ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் தீராத பிரச்சினைகள்; இந்திய அணியின் டூர் சர்ச்சைகள்

zimbCricket

ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் போதாத காலம் 2001-ல் ஆரம்பித்தது. ஆமை புகுந்த வீடு போலாயிற்று அரசு புகுந்த கிரிக்கெட் போர்டு. குறிப்பாக கடந்த 20 வருட காலகட்டத்தில், அதிபர் ராபர்ட் முகாபேயின் (Robert Mugabe) ஜனவிரோத ஆட்சி நாட்டை அதலபாதாளத்துக்குள் கொண்டு சென்றிருக்கிறது. அரசு நிர்வாகம் என ஆரம்பித்து, நிலவுடைமை, சொத்து வாங்கல்-விற்றல் என்று எல்லாவற்றிலும் கறுப்பர் இனத்துக்கே முன்னுரிமை என்று முதலில் ஜனரஞ்சகமாய் ஆரம்பித்தது,  வெள்ளையர் வெறுப்பு என்பதில் போய் நின்றுள்ளது. பழிவாங்குகிறார்களாம். A sort of reverse apartheid ! இப்படி நாட்டின் கறுப்பு, வெள்ளை இனத்தவரிடையே அமைதியின்மையையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது முகாபே அரசு. விளைவு? தாங்கள் பாடுபட்ட நிலங்கள் நஷ்ட ஈடு ஏதுமின்றி பறிக்கப்பட, ஜிம்பாப்வே வெள்ளையர்களில் பலர், பிழைப்பு தேடி, நாட்டைவிட்டே ஓடிப்போய் விட்டார்கள். தங்களுக்குக் கிடைத்த விளைநிலங்களில் பயிர்செய்யத் தெரியாமல், அதற்கான நுட்பங்கள் அறியாமல், கையைப் பிசைந்துகொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள் நாட்டின் கறுப்பினத்தவர்!
கிரிக்கெட் கட்டுரையில் முகாபேயின் புராணம் எதற்கு என்கிறீர்களா? ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து மனிதனையே கடித்த கதை தெரிய வேண்டாமா? ஜிம்பாப்வே அரசின் நாசகார இனவெறிக் கொள்கையின் பாதிப்பு, நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைத்துத் தெருவில் நிறுத்தியது ஒருபுறம். அரசின் தலையீடு கிரிக்கெட் அமைப்புகளுக்குள்ளும் புகுந்தது; வீரர்களின் வாழ்க்கையோடும் விளையாட ஆரம்பித்தது. ஜிம்பாப்வேயின்  கிரிக்கெட் நிர்வாகம், அணி தேர்வு, உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் என்று முகாபே அரசின் எதிர்த்தாக்கம், குறுக்கீடு இல்லாதது அங்கே எதுவுமில்லை.
2001-ல் ஆரம்பித்த கிரிக்கெட்டில் அரசின் பாரபட்சத் தலையீடு 2013 வரை மிக மோசமாக இருந்தது .  ஆரம்பத்திலிருந்தே ஜிம்பாப்வே வீரர்கள் கிரிக்கெட் நிர்வாகத்தில், அணித் தேர்வில் முகாபே நிர்வாகத்தின் தொல்லை தாங்க முடியாததாக உள்ளதாகப் பேச ஆரம்பித்தனர். கறுப்பர்களுக்காக அணியில் ஒரு குறிப்பிட்ட கட்டாய இடஒதுக்கீடு (reservation) வேண்டும் என முகாபே நிர்வாகம் நிர்பந்தித்தது. ஆண்டி ஃப்ளவர் (Andy Flower), க்ரான்ட் ஃப்ளவர் (Grant Flower), ஹீத் ஸ்ட்ரீக்(Heath Streak), ஸ்டூவர்ட் கார்லைல் (Stuart Carlisle),  அலிஸ்டேர் கேம்ப்பெல் (Alistair Campbell) போன்ற, சர்வதேசத் தரம் வாய்ந்த ஜிம்பாப்வே வீரர்கள் திறமை குறைவான கறுப்பின வீரர்களுக்கு இடமொதுக்குவதற்கென அணியிலிருந்து ஒவ்வொருவராகக் கழட்டிவிடப்பட்டனர்.  2003 உலகக்கோப்பையின் போது முகாபே அரசின் பித்தம் தலைக்கேறியது. பொதுமக்களிடேயே எதிர்ப்பு, ஆஸ்திரேலிய, பிரிட்டிஷ் பிரதமர்களின் விமரிசனம் என உள்நாட்டிலும், சர்வதேச வெளியிலும் முகாபே அரசின் ஜனநாயக எதிர்ப்பு, இனத் துவேஷப் போக்கு கடும் கண்டனத்துக்குள்ளானது. `ஜிம்பாப்வேயில் ஜனநாயகம் இறந்துவிட்டது` என எதிர்ப்பு காட்டி ஆண்டி ஃப்ளவர்(வெள்ளையர்), ஹென்றி ஒலொங்கா(Henry Olonga) (கறுப்பினத்தவர்) போன்ற அணியின் தரமான வீரர்கள் கையில் கறுப்புப்பட்டை அணிந்து ஜிம்பாப்வே அணிக்காக விளையாடினர். அரசாங்கம் மசியவில்லை. அடாவடித்தனம் தொடர்ந்தது.
ஹீத் ஸ்ட்ரீக் தலைமையிலிருந்த அணியில்,  அரசாங்கத்தின் தொடர் அழுத்தம் காரணமாக வெள்ளை வீரர்கள் ஒன்று தாமாக வெளியேறினர் அல்லது நீக்கப்பட்டனர். ஸ்ட்ரீக் 65 டெஸ்ட் மேட்ச்களில் 216 விக்கெட் எடுத்த ஜிம்பாப்வேயின் தலைசிறந்த வேகப் பந்துவீச்சாளர். திறமையான பேட்ஸ்மனும்கூட. வீரர்கள்-நிர்வாகத்துக்கிடையேயான மோதலில் ஸ்ட்ரீக் பொறுப்பாக நடந்துகொள்ளவில்லை என அரசுத் தரப்பில் குறை கூறப்பட்டது. கேப்டன் பொறுப்பிலிருந்து 2004-ல் அவர் நீக்கப்பட்டார். அவராகவே விலகியதாக நாடகம் ஆடப்பட்டது. ஜிம்பாப்வேக்காக ஆடமுடியாத நிலையில், ஆண்டி ஃப்ளவர், ஒலொங்கா போன்ற முக்கிய வீரர்கள், பிழைப்பு தேடி இங்கிலாந்து சென்று குடியேறினார்கள். ஒலொங்கா கறுப்பினத்தவராயினும், முகாபே அரசை விமரிசித்ததால், அவர் ஜாம்பியாவில் பிறந்தவர்- ஜிம்பாப்வேக்காரரே அல்ல எனப் பழித்து விரட்டியது முகாபே நிர்வாகம்.
ஸ்ட்ரீக்கின் இடத்தில், 2004-ஆண்டு, 18 வயதான ததேந்தா தைய்பு (Tatenda Taibu) என்கிற வீரர் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஜிம்பாப்வேக்கு கேப்டனான முதல் கறுப்பின வீரர். திறமைமிகுந்தவர் ஆயினும் சர்வதேச விளையாட்டு அனுபவம் இல்லாதவர். கிரிக்கெட் அணியில் பேருக்கு ஒன்றிரண்டு வெள்ளையர்களை மட்டும் வைத்துக்கொண்டு மற்ற இடங்கள் போதிய திறமை, அனுபவம் இல்லாத கறுப்பின வீரர்களால் நிரப்பப்பட்டன. இதற்குப்  பெரும்பாலான சீனியர் வீரர்கள் (இரு இனத்தவரும்) எதிர்ப்பு தெரிவித்தனர். தலைமைப் பொறுப்பேற்ற ஒரு வருடத்திலேயே சலிப்பு தட்டியது தைய்புவுக்கு. நிர்வாகத்தில் தலையீட்டினால் ஜிம்பாப்வே கிரிக்கெட் பாழாவதாக அவர் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்துவிட்டார். 2005 இறுதியில் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார் தைய்பு. 2006-ல் முகாபே அரசு `ஜிம்பாப்வே கிரிக்கெட் யூனியனைக் கலைத்தது. அதிகார, இனவெறி கொண்டவர்களின் தலைமையில் ஒரு தற்காலிக கிரிக்கெட் போர்டை நியமித்து, எரிகிற நெருப்பில் எண்ணையூற்றி வேடிக்கை பார்த்தது.
தேசிய அணி தொடர்ந்து பலவீனப்பட்டுப் போக, 2005-லிருந்து 2010 வரை ஜிம்பாப்வே டெஸ்ட் கிரிக்கெட் ஆட முடியவில்லை. 2013-ல் வீரர்கள் தங்களுக்கு முறையாக சம்பளம் கொடுக்கப்படவில்லை எனப்  போர்க்கொடி தூக்கினர். 2011-லிருந்து 2015 வரை ஜிம்பாப்வே டெஸ்ட் அணிக்குத் தலைமை தாங்கி சிறப்பாக ஆடினார் ப்ரெண்டன் டேய்லர் (Brendon Taylor) வெள்ளைக்காரர்). ஆண்டி ஃப்ளவர், ஹீத் ஸ்ட்ரீக்குப் பிறகு ஜிம்பாப்வேயின் தலைசிறந்த பேட்ஸ்மன். சம்பளம் முறையாகக் கொடுக்கப்படாததால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. 2015-ல் சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துவிட்டு, ஜிம்பாப்வேயை விட்டு இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்தார் டேய்லர். `வேறு வழியில்லை. எனக்குக் குடும்பம் இருக்கிறது. அதனை நான் காப்பாற்றியாக வேண்டும்` என்று அவர் புலம்பியது பரிதாப நிலை.
ஒரு-நாள், டி-20 போட்டிகளில் ஜிம்பாப்வே அணிக்கு, இடை இடையே  ப்ராஸ்பர் உத்செயா (Prosper Utseya), ஹாமில்டன் மசகாட்சா(Hamilton Mazakadsa) ஆகிய கறுப்பின வீரர்கள் தலைமை தாங்கியிருக்கின்றனர். இந்த வருடம் இந்திய அணி ஜிம்பாப்வேயில் வந்து இறங்குமுன், ஜிம்பாப்வே கிரிக்கெட்,  கேப்டன் மசகாட்சாவையும்,  பயிற்சியாளர்  டேவ் வாட்மோரையும் (Dave Whatmore) பதவிகளிலிருந்து தடாலடியாக நீக்கியது. நீக்குவதும், தூக்கி உட்காரவைப்பதுமான நாடகங்கள் ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் தொடர் சரித்திரம்.
மூன்று வருடங்கள் அந்த அணியின் முன்னாள் பயிற்சியாளராக இருந்த இங்கிலாந்தின் ஆலன் புட்ச்சர் (Allan Butcher), தன்னுடைய புத்தகத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார்: ஜிம்பாப்வே கிரிக்கெட் நிர்வாகத்துக்கும், அணிக்குமிடையே ஆரம்பத்திலிருந்தே தீராத பிரச்சினைகள் இருந்துவருகின்றன. அவற்றில் சில தனிமனித விருப்பு-வெறுப்புகள் சம்பந்தப்பட்டவை; சில இனத்துவேஷம் தொடர்பானவை. ஏதேதோ காரணத்துக்காக ஒருவரையொருவர் நம்பாத நிலை; எல்லாமாகச் சேர்ந்து ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர்களின் உத்வேகம், ஆட்டத்திறன் ஆகியவற்றைப் பெரிதும் பாதிக்கிறது என்கிறார். இப்படியாகக் குழப்பங்கள் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்க, ஜிம்பாப்வே கிரிக்கெட்டை சரியாக தலையெடுக்கவிடவில்லை; வளரவிடவில்லை முகாபே நிர்வாகம்.

ஜிம்பாப்வேக்கு அனுப்பப்பட்ட இந்திய அணி

இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளில், ஜிம்பாப்வே போன்ற வலிமையற்ற அணியுடன் மோத நேர்கையில், எதிரணிகள் பொதுவாக, திறமைகாட்டுகின்ற ஆனால் சர்வதேச அனுபவமற்ற வீரர்களை சோதிப்பதற்காக அணியில் சேர்ப்பது வழக்கம். அதைத்தான் இந்திய கிரிக்கெட் போர்டும் செய்தது. அதே சமயத்தில் ஜூலை-ஆகஸ்டில் வரவிருக்கும், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 4 -மேட்ச் டெஸ்ட் தொடர் சவால் நிறைந்ததாக இருக்கும். அதனால், கிட்டத்தட்ட ஓய்வின்றி இந்தியாவுக்காகத் தொடர்ந்து விளையாடி வரும் அனுபவ வீரர்களுக்கும், அத்தகைய தொடருக்குமுன் போதிய ஓய்வு கொடுப்பது உத்தமம் என நினைத்திருக்கவேண்டும். அப்படியானால் அது சரியானதே. அதே சமயத்தில் தோனி தலைமையில் சென்ற இந்திய அணி ஒரு பாடாவதி அணி என்று சிலர் கருதுவதில் எந்த நியாயமுமில்லை. ஜிம்பாப்வேக்கான இந்திய அணியிலிருந்த அம்பத்தி ராயுடு, கே.எல்.ராகுல், ஜஸ்ப்ரித் பும்ரா, அக்‌ஷர் படேல், தவல் குல்கர்னி, பரிந்தர் ஸ்ரன் ஆகியவர்கள் ஏற்கனவே சர்வதேசப் போட்டிகளில் இந்தியாவுக்காக சில போட்டிகளிலாவது ஆடியிருப்பவர்கள். இவர்களில் சிலர் மிக நன்றாகப் பங்களித்திருக்கிறார்கள். மேலும் இந்தியாவின் அடுத்த ஐந்தாண்டுக்கான  எதிர்கால அணியில் இடம்பெறத் தகுதியுள்ளவர்களே இவர்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
தலைமைத் தேர்வாளரான சந்தீப் பாட்டீல் ஜிம்பாப்வே டூருக்கான இந்திய அணி குறித்து பத்திரிக்கையாளரிடம் பேசுகையில், அவசியம் எனக் கருதியே இளம் அணி ஒன்று அனுப்பப்படுவதாகக் கூறினார். எந்த ஒரு இந்திய வீரரும் தனக்கு ஓய்வு வேண்டும் எனக் கேட்கவில்லை. மேலும், சீனியர் வீரர்களான முரளி விஜய், விராட் கோஹ்லி, ஆஷிஷ் நேஹ்ரா போன்றோர் சிறு காயங்கள் காரணமாக தேவையான ஓய்வில் இருப்பதாகவும் விளக்கினார் அவர்.

பெண் மானபங்க சர்ச்சையில் இந்திய அணி

ஜிம்பாப்வேயில் விளையாடுகையில்,  இந்திய  வீரர் ஒருவர் தன்னை மானபங்கப்படுத்தியதாக, அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் ஜிம்பாப்வே பெண் ஒருவர் குற்றம் சாட்டியதாகப் பத்திரிக்கைகளில் செய்தி வந்து பரபரப்புதந்தது. அதில் எந்த உண்மையும் இல்லை என ஹராரேயில் உள்ள இந்திய தூதரகமும், இந்தியக் கிரிக்கெட் போர்டும் மறுத்துள்ளன. ஜிம்பாப்வே செக்யூரிட்டி அதிகாரிகளில் ஒருவரும், இப்படி வந்த செய்தியை மறுத்துள்ளார். இந்தியப் பெயரைப் புரிந்துகொள்வதில் ஜிம்பாப்வே போலீசுக்கு நேர்ந்த குழப்பமே இதற்குக் காரணம் என்றார். கைது செய்யப்பட்ட இரு நபர்கள்,  இந்திய அணியின் தொடரை ஸ்பான்சர் செய்யும் ஜிம்பாப்வே கம்பெனியோடு தொடர்புடைய இந்தியக் கம்பெனி ஒன்றின் ஊழியர்கள் என்றும் தெளிவுபடுத்தினார். அப்பாடா, இன்னுமொரு சர்ச்சை இனிதே முடிந்தது.