கடவுள் களமிறங்கி விளையாட வந்தால் தோற்க முடியுமா? 1983ல் கிரிக்கெட் என்னுடைய மதம்; அப்போதைய கடவுள் என்றால் மேற்கிந்தியத் தீவுகள் அணி. 2016ல் இப்போதைய மதம் கூடைப்பந்து; இப்போதைய கடவுள் என்றால் கோல்டன் ஸ்டேட் கூடைப்பந்தாட்ட வீரர்கள்.
1975இல் கோப்பையை வெல்லும் அணி, 1979இல் கோப்பையைத் தக்க வைத்துக் கொண்ட அணி, 1983இல் இறுதிச் சுற்றில் ஆடுகிறது. எதிரணியான இந்தியாவோ கொஞ்சம் போல் சோணி. இரண்டு தட்டு தட்டினால், பொத்தென்று வீழ்ந்துவிடுவார்கள். உள்நாட்டுக் குழப்பங்களும் உண்டு. முன்னாள் அணித் தலைவர் கவாஸ்கர், இந்நாள் தலைவர் கபில் என இரண்டு பேருக்கும் நிறையவே உராய்வுகள் உண்டு. இது வரை இறுதிச்சுற்றுக்கு எல்லாம் பெரிய அளவில் தகுதி பெறாத அணி, எல்லாவிதத்திலும் தலைசிறந்த, அனுபவம் மிக்க, போஷாக்கான மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது. கோப்பையை வென்றது.
கிட்டத்தட்ட அதே போல் ஒரு நிகழ்வு அமெரிக்க என்.பி.ஏ (NBA) கூடைப்பந்தாட்டத்தின் இறுதியிலும் நடந்திருக்கிறது. ஒரு பக்கம் கலிஃபோர்னியாவின் கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ் (Golden State Warriors) அணி. அவர்களுக்கு எதிராக க்ளீவ்லாந்து நகரத்தை தாயகமாகக் கொண்ட கவாலியர்ஸ் (Cleveland Cavaliers) அணி. 83ஆம் ஆண்டின் மேற்கிந்தியத் தீவுகள் போல் திறமையும் துடிப்பும் கொண்டவர்கள் கலிஃபோர்னியாக்காரர்கள். கபில் தேவும் காவஸ்கரும் பூனையும் நாயுமாக உர்புர்ரென்று உரசிக் கொள்வது போல் க்ளீவ்லாந்து அணியில் கெவின் லவ் என்பவரும் அணியின் நாயகன் லெப்ரான் ஜேம்ஸும் கொஞ்சம் போல் உரசிக் கொள்பவர்கள். சென்ற வருடம் 2015 இறுதிப் போட்டிகளில், இதே க்ளீவ்லாந்து அணியை குப்புறப் போட்டு சாத்து சாத்தென்று மொத்தி, வீட்டுக்கு அனுப்பி, கோப்பையை கைவசம் வைத்திருப்பவர்கள் கலிஃபோர்னியா மாநில கோல்டன் ஸ்டேட் வீரர்கள்.
இந்த 2016ஆம் வருடமும் இதே இரண்டு அணிகள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறின. கடைசிப் போட்டியில் மோதிக்கொண்டன. திறமையை பொறுமை வென்றது. நம்பவியலாதது நடந்தேவிட்டது. மயிரிழையில் ப்ரெக்ஸிட் ஜெயித்தது போல், நூலிழையின் மைக்ரோ துளியில் லெப்ரான் ஜேம்ஸின் க்ளீவ்லாந்து வெற்றிக்கோப்பையைத் தட்டிச் சென்றது.
க்ளீவ்லாந்து என்றாலே ஏதோ பாவப்பட்ட நகரம் எனச் சொல்லலாம். கடந்த ஐம்பத்தி இரண்டு ஆண்டுகளாக இவர்கள் எந்தக் கோப்பையையும் வெல்லவில்லை. எந்தப் போட்டியிலும் முதலிடத்தைப் பெறவில்லை. அமெரிக்காவின் ஈசானிய மூலையாக, வடகிழக்கில் ஒதுக்குப் புறமாக இருக்கும் இந்த நகரத்திற்கு எல்லாவிதமான விளையாட்டு அணிகளும் இருக்கின்றன. அமெரிக்க கால்பந்திற்கு என க்ளீவ்லாந்து பிரௌன்ஸ், பேஸ்பால் ஆடுவதற்கு இந்தியன்ஸ் என பல முன்னணி ஆட்டக்காரர்களைக் கொண்ட பணக்காரக் குழுக்கள் இருந்தாலும், அந்தக் குழுக்கள் எல்லாம் இடறிக்கொண்டே இருந்தன. தாயத்துக் கட்டிக்கொள்ளாத குறையாக இதற்கென்று பல்வேறு காரணிகளை க்ளீவ்லாந்துக்காரர்கள் உண்டு செய்தார்கள்.
அமெரிக்காவின் பூர்வகுடிகளான செவ்விந்தியர்களை பகிடி செய்யுமாறு பேஸ்பால் அணியின் முத்திரை இருக்கிறது. சமூக ஆராய்ச்சியாளர்களும் பழங்குடி இந்தியர்களும் இந்த இலச்சினைக்கு ஆட்சேபணை தெரிவித்தார்கள். முதற்குடி இந்தியர்களைக் கிண்டல் செய்வது போல் சின்னம் வைத்திருப்பதால்தான் பேஸ்பால் போட்டியில் வெல்வதில்லை என்பதை ஒரு காரணமாகச் சொல்கிறார்கள். கடந்த ஐம்பதாண்டுகளாக, ஒவ்வொரு ஆண்டும், க்ளீவ்லாந்து இந்தியன்ஸ் அணியின் பேஸ்பால் பருவகால துவக்க ஆட்டத்தின் போது, இயலிட அமெரிக்கர்கள், “இந்தியன்ஸ்” என்னும் பெயரை மாற்றி வைக்குமாறு போராடுகிறார்கள். இருந்தாலும், மக்களின் மனதில் பதிந்துபோன பெயர் என்னும் காரணத்தைச் சொல்லி, அதை மாற்றுவதற்கு அணியின் முதலீட்டாளர்கள் தயாராக இல்லை.
அது பேஸ்பால் அணி. கூடைப்பந்தாட்ட அணிக்குத்தான் கவாலியர்ஸ் — குதிரைவீரர்கள் என்னும் சாதாரணப் பெயர்தானே? அவர்களால் ஏன் வெல்லமுடியவில்லை என்னும் கேள்வி நிலைத்து இருந்தது. இந்த சமயத்தில்தான் விடிவெள்ளி, சூப்பர் ஸ்டார், தளபதி லெப்ரான் ஜேம்ஸ் அணியில் சேர்ந்தார்.
எல்லோரும் கல்லூரி முடித்த பிறகுதான் என்.பி.ஏ. அணிகளுக்கு ஆடப் போவார்கள். ஆனால், பள்ளிக்கூடத்தில் இருந்து நேரடியாக, வெறும் 19 வயதில் அதிரடியாக க்ளீவ்லாந்து கவாலியர் அணிக்கு லெப்ரான் ஜேம்ஸ் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இவர்தான் ரட்சகர், நமக்குக் கோப்பையைத் தரப் போகும் நாயகர் என்று க்ளீவ்லாந்துக்காரர்கள் உறுதியாக நம்புகிறார்கள். லெப்ரான் ஜேம்ஸும் ஏழாண்டுகளாக க்ளீவ்லாந்து கவாலியர்களுக்காக ஆடிப் பார்த்தார். மற்ற அணிகளின் பணவீச்சுக்கு முன்னால், இவரின் திறமை எடுபடவில்லை. என்னதான் அர்ஜுனன் போல் உயிரைக் கொடுத்து ஆடினாலும், பக்கபலமாக பீமன் தேவை. ரதசாரதியாக கிருஷ்ணர் தேவை. நேரம் பார்த்து நாள் குறிக்க சகாதேவன் வேண்டும். தலைமைப் பொறுப்பெடுத்து வழிகாட்ட தர்மர் வேண்டும்.
இந்த மாதிரி சரியான சக ஆட்டக்காரர்களும் பயிற்சி அளிப்பவர்களும் தகவல் தரவு ஆராய்ச்சியாளர்களும் உடற்பயிற்சியாளர்களும் க்ளீவ்லாந்தில் கிடைக்கவில்லை என்பதால், செழிப்புமிக்க மியாமி ஹீட் அணிக்குத் தாவுகிறார். அதாவது, நாம் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறோம். நாம் நன்றாகத்தான் வேலை பார்க்கிறோம். வேலைக்கேற்ற சம்பளமும் கைநிறைய கிடைக்கிறது. இருக்குமிடத்தில் பெருமையும் மரியாதையும் நிறையக் கிடைக்கிறது. ஆனால், இந்த இடத்தில் வேலை பார்க்கிறோம் என்று ஊருக்கு வெளியே நாலு பேரிடம் சொன்னால், கேலியாகப் பார்க்கிறார்கள். உள்ளூரில் மட்டும்தான் பெருமை; நாலு தெரு தாண்டினால், நம் கண் முன்னாடியே கையாலாகாதக் கும்பல் என்று கிண்டலும் கேலியும் மட்டுமே கிடைக்கிறது. இதைத் துடைத்தெறிய மியாமிக்கு மாறிப் போகிறார் லெப்ரான் ஜேம்ஸ். வந்த கையோடு இரண்டு முறை கோப்பையை வெல்கிறார் லெப்ரான்.
ஊர் வாய் சும்மா கிடக்குமா?
மியாமி வந்தத்தால்தான் லெப்ரான் ஜேம்ஸால் கோப்பைகளை வெல்ல முடிகிறது என்கிறார்கள். க்ளீவ்லாந்திலேயே இருந்து கெலித்தால், அது பெருமை. ’அக்ரோணி சேனையை வைத்துக் கொண்டு அதன் பின் பதுங்கிக் கொண்டு கோப்பையை வெல்வதற்கு லெப்ரான் ஜேம்ஸ் எதற்கு!’ என ஊர் அவல் மெல்ல ஆரம்பிக்கிறது.
மீண்டும் தாயகம் திரும்பி க்ளீவ்லாந்திற்காக ஆட ஆரம்பிக்கிறார். சென்ற வருடம் இறுதிப் போட்டிக்குத் தகுதிப் பெற்றார். இந்த ஆண்டு, இறுதிப் போட்டியில் வென்றே விட்டார்.
அதுவும் எப்பேர்ப்பட்ட அணியை வென்றிருக்கிறார் என பட்டியம் சொன்னால்தான் க்ளீவ்லாந்து கவாலியர் அணியின் பெருமையும் லெப்ரான் ஜேம்ஸின் இமாலயச் சாதனையும் புலப்படும்.
இதுவரை ஒரு சில தடவை மட்டுமே ட்விட்டர் வலையகம் படுத்திருக்கிறது. எப்போதும் துடிப்புடன் இயங்கும் டிவிட்டர்.காம் இணையத்தளம் கலிஃபோர்னியாவின் கோல்டன் ஸ்டேட் இறுதியாட்டத்தின் போது ரசிகர்களின் ட்விட்டுகளுக்கு ஈடுகொடுக்க இயலாமல் சுணங்கிவிட்டது. அந்த அளவு வெறித்தனமான கோடானுகோடி பார்வையாளர்களைக் கொண்ட அணி.
இவ்வளவு ரசிகர்கள் இருப்பது எப்படி முக்கியத்துவம் ஆகிறது? அதிக அளவு மக்கள் பார்க்க பார்க்க தொலைக்காட்சியில் துவங்கி செல்பேசி திரைகள் வரை விளம்பரங்கள் விற்கலாம். அதுவும் கலிஃபோர்னியா போல் ஜனத்தொகை அதிகம் இருக்கும் இடங்களில், இன்னும் நிறைய பேர், இந்த ஆட்டங்களைத் தொடந்து பார்ப்பார்கள். அமெரிக்காவின் பணக்காரர்கள் அதிகம் வாழும் இடம் கலிஃபோர்னியா. சிலிக்கான் வேலி, ஹாலிவுட் என அங்கேதான் மூளையும் ஜிகினாவும் ஒன்று சேர்ந்து கோலோச்சுகின்றன. அது போன்ற பெரும் மக்கள்திரள் கூட்டம் கூட்டமாக இந்த அணியின் பின் நிற்கிறார்கள்.
இப்பொழுது எனக்கிருக்கும் ஒரே குழப்பம் ஒன்றுதான். பாதி மைதானத்தில் இருந்து பந்தை விட்டெறிந்தாலும் கூடைக்குள் விழவைக்கும் க்ளே தாம்ஸன் (Clay Thompson) + முகத்தில் கை வைத்து கண்ணை மறைத்தாலும், பந்தை லாவகமாக எதிரணியினரின் கை விரல் இடுக்கில் பாயவைத்து சிக்ஸர் போல் மூன்று மூன்றாக கோல் போடும் ஸ்டெஃப் கரி (Steph Curry) என்னும் திறமைமிக்க இரட்டையர் உள்ள அணி கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ். அவர்களிடம்தான் பணபலமும் இருக்கிறது. அது தவிர அமெரிக்காவின் மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட மாநிலமும் பார்வையாளர்களும் விளம்பர வலிமையும் அங்கே இருக்கிறது. இப்படி எல்லாவிதமான சாமுத்ரிகா இலட்சணங்களும் இருக்கும்போது க்ளீவலாந்து கவாலியர்ஸிடம் எப்படித் தோற்றார்கள்?
சென்ற ஆண்டு போலவே இந்த தடவையும் ஜேம்ஸை விட ஸ்டெஃப் கரி ஆட்டம் மனதைக் கவர்ந்தது. கோல்டன் ஸ்டேட் வீரர்கள் உயிரைக் கொடுத்து ஆடினார்கள். ஸ்டெஃப் கரி கொஞ்சம் எலும்பும் (300+ பவுண்ட் ஜேம்ஸை ஒப்பிட்டால் – என்னோடு ஒப்பிட்டால் அல்ல) தோலுமாக இருப்பார். முதல் நான்கு ஆட்டங்களில், எதிரணியை மரியாதையாக நடத்திய க்ளீவ்லாந்துக்காரர்கள், அதற்குப் பிறகு அவரைத் தூக்கி கடாசிவிட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
பரிதாபமாய் இருந்தது. ஆனால், ஜெயிக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால், அதற்கான அஸ்திரங்கள் முக்கியமல்ல என்பது விளையாட்டில் எழுதப்படாத விதி. இந்த அடாவடித்தனத்துடன், இப்போது நீங்கள் புதிய மதத்தையும் அதன் தற்காலக் கடவுளையும் அதற்கான சாத்தானையும் தெரிந்துகொள்ள வேண்டும்.
இப்போதைய மதம் என்பது ”தரவு”. அதன் கடவுளாகக் கருதப்படுபவர் “பகுப்பாய்வியல் நிபுணர்”. கடவுள் என்றால் சாத்தான் இருக்கத்தானே வேண்டும்? சாத்தானாக சூதாட்டத்தை, லாஸ் வேகாஸ் சாதக பாதக விகிதாச்சாரங்களை நிர்ணயிப்பவர்களை, விளையாட்டின் போக்குகளை ஒழுங்குபடுத்தும் சூத்திரதாரிகளாகச் சொல்லலாம்.
ஒரு ஆட்டக்காரரை எப்படி வீழ்த்தவேண்டும் என்பதை இந்த தகவல் தரவுகள் ஆராய்கின்றன. எப்படி இவரை முற்றுகையிட்டால் எவ்வாறு சறுக்குவார் என்பதையும் எந்த முட்டியில் எங்கனம் அடித்தால் கதறுவார் என்பதையும் எப்படி அவரை திட்டினால் பயமுறுவார் என்பதையும் கணினிகள் ஆராய்ந்து அறிவுறுத்துகின்றன. தரவு அறிவியலாளர்கள் இதைத் துருப்புச்சீட்டாக, ஆட்டத்தின் கடைசி நொடிகளில் பயன்படுத்துகிறார்கள். எப்போதும் உபயோகித்தால், அதற்கான மாற்றுகளை எதிராளி கண்டுபிடித்துவிடுவார். யார் யாருடன் அணி சேர வேண்டும், எவ்வாறு பந்தை திசை திருப்ப வேண்டும், எப்படி ஏமாற்ற வேண்டும், எவ்வாறு அடி வாங்கியது போல் கதற வேண்டும் என்பதை எல்லாம் வகுப்பெடுத்து நடிக்கவும் இடம் பொருள் ஏவலறிந்து பாயவும் கற்றுக் கொடுக்கிறார்கள்.
உங்கள் திறமையை நீங்கள் நம்பலாம். ஆனால், எப்போது உங்கள் திறமை பளிச்சிடுகிறது என்பதை தகவல்கள் காட்டிக் கொடுக்கும். எவ்வாறு திறமை மீது மட்டும் நம்பிக்கை வைத்து, ஒரு குதிரை மீது மட்டும் பணம் கட்டி மோசம் போகாமல், பல குதிரை மீது சின்னச் சின்ன பணயங்கள் வைத்து பெரிய பந்தயங்களில் ஜெயிப்பது என்பது தரவு பகுப்பாய்வின் முதலாயக் கடமை.
இதன் இன்னொரு பக்கமாக எப்போதுமே வென்று கொண்டிருந்தால் (அல்லது தோற்றுக் கொண்டிருந்தால்), அந்த அணி மீது ஒரு அலுப்பு வந்துவிடும். ரசிகர்களின் நீடித்த ஆதரவு வேண்டும். அதே சமயம் அந்த ரசிகரின் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நாளும் தன் அணி ஜெயிக்குமா / தோற்குமா என்னும் ஊசலாட்டத்திலேயே கழிக்க வேண்டும். அப்போதுதான் அவர் எப்போதும் தொலைக்காட்சியையும் திறன்பேசியையும் கவனிப்பார். தன்னுடைய அணியின் சட்டையை, தொப்பியை வாங்குவார்.
மூன்றாவதாக, ஒருவருக்கு எப்போது சோர்வு ஏற்படுகிறது? எப்போது கால்களில் சுணக்கம் உண்டாகிறது? எத்தனை மைல் ஓடியபிறகு ஓய்வு தேவை? எவர் அருகில் வந்தால் இதயத்துடிப்பு அதிகரித்து, ஆட்டத்தில் ஸ்ருதி விலகுகிறது? எப்போது வேர்வை அதிகரித்து பதற்றம் உண்டாகிறது? அதை நீக்க எவரை அவருக்கு உறுதுணையாக்கலாம்? இதெல்லாமும் தகவல் தரவு ஆராய்ச்சி நிரலியின் முடிவுகள் மூலம் ஆராயலாம்.
இவ்வளவு தகவல்கள் கொடுத்து அதன் அடிப்படையில் முடிவெடுத்தாலும், தனி மனிதனின் ஆற்றலின் உச்சகட்ட வெளிப்பாடாக இருந்தாலும், கால்பந்து போல் கூடைப்பந்தும் கூட்டணி ஆட்டம். தனியாளாக தோரணம் கட்ட முடியாது. கோப்பையை வெல்ல முடியாது. தன்னை நோக்கி பலர் முற்றுகையிடப் போகிறார்கள் என்பதை உணர்ந்தவுடன் தன்னுடைய சகாவிற்கு பந்தைக் கொடுத்துவிட வேண்டும். அடுத்தவரின் மீது நிறைய நம்பிக்கையும் அவர்கள் சிறப்பாக ஆடுவதற்கான களமும் அமைத்துத் தர வேண்டும். நீங்கள் மட்டும் அற்புதமாக ஆடினால், அணி தோற்கும். அதை லெப்ரான் ஜேம்ஸ் நன்கே உணர்ந்திருந்தார்.
பந்தைக் கூடைக்குள் அமுக்கு வருவது போல் பாய்ந்து வருவார். உடனடியாக அவரை மூன்று வீரார்கள் எல்லாப்புறத்திலும் பாதுகாத்து பந்தை அவரிடமிருந்து அபகரிக்க ஓடி வருவார்கள். எதிரணிக்காரர்கள் எல்லோரும் தன்னுடைய சகவீரர்களை விட்டு தூர விலகி தன்னை மிகநெருங்கிய பின், பந்தை தன் அணிக்காரருக்கு தூக்கியெறிவார். சக அணிக்காரர் கூடைக்குள் பந்தை ஆற அமர உள்ளே தள்ளுவார். லெப்ரான் ஜேம்ஸின் ஸ்கோர் ஏறாது. எதிரணிக்காரருக்கு சோர்வும் குழப்பமும் எகிறும். லெப்ரான் ஜேம்ஸின் சாதனைப் பட்டியல் எண்ணிக்கை அதிகரிக்காது. ஆனால், தன் அணியின் வெற்றிப்பாதையில் ஒரு அடி எடுத்து வைத்த திருப்தி கிடைக்கும்.
பிறருக்கு என்ன தேவை என்று உணர்ந்து அதை உணர்த்துவதில்தான் வெற்றியின் சூட்சுமம் இருக்கிறது.
மூன்று ஆட்டம் தோற்று, கிட்டத்தட்ட தோல்வியின் வாயிலில் நிற்கும் தருணத்தில், லெப்ரான் ஜேம்ஸின் தோழர் அவருக்கு முகமது அலியின் ஆட்டத்தைப் போட்டுக் காட்டுகிறார். பதினைந்து சுற்று ஆட்டம். முதல் சுற்றுகளில் எங்கு பார்த்தாலும் அடி வாங்குகிறார் முகமது அலி. எதிராளி சோர்வுறுவார் என்பது மட்டுமே அலியின் நம்பிக்கை. ஆனால், அப்போதும் அசராமல் எதிராளியின் மூளைக்குள் புகுந்து உளவியல் விளையாட்டையும் முகமது அலி விளையாடுகிறார். தன் திறமையை காண்பிப்பதன் மூலம், சொற்போரின் மூலம், பொறுமையின் மூலம் அலி இறுச்சுற்றில் வென்று நிற்கிறார். அது லெப்ரானின் தேவை + சூட்சுமம்.
இதே போல் தன் கூட்டாளிகளுக்கு என்ன தேவை என்பதை உணர்த்த ஸ்டீவ் ஜாப்ஸ் உரையை லெப்ரான் ஜேம்ஸ் துணைக்கழைக்கிறார்.
வாழ்க்கை வேண்டுமென்றே உங்கள் தலையைக் குறிபார்த்து செங்கல் கொண்டு தாக்கும். நம்பிக்கை இழக்க வேண்டாம். நான் ஆப்பிள் நிறுவனத்தை விட்டு தூக்கிக் கடாசப்படாமல் இருந்தால் என் மனைவியை கண்டுகொண்டு இல்லறத்தைத் தெரிந்துகொண்டிருக்க மாட்டேன். பிக்ஸார் நிறுவனத்தைத் துவக்கியிருக்கமாட்டேன். உங்களுக்கு எதுபிடிக்கிறதோ அதைத் தொடர்ந்து மும்முரமாக செய்வதே சுகம்! இது போதும் என்று பாதி வழியில் சமரசம் செய்து கொள்வதோ பிடிக்காத வேலையைச் செய்து நரகத்தில் உழல்வதோ வேண்டாம். மனதுக்கு ரம்மியமானதை ஒரு துளி சலிப்பு கூட இல்லாமல் கடைசி முழம் ஏறி முழுமையடையும் வரை தொடர்ந்து முட்டி மோதி பயணியுங்கள்
உடலிலும் இதே முயற்சியைக் கடைபிடித்து சாகசம் செய்துவிட்டார் லெப்ரான்.
மேலும்:
- NBA playoffs 2016 – How LeBron James and the Cleveland Cavaliers lifted the curse
- LeBron’s dreams come true with NBA title for Cleveland
- TrueHoop presents – LeBron struggles to bring Heat culture to Cavs
- The Draymond Conspiracy — The Ringer