சிக்காகோவிலிருந்து வரும் நாவலாசிரியராகிய நீங்கள் எவ்வாறு அமெரிக்க வாழ்க்கையில் உங்களைப் பொருத்திக் கொள்கிறீர்கள்? நீங்கள் சொந்தம் கொண்டாடும் இலக்கிய உலகம் என்று ஏதாவது ஒன்று இருக்கிறதா?
சில ஆண்டுகள் முன்பு பாரிசின் வொல்டேர் உணவகத்திற்குள் நாவலாசிரியர் லூயி கீயூ (Louis Guilloux) நுழைகையில், பணியாள் ஒருவர் அவரை “மேத்(ஹ)” (“Maitre” ) என்றழைத்தார். அவரைப் பார்த்து பொறாமைப்படுவதா அல்லது சட்டைக் கைக்குப்பின் மறைவாக சிரித்துக் கொள்வதா என்று எனக்கு அப்போது புலப்படவில்லை. அதுவரையில் என்னை எவரும் அவ்வளவு பவ்யமாக நடத்தியதில்லை. பிரெஞ்சுக்காரர்களுக்கு இலக்கியம் எவ்வளவு முக்கியம் என்று எனக்குத் தெரியும். நானே கூட சலோன், சின்னாக்ள (Salons, Cenacles[1]) மற்றும் ஃப்லோபேர், துர்கேனியேவ் சான்ட் போவ் ஆகியோர் (Flaubert, Turgenev, Sainte-Beuve) மான்யீ உணவகத்தில் (Magny’s) கழித்த மாலைகளைப் பற்றியெல்லாம் சிகாகோவில் மாணவனாக இருந்தபோது படித்திருக்கிறேன் – படித்துப் பெருமூச்சு விட்டிருக்கிறேன் என்று சொல்வதே சரி. என்ன ஒரு அற்புதமான காலம்!. ஆனால் பிரெத்தொன் பகுதியைச் சார்ந்த, மாஜி இடதுசாரியான கீயூ, தான் Maitre என்று அழைக்கப்பட்டதை உணர்ந்து முகம் சுளித்தார். ஒருகால் பாரீஸிலும் கூட, தெவிட்டும் வரை உபசரிக்கும் தலைமை பரிசாரகர்களால் மட்டுமே இலக்கிய கலாசாரம் பொது இடங்களில் இன்று மதிக்கப்படும் போலிருக்கிறது.. ஆனால் இங்கே அந்தப் பிரச்சினையெல்லாம் கிடையாது, அதைக் காட்டிலும் காத்திரமான நிலத்தில்தான் நின்று கொண்டிருக்கிறேன். உணவறைகளைத் தவிர்த்தால் அமெரிக்காவில் மேத்(ஹ)ர்கள் கிடையாது, இலக்கிய உலகமோ இலக்கியத்தைப் பேணும் பொதுஜனமோ கிடையாது. நம்மில் பலர் படிக்கிறார்கள், இலக்கியத்தை விரும்பவும்கூட செய்கிறார்கள் ஆனால் இலக்கிய கலாசாரத்தின் பாரம்பரியங்களும் நிறுவனங்களும் இங்கு அறவே கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும். இதை நான் ஒரு குறையாக கூறவில்லை. நம் சமூகத்திற்கு இந்த மாதிரியான விஷயத்திலெல்லாம் அக்கறை இல்லை என்பதை ஒரு தகவலாக குறிப்பிடுகிறேன். பணிவிணக்கப் பாரம்பரியத்தை மரபுரிமையாகப் பெறாத எந்த நவீன தேசத்திலும் இம்மாதிரியான பழக்க வழக்கங்கள் சாத்தியமில்லை.
அமெரிக்க எழுத்தாளர்கள் புறக்கணிக்கப்படவில்லை; அவ்வப்போது அவர்களும் மகத்தானவர்களுக்கான நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார்கள்; ஏன், வெள்ளை மாளிகைக்குக்கூட அழைக்கப்படுகிறார்கள். ஆனால் அங்கு அவர்களுடன் இலக்கியம் கதைப்பதற்கு எவருமே இருக்கமாட்டார்கள். திரு.நிக்சன் (Mr.Nixon) அவர்கள் எழுத்தாளர்களை வெறுத்து அவர்களை வெள்ளை மாளிகைக்கு அழைக்க அப்பட்டமாகவே மறுத்தார். ஆனால் நடிகர்கள், இசைக்கலைஞர்கள், தொலைக்காட்சி செய்தியாளர்கள், அரசியல்வாதிகளிடம் நடந்துகொள்வதைப் போல் எழுத்தாளர்களிடமும் பணிவாக நடந்துகொள்கிறார் திரு.போர்ட் (Mr.Ford). ஆடம்பரமான வரவேற்பு விழாக்களின்போது, தங்களைத் தாங்களேஒருவருக்கொருவர் பார்த்துப் பரவசமடையும் பிரமுகர்களால் வெள்ளை மாளிகையின் கிழக்கு அறை நிரம்பி வழிகிறது. செக்ரெட்டரி கிஸ்ஸிஞ்சரும், டானி கேயும் ஆரத்தழுவிக் கொள்வார்கள். வயதின் தடம் தெரியாமல் தன்னை அப்படியே அற்புதமாய்த் தக்கவைத்துக் கொண்டு, படத்தில் வருவதைப் போல் நிஜத்திலும் அழகாயிருக்கும் காரி கிராண்ட்டை செனட்டர்களின் மனைவிமார்கள் மொய்க்கிறார்கள். பாவம், மகோன்னதத்துவத்தை அன்னியோன்யமான நெருக்கத்தில் எதிர்கொள்வதால் ஏற்படும் கிளர்ச்சி அவர்களைத் திக்குமுக்காடச் செய்கிறது. தங்கள் உணவுமுறை, பயணங்கள், உட்கொள்ளும் விட்டமின்கள் இவற்றுடன் வயோதிகத்தின் சிக்கல்களைப் பற்றியும் அவர்கள் பேசிக் கொள்கிறார்கள். மொழி அல்லது நடை பற்றிய கேள்விகள், நாவல்களின் கட்டமைப்பு, ஓவியத்துறையின் போக்குகள் இவையெல்லாம் அங்கு விவாதிக்கப்படுவதில்லை.
எழுத்தாளனுக்கு பொழுதைக் கழிப்பதற்கான அருமையான ஒரு பரபரப்பு (பாப்) நிகழ்வாக திரு.போர்டின் பார்ட்டி அமைகிறது. அவனுடைய பெயரை செனடர் ஃபுல்பிரைட் (Senator Fulbright) அடையாளம் கண்டுவிட்டார் போலிருக்கிறது. “ நீ கட்டுரைகள் எழுதுகிறாய், இல்லையா? உன் கட்டுரையொன்று நினைவிருக்கிறது என்று நினைக்கிறேன்.” செனட்டர் ஒரு காலத்தில் ரோட்ஸ் ஸ்காலராக இருந்தது அனைவரும் அறிந்ததே. அவருக்குக் கண்டிப்பாக கட்டுரை நினைவிருக்கும்.
உண்மையில், இம்மாதிரியொரு மாலையில் உடலைவிட்டு பாதிவழி சுயம் பிரிந்து உலாவிக்கொண்டிருப்பதைப் போன்ற உணர்வு எழுத்தாளனுக்கு சுகமாகவே இருக்கிறது: வெட்டிப் பேச்சால் பாதிக்கப்படாமல், அறைவிட்டு அறை தாவியபடி, கவனித்துக் கொண்டும், செவித்துக் கொண்டும்… பொதுவில் மும்முரமாக இயங்கிக் கொண்டிருப்பவர்கள் அரசாங்கக் கடமைகளுக்கிடையே இலக்கியம், கலை, தத்துவம் போன்றவற்றிலும் ஈடுபடுவது சாத்தியமில்லை என்பது அவனுக்கு தெரிந்ததே. முறுக்கிய கம்பிமேல் நடக்கும் அவர்களின் உலகம் ஆற்றின் ஓரம் மிளிரும் இளமஞ்சள் பூக்களாலானது அல்ல. பத்து வருடங்களுக்கு முன்பு மேயர் டேலி, மிட்லண்ட் ஆசிரியர்கள் கழகத்தின் சார்பாக, என் ஹெர்சோக் நாவலிற்காக ஐநூறு டாலர் பெறுமானமுள்ள காசோலையை சிறு விழாவொன்றில் எனக்கு பரிசாக அளித்தார். “மேயர் அவர்களே நீங்கள் ஹெர்சோக் படித்திருக்கிறீர்களா?” பத்திரிகையாளர் ஒருவர் அவருக்குத் தூண்டிலிடும் நோக்கத்துடன் கேட்டார். “ஓரளவிற்கு அதை பரிசீலித்திருக்கிறேன்,” எருமைத்தோல் கொண்ட டேலி கிஞ்சித்தும் சஞ்சலமின்றி பதிலளித்தார். கலை மேயருக்கு பிடித்தமான பண்டம் அல்ல. அவருக்கு ஏன் அது பிடித்திருக்க வேண்டும்? ஸ்டாலின் கவிதை மீது கொண்ட அக்கறை அனைவரும் அறிந்ததே. என்னைப் பொறுத்தவரையில் அம்மாதிரியான அக்கறையைக் காட்டிலும் மேயரின் புறக்கணிப்பு எவ்வளவோ மேல்.
தொழில்மயமாக்கப்பட்ட தற்கால சமூகம் கலையை புறந்தள்ளுகிறது என்று கூறுகிறீர்களா?
இல்லவே இல்லை. கலை போன்ற நல்ல விசயங்களை சமூகம் ஊக்குவிக்கிறது என்றுதான் கூறுவேன். பெருமளவில் அது அவற்றை வரவேற்கத்தான் செய்கிறது. ஆனால் ரஸ்கின் (Ruskin) 1871-இல் இங்கிலாண்டில் வாழ்ந்த பொதுமக்களைப் பற்றிக் கூறியது நமக்கும் கச்சிதமாகப் பொருந்தும் என்று நினைக்கிறேன் : “இம்மாதிரியான மன நிலையில் இருக்கும் ஜனத்தொகையால் எந்தவொரு வாசிப்பையும் நிகழ்த்த இயலாது. எந்த மகத்தான எழுத்தாளரின் எந்தவொரு வாக்கியத்தையும் இவர்களால் புரிந்துகொள்ள இயலாது.” ரஸ்கின் இதற்குப் பேராசையைக் குற்றம் சாட்டினார் : “பொருளாசையின் மூடத்தனம் மக்களைச் சிந்திக்க இயலாதபடி செய்து விடுகிறது. அதிர்ஷ்டவசமாக, இதுவரையில், சிந்தனை இயலாமையை ஒப்பிடுகையில் நம் வியாதி அவ்வளவு மோசமில்லை: ஆத்மாவின் ஆழத்தில் ஊடுருவும் செல்லரிப்பாக அது இன்னும் மாறவில்லை; நாம் இன்னமும் உண்மையுடன்தான் தொனிக்கிறோம், நம் அகத்தை தொடும் விஷயங்களில் மட்டுமாவது… ஆனால் அனைத்துமே “பொருளீட்ட” வேண்டும் என்ற கருத்து நம் ஒவ்வொரு நோக்கத்திலும் ஆழமாகப் பதிந்து விட்டது.”
இந்தப் பிரச்சனைக்கு பொருளாசைதான் மூலக்காரணம் என்று நீங்கள் நினைக்கவில்லையா?
இல்லை. ““இம்மாதிரியான மனநிலையில் இருக்கும் ஜனத்தொகை” இந்த வார்த்தைகளுக்குத்தான் நான் அழுத்தம் கொடுக்கிறேன். நாம் ஒரு வினோதமான கலவர நிலையில் இருக்கிறோம். நெருக்கடி எப்போதும் அண்டும் ஒரு முடிவற்ற பதற்றத்துடன்… நேற்றுதான் நோயாளிகள் தங்களையே அறிந்துகொள்வதற்கு உதவும் ஒரு மருத்துவ உத்தியைப் பற்றிப் படித்தேன். அவர்கள் அமைதியான மன நிலைக்கு வரும்வரையில் உயரலைவரிசை ஒலிகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். தங்கள் நோய்க்குறிகளைப் பற்றிச் சிந்திக்கவும் உணரவும் இது உதவுகிறது. உங்கள் ஆன்மாவை நீங்களே ஒரு கணம் அமைதியாக உணர்வதற்கு உங்களுக்கு மருத்துவத் தொழில்நுட்பத்தின் உதவி தேவைப்படுகிறது. பார்களில், உணவு மேசைகளில், வெள்ளை மாளிகையிலிருந்து மலிவு விடுதி வரையில், அனைத்து இடங்களிலும் அமெரிக்கர்கள் மீண்டும் மீண்டும் அதே கேள்விகளில் ஆழ்ந்திருப்பதை நம்மால் எளிதாகவே பார்க்க முடிகிறது. நம் அமெரிக்க வாழ்வே நம் தலையாய பேரார்வம். இவ்வுலகையே பின்புலமாகக் கொண்ட அதன் சமூக மற்றும் தேசிய வாழ்வின் சிக்கல்களை– நம் நகரங்களை, நம் குற்றங்களை, நம் குடியிருப்புகளை, நம் வாகனங்களை, நம் விளையாட்டுகளை, நம் வானிலையை, நம் தொழில்நுட்பத்தை, நம் அரசியலை, நம் பாலியல், இனம், அரசதந்திரம் மற்றும் சர்வதேச உறவுச் சிடுக்குகளை – செய்தித்தாள்களும் தொலைக்காட்சி நிலையங்களும் ஒரு மாபெரும் பொதுக்காட்சியாக படைக்கின்றன. இந்த எதார்த்தங்களின் மெய்ம்மையும் நம்பும்படியாகத்தான் இருக்கிறது. ஆனால், ஊடகங்களின் குழுமொழியும், சூத்திரங்களும் – அவற்றின் கிளர்வூட்டும் புனைவுகளும், மிகைப்படுத்தி, நாடகமயமாக்கப்பட்டு மக்கள் முன் படைக்கப்படும் நிழல் நிகழ்வுகளும் – இவற்றை என்ன செய்வது? இம்மாதிரியான மனநிலையில் இருக்கும் ஒரு மக்களிடையே வாசிப்பு நிகழ முடியுமா?
ஆனால் ஒரு நல்ல, தரமான புத்தகத்தால் ஒரு லட்சம் வாசகர்களைச் சென்றடைய முடிகிறது இல்லயா?
செல்வாக்குள்ள புத்தகத்தால் அதற்கே உரிய ஒரு வாசகக் கூட்டத்தை உருவாக்கிக் கொள்ள முடியும் போலிருக்கிறது. ஹெர்சோக் (Herzog) பதிப்பிக்கப்பட்டபோது அதை போன்ற புத்தகத்திற்காக அமெரிக்காவில் மட்டும் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் பேர் காத்திருந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டேன். மற்ற எழுத்தாளர்களுக்கும் இது போல் நடந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இப்படிப்பட்ட ஒரு கூட்டம் தற்காலிகமானதே. தனிப்பட்ட இவ்வாசகக் கூட்டங்களை நிரந்தரமாக உள்ளடக்கிக் கொள்ளும் ஓர் இலக்கியக் கலாசாரம் இங்கில்லை. அமெரிக்க கல்வி அமைப்பின் சாக்கடைகளை தன்னம்பிக்கையுடன் நீந்திக் கடந்து, உறுதியான, அறிவுத்திறமிக்க மக்கள் ஆச்சரியப்படும் வகையில் எப்படியோ வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். மனபலம், நல்லூழ் மற்றும் சூதானத்தின் துணையுடன் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இலக்கிய உலகின் அடுத்த முக்கிய நிகழ்விற்காக காத்திருக்கும் இடைவெளியில் அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?
ஆமாம், மாதக்கணக்கில் அவர்களால் எதைப் படிக்க முடியும்? சமகால இலக்கியத்தின் நிலைக்கக்கூடிய சாரத்தை எந்த ஆய்விதழ்களில் அவர்கள் பின்தொடர்வார்கள்?
பல்கலைக்கழகங்கள்? தரத்தைப் பகுத்துணர்ந்து ரசனையை வளர்த்துக் கொள்வதற்குத் தேவையான திறமையைப் பயிற்றுவிக்க அவர்கள் ஏதாவது செய்திருக்கிறார்களா?
பெரும்பாலான பேராசிரியர்களுக்கு நாவல் என்பது கலாசார முக்கியத்துவம் கோரும் பொருட்களின் உச்சம். அதன் கருத்துக்கள், அதன் குறியீட்டுக் கட்டுமானம், கற்பனாவாத, யதார்த்த அல்லது நவீனத்துவ வரலாறுகளில் அதன் இடம், அதன் உயர்ந்த உசிதம் இவை அனைத்தும் பற்றுடன் கற்கப்பட வேண்டியவைதான். ஆனால் நாவலாசிரியர்கள் மற்றும் வாசகர்கள், இவர்களுக்கும் இவ்வகையான கலாசார ஆராய்ச்சிக்கும் என்ன சம்பந்தம்? அவர்கள் விழைவதோ உயிர்த்திருக்கும் தருணத்தை; அவர்களைச் சூழ்ந்திருக்கும் உலகில் ஆண்களும் பெண்களும் உயிர்ப்புடன் எப்படி வாழ்கிறார்கள் என்பதை அறியவே விரும்புகிறார்கள். இலக்கியப் பயிற்றுவிப்பு என்பது இதுவரையில் பெருந்தோல்வியை மட்டுமே அடைந்திருக்கிறது என்று கூற வேண்டும். மாணவனுக்கும் அவன் படிக்கும் புத்தகத்திற்கும் இடையே இருண்மையான முற்பயிற்சிப் பிராந்தியமொன்று பூரண சதுப்பு நிலமாக உருவாகி இருக்கிறது. மோபி-டிக்கை திறந்து “என்னை இஷ்மாயில் என்று அழையுங்கள்” என்பதைப் படிப்பதற்கு முன் இக்கலாசாரப் பாழ்வெளியை அவன் கடந்தாக வேண்டும். பெரும்படைப்புகளின்முன் அவன் தன்னை ஒரு தகுதியற்ற முட்டாளாக உணரும்படி கட்டாயப்படுத்தப்படுகிறான்; புத்தகத்தைத் தொடங்குவதற்குத் தேவையான குறைந்தபட்சத் திறமைகளை மட்டுமே பெற்றிருக்கும் அவன் இப்பொது அதைக் கண்டு பயந்து வெறுக்கத் தொடங்குகிறான். இதையெல்லாம் மீறி இப்பயிற்றுவிக்கும் முறை வெற்றி பெறுகையில் அது பி. ஏ. பட்டதாரிகளை உருவாக்குகிறது. அவர்களும் பிக்வாட் (Pequod) கப்பல் துறைமுகத்தை விட்டு ஏன் க்ரிஸ்ட்மஸ் காலையில் கிளம்பியது என்பதை உங்களிடம் கூறக்கூடியவர்களாகவே இருப்பார்கள். நாவல் இருக்க வேண்டிய இடத்தில், அதற்குப் பதிலாக “படித்தவர்கள்” அதைப் பற்றி என்ன கூறமுடியும் என்பதே முன்னிலையில் இருக்கிறது. நாவலைக் காட்டிலும் இதைப்போன்ற “படித்த” சொல்லாடல்களே சில பேராசிரியர்களுக்கு உவப்பாக இருக்கிறது. தேவாலயப் பிதாமகர்களில் ஒருவர் வேதாகமத்தை எதிர்கொண்ட மனோபாவத்துடன் இவர்கள் புனைவை எதிர்கொள்கிறார்கள். ஆதாமும் ஏவாளும் புதரடியில் ஒளிந்து கொண்டிருக்கையில் கடவுள் தோட்டத்தில் நடந்து கொண்டிருந்ததை நாம் உண்மையிலேயே கற்பனை செய்ய வேண்டுமா என்று அலெக்சாண்டிரியாவின் ஒரீஜென் (Origen) கேட்டார். புனித நூல்களை நேர்சொற் பொருட்படுத்திப் படித்தல் தவறு. அதைக் காட்டிலும் உயர்வான அர்த்தங்களையே அவை அளிக்கவேண்டும்.
இலக்கிய பேராசிரியர்களை தேவாலயப் பிதாமகர்களுடன் சமன்படுத்துகிறீர்களா ?
அப்படியெல்லாம் இல்லை. கடவுளையும் மனிதனையும் பற்றி பிதாமகர்கள் உன்னதமான ஒரு கருத்துருவாக்கத்தைக் கொண்டிருந்தார்கள். மானுடவியல் பேராசிரியர்கள் தாம் பயிற்றுவிக்கும் கவிஞர்கள் மற்றும் தத்துவஞானிகளின் உன்னதத்தால் நெகிழ்வார்களாயின், பல்கலைக்கழகத்திலேயே அதிக செல்வாக்கும் உக்கிரமும் உடையவர்களாகத் திகழ்வார்கள். ஆனால் படிநிலையின் அடித்தளங்களிலும், அதிகாரக் குவியல்களின் அடிமட்டத்திலுமே அவர்கள் இருக்கிறார்கள்.
பின் ஏன் பல்கலைக்கழகங்களில் இவ்வளவு எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்?
நல்ல கேள்வி. எழுத்தாளர்கள் சுதந்திரமாக இயங்க அவர்களுக்கென ஒரு சுதந்திரமான இடம் கிடையாது. நிறுவனங்களைச் சார்ந்தே அவர்கள் இருக்கிறார்கள். செய்திப் பத்திரிக்கைகள், பதிப்புக் கழகங்கள், கலாசார நிறுவனங்கள், விளம்பர முகமைகள், தொலைக்காட்சி குழுமங்கள் இவற்றிற்கெல்லாம் அவர்கள் வேலை செய்யலாம். அல்லது அவர்கள் பயிற்றுவிப்பவர்களாக பணிபுரியலாம். ஒரு சில இலக்கிய ஆய்வேடுகள் மட்டுமே இன்னமும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவையுமே கல்வி சார்ந்த காலாண்டிதழ்கள். தேசிய அளவில் புழங்கும் பெரும் இதழ்கள் புனைவைப் பதிப்பிக்க விரும்பவில்லை. அவற்றை வழிநடத்தும் ஆசிரியர்களும் தேசிய சர்வதேசக் கேள்விகளிலும் “பொருத்தமான” கலாசார விஷயங்களிலும் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறார்கள். பொருத்தம் என்று நான் கூறுவது அரசியல் சம்பந்தமானது. (பெருமளவு அரசியல்தனமானது என்றே கூறவேண்டும்) வணிகம், அரசியல் பற்றிய கேள்விகளே நம்மை எதிர்கொள்ளும் ‘உண்மையான” கேள்விகள். இம்மாதிரியான பொதுவழக்குகளின் மையத்திலும் வாழ்வையும் இறப்பையும் நிர்ணயிக்கும் கேள்விகளிருக்கின்றன என்பதும் உண்மைதான். ஆனால் இந்த வாழ்வா- சாவா கேள்விகளை நாம் விவாதிப்பதே இல்லை. நெருக்கடி பற்றிய வம்புகளை மட்டுமே படித்து, கேட்டுக் கொண்டிருக்கிறோம். நமது அறிவுஜீவி வர்க்கத்தின் உறுப்பினர்கள் மாணவர்களாக இருந்தபோது இலக்கியம் பயின்றார்கள் – அதைப் படைக்கவும் செய்தார்கள். இப்போதோ இலக்கியத்தை எட்டக்கூட முடியாத தூரத்தில் இருக்கிறார்கள். ஹார்வர்டிலும் கொலம்பியாவிலும் செவ்விலக்கியங்களை, முக்கியமாக நவீனத்துவச் செவ்விலக்கியங்களைப் படித்துக் கற்று உள்வாங்கிக் கொண்டார்கள். அது, வணிகத்திலும், அரசாங்கத்திலும், தொழில்களிலும் அனைத்திற்கும் மேலாக, ஊடகத்திலும் அதிகாரிகளாக தாங்கள் விதிக்கப்பட்டிருந்த ஒப்பிலா, இன்றியமையா, முக்கியப் பணிகளைச் செய்ய அவர்களைத் தயார்படுத்தியது. நான் ஏற்கனவே கூறியது போல் நம்மை மிகவும் உணர்ச்சி வசப்படுத்தும் அக்கறை நம் அனைவருக்கும் பொதுவான வாழ்க்கைதான்.. ஆனால் நாவலின் உரிப்பொருளாக இருக்கும் தனி நபர் என்பவன் கூட்டாண்மையின் தலைவிதி, ஒரு வர்க்கத்தின் எழுச்சி, ஒரு கலாசார அறிவுஜீவிதக் குழு போன்றவை எழுப்பும் ஆர்வத்துடன் போட்டி போட முடியுமா? ஓரு வர்க்கத்தின் எழுச்சி என்பது உண்மையிலேயே முக்கியமான ஒன்று.
நாம் இப்படி தீவிரமாக அரசியல்மயமாக்கப்படுவதால்தான் தனி நபர் மீது ஆர்வமிழ்ந்து விட்டோம் என்று கூறுகிறீர்களா?
ஆமாம், எது பொதுப்பார்வையில் இருக்கிறது, அல்லது எது பொதுப்பார்வையில் கவனிக்கப்படுகிறது என்பதை அரசியல் மெய்ம்மையுடன் குழப்பிக்கொள்வதானால்.. ஒரு முற்போக்குச் சமூகம் இவ்வளவு அரசியல் உக்கிரத்துடன் இருந்தால் அதிக காலத்திற்கு முற்போக்கு தாராளத்தன்மை கொண்டதாய் இருக்க முடியாது. நாவல் மீது நிகழ்த்தப்படும் தாக்குதல்களை முற்போக்குக் கொள்கைகள் மீதும் நிகழ்த்தப்படும் தாக்குதலாகவே நான் எடுத்துக் கொள்கிறேன். “களப்பணி” கலைக் கோட்பாடுகளையும் நான் இவ்வாறே அணுகுகிறேன். ஒரு உண்மையான கலைப் படைப்பின் வலிமை என்பது அது செயற்பாடுகளில் நிகழ்த்தும் தற்காலிக இடைநிறுத்தத்தைப் பொறுத்தது. ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டி, என்னைப் பொறுத்தவரையில் ஆன்மாவின் புனித நிலைகளுக்கு நம்மை அது இட்டுச் செல்கிறது. ஆனால் இவை செயலை நிராகரிக்கும் மந்த நிலைகள் அல்ல.
நீங்கள் நெருக்கடி வம்பு என்று அழைத்தது இதற்கு நேரெதிரான மனநிலையை உருவாக்குகிறதா?
நம்மை மேம்படுத்துவதற்காகவோ, முற்போக்குச் சிந்தனையை வளர்ப்பதற்காகவோ உண்மை விழையப்படுவதில்லை என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகிறேன். அதை அதற்காக மட்டுமே ருசிப்பதற்காக நாம் பசித்திருக்கிறோம், தாகம் கொள்கிறோம்.
மீண்டும் இலக்கிய உலகத்தைப் பற்றிச் சற்று பேசலாமா ?
கெர்ட்ரூட் ஸ்டைனின் இல்லத்தில் டீ அருந்தும் பழக்கம் கிடையாது, க்லோசரி டெ லீலா (Closerie des Lilas [2]) கிடையாது, ப்ளூம்ஸ்பரி மாலை கூடுகைகள் கிடையாது, ஜார்ஜ் மூருக்கும் யேட்சுக்கும் (Gorge Moore, Yeats) இடையே நிகழும் இனிமையும் துஷ்டமும் கலந்த சந்திப்புகளும் கிடையாது. நான் அது போன்ற எதையும் நேரே அறிந்திராததால் அவற்றிற்காக ஏங்கியதும் இல்லை. வெறும் புத்தக அறிவில் மட்டுமே அவற்றை அறிந்திருந்தேன். மோலியேர், கோர்னேயின் (Moliere, Corneille) நாடகத்தைப் போட்டது, பதினான்காம் லூயியே மாறுவேடத்தில் மோலியேரின் கேளிக்கை ஒன்றில் தோன்றியது – இலக்கிய வரலாற்றில் இது போன்ற தகவல்களைப் படிப்பது சுகமாகவே இருக்கிறது. என்னுடைய எந்தவொரு கேளிக்கையிலும் மேயர் டேலி பங்கேற்கும் சாத்தியத்தை நான் கனவில்கூட எதிர்பார்க்க முடியாது. அவர் தனது கேளிக்கைகளில் மட்டுமே பங்கேற்பார். ஆனால் நான் கம்யூனிஸ்ட் நாடுகளில் எழுத்தாளர்களுக்கான கிளப்புகளுக்குச் சென்றிருக்கிறேன். அம்மாதிரியான நிறுவனங்கள் இங்கில்லை என்று நான் வருத்தப்பட்டதே இல்லை. ஆடிஸ் அபபாவில் (Addis Ababa) இருந்தபோது மாமன்னரின் விலங்ககத்திற்குச் சென்றேன். செல்லாஸி (Selassie) யெஹுதாவின் சிங்கமாதலால் (Lion of Judah) சிங்கக் கூடங்களை வைத்திருக்கும் கட்டாயத்திற்கு உள்ளாகியிருக்கலாம். நடமாடக்கூட இடமில்லாது வெறும் கோழிக்கூண்டுகளைப் போல் சிறியதாக இருந்த பச்சைக்கூண்டுகளின் குப்பையின் மத்தியில் அந்தப் பாவப்பட்ட விலங்குகள் கிடந்தன. அவற்றின் அற்புதமான கண்கள் மட்கிய மஞ்சள் நிறத்தில் வெறுமையாக காட்சியளித்தன. தலைகளை பாதங்களில் இடுக்கியபடி அவை பெருமூச்சுற்றிருந்தன. இங்கு நம் நிலை மோசமாகவே இருக்கலாம், ஆனால் மாமன்னரின் விலங்ககத்திலோ இரும்புத் திரைக்குப் பின்னிருக்கும் எழுத்தாளர் கிளப்புகளில் இருப்பதைப் போலவோ இங்கு அவ்வளவு மோசமில்லை.
அவ்வளவு மோசமில்லை என்பதற்கும் நன்றாக இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா ? உங்கள் நிலையிலிருக்கும் பிரதிகூலங்களைப் பற்றி கூறுங்களேன்?
சோகமான கணங்களும் இருந்திருக்கின்றன என்பதையும் ஒத்துக் கொள்கிறேன். ஜார்ஜ் சான், ஃப்லோபேருக்கு (George Sand, Flaubert) க்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பொன்றை சில நாட்களுக்கு முன் புரட்டிக் கொண்டிருந்தேன். அதில் ஃப்லோபேர் அடுத்த முறை வருகையில் கடைசியாகப் பதிப்பிக்கப்பட்ட தனது புத்தகத்தின் பிரதியைக் கொண்டு வருவார் எனத் தான் எதிர்பார்ப்பதாக சான் எழுதுகிறார். “உங்கள் அனைத்து விமரிசனங்களையும் அதில் குறித்து விடுங்கள்” என்றும் கேட்டுக் கொள்கிறார். “அது எனக்கொரு மிக நல்ல உதவியாக இருக்கும். மனிதர்கள் ஒருவருக்கொருவர் இப்படி செய்து கொள்வது மிக அவசியம், பல்சாக்கும் (Balzac) நானும் ஒரு காலத்தில் அப்படித்தான் செய்து கொண்டிருந்தோம். இதனால் ஒருவர் மற்றவரை மாற்றி விடுகிறார் என்று அர்த்தம் அல்ல; அதற்கு நேர்மாறாக எவ்வளவுக்கெவ்வளவு ஒருவர் தனது சுயத்தை விரிவாக்குவதில் உறுதியாக இருக்கிறாரோ, அதை மற்றொருவர் பூர்த்தி செய்கிறார், விளக்குகிறார், அச்சுயத்தை முற்றிலும் வளர்த்தெடுக்கிறார்.. இதனால்தான் நட்பு நன்மை பயக்கிறது என்கிறோம், சுயத்தின் உண்மையை முதல் நிபந்தனையாகக் கோரும் இலக்கியத்திலும் கூட.” இதை ஒரு எழுத்தாளர் பேசிக் கேட்பது எவ்வளவு அருமையாக இருக்கும். ஆனால் இப்படிப்பட்ட கடிதங்கள் வருவதே இல்லை. நட்புகளும், பொதுக் குறிக்கோள்களும் பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரெஞ்சு கனவுலகிற்கு மட்டுமே பொருந்தும். என்கௌன்டர் பத்திரிகையின் கட்டுரையொன்றில் இயற்பியல் வல்லுனர் ஹைசென்பெர்க், ஐன்ஸ்டைன் போர் (Heisenberg, Einstein, Bohr) காலத்து விஞ்ஞானிகளுக்கு இடையே நிலவிய அன்பார்ந்த, ஏன், சகோதரத்துவமான என்று கூட கூறலாம், இணக்கமான கூட்டுமுயற்சியைப் பற்றி கூறுகிறார். அவர்கள் ஒருவருக்கொருவர் எழுதிய கடிதங்கள் செமினார்களில் மேற்கோள் காட்டப்பட்டு ஒட்டுமொத்த அறிவியல் குழுமமே அவற்றை விவாதித்தன. இதைப் போன்ற ஒரு இணக்கம் பதினெட்டாம் நூற்றாண்டு இசையுலகத்திலும் நிலவியது என்று ஹைசென்பெர்க் நம்பினார். ஹைடனுக்கும் மோட்சார்ட்டிற்கும் இடையே இருந்த உறவில் பெருந்தன்மையும் கனிவும் நிறைந்திருந்தன. ஆனால் படைப்பூக்கத்திற்கான பெரும் சந்தர்ப்பங்கள் இல்லாத பட்சத்தில் பெருந்தன்மை போன்ற விசயங்களைக் கண்கூடாக காண்பது அரிது. அவற்றைக் காட்டிலும் நற்பேறு மலிந்திருந்த காலங்களில் நிலவிய காழ்ப்பையும் பகைமையையும் பற்றி ஹைசென்பெர்க் ஏதும் கூறவில்லை. தற்காலத்தில் எழுத்தாளர்கள் சக எழுத்தாளர்களுக்கு நல்லாசிகள் விழைவது அரிதாகவே நடக்கின்றது.
விமரிசகர்கள் எப்படி ?
கடந்தகாலத்தில் சேகரித்த வலிமையைக் கொண்டு விமரிசகர்கள் நிகழ்காலத்தை நையப் புடைக்கிறார்கள். எட்மண்ட் வில்சன் தன் சமகாலத்தவர்களைப் படிக்க மறுத்தார். எலியட், ஹெமிங்வேயுடன் (Eliot, Hemingway) நிறுத்திக் கொண்டார். மற்றவர்களைப் புறக்கணித்தார். இம்மாதிரி நட்பார்வமில்லாமல் (காழ்ப்பின்றி கூறவேண்டுமென்றால்) அவர் நடந்து கொண்டதை அவரின் விசிறிகள் மிகவும் மெச்சினார்கள். தகவல்களைக் கொண்டே உண்மையை அறிந்து கொள்ளலாம். கனேடியர்கள், இந்தியர்கள், ஹைட்டியர்கள், ரஷ்யர்கள் இவர்களை எல்லாம் அறிந்துகொள்வதற்கான அவா, மார்க்சியம், சாக்கடல் சுருள்களைப் பற்றிய ஆராய்ச்சி, அவர் ப்ராடெஸ்டண்ட் பெரும்பான்மையின் பெரும் இலக்கியகர்த்தா. ஆசார யூதர்களின் சந்ததியினர் ஆய்ஸ்டர் சிப்பிகளால் சவாலுறுவதைப் போல் வில்சனும் மார்க்சியம் மற்றும் நவீனத்துவத்தால் சவாலுற்றார் என்று சில சமயம் தோன்றியதுண்டு. வரலாற்று ரீதியான முன்னேற்றம் நாம் நம் அருவருப்புகளைக் கடக்க வேண்டும் என்று கோருகிறது. வில்சனைப் போன்ற ஒரு மனிதர் இலக்கிய கலாசாரத்தை வலுப்படுத்துவதற்காக நிறையவே செய்திருக்கலாம், ஆனால் அவர் இதையெல்லாம் சீண்டக்கூட மறுத்துவிட்டார். அவருடைய இயல்பான மனப்பாங்கின் காரணங்களால். அல்லது ப்ராடெஸ்டண்டியப் பெரும்பான்மையின் காரணமாகவும் இருக்கலாம். ஒருகால் ஹைசென்பெர்க் கோட்பாடு இங்கும் செல்லுபடி ஆகலாம் – படைப்பூக்க சந்தர்ப்பங்கள் அதிகரிக்கையில் மனிதர்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொள்கிறார்கள். அவை குறைகையில் அவர்கள்…. வெறெதுவாகவோ மாறிவிடுகிறார்கள். ஆனால் இதனால் எல்லாம் பெரிய மாறுதல் ஏதும் ஏற்படப்போவதில்லை. ஒரே சமயத்தில் அற்புதமாகவும், கோரமாகவும், மேன்மை பொருந்தியதாகவும், நரகமாகவும் தோன்றும் மனிதகுலப் பரிணாம வளர்ச்சியின் இக்கணத்தில், ஃபிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் இட்டாலி போன்ற நாடுகளின் திடமாக நிலைநாட்டப்பட்டிருக்கும் இலக்கிய கலாசாரங்களால் எதையுமே தோற்றுவிக்க இயலாது. அவர்கள் நம்மையே எதிர்பார்ப்புடன் பார்த்திருக்கிறார்கள்,, பிரதிகூலத்தால் குறைபட்டு நிற்கும் அமெரிக்கர்களையும், ரஷ்யர்களையும்… அமெரிக்காவிலிருந்து போ, மெல்வில், விட்மன் போன்ற பல பெரும் ஏகாந்திகள் தோன்றியுள்ளார்கள். அவர்கள் குடிகாரர்களாகவும், முகமறியா அரசாங்க ஊழியர்களாகவும் இருந்திருக்கிறார்கள். மும்முரமான அமெரிக்காவில் வைமார் (weimar) போன்ற எதுவும் இல்லை, நாகரீகமான இளவரசர்கள் இல்லை. மேலே குறிப்பிட்டவர்களைப் போன்ற பிடிவாதமான மேதாவிகள் மட்டுமே இருந்தார்கள். எழுதினார்கள் – ஏன்? யாருக்காக? இதுதான் உண்மையான, காரணங்களற்று தூண்டுதலால் நிகழும் செயல் (ஆக்ட் க்ராட்வி -“Acte Gratuit’). கிடேயின் அன்னியன் தற்செயலாகக் கொலை செய்யப்படுவதிலிருந்து மிகவும் மாறுபட்டது. நன்றிகளைப் பெறாமலேயே இவ்வெழுத்தாளர்கள் வாழ்க்கையை அற்புதமாக விரிவுபடுத்தினார்கள். அவர்கள் ஒரு இலக்கிய கலாசாரத்திலிருந்து உதிக்கவில்லை. இலக்கிய கலாசாரம் போன்ற எதையும் படைக்கவும் இல்லை. சமீப காலமாக இவர்களை ஒத்த கட்டுக்கடங்கா தனித்துவர்கள் ரஷ்யாவில் தோன்ற ஆரம்பித்திருக்கிறார்கள். அங்கு ஸ்டாலினிசம் உயிர்ப்புடன் தழைத்துக் கொண்டிருந்த ஒரு இலக்கிய கலாசாரத்தை முற்றிலும் அழித்து அதனிடத்தில் கொடூரமான அரசுத்துறையை அமைத்தது. ஆனால் இதையும், கட்டாயப் பணியையும், கொலையையும் மீறி உண்மைக்கும் நீதிக்குமான உணர்வு அணைய மறுத்து இன்னமும் உயிர்த்திருக்கிறது. சுருக்கமாக சொல்வதானால், நம்மிடையே எப்போதுமே இருந்திராத ஒன்றைப் பற்றி நாம் ஏன் தொடர்ந்து கனவு காண வேண்டும்? அது நம்மிடையே இருந்திருந்தாலும் நமக்கு அனுகூலமாக இருந்திருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. ஒருகால், கடந்த காலத்திற்கான ஏக்கங்களை மூட்டை கட்டிவிட்டு, இலக்கிய உலகிற்கான ஆவலிப்பையும் நிறுத்திக்கொள்வோமாயின் நம்முன் கிடக்கும் புத்தம் புது சந்தர்ப்பத்தை நாம் அடையாளம் காணலாம். கற்பனையை விரிவுபடுத்தி இயற்கையுடனும் சமூகத்துடனும் நமது படைப்பூக்கச் சந்திப்பை மீண்டும் தொடரலாம்.
உங்களைக் காட்டிலும் மற்றவர்களுக்கு, அறிஞர்கள், விஞ்ஞானிகளுக்கு, இயற்கையையும், சமூகத்தையும் பற்றி அதிகம் தெரிந்திருக்கும், இல்லையா ?
உண்மைதான். நான் முட்டாள்தனமாக பேசுவது போல் இருக்கலாம், ஆனாலும் என் எதிர்ப்பை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். அவர்கள் அறிவு பழுதானது – அதில் ஏதொவொன்று இல்லாதது போல் இருக்கிறது. கவித்துவமே அந்த ஏதோவொன்று. ஹய்சிங்கா என்ற டச்சு வரலாற்றாசிரியர், அமெரிக்காவைப் பற்றிய அண்மையில் பதிப்பிக்கப்பட்ட புத்தகத்தில் இருபதுகளில் அவர் சந்தித்த படித்த அமெரிக்கர்களைப் பற்றி எழுதுகிறார். அவர்கள் சரளமாகவும் ஊக்கத்துடனும் பேசுவதை குறிப்பிட்டு விட்டு மேலும் தொடர்கிறார், “என் கவனத்தைக் கவர்ந்த, உயிர்த்துடிப்புள்ள மனிதனை அவன் எழுத்துக்களில் என்னால் அடையாளம் காண முடியவில்லை. இது பல முறை எனக்கு நடந்திருக்கிறது. அமெரிக்க ஆழ்புலமை உரைநடையை பொறுத்தமட்டில் என் தனிப்பட்ட எதிர்வினை, உரைநடையின் தனிக்கூறுகளால் மட்டுமே நிர்ணயிக்க படவேண்டும் என்ற என் கருத்து, மீண்டும் மீண்டும் எனக்கேற்பட்ட அனுபவத்தால் உறுதிப்பட்டிருக்கிறது.. ஆனால் அதைப் படிப்பது எனக்கு மிகவும் கடினமாகவே இருக்கிறது; அதனுடன் எவ்வித தொடர்பையும் ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை. அதன் மீது கவனத்தையும் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. ஏதோ மாறுபட்ட கோணல் பிரயோகங்களைக் கொண்ட அமைப்பாகவே அது எனக்கு படுகிறது. அதன் கருத்துப்படிவங்கள் என்னுடையதுடன் சமன்படுவதில்லை அல்லது அவை வேறு விதமாக வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன.” கடந்த ஐம்பது ஆண்டுகளில் அந்த அமைப்பு மாறுபட்டு இன்னமும் கோணலாக மாறியிருக்கிறது. தகவல்களும் கருத்துக்களும் எனக்குத் தேவைப்படுகின்றன, அவை பொருளியலாளர்கள், சமூகவியலாளர்கள், வழக்கறிஞர்கள் போன்ற முறைசார் கல்வி பயின்றோரிடமும், அறிவாளிகளிடத்தேயும் இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியும். ஆனால் மிகுந்த கஷ்டத்திற்கும் மனக்கொதிப்பிற்கும் ஆளாகியே அவர்களை என்னால் படிக்க முடிகிறது. மேலும் “இவ்வெழுத்தாளர்கள் எல்லாம் படித்த அறிவுள்ள பொது ஜனத்தில் சேர்த்தி… இவர்களே உன் வாசகர்கள்” என்று எனக்கே கூறிக்கொள்கிறேன். ஆனால் இதையெல்லாம் பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை. ஃபிலிஸ்டைனிய அறிவுஜீவிகளால் நீங்கள் எழுதுவதைத் தடுக்க முடியாது. எழுதுவதே உங்களின் முன்நோக்கமில்லாத செயல் (acte gratuit). மேலும், நீங்கள் யாரை நோக்கி எழுதுகிறீர்களோ அவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நீங்கள் இருக்கும்வரை அவர்களும் இருப்பார்கள்.
ஆனால் இலக்கிய கலாசாரம் என்ற ஒன்று இருக்கிறதா இல்லயா என்று…
நடுவே குறுக்கிடுவதற்கு மன்னித்து விடுங்கள்.. ஆனால் டால்ஸ்டாய் இதை வரவேற்று புதிய திறப்புக்களுக்கான சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொண்டிருப்பார் என்றே எனக்குப் படுகிறது. இலக்கிய கலாசாரத்தால் அவருக்கு உபயோகமேதும் இல்லை. கலைகளில் துறைமைத்தனத்தை அவர் வெறுத்தார்.
பல்கலைக்கழக தந்தக் கோபுரங்களுடன் எழுத்தாளர்கள் சமரசம் செய்துகொள்ள வேண்டுமா?
‘”உன்னை நினைத்துப்பார்” என்ற கட்டுரையில் டால்ஸ்டாய் தன்னையே கண்டறியும் புள்ளியில் தொடங்கும்படி ஒவ்வொரு மனிதனுக்கும் அறிவுரை அளிக்கிறார். சில எழுத்தாளர்கள் தேர்ந்தெடுக்கும் நிலவறைகளைக் காட்டிலும் இதுபோன்ற கோபுரங்கள் எவ்வளவோ மேல். டைம் பத்திரிகை உலகை அணுகும் விநோதமான செயற்கைத்தனம், அதன் தொலைவுபடுத்தும் நிர்வாக ஏற்பாடுகள், இவற்றைக் காட்டிலும் பல்கலைக்கழகங்கள் மோசமான தந்தக் கோபுரங்கள் அல்ல. லூஸ் நிறுவனம் (Luce) எந்த பல்கலைக்கழகத்தைவிடவும் எழுத்தாளருக்கு அதிக சம்பளத்தையும், ஓய்வூதியத்தையும், செழிப்பான பங்குரிமைத் திட்டங்களையும் அளிக்கிறது. அதுவும் ஒரு வகையான தந்தக் கோபுரம்தான். ஃப்ளோபேரின் தனியான (தந்த) கோபுரத்தைக்(tour d’ivoire) காட்டிலும் அது இன்னமும் சேய்மையானதுதான். தந்தக் கோபுரம் என்பதே எழுத்தாளர்களின் சஞ்சலமான மனதை பிணிக்கும், தேய்வழக்காகிப் போன வெற்றுரைகளில் ஒன்று, நமக்குத்தான் இலக்கிய உலகத்தின் அனுகூலங்கள் ஏதும் கிடையாதே, பின் அதன் மலினங்கள் மட்டும்? அவற்றிலிருந்து ஏன் நம்மை விடுவித்துக் கொள்ளக் கூடாது? ஆன்ம சுயாதீனம் அடைவதற்கு நாம் நம்மைப் பற்றியே சுயமாகச் சிந்திக்க கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு சிந்திப்பதற்கு ஏற்ற வேறெந்த இடத்தை காட்டிலும் பல்கலைக்கழகம் அப்படியொன்றும் மோசமல்ல. ஆனால் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பதை ஆழ்ந்து யோசிக்கையில் நாம் கல்விமான்களாவதைத் தவிர்க்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் எழுத்தாளர்களை பிணிக்கக் கூடிய அபாயங்களில் இதுவே மோசமானது.
அப்படியே யார் கல்விமான் என்பதையும் சற்று விளக்கி விடுங்கள்…
மானுடவியல்களில் புழங்கும் பேராசிரியர் வகையை மட்டும் கருத்தில் கொண்டு இதைக் கூறுகிறேன். ஓவன் பார்ஃபீல்ட் அவரது புத்தகமொன்றில் “அபரிமிதமான பேச்சை ஒரு பதிலியாக நிறுவும் எக்காலத்துக்கும் நிலைத்திருக்கும் துறைமை உத்தி” –யைச் சுட்டுகிறார். அதாவது, எது முக்கியமானது என்பதைப் பற்றிய பேச்சை உண்மையிலேயே முக்கியமானதிற்குப் பதிலாக முன்வைப்பது. தனக்கிது அருவருப்பை அளிக்கிறது என்று கூறியிருக்கிறார். நம்முள் பலரும் அதை அருவருக்கிறோம்.
——————————————————
Source : An Interview with Myself , Saul Bellow, 1975
தமிழாக்கம்: நம்பி கிருஷ்ணன்
[1] இலக்கிய குழுமங்கள் / அவை சந்திக்கும் அறைகள்
[2] ஹெமிங்வே பிரபலப்படுத்திய பாரிஸ் உணவகம்