விம்பிள்டனை எதிர்நோக்கி

ஒவ்வொரு ஆண்டும் போலவே இந்த ஆண்டின் ஜூன் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை மாலையும் பிரஞ்சு ஓபன் பந்தயத்தின் ஆடவர் ஒற்றையர் பந்தய இறுதிப் போட்டி நடைபெற்றது. ஜோகோவிச் மற்றும் முர்ரே மோதினார்கள். முர்ரே வென்றால் அவரது முதல் பிரஞ்சு ஓபன் பட்டம். ஜோகொவிச்சுக்கும் அப்படித்தான். ஆனால், மற்ற மூன்று கிராண்ட் ஸ்லாம் பந்தயங்களையும் ஏற்கெனவே வென்றவர் என்ற முறையில், இதை வென்றால் டென்னில் வரலாற்றில் நான்கு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளையும் வென்ற 7வது ஆட்டக்காரராக ஆவார். அந்தப் பதற்றம் ஜோகோவிச் ஆட்டத்தில் தெரிந்தது. ஆயினும், அது நடந்தது. ஜோகோவிச் வென்றார். அது மட்டுமல்ல, சென்ற வருடத்தின் விம்பிள்டன், அமெரிக்க ஓபன், இந்த வருட ஆஸ்திரிலேய ஓபன் ஆகிய பட்டங்களையும் சேர்த்து இப்போது 4 கோப்பைகளும் அவர் வசம். இன்னும் இந்த ஆண்டு மிச்சமிருக்கும் விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் போட்டிகளையும் வென்றால், கிட்டத்தட்ட 50 ஆண்டுகளில், ஒரே ஆண்டில் இந்நான்கையும் வென்ற முதல் ஆட்டக்காரர் என்ற சாதனைக்குரியவர் ஆவார் ஜோகோவிச். இதற்கு முன் இப்படி வென்றவர் ராட் லேவர். 1969ம் ஆண்டு இதை நிகழ்த்தினார். அதற்கு முன் 1962ம் ஆண்டிலும் இதைச் சாதித்தவர் இவர்.
இந்த இடத்தில் என் மனம் 80களில் பார்த்த சில பழைய பந்தயங்களை அசை போட்டது. 1989ம் ஆண்டு. விம்பிள்டன் அரை இறுதி போட்டி. இவான் லென்ட்லுக்கும், பெக்கருக்கும் இடையே. பெக்கர் அப்போதுதான் பதின்ம பிராயங்களைக் கடந்து கொண்டிருந்தார், லென்ட்ல் முப்பதுகளைத் தொட்டுக் கொண்டிருந்தார். பெக்கரின் ஆட்டம் இளஞ்சூரியனின் ஒளி என்றால் லென்ட்ல் அணையப்போகும் விளக்கின் இருளுக்கு எதிரான அதிதீவிர பிரயத்தனம். ஆம், பெக்கர் 85, மற்றும் 86ம் ஆண்டுகளில் தன் பதின்ம வயதுகளிலேயே விம்பிள்டன் பட்டத்தை வென்றிருந்தார். லென்ட்ல் இறுதி போட்டிகளில் 86ஆம் ஆண்டு பெக்கரிடமும் 87 ஆண்டு பேட் கேஷ் இடமும் (Pat Cash ) 88ம் ஆண்டு அரை இறுதியில் மீண்டும் பெக்கரிடமும் தோற்றிருந்தார்.
கிராண்ட் ஸ்லாம் கோப்பைகளில் விம்பிள்டன் மட்டுமே புல்தரையில் ஆடப்படுவது. “புற்கள் பசுக்களுக்கானவை”, என்று லென்ட்ல்  சொல்லியிருந்தது அப்போது மிகப் பிரபலம். விம்பிள்டன் தவிர பிற அனைத்து முக்கிய கோப்பைகளையும் வென்றிருந்த லென்ட்ல் எப்பாடுபட்டேனும் ஒரு ஆண்டாவது அந்தக் கோப்பையைக் கைப்பற்றத் துடித்துக் கொண்டிருந்தார். நான் ஒரு லென்ட்ல் ரசிகன். அவரது விடாமுயற்சியும், பயிற்சியின் ஒழுக்கமும், அவரது சற்றே குறைந்த இயற்கைத் திறனை ஈடுகட்டும் மன வலிமையும் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தப் போட்டியை நானும் என்னுடன் ஷட்டில் விளையாடும் நண்பர்களும், சென்னை பூக்கடையில், சென்னை தொலைபேசி அலுவலக மனமகிழ்மன்றத்தில் விளையாடியபடியே பார்த்துக் கொண்டிருந்தோம். மன்றத்தைப் பூட்டும் நேரத்தில், லென்ட்ல்  2-1 என்ற செட் கணக்கில் முன்னணியில் இருந்தார். நான்காவது செட்டிலும், பெக்கரின் புகழ்பெற்ற செர்வீசை  முறித்து முன்னணி பெற்றார். இன்னும் இரண்டே கேம்கள்தான் அவர் இறுதிச் சுற்றுக்குள் நுழைய மிச்சமிருந்தது. நிச்சயம் வென்று விடுவார் என்ற நம்பிக்கையுடன் தேனாம்பேட்டை அறைக்குச் செல்ல பஸ் பிடித்து வந்து அறையில் நுழைந்து தொலைக்காட்சி முன் உட்கார்ந்தால்- பெக்கர் புல்தரையில் உருண்டு புரண்டு ஒரு பந்தை திருப்பி அடிக்கும் காட்சி. இன்னுமா பந்தயம் முடியவில்லை என்று அதிர்ச்சியோடு பார்த்தேன். ஐந்தாவது செட். பெக்கர் லென்ட்லின்  சர்வீசை முறித்து, பந்தயத்தை வெல்ல செர்வ் செய்ய இருந்தார். பிறகென்ன மூன்று ஏஸ்களைத் தொடர்ந்து லென்ட்லின் மட்டையில் பட்டுத் தெறித்து வெளியே விழுந்த ஒரு செர்வ் இடிபோல் லென்ட்லின் கனவைத்  தகர்ந்தது. “எனது மிகப்பெரிய அடுத்த இலக்கு, என் ஒரே இலக்கு, விம்பிள்டன் வெல்வதுதான்,” (“My next great goal, my only goal, is to win Wimbledon,”)  என்று சூளுரைத்த லென்ட்ல், மூன்று முறை வென்றிருந்த, அவரது ஆட்ட பாணிக்கு இயல்பாய் பொருந்தியிருந்த பிரெஞ்ச் ஓப்பன் கோப்பையில் அடுத்த ஆண்டு கலந்து கொள்ளவில்லை. டென்னிஸ் வீரர்களின் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த அவர், பிரஞ்சு ஓப்பன் கோப்பையை தியாகம் செய்து ஏழு வார கால கடும் பயிற்சிக்குப்பின் மீண்டும் விம்பிள்டன் வந்தார். பார்வையாளர்களின் ஏகோபித்த ஆதரவுடன் அரையிறுதிச் சுற்றில் எட்பர்க்குடன் மோதி நேர் செட்களில் தோற்றுப் போனார்.
மெக்கன்ரோ, கானர்ஸ் முதலான அமெரிக்கர்களின் ஆட்டத்தில் ஒரு வகை ஒபெராத்தன்மை இருக்கும், அவ்வளவு உணர்ச்சிகளை உச்ச குரலில் வாரியிறைப்பார்கள். எட்பர்க், விலாண்டர் போன்ற ஸ்காண்டிநேவிய ஆட்டக்காரர்களின் நளினத்தை வேறெவரிடமும் பார்க்க முடியாது – விலாஸ் போன்ற தென் அமெரிக்கர்கள் ஒரு சிலர் விதிவிலக்காக இருக்கலாம். பெக்கர், தொண்ணூறுகளின் துவக்க ஆண்டுகளில் டென்னிஸ் உலகைக் கைப்பற்றிக் கொண்டிருந்த பதின்மபருவ வீரர்களின் உத்வேகத்துக்கும் எந்தப் பந்தையும் விரட்டித் திருப்பும் இளமை வேகத்துக்கும் முன்னோடி முகமாக இருந்தார் (ஜிம் கூரியர், மைக்கேல் சாங் போன்றவர்களை இப்போது பேசுவதில்லை என்றாலும் அவர்கள் மறக்கக்கூடியவர்களா?
எண்பதுகளின் பிற்பகுதியும் தொண்ணூறுகளின் துவக்க ஆண்டுகளும் எத்தனை பரபரப்பான ஆண்டுகள்! கிழக்கு ஐரோப்பிய தேசங்கள் இரும்புத் திரைக்கு வெளியே வந்த, சோவியத் யூனியன் உடைந்த, கிறுகிறுக்கும் ஆண்டுகளின் புத்துணர்ச்சித் துடிப்பு இந்த இளைஞர்களிடம் இருந்தது- டென்னிஸ் அடுத்த, மிக இளம், தலைமுறைக்கு கைமாறி விட்டது என்று அறிவித்துக் கொண்டவர்கள் இவர்கள்). உணர்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாத, இறுக்கமான முகத்துடன், அன்றைய முன்னிலை டென்னிஸ் வீரர்களுடன் ஒப்பிட்டால் வயது முதிர்ந்த, லென்ட்ல் முந்தைய காலத்துக்குரியவராக, அப்போது காலாவதியாகிவிட்ட கிழக்கு ஐரோப்பிய கட்டுப்பாட்டின் முகமாக இருந்தார். ஆனால் இந்த இளைஞர்களுக்கு இல்லாத ஒரு நுட்பமான, யதார்த்தத்தை புன்னகையுடன் ஏற்றுக்கொள்ளும் நகைச்சுவையுணர்ச்சி அவருக்கு இருந்தது.
அரையிறுதியில் எட்பர்க்கிடம் நேர் செட்களில் தோற்றபின் அவர் விம்பிள்டன் பார்வையாளர்கள் தன்னை ஆதரித்தது பற்றி இப்படிச் சொன்னார்- “அவர்கள் நான் வெற்றி பெற வேண்டும் என்று விரும்பினார்கள், ஆனால் தவறான காரணங்களுக்காக; எனக்கு வயதாகிவிட்டது என்பது தெரிகிறது” (”They wanted me to win, but for the wrong reasons; it must mean that I’m old,” ) அப்போது மட்டுமல்ல, பின் ஒருபோதும் அவர் விம்ப்ள்டன் இறுதிப் போட்டிக்குக் கூடத் தகுதி பெறவில்லை.
1988ம் ஆண்டில் இன்னொரு வீரரின் கனவு கலைந்தது. மேட்ஸ் விலாண்டர் அந்த ஆண்டின் ஆஸ்திரிலேய, பிரஞ்சு ஓபன் பந்தயங்களை வென்றிருந்தார். விம்ப்ள்டன் வென்றால் அவருக்கும் கிராண்ட் ஸ்லாம் வெல்லும் வாய்ப்பு இருந்தது. காலிறுதிப் போட்டியில், தர வரிசையில் அவரைவிட பல படிகள் கீழே இருந்த மிலோஸ்லாவ் மெர்சீர் என்ற (அற்புதமான, Magician Mecir  என்று அழைக்கப்பட்ட) ஆட்டக்காரரிடம் நேர் செட்களில் தோற்றார். அதற்குப் பின் ஒருமுறை கூட அவர் விம்ப்ள்டன் போட்டிகளில் அரையிறுதிக்குத் தகுதி பெறவில்லை.
இன்னும் சற்றுப் பின்னே சென்றால் 1984ம் ஆண்டின் பிரஞ்சு ஓபன் பந்தயத்தின் இறுதிபோட்டியில், உலக டென்னிஸ் வரலாற்றின் மகத்தான வீரர்களில் ஒருவரான மெக்கன்ரோவுக்கும் இது நடந்தது. தன வாழ்நாளில் எப்போதும் வென்றிராத பிரஞ்சு ஓபன் கோப்பையின் இறுதி போட்டியில் லென்ட்லுக்கு எதிராக, 2-0 என்ற செட் கணக்கில் முன்னணியில் இருந்தார். அதுவரை. எந்த கிராண்ட் ஸ்லாம் போட்டியிலும் வெற்றி பெற்றிராத லெண்ட்ல் திடீரென்று விஸ்வரூபமெடுத்து மெக்கன்ரோவை வீழ்த்தினார். பிரஞ்சு ஓபன் பந்தயத்தை என்றென்றைக்கும் வெல்லவே முடியாதவரானார் மெக்கன்ரோ.
மீண்டும், 1989ம் ஆண்டுக்கு வந்தால், அந்தக் காலகட்டத்தின் தலைசிறந்த ஆட்டக்காரர்களில் ஒருவரான ஸ்டீபன் எட்பர்க், தான் ஒரு போதும் வென்றிராத பிரஞ்சு ஓபன் பந்தயத்தின் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் மைக்கேல் சாங்கை சந்தித்தார். ஒரு கட்டத்தில் 2-1 என்ற செட் கணக்கிலும் நான்காவது செட்டில் 4-2 என்றும் முன்னணியில் இருந்தார் எட்பர்க். மேலும் அந்தப் போட்டியில், சாங் சற்றே காயமுற்றிருந்த நிலையிலேயே விளையாடிக் கொண்டிருந்தார். ஆனாலும், விடாமுயற்சியுடன், விளையாடி எட்பர்க்கைத் தோற்கடித்தார். பின் எப்போதும் எட்பர்க் பிரஞ்சு ஓபன் பந்தயத்தை வெல்லவில்லை.
மேலும் இரண்டு மகத்தான ஆட்டக்காரர்களான ப்யோன் போர்க் மற்றும் ஜிம்மி கானர்ஸ் ஆகியோரும் முறையே அமெரிக்க ஓபன் மற்றும் பிரஞ்சு ஓபன் பந்தயங்களை வெல்லவே முடியாமல் போனது. 1969ல் ராட் லேவர் நான்கு கிராண்ட் ஸ்லாம் பந்தயங்களையும் வென்றதற்குப் பிறகு அந்த சாதனையை அவருக்கு அடுத்த தலைமுறையினர் யாரும் செய்ய முடியவில்லை. பெடரர் வருவதற்கு முன்னால் டென்னிஸ் வரலாற்றிலேயே மகத்தான ஆட்டக்காரர் என்று கணிக்கப்பட்ட பீட் சாம்பிராசும் பதின்ம வயதிலேயே இரண்டு முறை விம்ப்ள்டன் பட்டம் வென்ற போரிஸ் பெக்கர் இருவருமே ஒரு முறைகூட பிரஞ்சு ஓபன் பந்தயங்களின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறவில்லை.
ஆக, ராட் லேவர் 1962 மற்றும் 69ம் ஆண்டு சாதித்ததை, அதற்குப் பின் அடுத்த 30 ஆண்டுகளுக்கு யாராலும் சாதிக்க முடியவில்லை. 1999ம் ஆண்டு ஆந்த்ரே அகாசி அதைச் சாதித்தார்., அதற்குப் பின் இந்த நான்கு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் ரோஜெர் பெடரர், ரபேல் நடால், இப்போது, ஜோகோவிச் என்று மூவரே வென்றிருக்கிறார்கள்..
மனதில் எழும் கேள்வி, ஏன் இடைப்பட்ட 47 வருடங்களில் இந்த நால்வரைத் தவிர வேறு யாராலும் இந்த சாதனையை செய்ய இயலவில்லை?. அதில் மூவருமே கூட 2008ம் ஆண்டுக்குப் பிறகே இதைச் செய்தவர்கள். அப்படியானால் 70, 80, 90களில் உலக டென்னிசில் ஆதிக்கம் செலுத்திய கானர்ஸ், போர்க், மெக்கென்ரொ, லென்ட்ல், விலாண்டர்,, பெக்கர், எட்பெர்க், மற்றும் சாம்ப்ராஸ் போன்ற மகத்தான வீரர்கள் இதைச் செய்ய முடியவில்லை. அதற்குப் பின் இந்த 15 வருடங்களில் எப்படி மூன்று பேர் இதைச் சாதித்திருக்கிறார்கள்? என்ன மாறியிருக்கிறது?
ஒவ்வொன்றாக ஆராயலாம். முதலில் ஆடும் களங்களின் தன்மை. ராட் லேவர் வென்ற காலகட்டத்தில், பிரஞ்சு ஓபன் போட்டியைத் தவிர மீதி மூன்று பந்தயங்கள் புல்தரையிலேயே ஆடப்பட்டன. 74ம் ஆண்டு வரை அமெரிக்க ஓபன் பந்தயங்கள் புல்தரையிலும் பின் 77 வரை களிமண் தரையிலும், 78 லிருந்து, செயற்கையிழைத் தரையிலும் (Deco Turf -11) ஆடப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலிய ஓபன் போட்டிகள், 1987 வரை புல்தரையிலும் அதற்குப் பிறகு 2007 வரை, செயற்கைத் தரை, Rebound Ace  என்ற ஒன்றிலும், பிறகு 2008 முதல் plexicushion என்ற செயற்கைத் தரையிலும் ஆடப்பட்டு வருகிறது. விம்பிள்டன் என்றும் மாறாமல் அதே புல்தரையில். ஒவ்வொரு களத்திலும் வெல்லச் சற்றே நுணுக்கமான, வேறுபட்ட  தனித் திறன்கள் தேவைப்பட்டன. வேகமான விம்பிள்டன் புல்தரையில், விரைவாக ஓடி ஆடும் திறனும், வலிமையான சர்வீஸ் மற்றும், பந்து எகிறும் தன்மை குறைவு என்பதால், வலைக்கு அருகே, முன்னோக்கிச் சென்று பந்து தரையில் விழுவதற்கு முன்னமேயே அதை அடித்து ஆழச் செலுத்தும் (volley)  திறனும் தேவை. அமெரிக்க ஒபனும், ஆஸ்திரேலிய ஒபனும் செயற்கையிழைத் தரையில் ஆடப்பட்டாலும்கூட ஆஸ்திரேலிய களம் சற்று வேகம் குறைவானது.. பந்து எகிறும் உயரமும் அதிகமானது. இவற்றுக்கு சற்றும் சம்பந்தமில்லாத வகையில், பிரஞ்சு ஓபனின் சிவப்புக் களிமண் தரை, பொறுமையை சோதிக்கக் கூடியது. வேகத்தை உறிஞ்சி, ஒரு புள்ளி வெல்வதற்கே பந்தைப் பலமுறை மாறி மாறி அடிக்க வேண்டிய அவசியம் கொண்டது. மேலும் அங்கு பந்தை அடிக்கும்போது அதன்மேல் முடிந்த அளவு சுழல் ஏற்றி அடிக்கும் திறனும் முக்கியமானது.
இந்த மாறுபட்ட களங்களில் வெற்றிகரமாக ஆடுவதற்கு தேவையான திறன்கள் அனைத்தும் ஒரே ஆட்டக்காரரிடம் சீராக இருக்கவில்லை. ஒவ்வொரு களத்திற்கும் அதற்கேற்ற  தனித்திறன் வாய்ந்த வீரர்கள்  இருந்தனர். உதாரணமாக, பிரஞ்சு ஓபன் போட்டியில் பலமுறை வென்ற செர்ஜி ப்ருகேரா, குஸ்தாவோ குர்டன், ஆகியோரைச் சொல்லலாம். இவர்கள் ஒருபோதும் விம்பிள்டன்னிலோ, அமெரிக்க ஓபன் பந்தயங்களிலோ சோபித்ததில்லை. அதே போல, புல்தரையில் மிகச் சிறந்த வீரர்களாக விளங்கிய பெக்கர், எட்பர்க், சாம்பிராஸ் போன்றவர்கள் பிரஞ்சு ஓபன் போட்டியில் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இதற்கு விதிவிலக்காக விளங்கிய வீரரான போர்க் (6 முறை பிரான்சிலும், 5 முறை விம்பிள்டன் கோப்பையும் வென்றவர்) அமெரிக்க  ஒபனில் சாதிக்க முடியவில்லை.
இன்றும் இந்த மாறுபட்டக் களங்களிலேயே போட்டிகள் நடைபெறுகின்றன. ஆனால் இப்போது அமெரிக்க ஓபனிலும் ஆஸ்திரேலிய ஒபனிலும் களத்தின் வேகம் குறைக்கப்பட்டு விட்டதாகவே காணப்படுகிறது. விம்ப்ள்டனில்கூட இப்போது உபயோகப்படுத்தும் (hundred  percent perenniel rye grass)  புற்கள், பந்தின் வேகத்தை முன்னை விட குறைத்து விடுகின்றன என்றும் தகவல்கள்  சொல்கின்றன. இந்தக் கட்டுரையைப்பார்க்கலாம்.
இன்று விளையாடும் பெரும்பாலான ஆட்டக்காரர்கள் களத்தின் பின் கோட்டின் (Baseline ) அருகே அல்லது அதற்குப் பின் தள்ளி நின்று பந்தை அடித்து ஆடும் ஐரோப்பிய வகை ஆட்டப் பயிற்சியே அதிகம் பெற்று வருகிறார்கள் செர்வ் செய்த உடனேயே அதைத் தொடர்ந்து வலையின் அருகே சென்று பந்தை எதிர்கொண்டு ஆடும் ஆட்டமே இன்று ஏறக்குறைய வழக்கொழிந்து விட்டது. volleyல் வலைக்கு அருகில் வந்து தரையில் படாத பந்தை வாங்கி, எதிர் பக்கத்தில்  ஆழமாக செலுத்துவது போலவே வலைக்கு மிக அருகிலேயே நிறுத்தவிடக் கூடிய drop volley, stop volley, மற்றும் dink volley  (மெக்கெனரோ ஸ்பெஷல்) என்ற மூன்று வகைகளும் உண்டு, இவைகளும் இப்போது அழிந்து விட்டன. ஐரோப்பிய வகை ஆட்டம் தற்காப்பு ஆட்டம். ஆனால் அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும், ஆக்ரோஷமாக விளையாடும் முறையே பெரும்பாலும் பயிற்றுவிக்கப்பட்டது. ஆனால் இப்போது அங்கும் பயிற்சி முறைகள் மாறி ஐரோப்பிய வகை பயிற்சியே ஆதிக்கம் செலுத்துகிறதோ என்று தோன்றுகிறது. இதைச் சொல்லும்போது, ஐரோப்பிய ஆட்டத்தையும் இரண்டாகப் பிரிக்க முடியும் என்றும் சொல்லலாம். பெரும்பாலும், செக் குடியரசு, செர்பியா போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் இத்தாலி மற்றும் பிரான்சு. ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்த் போன்ற நாடுகளிலும், களிமண் தரை ஆட்ட பாணியே பிரபலம். இங்கிலாந்து, ஹாலந்து, மற்றும் ஜெர்மனியில் புல்தரைக் களங்கள்  இருந்ததனால்,, அங்கு உருவாகிய பெக்கர், ஹென்மன், ஜான் லாயிட், மைகேல்  ஸ்டிச் ஆகியோர் அதிகமும் சர்வ் அண்ட் வொலி வீரர்களாக இருந்தனர், இதற்கு விதிவிலக்காக எட்பர்க், இவானிசெவிச் போன்ற ஸ்வீடன், க்ரோஷிய வீரர்களும் இந்த வரிசையில் உண்டு. அதே போல அர்ஜென்டினா போன்ற நாடுகளில் இருந்து வந்த வீரர்களான கில்லெர்மோ  விலாஸ், நல்பண்டியன், க்யுர்டன் போன்ற வீரர்களும், களிமண் தரை வல்லுனர்களாக இருந்தனர்.
இதற்கு மாறாக ஆஸ்திரேலியாவிலும் அமெரிக்காவிலும் சற்றே வேறுவிதமாக, ஆக்ரோஷமாக விளையாடும் முறையே பெரும்பாலும் பயிற்றுவிக்கப்பட்டது. அமெரிக்காவின் புகழ்பெற்ற பீட் சாம்பிராஸ், டாட் மார்டின், ராஸ்கோ டனர், ஆர்தர் ஆஷ் போன்றவர்கள் சர்வ் அண்ட் வொலி வீரர்கள். ஆஸ்திரேலியா டென்னிஸ் வல்லரசாக இருந்த காலம் ஒன்றுண்டு. நாம் முன்பு பார்த்த ராட் லேவர் தவிர, டோனி ரோச், ராய் எமெர்சன், ஜான் நியுகோம்ப், பேட்  காஷ் போன்ற ஆக்ரோஷமான வீரர்களைத் தந்த நாடு அது.. கடைசியாக  ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த சிறந்த ஆட்டக்காரர், பேட் ராப்டெர் (Pat Rafter ) லேட்டன் ஹூவிட் சில பட்டங்களை வென்றிருந்தாலும், அவரை அவர்களது உயரத்தில் வைக்க முடியாது (ஆண்கள் இரட்டையர் பிரிவில் ஆதிக்கம் செலுத்திய டாட் வுட்பிரிட்ஜ்- மார்க் வுட்ஃபோர்ட் ஜோடி குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா டேவிஸ் கோப்பையில் மிக முக்கியமான சக்தியாக விளங்க இவர்களின் பங்களிப்பு காரணமாக இருந்தது).
ஆனால் இப்போது அங்கும் பயிற்சி முறைகள் மாறி ஐரோப்பிய வகைப் பயிற்சியே ஆதிக்கம் செலுத்துகிறதோ என்று தோன்றுகிறது. மேலும் தற்சமயம் அமெரிக்காவிலிருந்தும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் வரும் வீரர்களும் ஐரோப்பிய பாணி ஆட்டத்தையே வெளிப்படுத்துகின்றனர். தற்போதைய டென்னிஸ் தரவரிசையின், முதல் 10 வீரர்களில் ஒரு அமெரிக்கரோ ஆஸ்திரேலியரோ கூட  இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கடைசியாக முதல் மூன்று இடங்களுக்குள் இடம்பெற்ற அமெரிக்க வீரர் ஆண்டி ராடிக். அவர் ஓய்வு பெற்றே தற்போது 4 ஆண்டுகள் ஆகப்போகிறது. அதற்குப்பின் வந்த அமெரிக்க வீரர்கள் மார்டி பிஷ் மற்றும் ஜான் ஐஸ்னர், இருவருமே எதிர்பார்த்த உயரங்களை எட்டவில்லை.
ஆசிய விளையாட்டு முறை என்று ஒன்று தனியாக உருவாகும் அளவுக்கு டென்னிஸில் ஆசியா ஆதிக்கம் செலுத்தவில்லை என்றபோதிலும், ராமநாதன் கிருஷ்ணன், விஜய் அம்ரிதராஜ், மற்றும் ரமேஷ் கிருஷ்ணன் ஆகியோரும் தம் serve and volley ஆட்ட முறையிலேயே ஒரு தனித்துவமிக்க நளினத்தோடு டென்னிஸுக்கு ஒரு புதுப் பரிமாணத்தை அளித்தார்கள் என்று சொல்ல வேண்டும்  ஜப்பான் வீரர் கெய் நிஷிகோரி இன்று முன்னணி வீரர்களில் ஒருவராக இருந்தாலும், தனித்துவமான ஆட்ட முறை ஒன்றும் அவருக்கு இருப்பதாகத் தோன்றவில்லை. இன்னும் சீனா தன் கவனத்தை டென்னிஸ் பக்கம் முழுமையாகத் திருப்பவில்லை. அப்படி செலுத்தினால், டேபிள் டென்னிஸில் pen hold  என்பது போல  போல டென்னிஸிலும் ஏதாவது ஒரு புது ஆட்ட முறை உருவாகலாம்.
ஆக, வேறுபட்ட ஆட்ட பாணிகளில் ஒவ்வொரு களத்துக்கும் அதற்கே உரிய வல்லுனர்கள் இருந்த நிலை மாறி, கிட்டத்தட்ட எல்லோருமே ஒரே பாணியில் ஆடுவதும் இன்று 4 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளிலும் ஒரே பாணி ஆட்டம் நிகழ்கிறது என்பதும் ஒரே வீரர் நான்கு போட்டிகளிலும் வெல்வதை சுலபமாக்கி விட்டது. மேலும் இன்னொரு முக்கியமான உண்மை, டென்னிஸ் சற்றே வயதானவர்களின் விளையாட்டு ஆகிவிட்டது. இன்று தர வரிசையின் முதல் பத்தில் இருப்பவர்களில், 25 வயதுக்குக் கீழே இருப்பவர் ஒரே ஒருவர்தான். முதல் ஐந்து வீரர்கள் அனைவரும் 28 வயதைக் கடந்தவர்கள். மூன்றாம் இடத்தில் இருக்கும் பெடரருக்கு வயது 34.. ப்யான் போர்க் 11 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் வென்று ஓய்வு பெற்றபோது அவருக்கு வயது 26 தான் என்பதைப் பார்க்கும்போது இன்று டென்னிஸ் எவ்வளவு தூரம் வயதானவர்களின் விளையாட்டாகிவிட்டது என்பது தெரியும். அதனாலேயே அதன் பிரபல்யமும் சற்று குறைந்து விட்டிருக்கிறது என்றும் தோன்றுகிறது. 16 வயதில், விம்ப்ள்டனும் 19 வயதில் அமெர்க்க ஒபனும், தன் 20 வயதிற்குள் மூன்று கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று விட்ட பெக்கர், சாம்பிராஸ், போர்க் போன்ற இளம் வீரர்கள் இன்று எங்கே? தொண்ணூறுகளில் உடைந்த எல்லைகள், இன்று திருத்தி எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உலக அரசியலை டென்னிஸ் போன்ற ஒரு விளையாட்டை வைத்து புரிந்து கொள்ள முடியாதுதான். ஆனால், முதியவர்கள் இன்று இளைஞர்களின் பேராற்றலை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து விட்டதை ஒரு இணைச் சித்திரமாய் இங்கு வைத்துப் பார்க்க முடிகிறது.
ஜோகோவிச் கிராண்ட் ஸ்லாம் வென்றதில் நிச்சயம் மகிழ்ச்சி என்றாலும், டென்னிஸ் இன்று ஒரு ஒற்றைத்தன்மை கொண்ட விளையாட்டாகவும் வயதானவர்க;ளின் விளையாட்டாகவும் மாறி விட்டதில்தான் சற்று வருத்தம் உண்டுதான்.. மீண்டும் ஒரு பின்னோக்கிய பயணம் போவோம். 1985.. ஆந்த ஆண்டின் ஜனவரியில் ஆஸ்திரேலிய ஓபன் பந்தயத்தில் 19 வயதான ஸ்டீபென் எட்பர்க் 21 வயதான மாட்ஸ் விலாண்டரைத் தோற்கடித்து பட்டம் வென்றார். பின் பிரஞ்சு ஒபனில் விலாண்டர் லெண்ட்லை தோற்கடித்து பட்டம் வென்றார். ஆனால் அந்த வருட விம்ப்ள்டன் போட்டியில், இவர்களே முதியவர்கள் என்பது போல், 17 வயது நிறைவு பெறாத போரிஸ் பெக்கர் பட்டம் வென்றார். இந்த ஆண்டும், ஆஸ்திரேலியா பிரஞ்சு போட்டிகள் முடிந்துவிட்டன. இரண்டையும் ஜோகோவிச்சே வென்றிருக்கிறார். ஜூன் நான்காம் திங்கட்கிழமை வழக்கம் போல விம்ப்ள்டன் போட்டிகள் துவங்கும், பெக்கர் போல் ஒரு புதிய துவக்கம் நிகழுமா? அதுவும் பந்தை அடித்துப் பின்தொடர்ந்து நெட்டை நெருங்கி, திருப்பியடிக்கப்பட்ட பந்து தரையைத் தொடுமுன் வழிமறித்து ஆழச் செலுத்தும் செர்வ் அண்ட் வொலிக்குரிய களம் இவர்களுக்கு இனி கிடைக்குமா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.