லாங்ஸ்டன் ஹியூஸ் [ 1902-1 967 ] மிகச் சிறந்த அமெரிக்கக் கறுப்பர் இனக் கவிஞர். கவிதை, நாவல், சிறுகதை, நாடகம் எனப் பல துறைகளிலும் முத்திரை பதித்தவர். கறுப்பர்கள் மதிக்கப் படாத சூழலில் எழுத்துலகில் அறிமுகமான இவர் “எந்தச் சிறந்த கவிஞனும் அவனாகவே இருப்பதில் அச்சம் அடைவ தில்லை ” என்ற கருத்தை முன் வைத்து தன் தலைமுறையை வழி நடத்தியவர்.
மௌனம்
நீ பேசுவதற்கு
முன்னால் உன் மௌனத்தின்
பாங்கைப் புரிந்து கொண்டேன்
ஒரு வார்த்தையும்
நான் கேட்க வேண்டிய அவசியமில்லை
உன் மௌனம்
நான் கேட்க வேண்டிய ஒவ்வொரு தொனியையும்
சொல்லிவிட்டது.
oOo
ஒத்தி வைக்கப்பட்ட கனவு
ஒத்தி வைக்கப்பட்ட கனவுக்கு என்ன ஆகும்?
அது வறண்டு விடுமா
வெயிலில் வைக்கப்பட்ட உலர் திராட்சை போல?
அல்லது வதைக்கும் சீழ்ப் புண்ணாகி
நொந்து ஓடுமா?
அழுகிய இறைச்சி போல நாறுமா?
அல்லது பாகின் மேல் ஒட்டும் சர்க்கரை போல இருக்குமா?
அது ஒரு பாரமான சுமை போலத் தொய்ந்தும் விடலாம்
அல்லது
அது வெடித்து விடுமா?
oOo
ஜனநாயகம்
இன்று, இந்த வருடம்,
எப்போதுமே
சமாதானம் , அச்சம் மூலமாக
ஜனநாயகத்தைப் பெறமுடியாது
என் இரண்டு காலில் நிற்க
நிலத்தைச் சொந்தமாக்கிக் கொள்ள,
எனக்கும் எல்லா உரிமைகளும் உண்டு
அவனுக்கு இருப்பது போலவே.
நடக்கும் போது நடக்கும் என்று
எல்லோரும் சொல்வதைக் கேட்டுப் புளித்துப் போனது,
நாளை மற்றுமொரு நாளே
நான் இறக்கும் போது எனக்குச் சுதந்திரம் தேவையில்லை
நாளைய ரொட்டியை நினைத்து என்னால் வாழமுடியாது.
சுதந்திரம்
என்பது ஆழமான விதை
மிகத் தேவையோடு
பயிரிடப்பட்டது.
நானும் இங்கு வாழ்கிறேன்,
உன்னைப் போல.
சுதந்திரம் எனக்கும் வேண்டும்.
oOo
ஆங்கில மூலம்:லாங்ஸ்டன் ஹியூஸ்
தமிழில் :தி.இரா.மீனா