கிருஷ்ணனும் அவனுடைய புல்லாங்குழலும் இணைபிரித்துக் காணஇயலாதவை அல்லவா? கிருஷ்ணன் என்றாலே புல்லாங்குழலை வாசித்தவண்ணம் நிற்கும் நீலமேக ச்யாமளவண்ணனான அவனுடைய அழகியவதனமும் புன்னகைதவழும் முகமும்தான் உடனே நினைவுக்கு வரும். அதுவே கிருஷ்ணாவதாரத்தின் சிறப்பாகும். கிருஷ்ணனை, அவனுடைய புல்லாங்குழலிலிருந்து எழும் மனதைமயக்கும் அந்த மோகன இசையை, அதில் அனைவருமே தம்மை இழந்து கிருஷ்ணானுபவத்திற்கு ஆட்படுவதை, எல்லாருமே அறிந்த ஒன்றை, திரும்பத்திரும்ப அத்தனை மகான்களும், புலவர்களும், பக்தர்களும் பாடிப்போற்ற வேண்டுமெனில் அதில், அந்த வாசிப்பில், மனிதமனத்திற்கு எட்டாத பெரிய செய்தி ஒன்று பொதிந்திருப்பதை உய்த்துணரலாம். அதுதானோ கிருஷ்ணானுபவம்? ‘கண்டவர் விண்டிலர்,’ என்றுதான் கூறவேண்டும்.
பெரியாழ்வார் கூறுகிறார்: இடது மோவாயை இடது தோளோடு சாய்த்து, இருகைகளாலும் புல்லாங்குழலைப் பற்றிக்கொண்டு குழலூதுகிறான் கண்ணன். முனைப்பாகக் குழலூதும்போது, (ஊதுவதற்குக் காற்றை நெஞ்சுநிறைய இழுத்துக்கொள்வதனால்) வயிறு குடம்போல உப்பிக் காண்கின்றதாம்; உதடுகளைக் குவித்துக் குழலினை ஆழ்ந்து இசைக்கிறான் அவன். அழகான மயிலின் தோற்றமும் மானின் சாயலும் கொண்ட பெண்கள் அதனைக் கண்ணுற்று அந்த இசையில் வசமாகித் தங்கள் கூந்தல் அவிழ்ந்து புரள, உடை நெகிழ, அவ்வாறு நெகிழும் உடையினை ஒருகையால் பிடித்துக்கொண்டு, செவ்வரி படர்ந்த கண்களினால் இவ்வாறு குழலூதும் கண்ணனைக் கண்டு நாணமுற்று நின்றனராம்.
இடவ ணரைஇடத் தோளொடு சாய்த்து
இருகை கூடப் புருவம்நெரித் தேற
குடவ யிறுபட வாய்கடை கூடக்
கோவிந்தன் குழல்கோ டூதின போது
மடம யில்களொடு மான்பிணை போலே
மங்கை மார்கள் மலர்க்கூந்த லவிழ
உடைநெ கிழவோர் கையால் துகில்பற்றி
ஒல்கி, யோடரிக்க ணோடநின் றனரே
(பெரியாழ்வார் திருமொழி- மூன்றாம்பத்து)
பெரியாழ்வார் தமது மனக்கண்ணில் கண்டு மகிழும் இந்தக் காட்சியைப் பாடலாக்கியுள்ளார்: மிகவும் நுட்பமான காட்சி வர்ணனை! குழலூதுபவனின் உடல் மாறுபாடுகளைத் தாம் அருகிருந்து பார்த்துப் பாடியுள்ளது போலுள்ளது. கண்ணன் தரிசனம் இவருக்குப் பிரத்தியட்சம் என்பதற்கு வேறென்ன சான்று வேண்டும்?
இப்படியும் இசை உயிர்களை மயக்குமா என அதிசயிக்கிறோம். முன்கண்ட பாசுரத்தில் நெகிழும் உடையை ஒருகையால் பற்றிக்கொண்டு நிற்கும் ஓடரிக்கண்ணினாரைக் கண்டோம். அடுத்து தேவலோக மாதர்களும் நாணிநிற்கக் காண்கிறோம்.
இந்தக் கிருஷ்ணன் நச்சுப்பூண்டுகளாகிய தேனுகன், பிலம்பன், காளியன் என்னும் அரக்கர்களை அழித்தவன். அவன் கானகத்திலே உலாவும்போது தீஞ்சுவை இதழில் வேய்ங்குழல் வைத்து ஊதுகிறான். அதற்கேற்பத் தனது கால்களால் நடனமாடிக்கொண்டே குழலூதுகிறான். வானகத்தில் உள்ள மேனகை, அரம்பை, ஊர்வசி (உருப்பசி) திலோத்தமை ஆகிய பெண்கள் இந்திரனுடைய சபையில் நாட்டியமாடச்செல்கிறார்கள். வழியில் இவனுடைய வாசிப்பைக்கேட்டும், நாட்டியத்தைப்பார்த்தும் அவர்கள் வெட்கித் தலைகுனிகிறார்கள். எதற்கு வெட்கம்?
‘நாம் ஆடுவதெல்லாம் ஒரு நாட்டியமா? இந்த இசையின் முன்பு நாம் எமது நடனத்தின் குறைபாடுகளை அறிந்தோம்; இனி எங்கும் நடனமாட வேண்டாம்,’ எனத்தமக்குத்தாமே செய்துகொண்ட ஒரு சங்கல்பத்தால் ஆடல்பாடல்களைத் தாமே தவிர்த்துவிட்டனராம்.
தேனுகன் பிலம்பன் காளிய னென்னும்
தீப்பப் பூடுக ளடங்க உழக்கி
கான கம்படி யுலாவி யுலாவிக்
கருஞ்சிறுக் கன்குழ லூதின போது
மேனகை யொடுதி லோத்தமை அரம்பை
உருப்பசி யரவர் வெள்கி மயங்கி
வானகம் படியில் வாய்திறப் பின்றி
ஆடல் பாடலவை மாறினர் தாமே.
(பெரியாழ்வார் திருமொழி- மூன்றாம்பத்து)
சின்னஞ்சிறுவன்; கையிலொரு புல்லாங்குழல்; கண்கலை மூடிக்கொண்டு, அதனை மென்மையாகத் தடவி குழலின் துளைகளை அவ்வருடலால் அறிந்துகொண்டு, இசையை எழுப்புகிறான் அவன். துளையின் ஸ்வரஸ்தானங்கள் அவன்மட்டுமே அறிந்தகலை. (அவனிடமிருந்து பின் நாமறிந்தோம்!) ‘தடவிப்பரிமாற,’ எனும் சொற்பிரயோகம் அவன் வாசிப்பின் இத்தன்மையை, மேதைமையைத் தெளிவாக உரைக்கிறது. வாசிப்பில் ஆழ்ந்தவனின் சிவந்தகண்கள் தன் இசையில் இணைந்து இயைந்து மயங்கிக் கிறங்கிக் கோணி எங்கோ நோக்குகின்றன; சிவந்தவாய் குழலை ஊதுவதற்காகக் காற்றை உறிஞ்சுகிறது; புருவங்கள் வளைந்து காண்கின்றன. அவற்றில் வாசிப்பின் மும்முரத்தால் சிறுவியர்வை படர்ந்திருக்கிறது. இப்படி ஒரு குழலூதுபவனைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். இத்துணை மும்முரமாக ஒருவன் குழல் இசைத்தால் என்னவாகும்? பிரபஞ்சமே தன் சுழற்சியை மறந்துநிற்கும். பறவைகள் குஞ்சுகளுக்கு உணவளிப்பதனையும் மறந்து, தமது கூடுகளைத்துறந்து வந்து காட்டில் பரவிக்கிடக்கின்றன. மேய்ச்சலுக்கு வந்த மாடுகள் தமது கால்களைப்பரப்பிக் கொண்டும், தலையைத் தாழ்த்திக்கொண்டும் காதுகளைக்கூட அசைக்காமல் அந்த இசையைக் கேட்டபடிக்கு நின்றனவாம். இப்பாசுரத்தில் ‘செவியாட்டகில்லாவே’ எனும் சொல்நயமும் வியத்தற்குரியது. பூச்சிகளும் ஈக்களும் வந்து மொய்ப்பதால் பசு முதலான மிருகங்கள் எப்போதும் காதுமடல்களை ஆட்டியவண்ணமே இருக்கும். அது இயற்கை. கோவிந்தனின் இசையைச் செவிமடுக்கும் சமயம் அவ்வாறு செவிகளையசைத்தால் இசை சரியாகக் கேளாது போய்விடுமோ எனும் அச்சத்தால் காதுமடல்களையும் ஆட்டாமல் நின்றனவோ?! அந்த ரகசியம் கிருஷ்ணனுக்குத்தான் தெரியும்.
சிறுவி ரல்கள் தடவிப்பரி மாறச்
செங்கண் கோடச் செய்யவாய் கொப்பளிப்ப
குறுவெ யர்ப்புரு வம்கூட லிப்பக்
கோவிந்தன் குழல்கொ டூதின போது
பறவையின் கணங்கள் கூடு துறந்து
வந்து சூழ்ந்து படுகாடு கிடப்ப
கறவையின் கணங்கள் கால்பரப் பிட்டுக்
கவிழ்ந்திறங் கிச்செவி யாட்டகில் லாவே.
(பெரியாழ்வார் திருமொழி- மூன்றாம்பத்து)
மனித உயிர்கள் மட்டுமல்லாது மற்ற ஐந்தறிவு உயிர்களும் கிறங்கி நிற்கும் இசையின் இனிமையை நாம் இப்பாசுரத்தில் உணருகிறோம். இசைமயக்கம் மட்டுமின்றி, இசைப்பவன் தானே அவ்விசையாகி இயங்கும்போது ஏற்படும் மெய்ப்பாடுகளை- ‘செங்கண் கோடச் செய்யவாய் கொப்பளிப்ப குறுவெயர்ப்புருவம்கூடலிப்ப’ எனவெல்லாம் நுட்பமாகப் பதிவு செய்திருக்கும் அழகும் இப்பாடலில் மிளிர்கின்றது. ‘இதுதானோ கிருஷ்ணானுபவம்’ என என்னைப்போல் அதனை உணரவியலாத அறிவிலி தடுமாறுவதும் நியாயம்தானே?
ஆயர்பாடிப் பெண்களான மாந்தர்கள், பின் ஐந்தறிவு மிருகங்கள், பறவைகள் என எல்லாம் மயங்கி நின்றதனைக்கூறியவர் அடுத்துக்கூறுவது என்ன?
கருமையான கண்களைக்கொண்ட மயிலிறகினைத் தன் முடியில் அழகாகச் செருகிக் கொண்டிருக்கிறான் இவன். அழகான மஞ்சள்(பீதக)வண்ணப் பட்டினையும் அரையில் உடுத்திக்கொண்டு, ஆபரணங்களை அணிந்துகொண்டு, ஆயர்பாடிக்கே தலைவனாக நிற்கும் இப்பெருமான் குழலூதினபோது என்னவாயிற்று தெரியுமா? கானகத்து மரங்கள் அவனுடைய குழலிசையின் இனிமையில் உருகி, மலர்களிலிருந்து தேன்தாரைகளை ஒழுகவிட்டனவாம். மலர்கள் தாமே உதிர்ந்து பூசைசெய்வது போல அவன்மீது விழுகின்றன. மலர்க்கொத்துக்களைத் தாங்கும் மரக்கொம்புகள் அவன் அடியிணைகளில் தாழ்ந்து வளைகின்றன. இவை கூம்பிப் பணிவாகக் கைகூப்பி அக்கண்ணனை நோக்கி அவன் திரும்பும் திசைதோறும் தாமும் திரும்பி வணங்குபவை போலக் காணப்பட்டனவாம். ஆச்சரியமாக இல்லை?
கருங்கண் தோகைமயிற் பீலி யணிந்து
கட்டிநன் குடுத்த பீதக ஆடை
அருங்கல வுருவின் ஆயர் பெருமான்
அவனொரு வன்குழ லூதின போது
மரங்கள் நின்றுமது தாரைகள் பாயும்
மலர்கள் வீழும்வளர் கொம்புகள் தாழும்
இரங்கும் கூம்பும் திருமால் நின்றநின்ற
பக்கம் நோக்கிஅவை செய்யும் குணமே.
(பெரியாழ்வார் திருமொழி- மூன்றாம்பத்து)
இவ்வாறு செடிகொடிகளின் உணர்வுகளையும் பெரியாழ்வார் பதிவுசெய்துள்ளமை படிக்கும் நம்மைப் புல்லரிக்கவைத்து, அவரனுபவித்த அந்த அனுபவத்தை நாமும் அடையத் துடிக்க வைக்கிறது.
‘புல்லாய்ப்பிறவி தரவேணும் கண்ணா,‘ என ஊத்துக்காடு வெங்கடகவி ஏன் பாடினார் என்று இப்போது மெல்லப் புரிந்ததுபோல இருக்கிறது; ‘புல்லின் கிருஷ்ணானுபவம் மிகச் சுலபத்தில் எய்தக்கூடியதுபோலும்; கிருஷ்ணன் காலடி பட்டுவிட்டால் பிறவிப்பயன் கிட்டிவிடுமே,’ எனத்திகைக்கிறோம். தினப்படி நடப்புகள்தான். இருப்பினும் எதிர்பாராத ஒன்றை, நடக்கவியலாத ஒன்றை, வாழ்வில் எதிர்நோக்கி ஏங்கும் ஆன்மஏக்கம் அது.
எத்தனையோ நூறாயிரம் பாடல்கள் கிருஷ்ணனுடைய புல்லாங்குழல் இசையைப் போற்றி எழுந்துள்ளன. ஆயினும் இத்துணை நுண்ணிய உணர்வுகளின் குவியலாக பெரியாழ்வாரின் திருமொழிபோல, வேறெதுவும் அமையவில்லை என்பது என் கருத்து.
அவனுடைய குழலோசையால் உலகில், ஆயர்பாடியில், கானகத்தில் என்னவாயிற்று எனக்கண்டோம். இனி வேறுசில பாடல்களில் அவற்றை இயற்றியோர் இந்த இசையின் பயனைப்பற்றிக் கூறியிருப்பதனைக் காணலாமா?
கானமழை பொழிகின்றான்-கண்ணன்
யமுனாதீரத்தில் யாதவகுலம் செழிக்க (கானமழை)
ஆனந்தமாகவே அருள்பெருகவே
முனிவரும் மயங்கிடும் மோகனரூபன் (கானமழை)
குயிலினம் கூவிட மயிலினம் ஆடிட
ஆவினம் கரைந்திட அஞ்சுகம் கொஞ்ச
கோவலர் களித்திட கோபியர் ஆட
கோவிந்தன் குழலூதி (கானமழை)
(அம்புஜம் கிருஷ்ணா)
இந்த இசைமழையின் பயன் யாதவர்களின் குலம் செழிக்கவே என்கிறது இப்பாடல். மானிடர்களுக்கு ஆனந்தத்தையும், அருளையும் கொடுத்துக் களிப்பில் ஆழ்த்துகிறதாம் இந்த இசை. ஒருவிதமான சுவாரஸ்யமும் இன்றி நிர்ணயிக்கப்பட்ட மோனலயத்தில் மாடுமேய்ப்பது, பால்கறப்பது, தயிர் வெண்ணை விற்பது என இயங்கிக்கொண்டிருந்த ஆயர்பாடி வாழ்வில் சுவைகூட்டவே ஏற்பட்டது கிருஷ்ணாவதாரம் என்று ஏற்கெனவே கண்டோம். அவன் எழுப்பும் குழலிசையும் அதன் முக்கியமான ஒரு அங்கம்.
‘இந்த இசையைக்கேட்டபின்னர் என்வாழ்வில் ஒருகுறையும் இல்லை,’ எனத் தலைவி தோழியிடம் கூறும் கூற்றாக அமைகிறது ஊத்துக்காடு வேங்கடகவியின் காம்போதி ராகப்பாடல்.
குழலூதி மனமெல்லாம் கொள்ளைகொண்டபின்னர்
குறையேதும் எனக்கேதடி- சகியே
மகரக்குண்டலம் ஆடவும்- அதற்கேற்ப
மகுடம் ஒளிவீசவும்
மிகவும் எழிலாகவும்- காற்றில்
மிளிரும் துகில் போலவும்
(ஊத்துக்காடு வெங்கட கவி)
இந்தக்குழலிசை கேட்ட தலைவி முதலில் ஆனந்தம் அடைகிறாள்: பின் எங்கிருந்து வருகிறது இந்த இசை எனத் திகைக்கிறாள். தனது உள்ளம் கவர்ந்த கண்ணனின் குழலிசை என உறுதியாக அறிந்ததும், “அது காதுக்கு அமுதகானம் ஆனாலும் உள்ளத்தில் நஞ்சையல்லவோ செலுத்திக்கொல்கின்றது; பண்ணையும் பாடலையும் மட்டும் அவன் இசைக்கவில்லை; பாவையரான நமது உள்ளம் வாடும்படி எய்யும் அம்பாக அல்லவோ அந்த இசை இருக்கிறது!” என நொந்துகொள்கிறாள்.
எங்கிருந்து வருகுவதோ?- ஒலி
யாவர் செய்குவதோ?- அடி தோழி! (எங்கிருந்து)
…………………………
மதி மருண்டிடச் செய்குதடி!- இஃது (எங்கிருந்து)
கண்ண னூதிடும் வேய்ங்குழல் தானடீ!
காதி லேயமு துள்ளத்தில் நஞ்சு,
பண்ணன் றாமடீ பாவையர் வாடப்
பாடி யெய்திடும் அம்படி தோழி! (எங்கிருந்து)
(பாரதியார்)
இசையைக்கேட்ட மாத்திரத்திலேயே ஓடிச்சென்று அவனுடன் ஒன்றிவிடத்துடிக்கும் உள்ளம்! அது இயலாதபோழ்தில் ஆற்றாமையே ஊற்றாகப் பெருக்கெடுப்பதனை இப்பாடலில் காண்கிறோம்.
இதன் அடுத்த நிலையைக் கல்கியின் பாடலில் காணலாம். கிருஷ்ணனின் குழலிசை செய்யக்கூடிய செயல்களான கல்லைக்கனியாக்கி, பட்டமரங்களைத் தளிர்க்கச் செய்யும் மாயாஜாலங்களை விவரிக்கும் பக்தமீரா, அதே இசை நெஞ்சினில் ஒரு விவரிக்க இயலாத பேரானந்தத்தை எழுப்பி, நினைவையும் அழித்துத் தன்னைமறக்கச் செய்யும் நிலைக்குத் தன்னைச் செய்துவிடுவதை மிகுந்த ஆதங்கத்துடன் பாடும்போது நம் கண்களிலுமே நீர் பெருகுகிறதன்றோ?
காற்றினிலே வரும் கீதம்-கண்கள்
பனித்திடப்பொங்கும் கீதம்
கல்லும் கனியும் கீதம்
பட்ட மரங்கள் தளிர்க்கும் கீதம்
பண்ணொலி கொஞ்சிடும் கீதம்
காட்டுவிலங்கும் கேட்டே மயங்கும்
மதுர மோகன கீதம்- நெஞ்சினிலே
நெஞ்சினிலின்பக் கனலையெழுப்பி
நினைவழிக்கும் கீதம் (காற்றினிலே)
(கல்கி)
கண்ணனின் குழலிசைக்கு இது ஒரு அற்புதமான ஆராதனைப்பாடல்; இயற்றிய பெருமை கல்கி அவர்களுக்கென்றால், இப்பாடலை தேவகானமாகப் பொழிந்து நம் இதயங்களை என்றென்றும் கொள்ளைகொண்டுவிட்ட பெருமை எம். எஸ். சுப்புலட்சுமி அவர்களுக்கே! இதனைப் பாடுவதும், எம். எஸ். அவர்களின் ஒலிப்பதிவைக் கேட்பதுமே கூட ஒரு இனிய கிருஷ்ணானுபவம்தான்!
‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே- எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களே,’
என வேண்டுகிறார் கவிஞர் கண்ணதாசன். இவருடைய நோக்கைப் பாருங்கள். கண்ணன் இனிமையாக வாசிக்கப் புல்லாங்குழல் வேண்டும். அதைக்கொடுப்பவை மூங்கில்கள். கொடுத்தபின், அவன்புகழை அவனுடைய இசைமூலமாகவே பாடிக்களிக்கின்றன! சுகமான கற்பனை!
கண்ணன் குழலிசையைப்பற்றி ஒரு ஆய்வேடே எழுதிவிடலாம். அத்தனை விதம்விதமான பாடல்கள்; தத்துவங்கள்; கற்பனைகள்; கருத்துக்கள்.
(கிருஷ்ணலீலைகள் வளரும்)
_