கோவர்த்தனமென்னும் கொற்றக்குடை

நமது கிருஷ்ணக்குட்டன் கோவர்த்தனமலையைக் குடையாகத் தூக்கிப்பிடித்து ஆயர்களையும் அவர்களுடைய மாடுகன்றுகளையும் காத்தருளிய வரலாறு ஒரு அற்புதமான வரலாறாகும்.   முன் அத்தியாயங்களில் பெரியாழ்வாரின் பாடல்களைப்பார்த்த பின்னரே அவற்றுடன் தொடர்புடைய மற்ற பாடல்களைக் கண்டோம். கோவர்த்தனமலையைக் குடையாய்த்தூக்கிப் பிடித்த நிகழ்ச்சியை விளக்கும் பெரியாழ்வார்,  கோவர்த்தனமலை அவனுடைய கொற்றக்குடை எனப்புகழ்ந்து பாடுகிறார்.
முதலில் நாராயணீயத்தைக் காண்போம். அதில், நாராயண பட்டத்ரி,  கிருஷ்ணன் கோவர்த்தனமலையை எடுத்ததை அழகான ஒரு கதையாகச் சொல்கிறார். நாராயணீயம் முழுமையுமே அவர் பாடி அரங்கேற்றியபோதில், கிருஷ்ணனை முன்னிலைப்படுத்தி, ‘இவ்வாறு நீ செய்தாய் இல்லையோ கிருஷ்ணா? இது உண்மைதானே?’ எனக் கேட்டு, கிருஷ்ணன் ஆமோதித்த பின்னரே தொடர்ந்தார் என ஒரு கருத்து உலவுகிறது. கிருஷ்ணனின் கதையைத் தாமறிந்தபடியே அவனுக்குத் திரும்பக்கூறி மகிழ்கிறார் அவ்வடியார். நாமும் அதனை அவ்வாறே காண்போமே!

*****

‘ஆயர்பாடியே கலகலப்பாக உள்ளது. இந்திரனுக்கு உரிய ஒரு பெரிய யாகத்தைச் செய்ய, வேண்டிய பொருட்களைத் திரட்டிக்கொண்டும், ஏற்பாடுகளைச் செய்துகொண்டுமுள்ளனர் இடையர்கள். கிருஷ்ணா, நீ மெல்ல உன் தந்தை நந்தகோபனிடம் போய், ” தந்தையே, எதற்காக இந்த ஏற்பாடுகள்? யாருக்காக இந்த யக்ஞம்?” என ஒன்றுமறியாதவன்போலக் கேட்கிறாய்.’
கதாசித் கோபாலான் விஹித மக ஸம்பாரவிபவான்
           நிரீஷ்ய த்வம் சௌரே மகமவத முத்த்வம்ஸிதுமநா:
          விஜாநந்நப்யேதான் விநய ம்ருது ந்ந்தாதி பசுபாந்
          அப்ருச்ச: கோ வாயம் ஜனக பவதாமுத்யம இதி. (62.1)
’அதற்கு நந்தன் கூறினான்: “நாம் ஒவ்வொரு ஆண்டும் இந்திரனுக்கு இந்த வழிபாட்டைச் செய்வோம் குழந்தாய். சரியான காலத்தில் மழை பெய்வதற்கு இந்திரன்தான் காரணம். மழையினால்தான் பயிர்கள் வளர்கின்றன; நமது மாடுகன்றுகளுக்கும் உண்ண நல்லபுல், நீர் ஆகியவை கிடைக்கின்றது.”
‘தேனினும் இனிய சொற்களால் நீ உன் தந்தையிடம் கூறினாய்: “இந்திரன்தான் இதற்குக் காரணம் என்பது உண்மையல்ல;  அனைத்தும் விதிவசமே! மழைபெய்வதும் மனிதர்களின் அதிர்ஷ்டத்தினால்தான். காட்டுமரங்கள் தங்கள் வளர்ச்சிக்காக இந்திரனைப் பூசை செய்கின்றனவா என்ன?” என்று கேட்டாய். “மாடுகள் ஆயர்களான நமது செல்வம். அவற்றை நன்கு பராமரிக்க வேண்டும்.  ஆனால் இந்த கோவர்த்தனமலையல்லவா அவைகளுக்கு நல்ல புல்லையும் நீரையும் அளிக்கிறது? பூமியில் வாழும் நல்ல புனிதமான மனிதர்களே பூசைக்கு உகந்தவர்கள்; இந்திரன் போன்ற தேவர்களல்ல,” என்றாய் நீ கிருஷ்ணா!
இதம் தாவத்ஸத்யம் யதிஹ பசவோ ந: குலதனம்
          ததா ஜீவ்யாயாசௌ பலிரசலபர்த்ரே ஸமுசித:
          ஸுரேப்யோப்யுத்க்ருஷ்டா நநு தரணி தேவா க்ஷிதிதலே
          ததஸ்தேப்யாராத்யா இதி ஜகதித த்வம் நிஜஜனான்.(62.5)
‘உன் சொற்கேட்ட உன் ஆயர்குலத்து மனிதர்கள், பெரியோரைப்பூசை செய்தும், மலைக்கு எல்லாவற்றையும் நிவேதனம் செய்தும், பிரதட்சிணம் செய்தும் பணிந்தனர். அவர்கள் அவ்வாறு செய்த சமயம் நீ அவர்கள் முன்பே அந்தப் பிரசாதங்களை உண்டுவிட்டாய். “பார்த்தீர்களா? இந்த மலையே எல்லா நைவேத்யங்களையும் உண்டுவிட்டது. இந்திரன் கோபம்கொண்டாலும், இதுவே நம்மையும், நம் ஆடுமாடுகளையும் காத்தருளும்,” என்றாய். இதனைக்கேட்ட எல்லாரும் மகிழ்ச்சியடைந்தனர்.
“இந்த நிகழ்ச்சியைக் கேள்விப்பட்ட இந்திரன் – யாருடைய பெரும் இந்திரப்பதவி மகாவிஷ்ணுவான உன்னால் அளிக்கப்பட்டதோ அவன்- சிறிதும் தாழ்மையின்றி, உன்மீது சினம்கொண்டு, இடையர்களையும், அவர்களுடைய ஆடுமாடுகள், வீடுகள், செல்வங்கள் அனைத்தையும் அழிக்க, மழைமேகங்களை ஆகாயத்தில் ஏவிவிட்டு, தனது வச்சிராயுதத்தைக் கையில் எடுத்துக்கொண்டு தானே கிளம்பினான்.” என்கிறார் (தசகம் 62).
த்வதா வாஸம் ஹந்தும் ப்ரலயஜலதானம்பரபுவி
          ப்ரஹிண்வன் பிப்ராண: குலிசமயமப்ரேபகமந:
          ப்ரதஸ்தே அந்யைரந்தர்தஹன மருதாத்யைர் விஹஸிதோ
          பவந்மாயா நைவ த்ரிபுவண்ஹபதே மோஹயதிகம். (62.9)

*****

giridari

இனிமேல்தான் விறுவிறுப்பான கதை தொடர்கிறது! காது செவிடுபட இடியிடிக்கிறது! கண்களைப்பறிக்கும் மின்னல்கள். கண்ணனின் கருமேனி அழகிற்கு உவமையாகக்கூடிய கருமேகங்கள் வானில் அடர்ந்து எழுகின்றன. அடைமழை விடாது பெய்கிறது. கோபர்கள் பயந்து நடுநடுங்கும் வகையில் மழைபெய்யவே அவர்கள், “கிருஷ்ணா! இந்திரனின் கோபத்திலிருந்து எம்மைக்காப்பாய்,” என அலறி அவனிடம் தஞ்சம் புகுகின்றனர். “பயப்படாதீர்கள்,” என அவனும் அபயமளிக்கிறான்.
விபுலகரகமிச்ரைஸ்தோய தாரா நிபாதை:
          திசிதிசி பசுபாநாம் மண்டலே தண்ட்யமாநே
          குபித ஹரி க்ருதாந்ந: பாஹி பாஹீதி தேஷாம்
          வசனமஜித ச்ருண்வன் மா பிபீதேத்யபாணீ: (63.2)
“இந்த மலை நம்மை இந்திரனின் சினத்திலிருந்து காப்பாற்றும். கவலைப்படாதீர்கள்,” என்றவண்ணம் கிருஷ்ணன் தனது குட்டிக்கரங்களால் அம்மலையைப் பெயர்த்தெடுக்கிறானாம். அதனைத் தனது பிஞ்சுக்கைகளால் உயரே தூக்கிப்பிடித்தபடி நின்றுகொண்டு அதனடியில் கோபர்களையும் அவர்களுடைய செல்வங்களையும், ஆடுமாடுகளையும்  அடைக்கலமளித்து நிறுத்துகிறான் கிருஷ்ணன்.
அது மாத்திரமல்ல: “ஏ லக்ஷ்மீ! உன் வெண்ணைக்கிண்ணம் எங்கேடீ? பாக்குமரத்தடியிலேயே விட்டுவிட்டாயா? போனால் போகட்டும் போ! நான் வேறு நல்லதாக ஒன்றை உனக்குத்தருகிறேன்,” என்றும், “ராமா, உன்னுடைய சிகப்புக் காராம்பசுவின் கன்று ஏன் அப்படி குதிக்கிறது? கொஞ்சம் பேசாமல் இருக்கப்பண்ணடா,” என்றும் உரையாடியபடிக்கு அவர்கள் அனைவரும் பயப்படாமல் நிம்மதியாக இருக்கவேண்டும் என்று இடைச்சிறுவர்கள், சிறுமிகளிடம் சிரித்துப்பேசி வேடிக்கை செய்கிறான் கிருஷ்ணன். ஒருகரம் உயர்த்தியமலையைத் தாங்கியிருக்க, குளிராலும் இடிமின்னலாலும் நடுங்கும் மாடுகளின் முதுகை அவ்வப்போது அவனுடைய இன்னொருகரம் மென்மையாகத் தடவுகிறதாம்.
நேரே இருந்து பார்த்ததுபோன்ற பட்டத்ரியின் மிகநுட்பமான வர்ணனை! பின்னே! அந்தக்கிருஷ்ணனின்  அனுபூதி பெற்றவராயிற்றே!
பவதி வித்ருதசைலே பாலிகாபிர்வயஸ்யை:
          அபி விஹித விலாஸம் கேலி லாபாதி லோலே
          ஸவித மிலித தேநூரேகஹஸ்தேந கண்டூ
          யதி ஸதி பசுபாலாஸ்தோஷமைஷந்த சர்வே (63.5)
“பாரேன்! இத்தனை சின்னப்பையன், இந்த மலையைத் தூக்கிக்கொண்டிருப்பதை,” என்று ஆயர்கள் கிருஷ்ணனுடைய உண்மைவடிவை உணராத எளியமனத்துடன் ஒருவருக்கொருவர் கூறி மகிழ்கிறார்கள்.
“இந்தப்பொடியன் என்னை என்னவென்று நினைத்துக்கொண்டிருக்கிறான்,” என்று அகம்பாவம் நிரம்பிய உள்ளத்துடன் இந்திரன் இன்னும்விடாது ஏழு இரவுகளும் பகல்களும் மழைபொழியச் செய்தான்.
அசலதி த்வயி தேவ பதாத் பதம்
          கலிதஸர்வஜலே ச கநோத்கரே
          அபஹ்ருதே மருதா மருதாம்பதி
          ஸ்த்வதபிஸங்கிததீ: ஸமுபாத்ரவத்: (63.7)
கிருஷ்ணன் துளிக்கூட அசையாமல் மலையைத்தூக்கிக்கொண்டு நின்றிருந்ததைக் கண்ட இந்திரன் மனம்தளர்ந்தான். மழைநீரைப் பொழிந்த மேகங்களும் காற்றில் சிதறியோடின. இப்போது இந்திரன் கிருஷ்ணனின் வலிமைகண்டு பயந்தான். மழைநின்றதும் மலையைக் கீழேவைத்த கிருஷ்ணனை எல்லாரும் ஒருசேர அணைத்துக்கொண்டனர்.” என்கிறார் பட்டத்ரி.
சரி, எதற்காக இதனையெல்லாம் ஆதியோடந்தமாக, ஒவ்வொன்றாகக்கூறி, விவரித்து ஸ்லோகங்களாக்கிப் பாடவேண்டும்? ஒன்று- கிருஷ்ணனை உணரும், அறியும் அனுபவத்திற்கு இவை துணைநிற்கின்றன என்பதனால்தான். அவனுடையதாகக் கூறப்படும் அந்த அனந்த கல்யாணகுணங்களைத் திரும்ப மனதினால் எண்ணுவது, எண்ணி, அவற்றின் உட்பொருளையும், ஆழ்ந்த தத்துவத்தையும் பலவிதமாகப் பொருள்கொள்வது என்பதற்காகவே பக்தர்கள் இவ்வாறு பகவத்விஷயங்களைக் கூறுகிறார்கள். கதாகாலட்சேபங்கள் இதைத்தான் செய்கின்றன. அவனில் ஆழ்வதற்கு இதுவும் ஒரு உன்னதமான வழியாகும். பலமுறைகேட்ட கதையாகவே இருப்பினும் சலிக்காமல் இன்னொருமுறை மகாபக்தரான ஒருவரின் வாய்மொழியாகக் கேட்பது தனி அனுபவமாகும். பொறுமையாக ஆழ்ந்து, அனுபவித்து, நுணுக்கமாக நிகழ்வுகளைப் பதிவுசெய்து களித்துள்ளார் இந்த பக்தர்.

 *******

 பெரியாழ்வார் இவையத்தனையையும் ஒரேயொரு பாசுரத்தில் முன்னுரைபோல அழகாக அடக்கிப்பதிவு செய்துவிட்டார்.
‘இந்திரனுக்காக ஆயர்கள் சமைத்துக்குவித்த மலைபோன்ற சோற்றை, தயிர் ஓடைபோல ஓடுமாறு அதில்பெய்து ‘சடக்’கெனக் கிருஷ்ணன் உண்டுவிட்டான். இதனால் அவன் மழை எனும் பகையை உண்டுபண்ணிக்கொண்டு விட்டான்,’ என்கிறார்.
அட்டுக் குவிசோற் றுப்பருப் பதமும்
                   தயிர்வா வியும்நெய் யளறும் அடங்கப்
          பொட்டத் துற்று,மா ரிப்பகை புணர்த்த
                   பொருமா கடல்வண் ணன்பொறுத் தமலை
          வட்டத் தடங்கண் மடமான் கன்றினை
                   வலைவாய் பற்றிக் கொண்டு,குற மகளிர்
          கொட்டைத் தலைப்பால் கொடுத்து வளர்க்கும்
                   கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே.
(பெரியாழ்வார் திருமொழி- 3.5)
எதற்காக கிருஷ்ணன் கோவர்த்தனமலைக்கு இத்தனை  வழிபாடுகளையும் செய்யப்பணித்தான் என நாம் யோசிக்கிறோம். குடியிருக்கும் இடத்தருகே உள்ளமலைகள் அவ்வூருக்குப் பலவிதமான வளங்களை அளிக்கும் தன்மையன. அந்த மக்கள் அம்மலைகளையெல்லாம் வழிபட்டார்களா என்ன? எல்லாமலைகளிலுமே, இறைவன், சித்தர்கள் ஆகியோர் உறைந்திருப்பர். அவர்களைப்போற்ற வேண்டும்; மதிக்க வேண்டும் என்ற எளிய ஆனால் உயர்ந்த தத்துவத்தைத்தான் இது உணர்த்துகிறது. மலையிலுள்ள ஒவ்வொரு ஜீவராசியின் கருணையையும், அதன் அன்பையும் அடுத்தடுத்த பாசுரங்களில் அழகாக விளக்குகிறார்.
மேற்கண்ட பாசுரத்தில் சிறு மான்குட்டிகளைக் குறவர்கள் தங்கள் பெண்டிரிடம் கொடுக்க, அவர்களும் அன்போடு அவற்றிற்குப் பஞ்சினால் நனைத்துப் பால் அருந்துவிக்கின்றனர் எனக்காட்டுகிறார்.
ஒரு பெண்யானை தன் குட்டியோடு செல்கிறது; அதனைத் தாக்க ஒரு சிங்கக்குட்டி ஓடோடி வருகிறது; அப்பெண்யானை தனதுகுட்டியைத்தன் கால்களுக்கிடையே இடுக்கிக்கொண்டு சிங்கத்திடமிருந்து காப்பாற்ற முயலுகிறது எனும் தாயன்பை உயர்த்திக்காட்டுகிறார். அதேபோல கிருஷ்ணனும் மிகுந்த அன்புடன் பசுக்களின் துயரத்தினை நீக்கி அவற்றைப்பாதுகாக்க மலையை குடையாகப்பிடித்தான் என்கிறார்.
இதனிடையே, தன் குட்டனின் பெருமையைப் பேசவும் அவர் மறக்கவில்லை; அவன் மலையைத் தூக்கியதைப் பற்றி தேவலோகத்தில் உள்ளவர்களிடம் பெருமை கூறுகிறார். “வலிமை பற்றி நீங்கள் பெரிதாகப் பேசுகிறீர்களே! இங்கேவந்து இந்தமலையை நீங்கள் தூக்கிப் பாருங்கள்!” எனச்சவால் விடுபவன்போல எங்கள் கண்ணன் இந்தமலையை மண்கட்டியைப் பெயர்ப்பதுபோலப் பெயர்த்தெடுத்து விட்டான். அவன் அனாயாசமாகத் தூக்கிக்கொண்டு நின்ற இம்மலையில் தன்கொம்பு முறிந்துவிட்ட காட்டுயானை, வளைந்த மூன்றாம்பிறைச் சந்திரனைக்கண்டு, தனது முறிந்த கொம்பாக எண்ணி, துதிக்கையைத் தூக்கிக்கொண்டு நிற்கிறதே! அந்தமலை எங்கள் கண்ணனுக்கு வெண்கொற்றக்குடையாகும் என்கிறார்.
வானத் திலுள்ளீர் வலியீ ருள்ளீரேல்
                   அறையோ வந்துவாங் குமினென் பவன்போல்,
          ஏனத் துருவா கிய ஈ சனெந்தை
                   இடவ னெழவாங் கியெடுத் தமலை
          கானக் களியா னைதன்கொம் பிழந்து
                   கதுவாய் மதஞ்சோ ரத்தன்கை யெடுத்து,
          கூனல் பிறைவேண்டி அண்ணாந்து நிற்கும்
                   கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே.
(பெரியாழ்வார் திருமொழி- 3.5)
அவன் படுத்திருக்கும் ஆதிசேடன் இந்த பூமியைத் தன் தலைகளால் தாங்கிக்கிடப்பதைப்போல, இந்தக்கிருஷ்ணனும், தன் கையிலுள்ள ஐந்து விரல்களையும் விரித்தபடிக்குத் தாங்கிக்கொண்டிருக்கும் மலைதான் கோவர்த்தனமலையாகும். இந்த மலையிலுள்ள குரங்குகள் தம்குட்டிகளுக்கு என்ன தாலாட்டுப்பாடுகின்றன தெரியுமா?  ஆகாயவழியாக, இலங்கைக்குச் சென்று அந்தநகரை முற்றிலும் சீரழித்த அனுமனின் புகழையே தாலாட்டாகப்பாடுகின்றவாம் அக்குரங்குகள்!
படங்கள் பலவு முடைப்பாம் பரையன்
                   படர்பூமி யைத்தாங் கிக்கிடப் பவன்போல்,
          தடங்கை விரலைந் தும்மல ரவைத்துத்
                   தாமோ தரன்தாங் குதட வரைதான்
          அடங்கச் சென்றிலங் கையையீ டழித்த
                   அனுமன் புகழ்பா டித்தங்குட் டன்களை
          குடங்கைக் கொண்டுமந் திகள்கண் வளர்த்தும்
                   கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே.
(பெரியாழ்வார் திருமொழி- 3.5)
“எங்கள் கண்ணனின் தாமரைபோன்ற கைகள் ஏழு நாட்கள்வரை மலையைச் சுமந்தபோதிலும், ஒரு தளர்வுமின்றி, அழகு அழியாமல், புதுமையாகவே இருந்தன. அவனுடைய ஒரு நகம்கூட வலிக்கவில்லை பாருங்கள்: இது ஒரு கண்கட்டுவித்தை போலிருந்தது தெரியுமா? மேகக்கூட்டங்கள் தம்மில் அடங்கிய நீரினால் தமது நெற்றி நரைத்ததுபோலக் காணப்பட்டன. எங்கள் கண்ணன் தூக்கிய கோவர்த்தனம், அவனது வெற்றிக்குடையாகும்,” என இறுமாந்து போகிறார்.
கொடியே றுசெந்தா மரைக்கை விரல்கள்
                   கோல முமழிந் திலவா டிற்றில,
          வடிவே றுதிரு வுகிர்நொந் துமில
                   மணிவண் ணன்மலை யுமோர்சம் பிரதம்
          முடியே றியமா முகிற்பல் கணங்கள்
                   முன்னெற் றிநரைத் தனபோ ல,எங்கும்
          குடியே றியிருந் துமழை பொழியும்
                   கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே.
(பெரியாழ்வார் திருமொழி- 3.5)
மலைதூக்கிய கதை கூறப்புகுந்து குட்டனின் பெருமைகளை அழகுற ஒரு தந்தையின்/ தாயின் நிலையில் நின்று கொண்டாடும் அந்த உரிமைநிறைந்த அழகுக்காகவேனும் இப்பாடல்களை ஒருமுறை படித்துப் பார்க்கவேண்டும்.
இந்த கோவர்த்தன கிரிதாரியைப்பற்றிய பாடல்கள் எண்ணற்றன. ஒன்றினையாவது கேளாதவர் இல்லவே இல்லை எனலாம்.
(கிருஷ்ணலீலைகள் வளரும்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.