குளக்கரை


[stextbox id=”info” caption=”ஒதுக்கல்”]

Robbins-refugees-838x419

இன்றைய தேதியில் உலகம் சந்தித்துக்கொண்டிருக்கும் பிரச்சனைகளில் முக்கியமானது மேற்காசியாவிலிருந்து அகதிகள் இடம்பெயர்ந்து ஐரோப்பாவிற்குச் செல்வது (அல்லது செல்ல முயல்வது). முதலில் பெரும்பாலும் துருக்கியிலும் அதன் பின் சிறிது சிறிதாக கிரீஸிலும் அகதிகள் குடியேறுவதைப் பொருட்படுத்தாமல் இருந்த ஐரோப்பிய யூனியன் (ஐ.யூ) நாடுகள், அகதிகள் ஐரோப்பாவின் உட்பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வர ஆரம்பித்தவுடன் சுதாரித்துக் கொண்டு அதற்கு பல்வேறு முட்டுக்கடைகளைப் போட ஆரம்பித்துவிட்டன. ஜெர்மனியின் ‘விடாமுயற்சியின்’ பேரில் மார்ச் மாதம் ஐ.யூ துருக்கியுடன் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தத்தின் படி கிரீஸில் தற்போது உள்ள அகதிகள், அவர்கள் முறைப்படி அகதி உரிமை பெறாவிடில், துருக்கிக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள். பதிலாக துருக்கியில் அகதிகளுக்கான மறுவாழ்வுக்கு ஐ.யூ வேண்டிய உதவிகளைச் செய்யும், அதற்குத் தேவையான நிதியுதவியும் அளிக்கப்படும்.

ஆனால் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் பல சிக்கல்கள். அகதிகளில் பெரும்பான்மையானவர்கள் சிரியாவிலிருந்து வந்திருந்தாலும், அவர்களுள் ஆப்கானியரும், ஈராக், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இடம் பெயர்ந்து வந்தோறும் உண்டு. இதில் உண்மையான அகதிகள் யார், பொருளாதார நிலையில் தங்களை உயர்த்திக்கொள்ள வேலை வாய்ப்புத் தேடிவந்தவர் யார் என்று தீர்மானிப்பது ஒரு பிரச்சனை. ஆப்கானிஸ்தான் அமைதி நிலவும் நாடு என்று ஐ.யூ தீர்மானித்துவிட்டதால் அங்கிருந்து வருபவர்களை அகதிகளாகக் கருத மறுக்கிறது. எனவே அவர்கள் வேலை வாய்ப்புத் தேடி வந்தவர்களாகவே கருதப்பட்டு, திரும்பச் செல்லுமாறு வற்புறுத்தப்படுகிறார்கள்.

மனித உரிமைகளைப் பற்றி வாய்க்கிழியப் பேசினாலும், தனக்கு வந்தால் தெரியும் தலைவலி என்பது போல், தனது நாட்டிற்கு பல பிரச்சனைகளை இந்த அகதிகள் இடப் பெயர்ச்சி கொண்டுவரும் என்பதை அறிந்து ஐ. யூ, குறிப்பாக ஜெர்மனி, இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றியிருக்கிறது என்பது பார்வையாளர்களின் கருத்து. இதில் பலியாடுகளாகச் சிக்கிக்கொண்டவை கிரீஸும் துருக்கியும்தான். இந்தப் பிரச்சனையின் தாக்கத்தையும், மார்ச் ஒப்பந்தத்தின் விளைவுகளையும் நேரில் பார்த்த ஒரு நிருபரின் அனுபவங்கள் இங்கே விவரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரச்சனையில் அமெரிக்கா ஏன் தலையிட்டு தீர்வுகாண முடியவில்லை என்ற கேள்வியையும் அவர் எழுப்புகிறார். அதே சமயம், அமெரிக்கா தலையிடாததைப் பற்றி அங்கு யாரும் கவலை கொள்ளவில்லை என்ற நிதர்சனத்தையும் வெளிப்படுத்துகிறார்

நாடுகளின் ராஜதந்திர விளையாட்டுகளின் ஊடே, அகதிகளாக தங்கள் நாட்டையும் வீட்டையும் விட்டு அனாதரவாக வந்தவர்களுக்கு கிரீஸில் உள்ள உள்ளூர் மக்கள் மனித நேயத்தோடு உதவுவதை இந்தக் கட்டுரை தெளிவுபடுத்துகிறது. அடித்தட்டு மக்களின் இந்த மனித நேயத்தால்தான் உலகம் இன்னும் இயங்கிக்கொண்டிருக்கிறது.

http://thebaffler.com/salvos/our-friends-across-sea-taylor
[/stextbox]


[stextbox id=”info” caption=”ஆஸ்திரேலியாவின் சிக்கல்கள்”]

22LIGHTNINGRIDGE-web1-master768

உலகின் பற்பல நாடுகள், நிலப்பகுதிகளிலும் பாட்டாளிகள் அல்லது உழைப்பாளிகளுக்கு மதிப்பில்லாத நிலைதான் நிலவுகிறது. இத்தனைக்கும் மேலடுக்கு மனிதர்கள் எல்லாம் இந்த மக்களின் கடும் உழைப்பில் கிட்டும் கனிமங்கள், உணவுப் பண்டங்கள், ஆடைகள் போன்றனவற்றை நம்பித்தான் வாழ்கின்றனர். ஆனாலும் நிதி வளம் சேர்வதெல்லாம், பாலின் மேல் புறத்தில் வெண்ணை சேர்வது போல, படைப்புத் திறன் மிகக் குறைவே உள்ள மேல் தட்டு மக்களிடம்தான் சேர்கின்றன. இதை மாற்ற வெறும் அரசியல் புரட்சி, அதிகாரப் பறிப்பு, பண்பாட்டுப் புரட்சி ஆகியன உதவாதவை என்பதை 20 ஆம் நூற்றாண்டு நமக்குக் காட்டி இருக்கிறது.

மொத்தமாக மக்களின் கவனத்தையும், அறிவுச் சேர்க்கையையும், மதிப்பீடுகளையும், எதிர்பார்ப்புகளையும், தொலை காலத் திட்டங்களையும் மாற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். இது உழைப்பாளிகளை பலியாட்களாகச் சித்திரிப்பதாலோ, அல்லது கருணைக்குரியவர்களாகக் காட்டுவதாலோ, போராளிகளாக உருவகிப்பதாலோ எல்லாம் நடக்கப் போவதில்லை.

அப்படியானால் வேறென்ன வழி இருக்கிறது, எல்லா மக்களுக்கும் நியாயமான வாழ்வு ஆதாரங்களும், வாழ்க்கை வாய்ப்புகளும் கிட்டும்படியான ஒரு அமைப்பை சமூக அமைப்பாக நிர்மாணிக்க?

இந்தக் கேள்வியை இங்கு எழுப்பக் காரணம் கீழ்க்கண்ட செய்தி. ஆஸ்திரேலியாவில் கரிச் சுரங்க உழைப்பாளர்கள் தம் முதுமையில் எந்த நிதியாதாரமும் இல்லாது போவதால் இறந்தபின் அவர்களுடைய உடல்களை அடக்கம் செய்ய, புதைக்கக் கூட வசதி இல்லாமல் அவர்களின் குடும்பங்கள் நிற்கின்றனவாம்.  ஒரு காலத்தில் இந்தியர்கள் அங்கே குடியேற வாய்ப்பு கிட்டாதா என்று ஏங்கிய நிலையில் வளம் பொருந்திய நாடாகக் காட்சி தந்த நிலப்பரப்பு ஆஸ்திரேலியா. இன்னமுமே பல இந்திய நடுத்தரக் குடும்பங்களிலிருந்து அங்கு குடியேற முயல்வோர் காணக் கிட்டுகிறார்கள்.  அப்படி இருக்கிற நாட்டில் இப்படி ஒரு நிலை.

ஆனால் குடியேறி பத்தாண்டுகள் போல அங்கிருந்த இந்தியர்கள் முன்னளவு நம்பிக்கையோடு ஆஸ்திரேலியாவை நோக்குவதாகத் தெரியவில்லை. ஆடிக் காற்றில் அம்மியே பறக்கிற போது வைக்கோல் என்ன செய்யப் போகிறது என்ற நோக்கமாக இருக்கலாம். பல நூறாண்டுகளாக அங்கேயே வாழ்ந்த வெள்ளையர்களின் வாழ்வாதாரமே சந்தேகத்துக்குரியதாக ஆகத் தொடங்கினால் வந்தேறிகளின் வாழ்வு என்ன ஆகும் என்பது யாருக்கும் எழக் கூடிய கேள்விதான்.

இங்கிருந்து பெரும்பாலும் யூரோப், அமெரிக்கா போன்ற வேறு பிரதேசங்களுக்கு வேலை தேடி இடம்பெயருவது இப்போது  சகஜமாக இருக்கிறது. ஆனாலும் மொத்தமாக எல்லாமே நசிந்துவிடவில்லை. அந்த நிலைக்குப் போக இன்னும் இரு பத்தாண்டுகளாவது ஆகும். இங்கே பெருநகரங்களிலும், சிறு நகரங்களிலும் குடியேறிகளின் உடலுழைப்புக்கு வரவேற்பு இருக்கத்தான் செய்கிறான். சுரங்கங்களுக்கு பதிலாக இப்போது விவசாயங்களையும், கால்நடைகளின் பால் உற்பத்தியையும் பெரிதும் நம்பத் தொடங்கியிருக்கிறார்கள்.
இங்கிருந்து இந்தியாவுக்கு இப்போது கடலைப் பருப்பு, துவரம்பருப்பையெல்லாம் ஏற்றுமதி செய்யத் தொடங்கியிருக்கிறார்கள் 🙂

http://goo.gl/69OuAB

பாரன்ஸ் என்பது பங்குச் சந்தை/ பணச் சந்தை, வியாபாரம், தொழில் துறை (பணமுதலீடு வழியே) ஆகியவற்றைப் பற்றிய ஆய்வு/ தகவல் கட்டுரைகள் கொண்ட பத்திரிகை. அதில் ஆஸ்திரேலியாவில் ஒரு காப்பு வேலி முதலீட்டு நிறுவனம் எப்படி ஒரு சூதாட்டம் ஆடவென சிறு நிறுவனங்களில் முதலீடு செய்யத் துவங்கி அவை வெற்றிகரமாக ஆனதால் இன்று ஆஸ்திரேலியாவில் முக்கியமான முதலீட்டு நிதி நிறுவனமாக மாறி வருகிறது என்று ஒரு கட்டுரை.
[/stextbox]


[stextbox id=”info” caption=”அமெரிக்க அதிபர் தேர்தல் என்னும் மாயச் சூதாட்டம்”]

DT

ஒரு வழியாக உண்மை வெளியே வந்து விட்டது. ட்ரம்பின் கட்சி சார்ந்த ஒருவர் நாடாளுமன்றத் தேர்தலில் டென்னஸ்ஸி மாநிலத்தில் வேட்பாளராக நிற்கவிருக்கிறார். அவருடைய தேர்தல் கோஷம் என்ன என்று நினைக்கிறீர்கள்? கீழே உள்ள செய்தி அறிக்கையின் சுட்டியைத் தட்டித் திறந்தால் அந்த கோஷத்தின் படம் தெரியும்.
http://www.salon.com/2016/06/22/trump_inspired_tennessee_candidate_
for_congress_erects_make_america_white_again_billboard_draws_boycott/
இதுதான் உண்மையில் மொத்த ரிபப்ளிகன் கட்சி (அமெரிக்கக் குடியரசுக் கட்சி) எனப்படும் ஒரு கூட்டத்தின் குறிக்கோளே. இதைத்தான் பற்பல விதங்களில் மூடுமந்திரமாகக் கடந்த 40 ஆண்டுகளாக இந்தக் கட்சியினர் தம் அரசியல் கொள்கையாக முன்வைத்து வந்தனர். இந்தக் கட்சிக்கு இந்திய வம்சாவளியாக அமெரிக்காவில் குடியேறிய பலர் ஆதரவும் தெரிவிக்கின்றனர். அதாவது தாம் அமெரிக்காவில் வசிக்க எந்தக் கட்சி எதிராக நிற்கிறதோ அதற்கு இந்தியர் ஆதரவு. இப்படிச் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வது இந்தியருக்குப் பல காலமாகக் கை வந்த கலை.  60 ஆண்டுகளாக நாட்டைக் கொள்ளை அடித்த ஒரு கட்சியை அதிகாரத்தில் வைத்திருந்தனர். ஸ்டாலினையும் மாவொவையும் நாயகர்களாகக் கருதும் ஒரு கட்சியை 40 ஆண்டுகள் அதிகாரத்தில் வைத்து இரண்டு மாநிலங்களின் மக்களின் வாழ்வைப் பாழடிக்க அந்த மக்களே காரணமாக இருந்தனர். தமிழகத்தில் மோசமான ஊழல்களை நிரந்தரமான பண்பாடாக ஆக்கி இருக்கிற இரண்டு கட்சிகளையே திரும்பத் திரும்ப தேர்தலில் தேர்ந்தெடுக்கின்றனர்.
இப்படித் தம் வாழ்வில் எந்த முன்னேற்றமும் நேர்ந்து விடக் கூடாது என்றே வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு தேர்தலில் வாக்களிக்கும் கூட்டம் இந்தியர்களைத் தவிர வேறெந்த நாட்டிலாவது இருக்குமா என்றால், ஓ இருக்குமே, அமெரிக்காவில் இல்லையா இதே போன்ற இளிச்சவாய் வெள்ளை அமெரிக்கர் என்று கேட்பீர்களோ என்னவோ. ஆமாம் அமெரிக்காவிலும் நிறைய ஏமாந்தவர்கள் இருக்கிறார்கள். தமிழ் நாட்டின் இரண்டு பெரும் ஊழல் கட்சிகளைப் போலவே அமெரிக்காவிலும் மாறி மாறி ஆளும் இரு கட்சிகளும் உதவாக்கரைக் கட்சிகள்தான். மக்களை ஓட்டாண்டிகளாக மாற்றுவதற்கு இரண்டும் மிக்க முயற்சி செய்து 1% பெரும் தனவந்தர்களுக்காகவே நாட்டை நடத்திக் கொண்டு வருகின்றன. இதெல்லாம் எங்கே போய் முடியும் என்றால் பேரழிவில்தான், வெறெங்கே?

 [/stextbox]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.