ஹெமிங்வேயின் ‘பாலத்தில் ஒரு கிழவன் ’

hemingway by Karsh 2

முழுக்க தூசி படிந்த ஆடைகளோடு சாலையோரத்தில் உலோக விளிம்பு கொண்ட மூக்கு கண்ணாடியை அணிந்தபடி கிழவர் ஒருவர் அமர்ந்திருந்தார். நதியை கடக்க ஒரு தொங்கு பாலம் இருந்தது. அதன் மீதேறி கட்டை வண்டிகளும் பாரம் பூட்டிய வாகனங்களும் ஆண் பெண் குழந்தைகள் என அனைவரும் நதியைக்  கடந்தபடி இருந்தனர். கோவேறு கழுதைகள் இழுத்துச் சென்ற வண்டிகள் மேடேறிப் பாலத்தை கடக்க இயலாமல் திணறி தேங்கி நின்றன. இராணுவ வீரர்கள் பின்னாலிருந்து உந்தித் தள்ளி அவ்வண்டிகள் கரையைக் கடக்க உதவிக் கொண்டிருந்தனர். வண்டிகளெல்லாம் ஒவ்வொன்றாக சாலையிலிறங்கி வெளியேறத் தலைப்பட அவற்றோடு குடியானவர்களும் முழங்கால் முழுகும் தூசி படிந்த மணலில் அடிமேல் அடியெடுத்து முன்னேறினர். அனால் அந்தக் கிழவர் மட்டும்  அமர்ந்திருந்த இடத்திலிருந்து நகரவேயில்லை. அதற்கு மேல் எங்கும் செல்வதற்கு முடியாமல் சோர்வுற்றிருந்தார்.
பாலத்தைக் கடந்து சென்று அப்பால் எவ்வளவு தூரம் எதிரிகள் நெருங்கியிருக்கிறார்கள் என அறிந்து வருவதுதான் எனக்கு இடப்பட்ட பணி. அவ்வாறு நோட்டமிட்டு மீண்டும் பாலமேறி வந்தேன். இப்போது மிகச்சில வண்டிகளும் நடந்தபடி வெளியேறும் வெகு சில மனிதர்களுமே தென்பட்டனர். கிழவர் அப்போதும் அங்கேயே இருந்தார்.
“எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டேன் அவரிடம்.
“சான் கார்லோஸிலிருந்து (San Carlos)” என்று சொல்லி மெலிதாகப் புன்னகைத்தார்.
தனது சொந்த ஊரின் பெயரை தன் வாயால் சொன்னது அவருக்குள் சிறு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அந்த புன்னகைக்கும் அதுவே காரணம்.
“என்னிடம் சில விலங்குகள் இருந்தன. அவற்றைப் பராமரித்து வந்தேன்.” என்று விளக்கினார்.
என்ன சொல்ல வருகிறார் என விளங்காமல், “அப்படியோ” என்று மேலும் அவர் சொல்லப் போவதை கவனிக்கத் தொடங்கினேன்.
“ஆமாம். என் விலங்குகளைக் கவனித்துக்கொண்டு அங்கேயே இருந்தேன். சான் கார்லோஸ் நகரத்தை விட்டு வெளியேறிய கடைசி ஆள் நான்தான்.”
அவரின் அழுக்கு படிந்த கருப்பு ஆடைகளையும் புழுதி படிந்த முகத்தையும் மூக்கு கண்ணாடியையும் மீண்டும் ஒருமுறை நோட்டம் விட்டேன். ஆடு மேய்ப்பவராகவோ பண்ணை வைத்திருந்தவர் போலவோ தெரியவில்லை. “என்ன விலங்குகள் அவை?” என கேட்டேன்.
“வித விதமான விலங்குகள்,” ஆற்றாமையில் தலையசைத்தார். “அவற்றையெல்லாம் அங்கேயே விட்டு விட்டு வரவேண்டியதாயிற்று.”
நான் தொங்கு பாலத்தைக் கண்காணித்துக் கொண்டிருந்தேன். அப்படியே அடியில் ஓடிய எப்ரோ (Ebro) நதியின் ஆப்பிரிக்க நிலங்களை ஒற்றியிருந்த அதன் டெல்டா நிலப்பகுதிகளையும். எவ்வளவு சீக்கிரத்தில் எதிரிகள் கண்களுக்கு தென்படுவார்களோ என்று எண்ணி வியந்தபடியே இருந்தேன். அவர்கள் வருகையை அறிவிக்கும் விதமாக எழப் போகும் முதல் ஓசையைக் கேட்க கூர்ந்த கவனத்துடன் காத்திருந்தேன். கிழவர் இன்னமும் அங்கேயே அமர்ந்திருந்தார்.
“என்ன விலங்குகள் அவை?” மீண்டும் கேட்டேன்.
“மொத்தம் மூன்று விதமான விலங்குகள் வைத்திருந்தேன். இரண்டு ஆடுகள், ஒரு பூனை மற்றும் நான்கு ஜோடி புறாக்கள்.”
“அவற்றையெல்லாம் அங்கேயேவா விட்டு வந்தாய்?”
“ஆமாம். ஆயுதப் படைகள் தான் காரணம்.  படைத் தளபதி என்னை ஆயுதப் படைகள் சூழ்ந்த அவ்விடத்தை விட்டு வெளியேற சொன்னார்.”
“குடும்பம் ஏதும் இல்லையா உனக்கு?” வினவியபடி பாலத்தின் கடை முனையை எட்டி பார்த்தேன். வேக வேகமாக எஞ்சிய சில வண்டிகள் கரை தாண்டி சென்றன.
“இல்லை. நான் வளர்த்த விலங்கினங்கள் மட்டும்தான்.  பூனைக்கு ஒன்றும் நேராது. பூனைகள் தன்னைத் தானே பார்த்துக் கொள்ளும். ஆனால் மற்றவைகளுக்குத் தான் என்ன நேரும் என்றே தெரியவில்லை.”
“எத்தகைய அரசியல் சார்புடையவன் நீ?” என்று கேட்டேன்.
“எந்த அரசியல் கோட்பாட்டையும் சாராதவன் நான். எழுபத்தி ஆறு வயதாகிறது எனக்கு. பன்னிரண்டு கிலோ மீட்டர்கள் கடந்து வந்திருக்கிறேன். இங்கிருந்து இனிமேலும் என்னால் நகர முடியும் என தோன்றவில்லை.”
“நின்று நிதானிக்க இது சரியான இடமில்லை. டோர்டோசாவுக்கு  (Tortosa) செல்லும்  பிரிவுச் சாலையில் வாகனங்கள் இருக்கும். முடியுமென்றால் அங்கே சென்று விடுவது நல்லது” என்றேன்.
“இன்னும் சிறிது நேரம் இங்கே இருந்துவிட்டு செல்கிறேன்” என்றார். தொடர்ந்து, “வண்டிகளெல்லாம் எங்கே போகின்றன” என்று கேட்டார்.
“பார்சிலோனாவை (Barcelona) நோக்கி” என்று பதிலளித்தேன்.
“அந்தத் திசையில் எனக்கு ஒருவரையுமே தெரியாது. இருந்தாலும் உனக்கு மிக்க நன்றி,” என்றவர், “மிக மிக நன்றி” என்றார் மீண்டும்.
சோர்வாய் என்னை நோக்கினார். வெறுமையான பார்வை. தன் கவலையை யாரிடமேனும் சொல்ல வேண்டும் என்ற பாவனையில், “பூனைக்கு ஒன்றும் நேராது. எனக்கு கண்டிப்பாகத் தெரியும். பூனையை பற்றி கவலைப்பட்டு அமைதி இழக்கத் தேவையில்லை. ஆனால் மற்றவை…..
மற்றவைகளுக்கு என்ன கதி நேரும் என நீ நினைக்கிறாய்?”
“ஏனிந்த கேள்வி. அவைகளுக்கும் ஒன்றும் ஆகாமல் போகலாம்.”
“உனக்கு அப்படியா தோன்றுகிறது?”
“ஏன் நடக்காது? வாய்ப்புண்டு.”
“ஆனால் ஆயுதங்கள் சூழ்ந்த இடத்தை விட்டு என்னையே வெளியேறச் சொன்ன நிலையில் அவை மட்டும் என்ன பண்ணும்?”
“அப்புறாக்களின் கூண்டை திறந்து விட்டிருந்தாயா?”
“அமாம்”
“அப்படியெனில் அவையெல்லாம் பறந்து விடும்.”
“அமாம். நிச்சயமாக பறந்து போய்விடும்.  ஆனால் மற்றதுகள்.. அவைகளைப் பற்றி நினைக்காமல் இருப்பது தான் நல்லது,” என்றார்.
“இளைப்பாறியது போதுமென்றால் இங்கிருந்து கிளம்பு,” அவசரப்படுத்தினேன். “எழுந்து நடக்க முயற்சி செய்.”
“நன்றி,” என்றபடியே  அங்கும் இங்கும் தள்ளாடி எழுந்து நின்றவர் முடியாமல் மீண்டும் புழுதித் தரையிலேயே சாய்ந்து உட்கார்ந்துக் கொண்டார்.
“விலங்குகளைப் பராமரித்து வந்தேன்.” சுரத்தையின்றி சொன்னார். இம்முறை என்னிடம் அல்ல.
“விலங்குகளை பார்த்துக் கொள்வது மட்டும் தான் நான் செய்து வந்தது.”
அந்தக் கிழவருக்காகச் செய்வதற்கு ஒன்றுமில்லை. அது ஒரு ஈஸ்டர் ஞாயிறு. பாசிச படைகள் வேகமாக எப்ரோவை நோக்கி வந்துக் கொண்டிருந்தன. மேகங்கள் சூழ்ந்து வானமே சாம்பல் பூண்டிருந்தது. மிகவும் தாழ்ந்த உயரத்தில் மேகங்கள் கூடியிருந்ததால் போர் விமானங்கள் எதுவும் அன்று பறக்காது என்பதுவும் உண்மையிலேயே பூனைகள் தன்னைத் தானே பார்த்துக் கொள்ளும் திராணி பெற்றவை என்பதுவும்தான் கிழவனாருக்கு கடைசியாக வாய்க்கப் பெற்ற இரு பெரும் நற்பேறுகள்.


இங்கிலிஷ் மூலக் கதை: எர்னஸ்ட் ஹெமிங்வே
தமிழாக்கம்: எம்.நரேந்திரன்

2 Replies to “ஹெமிங்வேயின் ‘பாலத்தில் ஒரு கிழவன் ’”

  1. அருமை நரேன்.. பொழியாக்கம் மிக நன்றாக உள்ளது. சரளமாக படிக்கமுடியுகின்ற அதே வேளையில்அன்னிய நிலத்தின் கதை என்பதும் துருத்தாமல் உள்ளது. பெருமை 🙂

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.