[stextbox id=”info” caption=”அந்நியன்”]
பல நாட்டு மக்களுக்கு அவர்கள் சமூகங்களைச் சுற்றி நிலவும் மிகவுமே குழப்படியான நிலையில் எதிரெதிர் முடிவுகளாக இருப்பவை எல்லாம் மோசமானவையாகத் தெரிவதால் இப்போதிருக்கும் தேர்வுகள் எதுவுமே உகந்தனவாக இல்லை. இங்கு உகாண்டாவின் அதிபர் ஒரு பேட்டியில் இப்படிச் சொல்கிறார்.
The ICC has lost all credibility. This is our continent, not yours. Who are you to ignore the voice of the Africans?
இங்கு ஐஸிஸி என்பது இண்டர்நேஷனல் கிரிமினல் கோர்ட். இது அனேகமாக யூரோப்பியரால் நடத்தப்படும் ஒரு அமைப்பு. இதற்கு இனிமேல் உலகளவில் ஆமோதிப்பு கிட்டாது என்பதை இந்த உகாண்டாவின் அதிபர் தெளிவாகச் சுட்டுகிறார்.
ஆஃப்ரிக்கர்கள் ஒரு வழியாக யூரோப்பியர்களின் கைப்பிடியில் நசுங்குவதிலிருந்து விடுபடத் துவங்கி இருக்கிறார்கள். இந்தியாவின் இங்கிலிஷ் பேசும் பெரும் மத்திய வர்க்கம் எப்போது இந்த மோகத்திலிருந்து விடுபடும் என்று கேட்க வேண்டி இருக்கிறது.
ஆஃப்ரிக்கர்கள் முழு ஆஃப்ரிக்கனியத்துக்குச் செல்லவிடாமல் தடுப்பது ஆஃப்ரிக்காவின் பல நாடுகளிலும் இருக்கும் தலைவர்கள் பெரும் கொள்ளையர், கொலைகாரர்கள் அல்லது சர்வாதிகாரத்தை நாடுபவர்கள் என்பதும், பொருளாதாரமோ/ அரசியலமைப்புகளோ இன்னும் நிலைத்த உருக் கொள்ளாதவை என்பதும், ஆஃப்ரிக்காவின் இருபெரும் மதங்களான கிருஸ்தவமும், இஸ்லாமும் இன்னும் யூரோப்பிய/ அரபு ஏகாதிபத்தியத்தின் வெளிப்பாடுகளாகவே இருப்பதும் என்று பல காரணங்கள் இருக்கலாம். இதே போன்ற பிரச்சினைகள் இந்தியருக்கு இல்லை என்றாலும் கிட்டும் தேர்வுகள் எதுவும் இந்திய மத்திய வகுப்பினருக்கு உவப்பாக இல்லை என்பதை நாம் யோசிக்க வேண்டி இருக்கிறது. பழைய கொள்ளையரா, புதிய தற்குறிகளா என்ற தேர்வு என்ன வகைத் தேர்வு?
[/stextbox]
[stextbox id=”info” caption=”இத்தலியர்களின் மன மாற்றங்கள் நீடிக்குமா?”]
இத்தலி என்று சொன்னால் நமக்கு அழகான பெண்கள், ஏராளமான யூரோப்பிய ஓவியங்கள், ரோம சாம்ராஜ்யத்தின் சிதிலங்கள், அப்புறம் வாடிகனும் ரோமன் கதோலிக்க சர்ச்சின் மைய நகரமும் நினைவு வரலாம். இன்னும் சற்று யோசித்தால் முஸோலினி, ஃபாசிசம், திராவிடக் கட்சிக்கு ஊக்கம் கொடுத்த ஃபாசிஸ்டுகளின் கருப்புக் கொடி இப்படிக் கோணலான விஷயங்களும் நினைவு வரலாம். தமிழகத்து முற்போக்குகளில் சிலருக்காவது இத்தலியின் கம்யூனிஸ்டுகள் சிலர் நாயகர்களாக இருப்பார்கள். கிராம்ஸ்சி என்று பெயரைச் சொன்னால் பெருமூச்செறிந்து, புளகித்துக் கண்ணீர் மல்கும் நபர்கள் தமிழ்நாட்டில் உண்டு. அவர்களைப் பொறுத்தவரை உலகம் சிந்திக்க ஆரம்பித்ததே கிராம்ஸ்சி சிறையிலடைக்கப்பட்ட போது எழுதிய புத்தகத்திற்குப் பிறகுதான். அதற்கு முன்னால் உலகில் விடுதலை என்பது பற்றி யாருக்கும் எதுவும் தெரிந்திருக்கவில்லை.
அதே போல மாகியவெல்லி என்றால் மகிழ்ச்சிப் புன்னகை புரியும் ’பெருந்தகை’களும் இருப்பார்கள். இவர்களுக்கு சாணக்கியன் என்றால் இழிவாகத் தெரியும். மாகியவெல்லி என்றால் ‘மேதை’ என்றுதான் புரியும்.
இத்தனைக்கும் பின்னால் இத்தலியின் நாகரீகம் பன்னெடுங்காலமாகப் பெண்களுக்கு எதிரான பண்பாட்டையே கைக்கொண்டிருக்கிறது, யூரோப்பின் பல நாடுகளில் பெண்கள் ஓரளவுக்காவது அதிகாரப்பகிர்வில் சம நிலைக்கு வந்து கொண்டிருக்கையில் இத்தலியில் இன்னும் ஆண்மைய அரசியலே அதிகாரத்தில் இருக்கிறது என்பது நம்மில் பலருக்கு உடனே நினைவு வர வாய்ப்பில்லை. இத்தலியின் அதிகார இழுபறிகள், அரசியல் நிலைமை ஆகியன இந்திய ஊடகங்களில் அதிகக் கவனிப்பு பெறுவதில்லை. இது ஒரு வினோத நிலை. இத்தனைக்கும் இந்தியாவின் அரசியலைக் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு இத்தலியப் பெண் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறார், இருந்தார். அவருடைய பின்புலம் என்ன, பண்பாட்டில் என்ன மதிப்பீடுகளைப் பெற்று இந்திய அரசியலுக்கு அவற்றைக் கடத்தி இருக்கிறார் என்பதை எல்லாம் பற்றி வழக்கமாக எல்லாருடைய அடையாளங்களையும் இழிவாகப் பேசி அவற்றை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்ற முயலும் இந்திய முற்போக்குகள் சிறிதும் அக்கறை காட்டவில்லை என்பது நிஜமாகவே வினோதமானதுதான்.
அடுத்தாற்போல ஒரு இந்து அதிகாரத்துக்கு வர முயன்றால் உடனே அவருடைய பூர்வம் என்ன, ஜாதி என்ன, அவர் ஒரு ஃபாசிஸ்டா என்று உடனே ஆழம் காண முயல்வார்கள். ஃபாசிசத்துக்குப் பெயர் போன நாட்டிலிருந்து வந்த ஒரு பெரும் அரசியல்வாதியைச் சிறிதும் பின்னணி பற்றி யோசிக்காமல் ஏற்ற பெருந்தகைகள் நம் முற்போக்குகள். இன்னமுமே அது பற்றி மூச்சு கூட விடாமல் இருப்பவர்கள்.
அத்தனை தூரம் யூரோப்பியத்துக்கு அடிமைத்தனம், வெள்ளையரின் சிப்பாயாக இருந்து பழகிய புத்தி.
இந்தச் செய்தியில் நமக்குக் கிட்டும் ஒரு நல்ல விஷயம். ஆண்மையப் பண்பாடான இத்தலியில் சிறிதாவது மாறுதல் வரத் துவங்கி இருக்கிறது. பெண்களின் குரல் உயர்ந்து கேட்கிறது.
ரோம் பெருநகரின் அரசிற்கான தேர்தலில் சமீபத்தில் மரபு அரசியல் கட்சிகளின் அதிகாரத்தை எதிர்த்து நின்ற புதுமுகங்களின் கட்சி ஒன்று பெருவெற்றி பெற்றிருக்கிறது. அந்த இயக்கத்தின் பெயர் முரணான ஒன்று. ஐந்து நட்சத்திரக் கட்சி என்று பெயர் கொண்ட இதன் பிரதம வேட்பாளர் ஒரு பெண்.
வர்ஜினியா ராகி தேர்தலை இரட்டை மடங்கு வாக்கு வித்தியாசத்தில் வென்று நாட்டை ஆளும் கட்சியின் வேட்பாளரும் சமீப காலம் வரை ரோம் நகர அரசை ஆண்டவருமான மாத்தியோ ரென்ஸியைத் தோற்கடித்திருக்கிறார். இது அப்படி ஒன்றும் பாட்டாளிகளின் கட்சியாகத் தெரியவில்லை. அதே நேரம் மரபு அடைப்புக் குறிகளுக்குள் இதை அடக்க முடியுமா என்பது இனிமேல்தான் தெரிய வரும். இப்போதைக்குச் செயலூக்கமோ, நிர்வாகத் திறனோ இல்லாத இடது சாரி மத்திய சாரிக் கூட்டணி அரசுக்கு உதை கொடுத்து வெளியேற்றி இருக்கிறார்கள் ரோம் நகர மக்கள். ஆனால்.. இப்படித் தேர்தல் வெற்றிகளில் நிர்வாக மேம்படுதல் கிட்டுமா என்ன?
இனியாவது இத்தலி பெண்களுக்குச் சம உரிமை கொடுத்த அரசியல் அமைப்பைப் பெறுமா?
இதற்கெல்லாம் காலம்தான் பதில் சொல்லும். மேல் விவரங்களுக்கு இந்தச் சுட்டியில் படியுங்கள்.
[/stextbox]