் இல்லை, நண்பரின் முகவரியும் இருக்கிறது! ப்ரெஞ்ச் கனவான் “அனுப்புனர்” முகவரிக்கு கூட்டிக்கொண்டு போவதிற்கு பதில் “பெருநரின்” முகவரிக்கு கூட்டி வந்துவிட்டார்!
“அர்ச்சேஸ்ர அந்தோணியாரே, எங்களுக்கு நீர்தான் வழி காட்டவேணும்” என்ற பிரார்த்தனையாலோ என்னவோ ஆசிரியருக்கு “எங்கடை கோயில் உபதேசியார் சொன்ன மோட்சம்” போன்று வண்ண மயமாக, மனிதர்கள் மகிழ்வோடு நடமாடிக்கொண்டிருக்கும் இடமான பாரிஸ் விமான நிலையத்தில் வேலை கிடைக்கிறது.
நூலின் ஆரம்ப அத்தியாயங்களில் அறையை “றூம்” என்று குறிப்பிட்டதை படித்த போது ஏதோ பிழை பார்த்ததில் பிழை போலும் என எண்ணினேன். இல்லை, நாஞ்சில் நாட்டை நினைவுபடுத்தும் றரகரங்கள் (“பேக்கறி”).
எண்பதுகளில் ஐரோப்பாவில் ஈழத் தமிழர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். ஆசிரியர், பள்ளித்தோழர் ஒருவரை பாரிஸில், ஈஃபில் டவர் அருகில் பார்க்கிறார். அவரோ “நீயும் வந்துட்டயோ” என்று ஆச்சரியமாக கேட்கிறார். அந்த அழுத்தமான “யும்”மிற்கு கன அர்த்தங்கள். எத்தனை இடர்பாடுகளிடையே நாடு விட்டு நாடு வந்து கிடைக்கும் வேலையைச் செய்ய வேண்டிய சூழ்நிலைகளிலும் முக்கியமாக இருக்கும் ஜாதிப்பார்வையே அந்த “யும்”மிற்கு அர்த்தம்.
“எல்லா (சாதி) பயல்களும் பாரிஸில் வந்து குமிகிறார்கள். இனி கனடா, ஆஸ்திரேலியா என்று போய்விட வேண்டும் என்று ஒருவர் தீர்வு சொல்லிக்கொண்டிருக்கிறார்.
குடிவெறியில் “ஏதோ இந்த பாரிஸ்ஸானதால் நான் உங்களுடன் சமமாக அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன். ஊரில் இப்படி நடப்பேனா?” என்கிறார் அறையில் இன்னொருவர்.
வந்த ஊரில் எதைப் பார்த்தாலும் ஊர் நினைவு. விதவிதமான மது வகைகளைக் கண்டவுடன் யாழ்ப்பாணத்து கள் நினைவுகள்; கள்ளோடு ஒட்டிய மனிதர்களையும் நினைவு கூறுகிறார்.
மது உள்ளே போனவுடன் வழக்கமான நகைச்சுவைக் காட்சிகள். “அன்னையைப் போல் ஓர் தெய்வம் உண்டோ?” என்று ஒருவர் பாடி ஆர்ப்பாட்டம் செய்கிறார் என்றால், இன்னொருவர் “இந்த மார்கழியோட ஊருக்குப் போறன். மல்லிகாவை ஒரு வார்த்தை கேக்றன். சரி வந்தால் சரி, இல்லாவிட்டால் இயக்கத்திலை குதிக்கிறன்,” என்றொருவர்.
இப்படி ஒவ்வொரு அத்தியாயத்திலும் புன்னகைக்க, வெடித்துச் சிரிக்க நிறைய இருக்கின்றன.
அதே சமயம் ஊரிலிருந்து வந்து கொண்டிருக்கும் இறப்புச் செய்திகளும் தாய்மார்களின் புலம்பல்களும் (“மழை பெய்த வாசலிலே மண்ணளையப் பிள்ளையில்லை”; பிள்ளை பெறாத உதரங்களும் பால் ஊட்டாத கொங்கைகளும் பாக்கியம் செய்தவை”) …

~oOo~

Ezhuthi_Theera_Pakkangal_Paris_Selvam_Arulaanandham

வருடம் 2006 என்று நினைக்கிறேன். இங்கிலாந்தில் நான் வாடகைக்கு இருந்த வீட்டைப் பார்க்க அன்று மாலை ஒரு இந்திய தம்பதி வருவார்கள், உனக்கு ஆட்சேபம் இல்லையே என்று வீட்டு உரிமையாளர், வெள்ளையர், கேட்டார். நான் காலி செய்வதற்கு இன்னும் ஒரு சில நாட்களே இருந்தன. எனக்கு என்ன ஆட்சேபம் இருக்க முடியும்?
அன்று மாலை அவர்களை அழைத்துக்கொண்டு வந்த உரிமையாளர் உற்சாகமாக அவர்கள் இலங்கையர் என்று கூறினார்.
எனக்கு இன்னும் சந்தோஷம். வந்தவர்களிடம் நான் இன்னும் உற்சாகமாக வீட்டின் அருமை பெருமைகளைச் சொல்லிவிட்டு, இந்த வீட்டில் சன் டிவி டிஷ் ஆண்டெனா இருக்கிறது. நான் இங்கேயே விட்டுவிட்டு போகிறேன். நீங்கள் தமிழ் சேனல்களை கண்டு களிக்கலாம் என்றேன். அவர்கள் சலமனற்று இருந்தார்கள். பின்னர், வெளியேறும் போது நீங்கள் யாழ்ப்பாணத் தமிழரா, கொழும்புத் தமிழரா என்று கேட்டேன். (இலங்கையைப் பற்றி நிறைய தெரிந்தது போல்!). கணவர் அமைதியாக இருந்தார். மனைவி, கண்களைச் சந்திக்காமல் நாங்கள் சிங்களவர் என்று விடைபெற்றுக்கொண்டார். அப்போதுதான் எனக்கு உறைத்தது, இலங்கையினர் என்றால் தமிழர் மட்டுமல்ல! அங்கு நமக்கு, இந்தியத் தமிழருக்குத் தெரியாத இன்னொரு பக்கமும் இருக்கிறது. நமக்கு அதிகம் அறிமுகமில்லாத அந்த மறுபக்கம், இந்தப் புத்தகத்தைப் படித்தபோது நினைவிற்கு வந்தது.
பாரீஸில் சிங்களவர்களும் வாழ்கிறார்கள். இலங்கையில் கலவரம் என்றால் பாரீஸிலும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது சிங்களத்தில் நேரம் கேட்டு சிங்களவர் என்று உறுதி செய்துகொண்டு அடி! அடித்துவிட்டு ஏதோ ஒரு மன திருப்தி! சில வேளைகளில் சிங்களத்தில் சரியாக பதில் சொன்ன தமிழர்களுக்கும் அடி விழுகிறது! பார்க்க சிங்களவர் போலிருந்த மொரிஷியஸ்காரருக்கும் அடி…
புலம் பெயர்ந்தவர்களின் குறிப்புகளில்/ஆவணங்களில் சொந்த மண்ணைப் பற்றிய ஆறா வாசனைகள் ஒரு இயல்பான விஷயமே. அதுவும் இப்போதெல்லாம் “இங்கன” இருக்கும் நெல்லையிலிருந்து “அங்கன” இருக்கும் சென்னைக்கு இடம் பெயர்ந்தததற்கே அதீத புலம்பல்கள் இருக்கையில் ஆசியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு மொழி அறியாத நாட்டிற்கு பெயர்தல் என்பது நிச்சயம் ஒரு குறிப்பிடத்தகுந்த நிகழ்வுதான்.
ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நிகழ்ந்த மாற்றத்தை – தனி மனித, சமூகங்களில் இருந்து தேசங்களின் தலைவிதிகளை வரை நிகழ்ந்த மிகப்பெரிய மாற்றத்தை பின் புலத்தில் கொண்டிருப்பதே இந்த நூல் வழக்கமான புலம் பெயர்வு ஆவணங்களிலிருந்து விலகித் தெரிவதற்கு முக்கிய காரணங்களாக எனக்குத் தோன்றுகிறது.
நூலில், ஒரு பாண்டிச்சேரித் தமிழர் செல்வத்திடம் கேட்ட கேள்வியையையும் அதற்கு செல்வம் அவர்களின் பதிலையும் குறிப்பிட்டு கட்டுரையை முடிக்கலாம் என நினைக்கிறேன்.
தூதரகப்பக்கம் அறிமுகமாகிக்கொண்ட பாண்டிச்சேரி தமிழர் கேட்ட கேள்வி முதலில் வேடிக்கையாக இருந்தாலும், வேடிக்கை இல்லை.
“சிங்களவன், சிங்களவன் என்று சொல்லுகின்றார்களே, அவர்கள் எப்படி இருப்பார்கள்? அல்ஜீரியன் மாதிரி இருப்பார்களா?”
செல்வம் மவுனமாக இருக்க, “மாட்டினிக் அல்லது மாலிக் கறுப்பர்கள் மாதிரியிருப்பார்களா?”
“இல்லை, எங்களைப் போலத்தான் இருப்பார்கள்”…
 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.